Loading

சரியாக ஒன்றரை மணி நேரத்தில் ஹைதராபாத்தை அடைந்தது விமானம்.

 

பிரணவ், ஆகாஷ், அர்ச்சனா மூவரும் செக்கிங் முடித்து விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தவர்கள் முதலில் ஓய்வெடுப்பதற்காக ஒரு ஹோட்டலை அடைந்தனர்.

 

பிரணவ், “ஆகாஷ்… ரெண்டு ரூம் மட்டும் புக் பண்ணுங்க… போதும்…” என்கவும் ஆகாஷ் அவனைப் புரியாமல் பார்க்க, அர்ச்சனாவோ வானில் பறக்காத குறை.

 

பிரணவ் கூறி விட்டதால் ஆகாஷ் வேறு வழியின்றி அவன் கூறியபடியே இரண்டு அறைகளை புக் செய்து சாவிகளை வாங்கி வந்தான்.

 

அதனைப் பிரணவ்விடம் நீட்டவும் வாங்கிக்கொண்ட பிரணவ் ஒன்றை அர்ச்சனாவிடம் கொடுத்தவன் ஆகாஷிடம் திரும்பி, “நீங்க என் கூட ஸ்டே பண்ணுங்க ஆகாஷ்… ப்ராஜெக்ட் விஷயமா கொஞ்சம் டிஸ்கஸ் பண்ண வேண்டி இருக்கு…” என்கவும் அர்ச்சனாவிற்கு புஸ் என்றானது.

 

ஆகாஷ், ‘ப்ராஜெக்ட் பத்தி பேச ஒரே ரூம்ல தங்கணுமா என்ன?’ என யோசித்தவன் அர்ச்சனாவின் முகம் போன போக்கைப் பார்த்து வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, “ஓக்கே பாஸ்…” என்றான் புன்னகையுடன்.

 

அர்ச்சனா கோபத்தில் அங்கிருந்து விருட்டென சென்று விட, பிரணவ்வும் ஆகாஷும் தமக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றனர்.

 

ஆகாஷ், “பாஸ்… ப்ரேக் ஃபாஸ்ட் ரூமுக்கே ஆர்டர் பண்ணவா? ஆர் போய் சாப்பிடலாமா?” என்க, “இங்கயே கொண்டு வர சொல்லுங்க ஆகாஷ்…” எனப் பிரணவ் கூறவும் அதன் படி செய்தான் ஆகாஷ்.

 

பிரணவ், “பல்லவன் இன்டஸ்ட்ரீஸ் எம்.டி நாளைக்கு எத்தனை மணிக்கு இந்தியா வராங்க?” எனக் கேட்கவும், “நாளைக்கு மார்னிங் எய்ட் போல வந்துடுவாங்க பாஸ்… த்ரூவா அவங்க கம்பனிக்கு தான் வராங்க… அப்பாய்ன்மென்ட் கேட்டு இருக்கேன்… இன்னைக்கு பதில் சொல்லுவாங்க…” என்றான் ஆகாஷ்.

 

இருவரும் வேலை விஷயமாக பேசிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் ஆர்டர் செய்த உணவு வந்து விட, இருவரும் அமைதியாக சாப்பிட்டனர்.

 

சாப்பிட்டு முடித்து தண்ணீர் குடித்த பிரணவ், “நான் மறந்து போன பீரியட்ல என் லைஃப்ல ஏதாவது முக்கியமான விஷயம் நடந்ததா ஆகாஷ்? நீங்க ஏதாவது சொல்லாம விட்டுட்டீங்களா?” எனத் திடீரென கேட்கவும் ஆகாஷிற்கு அதிர்ச்சியில் புறை ஏறியது.

 

“மெதுவா மெதுவா ஆகாஷ்… ஏன் ஷாக் ஆகுறீங்க? இந்தாங்க இந்தத் தண்ணீரை குடிங்க…” என பிரணவ் நீர்க் குவளையை நீட்டவும் அதனை அவசரமாக வாங்கிய ஆகாஷ் ஒரே மூச்சில் குடித்து முடித்தான்.

 

அனுபல்லவி சம்பந்தமான விடயங்களையும் பிரணவ்வின் பெற்றோர் பற்றிய விடயத்தையும் தவிர்த்து மற்ற அனைத்து விபரங்களையும் பிரணவ்விற்கு கூறி இருந்தனர்.

 

பிரணவ்வின் உடல்நிலையைக் கருத்திற்கொண்டு அனுபல்லவி பற்றிய எந்த விடயங்களையும் ஆகாஷ் அவனுக்கு நினைவுபடுத்த முயலவில்லை.

