விழி தன் தந்தையின் மரணத்தைப் பயன்படுத்திக் கொண்டதாக ஜீவனை அடித்து விட்டாள்.
ஜீவன் ,”தவறு செய்து விட்டேன் “என்று மன்னிப்பு கேட்டு விட்டு அறைக்குள் சென்று விட்டான்.
“விழி உனக்கென்ன பைத்தியமா?, ஏன் அவரை அடிச்ச…?, அவருக்கு மட்டும் ஆசையா உங்க அப்பா இறந்ததை வச்சு இந்தப் பிரச்சினையை முடிக்க வேண்டும் என்று… !! வேறு வழியின்றி இதைப் பண்ணி இருப்பார் மா “என்று கடிந்து கொண்டான் அவளது கணவன் விஷ்ணு.
அறையிலிருந்து வெளியே வந்த தேவான்ஷி அமைதியாக, ” விழி உங்களுடைய வேதனை புரியுது . இருந்தாலும் அவர் செய்த இந்த விஷயத்தில் எத்தனை பொண்ணுங்க காப்பாற்றப்பட்டிருக்காங்கனு தெரியுமா… கிட்டதட்ட ஒரு சிங்கத்தோட குகையில் இரையா இருந்து சிங்கத்தையே கொல்லுற அளவுக்குப் போறதுக்கு எல்லாம் ஒரு துணிச்சல் வேணும். அன்னைக்கு என்னை நரபலி கொடுப்பதற்காகப் படுக்க வைத்திருந்தாங்க… சந்துரு வேண்டுமென்றே மயக்க மருந்து கம்மியா கொடுத்து எனக்குத் தப்பிக்க வழியும் செய்து இருக்கார். இதை அன்று அவர் செய்யலைனா இப்போ நான் எங்கே இருந்திருப்பேன் தெரியுமா…? , விபச்சார விடுதியில் இருந்து இருப்பேன். அங்க மொத்தம் இருபத்தி நாலு பொண்ணுங்க இருந்திருக்காங்க அத்தனை பேரையும் ஒவ்வொரு ஆளா வரச் சொல்லி ரிலிஸ் பண்ணி இருக்காங்க. கிட்டத்தட்ட ஐநூறு கோடி ரூபாய் காப்பாத்தப்பட்டிருக்கு இரண்டு பொம்பளை புரோக்கர் மாட்டி இருக்காங்க அதுல ஒருத்தன் செத்துட்டான், அது மட்டுமில்லாமல் மக்கள் மனதில் இருந்த மூடநம்பிக்கைகளைக் கொஞ்சமாவது அழிக்க முயற்சி பண்ணி இருக்காங்க… இத்தனை விஷயமும் இவருடைய பொறுமையாலையும் புத்திசாலித்தனத்தாலயும் தான் நடந்திருக்கு” என்று தன்னவனுக்காகப் பரிந்து பேசினாள் தேவான்ஷி.
விழி அமைதியாக இருக்க ,வேறெதுவும் பேசாமல் ஜீவனைத் தேடிச் சென்றாள் தேவா.
தன் தந்தையின் புகைப்படத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் ஜீவன்.
“ஜீவ்… அவ ஏதோ தெரியாமல் பேசிட்டா…!!” எனச் சமாதானம் செய்ய முயன்றவளை , தன்னருகில் அமர வைத்து,” உன் மடியில் படுக்கவா தேவ்…!!” என்றான் அமைதியாக.
முத்தரசனை கைது செய்யும் போதிருந்த கம்பீரம் இப்போது அவனிடத்தில் இல்லை… விழிகள் எதையோ அவளுக்கு உணர்த்த முயன்றன. அவனுக்கான அமைதியை அவள் மடியில் தேடினான்.
“இதென்ன கேள்வி ?, வாங்க …!!”என்றபடி மடியில் தலை வைக்க இடம் கொடுத்தாள்.
