இளங்கோவன், விஜயா இருவரும் நர்த்தனாவுடன் விருதுநகர் செல்லும் அதே நேரத்தில் ஜீவனும் விருதுநகர் வந்தடைந்தான்.
மணமக்கள் இருவரும் ,மணமேடையில் ஒருவர் மாற்றி ஒருவர் பூஜையை முடித்து ஆடை மாற்ற செல்ல, சரியான நேரத்தில் ஜீவன் மண்டபத்திற்கு வந்திருந்தான்.
தேவான்ஷி அவனது வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.
“ஹாய் ஆன்ஷி யாரைத் தேடுற …?” செவிக்கருகில் கேட்ட ஜீவனின் குரலில், மகிழ்வாய் திரும்பினாள் தேவா.
ஒற்றைக் கண் சிமிட்டி அவளது தோள் மீது கையைப் போட்டபடி நடந்தான் ஜீவன்.
“வரமாட்டேன்னு நினைச்சியா அனபெல்…!!”என்றவனை முறைத்து விட்டு,” நான் அனபெல்லா உங்களுக்கு…?” என்று முறைத்தாள்.
ஜீவனோ, “பின்ன இல்லையா நீ இன்னும் கொஞ்சம் குட்டியா இருந்தா அனபெல்லே தான்… அழகான அனபெல்… ” ரகசியம் பேசியபடி வந்தவனை மணிமேகலை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
“அத்ஸ் முறைக்குது “என்று சிரித்துக் கொண்டே விலகியவன் , “என்ன அத்தை மாப்பிள்ளை தயார் ஆகிட்டானா…?” என்றபடி நடந்தான்.
“எல்லாம் தயார் தான். மாப்பிள்ளை தோழனுக்குத் தான் திருமண நேரத்திற்குக் கூட வேலை வரும் போல” என்று சலித்துக் கொண்டார் மணிமேகலை.
“கோவப்படாதீங்க அத்தை கொஞ்சம் வேலை. ஹான் இந்தப் பாஸ்போர்ட் , விசா மத்த டீடெயில் எல்லாம் இருக்கு இதைப் பத்திரமாக வச்சுக்கங்க மேரேஜ் முடிச்சு நீங்க ஏர்போர்ட் போறீங்க நான் மறுபடியும் சென்னைக்குக் கிளம்ப வேண்டும் “என்று சொல்ல மணிமேகலை ஜீவனைக் கூர்ந்து பார்த்தார்.
ஜீவனோ சிரித்தபடி ,”நீங்க என்ன லுக் விட்டாலும் ஒண்ணும் தெரியாது, வாங்க நேரம் ஆகி விட்டது” என்று அழைத்துச் சென்றான்.
மணமகன் அறைக்குள் செல்ல, வேதா மூக்கை விடைத்தபடி பார்க்க “ஈஈஈஈ” என்று பல்லை காட்டியபடி சட்டையைக் கழற்றினான் ஜீவன்.
“வர்ற நேரமாடா இது..?, இந்தா இந்த வேஷ்டியை கட்டு” என நீட்டியவனை முறைத்து விட்டு,” போடா என்னால எல்லாம் வேஷ்டி கட்ட முடியாது “என்றான்.
“வேதாண்ணா சீக்கிரம் வாங்க ஐயர் அங்கே உங்களை ஏலம் விட்டுட்டு இருக்கார்” எனத் தேவான்ஷி வந்து நின்றாள்.
“ஏய் சொல்லாம ,கொள்ளாம உள்ள வந்துட்ட.” அவசரமாக வேஷ்டியை அள்ளி முடிந்தான் ஜீவன்.
“டேய் சீக்கிரம் கட்டுடா..!!” என்றதும் வேதாவின் அண்ணன் வந்து வேதாந்தை அழைத்துச் செல்வதாகக் கூறி அழைத்துச் சென்றான்.
