Loading

               ஆதியின் செய்கையை கண்ட அகல் எதுவும் பேசாமல் அறையினுள் சென்றுவிட, எழுந்த அவனிடம் மகிழ், “அவ கோபம் நியாயமானது. ஆனா நீங்க எதனால அப்படி நடந்துக்கிட்டீங்கன்னு அவளுக்கு தான் விளக்கம் கொடுக்கனும். போய் பேசுங்க. அவ முடிவு எதுவா இருந்தாலும் அதுக்கு நீங்க சம்மதிக்கதான் வேணும்” என்றாள்.

“கண்டிப்பா சிஸ்டர்” என்ற ஆதி தானும் அறையினுள் செல்ல, மற்றவர்கள் அவர்களுக்கு தனிமை கொடுத்தனர். உள்ளே அகலோ படுக்கையில் அமர்ந்து, ஆதி கட்டிய தாலிச் செயினை கையில் எடுத்து பார்த்துக் கொண்டிருக்க, எதுவும் பேசாமல் தரையில் அமர்ந்தவன் அவனாக தன்னிலை விளக்கம் கொடுத்தான்.

“அவ பேரு ஸ்ருதிகா. காலேஜ்ல படிக்கும்போது ரெண்டு பேரும் லவ் பண்ணோம். அதுக்கு அப்பறம் ரெண்டு வீட்டுக்கும் தெரிஞ்சு ஒத்துக்கல. ஒருமுறை பேசிப்பாருங்கன்னு ரெண்டு வீட்லயும் சொல்லி சம்மதிக்க வைச்சோம். ஆனா அதுவே பெரிய பிரச்சனை ஆகிடுச்சு.

இன்னும் ஒரே மாசத்துல என் பொண்ணுக்கு கல்யாணம். உங்க பையனை ஒழுங்கா இருக்க சொல்லுங்கன்னு சொல்லிட்டு அவங்கப்பா கிளம்பிட்டாரு. அதே கோபத்துல அதுக்கு முன்னாடியே என் பையனுக்கு கல்யாணம் பண்ணி காட்டறேனு அம்மா வேகமாக பொண்ணு பார்த்தாங்க.

நான் எவ்வளவோ சொல்லியும் கேட்கல. கடைசியா என்னை ஒத்துக்க வைக்க உயிரை ஆயுதமாக ஆக்குனாங்க. எங்கப்பா என்னோட சின்ன வயசிலேயே தவறீட்டாங்க அகல். எல்லா முடிவும் எங்க அம்மாவோடதுதான்.

அவங்க பாசத்தை கூட அதிரடியாதான் காட்டுவாங்க. அதுக்காக அவங்க உயிர் போனாலும் பரவால்லன்னு என்னால விட முடியல. கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். ஆனா எப்படியாவது உன்கிட்ட பேசி கல்யாணத்தை நிறுத்த எவ்வளவோ முயற்சி பண்ணேன்.

ஆனா கடைசி வரை உன்கிட்ட பேச கூட முடியல. அப்பறம்தான் தெரிஞ்சது. உன்னோட நம்பரை எங்கம்மா மாத்தி என்கிட்ட குடுத்ததால கால் போகலன்னு. எங்கம்மா மேல இருந்த பாசமெல்லாம் போய் வெறுப்பு வந்தது அப்பதான். அவங்க பிடிவாதத்துக்காக நம்ப வாழ்க்கையை பணயம் வைச்சுட்டாங்கன்னு.

அதுக்கப்பறம் உன்கிட்ட என் நிலைமையை புரிய வைச்சு கொஞ்சம் டைம் கேட்கலாம்ன்னு யோசிச்சேன். ஆனா அதுக்குள்ள கல்யாணத்தன்னிக்கு நைட் எங்கம்மா, “இவ்வளவு தான் வாழ்க்கை. பழச எல்லாம் மறந்துட்டு ஒழுங்கா இவ கூட வாழற வழியை பாரு.

உன்னை பத்தியெல்லாம் அந்த பொண்ணுகிட்ட சொல்லியாச்சு. அதனால எதையாவது உளறி வைச்சு நீயே உன் வாழ்க்கையை கெடுத்துக்காத” அப்படீன்னு சொன்னாங்க. அப்ப எல்லாம் தெரிஞ்சுதான் நீ கல்யாணம் பண்ணிக்கிட்டன்னு உன்மேலயும் கோபம் வந்தது.

