பகுதி -28
முத்தரசனின் வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்க அவர்களுக்குத் துரிதமாக உடனே தண்டனை வழங்கி சிறையில் அடைத்திருந்தனர். சிறையில் அடைத்த மறு நாளே ஜாமீன் எடுக்கவும் ஆட்கள் வந்து விட்டிருந்தனர்.
என்ன சார் அவன் எத்தனை பேரை ஏமாற்றிச் சம்பாதித்து அப்பாவிப் பெண்களின் வாழ்க்கையைக் கெடுத்து இருக்கான் … இதை எல்லாம் பார்க்காமல் உடனே ஜாமீன் எடுக்க வர்றாங்க, கஷ்டம் எல்லாம் அவங்களுக்கு வந்தா தான் அதோட வீரியம் புரியுமா… இல்லை நிஜமாகவே அந்த முத்தரசன் தப்பு பண்ணி இருக்க மாட்டான்னு நினைக்கிறாங்களா எனக்குப் புரியலை சார்.. ” சந்துருவால் ஏமாற்றத்தை தாங்க இயலவில்லை.
ஏனெனில் அத்தனை கஷ்டத்தை அனுபவித்து இருக்கிறான் இந்த வழக்கிற்காக… அவனது முயற்சி அனைத்தும் இப்போது ஒரு நொடியில் வீணாவதை அவன் விரும்பவில்லை. அதனாலேயே இயலாமையால் புலம்பித் தள்ளினான்.
ஜீவன் புன்னகை முகத்துடன்,” சந்துரு உழைப்பும் முயற்சியும் எப்போதும் வீணாகக் கூடாது உழைப்பிற்கு ஏத்த பலனை நாம அடையுறோம் சரியா !!”என்றான் சூசகமாக .
“சார்…!!” என்று விழி விரித்த சந்துருவை ஜீவன் தோளில் தட்டி விட்டு,” வாடா அவனைச் சும்மா விட்டுட்டு வர்றதுக்கா இவ்வளவு கஷ்டப்பட்டோம்” என்றபடி அலுவலகத்திற்குள் சென்றான்.
அதற்குள் ஊடகங்களின் மூலமாக ஜீவனின் குடும்பத்திற்கு விஷயம் தெரிந்து விட்டிருந்தது.
“டேய் என்னடா நடக்குது அங்க? இதுக்கா இவ்வளவு கஷ்டப்பட்ட ? நான் வரேன் ஜேபி அவனுகளைக் கொன்னுடலாம்…”வேதா துள்ளினான்.
“கொன்னுட்டு?” என்று இறுக்கமாகக் கேட்டான் ஜீவன்.
“ப்ப்ச் அசால்டா பேசாத டா…!! அவனைப் பிடிக்க நீ உன்னையே மாத்திட்டு இருந்திருக்க… அனு இப்போ கூட அவ பேரண்ட்ஸ் நினைச்சு அழறா டா…!! அவங்க செய்த துரோகத்தை ஏத்துக்க முடியாம எவ்வளவு தவிக்கிறா தெரியுமா …?” வேதாவாலும் அவர்கள் விடுதலை பெற்றதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
“டேய் !அமைதியாக இருடா ஏன் டென்ஷன் ஆகற… ? இதுக்கே இவ்வளவு கோவப்படுறியே அவனுக வெளியே வந்ததும் தேடுற முதல் ஆள் நான் தான் தெரியுமா… ? ஆனால் என் நிழலைக் கூட எதுவும் செய்ய முடியாது அவங்களால ஏதாவது பண்ணா உடனே போலீஸ் அரெஸ்ட் பண்ணிடுவாங்க… அவங்க என்னை ஏதாவது செய்ய நினைத்தாலும் சரி இல்ல வெளியாட்களால் ஏதாவது பிரச்சினை வந்தாலும் சரி அவங்களைத் தான் பிடிப்பாங்க… ஃபுல் செக்யூரிட்டி இருக்கு எனக்கு நீ விடு டா நான் பார்த்துக்கிறேன்” என்று வேதாவை சமாதானம் செய்து விட்டான்.
இரண்டு நாட்கள் கழித்து, முத்தரசன் அமைதி வேண்டி காசி சென்று இருப்பதாகத் தகவல் கிடைத்தது.
