பகுதி -23
முத்தரசன் பரந்தாமனிடம் பணத்தைக் கொண்டு வரும்படி பணித்து விட்டு யாகத்தைத் துவங்கினார்.
பரந்தாமனோ யாரையும் நம்பாமல், தானே பணத்தை எடுத்துக் கொண்டு மடத்திற்கு விரைந்தார்.
இளங்கோவன் ,விஜயா தம்பதியர் மடத்திற்கு வந்திருந்தனர். அவர்களும் அதே யாகத்தில் அமர்ந்திருக்க ஜீவன் எல்லாவற்றையும் கவனித்தபடி வந்து ஹோம குண்டத்திற்கு எதிரில் அமர்ந்தான்.
சிவப்பு நிற சாய வேஷ்டியும் , கழுத்தில் ருத்ராட்சம் தொங்க நெற்றி நிறையத் திருநீறு குங்குமத்தில் பட்டையிட்டு, புஜங்களுக்கும் நெஞ்சுக்கும், விபூதி பூசி அமர்ந்திருந்தான். விழிகளும் ரத்தமெனச் சிவந்திருந்தது.
இங்கே நர்த்தனா அரை மயக்கத்தில் இருந்தவளுக்கு யாரோ வயிற்றைக் அமிழ்த்தும் உணர்வு… உணர்ந்தும் பயனில்லை . அவளால் விழிகளைத் திறக்கவே முடியவில்லை கால்களுக்கிடையில் செந்நிற திரவம் வழிந்தோடியது. அவளது குழந்தை பிண்டமெனப் பிரித்தெடுக்கப்பட்டது.
அவளின் வயிற்றில் ஓர் அகல்விளக்கு ஏற்றப்படச் சுற்றி ஏதோ மந்திரங்களை உச்சரித்தபடி சிலர் சுற்றி வந்தனர். கண்களைத் திறக்க முயன்றவளுக்கு ‘ஏதோ தவறு நடக்கிறது’ என்று புலப்பட்டாலும் அதனை எதிர்த்து போராடும் சக்தியற்றவளாய் கிடந்தாள் நர்த்தனா.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
இங்கே ஜீவனின் கண் எதிரில் தீச்சுவாலை தகதகவென்று எரிந்து கொண்டிருந்தது அந்த ஹோம குண்டத்தில்… முத்தரசன் கண்கள் சிவக்க, ஸ்ச்சுரூபத்தில் (எண்ணை ஊற்றும் கரண்டி) நெய்யை விட அந்தத் தீ மேலும் உக்கிரமாக எரிந்தது.
மந்திரங்களை உச்சரித்தவரோ அதில் தானியங்களையும் பூக்களையும் போட்டார். அந்த இடமே புகை மண்டலமாக மாறியது .
ஜீவனுக்கு இருமலைக் கட்டுப்படுத்த முடியவில்லை . உடலில் வியர்வை முத்துக்கள் ஆங்காங்கே வழிந்தது. கந்தரத்தில் ருத்ராட்ஷ மாலை உருள, முத்தரசனையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனுக்குப் பின்னால் ஆணும், பெண்ணுமாக நூறு பேருக்கும் மேற்பட்டோர் அமர்ந்திருந்தனர் எல்லோருக்கும் கண்களில் பக்தியும் ஏக்கமும் ஒரு சேர போட்டி போட்டது.
“எல்லோரும் பக்தியுடன் அந்தக் காளியை வேண்டுங்கள்! இந்தக் குருதி பூஜையில் உங்கள் மனம் கவர்ந்தவர்கள் மீண்டும் உயிர்த்தெழுந்து வருவார்கள் என்று சத்தமிட்டபடி ஓம் காளி ஜெய் காளி!! “என்று மந்திரத்தை உச்சாடனம் செய்தார்.
அரைமணி நேரம் கழிந்த பிறகு , “இதோ ! இதோ!! உங்கள் உறவுகள் எல்லாம் உங்களைத் தேடி வருகின்றனர்… இதோ வந்து விட்டனர்… அங்கே பாருங்கள் .தூய பரிசுத்த ஆவியாக மாறி வருகிறார்கள் அங்கே படுக்க வைக்கப்பட்டு இருக்கும் ஒவ்வொருவரின் உடலிலும் ஆன்மாவாக இறங்கப் போகிறார்கள் அவர்கள் தான் இனி உங்கள் உறவு ஓம் காளி !ஜெய் காளி !! இதோ நிகழ்ந்து விட்டது அந்த அதிசயம் ஒவ்வொருவரும் உயிர்த்தெழுகிறார்கள் உங்கள் உறவுகளாக இனி அவர்கள் உங்கள் வசம் அவர்களைப் பூஜியுங்கள் நீங்கள் இதுவரை அவர்களுக்குச் செய்ய முடியாத விஷயங்களை இனி செய்யுங்கள்” என்று தன் கம்பீர குரலில் அலற, கூட்டமே நெகிழ்ச்சியுடனும் கண்ணீருடனும் ஓடினர் அங்கே.