அதான் உன்கிட்ட ஹார்ஷா நடந்துக்கிட்டேன். ஆனா அடுத்தநாள் நீ பேசுனதை வைச்சு உனக்கு எதுவும் தெரியாதுன்னு தோணிச்சு. இருந்தாலும் உன்கிட்ட நார்மலா பேச முடியல. உண்மையை சொல்லனும்னா அவ இடத்துல யாரையும் வைச்சு பார்க்க முடியல.

ஆனா நீ என்கிட்ட நடந்துக்கிட்டது, எனக்காக பேசும் போதெல்லாம் ஒரு கில்ட்டி பீல் வரும். என் குழப்பத்தை எல்லாம் தெளிவுபடுத்திக்கனும்னு வெயிட் பண்ணேன். ஒரு கட்டத்துல எல்லாத்தையும் மறந்துட்டு உன் லைஃப்க்காகவாவது உன்கூட வாழனும்னு முடிவு பண்ணேன்.

அப்பதான் மறுபடி அவளை பார்த்தேன். ஆனா நான் நினைச்ச மாதிரி அவ என்னை நினைச்சு கஷ்டப்படவும் இல்ல. அவ்வளவு ஏன் என்னை நினைக்கவும் இல்ல. அவளோட ஹஸ்பண்ட்கிட்ட என் காலேஜ் பிரண்டுன்னு அறிமுகம் பண்ணா.

அது கூட பரவால்ல. அவர் போனதும் என்கிட்ட வந்து, “நல்லவேளை நாம கல்யாணம் பண்ணீக்கல. எங்கப்பா சொன்னது தான் கரெக்ட். பார்த்தல்ல அது எங்களோட சொந்த கார். அவர் பெரிய பிஸினஸ் மேன். உனக்கு கூட கல்யாணம் ஆகிடுச்சுன்னு கேள்விப்பட்டேன்.

சந்தோஷம். காலேஜ் லவ் எல்லாம் ஜஸ்ட் பாஸிங் கிளவுட்ஸ்தான் இல்ல ஆதி. ஓகே பாய்” அப்படீன்னு சொல்லிட்டு கிளம்பி போயிட்டா. அஞ்சு வருஷம் அவளை நான் லவ் பண்ணேன் அகல். ஒரே நிமிஷத்துல நான் முட்டாளா போயிட்டேன்.

அன்னைக்கு வீட்டுக்கு வரும்போதே குடிச்சிட்டுதான் வந்தேன். இந்த காதலுக்காக, நான் கஷ்டப்பட்டு, தேவை இல்லாம உன்னை கஷ்டப்படுத்தி என் மேலயே எனக்கு கோபம். எங்க நான் குடிச்சது தெரிஞ்சா தப்பா நினைச்சிடுவியோன்னு உன் முகத்தை பார்க்காம மேல போயிட்டேன்.

ஆனா நடுராத்திரி நீ குளிர்ல நடுங்கும்போது பயந்து போய் நாந்தான் உன்னை மேல படுக்க வைச்சேன். ஆனா அடுத்தநாள் காலையில போதை தெளியும்போது ராத்திரி நடந்தது சட்டுன்னு நியாபகம் வராம, உன்னை நெருக்கத்துல பார்த்து ஏதேதோ பேசிட்டேன்.

எல்லாமே என் தப்புதான். கோபத்துல கிளம்பி போய் கொஞ்ச நேரத்துக்கு அப்பறம்தான் நியாபகம் வந்தது. எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லி மன்னிப்பு கேட்க வீட்டுக்கு வந்தப்ப நீ அங்க இல்லை” எனக் கூறி முடித்தான் ஆதித்யா.

“இப்ப இதெல்லாம் கேட்டு நான் உங்ககூட கிளம்பி வரனும். என்னை பத்தி தப்பா நினைச்சுட்டு இருக்கற எல்லாருக்கும் என்ன பதில் வைச்சிருக்கீங்க. ஓடி போனவளை நான் போய் கூட்டிட்டு வந்துட்டேன்னா?” எனக் கேட்டாள் அகல்.

“யார் அப்படீன்னு சொன்னா, நீயும்,  நானும் வேலைக்காக சென்னைக்கு ஷிப்ட் ஆகிட்டோம்னு தான் எல்லார்க்கிட்டயும் சொல்லியிருக்கேன்” என்றான் ஆதி அவசரமாக.

“இதை எல்லாரும் நம்புவாங்க” என அகல் கேட்க, “யாரும் நம்ப வேணாம். அவ்வளவு ஏன் நாம ஊருக்கே போக வேண்டாம். இங்கையே இருக்கலாம்” என ஆதி கூற, “மறுபடி நீங்க கோபத்துல வெளில துரத்த மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்” என்றாள் அகல்.

