Loading

அத்தியாயம்  1

பத்துப் பொருத்தங்களைப் பார்த்து
ஒன்பது கோள்நிலைகளை அறிந்து
எட்டுத்திசைகளிலிருந்தும் உறவுகளை அழைத்து
ஏழடி எடுத்து வைத்து
அறுசுவை உணவு படைத்து
பஞ்ச பூதங்களும் சாட்சியாக
நால்வேதங்களும் முழங்க
மூன்று முடிச்சுக்களால்
இரு மனங்கள் சங்கமிக்கும்
ஒரு அற்புத பந்தத்தின் உறவே
“திருமணம்”

கண்களில் காதலைத்தேக்கி, தன்னவளை கரம்பிடிக்க அவன் கை நீட்டி காத்திருக்க, பெண்ணவள் வெட்கத்தை கரம் பிடித்து நின்றிருந்த பொன்னிற சிலை மண்டபத்தின் வாயிலை அலங்கரித்து உறவுகளை வரவேற்று நின்றது.

‘ஆனா பாத்தீங்கனா, அதை கூட சைட் அடிச்சிட்டு நின்னான் ஒருத்தன்’

‘அவன் கபாலம் கலங்குற மாதிரி பின்னால இருந்து ஓங்கி ஒரு அடி….’

‘திரும்பி பார்த்தா….’

‘நம்ம ஹீரோ எழில்

“அல்ப்பமே!  என் ஆள பாக்க ஒரு ஐடியா கேட்டா, இங்க நின்னு பொம்மைய வச்ச கண்ணு வாங்காம பாத்துட்டு நிக்கிற? ” என்று கோபத்தில் அவனை முறைத்து நின்றான்.

“இல்ல மச்சான். இதை பாக்க நானும் என் ஆளும் நிக்கிற மாதிரியே ஒரு பீலிங்கு.”என்று அவனின் தோளில் கையை போட்டு அணைத்தவாறே பார்த்திருந்தான் அபிமன்யு.

“சீ கைய எடு “

அபியும் கையை எடுத்து விட்டு” ஏன் மச்சான்? ” என்று பரிதாபமாக ஒரு லுக்கு விட

“உங்களலாம் வச்சிக்கிட்டு எனக்கு தான் டா பீலிங்கு “என்றதோடு மட்டுமில்லாமல் சில பல வார்த்தைகளோடு அவனை ஒரு வழியாக்கிக்கொண்டிருக்க

“மச்சான்! மீசை நம்மல நோக்கி வருது”என்று அவன் எழிலை போட்டு உலுக்க

அவனோ பதறி, “ஐய்யையோ எங்கே? “

“அதோ அங்கே! “என்று மண்டபத்தின் உள்ளே இருந்து வெள்ளை வேட்டி சட்டையுடன் இவர்களையே நோட்டமிட்ட படி திருமணத்திற்கு வந்த உறவுகளை வரவேற்றபடி கம்பீரமாக நடந்து வந்தவரை காட்டினான்.

‘அவர் தான் நம்ம எழிலோட அப்பா பாலகுமார். ஆனா நம்ம எழில் வச்ச பேரு கொக்கிகுமாரு. ரிடையர் ஆன ஸ்கூல் பிரின்சிபல். எல்லார்கிட்டையும் சாந்தமா பேசுவாறு ஆனா எழில் கிட்ட மட்டும் எம்.டன் னா இருப்பாருஏன்னா நம்ம ஹீரோ வோட டிசைன் அப்பிடி

“விடிஞ்சா கல்யாணம். இங்க நின்னு என்னடா பண்ணிட்டு இருக்கிங்க? “

“அ..அது வ..ந்து பா…மண்டப டெகரேஷன்லாம் சரியா இருக்கான்னு…பாக்க வந்தோம்”

“அதெல்லாம் நான் பாத்துக்குறேன். முதல்ல போய் தூங்கு”

“சரிப்பா”என்று வேகமாக தலையாட்டி விட்டு மண்டபத்தின் உள்ளே சென்று மறைய அபியும் நைசாக நழுவப் பார்க்க

“டேய் நீ எங்க போற?”

