922 views

 

ஈர்ப்பு 32

 

மாலையும் அவனின் அழைப்பிற்காக காத்திருந்து, நேரம் தான் கழிந்தது. மனமோ கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தது. 

 

‘என்கிட்ட பேசாம முழுசா ஒரு நாள் ஆகப் போகுது! இன்னும் என்ன  சமாதானப்படுத்தணும்னு தோணவே இல்லையா அவனுக்கு? ச்சே, அவனுக்காக இன்னைக்கு ஃபுல்லா வெயிட் பண்ணேன்ல என்ன சொல்லணும்.’ என்று எரிச்சலில் நான் இருக்க, ‘உன்னை யாரு வெயிட் பண்ண சொன்னது?’ என் மனச்சாட்சி முதல் ஆளாய் கிண்டல் செய்தது.

 

‘அதான, நான் எதுக்கு அவனுக்காக வெயிட் பண்ணனும்? அவன் பேசலைனா எதுக்கு கவலப்படணும்? அவன் பேசலனு யாரும் இங்க சோர்ந்து போய் இருக்கல!’ என்று என் மனசாட்சி கேட்ட கேள்விக்கு வேகமாக ஒரு பதிலை அளித்துவிட்டு, மொட்டைமாடிக்குச் சென்றேன், என் மனநிலையை மாற்ற.

 

மாலை நேரத்து ஜில்லென்ற காற்று என் மேனியை தழுவ, சோர்ந்திருந்த மனதில் உற்சாகம் பிறந்தது தானாக… என் செவிப்பொறியை எடுத்து காதிற்குள் பொருத்தி அந்த ரம்மியமான பொழுதிற்கு மேலும் அழகு சேர்க்க, மனதை மயக்கும் பாடல்களை ஒலிக்க விட்டு என் மனதை சமன் செய்ய முயன்றேன்.

 

எதுவரை போகலாம்

என்று நீ சொல்லவேண்டும்

என்றுதான் விடாமல் கேட்கிறேன்

 

தேன் முத்தங்கள்

மட்டுமே போதும் என்று

சொல்வதால் தொடாமல் போகிறேன்

 

பாடலை கேட்க கேட்க என் கோபம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.

 

நேற்றோடு என் வேகங்கள் 

சிறு தீயாக மாறி தூங்க கண்டேன்

காற்றோடு என் கோபங்கள்

ஒரு தூசாக மாறி போக கண்டேன்

 

இப்போது கோபம் முற்றிலும் குறைந்து போனது. மனமோ மீண்டும் அவனையே தேடியது.

 

உன்னை பார்க்காத நான் பேசாத 

நான் என் வாழ்வில் நீ நான் என்று

நான் தினம் நீ வந்ததால் தோள் தந்ததால் ஆனேன்

நான் ஆனந்த பெண்தான் உயிரே

 

உன் போன்ற இளைஞனை 

மனம் ஏற்காமல் மறுப்பதே

பிழை கண்டேன் உன்

அலாதி தூய்மையை

என் கண் பார்த்து பேசும்

பேராண்மையை

 

நானும் கூட சேர்ந்து  அனுபவித்து பாடியபடியே திரும்பினேன். அங்கு சிரிப்புடன் என்னையே பார்த்தபடி நின்றிருந்தான் அவன்.

 

சற்று முன் கேட்ட பாடலும் அந்த ஏகாந்த சூழ்நிலையும் அவன் நின்றிருந்த விதமும் என்னிடம் சிறு தடுமாற்றத்தை தோற்றுவித்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் அவனை நேருக்கு நேர் பார்த்தபடி நின்றிருந்தேன். சில நொடிகளுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல், நான் தான் என் பார்வையை மற்றைய பக்கம் திருப்ப வேண்டியதாயிற்று.

 

மறுபக்கம் திரும்பிய நான், ‘நதி, அவன் வந்து பேசுனதும் உடனே பேசிடக்கூடாது!’ என்று மனதிற்குள் எனக்கு நானே எச்சரிக்கை செய்து கொண்டேன்.

 

ஆனால் என் மனதோ நான் சொல்வதை கேட்டால் தானே! அவன் வந்ததும் தலை முதல் கால் வரை அலசி ஆராய்ந்து, அவனிற்கு ஒன்றும் இல்லை என்ற செய்தியை முதலில் என் மூளைக்கு அனுப்பியது. இதோ இப்போது அவனிற்காய், அவன் என்னிடம் பேசப் போகும் வார்த்தைக்காய் காத்திருக்கத் துவங்கியது!

 

“ஹே பப்ளி, என்ன ஒரே சந்தோஷமா இருக்க போல? என் மேல லவ்ஸ் அதிகமாகி பாட்டா பாடி தள்ளுற போல!” என்று அவன் வினவ, நான் அவனை முறைத்ததும், “கூல் பப்ளி, ஏன் இவ்ளோ ஹாட்டா இருக்க?” என்றான்.

 

‘க்கும், கனவுல வந்த மாதிரியே பேசுறானே! இப்படியே பேசிட்டு இருந்தானா இன்னும் டூ செகண்ட்ஸ் கூட என் கோபம் இருக்காதே.’ என்று எண்ணினேன்.

 

“இப்போ என்ன, நேத்துலயிருந்து உன்கிட்ட எதுக்காக பேசலன்னு உனக்கு தெரியணும் அதான.” என்று அவன் கூற, “ம்ம்ம் நேத்து ஏன் ரெஸ்ட்லெஸா இருந்தீங்கன்னும் தெரியணும்!” என்று சற்றுமுன் எடுத்த உறுதியை சத்தமே இல்லாமல் மனதிலிருந்து அழித்துவிட்டு அவனுடன் பேசினேன்.

 

அவன் சிறிது யோசிக்கவும், “எங்க அப்பா ஏதாவது சொன்னாரா?  உ… உங்க வேலையை காரணமா சொல்லி மறுத்துட்டாங்களா?” என்றேன். இந்த எண்ணம் நேற்றிலிருந்தே எனக்குள் வியாபித்திருந்தது.

 

லேசாக சிரித்த அவன், “இருந்தாலும் என் மாமாவை இவ்ளோ டெரர் பீஸா நீ நினைச்சுருக்க கூடாது.” என்றான் சிரித்தவாறு.

