Loading

மருத்துவமனையில் அனுஷியாவை சேர்த்த பல்லவனுக்கு அவள் கண் விழிக்கும் வரைக்கும் உடலில் உயிர் இருக்கவில்லை.

 

மருத்துவர் வந்து அனுஷியா கண் விழித்து விட்டாள் என்று கூறவும் தான் அவனுக்கு உயிரே வந்தது.

 

“டாக்டர் அனுஷியாவுக்கு?” எனப் பல்லவன் தயங்க, அவன் என்ன கேட்க வருகிறான் எனப் புரிந்து கொண்ட மருத்துவர், “டோன்ட் வொர்ரி மிஸ்டர் பல்லவன். யுவர் வைஃப் இஸ் பர்ஃபக்ட்லி ஆல் ரைட். கரெக்டான டைமுக்கு நீங்க அவங்கள போய் காப்பாத்தி இருக்கீங்க. யாரும் அவங்க மேல கை வைக்கல.” என்றவர் அவனின் தோளில் தட்டித் தந்து விட்டு சென்றார்.

 

அனுஷியாவை மருத்துவமனையில் சேர்க்கும் போது தன் மனைவி என்றே பதிந்து இருந்தான் பல்லவன்.

 

மருத்துவர் சென்றதும் அனுஷியா இருந்த அறைக்குள் பல்லவன் வேகமாக நுழைய, அனுஷியாவோ தலையில் சிறிய கட்டுடன் விட்டத்தை வெறித்தவாறு படுத்திருந்தாள்.

 

பல்லவன் உள்ளே வரவும் அனுஷியா எழ முயற்சிக்க, அவசரமாக அவளின் முதுகில் கை வைத்து சாய்வாக அமர வைத்தான் பல்லவன்.

 

அனுஷியாவின் முகம் உணர்விழந்து காணப்பட, “அனு…” எனப் பல்லவன் அழைக்கவும், “ஏன் எனக்கு மட்டும் இப்படி?” எனக் கேட்ட அனுஷியாவின் குரலில் அவ்வளவு வெறுமை.

 

“ஷியா…” எனக் கலங்கிய கண்களுடன் தன்னவளைப் பாய்ந்து அணைத்துக் கொண்ட பல்லவனின் மார்பில் முகம் புதைத்து இவ்வளவு நேரமும் அடக்கி வைத்திருந்த அழுகையை கொட்டித் தீர்த்தாள் அனுஷியா.

 

“ஷ்ஷ்ஷ்… அழாதே ஷியா. ஒன்னும் ஆகல. அதான் நான் வந்துட்டேன்ல.” எனத் தன்னவளின் தலையை வருடியபடி கூறினான் பல்லவன்.

 

“எனக்கு பயமா இருக்கு. அ…அவன் என்னை… என்னை… இங்கெல்லாம் தொட்டான். எ…எனக்கு ரொம்ப அசிங்கமா இருந்தது. செத்துடணும் போல இருந்தது.” எனக் கதறியபடி அனுஷியா தன் நெஞ்சைத் தொட்டுக் கூறவும் பல்லவனின் அணைப்பு மேலும் இறுகியது.

 

அனுஷியாவுடன் சேர்ந்து கண்ணீர் வடித்த பல்லவனுக்கு அக் காமுகன்களை அடித்துக் கொல்லும் அளவுக்கு வெறி வந்தது.

 

சில கணங்கள் பல்லவனின் மார்பிலேயே அழுது கரைந்த அனுஷியா அதன் பின் தான் அவள் இருக்கும் நிலை உணர்ந்து சட்டென அவனிடமிருந்து விலகி, “சாரி… சாரி…” என்றாள்.

 

இவ்வளவு நேரமும் தன் கையில் இருந்த புதையல் திடீரென தன் கை விட்டுப் போன உணர்வு பல்லவனுக்கு. 

 

ஆனால் அனுஷியாவை சங்கடப்படுத்த விரும்பாதவன், “நான் போய் உனக்கு சாப்பிட ஏதாவது வாங்கி வரேன்…” என்றவன் அனுஷியாவின் பதிலைக் கூட எதிர்ப்பாராது அங்கிருந்து வெளியேறினான்.

