உடையாதே என் உயிர்க்குமிழியே
விடியலில் ஆதித்தன் கிழக்கிலிருந்து உதிக்க வீட்டிலுள்ளோர் மெல்லமாக எழுந்து கொண்டனர். தொடர்ந்து மூன்று முதல் நான்கு நாட்களாக வேலை வேலை என்று ஓடியதால் இன்று நன்கு உறங்கியிருந்தனர்.
காலை நான்கு மணிக்கு அலாரம் வைத்திருந்தான் ருத்ரன். அது தனது பணியைச் செவ்வனே செய்ய, அதைத் தூக்கி எறிந்து விட்டு நன்கு உறங்கிக் கொண்டான். நன்கு உருண்டு தூங்கும் சமயம் அவனது தாயவள் கதவு தட்டும் சத்தம் கேட்க, படக்கென்று எழுந்தமர்ந்தான். மொட்டை மாடிக்கதவைத் தான் ருத்ரன் வெளிப்பக்கம் பூட்டிவிட்டு படுத்திருந்தான்.
அவர் சாவி கொண்டு திறக்கும் முன்னர் மொட்டை மாடியிலிருந்து சன்னல் வழியே வரும் பைப்பைப் பிடித்துக் கொண்டு தாவி பால்கனியில் வந்து நின்றவன் , அங்ககருந்து உதிரனின் அறை பால்கனிக்குத் தாவிக் கொண்டான்.
அங்கோ அறைக்கதவு திறந்து கிடக்க, பால்கனியில் ஒரு நாற்காலியில் அமர்ந்தவண்ணமாய் கன்னத்துக்கு கையைக் கொடுத்து தூங்கிக் கொண்டிருந்தாள் சாஹித்யா. அதிலேயே உதிரன் அறையில் இல்லை என்பது தெரிந்தது.
” அட நாசமா போனவனே… ஒண்ணும் நடக்காது னு தெரியும். கருமம் ரூம் ல கூடவா படுக்க மாட்ட… ” என்று புலம்ப, அவனது மனசாட்சியோ, ‘ அப்ப சாரு நைட்டு எங்க படுத்தீங்க ‘ என்று கேள்வியெழுப்ப, ” எனக்கு எதிரி வேற எங்கேயும் இல்ல. நீதான் செல்லம் ” என்று கூறி மனசாட்சியை வழியனுப்பினான்.
சாஹித்யாவைக் கண்டவனால் பெருமூச்சை மட்டுமே வெளியேற்ற இயன்றது. நேரமாவதை உணர்ந்தவன், தாவி தனதறைக்குச் செல்ல முயல்கையில் உதிரன் வீட்டின் சுற்றுப்புற சுவரின் மேல் கைவைத்து தாவி ஏறி வந்தான்.
” வா ராசா வா… தாங்கள் எங்கு சென்று வருகிறீர்கள்… ” ருத்ரன்
” ஹான் சுரைக்காய் ல உப்பு போட… ” உதிரன்.
” அடச்சீ நிறுத்து… என்னத்த கிழிக்க காலைலயே கிளம்புன… ” ருத்ரன்.
” சார் எதை கிழிக்க மொட்ட மாடிக்கு போனீங்க ” என்று உதிரன் கேட்க, ” நீ நீ பேச்ச நீங்க பேச்ச மாத்துறீங்க மிஸ்டர். உதிரன் “
” அதே விளக்கெண்ணைய தான் நானும் சொல்றேன். நீங்க பேச்ச மாத்துறீங்க. சீக்கிரம் போய் குளிச்சுட்டு ரெடியாகு. தங்கச்சி காத்துட்டு இருப்பா… காலை ல எதோ கோவிலுக்கு போகணும் னு அத்த நேத்து சொல்லிட்டு இருந்தாங்க. அத சீக்கிரம் முடிச்சுட்டு ஒரு வேலை இருக்கு ” என்றவன், நிற்காமல் விருவிருவென உள்ளே நுழைந்தான்.