அவருடைய குற்றங்கள் சரிவர நிரூபிக்கப்படாததால் வெளியே வந்து விட்டார் என்ற தகவல் கிடைத்து இருந்தது ஜீவப்ரியனுக்கு. ஆனால் பரந்தாமன் அளவுக்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருப்பதாகவும் ,செல்லாத நோட்டுக்களை வைத்திருந்த குற்றத்திற்காகவும் ஜாமீன் மறுக்கப்பட்டு இருந்தது. அவரைப் புழல் சிறையில் அடைத்து இருந்தனர். அவருக்கு உடந்தையாக இருந்ததாக இளங்கோவனையும் சிறையில் அடைத்து இருந்தனர். விஜயா, வனஜா இருவரையும் மகளிர் சிறையில் அடைத்திருக்க, மன அழுத்தம் தாளாமல் விஜயா தற்கொலை செய்து கொண்டார். வனஜாவோ ,’யாரைப் பிடித்து வெளியே வரலாம் ?’என்று யோசித்து ஒரு வழியாகத் தனது கணக்கில் இருந்த பணத்தைக் கொண்டு ஜாமீனில் வெளியே வந்திருந்தார். அங்கே இளங்கோவனும் சிறையில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.
“வேதா அனுவை அழைச்சுட்டு கிளம்பி வாடா!!”
“என்ன ஆச்சு ஜேபி… ?ஏன் திடீர் னு… ?நாங்க இன்னைக்கு ரிட்டர்ன் ஆகறதா தான் டா டிக்கெட் கன்ஃபார்ம் பண்ணோம். ஆனா நீ ஏன் திடீரென வரச் சொல்ற ?” வேதா புரியாமல் கேட்டான்.
“அவங்க அம்மா இறந்துட்டாங்க… மார்ச்சுவரியில் இருக்கு பாடி இன்னும் தேவான்ஷிக்கு சொல்லலை இறுதிச் சடங்கு செய்தாகணுமே…? “என்றான் ஜீவன்.
“எப்படி டா செய்வாங்களா…??” வேதாவிற்குத் தயக்கமாக இருந்தது.
“தெரியலை கேட்கிறேன்” என்று ஜீவன் சொல்லவும், வேறெதுவும் கூறிடாமல் அமைதி காத்தான் வேதா.
“நீ அனுவை கன்வின்ஸ் பண்ணுடா நான் தேவ் கிட்ட பேசுறேன்… அத்தை வரும் போதே நீங்களும் வந்திடுங்க “என்றான்.
“சரி டா “என்று இணைப்பைத் துண்டிக்கத் தேவான்ஷி காஃபியுடன் அறைக்குள் வந்தாள்.
“தாங்க் யூ தேவ்… இங்கே உட்கார் ஒரு விஷயம் பேசணும் …!!”என்று பீடிகை போட ,”என்ன விஷயம் ஜீவ்…?” என்றதும் பெருமூச்சுடன் பேசத் துவங்கினான்.
“தேவ் உன் அம்மா … காலையில் இறந்துட்டாங்க… அவங்க இறுதி சடங்கு செய்ய!! “எனும் போதே கண்ணீர் வழிந்தது அவளுக்கு.
“தேவ் ப்ளீஸ் அழாதம்மா… ” அவளது அழுகை தாங்க முடியாமல் ஆறுதல் கூறினான் ஜேபி.
மூக்கை உறிஞ்சிக் கொண்டவளோ “நான் காரியம் பண்றேன் ஜீவா…என்ன இருந்தாலும் அவங்க தானே என் அம்மா… எங்களைப் பிள்ளையா நினைச்சாங்களாத் தெரியாது. ஆனால் நான் அவங்களை அம்மா அப்பாவா நினைக்கிறேன் நினைப்பேன்… நரபலி கொடுக்கணும் னு வேற யாரையும் தேடாமல் எங்களைத் தானே தேர்ந்தெடுத்தாங்க அதுக்காகவாவது எங்களைப் பிள்ளையா நினைச்சிருக்காங்கனு நினைச்சுக்கிறேன். நான் செய்றேன் ஜீவா… அடுத்தப் பிறவி னு ஒண்ணு இருந்தா அதிலாவது நல்ல அம்மா, அப்பாவா இருக்கட்டும்” என்றாள் இறுகிய குரலில்.
ஜீவன் அவளை அணைத்துக் கொண்டே “உன்னைப் போல ஒரு பெண்ணோடு வாழ அவங்களுக்குக் கொடுத்து வைக்கலை மா… நீ விடு சரி கிளம்பலாம் வேதாவை அனு கிட்ட பேச சொல்லி இருக்கேன் அவன் வந்ததும் செய்வோம்… “என்றான்.