 

அவன் ‘மாமா’ என்று அழுத்தமாக கூறியதிலிருந்தே அவன் யோசனைக்கான காரணம் அது அல்ல என்று புரிந்தது.

 

“வேற என்ன தான் ரீசன்?” என்று நான் சலிப்பாக வினவ, “ஹ்ம்ம் இது தான்.” என்று ஒரு புகைப்படத்தை காட்டினான்.

 

அதில் ஒரு சிறுவன் காலை மடித்து அதில் முகம் புதைத்திருக்க, அருகில் ஒரு சிறுமி அவனை சமாதானப்படுத்துவது போலிருந்தது. சற்று நேரம் உற்று பார்த்த நான், “ஹே இது நான் தான?” என்றேன்.

 

“ம்ம்ம், இந்த இன்சிடெண்ட் உனக்கு ஞாபகம் இருக்கா?”

 

“ம்ம்ம் இருக்கு, ஒரு நாள் பார்க்ல விளையாண்டுட்டு இருந்தப்போ, அங்க ஒரு பையன் ரொம்ப நேரமா குனிஞ்சே இருந்தான். அவன் அழுதுட்டு இருக்கான்னு நினைச்சு அவன்கிட்ட பேசினேன். ஆனா, என்ன பேசினேன்னு தான் தெரியல. அதுக்கப்பறம் எங்க அம்மாகிட்ட போய் ‘நானும் பெரிய பிள்ளை ஆகிட்டேன், பார்க்ல இருந்த பையனை சமாதானப்படுத்துனேன்’னு பெருமையா சொன்னேன்!”

 

ஹே, நீ ஏன் சின்ன பையன் மாதிரி அழுதுட்டு இருக்க? உன்கூட யாரும் பேசலையா? நீ ஒன்னும் ஃபீல் பண்ணாத, படிச்சு பெரிய ஆளானா எல்லாரும் வந்து பேசுவாங்கன்னு ஒரு ஆன்ட்டி சொன்னாங்க. நீயும் படிச்சு பெரிய ஆளாகு. அப்போ எல்லாரும் உன்கிட்ட பேசுவாங்க. ஓகேவா? அதை விட்டுட்டு இப்படியெல்லாம் அழுதா எல்லாரும் உன்னை பேட் பாய் சொல்லுவாங்க. எங்க இப்போ சிரி பார்ப்போம்? – “இது தான நீ சொன்னது?” என்று அவன் வினவ, “இது எப்படி உங்களுக்கு தெரியும்?” என்றேன் ஆச்சரியத்துடன்.

 

அவனோ மற்றொரு புகைப்படத்தை காட்டினான். அதில் நான் அந்த சிறுவனின் மறுபக்கம் திரும்பியிருக்க, அவனோ நிமிர்ந்து என்னை பார்த்திருந்தான். அந்த சிறுவனின் முகத்தைப் பார்த்து இனிதாக அதிர்ந்திருந்தேன்.

 

அது அவனே தான். ஆனால் அவன் கண்களில் ஏதோ வலி, சொல்லமுடியாத ஏக்கம் இருந்ததை போன்று எனக்கு தோன்றியது.

 

அவனை திரும்பிப் பார்த்த போது அதே வலி சுமந்த பார்வையை கண்டு என்னவென்றே தெரியாத போதும் அவனிற்காக வருந்தினேன்.

 

அவனோ அருகிலிருந்த எதையும் உணராதது போல பேசினான்.

 

“எனக்கு சின்ன வயசுலயிருந்தே என் அப்பான்னா ரொம்ப பிடிக்கும். பசங்க எல்லாரும் அம்மா பிள்ளையா இருக்குறப்போ நான் மட்டும் அப்பா பிள்ளையா தான் இருந்தேன். எனக்கு காலைல ஸ்கூல் கிளப்புறதுலயிருந்து நைட் தூங்க வைக்கிறது வரைக்கும் என் அப்பா வேணும். அழகா போயிட்டிருந்த எங்க வாழ்க்கைல அந்த நாளும் வந்துச்சு. என் அப்பாவ எங்கிட்ட இருந்து பிரிச்ச நாள்! என்னோட பதினாலாவது வயசுல எனக்கு ரொம்ப பிடிச்ச என் அப்பாவை இழந்தேன். அதுக்கப்பறம் சுத்தி நடந்த எதுவும் என் மனசுல பதியல. என் அப்பா இனிமே எங்கூட இருக்கமாட்டாருன்னு மட்டும் தான் என் மனசு சொல்லிட்டே இருந்துச்சு.” 

 

அவனின் குரல் கரகரக்க, அவனின் கைகளை ஆதரவாக அழுத்தினேன். அவன் கஷ்டத்தை உணர்ந்த என் கண்களிலும் கண்ணீர் சுரந்தது.

 

அவன் தொடர்ந்தான். “அம்மாக்கு அந்த வீட்டுல இருந்தா அப்பா ஞாபகமா இருக்குன்னு வீட்டை மாத்தி இந்த வீட்டுக்கு வந்தோம். அம்மா அவங்களையே ஒழுங்கா பார்த்துக்காதப்போ என்னை எப்படி பார்த்துப்பாங்க?  என்னை அவங்களும் கண்டுக்கல. ரொம்ப ஒடுங்கியே இருந்தேன். யாருக்கிட்டயும் பேசாம, ஸ்கூல் கூட போகாம, அந்த வயசுலேயே தனிமையே கதின்னு இருந்தேன். அப்போ தான் ஏஞ்சல் மாதிரி வந்தா ஒரு குட்டி பொண்ணு. என் வாழ்க்கை இப்போ உருப்படியா இருக்குனா அதுக்கு காரணம் அவ தான்.”

 

இதை கூறிவிட்டு என்னைப் பார்த்து சிரித்தான். நானும் ஆறுதலாக சிரித்து அவன் தொடர்ந்து பேச ஊக்கினேன்.