தேவான்ஷி இடுப்பில் கை வைத்துக் கொண்டு நிற்க,” தேவ் ! வெளியே போ நான் டிரெஸ் மாத்திட்டு வரேன்” என வேஷ்டி நுனியை வாயில் வைத்தபடி சொல்ல அவளோ அமைதியாகக் கதவை சாத்தி விட்டு உள்ளே வந்தாள்.
“அடியேய் என்ன பண்ற…?எல்லோரும் இருக்காங்க …!”பதறிப் போனான்.
“ஆஹா ! , அப்படியே வெட்கம் வந்தா மாதிரி தான். எத்தனை தடவை நான் இருக்கும் போது டிரெஸ் மாத்தி இருக்கீங்க இப்ப மட்டும் என்னவாம் ??”சலித்துக் கொண்டாள்.
“அப்போ நீ ஆவி…!!”
“இப்போ…?”மோவாயில் கை வைத்தபடி கேட்டாள்.
“இப்போ நீ என் தேவி…” ரசனையாகச் சிரித்தான்.
“அடேங்கப்பா கவிதை தான்… அடி விழும்…”என்று பேசிக் கொண்டிருக்கும் போதே ஜீவன் தயார் ஆகி விட்டான்.
“சரி போகலாம் வாங்க…” என்று நகர அவளை இழுத்துத் தனதருகில் இருத்தினான்.
தேவாவோ, “என்ன இது… விடுங்க வாங்க போகலாம் நேரம் ஆச்சு…!!”அவனது இனிய தொல்லையில் திணறினாள்.
“அது ஆகிட்டுப் போகுது “எனப் பேசியபடியே காதோரம் எதையோ கிசுகிசுக்க ,தேவாவின் முகம் மாறுதல் அடைந்து பின் இயல்பாகியது
“தேவ் அவங்களை பார்க்கிற சூழ்நிலை வராது பட் வந்தால் சமாளிக்கத் தெரியணும் சரியா…!! ரிலாக்ஸ் டி நான் இருக்கேன் நான் பார்த்துக்கிறேன் “என்று ஆறுதல் கூறி விட்டு அழகான இதழொற்றல் ஒன்றை கொடுத்து விட்டு வெளியேறினான்.
புரோகிதர் மந்திரங்களை உச்சரிக்க அனைவருக்கும் அட்சதை கொடுக்கப்பட்டு மாங்கல்யம் ஆசிர்வதிக்கப்பட்டு மீண்டும் புரோகிதரிடம் கொடுக்கப்பட்டது.
மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன கேதுனா மந்திரம் ஓத மங்கள வாத்தியங்கள் முழங்க, வேதாந் தன் பொற்கரங்களால் மங்களநாணை வாங்கி அனுகீர்த்திகாவின் வெந்நிற சங்கு கழுத்தில் கட்டவும், விருந்து திருமணம் நடக்கும் போதே பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது .
“அத்தை பந்தி முடிந்ததும் கிளம்பிடுங்க “என்ற ஜீவனை முறைத்து விட்டு ,”ஏன் டா என்னடா அவசரம்… ?”என மணிமேகலை கோபம் கொண்டார்.
“இல்லை அத்தை அனுவோட பேரண்ட்ஸ்க்கு நாம இருக்கிற இடம் தெரிந்து விட்டது சீக்கிரம் கிளம்புங்க ” என்றான்.
இதை எல்லாம் ஜீவன் எப்படி அறிந்து கொண்டான் என்பதை ஒருவரும் கேட்டிடவில்லை. அந்த நிமிடம் அவனது பரபரப்பு அவர்களையும் தொற்றிக் கொள்ள, விரைந்து செயல்பட்டனர்.
“மாமா பத்திரமாகக் கிளம்புங்க… தேவ் பத்திரம்… ” என்று கூறி அவர்களை வண்டியில் ஏற்றி விமான நிலையத்திற்கு அனுப்பிய பிறகே சென்னை கிளம்பினான் ஜீவன்.
