Loading

இரண்டு வருடங்களுக்குப் பின்

 

பூஞ்சோலைக் கிராமம் முழுவதுமே ஒரே கொண்டாட்டமயமாக  இருந்தது.

 

அன்று தான் ஆதர்ஷ் – லாவண்யா, அபினவ் – அக்ஷரா ஜோடிகளுக்கு திருமணம்.

 

சகோதரர்கள் இருவருக்கும் ஒரே மேடையிலே திருமணத்தை நடத்த வீட்டினர் முடிவு செய்திருந்தனர்.

 

பெண் வீட்டினருக்கும் அதில் சம்மதம் என்பதால் அவசர அவசரமாக திருமணத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

 

ஊர்த் தலைவர் வீட்டுத் திருமணம் என்பதால் மொத்த ஊருமே ராஜேந்திரனின் வீட்டில் குழுமி இருந்தனர்.

 

தங்கள் வீட்டுத் திருமணம் போல மகிழ்ச்சியாக ஒவ்வொருவரும் மாறி மாறி வேலை செய்தனர்.

 

பூஞ்சோலைக் கிராமத்திலே திருமணத்தை நடத்த முடிவு செய்திருந்ததால் மணமகள்கள் ராஜேந்திரன் வீட்டில் தயாராகிக் கொண்டிருக்க அவர்களின் வீட்டிலிருந்து ஒரு தெரு தள்ளி இன்னொரு வீட்டில் மணமகன்கள் தயாராகிக் கொண்டிருந்தனர்.

 

திருமணத்திற்கு முந்தின மற்றைய சடங்குகளை செய்ய இலகுவாக இருக்கும் என்று தான் ராஜேந்திரன் அதற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

 

லாவண்யாவின் தாய் ஆண்டாளுக்கு உதவியாக அகிலா இருக்க வேஷ்டி சட்டை அணிந்து மிடுக்காக அங்கு வந்த ஆர்யான்,

 

“மினி எங்க மாம்… ஆதர்ஷ் வீட்டிலிருந்து வந்த நேரத்திலிருந்து நானும் தேடிட்டு இருக்கேன்… கண்ணுல கூட பட மாட்டேங்குறா…” என அகிலாவிடம் கேட்டான்.

 

அகிலா, “அதை ஏன்டா கேக்குற… ஃப்ரெண்ட்ஸோட மேரேஜ்னு சொல்லி கல்யாண வேலை எல்லாம் ஓடி ஆடி செஞ்சிட்டு இருக்கா… காலையில இருந்தே சித்து ரொம்ப டல்லா இருக்கா… ரெஸ்ட் எடுக்க சொன்னாலும் கேக்க மாட்டேங்குறா… லாவண்யா ரூம்ல தான் இருக்கான்னு நெனக்கிறேன்.. அவங்கள தயார் பண்ணிட்டு வரேன்னு போனா… நீ போய் கொஞ்சம் பாரு…” என்க,

 

ஆர்யான், “சரி மாம்.. நான் போய் பார்க்குறேன்.. இன்னும் கொஞ்சம் நேரத்துல மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்திடுவாங்க… சீக்கிரம் எல்லாம் ரெடி பண்ணி வைங்க…” என்றவன் சிதாராவைத் தேடிச் சென்றான்.

 

லாவண்யா மற்றும் அக்ஷரா இருந்த அறைக்குச் சென்றவன் வெளியே நின்று கதவைத் தட்ட,

 

கதவைத் திறந்த அக்ஷரா ஆர்யானைக் கண்டு, “என்னண்ணா இங்க நிக்கிறீங்க… ஏதாவது வேணுமா…” என்க,

 

“ஆஹ்.. அது ஒன்னுமில்லம்மா… மினிய தேடித்தான் வந்தேன்… அவள் இருந்தா கொஞ்சம் கூப்பிட முடியுமா..” எனக் கேட்டான்.

 

அக்ஷரா, “எங்கள ரெடி பண்ண பார்லர்ல இருந்து ஆட்கள் வந்ததுமே சித்து வெளிய போய்ட்டான்னா… இங்க எங்கயாவது தான் இருப்பா.. நான் வேணா வரவா..” என்க,

 

“இல்லம்மா… நான் போய் பார்க்குறேன்… நீங்க ரெண்டு பேரும் ரெடியாகி இருங்க..” என்று விட்டு சென்றான்.

 

_______________________________________________

 

மணமகன் அறையில், “டேய் ஆது… இந்த வேஷ்டி இடுப்புல நிக்கவே மாட்டேங்குதுடா… யாருடா இதெல்லாம் கண்டு பிடிச்சாங்க… பேசாம நான் ஜீன்ஸ் போட்டுக்கவா….” என அபினவ் வேஷ்டியை கையில் வைத்து திண்டாடிக் கொண்டிருக்க,

 

அவன் தலையில் தட்டிய ஆதர்ஷ், “குடு அதை இங்க… ” என அபினவ்வுக்கு வேஷ்டியை கட்டி விட்டவன்,

 

“சிட்டி போய் படிச்சன்னு சொல்லி நம்ம பண்பாட மறந்துட கூடாதுடா… எங்க இருந்தாலும் அது படி நடக்கனும்..” என்க பூம் பூம் மாடு போல் தலையாட்டினான் அபினவ்.

 

அபினவ், “ஆர்யான் எங்கடா…” எனக் கேட்கவும்,

 

“எங்கள பின்னாடி வர சொல்லிட்டு காலைலயே கிளம்பிட்டான் அவன்…” எனப் பதிலளித்தான் ஆதர்ஷ்.

 

பின், “ஆமா.. பிரணவ் இன்னெக்கி வரேன்னு ஏதாவது உன் கிட்ட சொன்னானா..” என ஆதர்ஷ் கேட்கவும்,

 

“தெரியலடா… முடியாதுன்னு தான் சொல்லிட்டு இருந்தான்… நான் தான் கம்பிள் பண்ணி வர சொன்னேன்… பட் கேக்கவே இல்ல..‌ அப்புறம் ஆர்யான் பேசி வர சொன்னதும் பார்க்கலாம்னு சொன்னான்… எனக்கு என்னவோ அவன் வர மாட்டான்னு தான் தோணுது… நானும் அவன எதுவும் சொல்லல… இப்ப தான் அவன் செஞ்ச தப்ப உணர்ந்து திருந்தி இருக்கான்… சித்துவ கண்டால் அவனுக்கும் குற்றவுணர்ச்சியா இருக்கும்… சித்துக்கும் வீணா மனசு கஷ்டமாகிடும்… அவன் வராம இருக்குறது தான்டா எல்லாருக்கும் நல்லது…” எனப் பதிலளித்தான் அபினவ்.

