Loading

காதல் 4

 

 

சூரியன் மெல்ல மெல்ல ஆதிக்கம் துவங்கி சுட்டெரித்துக் கொண்டிருந்த வேளையில், ராஜசேகர் அந்த வீட்டின் முன் நின்று சிறிது யோசனையுடன் அவ்வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தார். உள்ளே மழலைகளின் கோரஸ் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

 

எதற்கோ வெளியே வந்த மலர்விழியின் அன்னை ராசாத்தியின் பார்வையில் பட்டார் ராஜசேகர்.

 

வயது மூப்பினால் கண் பார்வை மங்கிய நிலையில், கண்களை சுருக்கி, “யாரு நீங்க? என்ன வேணும்?” என்று கேட்டார். பின் அவரே, “உங்க வீட்டு குழந்தையை இங்க சேர்க்க வந்துருக்கீங்களா? உள்ள வாங்க நான் மலரை கூப்பிடுறேன்.” என்று பதிலையும் கூறிவிட்டு, அவருக்கு பேச வாய்ப்பே தராமல் உள்ளே சென்று விட்டார்.

 

“மலரு, ஸ்கூல் விஷயமா யாரோ உன்னை பார்க்க வந்துருக்காங்க.” என்று அவர் கூறியது ராஜசேகருக்கும் கேட்டது.

 

ஒருவித பதட்ட நிலையே அமர்ந்திருந்தார் அவர். சற்று நேரத்தில் அங்கே வந்தார் மலர்விழி. காலர் வைத்த ஜாக்கெட், மூப்பின் அடையாளமாய் தலையில் ஆங்காங்கே தெரியும் வெள்ளை முடி, கண்களில் பெரிய ஃப்ரேமுடன் கூடிய கண்ணாடி என்று இருப்பத்திமூன்று வருடங்களுக்கு முன்பாக பார்த்த அவரின் மலருக்கும் இப்போதிருக்கும் மலர்விழிக்கும் அத்தனை வித்தியாசங்கள்.

 

அதுமட்டுமா? அப்போதைய மலரின் பார்வையில், அவரின் ராஜாவுக்கான பார்வையிலிருந்த கனிவு, அன்பு, பாசம், காதல் – இவை எதுவுமே இப்போது இல்லையே!

 

ராஜசேகர் அவரின் எண்ணத்தில் மூழ்கியிருக்க, அவரை தூரத்திலேயே அடையாளம் கண்டுக்கொண்ட மலர்விழிக்கோ அதிர்ச்சி ஒருபுறம் இருந்தாலும், மனம் முழுவதும் வெறுப்பு மட்டுமே நிறைந்திருந்தது. ஒரு பெருமூச்சுடன், அவரின் அதிர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அவரின் கவனம் அங்கில்லை என்பதை உணர்ந்து செருமினார்.

 

அவரின் செருமலில் நிகழ்விற்கு வந்த ராஜசேகர், “மலர்…” என்று தயக்கத்துடன் ஆரம்பித்தார்.

 

“மிஸ்டர். ராஜசேகர், நான் தான் மலர்விழி. உங்களுக்கு நர்சரி சம்பந்தமா என்ன கேட்கனுமோ கேட்கலாம்.” என்றார் கம்பீரமாக.

 

மலர்விழியின் கூற்றிலிருந்தே, அவரை மலர் என்று சுருக்கி அழைக்கும் வாய்ப்பை ராஜசேகர் இழந்துவிட்டார் என்பதை உணர்த்தியிருந்தார். மேலும் நர்சரி தவிர வேறு எதைப் பற்றியும் பேச அவர் விரும்பவில்லை என்பதையும் அடிகோடிட்டு காட்டியிருந்தார்.

 

“மலர், நான் உன்னை விட்டு…” என்று ஆரம்பித்தவரை இடைமறித்த மலர்விழி, “நான் முடிஞ்சு போன எதையும் கேட்க விரும்பல.” என்றார்.

 

“ஹ்ம்ம், எனக்கு தெரியும். ஆனா, நான் இப்போ வந்துருக்குறது… நீ… நீ பத்திரமா இருக்கியான்னு…” என்று தயக்கத்துடன் கூறியவரை முறைத்தவர், “இத்தன வருஷம் இல்லாம இப்போ என்ன திடீர் அக்கறை?” என்று குத்தலாக கூறினார்.