உதிரன் பால்கனியில் அமர்ந்திருந்து உறங்கும் தன் மனையாளை கையிலேந்தி படுக்கையில் படுக்க வைத்தான். பின்னர் தன் துணியை எடுத்துக் கொண்டு குளிக்க சென்றான். ஷவரின் அடியில் நின்றவனின் மனதில் இருந்த கொதிப்பை ஏனோ அடக்க இயலவில்லை. நேரமாவதை உணர்ந்தவன் வேகமாகக் குளித்து உடைமாற்றிக் கொண்டான்.
படுக்கையில் படுத்திருந்த சாஹித்யா நன்கு புரண்டு புரண்டு மெத்தையை விட்டு கீழே விழந்திருந்து திருதிருவென விழித்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள்.
” என்ன பப்ளூ டபுள் காட் ( cot ) கூட போதலியா என்ன ” என்று உதிரன் கேட்க, அது அவன் உறுமுவது போல கேட்டு வைத்தது. அதில் கிடுங்கியவள், ” சா.. சாரி சார் ” என்றாள்.
அவள் பதறுவது அவளுக்கு வலித்ததோ இல்லையோ உதிரனுக்கு வலித்தது.
சில வலிகள் மற்றவர் கூறுகையில் பெரிதாக தோன்றாது ; அதையே நாமோ நமக்கு நெருக்கமானவரோ அனுபவிக்கும்போது தான் அதன் வீரியம் தெரியும். அதையே உதிரனும் அனுபவித்தான்.
” ஓகே… இந்த சார் எதுக்கு… நான் உன் புருஷன் தானே… சரி இருக்கட்டும் போய் ப்ரஷ் பண்ணிட்டு குளிச்சு ஃப்ரெஷ் ஆகிட்டு வா… காலைலயே கோவிலுக்குப் போகணும். இப்பவே டைம் ஆகிட்டு ”
” ஓகே சார் “
” எதே “
” ஈஈஈ சாரி சார்.. “
‘ ஆண்டவா ‘ என்று தன்னையே நொந்து கொண்டவன் , ” நீ போய் கிளம்பு. கோவிலுக்கு புடவை கட்டிக்கோ னு யாராவது சொல்வாங்க. நீ அத காது குடுத்து கேட்டுக்காத… உனக்கு என்ன தோணுதோ அதைப் போட்டுக்க ” என்றான் . அவனுக்கு தலையாட்டியவள் குளிக்க செல்ல, அவன் தனது ஃபோனை நோண்ட ஆரம்பித்தான்.
அரை மணிநேர இடைவெளியில் அவர்களின் கதவைத் திறந்து வெளியே வந்தனர் உதிரனும் சாஹித்யாவும். இளநீல நிற சட்டை கருப்பு நிற ஜீன்சில் உதிரன் வர, இளநீல குர்த்தி அணிந்து வந்தாள் சாஹித்யா. அவர்கள் வந்ததும் ஒரு பட்டாளம் அவர்களைக் கலாய்க்க, பெயருக்கென சிரித்து வைத்தனர். இவர்கள் வந்து சேர்ந்த பின்னரும் அடுத்த அறையில் இருந்த ஜோடி வருவது போல இல்லை . சிறிது நேரம் பொறுத்தவர்கள் அவன் வரக்காணாமல் போக அவனது அத்தை வந்து கதவைத் தட்ட கையில் லிப்ஸ்டிக்குடன் வந்து நின்றான் ருத்ரன் .
” ஏண்டா கைல லிப்ஸ்டிக்கோட வந்து நிக்குற… ஏன் அவளுக்கு லிப்ஸ்டிக் போட தெரியாதா இல்ல போடாம இருந்தா தான் எதும் தெய்வ குத்தம் ஆகுமா ” என்று கோவமாக கேட்க, அவனோ அதை உண்ண ஆரம்பித்தான்.
” சீ… என்ன பழக்கம் டா இது… அடச்சீ துப்புடா ” என்று கத்த, அவனோ முழு மூடி போன்ற அமைப்புவரை உண்டு ஏப்பம் விட்டான் . உள்ளே எட்டிப்பார்க்க அங்கு தாரிகாவும் ஐலைனர் பென்சிலை உண்டு கொண்டிருந்தாள்.