 

கால் மணி நேரம் கடந்து கையில் உணவுடன் பல்லவன் வந்த போது அனுஷியா உறங்கி இருக்க, அவளின் அருகே இருக்கையைப் போட்டு அமர்ந்து தன்னவளின் முகத்தையே வெறித்தான்.

 

அதே நேரம் அவனின் கைப்பேசிக்கு காவல் நிலையத்தில் இருந்து அழைப்பு வரவும் அழைப்பை ஏற்றுப் பேசியவன் மறு முனையில் கூறப்பட்ட செய்தியில் ஆத்திரத்தில் பல்லைக் கடித்தான்.

 

“நான் இப்போவே வரேன்…” என்ற பல்லவன் ஒரு நர்ஸிடம் அனுஷியா எழுந்ததும் சாப்பிட வைக்கக் கூறி விட்டு அவசரமாக காவல் நிலையம் சென்றான்.

 

அங்கு அவனின் சகோதரியும் அவளின் கணவனும் ஒரு பெஞ்ச்சில் அமர வைக்கப்பட்டிருக்க, நேராக சென்று கிஷோரின் சட்டையைப் பிடித்து, “ஏன் டா இப்படி பண்ண? சொல்லுடா…” எனக் கர்ஜித்தான் பல்லவன்.

 

கிஷோரோ பல்லவனை இளக்காரமாக நோக்க, பல்லவனுக்கு ஆத்திரம் தலைக்கேறி அவனைப் போட்டு அடித்தான்.

 

“அண்ணா… விடுண்ணா அவர… அவர் எந்தத் தப்பும் பண்ணல…” எனத் தடுக்க வந்த ஹேமாவை அவன் கண்டுகொள்ளவே இல்லை.

 

பின் இரண்டு காவலர்கள் வந்து தான் பல்லவனை கிஷோரிடமிருந்து பிரித்தனர்.

 

“சார்… இது போலீஸ் ஸ்டேஷன். இங்க வந்தும் சண்டை போட்டுட்டு இருக்கீங்க. அப்புறம் நாங்க எதுக்கு இருக்கோம்?” எனத் திட்டினார் இன்ஸ்பெக்டர்.

 

“யோவ்… நீ தான் அந்த சத்யனுக்கு அந்தப் பொண்ண தூக்க சொன்னதா சொல்றான்.” எனக் கிஷோரிடம் கேட்ட இன்ஸ்பெக்டரிடம், “ஆதாரம் இருக்கா சார்? வெறும் வாயால சொன்னதை வெச்சி எப்படி என்னை அரெஸ்ட் பண்ணலாம்?” எனக் கேட்டான் கிஷோர் நக்கலாக.

 

“பொய் சார். அந்தாளு தான் என்னை வந்து சந்திச்சு பணம் எல்லாம் கொடுத்து அந்தப் பொண்ண தூக்க சொன்னான்.” என சிறையினுள் இருந்து கத்தினான் சத்யன்.

 

“இன்ஸ்பெக்டர் சார்… அவன் யாருன்னே எனக்கு தெரியாது. இதுக்கு முன்னாடி நான் அவன பார்த்தது கூட கிடையாது. ஒரு வாரமா வேலை விஷயமா வெளியூருக்கு போய்ட்டு இன்னைக்கு காலைல தான் நான் வீட்டுக்கு வந்ததே. அதுக்கான அத்தனை ஆதாரமும் இருக்கு. வேணும்னா விசாரிச்சு பாருங்க.” என்றான் கிஷோர் உறுதியாக.

 

நன்றாக விசாரித்துப் பார்த்த இன்ஸ்பெக்டரும் கிஷோருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாததாலும் அவன் கூறியதற்கு ஆதாரம் இருந்ததாலும் அவனை விடுவித்தனர்.

 

ஆனால் பல்லவனுக்கு நிச்சயமாகத் தெரிந்தது கிஷோர் தான் இதற்கு காரணம் என்று.