“ஜீவன் உனது தந்தையின் ஆன்மா அதோ அந்தப் பெண்மணியின் உடலில் இறங்கி விட்டது அது தான் உன் தந்தை “என்று சொல்ல ஜீவன் திடுக்கிட்டான்.
“சாமி ! அது பெண் என் அப்பா ஆம்பளை எப்படி இது சாத்தியம்… ??” என்று கேட்க முத்தரசன் அமைதியாகக் கூறினார்.
“மகனே இங்கிருக்கும் வரை தான் அது உன் தந்தை. இறந்த பிறகு அது வெறும் ஆன்மா மட்டும் தான் அந்த ஆன்மா எவ்வுடலில் பிரவேசிக்க நினைக்கிறதோ அதில் மட்டும் தான் புகும் … உன் தந்தையின் ஆன்மா அவ்வுடலில் தான் இறங்க நினைத்திருக்கிறது” என்றார்.
அந்தப் பெண்மணியோ ஜீவனைக் கண் கலங்கப் பார்த்தார். ஜீவனோ வெறுப்பை உமிழ்ந்தான்.
முத்தரசனிடம் திரும்பியவன்,” அந்தப் பொம்பளை யார் னு தெரியுமா உங்களுக்கு…?” என்று பல்லை கடிக்க, முத்தரசன் புன்னகையுடன்,” உன்னைப் பெற்றவள் ஆன்மீக நாட்டம் அதிகமாகி அன்பனின் சீடரில் ஒருவளாகத் தன்னை மாற்றிக் கொண்டவள், இப்போது உன் தந்தை மீண்டும் வர வேண்டும் என்பதற்காகத் தன் உயிரை நீத்து உன் தந்தையின் ஆன்மாவிற்கு இப்பூமியில் வாழ இடமளித்தவள் அவள் ஒரு புனிதம் “என்றார் சிலாகிப்பாக.
“ஜீவன் எப்படிய்யா இருக்க …?எனக்காக நீ இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கியே பெருமையா இருக்கு ய்யா” என்று அவனை அணைக்க வர, திடீரென நிறையப் பேர் திடுதிப்பென்று உள்ளே புகுந்தனர். மக்கள் கூட்டம் தெறித்து விழுந்தடித்து ஓடியது. ஏனெனில் வந்தது அத்தனையும் காக்கி உடை அணிந்தவர்கள்.
முத்தரசன் திகைத்தார்.
“எல்லோரையும் ரவுண்ட் பண்ணுங்க, மெயின் கேட்டை இழுத்து மூடுங்க இந்த இடத்தில் இருந்து ஒருத்தர் தப்பிக்கக் கூடாது பாஸ்ட் ..!!பாஸ்ட்..!! “என்று ஆங்காங்கே உத்தரவு பறந்தது.
முத்தரசன் அரற்றினார்.
“யார் நீங்க எல்லாம்.. .?என் பூஜையில் ஏன் இடைபுகுந்தீர்கள்… ?ஆன்மாக்களின் சங்கமம் நடக்கும் இவ்வேளையில் மனிதர்களுக்கு அனுமதி இல்லை, சிறப்பு அனுமதி பெற்றவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் வெளியேறுங்கள் இல்லை என்றால் ஆன்மாக்களின் கோபத்திற்கு ஆளாவீர்கள்… ” என்று கத்த இன்ஸ்பெக்டர் பளாரென அறைந்தார் முத்தரசனை. கூட்டம் முழுவதும் ஸ்தம்பித்து நின்றது.
“ஜீவன் என்ன பார்த்துட்டு நிற்கிற…? நீ சொல்லுப்பா உன் அப்பாவை உயிரோடு கொண்டு வந்து இருக்கார் அவர் ஃப்ராடுதனம் பண்ணலைனு சொல்லுப்பா ” என்று அவனின் அம்மா வனஜா ஜீவனிடம் கெஞ்சினார்.
பெண் காவலர் வனஜாவை ஒரு அறை விடத் திகைத்த வனஜாவோ, கன்னத்தில் கை வைத்தபடி நின்றிருந்தார்.