 

அதில் உள்ளம் மறுகினாலும், அவர் கூறுவது உண்மை தானே என்று அமைதியாக இருந்தவர், “எதுக்கும் இனிமே கொஞ்சம் ஜாக்கிரதையா இரு.” என்றார்.

 

அதற்கும் நக்கல் சிரிப்பை உதிர்த்தவர், “உங்களை மாதிரி பணத்துக்கு பின்னாடி போறவங்க தான் எப்போ என்ன ஆகுமோன்னு பயப்படனும்.” என்றார்.

 

“ப்ச், நான் சொல்றதை கேட்கவே கூடாதுன்னு இருக்கியா மலர்?” என்று வேதனையுடன் அவர் கூற, “யாரு நீங்க? நீங்க சொல்றதை எதுக்கு நான் கேட்கணும்?” என்று கோபமாக வினவினார் மலர்விழி.

 

இருப்பத்திமூன்று வருட கோபம் அனைத்தும் மொத்தமாக வெடிக்க காத்திருந்ததோ, அம்மழலைகளின் சத்தத்தில் இயல்பிற்கு திரும்பியவர், “ப்ளீஸ் இங்கயிருந்து போயிடுங்க. திரும்ப இந்த பக்கம் எட்டிக்கூட பார்த்துறாதீங்க.” என்று கைகூப்பியவர், விடுவிடுவென்று வீட்டிற்குள் சென்றுவிட்டார்.

 

அவர் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த ராஜசேகரின் மனம், ‘இது உன்னோட பாவத்துக்கான  தண்டனை!’ என்று எதார்த்தத்தைக் கூற, அவரும் கனத்த இதயத்துடன் அங்கிருந்து சென்றார். அவர் மனம் முழுக்க, தன் பகைவர்களினால் இவர்களுக்கு எதுவும் நேரக்கூடாது என்ற கவலையே நிறைந்திருந்தது.

 

*****

 

சஞ்சய் கூறியது போலவே பத்து நிமிடங்களில், ராஜசேகர் தமிழ்நாட்டிற்கு தான் சென்றிருக்கிறார் என்பதற்கான ஆதாரங்களை கொடுத்திருந்தாலும், சஞ்சயால் உடனே கிளம்ப முடியாத சூழ்நிலை.

 

ராஜசேகர் ஏற்படுத்தியிருந்த குழப்பங்களை சரி செய்ய சஞ்சய் அங்கே இருக்க வேண்டிய கட்டாயம். அது மட்டுமில்லாமல், ஆஸ்திரேலியாவில் இருக்கும் அவனின் தொழில்களிலும் யாரோ சதி செய்ய முயன்றிருப்பது தெரிந்தது. அதனால் அனைத்தையும் தன் நேரடி கண்காணிப்பில் கொண்டு வந்து, அதற்கான பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய சூழலிலும் சிக்கிக் கொண்டான்.

 

அதிலிருந்து வெளிவருவதற்கே ஒரு வாரம் ஆனது. இந்த ஒரு வாரத்தில், நடந்த சூழ்ச்சிகளை ஆராயும் போது, தனக்கெதிராய் யாரோ ஒரு எதிரி உருவாகியிருப்பது தெரிந்தது. மேலும், இந்த ராஜசேகர் விஷயத்திலும் அவனே திரை மறைவில் அவரை ஆட்டி வைத்திருக்கலாம் என்றும் யூகித்தான்.

 

*****

 

இந்த ஒரு வாரத்தில், சஞ்சீவை பல சமயங்களில் சந்தித்துவிட்டாள் ரஞ்சு. அவையனைத்தும் எதிர்பாராத சந்திப்பா, இல்லை திட்டமிட்ட சந்திப்பா என்று பிரித்தறிய முடியா வண்ணம், ரஞ்சு எங்கு சென்றாலும் அங்கு இருந்தான் சஞ்சீவ். பாவம் அவளே குழம்பி தான் போனாள். ஆயினும், அவனைத் தவறாக நினைக்கத் தோன்றவில்லை. அவன் எப்போதும் அவளின் ‘அமுல் பேபி’ தான்.