 

கிஷோரும் ஹேமாவும் காவல் நிலையத்தில் இருந்து வெளியே செல்ல, அவர்களைப் பின் தொடர்ந்து சென்ற பல்லவன் கிஷோரின் சட்டையைப் பிடித்து, “நீ தான் அனுவ கடத்த சொல்லி இருப்பன்னு எனக்கு உறுதியா தெரியும் டா. திரும்ப ஒரு தடவை அனு மேல கைய வெச்சன்னு தெரிஞ்சா தங்கச்சி புருஷன்னு கூட பார்க்க மாட்டேன். கொன்னுடுவேன்.” என மிரட்டினான்.

 

_______________________________________________

 

மறுநாளே அனுஷியாவை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்துச் செல்ல, பல்லவனோ அவளை விட்டு எங்கும் நகராமல் இருந்தான்.

 

அனுஷியாவே, “நீங்க கிளம்புங்க. எனக்கு ஒன்னும் இல்ல. நான் இப்போ நல்லா இருக்கேன். ஏதாவது தேவைன்னா ஜெயாம்மா பார்த்துப்பாங்க.” என்க, “ஏன் நான் பார்த்துக்க கூடாதா?” எனக் கேட்டு அவளின் வாயை மூடச் செய்வான் பல்லவன்.

 

ஆரம்பத்தில் பல்லவனின் கவனிப்பு அனுஷியாவிற்கு சங்கடமாக இருந்தாலும் அடுத்து வந்த நாட்களில் அதனை விரும்பியே ஏற்றாள்.

 

பல்லவன் கொஞ்சம் கொஞ்சமாக அனுஷியாவின் மனதில் நுழைய ஆரம்பிக்க, அனுஷியா அதனை உணர்ந்ததும் ஏகத்துக்கும் அதிர்ந்தாள்.

 

‘என்ன பண்ணிட்டு இருக்கேன் நான்? எவ்வளவு உயரத்துல இருக்குறவர் அவர். நான் சாக்கடை. நான் அவருக்கு கொஞ்சம் கூட பொருந்த மாட்டேன். இப்படி எல்லாம் நான் நினைக்கிறதே தப்பு. என்னைப் பொறுத்தவரை அவர் கடவுள். என்னோட இரட்சகன். கடவுள் மேல பக்தி வைக்கலாம். அதுக்காக உரிமை கொண்டாட முடியாது.’ எனத் தன் மனதுக்கு கடிவாளம் இட்ட அனுஷியா அடுத்து வந்த நாட்களில் பல்லவனிடமிருந்து விலக ஆரம்பித்தாள்.

 

முதலில் அதனை சாதாரணமாக எண்ணிய பல்லவன் அதன் பின் தான் வித்தியாசத்தை உணர்ந்தான்.

 

அனுஷியா விலக விலக பல்லவனுக்கு அவள் மீதிருந்த காதல் அதிகரித்ததே ஒழிய, குறையவில்லை.

 

அதற்குள் அனுஷியாவின் படிப்பும் முடிந்தது.

 

அதே நேரம் பல்லவனின் அனுமதி இன்றியே அவனுக்கும் கிஷோரின் தங்கை வானதிக்குமான திருமண ஏற்பாடு விரைவாக நடந்து கொண்டிருந்தது.

 

இவை எதையும் அறியாத பல்லவனோ அனுஷியாவின் விலகலுக்கான காரணத்தைத் தேடிக் கொண்டிருந்தான்.

 

அதற்கு சரியான சந்தர்ப்பமாக அன்று ஜெயா வேலைக்கு வராமல் போகவும் அனுஷியா மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள்.

 

இதை அறியாத பல்லவன் வழமை போலவே வீட்டுக்கு வர, அவனை வரவேற்று அமர வைத்தாள் அனுஷியா.

 

இருவருக்குமே அங்கு நிலவிய அமைதியும் அத் தனிமையும் ஏதேதோ உணர்வுகளைத் தந்தது.

 

“ம்ம்ம்… ஜெயாக்கா எங்க? நீ மட்டும் தனியா இருக்க.” என மௌனத்தைக் கலைத்தான் பல்லவன்.

 

“அம்மா இன்னைக்கு அவங்க குலதெய்வக் கோயிலுக்கு போறதா சொன்னாங்க. அதான் வரல. நான் போய் உங்களுக்கு குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரேன்.” என அங்கிருந்து அவசரமாகச் சென்றாள் அனுஷியா.