வேதாந்த் அனுவுடன், வந்து விட, நேரே மின் மயானத்திற்குத் தான் அழைத்துச் சென்றான் ஜீவன் .
தேவான்ஷி இறுக்கமாக விஜயாவின் இறுதிச் சடங்குகளை எடுத்து செய்தாள். இளங்கோவனைச் சிறப்பு அனுமதி வாங்கி அழைத்து வந்தான் ஜீவன்.
பெரிதாக யாருக்கும் சொல்லவில்லை… எளிமையாகச் சடங்கை முடித்து விட்டு அந்த மின்சார எரியூட்டியில் விஜயாவின் உடலை வைத்துக் கற்பூரத்தை ஏற்றி தள்ளி விட்டனர். தேவா அனு இருவரும் தான் முன்னின்று செய்தனர். இளங்கோவன் மனைவியின் உடலைக் கண்டு கண்ணீருடன் நிற்க அவருக்கு ஆறுதல் கூடச் சொல்லாமல் இறுதிச் சடங்கை முடித்து விட்டு கிளம்பினர் சகோதரிகள் இருவரும். தேவாவிடம் பேச எத்தனித்தவரை புறந்தள்ளி விட்டு விலகி விட்டாள் .
“இறுதிச் சடங்கு செய்வது எங்க கடமை. செய்துட்டோம்… நாளைக்கு உங்களுக்கும் நாங்க உயிரோடு இருந்தால் நிச்சயம் செய்வோம் அதற்காக உங்களை மன்னித்து விட்டதாக அர்த்தம் இல்லை… “என்று அனு கூறி விட்டு தன் சகோதரியுடன் கிளம்பி விட்டாள்.
“சாரி மிஸ்டர். இளங்கோவன்… இது நீங்களாகத் தேடிக் கொண்டது, அருமையான இரு வைரத்தை உங்களுடைய பேராசையால் இழந்துட்டிங்க… அவங்க போனது ஒரு வழிப் பாதை திரும்பி வர வாய்ப்பு இல்லை… இப்போது வரைக்கும் உங்களுக்குப் பிறந்ததற்காக அவங்க கடமையைச் சரியாகத் தான் செய்திருக்காங்க ஆனால் நீங்க… “என்ற கேள்வியுடன் நிறுத்தி விட்டு அவரை மீண்டும் சிறையில் அடைத்து விட்டு கிளம்பினான்.
இளங்கோவன் எதுவும் பேசிடவில்லை. அவர் தான் பேசுகின்ற வாய்ப்பை என்று இழந்து விட்டாரே…!!
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
நர்த்தனாவிடம் ,ரமேஷ் பேசுவதில்லை ஆனால் கணவன் என்ற கடமையைச் சரிவரச் செய்து வந்தான்.
நர்த்தனா தன் இயல்பை விட்டு அமைதியாகவே இருந்தாள். கதிர்வேலனின் தந்தை மட்டும் அவளிடம் பேசினார். அவ்வபோது மணிமேகலையும் பேசி அவளை இயல்பாக்கி இருந்தார்.
மணிமேகலை கதிர்வேலனுடன் உள்ளே வர , காஃபி அவர்களுக்கு முன்னால் வந்து விட்டது. நர்த்தனா தான் எடுத்து வந்திருந்தாள்.
“என்ன நரு எப்படி இருக்க…?, உடம்பு பரவாயில்லையா…? ” புன்னகையுடன் பேசியபடி காபியை வாங்கிக் கொண்டார் மேகா.
“நல்லா இருக்கேன் அக்கா” என்றதும் கதிர் ஆச்சரியத்துடன் நர்த்தனாவை பார்த்து விட்டு அறைக்குச் செல்ல, மேகா சிரித்துக் கொண்டே “அவருக்கு ஆச்சரியம். வேற ஒண்ணும் இல்ல அஸ்வின் எங்கே… ? காபி ரொம்ப நல்லா இருக்கு… ரமேஷ் ஆபிஸ் முடிச்சு வந்தாச்சா… ?” இயல்பாகப் பேசிட , பாவம் நர்த்தனாவிற்குத் தான் அவஸ்தையாக இருந்தது.