 

“அவ அப்போ சொன்னது என் அப்பாவே வந்து சொன்ன மாதிரி இருந்துச்சு. ஃபர்ஸ்ட் அவ என்கிட்ட தான் பேசுறான்னு நான் நினைக்கல… அவ என்ன நினைச்சு சொன்னான்னு தெரியல, ஆனா நான் அவ சொன்னதை தான் என் லைஃபோட மோட்டோவா எடுத்துக்கிட்டு என் லைஃபை புதுசா ஸ்டார்ட் பண்ணனும்னு டிசைட் பண்ணேன். முடிவெடுத்ததுக்கு அப்பறம் அவளுக்கு தேங்க் பண்ண நிமிர்ந்து பார்த்தா, அவ அவங்க அம்மா கூப்பிட்டாங்கன்னு கிளம்பிட்டா. நானும் அவளை பார்க்கல, அவளும் என்ன பார்க்கல.”

 

இதை கேட்டு எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஒருபுறம் அவன் கவலைகளை நினைத்து கண்கள் கண்ணீர் சிந்த, மறுபுறமோ அன்றே என்னவனுக்கு ஆதரவாக இருந்திருக்கிறேன் என்ற உவகையும் இருந்தது. அது என் வாழ்வில் மிக அற்புதமான தருணம்!

 

என் கண்ணீரை கண்டு அவன் என்னை அணைக்க, அவனிற்கு ஆறுதலாக நானும் அந்த அணைப்பில் பொருந்தினேன். அந்த அணைப்பில் காமமோ, காதலோ இல்லை, சிறு வயதில் தவறவிட்ட பாசத்தை பெறத் தவிக்கும் சிறுவனின் உணர்வே அங்கு நிறைந்திருந்தது.

 

இப்படியே இருந்தால் அவன் மேலும் மறுகுவான் என்பதால் அவனை மாற்ற எண்ணி, “பார் றா, அப்போ நான் உனக்கு  அட்வைஸ் பண்ணிருக்கேன். இப்போ பழிக்குப் பழி மாதிரி நீ எனக்கு அட்வைஸ் பண்ற!” என்றேன்.

 

அதைக் கேட்டதும் லேசாக சிரித்தான்.

 

“ஆமா இந்த போட்டோ யாரு எடுத்தது?”

 

“ஹ்ம்ம் நீயே கெஸ் பண்ணு!”

 

“நோ வே, இந்த ஒரு வாரமா என் மூளை ரொம்ப வேலை செஞ்சு டையர்டா இருக்கு. சோ இந்த கண்டுபிடிக்குறதெல்லாம் இப்போ வேணாம்.” என்று நான் கூற, அவனோ லேசாக புன்னகைத்து, “என் மாமா தான் எடுத்துருக்காரு.” என்றான்.

 

“என்னாது அப்பாவா?” அடுத்தக்கட்ட அதிர்ச்சி எனக்கு!

 

“ஏன் இவ்ளோ ஷாக்? நேத்து உங்க அப்பா ரூமுக்குள்ள போய் இதை தான் பேசிட்டு இருந்தோம்.”

 

நான் எதுவும் பேசாமல் சிலையாகி இருக்க, அவனோ என்னை உலுக்கி நிகழ்விற்கு அழைத்து வந்தான்.

 

“அப்பா கிட்ட என்ன பேசுனீங்க?’

 

“ஹ்ம்ம், உங்க அப்பா உன் மேலயும் உன் அண்ணன் மேலயும் நிறைய பாசம் வச்சுருக்காரு. ஆனா எங்க பாசத்தை வெளிய காட்டுனா நீங்க தவறான வழில போய்டுவீங்களோன்னு பயந்து தான் இவ்ளோ நாள் பாசத்த வெளிகாட்டிக்கலயாம். இந்த இன்ஸிடன்ட் நடந்தப்போ அவரும் அங்க தான் இருந்தாராம். நீ பேசுனதை பார்த்து அவருக்கு ஒரே சந்தோஷமாம், அவரோட பொண்ணு அந்த வயசுலேயே எவ்ளோ தெளிவா யோசிக்கிறான்னு. அதான் அந்த மொமெண்ட்டை  ஃபோட்டோ எடுத்தாராம். அவருக்கும் அந்த பையன் யாருன்னு தெரியாதாம். இப்போ தான் ரீசண்டா எடுத்துப் பார்த்தபோ என் முக ஜாடையோட ஒத்துப் போச்சாம். இதை தான் நேத்து கேட்டாரு.”

 

என் அப்பாவின் பாசத்தை முதலிலேயே உணர்ந்திருந்தாலும், அவர் வாய்மொழியாக கேட்டபோது எனக்குள்ளும் மகிழ்ச்சி உண்டானது.

 

“அப்பறம் எதுக்கு ‘நான் யோசிக்கணும்’னு பெருசா பில்ட்-அப்லாம் கொடுத்தீங்க மாமனாரும் மருமகனும்!” என்று நான் அவனை பார்க்க, “அந்த ஃபோட்டோ பார்த்து எனக்கு செம ஷாக் பப்ளி. இது வரைக்கும் என் மனசுல மரியாதைக்குரிய இடத்தில வச்சுருந்த குட்டி பொண்ணும், நான் லவ் பண்ற பொண்ணும் ஒன்னுன்னு தெரிஞ்ச அந்த செகண்ட், என் உணர்ச்சிகளை சொல்றதுக்கு வார்த்தையே இல்ல. அதுலயிருந்து வெளிவரதுக்கு எனக்கு கொஞ்சம் டைம் தேவை பட்டுச்சு. அதான் என் மாமனார் அதுக்கு டைம் கொடுத்தாரு.” என்றான்.

 

“அது தானா இல்ல வேற ஏதாவது இருக்கா?” என்று நான் அவனை சந்தேகத்தோடு பார்க்க, “வேற ஒன்னும் இல்லையே.” என்றான் அவன்.

 

“ம்ம்ம் ஓகே, நான் வந்து ரொம்ப நேரமாச்சு. சோ நான் கிளம்புறேன்.”

 

“ஹே என்ன கதை கேட்டதும் கிளம்புற?”

 

“ஹான், வேற என்ன பண்ணனும்?”

 

“ஹ்ம்ம் அந்த ஹக், கிஸ்…” என்று அவன் இழுக்க, “’ஹல்க்’க்கு ரீசன் கண்டுபிடிச்சா தான தரேன்னு சொன்னேன்.” மெதுவாக அந்த இடத்தை விட்டு அகன்றவாறே கூறினேன்.

 

ஒரே இழுப்பில் அவன் அருகில் கொண்டு வந்தவன் என்னை மொத்தமாய் அவன் பிடியில் நிறுத்தினான். 