“நிச்சயமா மாட்டேன். ஏன்னா இனிமேல் உன் வீட்லதானே நான் தங்க போறேன். தப்பு பண்ணா நீ என்னை துரத்திடு. ஓகேவா” என்றான் ஆதி. “நீங்க சொல்றதெல்லாம் கேட்க நல்லாதான் இருக்கு. ஆனா எனக்கு யோசிக்க கொஞ்சம் டைம் வேணும்” என அகல் கேட்கவும்,

“தாராளமா எடுத்துக்கோ. அதுவரை நான் உன்னை லவ் பண்றதா நினைச்சுக்கறேன். லவ் யூ டார்லிங். உன்னை ரொம்ப கஷ்டப்படுத்தீட்டேன். சாரி. என்ன தண்டனை வேணா குடு. ஆனா கூடவே இருந்து குடு. ப்ளீஸ்” என்றவன் வெளியே வந்தான்.

அவளது மன்னிப்பு, அவளுடனான வாழ்வு இதையெல்லாம் தாண்டி அவளை பார்த்ததும், தனது மனதில் இருந்ததை எல்லாம் கொட்டியதுமே ஒரு பெரிய ஆறுதலை தர, நிம்மதியாக உணர்ந்தவன் சற்று நேரத்தில் அங்கிருந்த மற்றவர்களோடே ஒன்றி போனான். இடையிடையே அகலை பார்வையாலே தழுவவும் மறக்கவில்லை.

அடுத்தநாள் காலையில் சித்து நேராக மகிழின் வீட்டிற்கு வர, அவளே வந்து கதவை திறந்தாள். “என்ன டாக்டரம்மா. இவ்ளோ சீக்கிரம் எழுந்து ரெடியாகிட்ட மாதிரி இருக்கே. சண்டேவும் புரோகிராம் பிக்ஸ் பண்ணீயாச்சா?” எனக் கேட்டுக் கொண்டே உள்ளே வந்தவன்,

“காலையிலேயே ஃப்ரஷ் ஆ இருக்கீயே. அழகிடி” என அவளை முத்தமிட வர, “ஆனா நீங்க அழுக்கா இருக்கீங்க. போய் குளிச்சிட்டு வாங்க” என கையில் டூத் பிரஷ் கொடுத்து குளியலறையில் தள்ளினாள் மகிழ்.

“ஹேய் இதெல்லாம் ஓவர் தெரியுமா? சரி குளிச்சுட்டு வந்து பேசிக்கறேன்” என்றவாறே உள்ளே சென்று ரெடியாகி வெளியில் வந்தபோது, ஹால் முழுக்க நிரம்பியிருந்தனர் அவனது வீட்டினரும், மகிழின் வீட்டினரும், தோழமைகளும். அதில் அவனது சித்தி ஐயம்மாளும் அடக்கம்.

சித்து அவர்களை பார்க்க, அவர்களோ அவனை கண்டு கொள்ளாமல் தீவிரமாக எதையோ பேசிக் கொண்டிருந்தனர். கவினை அழைத்தவன், “என்னடா நடக்குது இங்க?” எனக் கேட்க, “இதுவரைக்கும் எதுவும் இல்ல. இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கு நிச்சயம் நடக்க போகுது.

என்னைத்தான் மாலை வாங்கிட்டு வர சொன்னாங்க. தோ வந்தடறேன்” என நழுவினான் அவன். அடுத்ததாக ஆகாஷை அழைக்க, “நான் ரொம்ப பிஸி மாம்ஸ். ஏதோ திங்க்ஸ் எல்லாம் வாங்க சொல்லியிருக்காங்க” என அவனும் கிளம்பினான்.

இப்படியே சந்துருவும் கிளம்பி விட அப்போதுதான் ஆதியை பார்த்தவன் யாரென்று விசாரித்தான். அவனை பற்றிய விவரங்களை மகிழ் கூற, சித்து, “இவ்வளவு பண்ணீட்டு மன்னிப்பு கேட்டா, சரியா போச்சா. அகல் இவரை மன்னிக்காத” என அவன் பங்குக்கு ஏற்றி விட,

“அச்சோ இன்னும் அவ என்னை மன்னிக்கற ஐடியாவுலயே இல்ல. நீங்க வேற பேசாம இருங்க மச்சான். ஆமா இன்னைக்கு உங்களுக்குதான் நிச்சயமா?” எனக் கேட்டான் ஆதி.