 

இப்போது பிரணவ்வே கேட்டதால் பேசாமல் அனுபல்லவியைப் பற்றிக் கூறி விடலாம் என நினைத்து ஆகாஷ் வாய் திறக்க, பிரணவ் மாத்திரை போடுவதைக் கண்டு, ‘இல்ல… நான் ஏதாவது சொல்லி பாஸ் அதைப் பத்தி தெரிஞ்சிக்க ஸ்ட்ரெய்ன் பண்ணா அவரோட உயிருக்கு ஆபத்தாகும்னு டாக்டர் சொல்லி இருக்காங்க… அவரா தெரிஞ்சிக்கும் போது எல்லாம் தெரிய வரட்டும்…’ என முடிவெடுத்தான்.

 

பிரணவ், “என்ன ஆகாஷ் அமைதியா இருக்கீங்க? ஏதாவது சொல்ல இருக்கா?” எனக் கேட்கவும், “இ…இல்ல பாஸ்… எதுவும் முக்கியமான விஷயம் நடக்கல… எல்லாமே சொல்லிட்டேன்…” என்றான் ஆகாஷ் அவசரமாக.

 

“ம்ம்ம்…” என முகம் வாடிய பிரணவ் அத்துடன் அமைதியாகி விட, அவர்களின் அறைக் கதவு தட்டப்பட்டது.

 

ஆகாஷ் சென்று கதவைத் திறக்க, வாசலில் அர்ச்சனா நின்றிருந்தாள்.

 

ஆகாஷைத் தள்ளிக்கொண்டு அறைக்குள் நுழைந்த அர்ச்சனா, “பிரணவ்… நாளைக்கு தானே பல்லவன் இன்டஸ்ட்ரீஸ் எம்.டிய மீட் பண்ணணும்… சோ நாம ரெண்டு பேரும் இன்னைக்கு கொஞ்சம் ஊர சுத்தி பார்க்கலாமா? நாம ரெண்டு பேரும் தனியா வெளிய போய் ரொம்ப நாளாச்சு…” என முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு கூறவும் ஆகாஷ் அதனைக் கேட்டு ஆத்திரத்தில் பல்லைக் கடித்தான்.

 

பிரணவ் நிச்சயம் மறுத்து விடுவான் என ஆகாஷ் எதிர்ப்பார்க்க, அவனோ எதுவும் கூறாமல் சம்மதிக்கவும் ஆகாஷ் அதிர, அர்ச்சனாவோ வாயெல்லாம் பல்லாகக் காணப்பட்டாள்.

 

அர்ச்சனா தம்மைப் பற்றி கூறிய எதுவும் பிரணவ்விற்கு நினைவு இல்லாததால் ஏதாவது பழைய விடயங்கள் நினைவு வருமா என்று பார்க்கத் தான் அவளுடன் செல்ல பிரணவ் சம்மதித்தான்.

 

அவனின் பெற்றோர் கூட அதற்காகத் தானே அர்ச்சனாவை அவனுடன் அனுப்பி வைத்தனர்.

 

இருவரும் ஹோட்டலில் இருந்து வெளியேறியதும் அர்ச்சனா பிரணவ்வின் கரத்துடன் தன் கரத்தைக் கோர்த்துக் கொள்ள, பிரணவ்விற்கோ தீச்சுட்டார் போல் இருந்தது.

 

இருந்தும் தன் கரத்தை விலக்காமல் பல்லைக் கடித்துக்கொண்டு அமைதியாக இருந்தான்.

 

ஆனால் அவனின் மனமோ, ‘காதலித்த பெண் தொட்டும் ஏன் தனக்கு அருவருப்பாக இருக்கிறது?’ எனக் கேள்வி கேட்டது.

 

அர்ச்சனாவிற்கு அதுவே சாதகம் ஆகிப் போக, அவனை இன்னும் நெருங்கிக் கொண்டு சுற்றினாள்.

 

அர்ச்சனா அழைத்துச் செல்லும் இடம் எல்லாம் வேறு வழியின்றி சென்ற பிரணவ் ஓய்வில்லாமல் ஏதேதோ பேசிக்கொண்டிருந்த அர்ச்சனாவிற்கு வெறும் ம்ம்ம் கொட்டினான் பதிலாக.

 

அவை ஒன்றையும் அர்ச்சனா பெரிதாக எடுத்துக்கொள்ளவே இல்லை.

