Loading

காதல் 12

 

 

மலர்விழி வெளியே சென்றதும், அந்த அறையின் ஒரு மூலையிலிருந்த நாற்காலியில் அமர்ந்து தன் அலைபேசியில் கவனம் செலுத்தினான் சஞ்சய்.

 

சற்று நேரம் நெளிந்து கொண்டிருந்த ரஞ்சுவிற்கு உறக்கம் வந்தாலும், சஞ்ஜயின் முன் உறங்குவதற்கு யோசித்தவளாக ஜன்னல் வழியே வெளியே பார்வையை செலுத்தினாள்.

 

எதேச்சையாக அவளைக் கண்டவன், தூக்கம் வந்தாலும் அடக்கிக் கொண்டிருப்பவளைக் கண்டு, சட்டென்று எழுந்து அலைபேசியை காதில் வைத்தவாறு வெளியே சென்றான்.

 

அதைக் கண்டவள் மெல்லிய சிரிப்புடன் உறங்கிப் போனாள். முதல் நாள் தன்னைக் கண்டு முறைத்ததை எல்லாம் தற்காலிகமாக மறந்து விட்டாள்.

 

எதற்கோ உள்ளே வந்தவன் அவளின் ஆழ்ந்த நித்திரையைக் கண்டு, ‘அதுக்குள்ள தூங்கிட்டாளா?’ என்று வியந்தவாறே பார்த்துக் கொண்டிருக்க, இப்போது உண்மையிலேயே அலைபேசி ஒலியெழுப்பியது.

 

அவளின் தூக்கம் கலையாதவாறு விரைவாக வெளியே சென்று விட்டான்.

 

அந்த தாழ்வாரத்தில் நடந்து கொண்டே பேசி முடித்தவன், எதேச்சையாக வெளியே காண, அங்கு மலர்விழி ஏதோ சிந்தனையில் வருவதையும், அவருக்கு எதிரே ‘ஹூடட் டி-ஷர்ட்’ அணிந்த உருவம் அவரைக் கவனிக்காமல் வேகமாக செல்வதையும் பார்த்தான்.

 

இருவரும் மோதிக் கொள்வார்களோ என்று நினைத்தவன், அதைத் தடுக்க கீழே சென்றான். ஆனால், அதற்குள் அவன் நினைத்ததைப் போலவே, இருவரும் இடித்துக் கொண்டனர்.

 

அவன் மலரின் அருகே சென்ற போது, அவர் அந்த ‘பெண்’ணை ‘ரஞ்சு’ என்று அழைப்பதைக் கண்டு குழம்பியவன் காரணத்தை வினவ, அவர் கூறியதைக் கேட்டவனிற்கு அது யாரென்று சட்டென்று புரிந்தது.

 

ஒரு நொடி ‘அவளின்’ நினைவுகளில் செயலற்று நின்றவன், மறுநொடியே சுதாரித்து, “ஆன்ட்டி, ரஞ்சு உள்ள தூங்கிட்டு இருக்கா. நீங்க வேற யாரையாவது பார்த்துருப்பீங்க.” என்று சமாளித்தான்.

 

“அட ஆமா தம்பி, ஏதோ நினைப்பு எனக்கு!” என்று தலையில் அடித்துக் கொண்டு, “ப்ச் ரஞ்சுக்கு வாங்குன பால் கொட்டிடுச்சு. நான் திரும்பவும் வாங்கிட்டு வரேன்.” என்று மீண்டும் கேன்டீனை நோக்கிச் சென்றார்.

 

மற்றொரு சமயத்தில், மலருக்கு பதில் சஞ்சயே சென்றிருப்பான். ஆனால், இப்போதோ அவன் யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தான்.

 

‘எதுக்கு இங்க ஹாஸ்பிடலுக்கு வரணும்? என்னை ஃபாலோ பண்றாளா? ச்சே இருக்காது. தனியா இப்படி என்கிட்ட சிக்க நினைக்க மாட்டா. ஆனா, ஏன்?’ என்று சிந்தித்தவனிற்கு சட்டென்று அந்த காட்சி மனக்கண்ணில் ஓட, விரைந்து ரஞ்சுவின் அறைக்குச் சென்றான்.