 

இந்த சந்திப்புகளின் மூலம், இருவரும் நன்றாக பேசத் துவங்க, ‘ரஞ்சு’ மற்றும் ‘சஞ்சு’வாகிப் போயினர் மற்றவருக்கு.

 

இதில் சஞ்சு என்கிற சஞ்சிதாவிற்கு தான் வருத்தம்!

 

“நானும் சஞ்சு, அவனும் சஞ்சுவா?” என்று உதடு பிதுக்கி அவள் வினவ, “நீயும் அவனும் தான் அண்ணன் தங்கச்சியாச்சே!” என்று அவளை கலாய்த்தாள் தர்ஷு.

 

ரஞ்சு அவளைப் பற்றி மேலோட்டமாக கூற, சஞ்சீவோ அவனைப் பற்றி வாயே திறக்கவில்லை. அவ்வப்போது அவனிடமிருந்து உதிரும் சொற்களைக் கொண்டு, இவளே யூகித்ததில், அவனின் அன்னை மற்றும் தந்தை இப்போது உயிருடன் இல்லையென்பதும், அவனிற்கு தந்தை மீது சிறிதும் பாசமில்லை என்பதைக் கண்டுகொண்டாள். இதைப் பற்றி மேலும் அவனிடம் தோண்டித் துருவ அவள் விரும்பவில்லை.

 

அந்த வாரயிறுதியில் தோழிகள் மூவரும் அவர்களின் ஊருக்கு செல்லலாம் என்று நினைத்திருக்க, அதனை பேச்சோடு பேச்சாக சஞ்சீவிடமும் சொல்லியிருந்தாள் ரஞ்சு.

 

அவனோ அதைப் பற்றி வேறேதும் வினவவில்லை. அவனின் பாவனையில் எந்த மாற்றமும் இல்லை என்பதை தெரிந்து கொண்டு, தர்ஷுவிடம் கூறினாள் ரஞ்சு.

 

ஆம், தர்ஷுவிற்கு சஞ்சீவின் மேல் சந்தேகம் தான். முதல் நாள் அவர்கள் எதேச்சையாக பூங்காவில் சந்தித்துக் கொண்டாலும், அதற்கடுத்த நிகழ்வுகள் திட்டமிடப்பட்ட சந்திப்புகளாவே அவளிற்கு தோன்றின. அவளின் சந்தேகத்தை மற்ற இருவரிடமும் கூறவும் செய்தாள்.

 

“உங்களுக்கு அந்த சஞ்சீவ் மேல எந்த டவுட்டும் வரலையா?” என்று பேச்சை துவங்கினாள் தர்ஷு.

 

இருவரும் தர்ஷுவை புரியாமல் நோக்கிவிட்டு, “எதுக்கு சந்தேகம்?” என்றனர் ஒரே குரலில்.

 

“அந்த சஞ்சீவ் எதுக்கு அடிக்கடி ரஞ்சுவ மீட் பண்ணனும்?” என்று அவள் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே, “அதான் கோ-இன்சிடென்ஸ்னு சொன்னாரே.” என்று சஞ்சீவிற்கு வக்காலத்து வாங்கினாள் சஞ்சு.

 

“ஒரு தடவை நடந்தா தான், அதுக்கு பேரு கோ-இன்சிடென்ஸ். ஓயாம நடந்தா அது ப்ரீ-பிளான்ட்.” என்ற தர்ஷு ஒரு பெருமூச்சுடன், “ஐ திங்க் ஹி இஸ் ஸ்டாக்கிங் யூ!” என்றாள் ரஞ்சுவை நோக்கி.

 

“அவன் எதுக்கு ரஞ்சுவை பின்தொடரனும்?” என்று மீண்டும் சஞ்சுவே வாய் திறக்க, எப்போது போல் ரஞ்சு அவர்களை மெளனமாக பார்த்திருந்தாள்.

 

“அது எனக்கும் சரியா தெரியல. ஆனா, அவன் ரொம்ப டேஞ்சரஸ்.” என்றாள் தர்ஷு.

 

“ஹே அவனை போய் டேஞ்சரஸ்னு சொல்ற. எப்பவும் சிரிச்சுட்டே அழகா பேசுறான்.” என்ற சஞ்சுவை இடைவெட்டியவள், “அழகானது எல்லாமே ஆபத்தானது தான். அண்ட் ஒருத்தரால எப்பவுமே சிரிச்சுட்டே இருக்க முடியாது. அப்படி இருந்தா அவன் நடிக்கிறான்னு அர்த்தம்.” என்றாள் தர்ஷு.