 

சற்று நேரத்தில் அனைவரும் கிளம்பி ராஜேந்திரன் வீட்டுக்கு சென்றனர்.

 

அங்கு தான் திருமணம் நடக்க இருந்தது.

 

செல்லும் வழியெல்லாம் இருவரும் தத்தம் துணைவியருடன் கழிக்கப் போகும் நாட்களை எண்ணி கனவில் மூழ்கினர்.

 

_______________________________________________

 

ஆர்யான் சிதாராவைத் தேடிச் செல்ல அதற்குள் சங்கர் அவனை அழைக்கவும் அவரிடம் சென்றார்.

 

இங்கு சிதாரா மாடியிலிருந்த அறையொன்றில் சோர்வாகப் படுத்திருந்தாள்.

 

காலையிலிருந்தே அவளுக்கு தலைசுற்றலும் வாந்தியுமாக இருக்க ஏதோ உண்ட உணவு தான் உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை என நினைத்தாள்.

 

வீட்டில் யாரிடமாவது கூறினால் அவர்களும் அவளை நினைத்து  வீணாக கவலைப்படுவார்கள் என யாரிடமும் கூறவில்லை.

 

மூன்று நாட்களுக்கு முன் பூஞ்சோலைக் கிராமத்துக்கு வந்த நாளே சிதாராவுக்கு தோழிகளுடன் நேரம் செலவழிக்க கூறிவிட்டு ஆதர்ஷ் மற்றும் அபினவ்வுடன் சென்று தங்கிக் கொண்டான் ஆர்யான்.

 

அன்று காலையிலிருந்தே தன்னவளின் நினைவு அதிகமாக வாட்ட ஆதர்ஷிடம் சொல்லிக் கொண்டு உடனே கிளம்பி வந்திருந்தான் ஆர்யான்.

 

ஆனால் அவன் வந்தது சிதாராவுக்குத் தெரியாது.

 

லாவண்யாவையும் அக்ஷராவையும் தானே தயார் செய்வதாக அகிலாவிடம் கூறியவள் அவர்களின் அறைக்குச் செல்ல சற்று நேரத்தில் பார்லர் பெண்மணிகள் வரவும் அங்கிருந்து வெளியே வந்தாள்.

 

உடல் சோர்வாக இருக்கவும் சற்று தூங்கி எழும்ப நினைத்தவள் யாரும் தொந்தரவு பண்ணாமல் இருக்க மாடியிலிருந்த அறைக்குச் சென்றாள்.

 

படுத்துக் கொண்டிருந்தவளுக்கு மீண்டும் வாந்தி வருவது போல் இருக்கவும் அவசரமாக குளியலறை நுழைந்தாள்.

 

குடலைப் பிரட்டிப் போடுவது போல் வாந்தி எடுத்தவள் சோர்வாக கட்டிலில் வந்தமர்ந்தாள்.

 

அப்போது தான் தனக்கு நாள் தள்ளிச் சென்றுள்ளது நினைவு வரவும் மகிழ்ச்சியில் சிதாராவின் கண்கள் கலங்கின.

 

தன்னவனின் உயிர் தன் வயிற்றில் வளர்கிறது என நினைக்கவே சிதாராவுக்கு உடல் சிலிர்த்தது.

 

தங்கள் காதலுக்கு கிடைத்த பரிசு என மெதுவாக தன் வயிற்றைத் தடவிப் பார்த்தாள்.

 

அவள் நினைவில் கடைசியாக ஆர்யானுடன் நியுயார்க்கில் கழித்த நேரங்கள் வந்து சென்றன.

 

_______________________________________________

 

சிதாரா தன் காதலை ஆர்யானிடம் வெளிப்படுத்திய பின் அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சிக்கு குறைவே இருக்கவில்லை.

 

ஒருவருக்கொருவர் காதலை அள்ளிக் கொடுத்தனர்.

 

சிதாராவின் படிப்பு முடியும் வரை குழந்தை வேண்டாம்‌ என்று ஆர்யான் முடிவு செய்ய அதை கடைபிடிக்கத்தான் அவன் அரும்பாடு பட்டான்.

 

சிதாரா வேண்டுமென்றே அடிக்கடி ஆர்யானை சீண்டிக் கொண்டிருக்க அதற்கு பதிலாக ஆர்யான் அவளின் இதழ்களுக்கு தண்டனை கொடுப்பான்.

 

நாட்கள் வேகமாக நகர சரியாக ஒன்றரை வருடத்தில் சிதாராவின் படிப்பு முடிந்து பட்டம் பெற்றாள்.

 

ஆர்யான் இந்தியாவில் சொந்தமாக கம்பனி ஆரம்பித்து நடத்த முடிவு செய்ய சிதாரா ரஞ்சித்திற்கு உதவியாக அவர் கம்பனியில் வேலை செய்ய விரும்பினாள்.

 

இதில் ரஞ்சித்திற்கு ஏக மகிழ்ச்சி.

 

தனக்குப் பின் ஆர்யானைக் கம்பனி பொறுப்பேற்க வைக்க அவர் நினைத்திருந்த போது தான் தனியாக தொழில் தொடங்குவதாக ஆர்யான் கூறினான்.

 

ஆர்யான் இல்லாவிடினும் தன் மருமகள் தனக்குப் பின் கம்பனியைப் பொறுப்பேற்று வழி நடத்துவாள் என அவருக்கு நம்பிக்கை பிறந்தது.

 

சிதாராவின் பட்டமளிப்பு விழா முடிந்து மறுநாளே இருவரும் இந்தியா செல்ல முடிவெடுத்தனர்.

 

விழா முடிந்து களைப்பாக சிதாரா வீட்டினுள் நுழைய அவள் பின்னே காரைப் பார்க் பண்ணி விட்டு வந்த ஆர்யான் சிதாராவை அலேக்காக கைகளில் ஏந்திக் கொண்டான்.

 

அதிர்ந்த சிதாரா, “டேய் ஜிராஃபி… என்னடா பண்ற… கீழ இறக்கி விடுடா… நீ எனக்கு இனிமே ட்ரடிஷனல் ட்ரஸ் போட சொன்னதும் கேட்டது தப்பா போச்சு… ” என ஆர்யானின் தோள்களில் அடித்தாள்.

 

சிதாராவின் இதழைக் கொய்து அவள் பேச்சை நிறுத்தியவன் அறையினுள் நுழைந்த பின் தான் விடுவித்தான்.