” ஐயோ உதிரா… இங்க வாடா… இந்த பையன் மொட்ட மாடி ல படுத்ததுல எதோ காத்து கருப்பு பட்டிருச்சுடா ” என்று கத்த, வீட்டிலிருந்தோரோ, ” மொட்ட மாடில படுத்தானா என்று ஒருசேர கத்தினர். அதன்பின்னரே தான் உளறியதை உணர்ந்து திருட்டு முழி முழிக்க, ” ஏன் மாமா இதுக்கு தானே கல்யாணம் முடிவான பிறகு இரவு நேரம் மொட்ட மாடி ல படுக்காதீங்க னு சொன்னேன்… சொன்னா கேட்டா தானே ” என்று சமயத்துக்குக் கேட்டு வைத்தாள் ஆரத்யா .
வந்தவரில் ஒருவர், ” ஓ கல்யாணம் முடிவான பிறகா… ” என்று கேட்டபடி அடுத்த வேலையைப் பார்க்கச் செல்ல ருத்ரனின் அத்தை நிம்மதி பெருமூச்சு விட்டார். பின்னர் திரும்பவும், ” உதிரா… இவன் லிப்ஸ்டிக் அ சாப்பிட்டான் டா… ” என்று வாயைப் பிளந்தார்.
” லிப்ஸ்டிக் அ… என்ன உலறுரீங்க… ” என்று சாஹித்யா ஆஜராக, ருத்ரனோ அடுத்து ஒரு நகப்பூச்சு பாட்டிலை எடுத்து உண்ண, சாஹியோ , ” டேய் அண்ணா எனக்கும் ஒரு பாட்டில் கேன் குடுடா ” என்று பிடுங்கி அவளும் உண்ண ஆரம்பித்தாள்.
அத்தையவர் ஒன்றும் புரியாமல் பார்க்க, ” அத்த இது கேக்கு. கேக் அ இது போல ஷேப்வைஸ் கட் பண்ணுவாங்க முதல் ல. தென் புட் கலர் யூஸ் பண்ணி கிரீம்ஸ் ரெடி பண்ணி இதுபோல ஷேப்க்கு செய்வாங்க. திடீர்னு பார்த்தா ரியலான ஒன்னு போலவே இருக்கும். ஆனா அது கேக். ஸ்டார்டிங் ல திருடி தின்னுற ஃபுட் லவ்வர்ஸ் கிட்ட இருந்து தன்னோட கேக்கை காப்பாற்ற இதுபோல செய்ய ஆரம்பிச்சாங்க . இப்ப இது ஃபேஷன் ஆகிடுச்சு. நம்ம ருத்ரன் தான் கேக் சூப்பர் பண்ணுவானே. நேத்தைக்கு மிட் நைட் ல சமையல்கட்டுல இது பண்ணிட்டு இருந்தான். நீங்க தான் சாப்பிடாம கோவிலுக்கு போகணும் னு சொன்னீங்களே… அதான் சாரு முன்கூட்டியே வேலை பாத்துட்டாரு ” என்று அதைப்பற்றி கூறிமுடிக்க , கேட்டுக்கொண்டு இருந்தவருக்கோ எங்கே சென்று முட்டிக்கொள்வது என்று இருந்தது .
ருத்ரனைப் பார்த்தவர், ” வந்து சேரு … எனக்குனு வந்து சேருறீங்க பாருங்க… ” என்று தலையிலடித்தபடியே முன்சென்றார். முதலில் பூஜையறைக்கு அழைத்து சென்றவர் , அம்மனை வேண்ட கூறினார்.
” முதல் ல இந்த அம்மனை வேண்டிக்கோங்க … ” என்றிட, தம்பதியரும் பெற்றோரும் கண்மூடி வேண்டிக் கொண்டனர். கண்திறந்து காலைத் தொட்டு ஆசீர்வாதம் கேட்க நினைக்க , அத்தையைக் காணோம். சுற்றிச் சுற்றிப் பார்க்க ஆளைக் காணோம்.
” டேய் அத்த எங்க … ” உதிரன்
” தெரிலயே… ” என்றபடி சுற்றிப்பார்க்க, சமையல்கட்டில் ஒரு தலை வெளியே கண்டது.