இடையோடு அணைத்தபடி படுத்திருந்தவனோ அப்படியே உறங்கியும் போனான்.
மாலை மயங்கி இரவு பூமியில் ஜனித்திருந்தது. நிலாப் பெண்ணவள் தன் ஒளியால் இருளை அகற்ற முயன்று முடியாமல் மேகங்களின் கூட்டத்திற்குள் மறைந்து மறைந்து நகர்ந்து கொண்டிருந்தாள்.
சட்டென்று கண் விழித்தவன் நிமிர்ந்திட இன்னும் நாயகியின் மடியிலேயே கிடக்கின்ற உணர்வு வந்து உடனேயே எழுந்து கொண்டான்.
“ஸ்ஸ்ஸ் தேவ் இப்படியேவா இருந்த ? எழுப்பி இருக்கலாம் இல்ல… சாரி ரொம்ப நாள் கழிச்சு நல்ல தூக்கம்” என்று கண்ணைக் கசக்கி அவளது தோளிலேயே சாய்ந்து கொண்டான்.
“பரவாயில்லை… இத்தனை நாளும் அந்தச் சாமியார் நடுராத்திரியில் பூஜை செய்யச் சொன்னான்னு கண் முழிச்சுட்டே இருந்திருப்பீங்க !!”என்று கிண்டல் செய்தாள்.
“ப்ப்ச் வேறென்ன செய்யச் சொல்ற? , அவனை நம்ப வைக்க அவ்வளவு பண்ண வேண்டி இருந்தது. அந்த நாய் எனக்கு ஸ்பை எல்லாம் வச்சு வேவு பார்த்தான் . ஒரு கட்டத்தில் எனக்கே பயம் வந்திடுச்சு , எங்கே நான் நிஜமான சாமியார் மாதிரி மாறிட்டேனோன்னு… !! இதெல்லாம் பரவாயில்லை சந்துரு ரொம்பப் பாவம்… நல்லா தூங்கிட்டு இருப்பானாம், திடீர் னு அந்த ஆள் கத்துவானாம்… என்னடா னு பார்த்தா யாகம் பண்றேன் ரத்தக் காட்டேரி பேய் ஓட்டுறேன் னு சொல்லி மந்திரம் பண்ணிட்டு இருப்பானாம்… அதனாலேயே சந்துருவிற்கு முத்தரசன் மேல செம கடுப்பு… நேத்து அடி பிரிச்சு எடுத்துட்டான் எல்லாம் ஊமைக் குத்து தான்… வெளியே யார் கிட்டயாவது சொன்னா சாப்பாட்டுல விஷம் வச்சிருவேன் னு மிரட்டிட்டு வந்தான். பாவம் கிட்டதட்ட ரெண்டு வருஷம் கழிச்சு அவன் ஃபேமிலி கூடச் சேர்ந்து இருக்கான் தெரியுமா…?, ரொம்ப ரிஸ்க் எடுத்து இதைப் பண்ணி இருக்கிறான்” என்று சந்துருவை பெருமையாகப் பேசினான் ஜீவா.
“ம்ம்ம்ஹ்ம்… உண்மை தான்… சரி பசிக்குது “என்றதும் தான் உணர்ந்தான் இன்னும் சாப்பிடவில்லை என்று.
“அச்சோ ! சாரி மா… சரி வா சாப்பிடலாம்… !!”என்று எழுப்ப அவளோ அப்படியே அமர்ந்திருந்தாள்.
“ஹேய் என்ன ஆச்சு… ?”
“கால் மரத்துப் போச்சு இதுக்கு மேல எழுந்துக்க முடியாது… ” என்றாள்.
“அச்சோ! மறுபடியும் சாரி மா… சரி வா தூக்கிட்டு போறேன் “எனத் தூக்க முயல, விழி கதவைத் தட்டினாள்.