 

சிதாராவை மஞ்சத்தில் கிடத்தியவன் அவளை நெருங்க,

 

சிதாரா, “ஜி..ஜிரா.. ஜிராஃபி… என்ன.. பண்ற…” என்க,

 

அவள் வாயை தன் கையால் மூடி சிதாராவின் பேச்சை நிறுத்தியவன் அவள் கண்களைப் பார்த்து, “ப்ளீஸ் மினி…” என்றான்.

 

ஆர்யானின் கண்களில் காதலைத் தாண்டியும் தெரிந்த ஏக்கத்தைக் கண்டு கொண்ட சிதாரா ஆர்யானின் கரத்தை விலக்கி விட்டு அவனை அணைத்துக் கொண்டாள்.

 

அதன் பின் அங்கு பேச்சுக்கு இடமிருக்கவில்லை.

 

ஆர்யான் சிதாராவின் மேனியில் தன் தேடலைத் தொடர சிதாராவும் தன்னவனுக்கு எல்லாவற்றிலும் இசைந்து போனாள்.

 

அதன் பின் இந்தியா வந்து ஒரு வாரத்திலே ரஞ்சித்தின் உதவியுடன் ஆதர்ஷ் மற்றும் அபினவ்வுடன் இணைந்து சொந்தமாக ட்ரிப்பிள் ஏ க்ரூப் ஆஃப் கம்பனீஸ் (AAA GROUPS OF COMPANIES) ஐ ஆரம்பித்தான் ஆர்யான்.

 

மூவரின் முயற்சியாலும் அவர்களின் கம்பனி வெகு விரைவில் வளர்ச்சி அடைந்தன.

_______________________________________________

 

அன்றைய நாளின் நினைவில் இருந்த சிதாராவின் முகம் வெட்கத்தால் சிவந்தது.

 

தன்னவனிடம் இதனைத் தெரிவிக்க வேகமாக எழுந்து கொண்டவள் இன்னும் இரண்டு நாட்களில் ஆர்யானின் பிறந்தநாள் வர இருப்பது நினைவு வந்ததும் அன்றே அவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என முடிவு செய்தாள்.

 

பின் திருமணத்துக்காக தன்னை சற்று அலங்கரித்துக் கொண்டு கீழே சென்றாள் சிதாரா.

 

சிதாரா இறங்கி கீழே செல்லும் போதே அவள் முன் ஆர்யான் வந்து நின்றான்.

 

ஆர்யான், “எங்க போன மினி… உன்ன நான் எங்க எல்லாம் தேடினேன் தெரியுமா… காலைல இருந்தே உன் ஃபேஸ் டல்லா இருந்ததா மாம் சொன்னாங்க… என்னாச்சு… நீ நல்லா இருக்கேல்ல…” என்றான் பதட்டமாக.

 

சிதாரா, “அ.. அது ஒன்னுமில்ல ரயன்… நான் நல்லா தான் இருக்கேன்… நீ சும்மா டென்ஷன் ஆகாதே… வேலை செஞ்சது கொஞ்சம் டயர்டா இருந்தது… மத்தபடி எதுவுமில்ல… பாரு எப்படி வேர்த்து ஊத்தி இருக்குன்னு… சாரி..‌ரொம்ப பயந்துட்டியா…” என தன் சேலை முந்தானையால் ஆர்யானின் முகத்தைத் துடைத்தபடி கேட்டாள்.

 

ஆர்யான், “என் கிட்ட சொல்லாம எங்கயும் போகாதே மினி… ஐ டோன்ட் வான்ட் டு லொஸ் யூ..” என சிதாராவை அணைத்துக் கொண்டான்.

 

ஆர்யானின் முதுகை ஆறுதலாக வருடி விட்டபடி சிதாரா, “ஐம் ஓக்கே கண்மணி…” என்றாள்.

 

ஆதித்யா சிதாராவைக் கடத்திய நிகழ்வின் பின் ஆர்யானின் காதலால் சிதாரா அதன் தாக்கத்திலிருந்து மொத்தமாக வெளி வந்திருந்தாள்.

 

அவளின் மனதிலிருந்த பாரங்கள் அனைத்தும் மறைந்து அங்கு ஆர்யானும் அவனின் காதலும் மட்டுமே நிறைந்து இருந்தது.

 

ஆர்யான் சிதாராவுக்கு ஆறுதலாக இருந்தாலும் இன்றளவிலும் அந் நிகழ்வு அவன் மனதை விட்டு நீங்கவில்லை.

 

எங்கே மீண்டும் சிதாராவை இழந்து விடுவோமோ என்ற பயத்தில் எப்போதும் சிதாராவைத் தன் பார்வைக்கு எட்டிய தூரத்திலே வைத்திருப்பான்.

 

சிதாரா கூட அதைக் கூறி ஆர்யானைக் கேலி செய்வாள்.

 

ஆர்யான் அவளின் பேச்சைப் புறக்கணித்து விட்டு, “உனக்கென்ன… நீ சொல்லுவ… உனக்கு தான் எதுவுமே தெரியாம தூங்கினியே… நான் தான் நீ கண் முழிக்கிற வரைக்கும் உசுர கைல பிடிச்சிக்கிட்டு இருந்தேன்…” என்பான்.

 

ஆர்யான் தன் மீது வைத்துள்ள காதலில் சிதாரா திக்குமுக்காடி விடுவாள்.

 

சிதாரா ஆர்யானின் அணைப்பில் இருக்க அவர்களுக்கு அருகில் திடீரென இருமல் சத்தமொன்று கேட்கவும் இருவரும் அவசரமாக விலகினர்.

 

ஆதர்ஷ் தான் அங்கு வந்திருந்தான்.

 

ஆதர்ஷ் இருவரையும் கேலியாகப் பார்த்தபடி, “இன்னைக்கு எனக்கும் அபினவ்வுக்கும் தான் கல்யாணம்… ரெண்டு பேருக்கும் அது ஞாபகத்துல இருக்கும்னு நெனக்கிறேன்…” என்றான்.

 

ஆர்யான் அவனைப் பார்த்து இளித்து வைக்க,

 

“நா.. நான் வனி ரூமுக்கு போறேன்..” என அவசரமாக அங்கிருந்து தப்பி ஓடினாள் சிதாரா.

 

ஆதர்ஷுக்கு தன் செல்லத் தங்கையை இப்படி மகிழ்ச்சியாகக் காண மனநிறைவாக இருந்தது.

 

ஆர்யானின் தோளில் தட்டி சிரித்தபடி அவனை அங்கிருந்து அழைத்துச் சென்றான் ஆதர்ஷ்.

