“தாய் தமிழுக்கு என் முதல் வணக்கம்!” என்று ஆரம்பித்தவனது கம்பீரமான குரல் அந்த அரங்கையே கட்டிப்போட்டது. மெலிந்த தேகத்தில் அவ்வளவு பெரிதாக ஒலித்த அவனது குரல் அனைவரையும் வியக்க வைத்தது.
யாழினியின் கண்களுக்கு அவன் மட்டுமே தெரிந்தான்.
தீப்தி,” யாழு அந்த அண்ணா செம்ம ல?”
அவளும் அவனைப் பார்த்தவாறே “ஓய்! அவரு உனக்கு தான் அண்ணா. எனக்கு இல்ல.”
“அடிப்பாவி. கதை அப்பிடி போகுதா?”என
யாழினி பட்டென்று நடப்புக்கு வந்து,”ஹே, நீ நினைக்கிற மாதிரி எல்லா இல்ல. ஒன்லி சைட்டிங் தான்.”
“ஓ…ஓகே ஓகே”என்று ஒரு மாதிரியாக தலையாட்ட
“செருப்பு பிஞ்சிடும்”
“நீ செருப்பு இல்லையே, ஷு தானே போட்டுருக்க”
“செம்ம மொக்க. கொஞ்ச நேரம் சும்மா இரு. நான் ஸ்பீச்ச கவனிக்கனும்”
தீப்தி “ம்ஹூம்” என்று கோபமாக முகத்தை திருப்பி மேடையை கவனித்தாள்.
ஒருவாறு ஆரம்ப நிகழ்வு முடிய போட்டிகள் ஆரம்பமானது. அதற்காக போட்டியாளர்களை ஒவ்வொரு குழுவாக பிரித்து அவர்களுக்கு வழிகாட்ட ஒவ்வொரு மாணவத் தலைவர்களை நியமித்தனர். அவர்களும் வழி நடத்தியவாறு அவர்களுக்கான போட்டி நடைபெறும் இடத்திற்கு கூட்டிச்சென்றனர்.
யாழினியின் அதிஷ்டமோ என்னவோ நாடக போட்டிக்கான குழுக்களை வழி நடத்தும் பொறுப்பு எழிலுக்கு ஒப்படைக்கப்பட்டது. போகும் வழியெங்கும் அவனை சைட் அடிக்கும் வேலையை சிறப்பாக செய்தாள்.
எழிலும் அவர்களை அழைத்து சென்று ஓரிடத்தில் நிற்க வைத்து அனைத்து போட்டி குழுக்களும் வந்தார்களா என சரிபார்த்துக் கொண்டிருந்தான். அதற்காக அவரவர் குழுக்களினதும் குழு உறுப்பினர்களினதும் பெயர்களை அழைத்தான்.
“யாழினி தமிழ்ச்செல்வன்” என்று அவன் அவளை அழைத்ததில் அவளோ பதில் கூறாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவனும் யாழினி வரவில்லை என்று நினைத்து அடுத்த உறுப்பினரை அழைத்தான்.
தீப்தி இவளின் நிலையைப் பார்த்து அவளது கையைக் கிள்ளி” அடியேய் உன்ன தான் இப்போ கூப்பிட்டாங்க” என்று சொல்லி முடிக்கவும் சம்பந்தமே இல்லாமல் யாழினி கையை தூக்கவும் சரியாக இருந்தது.
எழிலும் அவளை திரும்பிப் பார்த்து புன்னகைத்து விட்டு” ஹோ…உங்க பேரை நான் கூப்பிடலயா? சாரிங்க. உங்க பேரு?”
எழில் அவளிடம் பேசி விட்டான் என்ற குஷியில் “யாழினி தமிழ்ச்செல்வன் ” என்றாள்.
மீண்டும் அவன் முகத்தில் அழகான புன்னகை குடி புகுந்தது. அவனும் சரி என்று தலையாட்டிவிட்டு பெயரை சரிபார்த்து விட்டு அடுத்த குழுவிடம் நகர்ந்தான்.
‘உங்க பெயரை நான் முதல்லயே கூப்பிட்டனே கவனிக்கலயா? ‘என்று திருப்பி கேட்காமல் ஒரு புன்னகையோடு அதைக் கடந்தவனை யாழினிக்கு பிடிக்காமல் போனால் தான் தவறாகி விடும். அவளும் அவன் முன்னே வழிந்ததை எண்ணி தனக்குள்ளே புன்னகைத்துக் கொண்டாள். . வானதி என்ட் கோ அரட்டையில் இருந்ததால் இங்கு நடந்ததை கவனிக்கவில்லை. இல்லையென்றால் யாழினி ஒரு வழியாகியிருப்பாள்.
இவர்களுக்கிடையில், இங்கு நடப்பதைப் பார்த்து தன் தலையிலே ‘நங்’ என்று அடித்துக்கொள்வது தீப்தியின் முறையாகியது.
ஒருவாறு போட்டி தொடங்கியது.
ஒவ்வொரு பாடசாலை மாணவர்களும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்று போட்டி போட்டுக்கொண்டிருந்தனர்.