“அச்சோ, மறுபடி கேள்வி கேட்க போறாரு அண்ணன்” என மகிழிடம் கூறிய அகல் ஆதியை முறைத்துவிட்டு மகிழையும் அழைத்துக் கொண்டு நகர, சரியாக வந்தாள் இசை.

அவளிடம் சித்து கேட்க, “இருந்தாலும் இது நியாயமே இல்ல மாம்ஸ். உங்களுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு ஏற்பாடல்லாம் பண்ணா. எதுக்கு பண்றீங்கன்னு கேட்கறீங்க. அப்ப எங்க அக்காவை கல்யாணம் பண்ணீக்கற ஐடியாவே இல்லையா உங்களுக்கு” என்றாள் அவள்.

“ஹேய். நான் எப்ப அப்படி சொன்னேன்” என சித்து கூற, “சரியா கேட்டடா. ம்ம் பதில் சொல்லுங்க. அப்ப என்னை கல்யாணம் பண்ணீக்க அவ்ளோ கஷ்டமா இருக்கு.” என மகிழ் வந்து கேட்க,

அவன் பதில் சொல்வதற்குள், மீனாட்சி, “உள்ள போய் பேசுங்க. இங்க ஏகப்பட்ட வேலை கிடக்கு. அப்படியே ரெடி ஆகிடுங்க” என தள்ளிவிட்டு செல்ல, “நீயாச்சு, மாம்ஸ் ஆச்சு” என அவர்களை அறையினுள் தள்ளினாள் இசை.

உள்ளே சென்றும், “ம்ம் சொல்லுங்க.” என மகிழ் கேட்க, அவளை தனது கைவளைவிற்கு கொண்டு வந்தவன், “அப்படீன்னு நான் சொல்லவே இல்லையே. உன்ன கட்டிக்க கசக்குமா என்ன?” எனக் கேட்டான் சித்து.

“அதான் சொன்னீங்களே. யாரைக் கேட்டு ஏற்பாடு பண்றீங்கன்னு” என மகிழ் கேட்கவும், “கொஞ்சம் பிராப்ளம்லாம் சால்வ் ஆனதும் பண்ணலாம்னுதான். அது மட்டுமில்லாம நீயே இப்பதான் உங்கப்பாம்மா கூட இருக்க. உடனே உன்னை பிரிச்ச மாதிரி இருக்காது” என்றான் சித்து.

“எல்லா பிரச்சனையையும் சேர்ந்து சால்வ் பண்ணலாம் சரியா. அப்பறம் எவ்ளோ நாள் இப்படியே இருக்க முடியும். எப்ப வேண்ணா வந்து பார்த்துக்கதானே போறோம்” என சமாதானம் சொன்னாள் மகிழ்.

சித்து, “யாரு அப்படீன்னு சொன்னா. கல்யாணம் ஆனவுடனே உன்னை கடத்திடுவேனே. அப்பறம் எங்கையும் விடறதா இல்லை.” எனவும், “ம்ம் கடத்துவீங்க. கடத்துவீங்க” என நொடித்தாள் மகிழ்.

“நிஜமாலுமே அப்படித்தான் நினைச்சேன் வதனி. கொஞ்சம் எல்லா பிரச்சனையும் சால்வ் பண்ணீட்டு உனக்கே உனக்குன்னு கொஞ்ச நாளாவது இருக்கனும்னு நினைச்சேன். உன்னை லவ் பண்றேனு சொன்னனே தவிர உனக்காக நான் எதுவுமே பண்ணல. ஏன் டைம் கூட ஸ்பெண்ட் பண்ணல.” என்றான் சித்து வேதனையாக.

“நானும் கூடத்தான் உங்களை கண்டுக்கவே இல்லை. விடுங்க. எல்லாம் சரி பண்ணீக்கலாம். அப்பாம்மா ரொம்ப ஆசைப்படறாங்க அதான். நிச்சயம் மட்டும் பண்ணீக்கலாமா?” எனக் கேட்டாள் மகிழ்

“ஹேய். எனக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன? சூப்பரா பண்ணீக்கலாம். சரியா. கொஞ்சம் வெளில போய்ட்டு வந்தடறேன்” என அவளது நெற்றியில் முட்டி சிரித்தபடியே வெளியே சென்றான். அவன் திரும்பி வரும்போது கூடவே நிரஞ்சனியையும் கூட்டிவர சற்றே பதட்டமானது அனைவருக்கும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்