 

சில மணிநேரத்தில் சுற்றார் முன்னிலையில் அவர்கள் ஆசிர்வாதத்துடன் ஆதர்ஷ் லாவண்யா கழுத்திலும் அபினவ் அக்ஷராவின் கழுத்திலும் ஒருவர் பின் ஒருவராக மாங்கல்யத்தை கட்டி அவர்களை தம்மில் சரிபாதி ஆக்கிக் கொண்டனர்.

 

சிதாரா தான் நாத்தனார் இடத்திலிருந்து தன் தோழிகள் இருவருக்கும் மூன்றாம் முடிச்சை இட்டாள்.

 

அனைவரும் அர்ச்சதை தூவி தம்பதியினரை ஆசிர்வதித்தனர்.

 

ஆர்யான் ஒரு கரத்தால் தன் மனையாளை பக்கவாட்டில் அணைத்துக் கொள்ள அவன் முகம் பார்த்து புன்னகைத்தாள் சிதாரா.

 

சற்று நேரத்தில் மணமக்களை வேந்தன்யபுறத்துக்கு அழைத்துச் சென்றனர்.

 

மற்ற சடங்குகளை அங்கே முடிக்க எப்போதும் தோழிகளுடனே இருந்த சிதாராவை ஒரு வழியாகத் தனியே பிடித்துக் கொண்ட ஆர்யான்,

 

“மினி… நாம வேணா சீக்கிரமா இங்கிருந்து போயிடலாமா..” என்க அவனைக் குழப்பமாகப் பார்த்தாள் சிதாரா.

 

சிதாரா, “என்னாச்சு ஜிராஃபி… ஏன் போலாம்னு சொல்ற…” எனக் கேட்க,

 

“நம்ம மேரேஜ் அவசர அவசரமா நடந்து போச்சி… இதெல்லாம் பார்க்க கிட்ட உனக்கும் இப்படியெல்லாம் கல்யாணம் நடந்திருந்தா நல்லா இருந்திருக்கும்னு கவலையா இருக்கும்ல..” என்றான் ஆர்யான்.

 

இடுப்பில் கையூன்றி ஆர்யானை முறைத்த சிதாரா எக்கி அவன் தலையில் குட்டி விட்டு, “நான் சொன்னேனா எனக்கு கவலையா இருக்குன்னு… லூசு… லூசு…” எனத் திட்ட,

 

அவளைப் பாவமாய் பார்த்த ஆர்யான், “என்னடி புருஷன்னு பார்க்காம தலைல குட்டிட்டு இப்போ லூசுன்னு வேற திட்ற… புருஷன்னு கொஞ்சம் கூட மரியாதையே இல்ல…” என்றான்.

 

சிதாரா, “பின்ன.. நீ லூசு மாதிரி பேசினா உன்ன திட்டாம கொஞ்சுவாங்களா…” என்றவள் ஆர்யான் சோகமாக முகத்தை வைத்துக் கொள்ளவும்,

 

“மேரேஜ் க்ரேன்டா நடந்ததா இல்லையான்னு எனக்கு பிரச்சினையே இல்ல ஜிராஃபி… அதான் நீ என் கூட இருக்கேல்ல… அது போதும் எனக்கு…” என்றாள் புன்னகையுடன்.

 

லாவண்யாவையும் அக்ஷராவையும் அவர்களது புகுந்த வீட்டில் விட்டு விட்டு அனைவரும் சென்றனர்.

 

ராஜேந்திரன் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் வேலை இருக்கிறது என ரஞ்சித், அகிலா, ஆர்யான், சிதாரா நால்வருமே இரவோடு இரவாக சென்னை கிளம்பினர்.

 

சங்கரும் தேவியும் ஒரு வாரத்துக்கு பூஞ்சோலைக் கிராமத்திலுள்ள தங்கள் சொந்த வீட்டில் தங்கி விட்டு வருவதாகக் கூறினர்.

 

சில மணி நேரத்திலே ஆர்யானின் வீட்டை அடைய அகிலாவும் ரஞ்சித்தும் களைப்பில் உடனே உறங்கி விட்டனர்.

 

ஆர்யான் கால் ஒன்று பேசி விட்டு வர சிதாரா அறையில் இருக்கவில்லை.

 

எங்கே என்று பார்க்க குளியலறையில் சிதாராவின் சத்தம் கேட்டு ஓடிச் சென்று பார்க்க சிதாரா வாஷ்பேசனில் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாள்.

 

ஆர்யான் சிதாராவின் தலையைப் பிடித்துக் கொண்டவன், “என்னாச்சு மினி… ஏன் வாமிட் பண்ற…” என்றான் கவலையாக.

 

சிதாரா முகத்தைக் கழுவிக் கொண்டு நிமிர்ந்தவள், “சாப்பாடு செட் ஆகல போல ஜிராஃபி… அதோட ட்ராவல் பண்ணது..‌ அதான்..” என சமாளிக்க,

 

“ஆர் யூ ஷூர்… வேற எதுவும் இல்லல்ல… வேணும்னா ஹாஸ்பிடல் போலாமா…” எனக் கேட்டான் ஆர்யான்.

 

அவனைப் பார்த்து சிரித்த சிதாரா, “என்ன ஜிராஃபி நீ… இதுக்கெல்லாம் யாராவது ஹாஸ்பிடல் போவாங்களா… எனக்கு எதுவும் இல்ல…” என்றாள்.

 

ஆனால் ஆர்யானின் மனம் சமாதானம் ஆகவில்லை.

 

சிதாராவின் கைப்பிடித்து வெளியே அழைத்து வந்தவன் அறை விளக்கை அணைத்து விட்டு சிதாராவை அணைத்துக் கொண்டு உறங்கினான்.

 

மறுநாள் காலையிலேயே ஆர்யான் ஆஃபீஸ் கிளம்பிச் சென்று விட அகிலாவிற்கு சந்தேகம் வராமல் இருக்க பாதி நேரம் அறையிலேயே இருந்தாள் சிதாரா.

 

வேலை காரணமாக ஆர்யான் வீட்டிற்கு வரும் போது நன்றாகவே இரவாகி விட்டது.

 

வீட்டினுள் எந்த சத்தமும் கேட்காததால் நேராக தன் அறைக்குச் செல்ல அறை இருட்டாக இருந்தது.

 

“மினி..” என அழைத்துக் கொண்டு அறை விளக்கை ஒளிர விட்டவன் சிதாரா அறையில் இல்லாததைக் கண்டு புருவம் சுருக்கினான்.