 

ஆனால், அங்கு அவன் நினைத்தது போல எதுவும் நடக்கவில்லை. ஓடிவந்ததில் மூச்சு வாங்க, அந்த நாற்காலியில் தளர்வாக அமர்ந்து கொண்டான். மீண்டும் அந்த காட்சி ‘ஸ்லோ மோஷனில்’ அவன் மனக்கண்ணில் ஓடியது.

 

“பாஸ் யாரு கூடவும் என்னை கம்பேர் பண்ணாதீங்க. எனக்கு அது பிடிக்காது. இந்த உலகம் முழுக்க தேடுனாலும், என்னை மாதிரி யாரும் இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறவ நான். எஸ் ஐ ஷுட் பி யூனிக்! நோ ஒன் ஷுட் ரிசம்பில் மீ”

 

இப்போதும் அவன் மனம் அடித்துக் கொண்டது. ரஞ்சு எத்தகைய ஆபத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்தவன் அடுத்து என்ன செய்வது என்ற திட்டத்தில் இறங்கி விட்டான்.

 

அவன் எண்ணத்தின் நாயகியோ, “அவ மேல அவ்ளோ பாசமா உனக்கு? தி கிரேட் எஸ்.ஜே அவளுக்காக இப்படி விழுந்தடிச்சு ஓடுவியா? அப்போ உன்னை இப்படி அலைய விடுறதுக்காகவே அவளை மெதுவா துடிக்க துடிக்க கொல்லலாம் போலயே! எஸ் நான் முடிவு பண்ணிட்டேன். என்னை நீ துரத்துறியா? இனி இவளை வச்சு உன்னை வலிக்க வலிக்க அடிக்குறேன்.” என்று திட்டம் தீட்டினாள்.

 

*****

 

“தம்பி, காபி…” என்று மலர்விழி நீட்ட, அப்போது தான் சிந்தனையிலிருந்து விடுப்பட்டான் சஞ்சய்.

 

ஒரு நன்றியுடன் அதைப் பெற்றுக் கொண்டான் சஞ்சய். ஏனோ, மலர்விழியை அவனிற்கு பிடித்தது. ரஞ்சுவைப் பற்றி விசாரித்த போது, அவளிற்கு தெரிந்தவர் என்ற அளவில் மலர்விழியைப் பற்றியும் மேம்போக்காக தெரிந்து கொண்டான்.

 

திருமணம் செய்து கொள்ளாமல், தன் அண்ணன் மகளைப் பார்த்துக் கொள்கிறார் என்று அறிந்ததும், இப்படியும் பெண்கள் இருக்கிறார்களா என்று நினைத்தான். இப்போது அண்ணன் மகளின் தோழிக்காக, அதுவும் வளர்த்தவர்களே நிற்கதியாக விட்டுச் செல்லும் வேளையில், ஊரிலிருந்து அடித்துப் பிடித்து ஓடி வந்தவரைக் கண்டவனிற்கு அவரின் மீது இருந்த நல்லெண்ணம் கூடிக் கொண்டே சென்றது.

 

“ரஞ்சு, இந்த பாலை குடிச்சுட்டு தூங்கு டா.” என்று மலர்விழி எழுப்ப, விழி மலர்த்தியவள் முதலில் கண்டது, காபியை பருகிக் கொண்டே தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த சஞ்சயைத் தான்.

 

அவனும் அவளைப் பார்க்க வேண்டும் என்ற நோக்கில் பார்க்கவில்லை. எதேச்சையாக பார்த்தவனிற்கு, இருவரின் விழிகளும் ஒன்றோடொன்று மோதிக் கொண்டதும் தான் சுயவுணர்விற்கு வந்து வேறு பக்கம் பார்வையைத் திருப்பிக் கொண்டான்.

 

அவர்கள் இருவரும் பேசிக் கொள்ளாவிட்டாலும், அவ்வப்போது இந்த பார்வை பரிமாற்றம் நிகழ்ந்து கொண்டு தான் இருந்தது.

 

“தம்பி, உங்களுக்கு வேலை இருக்கும்ல. நீங்க கிளம்புங்க.” என்று மலர் கூற, “இல்ல ஆன்ட்டி, ரஞ்சுவோட பிரெண்ட்ஸ் வர வரைக்கும் நான் உங்களுக்கு உதவிக்கு இருக்கேன்.” என்றான். அவன் மனதிலோ, அவன் ஏற்பாடு செய்த பாதுகாவலர்கள் வரும் வரையிலும் ரஞ்சுவிற்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.