நர்த்தனா, ரமேஷுடன் வந்து சேர, இளங்கோவன் விஜயா இருவரும் “எந்த மண்டபம் …?”என்று புலம்பி தீர்த்து விட்டனர் . அவர்கள் வந்த போது மண்டபம் காலியாகக் கிடந்தது.
ரமேஷை முறைத்து விட்டு ,”நீங்க மண்டபம் கண்டு பிடித்து வர்றதுக்குள்ள கல்யாணம் முடிஞ்சு அவங்களே போயிட்டாங்க…” என்று அலுத்துக் கொண்டவள் விஜயாவிடம் திரும்பி,” சென்னையில் அவர்கள் வீட்டிற்கு நேரடியாகச் செல்லலாம் “என்று கூறி உடனே அழைத்திட ரமேஷ் அங்கிருந்து நகர்ந்தான்.
“அண்ணி இந்த நர்த்தனா….!!” என்று துவங்கியவன், நடந்த அனைத்தையும் கூறி முடித்தான்.
“இப்போ என்ன அண்ணி செய்றது…? “
“ரமேஷ் எந்தப் பிரச்சினையும் இல்லை .அவங்களைச் சென்னைக்கு அலைய விடு, அதற்குள் நாங்க ப்ளைட் ஏறிடுவோம்… உன் பொண்டாட்டிக்கு மறை கழண்டிடுச்சு இப்படி முன்ன பின்ன தெரியாத ஆள் எது சொன்னாலும் நம்பி தொலைக்கிறாளே என்ன பண்றது ..?ஹான் நீ என்ன பண்ற …?அவளிடம் அப்பா மட்டும் தனியாக இருக்கார் நாம வீட்டுக்குப் போய் இருக்கலாம் னு சொல்லி வீட்டுக்கு அழைச்சுட்டு போ மாசமா வேற இருக்கா உடம்புக்கு ஏதாவது வந்திடப் போகுது பத்திரமாக அழைச்சுட்டு போ நான் டூ வீக்ஸ் ல வந்திடுவேன்” என்று இணைப்பை துண்டித்தார் மணிமேகலை.
ரமேஷ் மணிமேகலை கூறியபடியே சென்னைக்குப் போகலாம் என்று இளங்கோவன் விஜயா தம்பதியை அழைக்க ,அதற்குள் முத்தரசன் சேலத்திற்குச் செல்லும்படி பணித்தார்.
“நாங்க சாமியைப் பார்க்கனும் மா நீங்க ரெண்டு பேரும் போங்க அவங்க இருக்கும் இடம் தான் தெரிஞ்சுடுச்சே நாங்க வந்து பார்க்கிறோம் ரொம்ப நன்றி மா ! சிரமம் பார்க்காமல் அழைச்சுட்டு வந்ததுக்கு “என்று விடைபெற்றுக் கொண்டனர்.
ரமேஷ் அவர்கள் போகும் திசையைப் பார்த்துக் கொண்டே, “என்ன மனுசங்க இவங்க…? பெத்த புள்ளைக காணாமல் போய்க் கிடைச்சிருக்காங்கனு தெரிஞ்சும் பார்க்காமல் போறாங்க “என்று முகத்தைச் சுளித்தான்.
“சரி விடுங்க அவங்களுக்கு என்ன வேலையோ…?, நீங்க வாங்க எனக்குப் பசிக்குது” என்றழைத்த நர்த்தனாவிடம் தன் தந்தையோடு வீட்டிற்குச் செல்லலாம் என்று ரமேஷ் சொல்ல நர்த்தனாவின் முகம் மலர்ந்தது.