 

பிரணவ் அமைதியாக இருப்பதால் அவன் தன் பக்கம் சரிய ஆரம்பித்து விட்டான் என நினைத்து ஏதோ பெரிதாக சாதித்து விட்டது போல் மகிழ்ச்சியாக இருந்தாள்.

 

இருவரும் ஊர் சுற்றி முடிந்து மாலையில் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு மீண்டும் சென்றனர்.

 

மறுநாள் காலையிலேயே பல்லவன் இன்டஸ்ட்ரீஸ் எம்.டி. ஐ சந்திக்கச் செல்லத் தயார் ஆகினான் பிரணவ்.

 

ஏதோ ஒரு பாடலை ஹம்மிங் செய்தபடி மிகவும் உற்சாகமாகத் தயாராகிக் கொண்டிருந்தவனை விசித்திரமாகப் பார்த்த ஆகாஷ், “பாஸ்… ஆர் யூ ஓக்கே?” எனக் கேட்டான் புரியாமல்.

 

“எ…எனக்கு என்ன? ஐம் ஓக்கே ஆகாஷ்… ஏன்? என்னாச்சு?” எனப் பிரணவ் தடுமாறவும், “இல்ல பாஸ்… காலைல இருந்து ரொம்ப குஷியா இருக்கீங்க போல… பாட்டு விசில்னு ஹோப்பியா இருக்கீங்க… ரொம்ப வருஷம் கழிச்சு நீங்க இவ்வளவு ஹேப்பியா மனசு விட்டு சிரிச்சு பார்க்குறேன்…” என்றான் ஆகாஷ் புன்னகையுடன்.

 

பதிலுக்கு புன்னகைத்த பிரணவ், “எனக்கும் தெரியல ஆகாஷ்… பட் சம்திங் ஸ்பெஷலா ஃபீல் பண்ணுறேன் இன்னைக்கு…” என்றான் பிரணவ் தலையைக் கோதி விட்டபடி.

 

ஆகாஷ், “ஒருவேளை இந்த ப்ராஜெக்ட் நம்ம கம்பனிக்கு தான் கிடைக்க போகுதோ… அதனால இப்படி ஃபீல் ஆகுதா இருக்குமோ?” எனக் கேட்கவும் தோளைக் குலுக்கிய பிரணவ், “தெரியல… சான்ஸ் இருக்கு… பாசிடிவ்வா திங்க் பண்ணலாம்…” என்றான் புன்னகையுடன்.

 

அவனின் சந்தோஷ மனநிலையைக் கெடுப்பது போலவே அனுமதி கூட வாங்காது உரிமையாய் அவ் அறைக்குள் நுழைந்தாள் அர்ச்சனா.

 

அவளைக் கண்டு கடுப்பான பிரணவ், “டோன்ட் யூ ஹேவ் எனி மெனர்ஸ் அர்ச்சனா? இப்படி தான் பர்மிஷன் கூட கேட்காம ஒருத்தரோட ரூமுக்குள்ள என்ட்ரி ஆகுவியா?” எனக் கேட்டான் கோபமாக.

 

அர்ச்சனா, “நான் உங்க ஃபியூச்சர் வைஃப் பிரணவ்… உங்க ரூமுக்கு வர நான் யாரோட பர்மிஷன் கேட்கணும்?” எனக் கேட்டாள் புரியாமல்.

 

“என் கிட்ட கேட்கணும்… இன்னும் நமக்கு கல்யாணம் ஆகலயே… அதனால தயவு செஞ்சி டிஸ்டான்ஸ் மெய்ன்டெய்ன் பண்ணு… மோர் ஓவர் இது என் ரூம் மட்டும் இல்ல… ஆகாஷும் என் கூட தான் ஸ்டே பண்ணி இருக்கார்… ரெண்டு பசங்க இருக்குற இடத்துல எப்படி நடந்துக்கணும்னு ஃபர்ஸ்ட் கத்துக்கோ… நவ் கெட் அவுட் ஃப்ரம் ஹியர் என்ட் வெய்ட் ஃபார் அஸ் இன் அவுட் சைட்…” எனப் பிரணவ் வார்த்தைகளைக் கடித்துத் துப்ப, கோபமாக அங்கிருந்து வெளியேறினாள் அர்ச்சனா.

 

நேற்று பிரணவ் அவளை எதுவும் கூறாது அமைதியாக இருந்ததால் அவன் தன் பக்கம் விழுந்து விட்டதாக எண்ணி இன்னும் அவனை தன் வசப்படுத்தவே அனுமதி கூட வாங்காது உரிமையாய் வந்தாள் அர்ச்சனா. 

