“முத்தரசனுக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடு” என்று கூறி விட்டு வனஜாவை நோக்கிச் சென்றான் ஜீவன்.
“டேய் தம்பி இனிமேல் நான் ஒழுங்காக இருக்கிறேன் பா…! நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன் .ப்ளீஸ், எவ்வளவு பணம் வேணும்னாலும் தரேன் “என்று கையெடுத்துக் கும்பிட, ஜீவனுக்கு இன்னும் கோபம் தான் அதிகம் வந்தது.
“உங்க பணத்திற்காகவோ இல்லை அம்மா மறுபடியும் கிடைச்சுட்டாங்கன்ற சந்தோஷத்திற்காகவோ, நான் இங்கே வரவில்லை. அதென்ன உங்களுக்கு அப்படி ஒரு சுயநலம்…?, வசதி இல்லாததால் பெத்தப் பிள்ளைகளை விட்டுட்டு ஓடிப் போனீங்க சரி , நீங்க நடிக்கப் போனீங்கன்னே வச்சுக்குவோம்… ஆனால் இன்னொருவனுக்கு ஆசை நாயகியாக” என்று சொல்லும் போதே ஜீவன் முகத்தை அருவறுப்பாகச் சுளித்தான்.
“என் சூழ்நிலை அப்படி ப்பா எனக்கு நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகச் சொல்லி அந்த ஆள் இப்படிப் பண்ணிட்டான். திரும்பி வர சங்கடமாக இருந்தது அதனால் தான் வரலை… ஆனால் உங்களுக்காகத் திரும்பி வர நினைத்த போது உங்க அப்பா ஏற்றுக் கொள்ளவில்லை “என்றாள் வனஜா.
அவரது பேச்சில் எரிச்சலடைந்தவனோ ,” ஹான் நீங்க உங்க இஷ்டத்திற்குப் போவீங்க… !! அதையும் நாங்க ஏத்துக்கிட்டு அமைதியாக இருக்கணும். நீங்க திரும்பி வந்ததும் உடனே நாங்க ஏத்துக்கணும் இல்லையா… ?? எத்தனை தடவை வந்து உங்க கிட்ட திரும்பி வரச் சொல்லி கெஞ்சி இருக்கார்.அப்போ எல்லாம் அவரை ஒரு மனுசனா மதிச்சீங்களா நீங்க… !என்ன பார்க்கறீங்க? இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும் என்றா …! அவர் டைரியை படிச்சேன்… எல்லாம் எழுதி இருந்தார்… கடைசியாக நீங்க என் கல்யாணத்தில் வந்து நின்று அட்சதைப் போட்டு அப்படியே ஒட்டிக் கொள்வதாகச் சொன்ன வரைக்கும் படிச்சுட்டேன்… அவரை ஏத்துக்கச் சொல்லி டார்ச்சர் பண்ணி இருக்கீங்க இல்ல, உங்களுக்கு ஒரு பாதுகாப்பு வேணும் ன்ன உடனேயே வரத் தெரிஞ்ச உங்களுக்கு, இத்தனை நாளும் அவர் எங்களை எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்திருப்பார் னு நினைச்சுப் பார்க்க தோணவே இல்லை இல்லையா ?? என்ன மாதிரியான எண்ணம் உங்களுடையது ச்சை” என்றான் கோபமாக.
“ஏன் பா தப்பு செஞ்சவங்க திரும்பி வந்தா மன்னிக்கக் கூடாதா…? அப்படி என்ன தவறு செய்து விட்டேன்… ? இப்போது கூட நான் பெத்த பிள்ளைங்க நீங்க சம்பாதித்த பணத்தில் தான் வாழ ஆசைப்பட்டேன் உங்களைப் பெத்த எனக்கு அந்த உரிமை கூட இல்லையா …?”என்றாள் சற்று கோபத்துடன்.
“உங்க கடமையை நீங்க சரியாகச் செய்து இருந்தால் நிச்சயம் உங்களுக்கு உரிமை உண்டு… கடமையைச் செய்யாதவங்களுக்குப் பலனும் கிடையாது. என்னைப் பெத்தது வேணும்னா நீங்களா இருக்கலாம் ஆனால் எனக்கு அம்மான்னா அது மணிமேகலை அத்தை தான், நீங்க இல்ல…” என்றான் ஜீவன் அழுத்தமாக.