“அ..அவன தூங்க வைக்க…”

“அவன் என்ன குழந்தையா?
போ…போய் அப்பத்தாவோட பல் செட்டை தேடி குடு. காணோம் னு தேடிட்டு இருக்கு” என்று அவர் சென்று விட்டார்.

“அந்த கிழவிக்கு இப்ப இது ரொம்ப…முக்கியம்” என்று முணுமுணுத்துக்கொண்டு அப்பத்தாவின் அறை நோக்கி செல்ல

“எங்கடா போற?”

“உங்கப்பா தான் அப்பத்தாவோட பல் செட்டை தேடி குடுக்க சொன்னாரு”

“ஒரு ஆணியும் தேவையில்ல. வந்து எனக்கு ஹெல்ப் பண்ணு” என்று அபியின் சட்டைக் காலரை பிடித்து இழுத்தவாறு அழைத்து சென்றான் எழில்.

மணமகள் அறை

சுற்றிலும் லூசு, நடுவிலே நம்ம ஹீரோயின் பீஸு 
அவர்களுக்கு கதை சொல்லிக் கொண்டிருந்தாள்.

“கும்மிருட்டு”

“அறையெல்லாம் கறுப்பு”

“பின் ட்ரொப் சைலைன்ஸ்…”என்று ஹஸ்கி வாய்சில் நம்ம ஹீரோயின் யாழினி பேய் கதை சொல்லிக்கொண்டிருக்க, அவளின் நட்பு வட்டாரமும் ஆர்வமாக கதை கேட்டுக்கொண்டிருந்தது.

“ரூம் கிட்ட வந்தவனோட மனசெல்லாம் பட பட னு அடிச்சிக்குது”

“மெதுவா…கதவு கிட்ட போனா கதவு தானா திறக்குது” என்று அவள் சொல்லிக்கொண்டிருக்க
பால்கனி பக்கம் இருக்கும் ஜன்னல் மெதுவாக திறப்பட்டது.

அதைப் பார்த்த ஒரு அரை லூசிற்கு  பயத்தில் வார்த்தை வராமல்  அருகில்
இருந்தவளை சுரண்ட அவளோ ஆர்வமாக யாழினியின் கதையை கேட்டுக்கொண்டிருந்தாள்.

“அப்போ…”என்று கதை தொடர்ந்து கொண்டிருக்க

தடாரென்று யாரோ ஒருவன் ஜன்னல் வழியாக குதிக்கும் சத்தம் கேட்ட அடுத்த நிமிடம், வேடன் காக்கையை சுட்டது போன்று அத்தனைபேரும் அலறியடித்து அறையின் ஒவ்வொரு மூலையிலும் தஞ்சம் அடைந்தனர்.

குதித்தவன் அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.

பயத்தில் உறைந்திருந்தவர்கள் அவனை முறைக்க பெண்ணவள் மட்டும் சந்தோஷம் பாதியும் வெட்கம் மீதியும் கொண்டு அவனையே பார்த்திருந்தாள்.

அவளுக்கு,  அந்த நிமிடம் அவளும் எழிலும் மட்டுமே இருப்பது போன்று ஒரு பிரம்மை.

எழிலும் அதைப் பார்த்து ஒரு குறும்பு புன்னகையுடன் அவளை நோக்கி நடந்து வரும் போது தான் அவர்களை சுற்றி இருப்பவர்களை கவனித்தான்.

உடனே தன் பார்வையை மாற்றி அவர்களை கண்களால் வெளியே போகும்படி சைகை காட்ட அவர்களும் “ஓ…” என்று இழுத்தவாறு வெளியே சென்றனர்.

எழில் அவளைப் பார்த்தவாறே நெருங்கி வர அவளோ அவனின் பார்வை வீச்சை தாங்காமல் கண்களை தாழ்த்திக் கொண்டாள்.

நெருங்கி வந்தவன் அவளின் இடையைப் பற்றி இழுத்து தன் கைவளைவில் வைத்து “அம்மு , என்னைக் கொஞ்சம் நிமிர்ந்து  பாரேன்”

“ம்ஹூம்” என தலையாட்டினாள்.