 

“எத்தனை நாள் கேட்டுட்டு இருக்கேன், எப்போவும் போல இன்னைக்கும் எஸ்கேப் ஆகலாம்னு பார்க்குறியா?” என்று கேட்டுக்கொண்டே என்னை நோக்கி குனிய நான் அவனிடமிருந்து திமிர கன்னத்தில் பதிய வேண்டிய முத்தம் அழகாய் பதிந்தது என் உதட்டில்! 

 

இருவரும் இதை எதிர்பார்க்காததால் திகைத்திருந்தோம். ஆனால் அதெல்லாம் ஒரு நொடி தான். அடுத்த நொடியே அவன் விசிலடிக்க ஆரம்பிக்க, வெட்கத்தை மறைக்க அவனிடமே சரணடைந்தேன்.

 

“பப்ளி இன்னைக்கு செம கிஃப்ட் தந்துருக்க எனக்கு.” என்று அவன் கேலியாக கூற, “ஸ்ஸ்ஸ் சும்மா இருக்க மாட்டீங்களா?” என்று சிணுங்கினேன்.

 

“ஹே கொஞ்சம் முகத்தை காட்டு, எப்பவும் போல ரெட்டிஷா இருக்கான்னு செக் பண்றேன்.” என்று அவன் விடாமல் வம்பு செய்ய, “ப்ச், ரணு சும்மா இருங்க.” என்றேன்.

 

“ஹான் இப்போ ‘ரணு’வா? எத்தன பேரு தான் வைப்ப எனக்கு!”

 

பெயர் என்றதும் அவனிடமிருந்து விலகி, “சரியான ஃப்ராட், ரீசன் சொல்லாமையே…” என்று நான் இழுக்க, “ஹ்ம்ம் சொல்லாமையே… என்ன பப்ளி ஃபுல்லா கம்ப்ளீட் பண்ணு.” என்று என்னை கிண்டலடிக்க, நானோ அதை சொல்ல தயங்கி, “போடா ராகு…” என்று வீட்டிற்கு செல்ல திரும்பினேன்.

 

அவனோ மறுபடியும் என்னை இழுத்து, பின்பக்கத்திலிருந்து அணைத்து, “ராகுல் கிருஷ்ணால நடுல வரது தான் ‘ஹல்க்’ (RaHUL Krishna) என்ன கரெக்ட்டா மேடம்?” என்றான்.

 

“எப்படி கண்டுபிடிச்சீங்க?” என்று நான் அவன் அணைப்பிலிருந்தே வினவ,  “ம்ம்ம் சைன் போடும்போது கண்டுபிடிச்சேன்… நீயும் அந்த ஃபைல்ல பார்த்து தான் கண்டுபிடிச்சுருப்பன்னு தெரியும்.” என்றான்

 

அவனை பார்த்து சிரித்தவாறே அவன் கைகளை விலக்கி வீட்டிற்கு ஓடினேன்.

 

 

*****

 

நான் சிரிப்புடன் வீட்டிற்குள் நுழைவதைப் பார்த்த அபி, “என்ன மேடம் மொட்டைமாடில ஒரே ரொமான்ஸா?” என்றான்.

 

“க்கும், நீங்க ரூமுக்குள்ள பண்றத விட இல்ல டா அண்ணா.” என்று உதட்டை சுழித்தேன்.

 

அவனோ என்னை துரத்த, நான் ஓட, என்று அழகாக சென்றன அந்த நிமிடங்கள்.

 

“நதி மா, இப்போ ஹாப்பி தான? உனக்கு ராகுலை பிடிக்கும்னு எனக்கு ஃபர்ஸ்டே தெரியும். அதான் அவனும் உன்னை ஃபாலோ பண்ணது தெரிஞ்சதும், அவனுக்கும் உன்னை பிடிச்சுருக்கான்னு அவங்கிட்டயே கேட்கப் போனேன். அப்போ தான் அவனோட லவ் ஸ்டோரியை சொன்னான். கேட்டதும் பிரமிச்சு போய்ட்டேன், இப்படியும் ஒருத்தானால லவ் பண்ண முடியுமான்னு. உன்னை லவ் பண்ணது மட்டுமில்லாம உனக்காக காத்திருந்தது,  அதுவும் லவ் கூட சொல்லாம, ஹீ இஸ் ரியலி அ ஜெம்! உன்னை அவனை தவிர யாராலையும் நல்லா பார்த்துக்க முடியாது.” என்று அபி கூற, ஒரு சிரிப்புடன் அவன் கூறியதை கேட்டுக் கொண்டிருந்தேன்.

 

“அவனையும் உன்னை தவிர யாராலையும் நல்லா பார்த்துக்க முடியாது. நேத்து தான் அவன் சொன்னான், அந்த வயசுலேயே அட்வைஸ் பண்ற அளவுக்கு என் தங்கச்சி மெச்சூர்டா இருந்துருக்கா.” என்று அவன் பேசிக் கொண்டே போக, “டேய் அண்ணா ஸ்டாப், உனக்கு அவன் நேத்தே சொல்லிட்டானா? எனக்கு மட்டும் இன்னைக்கு தான் சொன்னான். உனக்கு மட்டும் எப்படி நேத்தே சொல்லலாம்?” என்று உரிமைக்குரல் எழுப்பினேன்.

 

“அடிப்பாவி, நான் இங்க சென்டிமெண்டா பேசிட்டு இருக்கேன். இப்போ அவன் எனக்கு ஃபர்ஸ்ட் சொன்னது தான் பெருசா?”

 

“இன்னைக்கு என்ன டா அண்ணா தங்கச்சி மேல இப்படி ஒரு பாசம்!”

 

“போடி…” என்று அவன் அறைக்குள் செல்ல, அவன் பின்னாடியே சென்று அவனை சமாதானப்படுத்தினேன்.

 

அடுத்து நான் சென்றது என் அப்பாவிடம். அவரிடம் சென்று அவர் கைகளை பற்றிக் கொண்டு, “தேங்க்ஸ் ப்பா, ஒரு லவ்வப்பில் மொமெண்ட்டை எங்களுக்கு போட்டோ எடுத்து தந்ததுக்கு.” என்றேன்.

