Loading

           இசையின் தந்தை சந்துருவை கேள்வி கேட்டதோடு இசைக்கும் அப்படி ஏதும் எண்ணம் இருக்கிறதா என கேட்டுவிட, அவளோ சந்துருவை முறைத்தாள். அனைவரும் அவனை பார்ப்பதை உணர்ந்து ஆகாஷ் ஏதோ சமாதானமாக கூற வர, விழிகளாலே அவனை தடுத்த சந்துரு ஒரு பெருமூச்சு எடுத்துவிட்டு பேச ஆரம்பித்தான்.

“ஆமா அங்கிள். நான் சொன்னது உண்மைதான். மகியை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனா இதை இன்னும் நான் அவகிட்ட கூட சொன்னது இல்ல. அவ்வளவு ஏன் மகிக்கு என்னை பிடிக்குமான்னு கூட எனக்கு தெரியாது. ஆனா அவ கூட இருந்தா என் வாழ்க்கை நல்லா இருக்கும்னு எனக்கு தோணுது. இதுல மேற்கொண்டு நீங்கதான் முடிவு பண்ணனும்” என்றான் சந்துரு.

அவர் அவனுக்கு மறுமொழி கூறும் முன்பே, “ஆனா எனக்கு அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்லப்பா. இவர் இப்படி ஒரு எண்ணத்தோட என்கிட்ட பழகறாருன்னு தெரிஞ்சிருந்தா கண்டிப்பா நான் பேசியே இருக்க மாட்டேன்” என்ற இசை வேகமாக அறைக்கு சென்றுவிட, அவளை தொடர்ந்தாள் மகிழ்.

“சாரி அங்கிள். கண்டிப்பா நான் எந்த தப்பான எண்ணமும் வைச்சு பழகல. இப்ப கொஞ்ச நாள் முன்னாடிதான் எனக்கே தெரிஞ்சது. நீங்க இன்னும் அண்ணா கல்யாணத்துக்கே பெரிசா சம்மதிக்கல. அதனால இப்போதைக்கு இதை பேச வேண்டாம்னு தான் நினைச்சேன்.

ஆனா சூழ்நிலை அப்படி ஆகிடுச்சு. இசையோட முடிவு எதுவா இருந்தாலும், நீங்க என்னையோ, அவளையோ தப்பா நினைச்சிறாதீங்க. ப்ளீஸ். நான் கிளம்பறேன்” என்றவன் வெளியே சென்று விட்டான்.

“எதுனாலும் யோசிச்சு முடிவு பண்ணலாம்ப்பா. நீங்க எதையும் போட்டு குழப்பிக்காதீங்க. நான் நெக்ஸ்ட் வீக் வரேன்” என ஆகாஷூம் சந்துருவோடு கிளம்பி விட்டான்.

வண்டியில் செல்லும்போது, ஆகாஷ், “சரி விடுங்க. எப்படியோ விசயத்தை சொல்லியாச்சு. இனிமேல் என்ன நடக்குதுனு பார்க்கலாம்” என்க, “நான் அதை யோசிக்கல ஆகாஷ். அண்ணா என்ன நினைப்பாருன்னு யோசிச்சிக்கிட்டு இருந்தேன்.

பாவம். அவருக்கு என்னால ரொம்பவே கஷ்டம்ல” என சந்துரு கூறவும், “அதெல்லாம் அண்ணா ஒன்னும் சொல்ல மாட்டாரு. பார்த்துக்கலாம். வொர்ரி பண்ணீக்காதீங்க.” என சமாதானம் கூறி வீட்டில் விட்டவன், சித்துவை அழைத்து விசயத்தை கூறிவிட்டே வீட்டுக்கு சென்றான்.

அதைக் கேட்ட சித்துவோ சிந்தனையில் ஆழ, சரியாக அங்கே வந்தாள் சிந்து. காலையிலேயே கவின் எங்கோ வெளியில் சென்றிருக்க, சித்து மட்டும் அலுவலகம் சென்றுவிட்டு மதியத்திற்கு மேல் வீட்டில் இருந்தான்.

திடீரென அங்கு வந்த சிந்து, மகிழ்வோடு தனது அண்ணனின் தோள்களில் சாய்ந்துக் கொண்டு, “பைனலா உன் ஃப்ரண்டு எனக்கு ஓகே சொல்லிட்டாண்ணா” என குதூகலமாக கூறினாலும் கண்கள் கசிந்திருந்தது.

