பகுதி- 12
மூலையில் நின்றிருந்த தேவான்ஷியைப் பார்த்து கத்திய மந்திரவாதி மயங்கினார்.
அவரது சீடன் அவசரமாக உள்ளே நுழைந்து தண்ணீரைத் தெளித்து எழுப்பினான்.
வியர்த்து வழிந்தவரை மருத்துவர் பரிசோதித்து விட்டு,” பிபி அதிகமாகி விட்டது அதான் மயக்கம் வந்திருக்கு… வேற ஒண்ணும் இல்ல. ட்ரிப்ஸ் முடிஞ்சதும் சாப்பிட கொடுங்க அப்புறம் எந்த வேலையும் பார்க்க வேண்டாம் ஒரு வாரம் ரெஸ்ட் எடுக்க சொல்லுங்க” என மருந்துகளை எழுதிக் கொடுத்த மருத்துவர் வெளியே செல்ல, மந்திரவாதியோ மூலையைப் பார்த்தபடி படுத்திருந்தார்.
“சாமி என்ன ஆச்சு ஏன் அங்கேயே பார்த்துட்டு இருக்கீங்க…??” என்று திரும்ப
“நல்லசிவம் உனக்கு அந்தப் பொண்ணு நிற்கிறது தெரியுதா… ? அது அவள் தான்… !! நாம நரபலி கொடுக்க ” எனும் போதே நல்லசிவம் குறுக்கிட்டான்.
“சாமி அங்கே யாரும் இல்லை உங்களுக்கு என்ன ஆச்சு… ?உங்க இஷ்டதெய்வத்தை வணங்கிட்டு தூங்குங்க … மந்திரவாதியே எதையோப் பார்த்து பயந்துட்டாருனு கிண்டல் பண்ணப் போறாங்க சாமி… அப்புறம் வர்றக் கூட்டம் குறைஞ்சிடப் போகுது… ஆசிரமம் திறக்கிற கனவு கனவாகவேப் போயிடப் போகுது…”என்றவனை முறைத்து விட்டு படக்கென்று எழுந்து கொண்டார் மந்திரவாதி.
“காலங்காத்தால அபசகுனமா பேசுறீயேடாப் பாவி…!! போ போய் முதல்ல எனக்கு டிபன் எடுத்துக் கொண்டு வா… அப்புறம் யார் வந்தாலும் சாமி நிஷ்டையில் இருக்காரு , அதாவது பெரிய பூஜையில் இருக்கார் னு சொல்லணும் … இன்று தரிசனம் வேண்டும் என்றால் பதிவு கட்டணம் அதிகம் னு சொல்லு… இன்று சுவாமி ஜி தரிசனம் கிடைத்தால் முன் ஜென்மத்தில் செய்த பாவங்கள் எல்லாம் தீரும் இன்னும் என்னென்ன சொல்ல முடியுமோ அத்தனையும் சொல்லு போ போ…!!” என்று விரட்டியவர் ,அந்த அறையின் மூலையை நோக்கி சென்றார்.
அங்கே எதுவுமேத் தெரியவில்லை.
“இல்லையே நான் பார்த்தேனே அவ இங்க தானே நின்னா… ஆவி பேய் இதெல்லாம் உண்மையா இருக்காது… இத்தனை நாளும் தொழில் பண்றேன் இது மாதிரி நடந்தது இல்லை… திடீரென இப்படி நடக்குது னா எவனோ நமக்கு ஆகாதவன் , ஏதோ தகிடுதத்தம் பண்றான்… கூட இருக்கிறவனையும் நம்பக் கூடாது கூடிய விரைவில் கிடைக்கிற பணத்தை வச்சு ஆசிரமம் திறந்து எல்லா காரியங்களையும் சாதிக்கணும்…” தன் லட்சியத்தை மனதில் ஓட விட்டார்.
அதற்குள் காலை உணவு வந்தது…தடபுடலான காலை உணவை முடித்துக் கொண்டு தன் தொழிலை கவனிக்க சென்றார்.