 

அவரும் வாஞ்சையோடு என்னை பார்க்க, “ப்பா, யாருக்காகவும் உங்க பாசத்தை எங்ககிட்ட காமிக்காம இருக்காதீங்க.” என்றதும் அவரும் மெளனமாக தலையசைத்து என் தலையை தடவிக் கொடுத்தார்.

 

நானும் அவரைக் கண்டு சிரித்துவிட்டு, திரும்பினேன். அங்கு முகத்தில் அத்தனை அதிர்ச்சியையும் குத்தகைக்கு எடுத்தவாறு நின்றிருந்தார் என் அம்மா. அவரை பார்த்து கண்ணடித்துவிட்டு என் அறைக்குச் சென்றேன்.

 

அதற்கடுத்து வேலைகள் ஜரூராக நடக்க, ஒரு வாரத்தில் நிச்சயம் அடுத்த இரண்டு மாதங்களில் திருமணம் என்று நாள் குறிக்கப்பட்டது. எங்கள் காதலும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போனது.

 

*****

 

ஆனந்தும் கிருஷ்ணாவும் அந்த அமைச்சரின் வழக்கை வெற்றிகரமாக முடித்தனர். அந்த அமைச்சருக்கு ஆயுள் தண்டனை என்று தீர்ப்பானது. அதை கேட்ட அனைவரும் சற்று ஆசுவாசமாக உணர்ந்தோம். ராகுலின் வழக்கும் சில நாட்களில் முடிந்துவிடும் என்று என்னிடம் கூறியிருந்தான்.

 

பொடிக்கில் வியாபாரமும் சூடுபிடிக்க துவங்கியது. அவ்வபோது அங்கு வந்து தன் ஆலோசனைகளை கொடுத்து கொண்டிருந்தான் க்ரிஷான ராகுல் கிருஷ்ணா! அன்றும் அவனும் கிருஷ்ணாவும் வந்திருந்தனர்.

 

சாண்டியின் நடவடிக்கைகளிலும் சிறிதளவில் மாற்றங்கள் ஏற்பட்டன. முன்போல கிருஷ்ணாவை ஒதுக்காமல் அவனிடம் பேசினாள். அதுவே எங்களுக்கு பெரிதாக தோன்றியது.

 

ஒரு நாள் அவளிடம் அதை பற்றி விசாரித்தேன்.

 

“ஹே என்ன டி? இப்போலாம் கிருஷ்ணாவ அவாய்ட் பண்ணாம அவருகிட்ட பேசுற போல.” என்று நான் வினவ, “ஹ்ம்ம் ஆமா டி, அன்னைக்கு நீ சொன்னப்போ தான் நான் அவருக்கிட்ட எப்படி நடந்துகிட்டு இருந்துருக்கேன்னு புரிஞ்சது. அவரு இதுவரைக்கும் என்னை தப்பா கூட பார்த்தது இல்ல. ஏன் லவ்வுங்கிற மாதிரி கூட பேசுனது இல்ல. ஒரு பிரெண்டா தான் பேசிட்டு இருக்காரு. நான் தான் அதை புரிஞ்சுக்காம ஏதேதோ நினைச்சு குழம்பிட்டு இருந்துருக்கேன்.” என்றாள்.

 

“ஹப்பா இப்போவாவது புரிஞ்சுதே. ஆனா நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்காத.” என்று நிறுத்திவிட்டு, “தப்பா எடுத்துக்கிட்டாலும் பரவால, நான் சொல்லியே தீருவேன்.” என்றேன்.

 

“அட என்னனு சொல்லு டி.”

 

“ஹ்ம்ம் நீ ஏன் கிருஷ்ணாவை லவ் பண்ண கூடாது?” என்று நான் கேட்டதற்கு முறைத்தாள் சாண்டி.

 

“ப்ச், அதெல்லாம் சரியா வராது டி.”

 

“அது ஏன் அவருக்கிட்ட பேசிப் பார்க்காமயே சரியா வராதுன்னு சொல்ற?”

 

“அ…அது… வந்து… என்னால இன்னொரு ஏமாற்றத்தை தாங்க முடியாது டி.” என்றாள் உடைந்த குரலில்.

 

அவள் அந்த ரித்தீஷின் செயலால் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்பது எனக்குத் தெளிவாக புரிந்தது. ஆனால், அவளை இப்படியே விட்டால் அவளின் வாழ்க்கையை மேலும் சிக்கலாக்கிக் கொள்வாள் என்று தெரிந்து அவளிடம் பேசினேன்.

 

“ம்ப்ச், இங்க பாரு சாண்டி, எல்லாரும் அந்த பொறுக்கி மாதிரி இருக்க மாட்டாங்க. போயும் போயும் அவனையும் கிருஷ்ணாவையுமா கம்பேர் பண்ற?” என்று வேண்டுமென்றே போட்டு வாங்க முயன்றேன்.

 

“ச்சே என்ன டி இப்படி சொல்ற? நான் எப்போ ரெண்டு பேரையும் கம்பேர் பண்ணேன். கிருஷ்ணா இஸ் அ ஜென்ட்டில் மேன். அவரை போய் அவன் கூட எப்படி…” என்று அவள் தன்னையறியாமல் கூறினாள்.

 

‘பரவாலையே இவளை ஈஸியா நம்ம வழிக்கு கொண்டு வந்துடலாம் போலயே!’ என்று மனதிற்குள் குதூகலித்தேன்.

 

“அப்பறம் ஏன் டி? கிருஷ்ணா ஏமாத்திடுவாங்கன்னு பயப்படுறியா?”

 

“ஹே அப்படியெல்லாம் இல்ல டி.” என்று வேகமாக மறுத்தாள்.

 

“அப்பறம் என்னத்துக்கு டி அவனை வேண்டாம்ன்னு சொல்ற?”

 

“அடிப்பாவி, என்ன டி அவரை மரியாதை இல்லாம பேசுற?”

 

“இப்போ அது தான் முக்கியமா? அதான் நீ அவனை வேணாமன்னு சொல்லிட்டேல, அப்பறம் என்ன?”

 

“அதுக்காக மரியாதை இல்லாம பேசுவியா?”

 

“அடியேய் உன்னை கொல்லப்போறேன் பாரு. ஒழுங்கா வேணுமா வேணாமான்னு சொல்லு டி.”

 

“எ…என்…எனக்கு ஒரே குழப்பமா இருக்கு டி.”