வானதி என்ட் கோ வும் அழைக்கப்பட்டது.
மகாபாரதத்தில் கர்ணனின் இறுதி தருணம் மேடையேற்றப்பட்டது. வானதி கிருஷ்ணனாகவும், யாழினி கர்ணனாகவும், தீப்தி அர்ச்சுனனாகவும் நடித்தனர். அனைவரது நடிப்பும் தத்ருபமாக இருந்தது.
கர்ணன் கிருஷ்ணனிடம் சரணடையும் போது உள்ள காட்சி நடைபெறும் போது மற்ற பாடசாலை மாணவர்களும் அறையின் வெளியே நின்று ஆர்வமாக பார்த்தனர்.
எல்லாம் நன்றாக போகும் போது தான் திருஷ்டி போல் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. வானதியின் குழுவில் பின்னனி இசை வழங்கும் மாணவர்கள் கிருஷ்ணனிற்கு பிஜிஎம் போடுகிறேன் என்ற பேர் வழியில் விஜய் டீவி மகாபாரத பாடலை பாடினர். ஆனால் வெளியே கேட்டது… ‘தேறாத நாறா….எஸ்.வாசுதேவா…’ என்று தான். அறைக்கு
வெளியே இருந்தவர்கள் மட்டும் இல்லாமல் நடித்துக்கொண்டிருப்பவர்களுக்கும் சிரிப்பை அடக்குவது பெரும்பாடாக இருந்தது.
இறுதியாக கர்ணன் பேசும் காட்சி இடம்பெற்றது. குந்தியின் மடியில் தலைசாய்த்து கர்ணன் பேசுயது அனைவரையும் ஒரு நிமிடம் அமைதியின் பிடியில் கட்டிப்போட்டது. சிலர் அழுதே விட்டனர். நாடகம் முடிந்து இவர்கள் வெளியே வர ஆரவாரமாக வரவேற்றனர். எழில் வானதியிடம் வந்து குழுவிற்காக வாழ்த்திவிட்டு விடைப்பெற்றான்.
யாழினி, “எழில் கு அவர் பெயர போலயே அழகான மனசு பாத்தியா? எவ்ளோ அழகா விஷ் பண்றாரு.”
தீப்தி, ” யாரு அவரா? துரைக்கு பிபிசி தான் வரும் போல. சன் டீவி எல்லாம் மைக் ல மட்டும் தான்.”
“போடி உனக்கு பொறாமை”
“யாருக்கு எனக்கா?
போ போய் பேக்க பெக் பண்ணு. வீட்டுக்கு கிளம்பனும்.”
“ஆமால்ல. திரும்ப நான் அவர எப்போ பாக்குறது.”
“ஒரு வேளை நாம ஜெயிச்சா இவன்ட் அன்னைக்கு பாக்கலாம். ம்ஹூம்…எங்க… அந்த தேறாத நாறால பிளேஸ் வந்தா தான். அவளுங்கள தனியா வச்சு செய்யனும். “
“ஹா ஹா..விடு விடு. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா”
வானதி,”எல்லாம் எடுத்து வச்சிட்டிங்களா? பஸ் வந்தாச்சு. வாங்க போகலாம்.”
இருவரும் “சரிக்கா” என்று ஓடிப்போய் பஸ்ஸில் ஏறினர்.
பஸ் கிளம்பும் போது எழில் ஏதோ ஒரு வேலையாக வெளிய வர
யாழினி அவனை ஜன்னல் கண்ணாடி வழியே பார்த்தவாறு சென்றாள்.
————————————
“வந்துட்டியா. உனக்கு தான் இவ்ளோ நேரம் வெயிட் பண்ணேன். கை கால் கழுவிட்டு வந்து சாப்பிடு”
“இதோ வரேன் அத்தை. புஜ்ஜி கிட்ட எல்லாத்தையும் ஷேர் பண்ணிட்டு ஓடி வரேன்.”
“அது சரி…இன்னைக்கு டிராமாலாம் எப்பிடி போச்சு?”
“சூப்பரா போச்சு. நான் சாப்பிட வரும் போது எல்லாத்தையும் சொல்றேன்.”
“சரிம்மா”என்று அவர் சென்று விட
யாழினி ஓடிச்சென்று அவளது புஜ்ஜி, அதாவது அவளது டயரியை எடுத்து இன்று நடந்தது அனைத்தையும் எழுதினாள். முக்கியமாக எழிலைப் பற்றி.
யாழினியின் தாய், அவளது பத்தாவது வயதில் நோய் வந்து இறந்து விட , அவளது அத்தையிடம் தான் வளர்ந்தாள். தமிழ்ச்செல்வன் வாரத்திற்கு ஒரு முறை நேரில் வந்து பார்த்துவிட்டு செல்வார். தாய் இல்லாமல் இவள் வளர்வதால் சற்று கண்டிப்புடனே இருப்பார். பாசம் இருந்தாலும் அதைப் பெரிதாக காட்ட மாட்டார். ஐந்து நிமிடம் மட்டுமே இவர்களது உரையாடல் இருக்கும். கண்டிப்புடன் நடந்தாலும் இவளது சுதந்திரத்திற்கு என்றும் தடை போட்டதில்லை.