சொன்னது போலவே காலையிலேயே கூட்டம் அலை மோதியது.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
கதிரவனின் ஆதிக்கம் பூமாதேவியின் மீது படர பொன்னிறமாக மின்னினாள் பூமித்தாய்.
சுவர்கோழி ரீங்காரமிட்டு தன் இருப்பை காட்டி இருப்பவர்களை எழுப்பிட ஒவ்வொருவராக கண் விழித்தனர்.
ஜீவன் கண் விழித்த போது எதிரில் அன்றலர்ந்த மலராய் நின்றிருந்தாள் தேவான்ஷி.
ஜீவனின் இதழ்கள் மெலிதாய் விரிந்தது.
“குட் மார்னிங் தேவ்… அழகா இருக்க…!! ஸோ க்யூட் ” என அவளை இழுத்து தன் மீது சரித்தவனோ முத்தமிட செல்ல , அழகிய தேவான்ஷியின் முகம் அப்படியே மாறியது… கண்கள் இரண்டும் குருதியையும் ,மூக்கில் இருந்து வெண்ணிறப் புகையும், நாக்கு வெளியே வந்தது… அது நீண்டுக் கொண்டே சென்று ஜீவனின் கழுத்தை துளையிட்டு ரத்தத்தை உறிஞ்சியது …” ஜீவன் கத்தினான். வியர்த்துக் கொட்டியது… தரையில் விழுந்து உருண்டான்.
“ஜீவ் என்ன ஆச்சு ஜீவா… ?ஜேபி… ” என வேதா அலற, ஜேபி திடுக்கிட்டு எழுந்தான்.
தேவான்ஷி திருதிருவென்று விழித்துக் கொண்டு நின்றாள் ஜேபியின் அலறலிலும், வேதாவின் கத்தலிலும்.
தேவான்ஷியைப் பார்த்து அரண்ட ஜீவாவோ பதறியபடி தள்ள வேதா குழப்பத்துடன் அவனைப் பார்த்தான்.
“ஏய் உன் நாக்கு எல்லாம் வெளியே வந்து ,கண்ணுல ரத்தம்” என்று தத்துபித்தென உளறிட ,தலையை சற்று குனிந்து உதடு பிதுக்கினாள் தேவான்ஷி.
வேதா சிரித்தபடியே “டேய் என்னடா கண்ணுல ரத்தம், வாயில பித்தம் னுட்டு… கனவு கண்டியா…? ஏன் இப்படி பேயறைஞ்ச மாதிரி இருக்க ..?ஒரு வேளை தேவா அடிச்சுட்டாளோ… ?” நக்கல் செய்தான்.
“ஒரு ஆணியும் இல்ல நீ தள்ளு… எனக்கு டைம் ஆகுது” என குளியலறை நோக்கி சென்றான் ஜீவன்.
“யப்பா அக்கறையே…!! இவ்வளவு நேரம் உளறும் போது தெரியலையாடா டைம் ஆச்சு னு ” என்றவன் வெளியே சென்றான் வேதா.
தேவான்ஷி அங்கேயே இருக்க, குளித்து விட்டு டவலோடு வெளியே வந்தான் ஜீவன் .
“சார் நான் வேணுன்னா…!!” என்று திரும்ப அவனோ,” அட லூசு பேயே..!! நீ இன்னும் போகலையா …?,அச்சோ ! ஒரு பையனை இப்படி அரை குறையாக பார்க்குறியே கண்ணை மூடு ” என்று ஓட , தேவா சிரித்தபடியே ,”சார் ஆவி எல்லாம் எங்கே வேண்டுமானாலும் இருக்கும். நீங்க தான் கவனமா இருக்கணும் ஆமா ஏன் என்னைப் பார்த்து பயந்தீங்க…? நான் என்ன நார்மல் பேய் மாதிரி கண்ணெல்லாம் சிவந்து ,மூக்கெல்லாம் புகையா விட்டு ,நாக்கை இப்படி ஆஆஆ னு வெளியே நீட்டி விட்டுட்டா நிற்கிறேன் “என்று நாக்கை நீட்டவும் ஜீவன் ஆடை மாற்றி வெளியே வந்தவன்.,” அச்சோ இப்படி தான் அப்பவும் வந்த…!!” என்று வாய் விட்டு உளறி நாக்கை கடித்து கொண்டவன், முகத்தை பாவமாக வைத்து கொண்டு பார்க்க , தேவா விழுந்து விழுந்து சிரித்தாள்.