“சரிப்பா நான் உன் வழிக்கே வரவில்லை. இப்போ எதுக்காக என்னைப் பிடிச்சு வச்சிருக்க..? விட வேண்டியது தானே…!!” என்று அவனைக் கோபப்படுத்தித் தப்பிக்க நினைக்க, ஜீவனோ ,”நீீீங்க என் அப்பாவின் மரணத்திற்குப் பதில் சொல்ல வேண்டாம் , இப்படியே உங்களை விட நான் என்ன முட்டாளா..!!” எனக் கேட்க, வனஜா அவசரமாக,” உன் அப்பா ஹார்ட் அட்டாக் ல இறந்து போயிட்டார் நான் எதுவும் செய்யலை…” என்றார்.
“அது ஊருக்கு, ஆனால் நிஜத்தில்?, அவர் உங்களை ஏத்துக்கலை ன்னதும் தலையணையை வச்சு மூச்சுதிணறல் வரவச்சு கொன்னு இருக்கீங்க இல்ல…!! “என்றான் ஆத்திரமாக
“இல்ல, இல்ல நான் உன் அப்பாவைப் பார்க்கவே இல்லை “என்று பதறியபடி சொல்ல
“அதற்கான ஆதாரம் என் கிட்ட இருக்கு. அவரைக் கொல்ல யூஸ் பண்ண தலகாணியில் உங்க கைரேகை இருந்தது. அதுக்கு முன்னாடி அவரை ஏமாற்றுவதற்காகப் பால் கலந்து கொடுத்தது அதில் போட்ட மாத்திரை, அந்த டம்ளரில் இருந்த கைரேகை, எல்லாம் இருக்கு அதை விட முக்கியமான எவிடென்ஸ் என் அப்பா நீங்க பேசினதை ரெக்கார்ட் பண்ணி வச்சிருந்தார் “என்றதும் வனஜாவிற்கு வியர்த்துக் கொட்டியது.
“இல்ல இல்ல இது சுத்த பொய். நான் உங்க அப்பாவைப் பார்க்கவே இல்லை” என்று வாதிட ஜீவன் சிரித்தபடியே ,”இனிமே நீங்க என்ன கத்தினாலும் அதைக் கேட்க மாட்டேன்… நீங்களே தற்கொலை பண்ணிட்டு செத்துட்டா உங்களுக்கு நல்லது இல்லை என்றால் என் தீர்ப்பு மிகக் கொடூரமாக இருக்கும் “என்று கர்ஜித்தான் .
“இல்ல இல்ல என்னை மன்னிச்சிடுப்பா, நான் இனிமேல் உன் பக்கம் கூட வர மாட்டேன் .எந்தத் தொந்தரவும் செய்ய மாட்டேன் என்னை விட்டுடு, இருக்கிற பணத்திலேயே பொழைச்சுக்கிறேன் “என்று கையெடுத்துக் கும்பிட ,ஜீவன் வேறெதுவும் கூறிடாமல் சரி என்று சம்மதித்தான் .
அவசரமாகக் கட்டை அவிழ்க்க ஜீவனே அவிழ்த்தும் விட்டான்.
“நான் கண் மூடி கண் திறப்பதற்குள் ஓடிடுங்க இல்லை நான் உங்களைச் சுட்டுக் கொன்றுவேன் “என்றதும் வனஜா அவசரமாக ஓடினாள். ஆனால் அவள் ஓடியப் பாதையில் வந்த லாரியில் மோதி அதே இடத்தில் உயிழந்தாள் வனஜா.
இங்கே முத்தரசனின் நிலைமை தான் படுமோசமாக இருந்தது.
தேவான்ஷி தன்னால் ஆன வரை அடித்துத் துவைத்திருந்தாள் முத்தரசனை.
“நரபலி.. நரபலி கொடுக்க நினைச்சியா…!! , ஒரு உயிரோட மதிப்பு தெரியுமா டா உனக்கு…? எந்தச் சாமி டா மனுசங்களைப் பலி கொடுக்கக் கேட்டுச்சு. பொறுக்கி, பொறம்போக்கு நாயே ! உனக்கு… உனக்கு இருபது வயசுப் பொண்ணு கேட்குதா…? ஹான்… உன் கிட்ட நரபலி கேட்டுச்சாடா சாமி … ! அதுவும் பச்சைக் குழந்தை கன்னிப் பெண்கள், உருவம் கூட வந்திடாத கரு , அதையுமா சாமி கேட்டுச்சு. உங்களை மாதிரி ஆட்கள் தான் டா கடவுளோட நம்பிக்கை துரோகிகள்.. ” என்று அடித்தாள் தேவா.