என்ன தான் அத்தை மடி மெத்தையாக இருந்தாலும் அன்னை மடிக்காக பல நாள் ஏங்கியிருக்கின்றாள். அதனால் புஜ்ஜி தான் இவள் உலகமாகியது. இவள் புஜ்ஜியிடம் பேசாத நாளே இல்லை. அதுவும் அவளிடம் திருப்பி பேசாவிட்டாலும் அவளுக்கென்ற ஒரே ஆறுதல் புஜ்ஜி தான். அவளது புஜ்ஜியை யாரிடமும் கொடுக்க மாட்டாள். தீப்தி கூட பல முறை கேட்டும் கொடுக்கவில்லை.
போட்டி முடிவுகள் அனைத்து பாடசாலைகளுக்கும் அறிவிக்கப்பட்டது. இவர்களது குழு தேறாத நாறாவில் சற்று தேய்ந்து போய் மூன்றாவது இடத்திற்கு வந்திருந்தது.
அந்த பாடசாலையின் தமிழ் விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.
எழிலை மீண்டும் பார்க்க மாட்டோமா என்றிருந்தவளுக்கு பட்டுக்கரையிட்ட வெள்ளை வேட்டிச் சட்டையில் கம்பீரமான நடையுடன் அவள் கண்களுக்கு விருந்தாகிப்போனான்.
இவளுக்கென்றே மேலே ஒருவன் எழுதுவான் போல. பரிசை மாணவர்களுக்கு பிரதம அதிதி வழங்கும் போது அவருக்கு பக்கத்திலேயே நின்றான். ஆனால் எழில் இவளை கவனிக்கவில்லை. மும்முறமாக சான்றிதழ்களை சரிபார்த்துக் கொண்டிருந்தான். யாழினியும், மேடையில் நிறைய பேர் நின்றதால் கொஞ்சம் டீசண்டாக சைட் அடித்து பரிசை வாங்கி விட்டுச் சென்றாள்.
இரண்டு வருடங்கள் ஓடியது….
எழிலை மீண்டும் நேரில் பார்க்க முடியாமல் போனாலும் பேஸ்புக் மூலம் அவனது அத்தனை பேஸையும் தெரிந்துவைத்திருந்தாள்.
உயர்தரத்தில் வணிகப்பிரிவை தேர்ந்தெடுத்து படித்துக் கொண்டிருந்தாள். இதில் அவனும் அதே பிரிவில் தேர்ச்சியடைந்து பல்கலைக்கழகத்திற்கு தேர்வாகியது கேள்விப்பட்டதும் சந்தோஷப்பட்டாள்.
இவளும் நன்றாக படித்து பல்கலைக்கழகத்திற்கு தேர்வாக வேண்டும் என்று படிப்பில் இறங்க. எழிலின் நினைவுகள் இரண்டாம் பட்சமாகியது. ஆனாலும் அவனைப் பற்றி தெரிந்து கொள்வதை விடவில்லை. அவனைப் பற்றி ஆழமாக யோசிக்காவிட்டாலும் ஆசைக்காக ஒவ்வொன்றையும் தெரிந்து கொண்டாள். எழில் அவளது முதல் ஈர்ப்பு என்பதையும் ஏற்றுக்கொண்டாள்.
ஒரு நாள், பரீட்சைக்கு படிக்கிறேன் என்று குரூப் ஸ்டயில் கும்மியடிக்க தீப்தியின் வீட்டில் யாழினி என்ட் கோ கூடியிருந்தனர்.
அன்று அரட்டை சுவாரிஸ்யமற்று போக பிரான்க் கோல் பண்ண முடிவுசெய்தன்ர். பிரான்க் கால் ஐடியா கொடுத்ததே யாழினி தான். ஆனால் அவளே எதிர்பாக்காதது அழைப்பு எழிலுக்கு விடுக்கப்பட்டது தான்.
எல்லாம் தீப்தியின் திருவிளையாடல்!
“தீப்தி சொன்னாக் கேளு. ஃபோன குடு. தேவையில்லாத வேலை பாக்காத”
“கேர்ள்ஸ்! அவ வாயையும் கையையும் கட்டுங்க”என்ற தீப்தியின் ஆடருக்கு பலியாகினாள் யாழினி. அவளது கோலம் காஞ்சனா படத்தில் பேயிடம் அடிவாங்கிய கோவை சரளாவிற்கே டஃப் கொடுப்பது போல் இருந்தது.
அவளை அங்கு ஒரு மூலையில் கட்டிப்போட்ட பின் அன்றைய தாக்குதல் ஆரம்பமானது.
தீப்தி, ” ஹே! ரிங்ஸ் போகுது!”என்று கூச்சலிட
யாழினியோ வாய் கட்டப்பட்ட நிலையில் “ம்ம்” என்று முனங்கிக்கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்தில் அழைப்பு ஏற்கப்பட்டது.
“ஹேலோ… யாரு?”என்ற கம்பீரமான குரல் மீண்டும் ஒலித்தது.
தொடரும்….
-✒NP📒-