“இப்ப எதுக்கு பல்லை பல்லை காட்டுற …!!”
“தோணுதே… ஏன் சார் நான் எவ்வளவு அழகா இருக்கேன்…? நீங்க பாட்டுக்கு பல் வெளியே வந்தது, நாக்கு வெளியே வந்தது னு சொல்றீங்களே…!!” உதடு சுளித்து கேட்க, ஏனோ தெரியவில்லை அவளை ரசிக்கத் தான் மனம் விரும்பியது அவனுக்கு.
தன்னை சமாளித்து கொண்டவனோ
“ம்ம்ம் சரி போ ட்ரெஸ் மாத்தனும்… எங்கேயாவது தலைகீழாக தொங்கி வைக்காத ” என கூறி விட்டு அடர்நீல நிற சட்டையும் சந்தன நிற கால்சராயும் போடுவதற்கு எடுத்து வைத்தான் .
“நான் ஒண்ணும் அப்படி எல்லாம் தொங்க மாட்டேன்… ” என்றவளை ரசனையாக பார்த்து விட்டு,” யார் நீ… ?? நம்பிட்டேன் நம்பிட்டேன்…சாண்டிலியரில் தான் எப்போதும் தொங்குறதா வேதா சொன்னானே… அது மட்டுமில்லாமல் நானே அன்றைக்கு பார்த்தேனே” என்று நக்கலடித்தான்.
“உங்களை” என்று வேகமாக வந்தவள் ,அவனை நெருங்கிட சட்டென்று அவளை தன்னருகில் இழுத்து விழியோடு விழி கலந்திட ,தேவான்ஷி வேகமாக தள்ளிச் செல்ல முயற்சித்தாள்.
“எங்கேப் போற… ? என்னோடு தான் இருப்பேன் னு சொன்ன …??” பிடியை விடாது கேட்க தேவா தடுமாறினாள்.
ஜீவனின் மனதில் ஏதேதோ எண்ணங்கள் ஓடியது. அதனை வெளிக்காட்டாமல் தேவாவை விடுவித்தவன் தலையை அழுந்த கோதிக் கொண்டு வெளியேறினான்.
தேவா கண்களில் நீருடன் அப்படியே அமைதியாக நின்றாள்.
இங்கே வேதா தயார் ஆகி வரவும் , அவனோடு காலை உணவை சாப்பிட அமர்ந்தான் ஜீவா.
“அண்ணா அத்தையை மறு வீட்டிற்கு அழைக்கணும் ,விருந்து கொடுக்கணும், அவங்களுக்கு ஃபோன் பண்ணி கேட்கட்டுமா எப்போ ஃப்ரியா இருக்காங்கனு…??” என விழி கேட்டதும் தான் அவனுக்கு நினைவே வந்தது.
“அட ஆமால்ல, ப்ப்ச் மறந்துட்டேன். உனக்கும் அப்படி தானே விழி செய்தோம்…!! சரி நானே நேரில் போய் இன்வைட் பண்றேன், வேதா…!! விழி என்ன எல்லாம் கேட்குதோ எல்லாம் வாங்கிக் குடு டா …நான் அவங்களை முடிஞ்சா அழைச்சுட்டு வரேன் இல்லை என்றால் மதியம் வந்திடுறேன் ,ஒரு இம்பார்டன்ட் மீட்டிங் இருக்கு “என்று கூறி விட்டு கிளம்பினான். தேவான்ஷியும் அங்கிருந்து மாயமாகி இருந்தாள்.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
அதிகாலை நான்கு மணிக்கு எல்லாம் விழிப்பு தட்டியது கதிருக்கு. நேற்று நடந்தது எல்லாம் கனவு போல தோன்றினாலும் தன் கைவளைவுக்குள் உறங்கி இருக்கும் தன் மனைவியைக் கண்டு கனவு என்று நினைக்க இயலவில்லை.