 

ரஞ்சுவிற்கு இருவரின் வாதமும் சரியாக தான் தோன்றியது. அவளிற்குமே, சஞ்சீவ் அவளைப் பின்தொடர்கிறானோ என்ற சந்தேகம் இருக்கிறது. ஆனால் அவனை ஆபத்தானவன் என்றும் கருத முடியவில்லை.

 

மூவராலும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியாததால் தான் இந்த சோதனையை மேற்கொள்ள தீர்மானித்தனர். அதன்படி ரஞ்சு ஊருக்கு செல்கிறாள் என்று அவனிற்கு தெரிந்தால், குறைந்தபட்சம் எப்போது செல்கிறாள், எப்போது திரும்புவாள் என்றாவது அவன் வினவுவான். அப்படி வினவினால், அவன் ரஞ்சுவைப் பின்தொடர்வது குறித்த அவர்களின் சந்தேகம் ஓரளவிற்கு சரியானது தான் என்ற முடிவிற்கு வர இயலும் என்பதே அவர்களின் திட்டம்.

 

ஆனால், நடந்ததை ரஞ்சு கூறியதும், “நான் தான் சொன்னேன்ல அப்படி எல்லாம் ஒண்ணுமில்லன்னு.” என்றாள் சஞ்சு.

 

“ஹ்ம்ம், ஒண்ணுமில்லன்னா சந்தோஷம் தான்.” என்றாள் தர்ஷு.

 

“உனக்கேன் அவன் மேல இவ்ளோ காண்டு?” என்று சஞ்சு கேட்டதும், “அவன் நாம நினைச்ச மாதிரி சாதாரண ஆளில்ல. ரொம்ப பெரிய பணக்காரன். அப்படி இருக்கவன் எதுக்கு இந்த ஊருல ரெஸ்டாரண்ட் ஆரம்பிக்கணும்? ஸ்டில் ஐ ஃபீல் சம்திங் ஃபிஷி.” என்று யோசனையுடன் கூறிய தர்ஷுவைக் கண்ட ரஞ்சு, “ஷ், போதும் ரெண்டு பேரும் உங்க சிஐடி மூளையை கொஞ்ச நாள் கழட்டி வச்சுட்டு ஊருக்கு கிளம்பலாம் வாங்க.” என்று அவர்களை இழுத்துச் சென்றாள்.

 

இவர்களுக்கு முன்பாக அவன் அவ்வூருக்கு சென்றிருப்பது அறியாமல்!

 

*****

 

தோழிகள் மூவரின் வீடு, அவர்கள் தங்கியிருக்கும் இடத்திலிருந்து ஒரு மணி நேர தூரம் இருந்தது. வெள்ளியன்று மாலை கல்லூரி முடிந்ததும் கிளம்பியவர்கள் இரவு எட்டு மணிக்கெல்லாம் ஊருக்கு சென்றிருந்தனர்.

 

கிளம்பும் முன் ரஞ்சுவின் வீட்டிற்கு அழைத்தபோது, அவளின் தாய், தந்தை மற்றும் சுபி மூவரும் அவர்களின் தூரத்து சொந்தத்தின் திருமணத்திற்கு சென்றிருப்பதாகவும், அவர்கள் வரும்வரை தர்ஷுவின் வீட்டில் இருக்குமாறும் கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டனர்.

 

இதைக் கேள்விப்பட்ட மற்ற இருவரும், “என்ன இது? ஒரு வாரத்துக்கு முன்னாடியே வரோம்னு சொல்லியாச்சுல, அப்போவே சொல்ல வேண்டியது தான! தூரத்து சொந்தத்துல கல்யாணம்னா மூணு பேரும் போகணுமா? இப்போ மட்டும் உங்க அப்பாக்கும் அம்மாக்கும் வேலை இருக்காதா? இந்த தடவை காலேஜூக்கு வரதுக்கு முன்னாடி இதை கேட்டுட்டு தான் வரணும்.” என்றனர்.