 

“இருக்க டென்ஷன்ல அவங்க ரெண்டு பேருக்கும் சொல்லணும்னே மறந்துட்டேன்.” என்று மலர் கூற, ரஞ்சுவும் அதைத் தான் நினைத்தாள். கூடவே, சஞ்சய் தனக்காக எதற்கு இவ்வளவு மெனக்கெட வேண்டும் என்ற எண்ணமும் தோன்றியது.

 

இவர்களின் சிந்தனைகளை கலைத்தவாறே உள்ளே நுழைந்தனர் சஞ்சுவும் தர்ஷுவும்.

 

“ஹே ரஞ்சு, இப்போ எப்படி இருக்கு?” என்று சஞ்சு படபடவென பேச, தர்ஷுவும் அவளிற்கு குறையாத பதட்டத்துடன் காணப்பட்டாள்.

 

“எப்படி இவ்ளோ சீக்கிரமா வந்தீங்க?” என்று ரஞ்சு வினவ, இருவரும் தங்களுக்கு பின் உள்ளே நுழைந்து அனைவரையும் ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தவனைக் கண்டனர்.

 

*****

 

ஒன்றேகால் மணி நேரத்திற்கு முன்…

 

சஞ்ஜயிடம் அலைபேசியில் பேசிய பின்பு சற்று வருத்தத்துடன் இருந்த சஞ்சீவை நோக்கிய  கோகுல், “என்னடா ஆச்சு? பாஸ் எங்க போயிருக்காரு?” என்றான் சஞ்சீவிற்காக சாத்துக்குடியை பிழிந்தவாறே.

 

“ரஞ்சுவை பார்க்க போயிருக்காரு டா.” என்றான் ஏதோ யோசனையில்.

 

‘ரஞ்சு’ என்று அவன் கூறியதைக் கேட்ட கோகுல், சாறு பிழிவதை நிறுத்திவிட்டு ஆவலுடன் அவனருகே வந்தான்.

 

அதை எதையும் கவனிக்காத சஞ்சீவ், ரஞ்சுவிற்கு ஆபத்து, அதுவும் தன்னால் தான் என்று நினைத்து வருந்தினான். அவன் எதற்காக ரஞ்சுவை சந்தித்தான், எதற்காக அவளிடம் நட்பை ஏற்படுத்திக் கொண்டான் என்று எண்ணிக் கொண்டிருந்தான்.

 

‘இவன் என்ன ஏதோ சொல்ல வந்தான், இப்போ அமைதியா இருக்கான்.’ என்று யோசித்த கோகுல், சஞ்சீவை சுரண்ட, அப்போது தான் சுயத்திற்கு வந்தான் சஞ்சீவ்.

 

“என்ன டா?” என்று சஞ்சீவ் கோகுலிடம் வினவ, “என்னடாவா? நீ தான டா ஏதோ கதை சொல்ல வந்த.” என்று பிசிபிசுத்த கைகளை துடைத்துக் கொண்டே கோபத்துடன் கூற, சஞ்சீவோ ரஞ்சுவைப் பற்றி சுருக்கமாக கூறி, அவள் வீட்டில் நடந்ததையும் கூறினான்.

 

“இப்படியெல்லாமா இருப்பாங்க? ச்சு பாவம் அந்த பொண்ணு. ஆமா, நீயெப்படி அந்த பொண்ணு கூட பிரெண்டான₹ எங்கயோ இடிக்குதே.” என்று யோசிக்கும் பாவனையில் இருக்க, சஞ்சீவ் தான் “ஒரு ஜூஸ எவ்ளோ நேரமா போடுவ?” என்று கேட்டு அவன் சிந்தனைக்கு அணைகட்டினான்.

 

அவனை ஒரு பார்வை பார்த்து, “ஹ்ம்ம், எத்தனை நாளைக்கு இப்படி மறைச்சு வப்பன்னு பார்க்குறேன்.” என்று முணுமுணுத்துவிட்டு வேலையைப் பார்க்கச் சென்றான்.

 

சஞ்சீவிற்கு கோகுலிடம் இதைப் பற்றி மறைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால், இப்போது பழையதைப் பற்றி பேசி, இருக்கும் நிம்மதியைக் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை.

 

அதேபோல், இவர்களின் வாழ்க்கையில் ஒரு பெண் விளையாடியிருக்கிறாள் என்பது வரை மட்டுமே கோகுலிற்கு தெரியும். அந்த சம்பவங்களின் போது அவன் லண்டனில் படித்துக் கொண்டிருந்ததால் அதைப் பற்றி அறியவில்லை. அதன்பின்னும் அதைப் பற்றி அவனாக வினவியதில்லை.