தயங்கி தயங்கி ,”அக்கா நீங்க மட்டும் எப்படி இயல்பா பேசுறீங்க… ? நான் எவ்வளவு கொடுமை செய்துட்டேன் உங்களுக்கு ஆனாலும் என்னை மன்னிக்கத் தோணி இருக்கு .நீங்க என்னைப் பனிஷ் பண்ணி இருந்தா கூட இவ்வளவு சங்கடமா இருந்திருக்காது க்கா” என்றாள் சங்கடமாக
மேகாவோ, “ப்ப்ச் விடு நான் அதை எல்லாம் மறந்து விட்டேன் ஆனாலும் உனக்கு ஒரு பனிஷ்மென்ட் இருக்கு…” என்றார் புன்னகையுடன்
நர்த்தனாவோ, “குடுங்கக்கா நிச்சயம் ஏத்துக்கிறேன்…” என்றாள் வேகமாக
மேகா சிரித்துக் கொண்டே, “எதுவுமில்லை இனிமேல் என் குழந்தையை வளர்க்கும் பொறுப்பு உன்னுடையது தான் நீ தான் வளர்க்கணும் என்ன செய்வியா… ?” என்று கேட்கவும் நர்த்தனா அழுதிருந்தாள்.
“நான்.. நானா… நான் தானே உங்க குழந்தை “என்றவளால் அடுத்த வார்த்தை பேச இயலவில்லை.. கதறி அழுதிருந்தாள்.
“ப்ப்ச் நீயே தான், நிச்சயம் நீ தான் வளர்க்குற “என்று கட்டளை போலக் கூறி விட்டு கிசுகிசுப்பாக,” இன்னும் அவர் கிட்ட கூடச் சொல்லலை நான் போய்ச் சொல்றேன் நீ போய் வேலை இருந்தா பாரு ” என நர்த்தனாவின் கன்னத்தைத் தட்டி விட்டு அறைக்குள் சென்ற மேகா அடுத்த நொடி கதிரின் கைகளில் இருந்தார்.
மேகா பதறிப்போய் “கதிர் என்ன இது விடுங்க… டீலருக்கு என்ன அவசரமாம் ??”சலுகையாய் நெஞ்சில் சாய்ந்தபடி கேட்க
“டீலிங்கிற்குத் தான் இந்த அவசரம்… என் கிட்ட சொல்லவே இல்லை நீ… ராஸ்கல்.. ” மனைவியைச் செல்லமாகக் கடிந்து கொண்டார்.
“ம்ம்ம்ஹ்ம் ஒட்டுக் கேட்டீங்களா…! உங்களை “என்று விட்டு,” அவ ஃபீல் பண்ணா, அதான் சொன்னேன் பட் இதில் ஒரு சுயநலமும் இருக்கு…”என்று பீடிகை போட்டார் மேகா.
“அப்படி என்ன சுயநலம்… ?”புரியாது கேட்ட கதிரிடம் ,முகத்தைச் சற்று இயல்பாய் வைத்தபடி ,” இந்தக் குழந்தை வரக் கூடாது ன்னு தானே அவ அவ்வளவும் செய்தாள் அதை மீறி எங்களுக்கும் குழந்தை வரப் போகுதுனு சொல்ல மனசு துடிச்சது. அதைச் சொல்லிட்டேன் “என்றதும் ,”மேகா “என்று அதிர்ந்து விட்டார் கதிர்வேலன்.
‘ஒரு வேளை இவளும் பழி வாங்க எண்ணுகிறாளோ !! ‘என்ற பயம் வந்தது அவருக்கு.
“ப்ப்ச்! கதிர் தப்பா எதுவும் இல்லை நானும் சராசரி மனுசி தானே அவ செய்தது என் மனசுக்குள் அரிச்சுட்டு தான் இருந்தது. அந்த ஆதங்கத்தை இப்படித் தீர்த்துட்டேன் நிஜமா அவ மேல கோபம் இல்லை… “என்றார் மேகா.
“இல்லம்மா ஒருத்தங்க செய்த தவறுக்கு பழி வாங்கணும் னு என்று கிளம்பிட்டா இது பூமியா இருக்காதே… நல்லவர்கள் இப்படி மன்னித்து விடுவதால் தான் மனித இனம் இன்னும் வாழ்கிறது… நாம நல்லவங்களா இருந்து விடலாமே அது தான் வேற ஒண்ணும் இல்லை “என்றார் கதிரும்.
“சரி சரி இந்தப் பேச்சு வேண்டாம்…என்னை பத்திரமாகப் பார்த்துக்கங்க … “என்று சிரித்திட ,அவரோ “அதை நீ சொல்லவே வேண்டாம் இனிமேல் உன்னைக் கவனிப்பது தான் என் வேலையே…!!”என்று நெற்றியில் இதழ் பதித்துத் “தாங்க் யூ ஃபார் எவ்ரிதிங்… ஒரு பிரம்மச்சாரியை சம்சாரியா மாத்தி வைத்ததற்கு…” என்றார்.