‘ஆஹா ! சாமி கிட்ட இப்ப தான் கோரிக்கை வச்சேன் அதுக்குள்ள பலன் தந்துட்டார், அவர் யாகத்தில் கலந்து கொண்டால் நம்ம நினைச்சது நடந்திடும் ‘என்று மனதில் உருப்போட்டபடி ரமேஷோடு தன் மாமனாரைக் காண சென்றாள் நர்த்தனா.
மணக்கோலத்துடன் செல்ல விரும்பாமல் ஒரு தங்கும் விடுதியில் இறங்கி அன்று இரவு பொழுதை கழித்து விட்டு மறுநாள் காலையில் செல்லலாம் என்று முடிவு எடுத்து விட்டனர் கதிரும் மற்ற அனைவரும். ஜீவனிடம் இதனைப் பற்றி எதுவும் கூறவில்லை அவர்கள்.
திருமணமான தம்பதி என அவர்களுக்குப் பிரத்யேக அறையை ஏற்பாடு செய்து இருக்க வேதாந்த் அனுகீர்த்திகா இருவரும் அவ்வறையில் அமர்ந்திருந்தனர்.
இங்கே கதிரையும் , மணிமேகலையையும் பிடிவாதமாக ஒரே அறையில் தங்கும்படி கூறி விட்டு, விழியும் ,தேவான்ஷியும், ஒரு அறையில் தங்கிக் கொண்டனர். அவளது கணவன் முக்கியமான வேலை இருப்பதால் ஊருக்கு கிளம்பி இருந்தான்.
விழி தங்கள் வாழ்வின் கருப்புப் பக்கங்களை எடுத்துரைத்துக் கொண்டிருந்தாள்.
“அண்ணா ரொம்பப் பாவம் தேவா…!! அந்தப் பொம்பளை (வனஜா) விட்டுட்டுப் போகையில அண்ணனுக்குப் பத்து வயது முடிந்து இருந்தது… கொஞ்சம் விபரம் தெரியும் கொஞ்சம் தெரியாது… ஸ்கூல்ல எல்லாம் பசங்க உன் அம்மா ஓடிப் போயிட்டாங்க தானேனு கிண்டல் பண்ணுவாங்களாம் அண்ணா முதலில் அழுதுட்டே வந்தவன் பிறகு கேட்ட எல்லாரையும் அடிக்க ஆரம்பிச்சுட்டான். அப்புறம் தான் நாங்க கோயமுத்தூர் வந்து விட்டோம் அவனை ஹாஸ்டல் ல சேர்த்து விட்டுட்டார் அப்பா… அப்பா மேல ரொம்பப் பாசம் அவனுக்கு” என்று புன்னகைத்தாள்.
தேவா மெலிதாகப் புன்னகைத்தவள் “ம்ம்ம் அதனால தானே அவ்வளவு தூரம் ரிஸ்க் எடுத்து இருக்கார்… ஏன் விழி அண்ணி அப்பா மேல அவ்வளவு பாசமா இருந்தவர் ஏன் கல்யாணம் பண்ணிக்க மறுத்தார் …?” கேட்டாள்.
விழி புன்னகையுடன் ,”அண்ணா உங்க கிட்ட சொல்லலையா..?, அவருக்கு மேரேஜ் பண்ணிக்க எல்லாம் விருப்பம் தான் . ஆனா போன இடத்தில் எல்லாம் அந்தப் பொம்பளை பத்தி பேசினாங்க அதான் கோபம் வந்து கல்யாணம் வேண்டாம் னு அடம் பிடிச்சார் அப்புறம் தான் உங்களை அப்பா பேசி முடிச்சாங்க ஆனா அதுக்குள்ள” என்று தந்தையின் நினைவில் கண் கலங்கியது அவளுக்கு.