 

கட்டிலின் மீது ஏதோ கவர் இருக்கவும் எடுத்துப் பார்க்க அதில் ஆர்யானுக்கு ஒரு உடை இருந்தது.

 

அதன் மேலே நோட் ஒன்றில், “குளிச்சிட்டு இந்த ட்ரஸ்ஸ போட்டுக்கிட்டு மாடிக்கு வா ஜிராஃபி..” என்றிருக்கவும் புன்னகைத்த ஆர்யான் குளித்து விட்டு சிதாரா வைத்திருந்த உடையைப் போட்டுக் கொண்டு மாடிக்குச் சென்றான்.

 

அவ்விடம் முழுவதும் பல வர்ண விளக்குகள் ஒளிர விட்டு பூக்களாலும் பலூன்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

 

அதனை ரசித்து விட்டு கண்களால் சிதாராவைத் தேடிக் கொண்டு முன்னேறினான் ஆர்யான்.

 

நடுவில் சிறிய வட்ட மேசையொன்றிருக்க ஆர்யான் அதனை நோக்கி செல்லப் பார்க்க திடீரென, “ஸ்டாப் என்ட் க்ளோஸ் யுவர் ஐஸ்…” என எங்கிருந்தோ சிதாராவின் குரல் கேட்கவும் அங்கேயே நின்று கண்ணை மூடிக் கொண்டான்.

 

“நான் சொல்லும் வர கண்ண திறக்க கூடாது ஜிராஃபி…” என சிதாராவின் குரல் வரவும் சரி எனப் புன்னகைத்தான் ஆர்யான்.

 

சிதாரா, “அப்படியே கீழே குனிஞ்சு அந்த சின்ன பாக்ஸ எடு..” என்க அதன்படி செய்தான்.

 

“இப்போ மூணு ஸ்டெப் முன்னாடி போ…” என்கவும் கண்ணை மூடிக்கொண்டே மெதுவாக அடியெடுத்து வைத்தான்.

 

“கண்ண தெறக்காம கைல இருக்குற கிஃப்ட பிரி ஜிராஃபி..” என சிதாரா குரல் கொடுக்க அந்த சிறிய பரிசைப் பிரித்தான் ஆர்யான்.

 

“இப்போ கண்ண திற ஜிராஃபி…” என்கவும் கண்களைத் திறந்த ஆர்யான் தன் முன்னிருந்த மேசையில் வைக்கப்பட்டிருந்த கேக்கையும் தன் கையிலிருந்த பாக்ஸையுமே சில நொடிகள் மாற்றி மாற்றிப் பார்த்தான்.

 

ஆர்யானின் முன் வைக்கப்பட்டிருந்த கேக்கில், “Happy Birthday Appa..” என எழுதி இருந்தது.

 

அவன் கையில் இரண்டு சிவப்பு நிற கோட்டுடன் பிரெக்னன்சி கிட் இருந்தது.

 

கண்கள் கலங்க அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த ஆர்யானின் முன் வந்து நின்ற சிதாரா அவன் மார்பில் சாய்ந்து கொண்டு தன் சேலையை சற்று விலக்கி விட்டு ஆர்யானின் கரத்தை எடுத்து அவள் வயிற்றில் வைத்தாள்.

 

சிதாரா ஆர்யானின் கரத்தை எடுத்து அவள் வயிற்றில் வைக்கவும் ஆர்யானின் கரம் நடுங்கியது.

 

“மி…மினி…. நான்…. அப்…அப்பா…” ஆர்யானுக்கு வார்த்தைகள் வர மறுத்தன.

 

சிதாரா தன் வயிற்றின் மீதிருந்த ஆர்யானின் கரத்தை அழுத்தியவள் புன்னகையுடன் அவன் முகம் பார்த்து,

 

“ஆமா ரயன்… நீ அப்பா ஆக போற… இன்னும் பத்து மாசத்துல நமக்கு குட்டி பாப்பா வரப் போகுது…” என்க,

 

மகிழ்ச்சியில் கன்னத்தைத் தாண்டி கண்ணீர் வடிந்தோட சிதாராவின் முகத்தை ஏந்தி முத்த மழை பொழிந்தான்.

 

அவள் நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்தவன், “நான்… நான் அப்பா ஆக போறேன் மினி… அப்பா… நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா… என் பர்த்டேக்கு கிடைச்ச பெஸ்ட் கிஃப்ட் டி…” என்ற ஆர்யான் சந்தோஷத்தில் சிதாராவின் இடையைப் பிடித்து தூக்கி சுற்றினான்.

 

சிதாரா பயந்து, “ஏய்… விடு ரயன்… பயமா இருக்கு… தலை சுத்துது…” என்க அவளை இறக்கி விட்ட ஆர்யான் காற்று கூட புகா வண்ணம் அணைத்துக் கொண்டான்.

 

சில நொடிகள் அவன் அணைப்பில் நின்ற சிதாரா ஆர்யானின் அணைப்பு மேலும் இறுகவும், “ரயன்… பாப்பா…” என்றாள் மெதுவாக.

 

“ஓஹ்.. ஆமால.. சாரி மினி…” என்ற ஆர்யான் சிதாராவின் அருகில் மண்டியிட்டான்.

 

அவள் வயிற்றுப் பகுதியில் இருந்த சேலையை விலக்கியவன் சிதாராவின் வயிற்றைத் தடவி தன் உயிரை உணர முயன்றான்.

 

ஆர்யானின் கண்கள் கலங்கி விட சிதாரா அவன் தலையை வருடினாள்.

 

பின் சிதாராவின் வயிற்றில் முகம் பதித்து அவளை அணைத்துக் கொண்டான் ஆர்யான்.

 

சிதாராவின் உடல் சிலிர்த்தது.

 

சற்று நேரத்தில் தன்னை சமன்படுத்திக் கொண்ட ஆர்யான் சிதாராவின் வயிற்றில் அழுத்தமாக முத்தமிட்டு விட்டு எழுந்தான்.

 

சிதாரா, “ஓஹ்… உன் குழந்தைய மட்டும் தான் கிஸ் பண்ணுவியா…” என ஆர்யானை முறைத்தபடி கேட்டாள்.

 

“ஏன்டி… முதல்ல உன்ன தானே கிஸ் பண்ணேன்… குழந்தை உன் வயிற்றுல தானே வளருது… அப்போ கூட உன்ன தானே கிஸ் பண்ணி இருக்கேன்…” என்றான் அதிர்ச்சியாக.