“இதோ வரேன் “எனக் கதவைத் திறந்தவன் விழியைக் கண்டதும் தலையைக் குனிந்து கொள்ள , அவளோ “அண்ணா சாரி கோவத்தில் அடிச்சுட்டேன். “என்று மன்னிப்பு கேட்க புன்னகையுடன் “விடும்மா உன் கோபம் நியாயமானது தான்” என்றான் ஜீவன்.
“ஹலோ மன்னிப்பு எல்லாம் அப்புறம் கேளுங்க, எனக்கு இப்போ பசிக்குது சாப்பிடனும் சாப்பாடு வருமா? வராதா ? “எனத் தேவா சத்தமிட, ஜீவன் சிரித்தபடியே, ” நீ தான் ஆவியாச்சே…! எங்கே இங்கிருந்தே சாப்பாட்டை வர வை பார்க்கலாம் “என்று கிண்டல் செய்தான்.
“உங்களை, எவ்வளவு நக்கல் உங்களுக்கு…? ” என்று எழுந்து ஓடி வர முயற்சிக்க, கால்கள் மரத்துப் போனதால் எழவே முடியவில்லை அவளால்.
ஜீவன் சிரிப்புடன் ,”ஏன் உனக்கு…? விழி சாப்பிட என்ன இருக்கிறது ?,எடுத்து வர்றியா இங்கே உங்க அண்ணி ஸ்டாட்சு (statue) ஆகிட்டா…!!” என்றான்.
“அண்ணா நீங்க இருக்கீங்களே…!! அவங்களை ஏன் வம்பு பண்றீங்க ?”என்று கூறி விட்டு இருவருக்குமான இரவு உணவை கொண்டு வந்து கொடுத்து விட்டு சென்றாள் விழி.
” தேவான்ஷி ஜீவனுக்கு ஊட்டி விட அவனோ அன்று அவள் கேட்ட கேள்வியைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
“என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறிங்களா ஆவி மேடம்… ??”
“ஆவி எல்லாம் கல்யாணம் பண்ணிக்காது …” நமட்டு சிரிப்புடன் பதில் கூறினாள்
“ஏன்… ப்ப்ச் இதுக்கு மேல எனக்கு யார் பொண்ணு கொடுப்பா …?, இப்படி யார் ஊட்டி விடுவா …? தூங்க வைப்பா… ? வேணுன்னா நீ கேட்ட எல்இடி டிவி வாங்கி வைக்கவா… !!” நக்கலடித்துக் கொண்டே இருந்தான் அவளை.
“இப்படியே கிண்டல் பண்ணீங்க நிஜமாகவே எங்கிருந்தாவது ஒரிஜினல் சாமியாரைப் பிடிச்சு ஆவியைக் கொண்டு வரச் சொல்லி உங்களுக்குக் கல்யாணம் பண்ணி வச்சிடுவேன் ” என விரல் நீட்டி மிரட்டிட ,அவளது விரலைப் பிடித்து ஆட்டியபடி பேசினான்.
“ஹ்ஹாஹா…. வேண்டாம் தாயே ஒரு ஆவி படுத்தின பாடே போதும் எனக்கு… நீ ஆவி தானா னு கண்டு பிடிக்கவே ஆறு மாதம் ஆகிடுச்சு எனக்கு…!! இதுல அந்த முத்தரசன் ஒரிஜினல் சாமியாரா இருப்பானோன்னு டவுட் எல்லாம் வந்தது எனக்கு. அடிக்கடி சந்துரு கிட்ட தான் சந்தேகமே தீர்த்துப்பேன் “என்றான் ஜீவன்.
“ஏன் ஜீவ் நீங்க ஒரு போலீஸ் . அப்படி இருந்துமா இதெல்லாம் நம்புனீங்க …?” சந்தேகமாய்க் கேட்டாள்.