“உனக்காக இப்பிடி ரிஸ்க் எடுத்து வந்துருக்கேன். ஒரு ஹக் , ஒரு கிஸ் இப்பிடி ஒன்னும் இல்லையா?”என்றவனது  குரல் ஏக்கத்தை வெளிக்காட்டியது.

“இப்போ மட்டும் என்ன? நீங்க என்னை ஹக் பண்ணி தானே இருக்கிங்க.” என்றாள் மெதுவாக

“உனக்கு…கொழுப்பு கூடி போச்சு. இதை குறைக்காட்டி சரி வராது”என்றபடி அவன் அவளின் மருதாணி அலங்கரித்த வலதுகையை பிடித்து இழுத்து முகர்ந்த படி இன்னும் அருகே இழுக்க
அவளோ கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

சிறிது நேரம் அவனிடம் எந்த அசைவும் தோன்றாமல் இருக்க மெல்ல கண்களைத் திறந்து அவனைப் பார்க்க

அவனோ அவளை குறும்பாக பார்த்தபடி கண்ணடித்தான்.

அவ்வளவு தான் பெண்ணவள் அவனின் கண்களில் தொலைந்து போனாள்.

“ஓய்! நமக்கு நாளைக்கு கல்யாணம் ஆகப் போகுது. அதுவும் இல்லாம நம்ம நாலு வருஷ லவ்வுக்கு ஒரு கிஃப்ட்டும் குடுத்துருக்கேன். அதுக்கு எனக்கொன்னும் இல்லையா?”என்றவனின் குரலில் தான் நடப்புக்கு வந்தாள்.

பின் அவனை அவள் புரியாது பார்க்க

“உன் கையைப் பாரு” என்றபடி அவளை விட்டு விலகினான்.

அவளது வலக்கையை அலங்கரித்தது ஒரு அழகான மோதிரம்.
ஆடம்பரம் இல்லாமல் எளிமையான வடிவமைப்புடன் இருவரது முதலெழுத்துக்களும் ஒரு இதயத்தோடு கோர்க்கப்பட்டது போன்று இருந்தது
அந்த தங்க மோதிரம்.

யாழினி அவனையே காதலோடு பார்ப்பதை உணர்ந்து
“பிடிச்சிருக்கா?”

“ரொம்ப பிடிச்சிருக்கு”

அவனும் பெருமூச்சு விட்டபடி மீண்டும் அவளை தன் கைவளைவில் வைத்துக்கொண்டு “முதல்ல  நான் உன்னை லவ் பண்றேன்னு சொல்ல, நீ வேண்டாம் னு சொல்ல. அப்பறம் நீயும் ஒத்துக்க , என் வீட்ல வேணாம் னு சொல்ல. அப்பறம் அவங்களுக்கும் உன்னை பிடிச்சு. கல்யாணம் பேசி. ஹப்பா…எத்தனை போராட்டம். அதுக்குள்ள நாலு வருஷம் ஓடிடுச்சு.” என்றவன் சொல்லி முடிக்க

யாழினி “ம்ஹூம் இல்ல” என்று தலையாட்டினாள்.

“இல்லையா, ஏன்?”

“நாலு இல்ல. பத்து வருஷம்”

“பத்து வருஷமா?”என்றவன் அதிர்ந்து பார்க்க

அவளும் ஆம் என்று தலையாட்டியவாறு அவனை விட்டு விலகி மேசையில் இருந்த ஒரு டயரியை எடுத்து அவன் கையில் வைத்தாள்.

அவன் குழப்பமாக அந்த டயரியை திறந்து பார்த்தான்.

முதல் பக்கத்தில்  “யாழினி லவ்ஸ் எழில்” என்று அழகாக எழுதப்பட்டிருந்ததை பார்த்தவன் இதழ்கள் மலர்ந்தன. அதே பக்கத்தில் கீழே இருந்த ஆண்டைப் பார்த்தவன் அதிர்ந்தான்.

“2011” என்றிருந்தது.

அவன் அடுத்த பக்கத்தை திருப்பியவாறு அதில் எழுதப்பட்டிருந்ததோடு மூழ்கிப் போயிருக்க, இருவரது நினைவுகளும் பத்து வருடங்கள் பின்னால் சென்றன.