 

கோகுல் கொடுத்த பழச்சாறை பருகிய சஞ்சீவிற்கு, அப்போது தான் சஞ்சய் ரஞ்சுவின் தோழிகளுக்கு விபரம் கூறி அனுப்பி வைக்க சொன்னது நினைவிற்கு வந்தது.

 

உடனே சஞ்சுவிற்கு அழைத்தான்.

 

*****

 

“ஆன்ட்டி, உங்களுக்கு முடியலன்னா சொல்ல வேண்டியது தான? முடியாம வேலை செஞ்சு பாருங்க, இப்படி ஹாஸ்பிடல்ல ட்ரிப்ஸ் போடுற நிலைமைக்கு வந்துருக்கீங்க.” என்று தர்ஷு கூற, சஞ்சுவும் அதை ஆமோதித்தவளாக, “ஆமா ராது, முடியலன்னு கிருஷ் கிட்ட சொன்னா, அவரே சமைச்சுருப்பாரு.” என்று ராதாவின் அருகில் நின்றிருந்த கிருஷ்ணனை நோக்கி கண்ணடித்தாள்.

 

அங்கு நிலவும் சூழலை இலகுவாக்கவே அவள் இவ்வாறு கூறுகிறாள் என்பதை அங்கிருந்த அனைவரும் புரிந்து கொண்டனர்.

 

“இப்போ எதுக்கு அவரை கிருஷ்ன்னு கூப்பிடுற?” என்று ராதா வினவ, “ஹான், கிருஷ்ஷை கிருஷ்ஷுன்னு கூப்பிடாம, க்ரஷ்ஷுன்னா கூப்பிட முடியும்? அட இது கூட நல்லா இருக்கே. ‘கிருஷ் மை க்ரஷ்!'” என்று கிருஷ்ணனுடன் ‘ஹை-ஃபை’ அடித்துக் கொண்டாள்.

 

சில மணி நேரங்களுக்கு முன்…

 

ரஞ்சுவை பேருந்தில் ஏற்றிவிட்டு ராதாவின் இல்லம் சென்றனர் சஞ்சு மற்றும் தர்ஷு. இருவரையும் வரவேற்ற ராதா, அவர்களுக்காக சமைத்ததை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.

 

ரஞ்சுவைப் பற்றியும் அவளின் குடும்பத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தவர், திடீரென்று மயங்கினார். அன்று எழும்போதே ராதாவிற்கு தலை சுற்றலாகத் தான் இருந்தது. அதை ஒதுக்கிவிட்டு வருபவர்களுக்காக சமைத்துக் கொண்டிருந்தார். எப்போதும் இல்லாத அளவிற்கான வேலை, அவரை மயக்கத்திற்கு தள்ளியது.

 

அப்போதிருந்து இப்போது வரை மூவரும் மாறி மாறி அவருக்கு அறிவுரை கூறிவிட்டிருந்தனர்.

 

மருத்துவரும் அவர் பங்குக்கு பல அறிவுரைகளைக் கூறி டிஸ்சார்ஜ் செய்ய, அனைவரும் மருத்துவமனையை விட்டு வெளியே வந்தனர்.

 

அப்போது தான் சஞ்சீவ் சஞ்சுவிற்கு அழைத்தான்.

 

“ஹலோ ப்ரோ, என்ன இது ஆச்சர்யமா எனக்கு கூப்பிட்டுருக்கீங்க.” என்று ஆவலாக வினவ, அவனோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், “இப்போ எங்க இருக்கீங்க?” என்று வினவினான்.

 

தர்ஷுவும் சஞ்சுவினருகே நடந்ததால், அவளின் ‘ப்ரோ’ என்ற அழைப்பு அவளிற்கும் கேட்டது. புருவ சுழிப்புடன் அவளைப் பார்த்தாள்.

 

சஞ்சீவின் குரலிலிருந்த தீவிரத்தில், “நாங்க **** ஹாஸ்பிடல்ல இருக்கோம்.” என்றாள் சஞ்சு.

 

“ஓஹ், யாருக்கு என்ன?” என்று சற்று பதட்டத்துடனே வினவ, “எங்களுக்கு ஒண்ணுமில்ல ப்ரோ. எங்களுக்கு தெரிஞ்ச ஆன்ட்டிக்கு தான் ஹெல்த் இஸ்யூ.” என்றாள்.