 

ரஞ்சுவோ அவர்கள் பேசியதற்கு எந்த எதிர்வினையும் புரியவில்லை. அவள் மனதினுள் பாரமேறிய உணர்வு…

 

தர்ஷு மலருக்கு அழைத்து, ரஞ்சுவும் அங்கு தான் இரவு தங்க போகிறாள் என்று கூறினாள். ஏற்கனவே, வசுந்தரா ஊரில் இல்லாததால், சஞ்சுவும் தர்ஷு வீட்டில் தான் தங்குவதாக இருந்தது.

 

“ஹே, அப்போ இன்னைக்கு நாம ஒன்னா தான் இருக்க போறோம். இன்னைக்கு கேர்ள்ஸ் நைட்ல மலர் ஆன்ட்டியையும் சேர்த்துக்கலாம்.” என்று உற்சாகமாக திட்டமிட்டாள் சஞ்சு. அவளின் உற்சாகம் மற்றவர்களையும் தொற்றிக் கொண்டது.

 

திட்டமிட்டதைப் போலவே, அவர்களின் ‘கேர்ள்ஸ் நைட்’ ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமென ஆரவாரமாக செல்ல, ஆடிக் கலைத்தவர்கள் நடு இரவில் தான் உறங்கிப் போயினர்.

 

மூவரும் ஒருவரையொருவர் அணைத்தபடி உறங்கியதைக் கண்ட மலர்விழி, ‘இப்போ போலவே எப்போதும் மூவரும் சேர்ந்தே இருக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டார்.

 

*****

 

இரவு வெகு நேரம் கழித்து தூங்கியதால், காலையில் நேரம் கழித்தே விழித்தனர் மூவரும். விழித்தவுடன் முதலில் வாசலுக்கு வந்து அவர்களின் ஊர் அழகை ரசிக்கவில்லையென்றால், மூவருக்கும் அந்த நாள் நல்லதாகவே அமையாது என்ற எண்ணம்.

 

இதோ மூன்று தேவியரும், வெளிவாயிலுக்கு விஜயம் செய்ய, அங்கே பதட்டத்துடன் நின்றிருந்தார் ராஜசேகர்.

 

அவரின் பதட்டமான முகத்தை கண்ட ரஞ்சு, “என்னாச்சு அங்கிள்?” எதுவும் ப்ராப்ளமா?” என்று வினவினாள்.

 

அவளைக் கண்டு, மேலும் பதட்டமடைந்தவர், “நீ யாரு மா?” என்று சுயநினைவின்றி கேள்வியைக் கேட்டிருந்தார்.

 

அவரின் கேள்வியில், தோழியர் மூவரும் அவரை ஒருமாதிரி பார்க்க, அவரோ அதையெல்லாம் சட்டை செய்யாமல், ரஞ்சு சொல்லப்போகும் பதிலுக்காக காத்திருந்தார்.

 

அப்போது அங்கு வந்த மலர்விழி, “என்ன மூணு பேரும் இங்கயே நின்னுட்டீங்க? உள்ள போய் சாப்பிடுங்க.” என்றார்.

 

ரஞ்சு, “ஆன்ட்டி, இவரு…” என்று ஆரம்பிக்க, “நான் பார்த்துக்குறேன் ரஞ்சு. நீ உள்ள போ.” என்றார்.

 

மூவரும் அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டே உள்ளே செல்ல, “உங்களை இங்க வராதீங்கன்னு சொல்லிருக்கேன்ல.” என்று மலர்விழி அடிக்குரலில் கூறியது அவர்களுக்கும் கேட்டது.

 

“என்னாச்சு தர்ஷு? எதுவும் ப்ராப்ளமா?” என்று ரஞ்சு வினவ, “தெரியல ரஞ்சு. இப்போ கேட்டா அத்த இன்னும் டென்ஷனாவாங்க. கொஞ்ச நேரம் கழிச்சு தான் கேட்கணும்.” என்றாள்.

 

*****

 

மும்பையில் தொழில்களில் ஏற்பட்ட சிக்கல்களை எல்லாம்  தீர்த்த சஞ்சய், ராஜசேகரை தேடி ஊருக்கு கிளம்பினான். அவனுடன் கோகுலும் பயணத்தை மேற்கொண்டான்.