தன் வாழ்வை ரிவர்ஸ் ஹியரில் ஓட்டிப் பார்த்தார் கதிர்வேலன்.
சாதாரண வீட்டு உபயோக பொருட்களை பழுது பார்க்கும் கடை வைத்திருப்பவரின் மகன் தான் கதிர்வேலன். ஒரு தம்பி ஒரு தங்கை அளவான குடும்பம் அழகாய் போய்க் கொண்டிருந்தது. அன்பான அன்னைக்கு வந்த நுரையீரல் புற்றுநோயை சரி செய்திட எண்ணி அவனது தந்தை கடை வீடு என்று மொத்தமும் இழந்து இறுதியில் அவரது அன்பான மனைவியையும் இழந்து விட்டார். அவரும் மனைவியின் நினைவில் ஒடுங்கிப் போய் விட மூத்தவரான கதிர் அவர்களுக்கு உணவளிக்கும் பொறுப்பை ஏற்று எல்லா வேலைகளையும் செய்தார். அன்னையின் அன்பும் தந்தையின் கண்டிப்பும் இல்லாது போக இளவல் இரண்டும் பொறுப்பின்றி அலைந்தது. கதிர் உணர்வதற்குள் தங்கையானவள் காதல் என்று வந்து நின்றாள். கூடவே எல்லை மீறலும், திருமணம் செய்து வை இல்லை என்றால் ஓடிப் போய் விடுவேன் என்று நேரடியாக மிரட்டியவளைக் கண்டு அயர்ந்தவரோ அங்குமிங்கும் கடன் வாங்கி சீர் செய்து தங்கை வாழ்க்கையை சீர் செய்தார். இடையில் கடன் அடைத்து தனக்கென ஒரு தொழிலை கற்று நிலை நிறுத்தி கொள்வதற்குள் வயது இருபத்தி ஏழை தொட்டு விட்டது. தம்பியானவன் இரண்டு வயது சிறியவன் ஆகினும் அண்ணன் எப்போது திருமணம் செய்வது தான் எப்போது முடிப்பது என்றெண்ணி தானாக வந்த காதலான நர்த்தனாவை வாழ்க்கை துணையாக்கி கொள்ள துடிக்க ,தந்தையானவர் தடுத்துப் பார்த்தார். அண்ணனுக்கு திருமணம் ஆகாமல் வேண்டாம் என்க,
சண்முகமும், நர்த்தனாவும் ரமேஷை மூளைச்சலவை செய்து திருமணத்தை நடத்தி விட்டனர். கதிரே அனைத்து செலவுகளையும் செய்தார். அதன் பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என யோசிக்க தொழில் நலிவடைந்து அதனை சீர் செய்யும் முன்பு பெண் கேட்டால், வந்த வரன் எல்லாம் தட்டிப் போனது.
‘ஒரு கட்டத்தில் திருமணமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்’ என்று யோசித்து விட்டு விட்டார்… இதில் தங்கையும், தம்பி மனைவியும் சுயநலவாதிகளாய் செயல்பட, ஏனோ அறவே வெறுத்து போனது திருமணம் எனும் பந்தம். மணிமேகலை வந்த பிறகு ஏதோ ஒரு ஈர்ப்பு அவரைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் தம்பி மனைவியின் பழி எல்லாம் சேர்ந்து திருமணத்தை நடத்தி விட்டது கதிர்வேலனின் வாழ்வு மணிமேகலையின் வருகையினால் ஒளி பெற்று விட்டது.
மணிமேகலையின் உடலில் அசைவு தெரிந்ததும் தன்னிலை வந்தவர் கண்கள் மூடி படுத்திருந்தார்.