 

“ஆமா ஆமா… இப்பவே இவ்வளவு அலுத்துக்குற… குழந்தை பிறந்திடுச்சின்னா என்னை எல்லாம் கண்டுக்கவே மாட்ட…” என்றாள் சிதாரா.

 

சிதாராவின் நெற்றியோடு நெற்றி முட்டிய ஆர்யான், “நமக்கு எத்தனை குழந்தை பிறந்தாலும் நீ தான் என்னோட முதல் குழந்தை… உன் இடத்த யாருக்குமே கொடுக்க மாட்டேன் நான்… அதே போல உன் மேல நான் வெச்சி இருக்குற அன்பும் ஒவ்வொரு நொடியும் அதிகரிச்சிட்டே போகுமே தவிர ஒரு நாளும் குறையாது…” என்றான் புன்னகையுடன்.

 

பின் இருவரும் சேர்ந்து கேக் வெட்டி ஆர்யானின் பிறந்தநாளைக் கொண்டாடினர்.

 

மறுநாள் ஆர்யான் அனைவரிடமும் சிதாரா கர்ப்பமாக இருப்பதைச் சொல்லவும் அகிலாவும் ரஞ்சித்தும் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றனர்.

 

ஒரு வாரம் தங்கி விட்டு வருவதாகக் கூறிய சங்கரும் தேவியும் உடனேயே கிளம்பி சிதாராவைக் காண வந்தனர்.

 

சிதாராவை அணைத்துக் கொண்ட சங்கர், “இப்ப தான் உன்ன முதல் தடவ என் கைல தூக்கினது போல இருக்கு சித்தும்மா… ஆனா இன்னைக்கு நீயே ஒரு குழந்தைக்கு தாயாக போற…” என்றார்.

 

தேவி, “எப்போவும் என் கிட்ட வம்பு வளர்த்துட்டே இருப்பேல்ல… என் பேரப்புள்ள பிறந்ததும் எல்லாத்துக்கும் சேர்த்து உன்ன வெச்சி செய்யும் பாரு சித்து…” என்க அனைவரும் சிரித்தனர்.

 

சிதாரா பாவமாக முகத்தை வைத்துக் கொண்டாள்.

 

அதன் பின் வந்த நாட்களில் அகிலாவும் ரஞ்சித்தும் சிதாராவை எந்தவொரு வேலையையும் செய்ய விடவில்லை.

 

ஆர்யான் ஒரு படி மேலேயே சென்று சிதாராவின் கால்கள் தரையில் படக் கூட அனுமதிக்கவில்லை.

 

சிதாரா ஏதாவது மறுத்துக் கூறினால் வேண்டுமென்றே, “நான் ஒன்னும் உனக்காக பண்ணல… என் குழந்தை கஷ்டப்படும்னு தான் பண்றேன்..” என சீண்டுவான் ஆர்யான்.

 

அதற்கு சிதாரா கோவித்துக் கொண்டு சென்றால் அவள் பின்னேயே சென்று கொஞ்சிக் கெஞ்சி சமாதானப்படுத்துவான்.

 

சிதாராவின் முகம் கொஞ்சம் சுருங்கினால் கூட ஆர்யானின் மனம் வலிக்கும்.

 

எல்லா விதத்திலும் சிதாராவை அன்போடும் அரவணைப்போடும் பார்த்துக் கொண்டான் ஆர்யான்.

 

நாட்கள் மாதங்களாக வேகமாகக் கடக்க ஏழாவது மாதத்தில் ஊரையே கூட்டி கோலாகலமாக வளைகாப்பை நடத்தினர்.

 

பின் சங்கரும் தேவியும் சிதாராவை தங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லப் பார்க்க ஆர்யானை விட்டு வர மறுத்தாள் சிதாரா.

 

வேறு வழியின்றி ஆர்யானும் சிதாராவுடன் அவர்களது வீட்டிற்கு சென்றான்.

 

அன்று இரவு சிதாரா தன் கையிலிருந்த வளையல்களை ரசித்தபடி இருக்க அவளுக்கு பால் கொண்டு வந்த ஆர்யான் அதை சிதாராவிடம் கொடுத்து விட்டு அவள் கால்களை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டான்.

 

பின் வீங்கியிருந்த அவள் கால்களை மெதுவாகப் பிடித்து விட,

 

சிதாரா, “என்ன பண்றடா.. இதுவும் உன் குழந்தைக்காக தானா…” எனப் புன்னகையுடன் கேட்டாள்.

 

சிதாராவின் காலில் முத்தமிட்ட ஆர்யான், “இல்ல… இது என் பேபி டாலுக்காக… என் குழந்தைய பெத்தெடுக்க தான் அவள் இவ்வளவு கஷ்டப்படுறாள்… ” என்றான்.

 

ஆர்யானின் மடியிலிருந்து தன் காலை எடுத்த சிதாரா அவன் மடியில் அமர்ந்து ஆர்யானை அணைத்துக்கொண்டு, “லவ் யூ ரயன்… நீ என் லைஃப்ல கிடைக்க நான் ரொம்ப கொடுத்து வெச்சிருக்கனும்…” என்க,

 

“ம்ஹ்ம்… இப்படி ஒரு தேவதை கிடைக்க நான் தான் அதிஷ்டம் பண்ணி இருக்கனும்..” என்றான் ஆர்யான்.

 

சிதாராவின் பிரசவ நாள் நெருங்க நெருங்க ஆர்யானுக்கு பயமாக இருந்தது.

 

சிதாரா தான் அவனை சமாதானப்படுத்துவாள்.

 

அன்று ஆர்யான் லேப்டாப்பில் ஏதோ வேலையாக இருக்கவும் சிதாரா வர அதனை மூடி வைத்தவன் சிதாராவின் பக்கம் கரம் நீட்டி அழைத்தான்.

 

சிதாரா வந்து அவன் மடியில் அமரவும், “என்னாச்சு மினி… ஏன் டல்லா இருக்க… ஏதாவது வலி இருக்கா… ஹாஸ்பிடல் போலாமா…” எனப் பதட்டமாகக் கேட்க,

 

“இல்ல.. எனக்கு என் ஜிராஃபி கூட பேசணும் போல இருக்கு… இந்த ரயன் கூட இல்ல..” என்க,

 

அவளைப் பார்த்து புன்னகைத்த ஆர்யான், “சரி சொல்லு… உன் ஜிராஃபி கூட என்ன பேசணும்..” எனக் கேட்டான்.