“விழி அழாதீங்க ப்ளீஸ்…!!” என்றிட விழியோ கண்களைத் துடைத்து விட்டு , “இப்போது அண்ணா ஹாப்பியா இருக்கான் அதனால அப்பாவும் சந்தோஷமாக இருப்பாங்க நீங்க என் அண்ணனை மட்டும் நல்லா பார்த்துக்கங்க அது போதும்” என்று கூறி விட்டு ,”ஆமா உங்களுக்கு அந்தச் சரிகா மேட்டர் தெரியுமா…??” என்று கேட்க, தேவா வேகமாக ,”யார் சரிகா …?”என்றாள்.
“அண்ணா லவ் பண்ண பொண்ணு …”என்றதும் ,”ஓஓஓ உங்க அண்ணா லவ் எல்லாம் பண்ணி இருக்காரா அது தெரியாதே எனக்கு… !! வரட்டும் என் கிட்ட சொல்லவே இல்லை அவரைப் பேசிக்கிறேன்” எனப் பல்லைக் கடித்தாள்.
விழியோ, “அச்சோ ! தேவா நீ கேட்டு வச்சிடாதே ,அவனே அந்தப் பொண்ணு சரிகா மேல செம கோபத்தில் இருக்கான் அவளும் அந்தப் பொம்பளை வனஜாவை பத்தி பேசினதால வந்த கடுப்பு அதை உங்க கிட்ட காட்டிடப் போறான் “என்றாள் அவசரமாக
“சரி விடுங்க உங்க அண்ணனைக் காப்பாத்துறீங்க “என்று பேச்சை மாற்றினாள்.
இவர்கள் பேச்சைத் தொடர, வேதா அனுவை உறங்கும்படி சொல்லி விட்டு அறைக்குள் நடைபயின்று கொண்டிருந்தான்.
‘ஏதோ ஒரு விஷயம் இடிக்குது தவறா தோணுதே… என்ன அது…?’ என மூளையைக் கசக்கியவன் தெளிவான மனநிலைக்கு நடுநிசியில் வந்திருந்தான்.
இங்கே மணிமேகலைக்கு வனஜா அழைத்திருந்தார்.
ட்ரூ காலரில் பரந்தாமன் என்று வந்திருக்கக் கதிரிடம் அலைபேசியைக் கொடுத்தார் மேகா.
“யாரோ புது நம்பர் பேசுங்க…!!” என்றதும் கதிர் அழைப்பை ஏற்க ,மணிமேகலையிடம் பேச வேண்டும் என்று வனஜா சொல்லவும், மீண்டும் மேகாவிடமே அலைபேசியைக் கொடுத்தார் கதிர்.
“ஹலோ யாருங்க…!!”
“நான் உன் அண்ணி வனஜா பேசுறேன் மணி… “என்று சொல்ல மேகாவின் முகம் செந்தணலாக மாறியது.
“ஏய் என் நம்பர் உனக்கெப்படி கிடைச்சது , எதுக்கு என் கிட்ட பேசனும் நீ …? ஃபோனை வைடி “என்று இணைப்பைத் துண்டிக்கப் போக , வனஜா சிரித்தபடி ,”ஏன் கோவப்படுற மணி, இன்னும் கொஞ்ச நாளில் என் மகனே என்னை வீட்டிற்கு அழைச்சுட்டு வந்து கொண்டாடப் போறான். நீயும் என்னைப் பாசமா பார்த்துக்கப் போற” என்றாள் நக்கலாக.
“ஜீவன் உன்னை அழைச்சுட்டு வரப் போறானா ?, பகல் கனவு காணாம போய் வேலையைப் பாரு…!! தேவையில்லாம பேசிட்டு” என்று திட்டியதும் வனஜாவோ ஆணவமாக ,”நான் சொல்றது நடக்கத் தான் போகுது நீ வேணுன்னா பாரு “என்று இணைப்பைத் துண்டித்தாள்.
“யார் மேகா…? ஏன் கோபமா இருக்க …?”என்று கதிர் கேட்கவும் வனஜாவைப் பற்றிக் கூறி விட்டு திட்டியபடி படுத்தார் மேகா.