“என்னம்மா பண்றது… நீ பர்ஃபார்மன்ஸ் பண்ணும் போதெல்லாம் இந்த வேதா வேற உனக்குத் தகுந்த மாதிரியே பேசி நடிச்சுட்டான், அன்னைக்குச் செண்பாக்கா கூட அவ்வளவு இயல்பா நடிச்சு ஏமாத்திட்டாங்க. அதான் ஒரு கட்டத்தில் எனக்கே சந்தேகம் வந்து விட்டது நீ ஆவியா இருப்பியோன்னு ” ஹாஷ்யமாகச் சிரித்தான்.
“சரி எல்லாம் விடுங்க , அவங்க கிட்ட வாக்குமூலம் வாங்கியாச்சா என்ன சொன்னாங்க , நீங்க தான் ஒரு மூணு நாளா… தலைப்பு செய்தியே தெரியுமா ?” எனக் கேட்டாள்.
“அவங்களைப் விசாரித்து ரிப்போர்ட் வாங்கிச் சப்மிட் பண்ணிட்டோம் … தலைப்புச் செய்தியாக வந்து என்ன செய்வது ? , மக்கள் இன்னும் இந்த மாதிரி போலிச் சாமியாரை நம்பிட்டு தானே இருக்காங்க, அதிர்ஷ்டம் இந்த மாதிரி சாமியார் கொடுக்கிற கல்லிலோ, விபூதியிலோ, இல்லை பரிகாரத்திலோ இல்லை, நம்ம உழைப்புல தான் இருக்கு ன்னு நம்பனும் .அதை விட்டுட்டு மந்திரம் போட்டு மாங்கா வர வச்சு தருவாங்க னு நம்பினா இப்படித் தான் ஆகும். இருக்கிற வரை ஒரு உறவோட வலிமை தெரிவதில்லை அவங்க போன பிறகு தான் தெரியும் அவங்களோட பாசம், அன்பு ,அக்கறை எல்லாம்..!!. இதோ என்னை மாதிரி… எங்க அப்பா அப்பவே சொன்னார்… நான் இருக்கும் போது தெரியாது டா இல்லாதப்ப தான் என் அருமை புரியும் னு… நல்லா புரிய வச்சுட்டார். பத்து வயது வரை வளர்த்த அம்மாவுக்கு என் மேல அக்கறை இல்லை… நீ எப்படி டா இருக்கனு ஒரு வார்த்தை கேட்டிருந்தால் கூட அவங்களை மன்னிச்சு இருப்பேனோ என்னவோ…? ஆனால் அவங்க கடைசி வரை என்னை எதுவுமே கேட்கலை இப்போதைக்கு இந்தக் கேஸ் ல இருந்து எப்படித் தப்பிக்கலாம் எவ்வளவு பணம் தரட்டும் னு கேட்டாங்க… !! என்னால அங்கே இருக்கவே முடியலை சந்துருவை ரிப்போர்ட் எழுத சொல்லிட்டு வந்துட்டேன்.. ஆனால் என் அப்பா , அத்தை இவங்க எல்லாம் நான் என்ன பண்றேன்னு விசாரிக்காத நாளே இருக்காது… ஒரு குழந்தையைப் பெத்துட்டா மட்டும் நல்ல அம்மா கிடையாது. அவங்களை நல்லா வளர்க்கவும் தெரிந்து இருக்கணும் அது தான் நல்ல அம்மாவுக்கு அடையாளம் “என நீளமாகப் பேசிக் கொண்டே சென்றான் ஜீவன்.
“அடேங்கப்பா போதும் விடுங்க சரி என்ன தண்டனை கிடைக்கும்..?அதைச் சொல்லுங்க “என வினவினாள்.
“ம்ம்ம் இது ஃபோர்ஜரி கேஸ் இதற்குக் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் , அபராதமும் விதிக்கப்படும். போக்சோ சட்டம் 18ஆம் பிரிவின்படி குழந்தைகளிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபட முயன்றால் 1 வருட சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்… இவன் பொண்ணுங்களைக் கடத்தியதால இன்னும் அதிகமாகத் தண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கு “என்றான்.