மணிமேகலை விழுக்கென எழ முயல இரும்புக் கரங்கள் வளைத்திருப்பதை கண்டு புன்னகைத்து விட்டு.,” ஹலோ டீலரே குட் மார்னிங் கொஞ்சம் கையை எடுத்தா எழுந்துப்பேன்…!! ”
கதிர் தன் நடிப்பை தொடர ,மணிமேகலை கிச்சு கிச்சு மூட்டிட, துள்ளி எழுந்து விட்டார்.
மணிமேகலை கலகலவென்று சிரித்தவர்.,” ஹான் இப்ப எப்படி எழுந்தீங்க… ??” என்றார்.
“தெரிஞ்சுட்டே தான் வம்பு பண்ணியா நீ…!!” ஒருமைக்கு தாவி இருந்தது அழைப்பு.
மேகா”ம்ம்ம் ஆமா சரி என்ன நாலு மணிக்கு எல்லாம் எழுந்தாச்சு…!!”
கதிர் “வழக்கமான நேரம் தான்…!!” என்றவர் , தன்னை சுத்தப்படுத்தி கொள்ள குளியலறை புகுந்தார்.
காலைக் கடன்களை முடித்துக் கொண்டு வெளியே வர மணிமேகலையும் தனது வேலையை முடித்து விட்டு வந்தார்.
மேகா மறுபடியும் தன் சந்தேகத்தை கேட்டார்.”ஏன் ஜிம் போவீங்களா… ??”
“இல்ல பால் பாக்கெட் பேப்பர் போடப் போவேன்… என்ன பார்க்கிற…? பதினைந்து வருஷம் முன்னாடி… இந்த டீலர்சிப் எல்லாம் இப்போது தான் கிட்டத்தட்ட ஏழு வருஷமா தான் பண்றேன் அதுக்கு முன்னாடி கிடைத்த வேலை அத்தனையும் செய்வேன்… இந்த சினிமாவில் வர்றது போல எல்லாம் பண்ணேன், பட் ஒரே பாடலில் ஓஹோ னு வரலை, இந்த நிலையை எட்ட எனக்கு இத்தனை வருஷம் ஆச்சு… வயசும் கூடிருச்சு , வாழ்க்கையும் சலிச்சிடுச்சு ,ஆனா நேரந்தவறாமை மட்டும் தொடர்ந்து வருது… ” என்று விட்டு மணிமேகலையின் அருகில் அமர்ந்தார்.
“இனிமேல் சலிக்காது தினம் தினம் நான் என்ன பண்ணப் போறேன்னு நினைச்சு நினைச்சு ஒரு பரபரப்பாகவே போகும் “என்று சிரித்தார் மணிமேகலை.
“அது எனக்கு நேற்றே தெரிந்து விட்டது “என்று காதில் ரகசியம் பேச அந்திவான சிவப்பு அம்மணியின் முகத்தில் ஒட்டிக் கொண்டது.
அரிவையின் அந்திவான சிவப்பு , மறவோனின் மனதில் முயங்கலுக்கு தூண்ட மீண்டுமோர் கூடல் நிகழ்ந்தது மிகிரன் வரும் பொழுதினில்.
பொழுது புலர்ந்தது. மணிமேகலை பொறுப்பான மருமகளாய் வெளியே வந்தார்.
மாமியார் இல்லாத இல்லத்தில் தானே தன் வேலையைத் துவங்கி விட்டார்.
மாடர்ன் பெண் என்று இகழ்ந்த வீட்டினில் பக்தி மணம் கமழ , முதல் நாளைத் துவங்கிட , கசங்கிய நைட்டியுடன் வெளியே வந்த நர்த்தனாவை ஏளனப் புன்னகையுடன் கடந்து செல்ல, அவளோ முறைத்து கொண்டே மனதில் ‘இவளை என்ன செய்வது…?’ என்று திட்டம் தீட்ட ,அக்குடும்பத்திற்கு முதலில் வந்த மருமகள் என்ற அதிகாரம் காட்ட ,அடுக்களைக்குள் அடி எடுத்து வைத்தாள் நர்த்தனா .