 

‘நல்லவேளை குழம்பி இருக்கா. குழம்பின குட்டைல தான் ஈஸியா மீன் பிடிக்க முடியும்!’

 

“சரி உனக்கு ‘அவரை’ பிடிக்காத மாதிரி ஏதாவது தோணுதா?” என்று நான் வினவ, அவளோ மண்டையை ‘இல்லை’ என்னும் விதமாய் அசைத்தாள்.

 

“அப்பறம் என்ன கொஞ்ச நாள் அவரு கூட பேசிப் பழகு. உனக்கே அவரு மேல நம்பிக்கை வந்ததுக்கப்பறம் உன் லவ்வை அவருக்கிட்ட சொல்லு… அவரு கண்டிப்பா அது வரைக்கும் வெயிட் பண்ணுவாரு.” என்று நான் கூற அவளும் அதற்கு ஒப்புக்கொண்டாள்.

 

“எனக்கென்னமோ ரொம்ப நாள் ஆகாதுன்னு தோணுது.” என்று நான் கூற, “ஸ்ஸ்ஸ் போடி…” என்றாள் வெட்கத்துடனே.

 

அதன்பிறகு அவர்களும் பேசி தெளிந்து இப்போது அவர்களின் காதலும் பகிறப்படாமலேயே சரியான பாதையில் சென்று கொண்டிருந்தது.

 

அதை நினைத்துப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தேன். என் முன் சொடக்கிட்ட ராகுல், “என்ன மேடம் நீங்க இங்க இல்ல போல?” என்றான் சிரித்துக் கொண்டே.

 

நானும் சிரித்துவிட்டு, “கிருஷ்ணா ப்ரோ எங்க?” என்றேன்.

 

அவனோ கண்களாலேயே அவர்களை சுட்டிக் காட்டினான். அங்கு கிருஷ்ணாவும் சாண்டியும் சிரித்து பேசிக் கொண்டிருந்தனர். சாண்டியின் முகமோ சிரிப்பில் விகசித்திருக்க, அதைப் பார்த்த எனக்கு மகிழ்ச்சி பெருகியது.

 

“என்ன பப்ளி முகமே டாலடிக்குது?”

 

“ம்ம்ம் சாண்டியை நினைச்சு தான்… அவ அந்த ரோக்னால ரொம்ப ஹர்ட் ஆகிருந்தா. அவளை எப்படி அதுலயிருந்து மீட்கப்போறோம்னு ரொம்ப கவலையா இருந்தேன். ஆனா இப்போ அவ சந்தோஷமா இருக்குறதை பார்த்து எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.” என்றேன் நெகிழ்ச்சியான குரலில்.

 

அவனோ அதை உணர்ந்து என் மனநிலையை மாற்றவே, “என்ன பப்ளி அந்த ரித்தீஷுக்கு என்ன ஆச்சுன்னு இந்நேரம் கேட்பன்னு நினைச்சேன்.” என்றான்.

 

“ஹே ஆமா, அவனை எப்படி உங்களுக்கு தெரியும்?” என்று நான் வினவ, அவனோ எதுவும் கூறாமல் சிரிக்க, “அப்போ தாமோ அங்கிளுக்கு ஹெல்ப் பண்ணது நீங்களா?” என்றேன்.

 

“ம்ம்ம் ஆமா பப்ளி, உன்னை ஃபாலோ பண்ணதுல அவன் ஆக்ட்டிவிட்டீஸ் தப்பா தெரிஞ்சுது. அதான் அவனை வார்ன் பண்ணேன். அப்பறம் ஒரு நாள் என் கிட்ட  நீ அவனை பத்தி சொன்னதும், அவனை திரும்பி வார்ன் பண்ண போனேன். அங்க போனப்போ தான் அவனோட கல்யாணத்துலயிருந்து அவனை காணோம்னு தெரிஞ்சுது. இப்போ வரைக்கும் அவனை தேடிட்டு தான் இருக்காங்க. ஆனா கிடைக்கல.” என்றான்.

 

“ஹ்ம்ம் எத்தன பேரை ஏமாத்திருப்பான்! அதான் அவனால பாதிக்கப்பட்டவங்க யாராவது ஏதாவது பண்ணிருப்பாங்க.” என்றேன் அலட்சியத்துடன்.

 

“ம்ம்ம் பப்ளி, இந்த விஷயம் சாண்டிக்கோ நேஹாவுக்கோ தெரிய வேண்டாம்.” என்று அவன் கூற, “ச்சே இதை போய் எதுக்கு அவங்ககிட்ட சொல்லப் போறேன்.” என்றேன்.

 

“ஆனா சார் இன்னும் நிறைய விஷங்களை என்கிட்டயிருந்து மறைச்சுருக்கீங்க போலயே!”

 

“ச்சு, நான் ஏதாவது உன்கிட்டயிருந்து மறைப்பேனா? பிலீவ் மீ பப்ளி மா!”

 

“இதை பார்த்தா தான் என் டவுட் கன்ஃபார்ம் ஆகுற மாதிரி இருக்கு.”

 

“அச்சோ, அன்னைக்கு உன் வீட்டு பால்கனில உன் கஸினை பார்க்குறேன்னு நீ நினைச்சப்போ உன்னை பார்த்து சைட் அடிச்சது, மொட்டைமாடில பசங்க கூட நீ விளையாடிட்டு இருந்தப்போ உன்னை பார்க்குறதுக்காகவே மேல வந்து உன் முன்னாடி நின்னது, ஊட்டில நீ விழுகப்போனப்போ உன்னை தாங்கிபிடிச்சு அதுக்கு மேல என்னையே கண்ட்ரோல் பண்ண முடியாம உன்னை திட்டி விலகுனது, அதே ஊட்டிலேயே நீ என்னை அப்பட்டமா சைட்டடிச்சது  தெரிஞ்சாலும் தெரியாத மாதிரியே காட்டிக்கிட்டு உள்ள அதை அனுபவிச்சது, நீ தனியா ஃபீல் பண்ணப்போ ஆனந்தை அனுப்பி உன்ன நார்மல் ஆக வச்சது, அபியோட பார்ட்டில நீ பண்ண சேட்டையெல்லாம் உனக்கே தெரியாம ரசிச்சது, க்ரிஷா உன்கிட்ட சாட் பண்ணப்போ நீ ராகுல் பத்தி உன் லவ் பத்தி ஃபீல் பண்ணி சொன்னப்போ அதை ரசிச்சது, ஃபைனலி உன் பொடிக் திறப்பு விழா அப்போ உனக்கான ட்ரெஸை உனக்குன்னு சொல்லாம உன்னையவே செலக்ட் பண்ண வச்சதுன்னு இதை தவிர வேற எதுவும் உன்கிட்டயிருந்து மறைக்கல பப்ளி.” என்றவாறே அந்த உடையை என்னிடம் நீட்டினான்.