 

சில நிமிடங்களில் அனுஷியா கொண்டு வந்த காஃபியை பல்லவன் பருகிக் கொண்டிருக்க, “நான் வேலைக்கு போகலாம்னு இருக்கேன்.” என அனுஷியா கூறவும், “ம்ம்ம்… குட் ஐடியா. எங்க கம்பனிலயே நீ வந்து ஜாய்ன் பண்ணிக்கலாம்.” என்றான் பல்லவன்.

 

மறுப்பாகத் தலையசைத்த அனுஷியா, “இல்ல. நானே ரெண்டு மூணு கம்பெனில ஜாபுக்கு அப்ளை பண்ணி இருக்கேன். நாளைக்கு கூட ஒரு கம்பனில இன்டர்வியூவுக்கு வர சொல்லி இருக்காங்க.” என்றாள்.

 

பல்லவன் அதனைக் கேட்டு அமைதியாக இருக்க, “நான் வேலைக்கு போய்ட்டு இத்தனை நாள் உங்களுக்கு என்னால ஆன செலவுகளை சீக்கிரம் அடைச்சிடுவேன்.” என அனுஷியா கூறவும் அவளை வெட்டும் பார்வை பார்த்தான் பல்லவன்.

 

அவனின் பார்வை அனுஷியாவுக்கு உள்ளே குளிரைப் பரப்ப, “கம் அகைன்.” என்றான் பல்லவன் அழுத்தமாக.

 

“இதுக்கு மேலயும் நான் யாருக்கும் பாரமா இருக்க விரும்பல. இதுவரைக்கும் சம்பந்தமே இல்லாத எனக்காக நீங்க பண்ணினது எல்லாமே அதிகம். இனிமேலும் உங்களுக்கு தொந்தரவா இருக்க விரும்பல நான். நீங்களும் சீக்கிரமா கல்யாணம் பண்ணி செட்டில் ஆகுங்க. என்னைப் போல ஒருத்தி கூட உங்களுக்கு பழக்கம் இருக்குன்னு உங்க மனைவிக்கு தெரிஞ்சா அது உங்களுக்கு தான் அசிங்கமா இருக்கும்.” என்றாள் அனுஷியா தைரியத்தை வரவழைத்துக்கொண்டு.

 

“அதுக்கு அப்புறம் என்ன பண்ணுறதா ஐடியா?” எனக் கேட்டான் பல்லவன் இறுகிய குரலில்.

 

“மாலதி அக்காவ கூட்டிக்கிட்டு யாருக்கும் தெரியாத ஒரு இடத்துக்கு போயிடுவேன்.” என அனுஷியா கூறவும் சட்டென எழுந்த பல்லவன் அனுஷியாவிடம் ஒரு வார்த்தை கூறாது வீட்டிலிருந்து வெளியேறினான்.

 

பல்லவன் சென்று விடவும் தொப் என கீழே அமர்ந்த அனுஷியாவின் கண்கள் கண்ணீரை சொரிந்தன.

 

தன் காதலை நேரடியாக பல்லவன் அனுஷியாவிடம் வெளிப்படுத்தாவிடினும் அவனின் பார்வையும் செயலுமே அவனின் காதலை அனுஷியாவிடம் எடுத்துரைக்க, அதனைப் புரிந்து கொள்ள முடியாத அளவு முட்டாள் இல்லையே அவள்.

 

‘நீங்க சொந்தபந்தங்களோட சந்தோஷமா இருக்கணும் பல்லவன். என்னைப் போல ஒரு அநாதை அதுவும் சாக்கடை உங்களுக்கு வேணாம்.’ என்றாள் அனுஷியா மனதுக்குள்.

 

அன்று முழுவதும் எங்கெங்கோ சுற்றி விட்டு மறுநாள் காலையில் பல நாட்கள் கழித்து தன் வீட்டுக்கு வந்த பல்லவனுக்கு அங்கிருந்த சூழ்நிலை வித்தியாசமாகப் பட்டது.

 

வீடு முழுவதும் அலங்கரிக்கப்பட்டு என்றும் இல்லாத திருநாளாக சொந்தபந்தங்களால் நிறைந்திருந்தது.