“அவளுக்கு எவ்வளவு திமிர் இருக்கணும் என்கிட்டவே சவால் விடுறாள். இந்தக் கேடுகெட்டவளை வீட்டில் வைத்து பூஜை செய்யப் போகிறோமாம் !? , என்ன ஒரு ஆணவம்? திமிர்பிடிச்ச பேய் “என்று முணுமுணுத்தபடியே கதிரின் புறம் திரும்ப அவர் சிரித்தபடி,” நாம அப்படி எல்லாம் அவனை விட்டுடுவோமா !கவலைப்படாமல் தூங்குமா” என்று கூறி விட்டு அருகிலேயே படுத்துக் கொண்டார் கதிர்வேலன்.
செந்தணல் மேனியன் பூமியில் தன் ஒளிக் கற்றைகளைப் படர விட முதலில் கண் விழித்தது வேதாந் தான்… திருமணம் முடிந்து ஒரு நாள் கூட ஆகாத நிலையில் அவன் மனதில் ஏகத்திற்கும் குழப்பம் படர்ந்து கிடந்தது.
அனுவிற்கோ ஒரு வேளை ஜீவனின் அறிவுரையால் மட்டும் திருமணம் செய்து கொண்டானோ என்று தோன்றியது.
“குட் மார்னிங் அனு… ” என்று புன்னகை முகத்துடன் கூறியவனைக் கூர்மையாகப் பார்த்தவள்,” குட் மார்னிங் எல்லாம் இருக்கட்டும் . சைனா பீஸ் உனக்கு என்ன ஆச்சு …? , புதுசா மேரேஜ் பண்ண சாயலே இல்லை உன் கிட்ட என்ன ஆச்சு ஒரு வேளை ஜீவனுக்காக ” எனும் போதே வேதாந்த் இடைவெட்டினான்.
“பைத்தியம் மாதிரி உளறாதே அனு .என் குழப்பம் இதுவல்ல” என்றவன் தன் மனதில் தோன்றிய அனைத்தையும் சொல்ல அனுவிற்கும் அதே சந்தேகம் எழுந்தது.
“வேதா ஏதோ பெரிய விஷயம் நம்மளை சுத்தி நடக்குது டா… இதுல ஜீவனுக்கு எந்தப் பிரச்சினையும் வந்திடக் கூடாது. நாம உடனே அந்தச் சாமியார் மடத்துக்குப் போகலாம் உனக்குத் தெரிஞ்ச ஆளை வச்சு நாம எல்லாத்தையும் சரி பண்ணிடலாம் “என அனு தீவிரமான சிந்தனையுடன் கூறினாள்.
அதை ஆமோதித்தவனாக வெளியே வந்து , கதிர், மேகா இருவரிடமும் கூறி விட்டு உடனே சென்னை சென்று ஜீவனையும் அந்தச் சாமியாரையும் பார்க்கலாம் என்றான்.
“போகலாம் டா எனக்கும் ஒரு பெரிய சந்தேகம் இருக்கு… ஒண்ணு ஜீவனுக்கு ஆபத்தா இருக்க வேண்டும் . இல்லையென்றால் அந்தச் சாமியாருக்கு ஜீவனால் ஆபத்து இருக்க வேண்டும்… இவன் பாட்டுக்கு பழி வாங்குகிறேன் என்று கிளம்பி விட்டால் தேவான்ஷியின் வாழ்வுக்கு என்ன பதில் சொல்வது ” என மேகா சொல்ல அனைவரும் விமான நிலையம் செல்லாமல் நேரே சென்னை சென்றனர்.
மாலை ஆகி விட்டது அவர்கள் சென்னை செல்ல
இங்கே முத்தரசனின் மடத்தில் யாகத்திற்குத் தேவையான அத்தனை ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.
நர்த்தனா ஒரு புறம் குழந்தையை வீட்டில் விட்டு விட்டு யாகத்திற்குக் கிளம்பிட, ஜீவனும் இங்கே மடத்திற்கு வந்திருந்தான்.