“மகனே உனக்கு என்னவாயிற்று…?, நீயாவது இந்த அற்ப பதர்களுக்குச் சொல்லிப் புரிய வை…!! நான் எவ்வளவு பெரிய உதவி செய்திருக்கிறேன் பக்தர்களே சொல்லுங்கள் நான் நிகழ்த்திய அதிசயத்தை உங்கள் உறவுகளை உதாரணமாகக் காட்டுங்கள்” என்று சொல்ல , எல்லோரும் துப்பாக்கிக்கு பயந்து உறைந்து நின்றனர்.
“ஜீவன் நீ தான் என் மீது அதிக நம்பிக்கை வைத்தவன் . நீ சொல் அதுவுமில்லாமல் நீ இந்த நகரத்தில் பெரிய ஆள்” என்று கெஞ்சினார் முத்தரசன்.
இன்ஸ்பெக்டரோ ஜீவனை ஒரு முறை பார்த்து விட்டு முத்தரசனை இழுத்துச் சென்றார்.
ஜீவனோ,” சார் அவரை விட்டுடுங்க அவர் சொல்றது உண்மை தான் அவரை நீங்க நினைக்கிற மாதிரி ஆள் கிடையாது” என்று சொல்ல முத்தரசன் கண்கள் விகசிக்கப் புன்னகைத்தார்.
இன்ஸ்பெக்டரின் பிடியில் இருந்து விலகியவரோ ,மேலே இரு கைகளையும் உயர்த்திக் கும்பிட்டு “காளிதேவி இந்த அற்ப புழுவை மன்னித்து விடம்மா உன் மகனையே அடித்து விட்டான் பாவம் ஒன்றும் அறியாதவன்” என்று சொல்ல இன்ஸ்பெக்டர் தீயென முறைத்தார்.
இங்கே வேதாந்த் வண்டியில் வரும் போதே தன் அனுமானங்களை உரைத்தான்.
“அத்தை நீங்களே யோசிச்சுப்பாருங்க, அனுவிற்குப் பாஸ்போர்ட், விசா எடுக்க நிச்சயம் சர்டிபிகேட் தேவைப்படும் அது இல்லாமல் அவன் எப்படிப் பாஸ்போர்ட் எடுத்தான் …?, அப்படியே சர்டிபிகேட் இருந்தாலும் அந்தச் சர்டிபிகேட் எல்லாம் ஜேபிக்கு எப்படிக் கிடைத்தது… ?, அன்ட் இன்னொரு விஷயம் மேரேஜ் நடக்கும் போது அனுவோட பேரண்ட்ஸ்க்கு நாம இருக்கிற இடம் எப்படித் தெரிந்தது…? அவங்க வந்துட்டாங்கன்ற விஷயம் ஜீவனுக்கு எப்படித் தெரியும்… ? நான் யோசிக்கிறது சரியென்றால் தேவாவுக்கு இதைப்பற்றி முன்னாடியே தெரியும். என்ன தேவா நான் சொல்றது கரெக்டா…?” என மணிமேகலையிடம் துவங்கி தேவான்ஷியிடம் முடித்தான் வேதாந்த்.
தேவான்ஷி அமைதிகாக்க மேகா அவளை உலுக்கினார்.
“சொல்லு தேவா என்ன நடந்தது…?, ஜீவன் என்ன பண்ணிட்டு இருக்கான் …?, பதில் சொல்லு தேவ்…!!” என்று அழுத்தமாகக் கேட்க,
தேவான்ஷி இன்று நடக்கும் யாகத்தைப் பற்றி மட்டும் கூறினாள்.
“ஓஓஓ சிட் இதுக்காகத் தான் அவன் நம்மை அவசரமாக வெளிநாட்டிற்கு அனுப்புறானா… ? தேவ் உன் கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கவே இல்லை வேதா வண்டியைத் திருப்புடா சென்னைக்கு, இன்றோடு இந்த மந்திர மாயங்களுக்கு முடிவு கட்ட வேண்டும்” என்று மேகா கூறியதும் வேதாந்த் வண்டியை திருப்பியவன் சென்னைக்குப் பயணித்தான்.
“அக்கா இதெல்லாம் தப்புனு தெரிஞ்சும், நீயும் அவருக்குச் சப்போர்ட் பண்ணி இருக்க என்னக்கா நீ…?” என்று அனு கடிந்து கொள்ள , மேகாவோ “அவன் யார் பேச்சையும் கேட்க மாட்டான் அனு, பிடிவாதக்காரன்… அவன் மந்திர மாயங்களை நம்புவது கூடப் பெரிதாகப்படவில்லை எனக்கு அந்தப் பொம்பளையை மறுபடியும் வீட்டுக்கு அழைச்சுட்டு வந்திடுவானோன்னு தான் கவலையாக இருக்கிறது” என்று கவலை தோய்ந்த குரலில் மணிமேகலை சொல்ல விழி பயந்து பதறினாள்.