 

அதே நேரம் பல்லவனைத் தேடி வந்த ஹேமா அவனிடம் ஒரு கவரை வழங்கவும் அவளைக் குழப்பமாக நோக்கினான் பல்லவன்.

 

“இந்த ட்ரெஸ்ஸ போட்டு ரெடியாகுண்ணா. இன்னைக்கு உனக்கும் வானதிக்கும் நிச்சயதார்த்தம்.” எனக் குண்டைத் தூக்கிப் போட்டாள் ஹேமா.

 

தன் கையில் இருந்த கவரைத் தூக்கி சுவற்றில் அடித்த பல்லவன், “என்ன இதெல்லாம் ஹேமா? நான் என்ன பொம்மையா நீ சொல்றது எல்லாத்துக்கும் தலை ஆட்ட?” எனக் கேட்டான் கோபமாக.

 

அவனிடம் எதிர்த்துப் பேசிப் பயனிருக்காது எனப் புரிந்து கொண்ட ஹேமா தன் அடுத்த ஆயுதமாக கண்ணீரை எடுத்துக்கொண்டாள்.

 

பல்லவன் எதிர்ப்பார்க்காத நேரம் அவனின் காலில் விழுந்த ஹேமா, “உன் தங்கச்சிக்கு வாழ்க்கை பிச்சை போடுண்ணா… இந்தக் கல்யாணம் மட்டும் நடக்கலன்னா என் புகுந்த வீட்டுக்காரங்க என் புருஷன என்னை விட்டுப் பிரிச்சிடுவாங்க. அப்புறம் காலத்துக்கும் நான் வாழாவெட்டியா தான் அண்ணா இருக்கணும். அப்படி ஒன்னு மட்டும் நடந்தா நான் உயிரோடயே இருக்க மாட்டேன்…” எனக் கதறினாள்.

 

முன்பானால் ஹேமாவின் கண்ணீரையும் நாடகத்தையும் கண்டு ஏமாந்திருப்பான் பல்லவன்.

 

ஆனால் இப்போது தான் அவனுக்கு அனைவரின் சுயரூபமும் தெளிவாகத் தெரியுமே.

 

தன் காலைப் பிடித்துக் கெஞ்சிக் கொண்டிருந்த ஹேமாவை உதறித் தள்ளிய பல்லவன் வந்த வேகத்திலேயே அங்கிருந்து கிளம்பவும் கோபத்தில் பல்லைக் கடித்தாள் ஹேமா.

 

அதே நேரம் ஹேமாவைத் தேடி வந்த கிஷோரிடம் நடந்த அனைத்தையும் ஹேமா கூற, “எங்க போயிட போறான்? இங்க தானே வந்தாகணும். என்ன நடந்தாலும் குறித்த முகூர்த்தத்துல வானதிக்கும் அவனுக்கும் கல்யாணம் நடந்தே தீரும்.” என்றான் கிஷோர் ஆவேசமாக.

 

_______________________________________________

 

இன்டர்வியூவை நல்ல விதமாக முடித்துக்கொண்டு வெறியே வந்த அனுஷியா டாக்சி ஒன்றைப் பிடிக்க கை நீட்ட, அவளின் முன் சீறிப் பாய்ந்து வந்து நின்றது ஒரு கார்.

 

அனுஷியா ஒரு நொடி அதிர்ந்து நிற்க, உள்ளே ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்த பல்லவனோ அவளுக்காக கதவைத் திறந்து விட்டு அமைதியாக இருந்தான்.

 

அவனை அவமதிக்க மனமின்றி பல்லவன் கூறாமலே புரிந்து கொண்ட அனுஷியா அமைதியாக காரில் ஏறிக் கொள்ளவும் காரை இயக்கினான் பல்லவன்.

 

“எங்க போறோம்?” என்ற அனுஷியாவின் கேள்விக்கு பதிலளிக்காது காரின் வேகத்தை பல்லவன் நன்றாகவே அதிகரிக்கவும் பயத்தில் கண்களை இறுக்கி மூடிய அனுஷியா தன்னையும் மீறி பல்லவனின் கரத்தைப் பற்றி, “ப்ளீஸ்… கொஞ்சம் மெதுவா போங்க…” என்றாள் கெஞ்சலாக.