“சந்தோஷம்டா” என அவளது தலையை தடவிக் கொடுக்கும்போதே அவன் ஏற்கனவே இதை யூகித்திருந்தான் என அறிய முடிந்தது. அதை உணர்ந்ததும், “அண்ணா, நீதான் எல்லாத்துக்கும் காரணம். சொல்லுங்க என்ன பண்ணீங்க” எனக் கேட்க, சித்து, “நான் எதுவும் பண்ணலடா, என்னைக்கா இருந்தாலும் அவன் ஓகே சொல்லிதானே ஆகனும். அதான் சொல்லியிருப்பான்” என்றாலும் அதை அவள் நம்பவில்லை.

“கவின் உன்கிட்ட சொல்ல வேண்டாம்னு சொன்னான். நான் உன்கிட்டதான் முதல்ல சொல்லனும்னு நினைச்சேன். அதான் சொல்லிட்டேன்” என சிந்து கூறும் போதே அங்கு வந்த கவின் அவளது காதை திருகி, “ஏய் வாயாடி. அது எப்படி ஒரு விசயம் செய்யாதன்னா செய்யுனு கேட்குது.” என்றான்.

“அது அப்படித்தான். லேடிஸ் டிக்ஷ்னரி உனக்கு புரியாது” என்றாள் சிந்து. “ஏண்டா. என்கிட்ட சொன்னா என்னவாம். உன்னை மாதிரி இல்ல என் தங்கச்சி” என சித்து கூற, “ஆமாமா. ஏதோ கண்ணை கசக்கறாளே பாவம்னு பார்த்து ஓகே சொன்னா ரொம்பதான் கொழுப்பு” என கவின் கூற, “ஹலோ, நாங்கதான் பாவம் பார்த்து உங்களுக்கு வாழ்க்கை கொடுத்திருக்கோம்” என சிந்துவும் விளையாட்டாக கூற, ஏனோ சட்டென முகம் கசங்கிவிட்டது கவினுக்கு.

அதைக் கண்ட சித்து, “ஹேய் சிந்து. என்ன பேச்சு இது” என அதட்டவும்தான், கவினின் முகம் பார்த்தவள், தன்னையே திட்டிக் கொண்டு, “சாரி கவின். நான் சும்மா விளையாட்டுக்கு” எனவும், அதற்குள் தன்னை மீட்டுக் கொண்டவன், “விடு சிந்து. நீ சொல்றது சரிதானே. உங்க குடும்பத்துல வந்து மாப்பிள்ளையா மாட்டியிருக்கனே. நான்தான் பாவம்.

சரி நான் போய் ஏதாவது ஸ்வீட் செஞ்சுட்டு வரேன். உன் லவ் சக்ஸஸ் ஆனதுக்கு. ஆக்சுவலி நீதான் செய்யனும். ஆனா நமக்குதான் சுட்டு போட்டாலும் சமைக்க வராதே. நானே செய்யறேன்.” என சமையலறைக்குள் நுழைந்துவிட்டான்.

சித்து, “விளையாட்டுக்கு கூட அவன் மனசு கஷ்டப்படற மாதிரி நீ பேசக் கூடாதும்மா. ஏற்கனவே அவன் நிறைய கஷ்டப்பட்டுட்டான். எதையும் வெளில காட்டிக்கலன்னாலும் அவன் வருத்தப்படறது எனக்கு தெரியும். அவனை நீ நல்லா பாத்துப்பங்கற நம்பிக்கைல தான் நான் நீ லவ் பண்றேனு சொன்னப்ப ஒத்துக்கிட்டேன். புரியுதா” என அழுத்தமாகவே கூற,

“சாரிண்ணா, இனிமேல் இப்படி நடக்காது. உள்ள போய் அவனை சமாதானம் பண்ணலாம்ணா, பாவம்” என சித்துவையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள் சிந்து.

உள்ளே சென்றதும், “டேய் மாமா, என்னை தனியா விட்டுட்டு வந்துட்டியே. நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்” என்க, “ஏது ஹெல்ப்பா, என்ன பண்ணுவ?” என கவின் கேட்க, “வெங்காயம் வெட்டித் தரவா? இல்லல்ல கண் எரியும், அப்ப மிளகாய் கட் பண்ணவா? அது கை எரியும்.” என அவளே கேள்வியும் கேட்டு, பதிலும் கூற, “ஸ்வீட்டுக்கு உங்க வீட்ல வெங்காயம், மிளகாய் எல்லாம் போடுவாங்களா?” என்றான் கவின்.