 

ஆனால் பிரணவ்வோ அவளை மூக்குடைத்து அனுப்பி விட்டான்.

 

அதனைக் கண்டு ஆகாஷ் உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டான்.

 

பிரணவ், “ஷிட்… மூடயே ஸ்பாய்ல் பண்ணிட்டா… இரிட்டேட்டிங் இடியட்… இவளை எல்லாம் எப்படி தான் நான் லவ் பண்ணேனோ?” எனக் கடுகடுக்க, “பாஸ்… பல்லவன் இன்டஸ்ட்ரீஸ் எம்.டி இந்தியா ரீச் ஆகிட்டாங்க..‌.” என அவனைத் திசை திருப்பினான் ஆகாஷ்.

 

************************************

 

பல அடுக்கு மாடிகளைக் கொண்ட வெளிநாட்டு கம்பனிகளைப் போன்று கண்ணைக் கவரும் விதத்தில் இருந்த பல்லவன் இன்டஸ்ட்ரீஸ் கம்பனி பரபரப்பாகக் காணப்பட்டது.

 

ஒரு சிறிய குறை இருந்தால் கூட தம் எம்டியிடம் இருந்து ஏகத்துக்கும் திட்டு விழும் என்பதை அனைத்து ஊழியர்களும் புரிந்து வைத்திருந்தனர்.

 

கம்பனியில் அவர் கால் எடுத்து வைத்ததில் இருந்தே தன் பீ.ஏவிடம் சின்னச் சின்ன குறைகளை எல்லாம் சுட்டிக்காட்டி திட்டிக் கொண்டிருந்தார்.

 

பிரணவ் ஆகாஷ் மற்றும் அர்ச்சனாவுடன் எம்.டி. ஐ சந்திக்க பல மணி நேரமாகக் காத்திருந்தான்.

 

அர்ச்சனா, “இன்னும் எவ்வளவு நேரம் தான் வெய்ட் பண்ணுறது? நாங்க இங்க வந்து ஆல்மோஸ்ட் த்ரீ ஹவர்ஸ் ஆகிடுச்சு…” என்றாள் கடுப்பாக.

 

ஆகாஷ், “அவங்கள சந்திக்க நமக்கு நேத்து அப்பாய்ன்மென்ட் கிடைக்கல… பட் மூர்த்தி சார் எப்படியாவது அவங்கள மீட் பண்ணி இந்த ப்ராஜெக்ட்ட நம்ம கம்பனிக்கு வாங்கிட்டு வர சொன்னாங்க…” என்றான் விளக்கமாக.

 

“அதுக்காக இவ்வளவு இறங்கி போகணுமா நாம? அதான் மீட் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்களே… இன்னும் எதுக்காக நாம இங்க வெய்ட் பண்ணணும்?” என அர்ச்சனா கோபமாகக் கேட்க, ஆகாஷ் எதுவும் கூறாது அமைதியாக இருந்தான்.

 

பிரணவ்வோ இவை எதையுமே கண்டுகொள்ளாமல் முகத்தில் புன்னகையுடன் எம்.டியின் அறையையே ஆவலுடன் நோக்கிக் கொண்டிருந்தான்.

 

ஒரு வழியாக ஐந்து மணி நேர காத்திருக்குப் பின் எம்.டியின் பீ.ஏ வந்து மூவரையும் உள்ளே அழைத்துச் சென்றார்.

 

பிரணவ் முதல் ஆளாக உள் நுழைந்தவன் எம்.டியின் இருக்கையில் யாரையும் காணாது முகம் வாட, அவனைத் தொடர்ந்து வந்த ஆகாஷும் அர்ச்சனாவும் அந்தக் கேபினைப் பார்வையால் அலசினர்.

 

“மேடம் இப்போ வந்துடுவாங்க… நீங்க கொஞ்சம் நேரம் வெய்ட் பண்ணுங்க சார்…” என்று விட்டு அந்த பீ.ஏ சென்று விட, ‘மேடமா?’ என ஆகாஷும், ‘இவ்வளவு நேரமா வெய்ட் பண்ணது பத்தலயா? இன்னும் வெய்ட் பண்ணணுமா?’ என அர்ச்சனாவும் ஒரே சமயம் எண்ணினர்.

 

அங்கிருந்த இருக்கையில் அமர்ந்த பிரணவ்வின் இதயம் ஏனோ வழமையை விட பல மடங்கு வேகமாகத் துடித்தது.