 

அதை வாங்கிக் கொண்டே, “அடப்பாவி… ஃப்ராட், இத்தனை முறை என்னை சைட்டடிச்சுருக்க, ஆனா நான் பார்க்குறப்போ மட்டும் மூஞ்சிய விறைப்பா வச்சுட்டு சுத்த வேண்டியது.” என்று செல்லமாக சலித்துக் கொண்டேன்.

 

“நாங்களும் கெத்தா  இருக்கணும்ல!”

 

இவ்வாறு ‘ஸ்வீட் நத்திங்ஸ்’ பேசியவாறே அந்த ஒரு வாரமும் கழிந்தது. அன்று எங்கள் நிச்சயதார்த்த நாள். வழக்கம் போலவே லேட்டாக தான் எழுந்தேன்.

 

ராகுல் தான் ‘காலைல உன்னை பார்க்கணும்னு தான் நீ வெயிட்டா இருக்கன்னு சொன்னேன். உனக்கு சீக்கிரம் எழுந்துக்க கஷ்டமா இருந்தா நீ வர வேண்டாம்’ என்று சொல்லிவிட்டானே.  எப்படியும் மாலை இருவரும் சந்திப்போம்  என்பதால் காலை நடைப்பயிற்சி கட்!

 

“ச்சே, ஒரு வாரமா சீக்கிரம் எழுந்ததை பார்த்து திருந்திட்டான்னு நினைச்சது என் தப்பு தான். இன்னைக்கு கூட இழுத்து போத்திட்டு  தூங்குறா. இவளை எழுப்புறதுக்குள்ள என் ஜீவன் தான் போகுது.” என்று புலம்பியவாறே என் அம்மா வர, அங்கு எழுந்தமர்ந்திருந்த நான், “ம்மா கொஞ்சமாச்சும் என் மேல பாசமிருக்கா உனக்கு. இன்னும் ரெண்டு மாசத்துல நான் இங்கயிருந்து போயிடுவேன்னு கொஞ்சமாச்சும் ஃபீல் பண்றீயா? இப்போ கூட என்னை திட்டிட்டு தான் இருக்க.” என்று வராத கண்ணீரை துடைத்துக் கொண்டேன்.

 

“ஆமா இவ இங்கேயிருந்து ஃபாரினுக்கு போறா நான் ஃபீல் பண்ண. இதோ இங்கேயிருக்க எதிர்த்த வீட்டுக்கு போற. அங்க போய் என் மானத்தை வாங்க போற. உங்க அத்தை நீ பண்றதுக்கெல்லாம் ‘என்ன உங்க வீட்டுல இப்படி வளர்த்துருக்காங்க’னு என்னை தான் திட்டப்போறாங்க.” என்று புலம்பினார்.

 

“ம்மா, அத்தை சோ ஸ்வீட். அப்படியெல்லாம் என்னை திட்டவே மாட்டாங்க.” என்று மிதப்பான குரலில் நான் கூற, “ஆமா ஆமா திட்டாம கொஞ்சுவாங்க!” என்றார் அவர்.

 

“ம்மா, உனக்கு பொறாமை தான, எங்க நானும் என் அத்தையும் உன் மாமியார்-மருமகள் கூட்டணிக்கு போட்டியா வந்துடுவோம்னு?” என்று அவரிடம் வம்பு வளர்க்க, “அடியேய் வாய் பேசாம எழுந்து கிளம்புற வழியை பாரு டி.” என்றார்.

 

இவ்வாறு காலையிலேயே அனைவரையும் வம்பிழுத்துக் கொண்டு இருந்தேன். என் அப்பா கூட சன்னமாக சிரித்துவிட்டு சென்று விட்டார். அவரே கண்டுகொள்ளவில்லை என்றான பின் என் சேட்டைகளின் அளவை சொல்லவும் வேண்டுமா!

 

அபியோ நான் கிண்டலடிப்பதை தாங்க முடியாமல், ராகுலுக்கு அழைத்து, “மச்சான், உன் ஆளை சீக்கிரம் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போடா. இங்கயிருந்து எங்க உசுரை வாங்குறா.” என்று புலம்பியதும் தான் சற்று அமைதியானேன்.

 

“டேய் அண்ணா ஓவரா பேசாத, எதிர்த்த வீட்டுல தான் இருப்பேன். இப்படியே பேசிட்டு இருந்த அடிக்கடி வந்து உனக்கு தொல்லை கொடுப்பேன். சாம்பிளுக்கு நீ அண்ணி கூட ரொமான்டிக்கா பேசிட்டு இருக்கும்போது தான் எனக்கு ஷாப்பிங் போகணும்னு தோணும், அதுக்கு அண்ணியை கூப்பிடணும்னு தோணும்.” என்று நான் நக்கலாக கூற, “அம்மா தாயே, இன்னைக்கு தான் என் மாமா அப்பா கிட்ட பேசப்போறாங்க. அதுக்குள்ள என் வாழ்க்கைல கும்மி அடிச்சுறாத மா!” என்றான் அபி.

 

ஆம் இன்று தான் ப்ரியாவின் அப்பாவும் என் அப்பாவும் அவர்களின் திருமணம் பற்றி பேசப் போகின்றனர்.  என் அப்பாவிற்கு இவர்களின் காதல் லேசாக தெரிந்தாலும், இதுவரை அவராக அதை பற்றி எதுவும் கேட்கவில்லை.

 

“அந்த பயம் இருக்கட்டும்!” என்று அவனை மிரட்டிவிட்டே மற்றவர்களை வம்பிழுக்க சென்றேன்.