“ஏன் கேட்கவில்லை… கடவுள் கேட்காமலா அந்தக் காலத்தில் நரபலி கொடுத்து இருக்காங்க ? , கடவுள் கேட்காமல் தான் அந்தக் காளியின் கழுத்தில் மண்டையோடும், காலில் மனித தலையும் கிடக்குதா… !!இல்லை கோவிலில் தான் பலிபீடம் என்று ஒன்று இல்லாமல் இருக்கிறதா … ?கடவுளே மனுசனை பலி கொடுத்தால் தான் ஆசையை நிறைவேத்தி வைப்பான்… ஏன் நம்ம மதத்தில் மட்டுமா அப்படி இருக்குக் கிறித்துவர்கள் பலி கொடுப்பதில்லை. அவங்க கோவில்ல பலிபீடம் இல்லை… “என்று கத்தினார் முத்தரசன்.
“தீமை செய்யும் ஆட்களையும் ஈவு இரக்கமின்றி நடந்து கொள்ளும் மனிதர்களைக் கடவுள் வதம் செய்வார் னு காட்ட தான் காளியின் காலுக்குக் கீழே மனித தலை இருக்கு… கோவில்களில் பலிபீடம் இருக்கு தான் இல்லை என்று சொல்லவில்லையே..! ஆனால், அங்கே உணவு தான் படைக்கப்படுதே தவிர உன்னை மாதிரி முட்டாள் செய்ற மனித பலி அல்ல… இயேசுநாதரிடமும் பலிபீடம் உண்டு அங்கே திராட்சையும் பழங்களும் தான் படைக்கப்படுதே தவிர வேறெதுவும் பலியிடுவதில்லை… எந்த மதமும் எந்தக் கடவுளும் மனிதனை பலியிடு, ஏன் இதர உயிரினங்களைப் பலியிடு னு கேட்பதில்லை… நம்மை மீறிய சக்தி இந்த உலகத்தில் இருக்கிறது. அதனை வணங்கி எல்லோருக்கும் நன்மை செய்ங்கனு தான் கடவுளும் மதங்களும் போதிக்கின்றன… உன்னை மாதிரி போலிச் சாமியார்கள் தான் தன்னுடைய சொகுசு வாழ்க்கைக்காக ஏதேதோ சொல்லி அப்பாவி மக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கிறிங்க…” என்று முத்தரசனை நையப் புடைத்தாள் தேவான்ஷி .
அதற்குள் ஜீவன் வந்து விட்டிருந்தான்.
“தேவ் விடு செத்துடப் போறான்… சாவைத் தவிர வேறென்ன தண்டனை தரலாம் னு யோசி அதையே செய்து விடலாம் “என்று சொல்ல, தேவா முகம் மலர்ந்து “சொல்றேன் ஜீவா” என்றாள்.
“இல்லறத்தைத் துறந்து பக்தி மார்க்கத்தில் செல்பவர்கள் தான் சாமியார்கள். கடவுளைத் தவிர வேறு எதுவும் யோசிக்கக் கூடாது, ஏன் உண்மையான சாமியார்கள் வெறும் காற்றைச் சுவாசித்து தான் உயிர் வாழ்கின்றனர். அது போல இல்லறத்தை கைவிட்டு வந்தவருக்கு எதுக்கு ஆண்மை..?, எந்த வம்சத்தை வளர வைக்கப் போகிறார்… ?,அது வேணாம் அவருக்கு, நீக்கி விடுங்க… அது இருந்தால் தானே இருபது வயது பொண்ணுங்களா தேடச் சொல்கிறது அதனால் இந்த ஆளுக்கு ஆண்மை வேண்டாம், அது போலச் சாமியாருக்கு நாட்டிற்குள் என்ன வேலை..? அந்தக் காலத்தில் நரபலி கொடுத்ததாகவும் அதைப் பின்பற்றி இவரும் நரபலி கொடுக்க யோசிச்சதாகவும் சொன்னார்… இவர் அந்தத் துறவிகளைப் பின்பற்றி வாழறவர், நல்ல விஷயம்… அதே மாதிரியே துறவிகள் எல்லாம் நாட்டிற்குள் அதிகம் வர மாட்டாங்க , காட்டிற்குள் தான் அமைதியா தியானம் பண்ணுவாங்க ஸோ இவரையும் காட்டுக்குள்ளேயே விட்டுடலாம்… குடும்பத்தை உதறித் தள்ளிவிட்டு வந்த சாமியாருக்கு எதற்குச் சொகுசு பங்களாவும், தனித் தோட்டமும் எல்லாத்தையும் இல்லாத ஏழை எளிய மக்களுக்குத் தந்துடலாம்… மூன்று வேளைக்கான உணவை இவரே தேடி அலைஞ்சு பெறட்டும் அது தான் நான் கொடுக்கிற தண்டனை இவருக்கு ” என்றாள் சாதாரணமாக.