 

ஆர்யானின் கரங்களை எடுத்து தன்னை சுற்றி பிடித்துக் கொண்ட சிதாரா, “நான் என் ஜிராஃபிய ரொம்ப மிஸ் பண்றேன்… அவன் கூட வாயடிக்கிறது, சண்டை போடுறது எல்லாத்தையும் மிஸ் பண்றேன்… இந்த ரயன் ரொம்ப மோசம்… குழந்தை வரப் போறது தெரிஞ்சதுல இருந்து எப்பப் பாரு குழந்தைய பத்தியே பேசிட்டிருக்கான்… குழந்தைக்காக தான் எல்லாம் பண்றன்னு சொல்லி சொல்லி பண்றான்… எனக்கு ரொம்ப கடுப்பா இருக்கு… ஆனா என் ஜிராஃபி அப்படி இல்ல… அவன் என்னை பத்தி மட்டும் தான் திங்க் பண்ணுவான்… எனக்கு அப்புறம் தான் அவனுக்கு மத்தவங்க… என் கூட சண்டை போடுவான்… ஆனா கேரும் பண்ணுவான்… எனக்கு அதான் பிடிச்சிருக்கு…” என்றாள்.

 

“ஓஹ்… ரொம்ப தப்பாச்சே மினி… ஆனா எனக்கு தெரிஞ்சி உன் ரயன் உனக்காக தானே எல்லாம் பண்றான்… சும்மா உன் கிட்ட விளையாட குழந்தைக்காக பண்ணுறன்னு சொல்றானா இருக்கும்..” என ஆர்யான் கூற,

 

“எனக்கு தெரியும் அது… ஆனா எனக்கு ரொம்ப பொறாமையா இருக்கு… நான் ரயன் மேல ரொம்ப பொசசிவ்வா இருக்கேன்… குழந்தை கிட்ட கூட அவன விட்டு கொடுக்க விரும்பல.. பேச்சுக்கும் சரி…” என்றாள் சிதாரா.

 

ஆர்யான், “சரி.. இனிமே ரயன் அப்படி பண்ண மாட்டான்… உனக்கு அவன் மேல கோவம் இருந்தா என் கிட்ட அதான் உன் ஜிராஃபி கிட்ட சொல்லு… நான் அவன பனிஷ் பண்றேன்.. ரயனுக்கு அவனோட பேபி டால் தான் எல்லாமே…” என்கவும் புன்னகைத்தாள் சிதாரா.

 

பின், “ஆனா எனக்கொரு டவுட் மினி… ஜிராஃபி கூட நீ இப்படி மடில எல்லாம் உக்காந்து கட்டிப் பிடிச்சிக்கிட்டு பேசுவியா என்ன..” என நக்கலாக ஆர்யான் கேட்கவும்,

 

அவனை இன்னும் இறுக அணைத்த சிதாரா, “நான் என் ஜிராஃபி கூட எப்படி வேணாலும் இருப்பேன்… மடில உக்காருவேன்… கட்டிப் பிடிப்பேன்… முத்தம் கொடுப்பேன்… ஏன்னா அவன் என்னோட ஜிராஃபி… என்னோட ரயன்… எனக்கு மட்டும் தான் அதுக்கு எல்லா உரிமையும் இருக்கு…” என ஆர்யானை முத்தமிட்டபடி கூறினாள் சிதாரா.

 

சிதாராவைப் பார்த்து சிரித்த ஆர்யான், “அதுவும் சரி தான்… உனக்கு தான் எல்லா உரிமையும் இருக்கு… இந்த ஆர்யான் எப்பவோ மொத்தமா சிதாராவோட ப்ராப்பட்டி ஆகிட்டானே… அதனால நீ என்ன வேணாலும் பண்ணிக்கோ…” என்றான்.

 

இருவரும் ஒருவர் அணைப்பில் மற்றவர் அந்த நொடியை அனுபவித்துக் கொண்டிருக்க திடீரென சிதாராவின் முகம் மாறியது.

 

பிரசவ வலி வந்து, “ரயன்…..” எனக் கத்தினாள் சிதாரா.

 

அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஆர்யான் சிதாராவின் முகம் சுருங்கவும் பயந்தவன், “எ.. என்னாச்சு மினி…” என்க,

 

அடிவயிற்றைப் பிடித்துக் கொண்ட சிதாரா, “ஆஹ்….. முடியல ரயன்… வலிக்கிது..” என்றாள் அழுதபடி.

 

அவசரமாக அவளைக் கையில் ஏந்திக் கொண்ட ஆர்யான், “அழாதே மினி… சீக்கிரம் ஹாஸ்பிடல் போயிடலாம்…” என்றவன் சங்கரை எழுப்பி தகவல் கூறி தங்களைத் தொடரக் கூறி விட்டு யாருக்கும் காத்திருக்காமல் மருத்துவமனை கிளம்பினான்.

 

சிதாராவை உள்ளே அழைத்துச் செல்லப் பார்க்க அவளோ ஆர்யானின் கையை விடவேயில்லை.

 

பின் ஆர்யானும் சிதாராவுடனே ஆப்பரேஷன் தியேட்டருக்குள் நுழைந்தான்.

 

சங்கரும் தேவியும் மருத்துவமனைக்கு வந்து ஆர்யானின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

 

அவர்களும் உடனே அங்கிருந்து கோயம்புத்தூர் கிளம்பினர்.

 

நேரம் செல்ல செல்ல சிதாராவிற்கு வலி அதிகரிக்க ஆர்யானின் கரத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.

 

சிதாராவின் பிடியில் ஆர்யானின் கை வலித்தாலும் தன்னவள் அதை விட அதிகமாக கஷ்டப்படுகிறாள் என சிதாராவுக்கு சமாதானம் கூறினான்.

 

சில மணி நேரத்திலே தன் தாயை அதிகம் துடிக்க வைக்காமல் ஆர்யான் மற்றும் சிதாராவின் செல்வப் புதல்வி பூமியில் ஜனித்தாள்.

 

குழந்தையைப் பிரசவித்ததுடன் சிதாரா மயங்கி விட குழந்தையைக் கூடப் பார்க்காமல் கண்ணீருடன் சிதாராவின் நெற்றியில் அழுத்த முத்தமிட்டான்.

 

நர்ஸ் குழந்தையை வெளியே நின்றிருந்த தேவியின் கையில் கொடுக்க அவரும் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

 

தன்னவள் கண் விழிக்கும் வரையுமே ஆர்யான் சிதாராவின் அருகிலேயே அமர்ந்து பார்த்துக் கொண்டான்.

 

குழந்தையைக் கூட பார்க்க மறுத்து விட்டான்.