இஞ்சி ஏலக்காய் தட்டிப் போட்ட தேநீர் தயாராக அதனை கப்பில் ஊற்றியபடி திரும்பினார் மணிமேகலை.
“ஆ வென” கொட்டாவி விட்டபடி ,”சீக்கிரம் குடு டீயை… நானெல்லாம் இங்க வந்தப்ப நாலு மணிக்கு காபி போட்டு கொடுத்தேன்” என்றாள்.
வேகமாக அருகில் இருந்த கரண்டியில் அவளது கையைத் தட்டி விட்டு,” போய் ப்ரெஷ் பண்ணிட்டு குளிச்சிட்டு வந்து டீ போட்டு குடி, அப்புறம் இந்த வா போ னு வாயில் வார்த்தை வந்தா கையில் விழுந்த அடி வாயில் விழும் , பல்லு தெறிச்சிடும்” என்று மிரட்டி விட்டு, மாமனார் ,ரமேஷ் ,கதிர் ,ப்ரீத்தியின் கணவன் ஸ்ரீதர் ,நால்வருக்கும் கொடுத்தாள்.
“தாங்க்ஸ் கா ! இந்த வீட்டிற்கு மாப்பிள்ளையா வந்து இன்றைக்கு தான் நான் ஆறு மணிக்கு டீ குடிக்கிறேன், வேலைக்காரம்மா எட்டு மணிக்கு தான் வருவாங்க , அதுவரை பட்டினி தான் அதனாலேயே இங்கே வர பயம்” எஎன்றான் ப்ரீத்தியின் கணவன்.
கதிர் சட்டென்று முறைக்க, அவனோ சாவகாசமாக ,”முறைக்காதீங்க மாமா !நிஜத்தை சொன்னேன்… அதனாலேயே நான் இங்கு தங்குவதில்லை, ஆனால் உங்க தங்கச்சிக்கு இந்த வசதியை விட்டு வர மனமில்லை நான் என்ன செய்ய…??” என்று ப்ரீத்தியின் முறைப்பையும் கண்டு கொள்ளாமல் உண்மையைக் கூறி விட்டான் ஸ்ரீதர் .
“இனிமேல் அடிக்கடி வந்து தங்கலாம் தம்பி” என்று மணிமேகலை சொல்ல, ஸ்ரீ புன்னகைத்தான்.
“அண்ணி டீ சூப்பர்… ” என்று ரமேஷ் கூறியதும், கதிர் கண்களில் மெச்சுதல் தெரிந்தது.
“ஆனா எனக்கு மட்டும் டீ குடுக்கலை .அது தெரியலை உங்க கண்ணுக்கு தெரியவில்லை “என்று நர்த்தனா பல்லை கடிக்க ,மணிமேகலை சிரித்து விட்டு,” பல் விளக்காம குடிச்சா பாய்ஷன் னு சொன்னேன் கொழுந்தனாரே…!! உங்க மனைவி கேட்கலை” என்றபடி தானும் டீ குடித்து விட்டு எழுந்தார் மணிமேகலை.
“அம்மாடி இன்னைக்கு தான் டா எல்லாரும் ஒன்னா டீ குடிச்சிருக்கோம் “என்று கதிரின் தந்தை மகிழ்வாய் கூறினார்.
“இனி தினமும் குடிக்கலாம் மாமா விடுங்க” என்று அறைக்குள் செல்ல வால் பிடித்தாற் போல சென்றார் கதிர்வேலன்.
ரமேஷும் ஸ்ரீயும் முணுமுணுப்பாய் பேசி சிரித்தனர்.
அறைக்குள் வந்தவரை பின்னிருந்து அணைத்தபடி,” ஒரே நாளில் என் வீட்டில் செட் ஆகிட்ட எப்படி… ?”