“ஓ போட மாட்டாங்களா? அப்பனா நீ சீக்கிரமா செஞ்சு குடு. நான் டெஸ்ட் பண்ணி சொல்றேன். நல்லா இருக்கானு” என்றவள் வாயில் சில தேங்காய் துண்டுகளை போட்டவன், “கொஞ்ச நேரம் பேசாம இரு” எனும்போது சித்து அடுப்பில் இருந்த ரவையை பார்த்துவிட்டு, “மச்சி, ஸ்வீட்டுக்கும் ரவையாடா?” என்றான்.

கவின், “ஆமா மச்சி கேசரி பண்றேன்” என்க, “ஆக மொத்தம் இந்த ரவையை விட மாட்ட அப்படிதானே” என்றான் சித்து. “அஃப்கோர்ஸ் மச்சி” என்றவன், “ரெண்டு பேரும் முதல்ல வெளில போங்க” எனவும், சிந்து வெளியில் வந்தாள்.

ஹாலில் இருந்த ஷெல்பில் சில புத்தகங்கள் இருக்க, அதை எடுத்து பார்க்க அதனோடே இருந்தது ஒரு டைரி. அது அவளுடையது தான். இப்போதுதான் கவின் காதலை ஒப்புக் கொண்டதன் காரணம் புரிந்தது அவளுக்கு. நடந்தது இதுதான்.

சென்ற முறை சென்னை சென்றபோது, “அண்ணா இதை சிந்துகிட்ட குடுத்திடுங்க” என சந்துரு சித்துவிடம் இந்த டைரியை குடுத்திருந்தான். அவனும் தனது பையில் வைத்தவன், மறந்துவிட, நேற்றுதான் வெளியில் எடுத்தான்.

திறந்து பார்க்க, முதல் பக்கத்திலேயே, “என் உயிரான என்னவனுக்கு” என எழுதி அவளும், கவினும் சேர்ந்தார் போல எடுத்த புகைப்படத்தை ஒட்டியிருந்தாள் சிந்து. அதைக் கண்டதுமே படிக்காமல் கவின் கண்ணில் படுமாறு வைத்துவிட்டான் சித்து.

அதே போல நேற்றிரவு வந்து எடுத்து பார்த்த கவின், அவனது புகைப்படம் இருக்கவும், திறந்து படிக்க ஆரம்பித்தவன் அதில் மூழ்கியே போனான். அந்த அளவிற்கு அவனை கவனித்து அழகாக அவர்களது சந்திப்புகளையும், அவள் கொண்ட காதலையும், கவினின் விலகலையும் எழுதியிருந்தாள்.

அதை படித்தவனுக்கு அவளது இன்னொரு முகம் ஆச்சர்யத்தை கொடுத்தது. ஏனெனில் இதுவரையில் அவள் சீரியஸாக பேசிக் கூட பார்த்ததில்லை அவன். அவ்வளவு விளையாட்டாக தான் இருப்பாள். காதலை சொன்ன தருணத்தில் கூட, ஒளித்து மறைத்து, நாணி கோணியெல்லாம் சொல்லவில்லை.

அது ஞாபகம் வந்தது அவனுக்கு. ஒருநாள் இருவரும் ஒரு பார்க்கில் அமர்ந்து எதார்த்தமாக பேசிக் கொண்டிருக்க, திடீரென சிந்து, “கவின் எனக்கு ஒன்னு தோணுது. சொல்லவா?” எனக் கேட்க, இவனும், “ம்ம் சொல்லு” என்றான்.

“நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணீக்கலாமா?” என அவள் கேட்க, இவன் திடுக்கிட்டு பார்த்து, “ஹேய். என்ன பேச்சு இதெல்லாம். சும்மாயிரு. எப்ப இருந்து உனக்கு இப்படி தோணுது” என்றான்.

“இப்பதான் தோணுச்சு, நாம ரெண்டு பேரும் நல்ல காம்பினேஷனா இருப்போம்னு தோணுது. நான் உன்னை லவ் பண்றேன். நீ உடனே உன் முடிவை சொல்ல வேண்டாம். வண்டியில ஏறும்போது சொன்னா போதும்” என்றாள் சிந்து கண்ணடித்து.

உடனே எழுந்தவன் வேகமாக அங்கிருந்து செல்ல, அவளோ, “இவ்ளோ சீக்கிரமா சொல்லுவனு எதிர்பார்க்கல” என்க, கவின் ஒரு ஆட்டோவை அழைத்து இவளை முறைத்தவாறே ஏறி சென்றுவிட்டான்.

அதற்கு பிறகான பிரிவில் கவினின் மனமும் சிந்துவை நாடியதில் அவள் மீதான நேசத்தை புரிந்து கொண்டாலும், தனது நிலையையும், தோழனையும் மனதில் வைத்து இன்று வரை அவளிடம் போக்கு காட்டிக் கொண்டே இருக்கிறான்.

ஆனால் அவனுக்கே தெரியாமல் பல நேரங்களில் அதை அவன் கண்கள் காட்டிக் கொடுத்துவிடும். அதையும் சிந்து கவனித்து அந்த டைரியில் எழுதி வைத்திருந்தாள். இதையெல்லாம் சுவாரஸ்யமாக படித்து வர இறுதியில்,

நீயும், நானும் ஆடும் இந்த
கண்ணாமூச்சி ஆட்டத்தில்..
வெல்வது நானாக இருந்தால்
மணமாலை எனை அலங்கரிக்கும்..!!
வெல்வது நீயாகி போனால் அது
மலர்வளையமாய் மாறிவிடக்கூடும்..!!
எப்படியும் மலர்களால் மணக்க
போவதென்னவோ நான்தான்..!!!

என முடித்திருக்க, உடல் வேர்த்துவிட்டது அவனுக்கு பயத்தில். அக்கணமே முடிவு செய்துவிட்டான். எல்லாவற்றையும் விட, தனது காதலியின் காதல் ஜெயிப்பதே முக்கியம் என. காலையில் முதல் வேலையாக கிளம்பி போய் நின்றது சிந்துவின் விடுதியின் கீழ்தான்.

அந்த நேரத்தில் அவனை எதிர்பாராமல், விடுதியை ஒட்டி இருந்த பூங்காவிற்கு அழைத்து வந்தவள், “என்னாச்சு கவின்? ஏதாவது பிரச்சனையா?” எனக் கேட்க, அடுத்த நொடி அவளை இறுக அணைத்திருந்தான் கவின்.

ஒரு கணம் மகிழ்ந்தாலும், ஏதாவது பிரச்சனையாக இருக்குமோ என்ற ஐயமும் எழுந்தது அவளுள். அவனை விலக்கியவள், என்னவென்று கேட்க, “சாரி. ரொம்ப நாள் வெயிட் பண்ண வைச்சுட்டேன். கல்யாணம் பண்ணீக்கலாமா சிட்டு” எனக் கேட்கவும், நீண்ட நாட்களுக்கு பிறகு அந்த அழைப்பை கேட்டவள் அகமகிழ்ந்து போனாள்.

ஆம் எல்லோருக்கு அவள் சிந்து, கவின் எப்போதும் அவனை சிட்டு என்றேதான் அழைப்பது அவள் காதலை சொல்லும் நாள்வரையில். கண்களில் நீருடன் அவனை ஏறிட்டு, “எப்படி?” எனக் கேட்க, “அது என் சிட்டுக்கு நான்தான் ரொம்ப முக்கியம்னு பட்சி வந்து சொல்லுச்சு.

சரி இப்போதைக்கு யார்க்கிட்டயும் சொல்ல வேணாம். அப்பறமா சொல்லிக்கலாம். வா வீட்டுக்கு போகலாம்” என அவளை அழைத்து வந்தான். இப்போது நடந்தது ஓரளவு புரிந்தது அவளுக்கு.

பிறகு கவின் கேசரியோடு அவல் பாயாசமும் செய்து எடுத்து வர மற்ற கவலைகளை புறந்தள்ளி அந்த நிமிடங்களை இனிப்போடு அனுபவித்தனர் மூவரும் மகிழ்வோடு. அடுத்தடுத்த நாட்களில் எதிர்பாராத பல நிகழ்வுகள் நடக்கவிருப்பதை அறியாமல்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்