” அங்க பாரேன். சொல்ல சொல்ல கேட்காம ஒதுங்கி போறது ” என்றான் ருத்ரன். அதற்கு மாற்றாக உதிரனோ, ” அங்கிருந்து நகர்ந்து வெளியே கார் பக்கம் செல்ல, அந்த அத்தை ஓடிவந்து உதிரனைப் பிடித்துக் கொண்டார்.
” எய்யா… போகாதய்யா… “
” நீங்க என்ன விட்டு ஒதுங்கினால் நான் மொத்தமா ஒதுங்குவேன். எதுனாலும் உங்களோட விருப்பம். என்ன இத்தனை நாள் வளர்த்த உங்களுக்கு என்ன ஆசீர்வாதம் பண்ணுற உரிமையும் இருக்கு. கண்ட நாயும் பேசுறத கேட்டு ஒதுங்கினா நான் வெளியூர் போவேன். உங்களுக்கு ஓகே னா நீங்க இப்படியே இருங்க ” என்றிட, அவரோ அவனை அணைத்து நெற்றியில் முத்தமிட்டு கண்ணீர் வடித்தார். பின்னர் பூஜையறை முன்பு வர, நால்வரும் அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர். பின்னர் பெற்றோரிடமும் ஆசீர் பெற்று உண்ண அமர்ந்தனர்.
டைனிங் டேபிளில் சாஹித்யா அருகே ஆரத்யாவும் அமர்ந்துகொள்ள அவளுக்கும் உணவு வைத்தனர். தட்டில் தோசையும் சாம்பார் மற்றும் காரசட்னி வைக்க, ருத்ரன் இன்னும் எதையோ தேடிக் கெண்டிருந்தான்.
” ஆமா அப்படி என்ன தேடுற ருத்ரா… ” தாரிகா
” இல்ல காலைலயே கலக்கி வாசமும் நாட்டுக்கோழி கறி வச்ச மணமும் காற்றில வந்துச்சு. அதான் தேடுறேன். ஆனா காண மாட்டுது… ” என்று கூற , ” அது கிடைக்காது ராசா ” என்றார் அத்தை.
” வை வை வை வை ( yyyy) ” ருத்ரன்
” கோவிலுக்கு போகும்போது கறி சாப்பிட்டு போகக்கூடாது . அதனால தான் சாப்பாடு இல்ல னு சொன்னேன். வீட்டுக்கு வந்த சைவப்பிரியர்களுக்கு தான் இது வைத்தோம். ஆனா நீதான் சாப்பாடு முக்கியம் னு வந்து நின்னியே… அதான் உங்களுக்கு இது… ” என்றிட, அனைவரும் அவனைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தனர்.
ஒருவாறாக சாப்பிட்டு முடித்து வர, பெண்கள் இருவரும் வண்டியில் ஏறிக்கொள்ள ஆண்கள் இருவரும் ஓரம் ஒதுங்கி நின்றனர். அவர்களின் ஐக்கியத்தில் அத்தையும் வர பேச்சு ஆரம்பமானது.
அவர்கள் பேசிக் கொண்டிருக்க வண்டியில் இருந்தோர் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர்.
” அண்ணி… நான் ஒன்னு கேட்டா கோச்சுக்க மாட்டீங்களே… ” சாஹி
” சொல்லுங்க அண்ணி… ” தாரிகா
” அதுவந்து… ருத்ரன் அண்ணாவுக்கு அம்மா அப்பா இல்லையா … ” என்று ஒருவழியாய் பலவித பதட்டத்திற்கு மத்தியில் கேட்டு முடித்தாள். அதுவரை தாரிகாவிடம் நன்கு பேசிக் கொண்டிருந்தவள் தான் … ஆனால் அந்தக் கேள்வியைக் கேட்கும்போது அதன் வலியை உணர்ந்தாளோ என்னவோ கேட்டு முடித்தாள் பதற்றத்தோடு…
” என்ன சொல்றீங்க நீங்க… ருத்ரனுக்கு அப்பா அம்மா இல்லையா… யூ மீன் எனக்கு மாமனார் மாமியார் இல்லையா… ” என்று கேட்க, வண்டியில் ஏறி அமர்ந்தாள் ஆரத்யா.