“நோ ,நோ, ஜீவன் இது போலச் செய்யாதே !!,” என்று முத்தரசனின் குரல் கேட்காதது போல அவரது மூக்கில் ஒரு குத்து விட்டு மயக்கமடையச் செய்தான். சந்துரு.
“இவன் கிட்ட என்ன பேச்சு வேண்டி கிடக்கு… மேடம் நீங்க சொன்னதை எல்லாம் செஞ்சுடலாம். இவனெல்லாம் நாட்டுக்குள் இருந்தா நாட்டிற்குப் பிடித்த கேடு காட்டுக்குள் இருக்கட்டும் அங்கேயும் ஏதாவது தில்லு முல்லு செய்தா புலி சிங்கம் எல்லாம் பார்த்துக்கும்…. இவனைத் தேடினால் காட்டிற்குள் தியானம் செய்யப் போனவரை புலி அடிச்சு சாப்பிட்டுடுச்சு னு சொல்லிக்கலாம் “என்றான்.
“டேய் ! அந்த ஆள் தலையெழுத்தை ஒரே நிமிடத்தில் சொல்லி முடிச்சுட்ட சூப்பர் செஞ்சுடலாம் ” எனச் சம்மதித்தான் ஜீவப்ரியன்.
தேவான்ஷி கூறியபடியே அனைத்து தண்டனைகளும் முத்தரசனுக்கு நிறைவேற்றப்பட்டன . ஊர் உலகத்தைப் பொறுத்தவரை அவர் காசிக்கு சென்று விட்டார். ஆனால் உண்மையில் அவருக்கான தண்டனை பாதிக்கப்பட்ட தேவான்ஷியால் தரப்பட்டிருந்தது.
“டேய் ! எங்கேடாப் போனீங்க ரெண்டு பேரும்.. ?” வேதாந்த் அலைபேசியில் கத்திக் கொண்டிருந்தான்.
“தப்புச் செஞ்சவங்களுக்குத் தண்டனை கொடுக்கத் தான்” இயல்பாய் கூறி விட்டு இணைப்பை துண்டித்தான் ஜீவன்.
அனு சாளரத்தின் வழியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க, வேதா பின்னால் சென்று நின்றான்.
“டீமனிக் என்ன வேடிக்கை… ?” காதோரம் ரகசியமாகக் கேட்டு வைக்க , பயத்தில் திரும்பியவளோ அவன் நெஞ்சில் மோதிக் கொண்டாள்.
“சைனா பீஸ் இப்படியா பயமுறுத்துவ… !!” என்றவள் விலகி விடப் பாவமாகக் கேட்டு வைத்தான் வேதா ,”இன்னுமா காதல் வரவில்லை?” என்று…
“அதென்ன மணி ஆர்டரா ?, இல்ல ஸ்விகி ல ஆர்டர் பண்ண பிரியாணியா ..!! டைம் பிக்ஸ் பண்ணி வர்றதுக்கு… வரும் போது தான் வரும்… தள்ளுங்க.. “என்று சிரித்துக் கொண்டே நகர்ந்தாள்.
“கட்டின கணவன் மேல காதல் வரலைனு சொல்றது எவ்வளவு அபத்தம்…!! இந்த லட்சணத்தில் நாம ஹனிமூன் வேற போயிட்டு வந்துட்டோம்.. “என்று சலித்துக் கொண்டான் வேதாந்த்..
“காதல் சொன்னதும் செகண்ட் ஹனிமூன் போகலாம் சரியா சைனாபீஸ் “என்று அவனது கன்னத்தைத் தட்டி விட்டு சென்றாள்.
வேதாவோ விழியை விரித்தபடி ,”அடிப்பாவி… !!” என்று ஆவெனப் பார்த்திருந்தான் .
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
நாட்கள் நகர்ந்திட… ஜீவப்ரியன், தேவான்ஷியின் திருமணத்திற்கான நாளும் வந்து விட்டது.