“அது தான் வாய் ஓயாமல் என் வீடு இப்படி தான், கொஞ்சம் சகிச்சுக்கோனு சொன்னீங்களே… ! நானும் கொஞ்சம் யூகிச்சேன் இப்படி தான் இருக்கும் என்று, அது போல தான் இருந்தது… நான் சரியா இருந்தேன் அதான் செட் ஆகிடுச்சு… “என்றார் இலகுவாக.
“நான் உன்னைப் போல இருப்பேனான்னு தெரியாது மேகா , ஆனால் இருக்க முயற்சி செய்கிறேன் “என்று உறுதி கொடுக்க மணிமேகலை புன்னகைத்தார் .
அறைக்குள் வந்த நர்த்தனாவிற்கு கோபம் கோபமாய் வந்தது. ஆனாலும் கட்டுப்படுத்திக் கொண்டாள்.
ஜீவன் முறைப்படி அழைக்க வந்திருந்தான்.
நாளை வருவதாய் உறுதி கொடுத்தார் கதிர்வேலன்.
“சார் அத்தைக்கு ஏதாவது சீர் செய்ய வேணும்னா கொஞ்சம் முன்னாடி சொல்லிடுங்க எனக்கு இந்த முறை எல்லாம் தெரியாது… சொல்லித் தரவும் ஆள் இல்லை, ஏதாவது குறை இருந்தால் நேரா சொல்லிடுங்க சரி பண்ணிடுறேன்” என்று ஜீவன் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டான்.
“ஜீவா ஏன் இவ்வளவு பயப்படுற ?, உன் அத்தைக்கு தேவைக்கு அதிகமாகவே நீ செய்துட்ட !, அப்புறம் சார் எல்லாம் வேண்டாம் மாமான்னு கூப்பிடு .அதே போல ,இதற்கு முன்பு உன் அத்தை கிட்ட எப்படி இருந்தியோ அப்படியே இரு… அம்மா இல்லாம வளர்றது எவ்வளவு கஷ்டம் என்று எனக்கும் தெரியும். நீ இந்த அளவிற்கு பொறுப்பா இருக்கிறதைப் பார்க்கும் போது என்னையேத் திரும்பி பார்க்கிறது போல இருக்கு… ஜீவா மறு வீட்டிற்கு நாளைக்கு வந்திடுறேன் இன்று குலதெய்வம் கோவில் போகனும் அதனால் தான்…”என்றார் கதிர்.
“சரிங்க சார்… ஸ்ஸ்ஸ் மாமா மாமா… அத்தை கிளம்புறேன்…” என்று விடை பெற்றுக் கொண்டான் .
….. தொடரும்.
மேகா அத்ஸ் போடுற பால் எல்லாம் சிக்ஸரா இல்லா இருக்கு😁😁 ஆமா தேவா நிஜமாலே பேயா அப்போ🤔🤔🤔🤔
ஹாஹாஹா சீக்கிரம் சொல்றேனே 😍😍😍😍😍நன்றி மா
மேகா டார்ல்ஸ் கலக்குறாங்களே…வந்த முதல் நாளே வீடு கிட்டத்தட்ட அவங்க கண்ட்ரோலுக்கு வந்துடிச்சு…எந்த வீட்டுல வசீசு அவங்கள அவமானப்படுதீதினாங்களோ அதே வீட்டுல மருமகளா அதிகாரமா உரிமையோ வந்து கலக்குறாங்க…
இன்னும் இந்த சாமியாருக்கு புத்தி வரல
இன்னுள் திருந்தாம தான் இருக்கான்…
இந்த தேவா பத்தி ஒரு முடிவுக்கு வரமுடியலயே….
சாமியாருக்கு பெரிய பூஜை இருக்கு அதெல்லாம் முடியட்டும் பா நன்றி மா
Semma mega atha … Vantha motha naale ellarayum impress panniyachu athuvum ore coffee la …. Super ponga… Ini narthana dandanakka thn… Super ud sis… Keep going…
மிக்க நன்றி மா