” அந்த வெங்காயத்த தான் கேக்குறா அண்ணிணிணி ” என்று ஆரா தொடங்க, அதற்கு தாரிகா ” அடேய் அவ கேக்குறது உனக்கு நியாயமா படுதா… கொன்னு போட்டிருவேன் … போங்க ” என்க, சிரித்தாள் ஆரத்யா. பின்னர், ” அவளுக்கு பழசு மறந்துடுச்சு ல… விடுங்க ” என்றவள் சாஹியிடம், ” உதிரன் மாம்ஸ்ம் ருத்ரன் மாம்ஸ்ம் அண்ணன் தம்பிங்க… கெத்து குறைஞ்சிடும் னு எங்க போனாலும் ஃப்ரெண்ட்ஸ் னு பந்தா பண்ணிக்குவாங்க ” என்றிட, எதோ ஒன்று திருமணமான முதல்முறையாய் தவறாக பட்டது. ஆனாலும் தனக்குத்தான் எதுவும் நினைவில்லையே… அப்படியிருக்க தான் என்ன கேள்வியெழுப்புவது என்றெண்ணியவள் அந்த நினைவை வலுக்கட்டாயமாக ஓரங்கட்டினாள்.
” அது அந்த அத்தை.. ” என்று சாஹித்யா தொடங்க, இடைநிறுத்தினாள் ஆரத்யா. ” அண்ணி அவ இங்க தான் இனி இருக்கப்போறா … இந்தக் குடும்பம் பற்றி அவளுக்குச் சொல்லி குடுங்க ” என்றவள் தனது ஃபோனில் இன்ஸ்டாகிராம் நோண்ட ஆரம்பித்தாள். தாரிகா அங்கு சொல்லட்டும். நான் உங்களுக்குச் சொல்கிறேன் கேட்டுக் கொள்ளுங்கள்.
நெடுமாறன் – உமாராணி தம்பதியரின் மூத்த மகன் உதிர வேந்தன் மற்றும் இளையவனே ருத்ர தேவன். மேலும் தீப்தி என்ற ஒரு மகளும் உண்டு. கூடுதல் குறிப்பாக தீப்தியை நம் சாஹியின் அண்ணன் அகராதித்யனுக்கு மணமுடித்து வைத்துள்ளனர்.
நடுத்தர குடும்பமான இவர்கள் இரு புத்திரர்களும் போலீஸாக பணியாற்றுகின்றனர் என்பது நாம் அறிந்ததே. நேர்மை என்பதை மாறா கோட்பாடாய் கொண்டாலும் இடையிடையே வேண்டாத கிருமிகளை லாடம் கட்டுவதும் உண்டு.
இப்பொழுது உதிரன் ஒரு ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராகவும் ருத்ரன் அதே ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டராகவும் பணியாற்றுகின்றனர்.
இவர்களோடு இனி இருப்பது என்றால் அத்தை ரதிதேவி. உமாராணியின் அண்ணன் மனைவியே அவர். சொந்தம் என்று யாரும் இப்பொழுது இல்லை. உமாராணியின் அண்ணனும் அவரது ஒரே மகனும் ஒரு விபத்தில் உயிரிழக்க அன்றுமுதல் அவர் இவர்களோடு ஐக்கியமாகி விட்டார். இது உதிரனின் குடும்பம் .
பெண்கள் பேசிக்கொண்டிருக்க , ரதி அத்தையும் ஆண்களும் வந்திட வண்டியோ அருகில் இருந்த சிவன் கோவிலை நோக்கிப் பயணமானது. சில நிமிட பயணத்திற்கு பின்பு வண்டி கோவிலை அடைய, வண்டியை விட்டு அனைவரும் வெளியேற, ருத்ரன் வண்டியை ஒரு ஓரமாய் நிறுத்தி விட்டு வந்தான்.