2011 மார்ச் 20

அந்த பாடசாலை மண்டபமே மாணவர் வருகையால் ஜே ஜே என்று நிறைந்திருந்தது. ஒரு பக்கம் அதே பாடசாலை மாணவர்களும் அவர்களுக்கு அடுத்த பக்கம் வெளிப்பாடசாலை மாணவர்களும் அமர்ந்திருந்தனர். இன்னும் சில வெளிப் பாடசாலை மாணவர்கள் வருகை தந்த வண்ணம் இருந்தனர். அத்தொடு போட்டியை ஒழுங்குபடுத்திய மாணவத் தலைவர்கள் அவர்களது பாடசாலைக்கான பிளேசர்களை அணிந்து மும்முரமாக வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அவர்கள் அணிந்திருந்த பிளேசர்களினாலோ தெரியவில்லை ஆண் பெண் இருபாலாரும் அத்தனை கம்பீரமாக இருந்தனர். வெளிப் பாடசாலை மாணவர்களில் இருந்த மாணவ தலைவர்கள் அவர்களது இடது கையில் பிளேசரை மடித்து வைத்தபடி அமர்ந்திருந்தனர். அதுவும் அங்கே தனி அழகு தான்.

பாடசாலை மட்ட தமிழ் தின போட்டியில் கலந்துகொள்ள ஒரு சிலர் ஆர்வமாக, ஒரு சிலர் பதட்டமாக, இன்னும் சிலர் அரட்டையுடன் இருந்தனர்.

வெளிப்பாடசாலை மாணவர்கள் இருந்த பக்கம் தான் மேல்நிலைப் பிரிவு இரண்டிற்கான நாடக போட்டியில் கலந்துகொள்ள பத்தாம் வகுப்பில் காலடி எடுத்து வைத்திருக்கும் நம் யாழினியும் தீப்தியும் அமர்ந்திருந்தனர். அவர்களது குழுவும் அருகே இருந்தனர்.

இருவரும் போட்டிக்கு தம்மை தயார்ப்படுத்திக் கொண்டிருந்தனர். ச்சே ச்சே அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.

“என்னா பங்கு இங்க வந்தவுங்கள்ள யாருமே பாக்குறமாதிரியே இல்லையே”

“சும்மா இரு யாழு. நாம இங்க கம்படிஷன்கு தான் வந்து இருக்கோம்”

“ஆ.. அந்த ஈர வெங்காயம் லாம் எங்களுக்கும் தெரியும். எவ்ளோ நேரம் தான் இப்பிடியே உக்காந்து இருக்கது. ஒரு என்டடெயின்மண்ட் வேண்டாமா?”

“இன்னும் கொஞ்ச நேரத்துல ஓபனிங் இவன்ட் தொடங்கி முடிஞ்சதும் கம்படிஷன் ஸ்டார்ட் ஆகும். அது வரைக்கும் வா.சு.”

“போடீங்க. ஆனாலும் பரவால்ல. இந்த ஸ்கூல் ஹெட்ஸ் நல்லா இருக்காங்க.”

“ஆமால்ல”

“தீப்தி நீ சொல்லு, உனக்கு எந்த ஸ்கூலு?”

“ஹேய்! எனக்கு அப்பிடியெல்லாம் இல்லை. ஆனா…அந்த புளூ பிளேசர் மட்டும்…வேணாம்”

“ஏம்பா உன் டேஸ்டு அப்பிடி போகுது?”

“அ..அது சரி. நீ ட்ராமா கு எல்லா டயலாக்கும் பாடமாக்கிட்டியா?”

“கதைய மாத்திட்ட பாத்தியா. அதுல எல்லாம் ஐயா கில்லி டா”என்று அவள் தன் சட்டைக் காலரை பெருமையாக இழுத்து சொல்லிக்கொண்டிருக்க
இவர்களது அரட்டையை பொறுக்க முடியாமல் ஒரு மாணவத்தலைவன் தடுமாறிக் கொண்பிருந்தான். அவன் மட்டும்  இல்லை அவனைப் போல இன்னும் சிலருக்கும் அதே நிலைமை தான்.  ஏனென்றால் தலைமை அதிதி வரும் வரை மண்டபத்தை சற்றேனும் அமைதியாக வைத்திருக்க வேண்டுமே.