“எல்லாம் சரி தான் ஆனா தண்டனை கிடைக்குமா…!!!” சந்தேகத்துடன் கேட்டாள்.
“கிடைக்கும் யாரும் வந்து வக்காலத்து வாங்காம இருந்தா நிச்சயம் கிடைக்கும்… அவங்களை அரெஸ்ட் பண்ணி ஒரு மணி நேரத்தில் ஜாமீன் கேட்டு வந்துட்டாங்க தெரியுமா…??” என்று கடுப்பாகப் பேசினான் ஜீவா.
“ஒரு மணி நேரத்திலா…!!” அதிர்வாய்க் கேட்டாள்.
“ம்ம்ம்ஹ்ம் இங்கே இது போல ஃப்ராடுபசங்களுக்குச் சப்போர்ட் பண்ண ஆள் ஜாஸ்தி… ஒருத்தன் கஷ்டப்பட்டு ரிஸ்க் எடுத்து இந்தப் போலிச் சாமியார் , ஃபோர்ஜரி பார்ட்டினு எல்லாத்தையும் பிடிப்பான் ஆனா அவனுக ஏதாவது ஒரு வழியில் தப்பித்து வந்திடுவானுக… ஆனாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும்” என்றவனைச் சமாதானம் செய்தாள் தேவா.
“விடுங்க உங்க கடமையை நீங்க சரியாகச் செய்ங்க அது போதும்…” எனக் கூறிட
“அதைத்தான் செய்யப் போகிறேன் சரி நீ ரெஸ்ட் எடு… நான் போயிட்டு வரேன் முக்கியமான ஒர்க் இருக்கு” என்றவன் கிளம்பி விட, தேவான்ஷி புன்னகையுடன், “எங்கே தண்டனை தரவா?” என்றாள்.
“சில நேரங்களில் சட்டத்தை நாம தான் கையில் எடுக்க வேண்டும் தேவ்… “
“புரியுது அவங்க தப்பு பண்ணாங்க தண்டனை கொடுக்கனும் .எல்லாம் சரி. ஆனால் அவங்க தப்பு பண்றதுக்குக் காரணமா இருந்தவங்க யாரு இந்த மக்கள் தானே அந்தப் போலி சாமியாரை நம்பி ஏமாந்து போனது இவங்க செய்றது தப்பு தானே… அவங்களுக்கு எல்லாம் தண்டனை கொடுக்க முடியுமா… “
“தேவ் இங்கே ஒருத்தனை பார்த்து மற்றவன் பொறாமைப் படுற வரைக்கும் , ஏமாறுதலும் இருக்கும் ,ஏமாற்றுதலும் இருக்கும்… அதைத் தடுக்க எல்லாம் முடியாது ஆனா முன்னெச்சரிக்கை செய்ய முடியும் அவங்களுக்கு ஒரு அவேர்னஸ் தரலாம் நம்புறவங்க தப்பிக்கட்டும். நம்பாதவங்களை நாம எதுவும் செய்ய முடியாது… விதி விட்ட வழி” நெற்றியில் கோடிட்டு காட்டி விட்டு வெளியேறினான்.
நாட்கள் நகர்ந்திட, ஜீவன் கூறியபடியே அவர்களுக்கு நீதி மன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து ஜாமீன் எடுக்கவும் ஆட்கள் வந்து விட்டனர்.
….. தொடரும்
ஜீவ் சொன்னது உண்மை தான் 😊😊😊 இவங்களும் இப்படி மாற இந்த சமூகம் தானே காரணம் எல்லா அம்மா, அப்பாவுக்கும் ஒரு மனுஷனா பார்த்தா தன்னோட சந்தோஷம் தான் முக்கியம் அதான் வனஜா, விஜயா, இளங்கோவன் மாதிரியான ஆளுங்க எல்லாம் தப்உ பண்ணுறாங்க.