உள்ளே நுழைந்து முதலில் வாயிலில் இருந்த நந்தியை சேவித்தவர்கள் பின்னர் பிள்ளையாரை சேவிக்க , சாஹியோ குருகுருவென பார்த்துக்கொண்டே போனாளே அன்றி , சேவிக்கவில்லை. அடுத்தது மூலவரை சிவனை வணங்கும் முன் கதவருகே இருக்கும் துவாரபாலகரை மற்றோர் வணங்க நிற்க, அவளோ அதைக் கவனிக்காமல் குடுகுடுவென உள்ளே நுழைய, அவளை இழுத்து நிறுத்தினார் ரதிதேவி.
” எலேய் துவார பாலகர் அ வணங்காம அங்குட்டு எங்க போற… ” ரதிதேவி.
” எதே… ” என்று சாஹித்யா முழிக்க, ” முன்ன பின்ன கோவில் பக்கமே வராதது போல முழிக்குற ” என்று கேட்க, அதற்கும் முழித்துக் கொண்டு நின்றவளை நிறுத்தி வணங்க வைத்து சிவன் சந்திதி சென்றனர். இந்த முறை அவள் சிவன் சந்திதியில் எதையோ தொலைத்தவளைப் போல எதையோ விழியால் அலச, ஆரத்யா அவளின் தலையில் கொட்டினாள் .
” என்ன அங்கங்கா முழிக்குற… சிவன சேவிச்சுக்க பக்கி ” என்று கூற, அவளுக்கு ஒழுங்கு காட்டியவள் சிவனை சேவித்துக் கொண்டாள் ; இல்லை கண்ணை மட்டும் மூடிக் கொண்டாள்.
பின்னர் கோவில் பிரகாரத்தில் பெண்கள் அமர, ஆரத்யா சுண்டல் வாங்க ஓடியவள் வாங்கி விட்டு மறுபக்கமாக குளத்தருகில் நின்றிருந்த ஆண்களண்டை வந்து நின்றாள்.
” என்ன சில்லுவண்டு… என்னமோ அங்க ரகசியம் பேசிட்டு இருந்தது போல இருந்துச்சு… என்னவாம் ” என்று ருத்ரன் கேட்க, முடிந்தமட்டும் எக்கி அவன் தலையில் கொட்டியவள், உதிரனுக்கு மட்டும் கொஞ்சம் சுண்டல் குடுத்து விட்டு பேச ஆரம்பித்தாள்.
” மாம்ஜூ… பாத்தியா… கோமா போய் எல்லாத்தையும் மறந்தா கூட என் உடன்பிறப்பு நாத்திகவாதி னு காட்டுது… ” என்று கூற, ருத்ரனுக்கு மின்னலென ஒரு யோசனை வந்தது.
” ஏன் ஆரா அப்ப பழைய சம்பவம் தொடர்பா எதாவது விஷயம் பாத்தா அவளுக்கு ஏன் பழையது நினைவு வராது… சில விஷயம் மனசோட ஆழத்துல புதைஞ்சுருக்குறது இதுபோல வெளிவரலாம் இல்லையா?… ” என்று யோசனையுடன் கேட்டான் ருத்ரன்.
” இதுகூட நல்லா தான் இருக்கு… ஆனா நினைவு வருதோ இல்லையோ மயக்கம் மட்டும் கரெக்டா போடுவா… போங்க நான் போய் ஒன்ஸ் மோர் சுண்டல் வாங்கி தின்ன போறேன் ” என்றவள் நடையைக் கட்டினாள். பின்னர் ஒரு வழியாய் கோவிலில் இருந்து வெளியேறியவர்கள் வெளியே சுற்றிவிட்டு மாலை நேரம் ஒரு பூங்காவில் வந்து அமர்ந்தனர்.
கொஞ்சம் நேரம் பேசியபடியே ஜோடி ஜோடியாய் பிரிந்து போயினர். ஒரு இடத்தில் சாஹித்யா யாரையோ காண பயத்தில் மயக்கத்தின் பிடியில் சரிய, உதிரனோ இதழ்கள் நான்கையும் ஒன்றாக ஒரே கோட்டில் சந்திக்கச் செய்து நிமிடத்தில் கவியெழுத, மயக்கத்தின் பிடி தளர்ந்து, அதிர்ச்சியின் பிடியில் சிக்கிக் கொண்டாள் 😉 .
தொடரும்…
– என்றும் அன்புடன்
குட்டி சைரன் வெடி 😜.