மணிமேகலை தனது ஏழு மாத வயிற்றுடன் வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருக்க, கதிர்வேலன் மறுபுறம் பழச்சாறுடன் மணிமேகலையைத் தேடி அலைந்து கொண்டிருந்தார்.
“மாமா அக்கா வாசலில் நிற்கிறாங்க” என நர்த்தனா கூறிய அடுத்த நிமிடம் மேகாவின் முன்பு நின்றார் கதிர்.
“ஏன் மா உனக்கு எத்தனை தடவை சொல்றது…?, ஜூஸ் குடிச்சுட்டு ரெஸ்ட் எடு நாங்க எல்லாம் இருக்கோமில்ல பார்த்துக்கிறோம்… ” என்று கடிந்து கொண்டபடி அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்துப் பழச்சாறை முழுவதும் குடிக்க வைத்து விட்டு நகர்ந்தார் கதிர்.
“இதோ பாருங்க டீலரே இத்தோடு நாலு ஜூஸ் ஆகிடுச்சு. இதுக்கு மேல ஒரு சொட்டு கூடக் குடிக்க மாட்டேன் இப்பவே சொல்லிட்டேன்” என்று மிரட்டி விட்டு ,”யோவ் ! முடியலை யா தயவு செஞ்சு விட்ருயா நான் பாவம்” என்று கெஞ்சினார் மணிமேகலை.
பின்னே, குடும்பம் மொத்தமும் கவனிக்கிறேன் பேர்வழியாக அவரைச் சாப்பிட வைத்தே ஒரு வழி ஆக்கினால் . அது தான் மணிமேகலையின் கெஞ்சலுக்குக் காரணம்.
“அச்சோ ஸ்வீட் மேகா லஞ்ச்க்கு மட்டும் கூப்பிடுறேன் சரியா !!அதுக்கு முன்னாடி இந்த ப்ரூட்ஸை மட்டும் சாப்பிடு” என ஒரு டப்பாவை நீட்ட மூக்கை விடைத்துக் கொண்டு முறைத்தார் மேகா.
“சரி! சரி!! முறைக்காத… சும்மா விளையாட்டுக்கு, நீ ரெஸ்ட் எடு நாங்க பார்த்துக்கிறோம்” என்று மண்டபத்தினுள்ளே அனுப்பி வைத்தார் கதிர்.
மணமகன் அறைக்குள் அமைதியாக அமர்ந்திருந்தான் ஜீவப்ரியன்.
“இன்னும் ரெடி ஆகலையா ஜேபி…!! ப்ப்ச் என்னடா… ?”என வேதா தோள் தட்டவும் , அவனது கை மீதே சாய்ந்து கொண்டு விம்மினான் அந்தக் கம்பீர காவல்காரன்.
“டேய் ஜேபி அழறியா ஏன் டா அப்பா நினைவா…!!” நண்பனின் அழுகை தாளாமல் வேதா கேட்க
“இந்தக் கல்யாணத்திற்கு அவர் கேட்டப்பவே சம்மதிச்சிருந்தா ,உயிரோடிருந்திருப்பார் இல்ல. நான் தப்பு செஞ்சுட்டேனா வேத்…” துக்கம் தாளாமல் கதறியவனைத் தேற்ற வழி தெரியாமல் திகைத்து நின்றான் வேதா.
தேவான்ஷி அறைக்குள் வந்தாள்.
“அண்ணா அனு கூப்பிட்டா நீ போ ,நான் பார்த்துக்கிறேன் “என வேதாவை அனுப்பி வைத்து விட்டு கதவை சாத்தியவள் ஜீவனை எழுந்து நிற்கும்படி கூறினாள்.
கண்களைத் துடைத்து விட்டு,” நீ என்ன பண்ற..?, போய் ரெடி ஆகு ஆவிப் பொண்ணே…!!”
“அழுதிங்களா ஜீவ்…! ஏன் இந்த ஆவியைக் கட்டிட்டு என்ன பாடு படப் போறோமோனு நினைச்சு அழுதிங்களோ…?” வம்பு செய்தாள்.
அவளை இடையோடு வளைத்து பிடித்து அணைத்தவன்,” வம்பு பண்றியா நீ… ? ஒண்ணுமில்லை அப்பா நினைவு வந்திடுச்சு … சரி சொல்லு ,இந்தப் போலீஸ்காரனை பிடிச்சிருக்கா… !!”என்று கேட்க தேவா சிரித்தாள்.