இரவு பொழுது நெருங்கிட ஒவ்வொருவராக வரத் துவங்கி இருந்தனர்.
தான் தேர்ந்தெடுத்த ஆட்களை மட்டும் ஹோம குண்டத்திற்கு அருகில் அமர வைத்திருந்தார் முத்தரசன்.
நர்த்தனாவிற்குப் பழச்சாறு கொடுக்கப்பட, அதை அவள் குடித்ததும் மயங்கிப் போனாள்.
நல்லசிவம் முத்தரசனிடம் விஷயத்தைத் தெரிவிக்க அவரோ நர்த்தனாவை தனியறையில் படுக்க வைக்கும்படி கூறினார்.
“சாமி எதுக்காக அந்தப் பொண்ணு இப்போ…?” என்று தயங்கினான் நல்லசிவம்.
“அவளின் குழந்தையை நரபலி கொடுக்கப் போறோம் அதன் மூலம் எனக்கு ஏராளமான சக்தி கிடைக்கும்… நரபலியில் இதுவும் ஒரு வகை, கன்னிப்பெண்ணைப் பலியிடுதல், பிறந்த தலைச்சன் குழந்தையைப் பலியிடுதல், அதே மாதிரி தாய் வயிற்றில் இருக்கும் பிண்டத்தை எடுத்து காளிக்கு பலியிட்டு அந்தத் தாயோட வயிற்றில் விளக்கேற்றனும் ” என்றதும் நல்லசிவம் அரண்டு போனான்.
(பொறுப்புத் துறப்பு இது வெறும் கற்பனைக்காக மட்டுமே பழைய காலத்தில் இம்முறை இருந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன அதன் அடிப்படையில் எழுதப்பட்டது.)
“சாமி இது பயங்கரமா இருக்கே…!! இது தப்பு சாமி…! ” என்று நல்லசிவம் சொல்ல முத்தரசன் அவனை அடித்து விட்டு யாகத்திற்குச் சென்றார்.
நல்லசிவம் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.
முத்தரசன் யாகத்தைத் துவங்கும் வேளையில் பரந்தாமன் அழைத்தார்.
“என்ன பரந்தாமா ? இந்த நேரத்தில் யாகம் துவங்க போகிறேன் இப்போ கூப்பிட்டு இருக்காய்” எனக் கேட்டதும்
பரந்தாமன் பதட்டமாக ,”சாமி இங்கே இன்கம்டாக்ஸ் ரெய்ட் வர்றதா தகவல் வந்திருக்கு… மொத்தமாக முந்நூறு கோடியும் மாட்டிக்கும் …இப்போது என்ன செய்வது நான் பணத்தை அங்கே அனுப்பி வைக்கிறேன் நீங்க இளங்கோவனிடம் எப்படியாவது கை மாத்தி விடுங்க இல்ல மொத்தமாக நமக்கு ஒன்றும் இல்லாமல் போய்விடும் “என்றார்.
“சரி சரி நீ பதறாதே…!, நம்பிக்கையான ஆளிடம் கொடுத்து அனுப்பி விடு. இங்கே பாதுகாப்பாக இருக்கும் ” என்று உறுதி கொடுத்த முத்தரசன் யாகத்தைத் துவங்கினார்.
அட கொடுமையே ஜீவன் இப்போ தான் ஏதோ ப்ளான் பண்ணி எதையோ செய்யுறான் இதுங்க எல்லாம் சொதப்பிடும் போலையே🤦♀️🤦♀️
அவன் ஒருத்தன் எல்லாத்தையும் பிளான் பண்ணி இதுங்கள போக சொன்னா. இதுங்க போகாம காரியத்தை கெடுத்திடுங்க போலயே. இதுங்க என்ன வினைய இழாத்து வைக்க போகுதுங்களோ.