 

அதற்கு மீண்டுமொரு ‘ஓ’ போட்டவன், அவனிருந்த அறைக்கு வர சொன்னான்.

 

“ப்ரோ என்னாச்சு? உங்களுக்கு எதுவும் ப்ராப்ளமா?” என்று சஞ்சு கேட்க, “வாங்க சொல்றேன்.” என்று அழைப்பைத் துண்டித்து விட்டான்.

 

‘என்னவா இருக்கும்?’ என்று யோசித்த சஞ்சுவைக் கலைத்தது கிருஷ்ணனின் குரல்.

 

“ரெண்டு பேரும் வாங்க. உங்க ஹாஸ்டல்ல விட்டுடுறோம்.” என்று கிருஷ்ணன் அழைக்க, “இல்ல அங்கிள், நீங்க போங்க. நாங்க ஷாப்பிங் போகணும்.” என்றாள் சஞ்சு. தர்ஷு கேள்வியாக பார்க்க, கண்களாலேயே அவளை ‘மறுத்துக் கூறாதே’ என்று விட்டாள் சஞ்சு.

 

இருவரையும் பத்திரமாக போகுமாறு கூறிவிட்டு ராதா – கிருஷ்ணன் தம்பதி அவர்களிடம் விடைபெற்றனர்.

 

“எதுக்கு ஷாப்பிங் போகணும்னு பொய் சொன்ன?” என்று சஞ்சுவிடம் வினவ, “சஞ்சு ப்ரோ நம்ம ரெண்டு பேரையும் வர சொன்னாரு. என்னன்னு தெரியல தர்ஷு.” என்றாள்.

 

“ஹாஸ்பிடலுக்கா வர சொன்னாரு?” என்று கேட்ட தர்ஷுவிற்கும் குழப்பமே.

 

இருவரும் சஞ்சீவ் கூறிய அறைக்கு சென்றனர்.

 

அங்கு தலையில் கட்டுடன் இருந்த சஞ்சீவைக் கண்ட சஞ்சு, “ப்ரோ, என்னாச்சு?” என்று வினவினாள்.

 

“யாரது? இவனுக்கு புது தங்கச்சி!” என்று திரும்பிய கோகுல் அங்கு நின்றிருந்தவளைக் கண்டு, “அச்சோ இவளா!” என்று முணுமுணுத்தான்.

 

அப்போது தான் அவனைக் கண்ட சஞ்சுவும், ‘இந்த இடியட் எதுக்கு இங்க இருக்கான்?’ என்று நினைத்தாள்.

 

இருவரையும் உள்ளே அழைத்த சஞ்சீவ், தனக்கு சிறு விபத்து ஏற்பட்டதாகக் கூறி சமாளித்தான்.

 

பின் இருவரிடமும் ரஞ்சு வீட்டில் நடந்ததைப் பற்றிக் கூறினான்.

 

அதைக் கேட்ட இருவருக்குமே என்ன பேசுவது என்று தெரியவில்லை. ரஞ்சு அவர்களின் சொந்த மகள் இல்லை என்பதே அதிர்ச்சியாக இருக்க, அவர்கள் அவளை தனியே விட்டுச் சென்றதை ஜீரணிக்கவே முடியவில்லை. தாங்கள் சிறு வயதிலிருந்து பார்த்துப் பழகியவர்கள் இத்தனை சுயநலக்காரர்களா என்று எண்ணினர்.

 

முதலில் சற்று தெளிந்த தர்ஷு, “ஆமா, இது உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று வினவினாள்.

 

‘ப்ச், சரியான கேள்விக்கு பிறந்தவளா இருக்கா. எப்போ பார்த்தாலும் ‘ஏன்’, ‘எதுக்கு’, ‘எப்படி’ன்னு’ என்று மனதிற்குள் புலம்பிய சஞ்சீவ், “சஞ்சய், என் அண்ணா அங்க அந்த பண்ணை வீட்ட பார்க்க போயிருக்காங்க.” என்று சஞ்சீவ் கூறியதும், “உங்க அண்ணாவா? அவரு தான் ரஞ்சுவை முறைச்சதா?” என்று ஏதோ கூற வந்த சஞ்சு, சட்டென்று வாய் மூடிக் கொண்டாள்.