 

சற்று நேரத்திலேயே சிதாரா மெதுவாகக் கண் விழிக்க, “மினி… நீ நல்லா இருக்கேல்ல..” என்றான் ஆர்யான்.

 

உடல் சோர்வாக இருந்தாலும் அதையும் மீறி ஆர்யானைப் பார்த்து புன்னகைத்த சிதாரா, “குழந்தை எங்க ரயன்…” எனக் கேட்டாள்.

 

தேவியும் சங்கரும் குழந்தையுடன் அறைக்குள் நுழைய ஆர்யான் கைகள் நடுங்க தன் மகளை கரத்தில் ஏந்தி முத்தமிட்டான்.

 

சிதாராவை கட்டிலில் சாய்த்து அமர வைத்தவன் குழந்தையை அவளின் முகத்தருகே கொண்டு செல்ல, 

 

தாயானவள் தன்னவனின் கரத்தில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டாள்.

 

ஒரு கரத்தில் குழந்தையை ஏந்தி மறு கரத்தால் சிதாராவை அணைத்துக் கொண்டான் ஆர்யான்.

 

_______________________________________________

 

மூன்று வருடங்களுக்கு பின்

 

தன் விளையாட்டு சாமான்களை எல்லாம் கடை பரப்பி விளையாடிக் கொண்டிருந்த அந்த மூன்று வயது குழந்தையின் காதில் சிதாரா ஏதோ கூறவும் அதுவும் தலையாட்டி விட்டு ஆர்யானிடம் சென்றது.

 

ஆர்யான் லேப்டாப்பில் தன் ஆஃபீஸ் வேலை பார்த்துக் கொண்டிருக்க அவனிடம் சென்ற குழந்தை ஆர்யானின் சட்டையைப் பிடித்து இழுத்தது.

 

லேப்டாப்பில் இருந்து பார்வையை அகற்றியவன் கீழே பார்க்க,

 

ஆர்யான் மற்றும் சிதாராவின் செல்ல மகள் பிரக்யா நின்றிருந்தாள்.

 

அவளைத் தூக்கி தன் மடியில் அமர்த்திக் கொண்ட ஆர்யான், “என்னடா குட்டி… ஏதாவது வேணுமா..” என்றான்.

 

அவனிடம் ஆமென்று தலையசைத்த குழந்தை, “ப்பா… பெகிக்கு தம்மிப் பாப்பா மேணும்…” என மழலை மொழியில் கேட்டது.

 

அறைக்கு வெளியே மறைந்து நின்று தங்களை அவதானித்துக் கொண்டிருந்த மனையாளைக் கண்டு கொண்டவன் குழந்தையிடம், “உங்க அம்மா தான் பிரகி குட்டி கிட்ட இப்படி கேக்க சொல்லி அனுப்பினாளா…” என்க,

 

பிரக்யாவும் ஆம் எனத் தலையசைத்தாள்.

 

வெளியே நின்றிருந்த சிதாரா மகள் தன்னை மாட்டி விட்டதை எண்ணி தலையில் அடித்துக் கொண்டாள்.

 

குழந்தையைக் கீழே இறக்கி விட்ட ஆர்யான், “அப்பாவுக்கு உன்ன விட பெரிய குழந்தை ஒன்ன கவனிக்க வேண்டி இருக்கு… நீ போய் விளையாடுடா… அந்தக் குழந்தைக்கு பனிஷ்மன்ட் கொடுத்துட்டு அப்பா பிரகி குட்டியோட விளையாட வரேன்..” என்றதும் குழந்தை சென்றது.

 

உதட்டை சுழித்தபடி கோவமாக அறைக்குள் நுழைந்த சிதாரா ஆர்யானிடம், “நீ ரொம்ப மோசம் ரயன்… உனக்கு மட்டும் பொண்ணு வேணும்… இதே நான் உன்ன போல பையன் கேட்டா முடியாதுன்னு சொல்ற… போ… நான் உன்னோட பேச மாட்டேன்… என் ஜிராஃபி கிட்டே கேட்டுக்குறேன்… அவன் எனக்காக என்ன வேணாலும் பண்ணுவான்…” என சினுங்கினாள்.

 

அவளைப் பின்னிருந்து அணைத்துக் கொண்ட ஆர்யான், “நீ இன்னைக்கு ஜிராஃபின்னு பேசி எவ்வளவு ஐஸ் வெச்சாலும் நீ சொல்றது நடக்காது… நமக்கு பிரக்யா மட்டும் போதும் மினி… அன்னைக்கு நீ வலில துடிக்கும் போது எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா… அப்போவே முடிவு பண்ணிட்டேன்.. நீயும் நம்ம பொண்ணும் மட்டும் எனக்கு போதும் மினி… திரும்ப நீ வலில துடிக்கிறத பார்க்குற தைரியம் எனக்கில்ல..” என்கவும்,

 

அவன் பக்கம் திரும்பிய சிதாரா ஆர்யானின் முகத்தை தன் கைகளில் ஏந்தி, “நீ நெனக்கிறது போல எதுவும் இல்ல ரயன்… தாய்மைன்னு சொல்றது வரம்… ஒரு பொண்ணுக்கு பிரசவம்கிறது மரணத்தை நெருங்கிட்டு வரது தான்… ஆனா அதையும் தாண்டி அந்தக் குழந்தையை பெத்து எடுக்க அவள் படுற கஷ்டம் அந்தப் பிஞ்சிக் குழந்தையோட முகத்த பார்த்ததும் எதுவும் இல்லாதது போல தோணும்… அந்தக் குழந்தையோட ஒற்றை சிரிப்புக்காகவே ஒரு தாயால எந்தக் கஷ்டத்தையும் தாங்கிக்க முடியும்… ப்ளீஸ் கண்மணி… எனக்கு குட்டி ரயன் வேணும்… ஓக்கே சொல்லு.. ப்ளீஸ்… ப்ளீஸ்…” எனக் கண்களை சுருக்கிக் கெஞ்ச ஆர்யானின் மனம் இளகியது.

 

ஆர்யான் சிதாராவைப் பார்த்து சம்மதமாக புன்னகைக்கவும் மகிழ்ந்த சிதாரா அவன் இதழை சிறை செய்தாள்.

 

அதன் பின் சிதாராவின் மீதான ஆட்சி ஆர்யானின் வசம் சென்றது.

 

❤️❤️❤️சுபம்❤️❤️❤️

 

– Nuha Maryam –

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
0
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    6 Comments

    1. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதல் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    2. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான குடும்பக் கதை. நகைச்சுவையும், அழுத்தமும் கொண்ட சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.

    3. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    4. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.