“அத்தை அந்தப் பொம்பளை இங்கேயா இருக்கா… இல்ல அண்ணன் அப்படி எல்லாம் அதை ஏத்துக்க மாட்டான் எனக்கு நம்பிக்கை இருக்கு…” விழி நம்பிக்கையுடன் பேசினாள்.
“எங்களுக்கும் அந்த நம்பிக்கை இருக்கு விழி . ஆனால் அந்தப் பொம்பளை அவ்வளவு உறுதியாகச் சொல்லும் போது சற்றுப் பயமா தான் இருக்கு… “என்று மேகா தன் பயத்தை வெளிப்படுத்த கதிர் தான்,” எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்” என ஆறுதல் அளித்தார்.
விழி குழந்தையுடன் வர வேண்டாம் என்று அவளை அவள் கணவனை வரவழைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
“விழி நாங்க வரும் போது ஜீவனோடு தான் வருவோம் நீ கவலைப்படாமல் இரு சரியா வந்ததும் அவன் கல்யாணத்தை முடிச்சிட்டு தான் மத்த வேலை அவன் என்ன நினைச்சுட்டு இருக்கான் ” என்று பொரிந்தபடி கிளம்பினார் மணிமேகலை.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
இங்கே வனஜா ஜீவனிடம் முத்தரசனை விட்டு விடும்படி கெஞ்சிக் கொண்டிருக்க, மற்றொரு புறம் பரந்தாமன் பணத்தை மடத்தில் பாதுகாப்பான இடத்தில் வைத்து விட்டு வெளியே செல்லவும், சரியாக இருந்தது.
“இந்த ஆள் போலிச்சாமியாரா !? அச்சோ ! இது தெரியாமல் பணத்தைக் கொண்டு வந்து கொடுத்து இப்படி மாட்டிக்கிட்டோமோ…!!” என்று ஆங்காங்கே புலம்பிக் கொண்டிருந்தனர் மக்கள்.
அதற்குள் வேதாந்த், தேவான்ஷி ,அனுகீர்த்திகா , மணிமேகலைஆகியோரும் கதிர்வேலனுடன் உள்ளே நுழைந்தனர்.
ஜீவன் அதிர்ந்து அவர்களைப் பார்த்து விட்டு ,”டேய் உங்களை யார் இங்கே வரச் சொன்னது…?, முதலில் கிளம்புங்க” என்று அவசரப்படுத்தினான்.
வேதாவோ, அவனுக்குப் பதில் அளிக்காது, இன்ஸ்பெக்டரிடம் பேசினான்.
“சார் கம்ப்ளைன்ட் கொடுத்து எவ்வளவு நேரம் ஆச்சு இன்னுமா அரெஸ்ட் பண்ணலை…?” என்று வேதாந்த் கேட்க, ஜீவா அவனைப் பார்த்தான்.
வேதாவோ ஜீவனை முறைத்து விட்டு, “என்னடா பார்க்கிற ? அவ்வளவு சொல்லியும் இந்த ஃப்ராடுபயலை நம்பி வந்திருக்க , நீ வேணுன்னா இவனை நம்பி ஏமாறத் தயாராக இருக்கலாம் ஆனால் என் நண்பன் ஏமாந்து போறதை நான் விரும்பவில்லை “என்று கடிந்து கொண்டான்.
“விடுங்க வேதா, எவ்வளவு படிச்சு இருந்தாலும் பக்திக்கும் , ப்ராடுதனத்திற்கும், வித்தியாசம் தெரியாமல் தான் மக்கள் இருக்காங்க… ” என்று இன்ஸ்பெக்டர் சொல்ல, ஜீவன் இன்னும் அமைதியாகத் தான் நின்றான்.
இன்னும் சிலர் திடுமென உள்ளே நுழைந்தனர்.
“சார் நீங்க யாரு…?” என்று இன்ஸ்பெக்டர் கேட்டதும் அவர்கள் “சிபிஐ” என்றனர் அடையாள அட்டையைக் காண்பித்து விட்டு.
…. தொடரும் .
Jeevan cbi ah😃😃😃😃😃 romba interesting ah poitu iruke🥰🥰🥰🥰
அட நம்ம பய ஜேபி சிபிஐ ஆ….இதுவல்லவோ ட்விஸ்ட்டு.ஆஹா ஆஹா இனி தான் ஆட்டம் ஆனம்பமாகபோகுது.