 

இப்படியாக அன்று மாலையும் வந்தது. இராமர் பச்சை நிற சேலை என் உடலை தழுவியிருக்க, அதற்கேற்ற நகைகளோடும், ப்ரியா மற்றும் சாண்டியின் கை வண்ணத்தாலும் ஜொலித்தேன் நான்.

 

“அண்ணா இன்னைக்கு ஃபிளாட் தான் போ.” என்று சாண்டி என்னை கிண்டலடிக்க, “இவ தான் ராகுலை பார்த்து ஃபிளாட் ஆவான்னு நான் நினைக்கிறேன்.” என்றாள் ப்ரியா.

 

அவர்களின் பேச்சிற்கு செவி சாய்த்தாலும், என் மனமோ நடக்கப்போகும் விழாவிற்காக காத்திருக்க துவங்கியது. அவனை சந்தித்ததிலிருந்து இன்று காலை அவனிடம் அலைபேசியில் பேசியது வரை அனைத்தையும் என் மனதிற்குள் ஓட்டிப் பார்த்துக் கொண்டேன்.

 

“என்ன மேடம் இப்போவே ட்ரீம்ஸா? கொஞ்சம் இங்க வாங்க, மாப்பிள்ளை வீட்டுலயிருந்து எல்லாரும் வந்துட்டாங்களாம்.” என்றாள் சாண்டி.

 

என்றுமில்லாமல் இன்று எனக்கு தானாக வெட்கம்  வந்து ஒட்டிக்கொண்டது. அப்போது  அங்கே வந்த சுதா ஆன்ட்டி, “அழகா இருக்க நதி மா.” என்று எனக்கு திருஷ்டி கழிக்க, “தேங்க்ஸ் ஆன்ட்… ஸ்ஸ்ஸ் அத்த…” என்றேன்.

 

“பரவால நதி உனக்கு எப்படி வருதோ அப்படியே கூப்பிடு.” என்றார் அவர்.

 

நேஹாவும் அவருடன் வந்திருக்க, “அழகாயிருக்கீங்க நதிக்கா.” என்றாள்.

 

அவளிடமும் சிரிப்பையே பரிசளித்தேன்.

 

“சாண்டி அக்கா, நதிக்கா இன்னைக்கு ரொம்ப அமைதியா இருக்காங்களே, என்ன விஷயம்?” என்று நமுட்டுச் சிரிப்புடன் நேஹா வினவ, “அதுவா நேஹா, மேடம் கல்யாணப் பொண்ணுல, அது மட்டுமில்லாம இவ பேசுறதை பார்த்து மாப்பிள்ளை பயந்து ஓடிப் போய்ட்டா! அதான் அடக்க ஒடுக்கமா இருக்காங்க.” என்று சாண்டி கூறவும் அவளை துரத்திக் கொண்டு நான் ஓடினேன்.

 

என் அறைக்கு வெளியே சென்ற அவள் சற்று விலகவும் நான் எதிரில் வந்து கொண்டிருந்த அவன் மேல் மோதவும் சரியாக இருந்தது.

 

அங்கு என்னை எப்போதும் போல தாங்கிப் பிடித்தான் ராகுல். நான் அவனை பார்க்க, அவன் என்னை பார்க்க…  எங்களை சுற்றி இருந்தவர்கள் எங்களை ஓட்ட என்று அந்த இடமே களேபரமாய் இருந்தது.

 

“என்ன அண்ணா கண்ணும் கண்ணும் நோக்கியா சீன் முடிஞ்சதா?” – சாண்டி

 

“அது எப்படி அதுக்குள்ள முடியும்? இப்போ கூட நம்ம இங்க இருக்குறது தான் இடைஞ்சலா இருக்கும். அப்படி தான  ராகுல்?’ – ப்ரியா

 

“என்ன அக்காஸ் அத்துவை மட்டும் ஓட்டுறீங்க? நதிக்காவும் பாவம் தான!” – நேஹா

 

இவர்கள் இதையெல்லாம் பேசிக் கொண்டிருந்த நேரம், நான் அவனை அளவிட்டுக் கொண்டிருந்தேன்.

 

அவனும் அதே இராமர் பச்சை நிற ஃபுல் ஸ்லீவ் ஷர்ட்டும் ஹாஃப் வைட் பாண்ட்டும் அணிந்திருந்தான். கூலர்ஸை சட்டையில் சொருகியபடி ஆண்மையின் இலக்கணமாக அங்கு நின்றிருந்தவனை என் கண்களால் களவாடிக் கொண்டிருந்தேன்.

 

நாங்கள் இருவரும் இன்னும் மோன நிலையிலேயே இருக்க, எங்களை உலுக்கி நிகழ்விற்கு அழைத்து வந்தனர் அவர்கள் அனைவரும். பின் வெட்கத்துடன் அவனைப் பார்க்காமல், அறைக்குள் சென்று மறைந்தேன்.

 

சிறிது நேரத்திலேயே நிச்சயப் பத்திரிகை வாசிக்கப்பட, எங்கள் வீட்டினர் தட்டை மாற்றிக் கொண்டனர். முதலில் அதில் பங்கேற்க மறுத்த என் சுதா அத்தையையும் நான் பேசியே சம்மதிக்க வைத்தேன். அதற்கு ஒரு பாராட்டும் பார்வையும் அவனிடமிருந்து பெற்றுக் கொண்டேன்.

 

அது முடிந்ததும் எங்கள் இருவரையும் மோதிரம் மாற்ற அழைத்தனர். அன்று அவன் போட்டுவிட முயன்று நான் மறுத்த அதே மோதிரத்தை இன்று அனைவரின் முன்பும்  போட்டுவிட்டான் என்னவன்! மோதிரம் போட்டபின்பும் கைகளை விடாமல், அதற்கும் அனைவரின் கேலியையும் பரிசாகப் பெற்றோம்.

 

சுற்றிலும் எங்கள் உறவுகள், நட்புக்கள், நலம் விரும்பிகள் (என் அப்பா அம்மா, சுதா அத்தை,  அபி – ப்ரியா, ஆனந்த் – நேஹா, கிருஷ்ணா – சாண்டி, தாமோ அங்கிள், ஷீலா) அனைவரின் ஆதரவோடு அழகாக நடைபெற்றது எங்களின் நிச்சயதார்த்தம்.

 

ஈர்ப்பான்(ள்)…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
22
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *