Loading

அடுத்த நாள் காலையில் கவின் அலுவலகம் வந்து பார்க்க, சித்துவோ அமர்ந்த நிலையிலே டேபிளில் தலை வைத்து படுத்திருந்தான். வேகமாக வந்து அவனை எழுப்பியவன், “டேய் மச்சி, எப்படா வந்த? நீ சென்னையில இருக்கன்னு நினைச்சேன். ஒரு ஃபோன் பண்ண மாட்டீயா?” என சத்தம் போட்டான் கவின்.

“இல்லடா, நைட் ரொம்ப லேட் ஆகிடுச்சு. அங்க இருக்கும்போது கிளையண்ட் ஒரு கொரி கேட்டாங்க. அப்பதான் இன்னைக்கு புராஜக்ட் டெலிவரின்னே நியாபகம் வந்தது. புராஜக்ட் நீயே முடிச்சிட்ட, நான்தான் வெரிபை பண்ணல. அதான் நேரா ஆபிஸ் வந்துட்டேன். பார்த்து பிரசன்ட்டேஷன் ரெடி பண்ணீட்டேன்டா, எத்தனை மணிக்கு மீட்டிங்” எனக் கேட்டான் சித்து.

“அவங்க மதியம் 12 மணிக்குதான் வரேன்னு சொன்னாங்க. சரி நீ போய் கொஞ்சம் தூங்கிட்டு வா. வந்தா நான் மேனேஜ் பண்ணீக்கறேன்” என கவின் கூற, “ஒன்னும் பிராப்ளம் இல்லடா. நான் போய் ஃப்ரஷ் ஆகிட்டு ஒன் ஹவர்ல வந்திடுவேன்” என கிளம்பினான் சித்து.

அதே போல திரும்பி வரும்போதுதான் சென்னைக்கு போன வேலை முடிந்ததா என கவின் கேட்க, இவனும் விவரம் சொன்னான். “ஓ அங்கையே வேலை கிடைச்சாச்சா. சூப்பர்டா. ஆமா நீ என்ன டிசைட் பண்ணியிருக்க. எப்ப கல்யாணம் பண்ணீக்கலாம்னு ஐடியா?” எனக் கேட்க, சித்து, “பார்க்கலாம்டா. இப்ப வந்த கிளையண்டை பார்க்கலாம் வா” என கவினை அழைத்து சென்றான்.

அதற்குபிறகும் இரண்டு மூன்று முறை கவின் சித்துவிடம் திருமணத்தை பற்றி கேட்க, அவன்தான் பிடி கொடுக்கவே இல்லை. அந்த வாரமும் வேலை இருக்க, சென்னைக்கும் செல்லவில்லை. இதற்கிடையில் சென்னையிலும் சந்துருவும், இசையும் பார்த்துக் கொள்வதே அரிதாகி போனது. பல நாட்கள் அவன் அலுவலகமே வரவில்லை.

ஒரு கட்டத்தில் இசையே கடுப்பாகி, “ஏன் ஆகாஷ் இப்பல்லாம் உங்க சாரு ஒழுங்கா ஆபிஸே வர்றது இல்ல.” என ஆகாஷிடம் கேட்க, “என்ன மகி. அவரு பாஸ். நான் வேலைக்கு வரலன்னா அவரு கேட்கலாம். அவரு ஏன் வரலன்னு நான் எப்படி கேட்க முடியும். ஆமா நீ ஏன் அவரை கேட்கற? மிஸ் பண்றீயா என்ன?” எனக் கேட்டான் ஆகாஷ்.

“ஆமா மிஸ் பண்றாங்க. இங்க பாரு. இவ்ளோ ஃபைல் பெண்டிங். சைன் வாங்கனும். அதுக்குதான் தேடினேன்” என்றாள் இசை. “அதுக்கு ஏன் தேடனும். முடிச்சு வைச்சிட்டல்ல. அவரு எப்ப வந்து கேட்கறாரோ அப்ப கொடு. போ போய் வேலையை பாரு. அப்பறம் அவரு எனக்கு மட்டுமில்ல. உனக்கும் சார்தான்” என்றபடியே சென்றான் ஆகாஷ்.

ஆனால் அன்று மதியமே அலுவலகத்திற்கு வந்தான் சந்துரு. இவளை அழைக்கவும் கோப்புகளோடு உள்ளே செல்ல கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வேலையிலே கழிந்தது. வேலையை தவிர எதுவும் பேசவில்லை அவனும்.

வேலை முடித்து கிளம்பும்போது, சந்துரு, “நான் உனக்கு பாஸ் இல்ல. நீதான் எனக்கு பாஸ். நீ என்ன வாடா, போடான்னு சொன்னாலும் எனக்கு ஓகேதான். நான் ஆகாஷ்கிட்ட சொல்லிக்கறேன். யூ கேன் கோ” என்றவன் கோப்புகளில் மறைந்து கொண்டான்.

இசை அவன் கூறுவது புரியாமல் நிற்க, பிறகே ஆகாஷிடம் “உங்க சார்” எனக் கூறியதற்கான பதில் என புரிந்து அவனை முறைக்க, அவனோ தலையை தூக்கி பார்த்தால்தானே. ஓரிரு நிமிடங்கள் நின்று பார்த்துவிட்டு வெளியேறி விட்டாள். அன்றிலிருந்து தினமும் இது தொடர்ந்தது.

அவளுக்கு புரியாத மாதிரியே அவனது வாழ்வில் அவளுக்கு உரிமை இருப்பதை உணர்த்துபவன் அவளிடம் பதிலை எதிர்பார்க்கவே இல்லை. இதற்கிடையில் அகல்யா சென்னை அலுவலகத்திற்கு மாற்றல் கேட்க, இவளது நேரமோ என்னவோ அதே நேரத்தில் அந்த அலுவலகத்தின் முக்கிய பொறுப்பில் இருந்த ஒருவர் பணி விலக இவளது திறமையின் காரணமாக அந்த வேலை இவளுக்கு கிடைத்தது.

இப்போது இருக்கும் நிலையை விட ஒரு படி மேல் நிலையாக அந்த வேலை இருக்க கூடுதல் சந்தோஷம் அவளுக்கு. மகிழுக்கு அழைத்து விசயத்தை கூற, அவளும் மகிழ்ந்து எப்போது வருவதாக இருக்கிறாய் என கேட்டாள்.

“நாளைக்கே, இன்னும் டூ டேய்ஸ்ல ஜாயின் பண்ணனும். ஓகே நான் நேர்ல வந்து பேசறேன்” என அழைப்பை துண்டித்த அகல் சொன்னது போலவே மறுநாள் காலையில் வந்து விட்டாள். தனியாக வீடு பார்ப்பதாக அகல் கூற, மீனாட்சியோ, “அதெல்லாம் வேண்டாம்டா. நீ நம்ப வீட்லயே தங்கிக்கோ” என்றார்.

“இல்லம்மா. தனியாவே இருந்துக்கறேனே” என அகல் கூற, “என் பொண்ணு இத்தனை நாள் உன் வீட்ல இல்லையா. அதவிட ரொம்ப நாளா ஒத்த புள்ளையோட இருந்துட்டேன். நீயும் எனக்கு பொண்ணு மாதிரிதாண்டா” எனப் பேசி அவளை சம்மதிக்க வைத்து விட்டார்.

இருநாட்கள் கழித்து அகல் அலுவலகம் கிளம்ப, இசையின் அலுவலகமும் அவளது அலுவலகமும் பக்கம் என்பதால் அவளோடே போகச் சொன்னார் மீனாட்சி. அவளோ வேறு பக்கம் வேலை இருப்பதால் ஆகாஷை அழைத்து போக சொல்லிவிட்டு நேரமாகவே கிளம்பி விட்டாள்.

அவளுக்கு சென்னை பழகும்வரை தாங்களே அழைத்து சென்று கூட்டி வருவதாக கூறியிருந்தனர் இசையும், ஆகாஷூம். ஒரு வாரம் பார்த்துவிட்டு கம்பெனி வண்டியிலேயே வந்துவிடலாம் என முடிவு செய்துவிட்டு ஆகாஷோடு சென்றாள் அகல்.

சாயங்காலம் தானே அழைக்க வருவதாக கூறி அவன் சென்றுவிட, அகல் அலுவலகத்திற்குள் சென்றாள். மதியம் வரை புதிதாக வேலையில் சேர்வதற்கான வரைமுறைகளை முடிக்க மதிய உணவு நேரமும் முடிந்தது. அதற்கு பிறகு அவளது டீமிற்கு சென்றாள்.

அவளது டீம்லீடரை பார்ப்பதற்காக அவரது கேபின்க்கு செல்ல, அங்கு ஏற்கனவே அவனது பி.ஏ இருந்தாள். அனுமதி கேட்டு உள்ளே செல்ல அங்கு இருந்தவனை கண்டு அகல் அதிர்ச்சி அடைய அதே அதிர்ச்சி அவனது முகத்திலும் தெரிந்தது.

பி.ஏ முன் அதை காட்டிக் கொள்ளாமல் சம்பிரதாயமாக பேச, அவனும் அதையே செய்தான். சில நிமிடங்களிலே வெளியில் வந்தவளுக்கு, பதட்டத்தில் அந்த ஏ.சி அறையிலும் வியர்த்தது. ‘இவன் எப்படி இங்கே’ என அவள் யோசிக்க அவனும் அதையே தான் சிந்தித்து கொண்டிருந்தான்.

வேலையே செய்யாமல் நேரத்தை கடத்தியவள் எப்போதடா மணி ஆகும் என காத்திருந்தாள். முதல்நாளே பாதியில் போக முடியாது என்பதால் பல்லைக் கடித்துக் கொண்டு அமைதி காத்தாள். ஆனால் இவளது படபடப்பை உள்ளிருந்து அவன் பார்த்துக் கொண்டுதான் இருந்தான்.

வேலை நேரம் முடிந்ததும் வேகமாக வெளியே வந்தவள் அப்போதுதான் ஆகாஷ் வர நேரம் இருப்பதை உணர்ந்தாள். அவனது எண்ணை வேறு வாங்காமல் இருக்க, மகிழிடம் கூறிவிட்டு ஆட்டோவில் சென்று விடலாம் என நினைத்தால் அவளுக்கு அழைப்பே செல்லவில்லை.

என்ன செய்யலாம் என யோசிக்கும்போதே அவன் பின்னால் வந்து நின்றான். அவனைக் கண்டதும் எதையும் யோசியாமல் வேகமாக நடக்கத் தொடங்க, “அகல். ஒரு நிமிஷம் நில்லு. உன்கிட்ட நான் கொஞ்சம் பேசனும்” என்றான். “உங்ககிட்ட பேச எனக்கு எதுவும் இல்ல. நான் கிளம்பனும்” என்றவாறே நடக்க, சட்டென அவளது கைகளை பற்றினான் அவன்.

“கையை விடுங்க” என்றபடியே அவள் விடுவிக்க போராட, அதற்குள் அங்கு வந்துவிட்டான் ஆகாஷ். வேகமாக வண்டியை நிறுத்திவிட்டு இறங்கியவன், “என்னாச்சுங்க அகல். என்ன பிரச்சனை?” என்றவன், “என்னாச்சு சார். முதல்ல கையை விடுங்க” என்றான் அவனிடம்.

“இல்லங்க. இவகிட்ட கொஞ்சம் பேசனும்” என அவன் கூறவும், “சரி கையை விடுங்க. வலிக்குது போல” எனவும் பிடி இறுகியிருப்பதை உணர்ந்தவன் கைகளை விட்டான். “உங்களுக்கு இவரை முன்னாடியே தெரியுமா? யார் இவரு?” என ஆகாஷ் கேட்டதற்கு அவள் பதில் கூறாமல் நிற்க, “நான் ஆதித்யா. அவளோட ஹஸ்பண்ட்” என்றான் அவன் பதிலாக.

அவனது பதிலில் அவனை முறைத்தவள், “தாலி கட்டிட்டா மட்டும் யார் வேணும்னாலும் புருஷன் ஆகிடமுடியாது” என கோபமாக கூறியவள், ஆகாஷை வண்டியை எடுக்க சொல்லி கிளம்பி சென்று விட்டாள். ஆதித்யாவோ விக்கித்து போய் நின்றுவிட்டான்.

அவனது வார்த்தைகளை அவனுக்கே திருப்பி படிக்கிறாள். தனக்கே இவ்வளவு வலிக்கும்போது அவளது கோபம் நியாயம் என்றே தோன்றியது அவனுக்கு. வீட்டிற்கு சென்ற அகல் எதுவும் பேசாமல் அறையினுள் முடங்க, ஆகாஷ் ஏதோ கூறிவிட்டு சென்றதில் அவளை யாரும் தொந்தரவு செய்யவில்லை.

அடுத்த நாளே அவளது பணி விலகல் கடிதம் ஆதித்யாவின் மெயிலுக்கு வர, அவனோ அதை டெலிட் செய்துவிட்டு ஒரு வாரத்திற்கு அவளுக்கு விடுமுறைக்கு அப்ளை செய்தான்.

ஏதேதோ யோசித்தவன், அவளது அட்ரஸை எடுத்து, அடுத்தநாளான சனிக்கிழமை வீட்டிற்கே போய் பார்க்க முடிவு செய்தான். அதே நேரம், அந்த வாரம் சென்னை வந்திருந்த சித்துவிற்கும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்