 

பெருமூச்சு விட்டபடி தன் நெஞ்சை நீவி விட்டவனைக் கலக்கமாகப் பார்த்த ஆகாஷ், “பாஸ் என்னாச்சு?” எனக் கேட்டான் பதட்டமாக.

 

“நத்திங் ஆகாஷ்… ஜஸ்ட்…” என்ற பிரணவ் ஏதோ சத்தம கேட்டுத் திரும்பிப் பார்க்க, அவனைத் தொடர்ந்து சத்தம் வந்த திசையைத் திரும்பிப் பார்த்த ஆகாஷ் மற்றும் அர்ச்சனா அதிர்ச்சியில் எழுந்து நின்று விட்டனர்.

 

அந்த அறையின் ஒரு பக்கம் இருந்த கதவு ஒன்றைத் திறந்து கொண்டு ஐந்து வருடங்களுக்கு முன் பார்த்தவளா இவள் என யோசிக்கும் வண்ணம் நடை, உடை, பாவனை அனைத்திலும் தனக்கே உரிய கம்பீரத்துடன் சாதாரண ஒப்பனையில் அதிக வேலைப்பாடற்ற சில்க் சேலை ஒன்றை அணிந்து கழுத்தில் பொன் தாலி மின்ன, முகத்தில் மருந்துக்கும் புன்னகை இன்றி அவர்களை நோக்கி நடந்து வந்தாள் அனுபல்லவி.

 

அனுபல்லவியை அங்கு எதிர்ப்பார்க்காது ஆகாஷும் அர்ச்சனாவும் அதிர்ந்து நின்றிருக்க, பிரணவ்வோ காரணமே இன்றி அவளின் கழுத்தில் தொங்கிய தாலியையே வெறித்தான்.

 

“ஏன் நின்னுட்டு இருக்கீங்க? ப்ளீஸ் சிட் டவுன்…” என அனுபல்லவி முன் பின் அறிமுகம் இல்லாதவர்களுடன் பேசுவது போல் அந்நிய குரலில் கூறி இருக்கையைக் காட்டவும் அவளின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு மூவரும் அமர்ந்தனர்.

 

அர்ச்சனா, ‘சனியன் தொலஞ்சிட்டான்னு கொஞ்சம் காலம் நிம்மதியா இருந்தா திரும்ப வந்துட்டா… ச்சே…’ என மனதில் கோபமாக எண்ணியவள் பிரணவ்வைத் திரும்பிப் பார்க்க, ஆகாஷும் பிரணவ்விடம் ஏதாவது மாற்றம் இருக்கிறதா எனத் திரும்பிப் பார்த்தான்.

 

பிரணவ்வின் பார்வை சென்ற திக்கை இருவரும் குழப்பமாகப் பார்க்க, அப்போது தான் அனுபல்லவியின் கழுத்தில் தொங்கிய பொன் தாலி அவர்களின் பார்வையில் பட்டது.

 

“அனு உனக்கு…” என ஆகாஷ் அதிர்ச்சியுடன் ஏதோ கூற வர, அவன் முன் கை நீட்டித் தடுத்த அனுபல்லவி, “ஆஃபீஸ் டைம்ல பர்சனல் மேட்டர் பேசுறது எனக்கு பிடிக்காது…” என்றாள் இறுகிய குரலில்.

 

சில நொடி அமைதிக்குப் பின் தொண்டையைச் செறுமிய அனுபல்லவி பேச்சைத் தொடங்கினாள்.

 

அதில் தன்னிலை அடைந்த பிரணவ் அவளின் முகம் நோக்க, அவனின் மனமோ, ‘யார் இவங்க? ஏன் இவங்கள பார்த்தா எனக்குள்ள ஏதோ பண்ணுது… பட் அது என்னன்னு தான் புரியல…’ எனக் கேள்வி எழுப்பியது.

 

வேறு சிந்தனையில் மூழ்கி இருந்த பிரணவ் ஆகாஷ் அனுபல்லவியை உரிமையாக அழைத்ததைக் கவனிக்கவில்லை.

 

அன்று ஆப்பரேஷனின் பின் சில நொடிகள் தூரத்தில் அனுபல்லவியைக் கண்டதால் பிரணவ்விற்கு அவளை நினைவில் இல்லை.

 

காலையில் இருந்த உற்சாகம் வடிந்து போய் அதன் காரணம் கூட புரியாது அமர்ந்து இருந்தான் பிரணவ்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
3
+1
3
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்