மேகா “யூ ஆர் வெல்கம் டீலரே !!”என்று சிரிக்க, கதிரும் புன்னகைத்தார்.
தம்பதியின் புன்னகையில் அறை காதலில் நிரம்பியது.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
இங்கே வேதாந்தும் அனுவும் ஜீவனைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி கொண்டிருந்தனர்.
“டேய் அப்போ தான் பொண்ணு கிடைக்கலைனு சொன்ன, இப்போ என்ன டா… ?” வேதாந்த் சத்தமிட்டான்.
“நான் பண்ணிக்கிறேன் டா ஆனா எனக்கு ஒரு வேலை பாக்கி இருக்கிறது அதை முடிச்சுட்டுப் பண்ணிக்கிறேன் “என்றான்.
“அப்படி என்ன தான் டா வேலை…? எதுவா இருந்தாலும் திருமணத்திற்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்…” என்று தடை போட்டான் வேதா.
“இன்னைக்கு முடிஞ்சிடும் டா, நீ ஏற்பாடு செய். நான் போயிட்டு ரெண்டு நாளில் வந்திடுறேன்” என்று வேதாவின் பதிலைக் கூட எதிர்பாராமல் கிளம்பி விட்டான் ஜீவன். சட்டெனத் திரும்பியவன் ,”தேவா நீயும் கிளம்பு… !!”என்று சொல்ல அவளும் மறுப்பேதும் சொல்லாமல் கிளம்பி விட்டாள்.
இருவரும் பயணித்துச் சென்ற இடம்… கொடைக்கானலில் உள்ள ஒரு தோட்டம்…
மிகவும் அமைதியாக எங்கும் பசுமையாக இருந்தது அத்தோட்டம். காவலாளிகள் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கத் தேவாவை அங்கேயே இருக்கும்படி கூறி விட்டு சந்துருவிற்கு அழைத்தான்.
“சந்துரு என்ன ஆச்சு ? நான் வந்து விட்டேன்…”ஜீவனின் பேச்சில் அவசரம் தெரிந்தது.
“சார் **** காட்டுப் பக்கம் வந்திடுங்க…”என்றான் சந்துரு.
“இதோ வந்து விட்டோம் “என்று கிளம்பி சென்றனர்.
அங்கே முத்தரசனும் வனஜாவும் கட்டி வைக்கப்பட்டிருந்தனர்.
“டேய் எங்களை ஏன் டா பிடிச்சு வச்சிருக்க…?, எங்களைக் கொல்லப் போறியா… !!”காச் மூச்சென்று கத்தினார் வனஜா.
முத்தரசன் வழக்கம் போல மந்திரங்களை உச்சரித்தபடி அமர்ந்திருக்கத் தேவாவைப் பார்த்தான் ஜேபி.
“தேவ் அவனுக்கு என்ன தண்டனைத் தர நினைக்கிறியோ அதைக் கொடு… இங்கே எந்தச் சட்டமும் நீதியும் உன்னை எதுவும் செய்யாது… ” என்றான் அழுத்தந்திருத்தமாக
“வேண்டாம் ஜீவன் இதனுடைய பின் விளைவுகள் அதிகம் இருக்கும் நீ யார் மேலக் கை வைக்கிற தெரியுமா …?”என்று அலறிய முத்தரசனை, பளாரென்று அறைந்தான் சந்துரு.
“நீ யாரா வேணுன்னாலும் இருந்துட்டுப் போ, அதைப்பற்றி ஒரு துளி கூட எனக்குக் கவலை இல்லை.. எத்தனை பேர் வாழ்க்கையை அழிச்சிருப்ப ,எத்தனை கன்னிப் பெண்களை நரகத்தில் தள்ளி இருப்ப… அதற்கான தண்டனை உனக்கு வேண்டாம் அது தான் பாதிக்கப்பட்ட ஒரு பெண் கையாலேயே தரப் போறோம்.. தேவ் ஸ்டார்ட் பண்ணு” என்று விட்டு வனஜா இருந்த இடத்திற்குச் சென்றான் ஜீவன் .
…. தொடரும்.
நல்லா ஹெவியா பனிஷ் கொடுங்க😅😅😅😅😅