சிறிது நேரத்தில் இவர்களது பொன்னான நேரத்தை வீணடிக்காமல் தலைமை அதிதியும் வருகை பெற, நிகழ்வும் ஆரம்பமானது.

முதலில் மங்கள விளக்கேற்றல், வரவேற்புரை எல்லாம் முடிய அதிபரின் உரை நிகழ ஆரம்பித்தது.

அப்போது யாழினியின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவியும் இவர்களது நாடக குழு தலைவியுமான வானதி யாழினியை தட்டி கூப்பிட்டு,” நீ இவ்ளோ நாள் இந்த ஸ்கூல் கம்படிஷன்கு வந்ததில்லை ல. இப்ப பாரு வேடிக்கைய”

“ஏன் கா”

“இந்த ஸ்பீச் உனக்கு ரொம்ப….மோடிவேஷனா இருக்கும் பாரேன்.”

“அதையும் பாத்துடுவோம்” என்கையில் அதிபரோ உரையை ஆரம்பித்தார்.

‘அன்பார்ந்த மாணவர்களே !
பாடசாலை மட்ட தமிழ் தின போட்டியில் பங்குபெற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ‘
என்று ஆரம்பித்தவர். அவரது பாடசாலை மாணவர்களைப் பார்த்து
“இவர்களெல்லாம் ஆண்கள் இல்லை” என்றவுடன் 

யாழினியின் அருகே இருந்த மாணவத்தலைவன்  அதிர்ச்சியில் நெஞ்சில் கை வைத்து “எது???” என்று பார்த்திருக்க

அவரோ சிறிது நேரத்தில்,
” இவர்களெல்லாம் உங்கள் சகோதரர்கள்” என்று அடுத்த இடியை இறக்கினார்.

இதில் வெளிப்பாடசாலை மாணவர்களுக்கு தான் சிரிப்பை அடக்குவது பெரும் பாடாக இருந்தது.

ஆனால் அவர் விடவில்லை மேலும் பேச்சை தொடர்ந்தார். இவர்கள் மீது பாவம் பார்த்தாரோ என்னவோ ஒரு வாக்கியத்தில் எல்லோரையும் உச்சி குளிர வைத்தார்.

“மாணவர்களே! இவ்வாறான போட்டிகள் நடாத்தப் படுவது. உங்களுக்குள் ஒரு நல்ல உறவுப் பாலத்தை கட்டியெழுப்புவதற்கே.”
என

வானதி,”நல்லா கட்டுறாய்ங்கய்யா பாலத்தை”என்று தன் வாய்குள்ளே முனங்க

இதை உன்னிப்பாக கேட்ட யாழினியும் தீப்தியும் பட்டென்று சிரித்து விட்டனர்.
இவர்களின் அருகே நின்ற மாணவத் தலைவனின் முகத்திலும் புன்னகை எட்டிப் பார்த்ததோ என்னவோ.

ஒருவாறு அவரின் உரையும் முடிய போட்டியை ஆரம்பிக்க முதல் அப் போட்டியைப்பற்றி பேச தலைமை மாணவத் தலைவனை அழைத்தனர்.

அறிவிப்பாளர்,”இப்போது தலைமை மாணவத் தலைவன் திரு. பாலகுமார் எழிலை அழைக்கின்றோம்”என

கருநீல நிற பிளேசர் அணிந்து ஒரு துள்ளல் கலந்த கம்பீரமான நடையுடன் அளவான உயரத்தில் அழகான புன்னகையுடன் நடந்து வந்தான் ஒரு மாணவன்.

அவனையே ஆர்வமாக பார்த்திருந்த பெண்களுள் நம் யாழினியும் அடக்கம் என்று சொன்னால் மிகையாகாது.

அவள் மனதில் மலர்ந்த முதல் ஈர்ப்பு….

தொடரும்…

-✒NP📒-

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்