 

அதைக் கண்டுகொள்ளாமல் மேலும் தொடர்ந்தான் சஞ்சீவ்.

 

“ஜெய், ரஞ்சு வீட்டு சைட் போகும்போது, அவங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டுல இருக்குறவங்க பேசுனதைக் கேட்டு வீட்டுக்குள்ள போய் பார்த்தப்போ, ரஞ்சு மயங்கிக் கிடைந்தாளாம். அதான், ப்ரோ அவளை ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டு எனக்கு கால் பண்ணி சொன்னாரு. ரஞ்சுக்கு மாரல் சப்போர்ட்டுக்காக, உங்க கிட்ட சொல்லி அங்க வர சொன்னதும் ஜெய் தான்.” என்று தனக்கு நடந்ததை மறைத்து அவர்களை சமாளித்தான்.

 

ரஞ்சுவின் நிலையறிந்து கலங்கிய தோழிகள், சஞ்சீவை கேள்விகளால் குடைவதை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, அப்போதே அவளைக் காண செல்ல ஆயத்தமாயினர்.

 

இத்தகைய சூழலில், இருவரையும் தனியே அனுப்ப விரும்பாத சஞ்சீவ், “நீங்க ரெண்டு பேரும் தனியா போக வேணாம். இவன் என் பிரெண்டு கோகுல். இவன் கூட ரெண்டு பேரும் ஊருக்கு போங்க. சீக்கிரமாவும் போயிடலாம்.” என்று கூறினான்.

 

சஞ்சுவோ, ‘இவன் கூடவா?’ என்று யோசிக்க, தர்ஷுவிற்கு கோகுல் – சஞ்சு ‘மோதல்’ பற்றி தெரியாததால், அவள் சம்மதமாக தலையாட்டினாள்.

 

மனதிற்குள் புலம்பிய மற்றொரு ஜீவன் கோகுல். ‘இவ சும்மாவே முறைக்குறா. இவன் வேற அவ கூட கோர்த்து விடுறானே!’ என்று புலம்பியபடி சஞ்சீவிடமிருந்து விடைபெற்றான்.

 

மகிழுந்தில் செல்லும்போது பல சமயங்களில் இருவரின் விழிகளும் மற்றவரின் விழிகளுடன் மோதிக் கொள்ள, பேச்சற்ற மௌனமான பயணமாக இருந்தது.

 

*****

 

சஞ்சு அவளின் திடீர் பயணத்தைப் பற்றி, சில பல தணிக்கைகளுடன் கூறி முடித்தாள்.

 

“ஆமா, உன்னை இங்க சேர்த்த அந்த சிடுமூஞ்சி எங்க? அதென்ன எப்போ பார்த்தாலும் முறைச்சுக்கிட்டு.” என்று சஞ்சு கூறிக் கொண்டே போக, இடையில் அவளின் பேச்சை தடுத்து நிறுத்த ரஞ்சு மற்றும் தர்ஷு எத்தனையோ முயற்சிகள் செய்ய, அவற்றை சஞ்சு கண்டுகொள்ளவே இல்லை.

 

அப்போது தான் அனைவரின் பார்வையும் தன் பின்னே இருப்பதை உணர்ந்தவள், திரும்பிப் பார்க்க அங்கு முகத்தில் ஒரு பாவனையும் காட்டாமல் நின்றிருந்தான் சஞ்சய்.

 

சஞ்சயைக் கண்ட சஞ்சு, ‘வாவ்! இவனும் அழகா இருக்கானே. இவனை போயா சிடுமூஞ்சின்னு சொன்னா ரஞ்சு? நல்லா தான இருக்கான்.’ என்று யோசித்துக் கொண்டே அவனைப் பார்த்து இளித்தவள், “ஹாய் ஐ’ம் சஞ்சு…” என்றாள்.

 

அவனோ, “ஓஹ், நீங்க தான் அந்த சஞ்சுவா? ஒரே நேம்னு சஞ்சீவ் உங்கள சிஸ்டரா தத்தெடுத்துக்கிட்டானாமே. அவனுக்கு சிஸ்டர்னா எனக்கும் சிஸ்டர் தான?” என்று கேட்க, சஞ்சுவோ அதிர்ச்சியில், “என்னாது மறுபடியும் சிஸ்டரா?” என்று வாய்விட்டே கூற, அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.

 

காதல் கொள்வோம்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
7
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்