 

அந்த விமான பயணம் முழுவதும், ‘யார் அவனின் புது எதிரி’ என்ற சிந்தனையிலேயே கழித்தவன் அறியவில்லை, அவனின் எதிரியை அறியும் முன் அவன் வாழ்க்கை பல திருப்பங்களை சந்திக்க போகிறது என்று.

 

அதற்கு காரணமாகப் போகின்றவளை விரைவில் சந்திக்க போகிறான் என்றோ, உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் தேடிய அவன் தம்பியை அவன் துரோகியை தேடிப் போகும் இடத்தில் பார்க்கப் போகிறான் என்றோ அவன் அறியவில்லை…

 

*****

 

தோழியர் மூவரும் காலையுணவை முடித்துவிட்டு, ஊரை சுற்றிப் பார்க்கச் சென்றனர். அப்போது வழியில் நின்றவனைப் பார்த்து மூவருமே அதிர்ந்தனர். அவனோ அதே புன்னகையுடன் இவர்களைப் பார்த்திருந்தான்.

 

“இவன் எதுக்கு இப்போ இங்க வந்துருக்கான்..?” என்று சஞ்சு கேட்க, “நான் தான் சொன்னேன்ல, அவன் ரஞ்சுவை ஃபாலோ பண்றான்.” என்றாள் தர்ஷு.

 

“இருக்குமோ? எதுக்கு ஃபாலோ பண்ணனும்.” என்று மீண்டும் சஞ்சு வினவ, “மேபி லவ்வா இருக்கும்!” என்றாள் தர்ஷு அசுவாரஸ்யமாக.

 

“வாவ் செமல! ரஞ்சு பேபி, நீ தான் நம்ம கேங்ல ஃபர்ஸ்ட் லவ் பண்ண போற.” என்று குதூகலமானாள் சஞ்சு.

 

“ஹே, அது எப்படி அவ்ளோ நிச்சயமா சொல்ற, அவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணுவாங்கன்னு!” என்று தர்ஷு ஆரம்பிக்க, “ஏன்… ஏன்… ஏன்… லவ் பண்ண மாட்டாங்க? ஹி லுக்ஸ் ஹேண்ட்ஸம், பழகவும் ஈஸியா இருக்கான். எப்பவும் சிரிச்சா முகத்தோட, பார்க்கவே பொண்ணுங்களுக்கு பிடிச்ச மாதிரி இருக்கான். பிளஸ் ஹி இஸ் ரிச் டூ! வேற என்ன வேணும்?” என்று சஞ்சு தன் வாதத்தை முன் வைத்தாள்.

 

“நீ சொன்னியே, ‘பொண்ணுங்களுக்கு பிடிச்ச மாதிரி’ன்னு, அது தான் யோசிக்க வைக்குது. ஏன் அவன் ஒரு ஏமாத்துகாரனா இருக்கக்கூடாது? திரும்பவும் நான் சொல்றேன், அழகு ஆபத்தானது.” என்றாள் தர்ஷு.

 

சஞ்சீவை பற்றி  தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருந்த இருவரும் ரஞ்சுவின் மனதைப் பற்றி யோசிக்கவே இல்லை.

 

ரஞ்சுவோ, தர்ஷு கூறிய காதலிலேயே அதிர்ந்து தான் போயிருந்தாள். ‘காதல்’ என்றதும் அவளின் நினைவிற்கு வந்தது அவளின் ‘கனவுக் காதலன்’ தானே!

 

அவளின் மனமோ சஞ்சீவை அவளின் கனவுக் காதலனுடன் பொருத்த முயன்று கொண்டிருக்க, அப்போது தான் இருவரும் சண்டையிடும் சத்தம் அவளிற்கு கேட்டது.

 

“ப்ச், ரெண்டு பேரும் அமைதியா இருங்க.” என்றவாறே அவனை நோக்கி சென்றனர்.

 

அவனை நெருங்கியதும், “சஞ்சு, நீங்க இங்க?” என்று தயக்கத்துடன் வினவினாள் ரஞ்சு.

 

“உங்களை பார்க்க தான் வந்தேன்.” என்று அவன்  சிரிப்புடன் கூறியதைக் கேட்டவர்கள் அதிர்ந்து நின்றுவிட்டனர்.

 

காதல் கொள்வோம்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
10
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்