 

அதன் பின்னர் தான் தன்னவளின் முகத்தில் இருந்த பயத்தைக் கண்ட பல்லவன், “சாரி…” என்று வேகத்தைக் குறைத்தான்.

 

அதன் பிறகு அனுஷியாவால் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.

 

சற்று தூரம் வந்ததும் ஒரு கடற்கரையில் காரை நிறுத்திய பல்லவன் தானும் இறங்கி அனுஷியா இறங்குவதற்காக கதவைத் திறந்து விட்டான்.

 

“எதுக்கு இங்க வந்திருக்கோம்?” எனக் குழப்பமாகக் கேட்டவளின் கரத்தை சட்டெனப் பற்றி, “என்னைக் கல்யாணம் பண்ணிக்குறியா ஷியா?” எனக் கேட்ட பல்லவனின் குரல் கரகரத்தது.

 

அவனை அதிர்ச்சியுடன் நோக்கிய அனுஷியா தன் கரத்தை வேகமாகப் பிரித்து, “எ…என்ன சொல்றீங்க?” எனக் கேட்டாள்.

 

“ஷியா… நான் இப்படி கேட்குறதால நீ என்னைத் தப்பா நினைக்கலாம். ஆனா எனக்கு வேற வழி இல்ல.” என்றவன் வீட்டில் தனக்கு ஏற்பாடு செய்யப்படும் கட்டாயத் திருமணத்தைப் பற்றிக் கூறியவன், “ப்ளீஸ் ஷியா. எனக்கு இந்த ஹெல்ப் பண்ணு… என்னால யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது…” என்றவனின் கண்கள் வேறு ஒன்று கூற, அதனைத் தெளிவாக உணர்ந்தாள் அனுஷியா.

 

“நான்…நான் எப்படி? நான் ஒரு அநாதை… உங்கள போய் நான்…” எனத் தயங்கினாள் அனுஷியா.

 

காதல் என்று போய் நின்றால் எங்கு அவள் தன்னைத் தவறாக எண்ணி விடுவாளோ என்று தான் தன் சூழ்நிலையைக் காரணம் காட்டி திருமணம் செய்யக் கேட்டான்.

 

ஆனால் அனுஷியாவின் தயக்கத்தையும் அவளின் விலகலுக்கான காரணத்தையும் கணித்தவனுக்கு அதற்கு மேல் தன் காதலை மறைக்க முடியவில்லை.

 

அனுஷியா எதிர்ப்பார்க்காத நேரம் அவளைப் பாய்ந்து அணைத்துக் கொண்ட பல்லவன், “ஐ லவ் யூ ஷியா… ஐ லவ் யூ… எதுக்காகவும் யாருக்காகவும் உன்ன என்னால இழக்க முடியாது. நீ வந்ததுக்கு அப்புறம் தான் இருட்டிப் போய் இருந்த என் வாழ்க்கைல வெளிச்சம் வந்தது. என்னோட கடைசி மூச்சு வரைக்கும் நீ என் கூட இருக்கணும் ஷியா…” என்றான் கண் கலங்க.

 

பல்லவன் நேரடியாகவே தன் காதலை வெளிப்படுத்தி விடவும் இத்தனை நாட்களாக அவனைப் பிரிய நினைத்துப் போராடிய அனுஷியாவின் மனம் தன்னால் அவனை விட்டுப் பிரிந்து வாழ முடியாது என்பதைப் புரிந்து கொண்டது.

 

இத்தனை நாட்களாக தான் அநாதை என்றும் தனக்கென யாரும் இல்லை என்றும் எண்ணியவளுக்கு எல்லாமுமாக பல்லவன் வந்து சேரவும் ஆனந்தக் கண்ணீருடன் பதிலுக்கு பல்லவனை இறுக்கி அணைத்தாள் அனுஷியா.

 

_______________________________________________

 

வணக்கம் மக்களே!!! 

 

சாரி சாரி சாரி சாரி… அதுக்கு மேல என்ன சொல்றதுன்னு தெரியல. இனிமே ஒழுங்கா அப்டேட் தந்து கதைய முடிக்கிறேன். 🤭 

 

Thank you 😊 keep supporting ❤️

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்