“எதுக்குச் சிரிக்கிற நீ… சொல்லு தேவ்.. ” செல்லங் கொஞ்சிட அவளோ,” ஐ லவ் யூ” என்று மூன்று வார்த்தையில் தன் மனதைக் காட்டி விட்டாள்.
“அப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் “என்றவன் ,மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான்,” எதற்குச் சிரித்தாய் ?”என்று
“இல்ல எப்போ வந்து பிடிச்சிருக்கானு கேட்கறீங்க னு சிரிச்சேன்… “என்று விட்டு ,”அப்பா உங்களை விட்டு எல்லாம் போக மாட்டார் உங்க கூடத் தான் உங்களுக்குத் துணையாக இருக்கார் சரியா… உங்க கல்யாணம் தான் அவருடைய சந்தோஷம், ஸோ கல்யாணம் பண்ணிக்கலாமா ?”என்று கேட்டதும் ,”சரி” என்று நிறைவாகச் சம்மதித்தான்.
மணமேடையில் இருவரும் அமர வைக்கப்பட, புரோகிதர் மாங்கல்யத்தை எடுத்து கொடுக்க ஜீவன் கையில் வாங்கியவன் நிமிர்ந்து பார்த்தான்.
எதிரே ராமமூர்த்தி நின்று அட்சதைப் போட்டு ஆசிர்வதிப்பது போலிருந்தது அவனுக்கு. மகிழ்ச்சியாக, தேவான்ஷியின் கழுத்தில் கட்டிட ,கெட்டி மேளம் முழங்கியது.
வேதாந்த் ,அனுகீர்த்திகா இருவரும் இணைந்து நின்று அட்சதை தூவ ,வேதாந்த் நிம்மதியுடன் பார்க்க, அனு அவன் காதோரத்தில் “ஐலவ்யூ சைனாபீஸ். நாம நாளைக்குச் செகண்ட் ஹனிமூன் போகலாம் “என்றாள் புன்னகையுடன்
அதிர்ந்து அவளைப் பார்த்தவன் ,”காதலை சொல்ற நேரமாடி இது…!!” என்று சலித்துக் கொண்டவன் ,”நைட்டே கிளம்பிடலாம் ஓபன் டிக்கெட் வச்சிருக்கேன் கன்ஃபார்ம் பண்ணிடுறேன் “என்று சிரித்தான் வேதா.
“அடப்பாவி “என்றவளோ அவனின் புன்னகையில் மட்டுமல்லாது வாழ்விலும் அவனது சரி பாதியாகக் காதலைக் கூறி இணைந்து விட்டாள் அனுகீர்த்திகா.
அன்றே சென்னை திரும்பினர் அனைவரும்.
ஜீவன் தன் அறையில் அமர்ந்து இருக்க, தேவான்ஷி எத்தனையோ முறை ஜீவனது அறையில் உலாவி இருந்தாலும் ,இன்று ஏனோ புதிதாகத் தயக்கமும் ,நாணமும் போட்டிப் போட்டுக் கொண்டு ஒட்டிக் கொண்டது.
“அக்கா இப்படியே நின்னா அவர் நீ சாண்டிலியரில் தொங்குறியோனு நினைச்சுக்கப் போறார் உள்ளே போ அக்கா” என்று உள்ளே அனுப்பி வைத்தாள்.
“ஆவிப் பொண்ணே வெட்கமா…!! அங்கேயே நிற்கிற… வா உள்ளே…” என்று சாதாரணமாக ஜீவன் அழைத்துச் செல்ல, தேவான்ஷிக்கு தான் இதயம் வெளியே வந்து விழுந்து விடும் போலிருந்தது.
அவளை அமர வைத்து விட்டுக் கை கட்டியபடி பார்த்துக் கொண்டிருக்க, எதுவும் சத்தம் வராமல் இருக்கவும் நிமிர்ந்து பார்த்தாள்.
ஜீவன் சிரிப்புடன்,” என்ன ஆச்சு ?, ஆவிப் பொண்ணுக்கு நல்லா தானே இருந்த… !!மேரேஜ் ஆகவும் நீ சரியில்லையே …!!”என்றான்.
“கிண்டல் பண்ணாதீங்க எனக்கே வெட்கமா இருக்கு நீங்க வேற ..?”என்று சிணுங்கியவளை முத்தமிட இனிமையான இல்லறம் அங்கே துவங்கி இருந்தது.
….. தொடரும்.