Loading

மீனாட்சி அவ்வாறு கேட்டதும் ஆமாமென்ற ஐயம்மாள், “உங்களுக்கு சித்துவை தெரியுமா?” எனக் கேட்டார். “ம்ம் நல்லா தெரியும். இப்ப கொஞ்ச நாளா தான் பழக்கம். நான் பழகின வரை அந்த தம்பி தப்பானவரா எனக்கு தெரியல. நீங்க ஏதோ தப்பா புரிஞ்சுட்டு இருக்கீங்கன்னு தான் தோணுது” என்றார் மீனாட்சி.

அதற்கு ஐயம்மாளோ, “கொஞ்ச நாள்தானே உங்களுக்கு பழக்கம். நான் பல வருஷமா அவனை பார்த்திருக்கேன்” என்றார். மீனாட்சி, “ஒருத்தரை பத்தி தெரிஞ்சுக்க வருஷம் எல்லாம் தேவையே இல்லங்க. உங்களுக்கு ஒன்னு தெரியுமா? அவர் என் பொண்ணை விரும்புறாரு.

இது எங்க எவ்லாருக்கும் தெரியும். இப்பக் கூட அவர் கூப்பிட்டா என் பொண்ணும் கிளம்பி போய்டுவா. ஏன்னா அவரோட கஷ்டம் என்னனு என் பொண்ணுக்கும் தெரியும். ஆனா இப்பவரை அவர் கல்யாணப் பேச்சை எடுக்கல. ஏன் அதைப்பத்தி யோசிக்க கூட இல்ல.

என் பொண்ணு அவரால தான் எங்களுக்கு திரும்ப கிடைச்சா. எங்க சம்மதத்தோட தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு அமைதியா இருக்காரு. நானே இப்ப என்கிட்ட நேரா கேட்டா சம்மதம் சொல்லிடுவேன். ஆனா இவ்வளவு பிரச்சனையை வைச்சிக்கிட்டு எப்படி சொல்றதுனு தயங்குறாரு.

இதை விட வேற என்ன நல்ல குணம் வேணும் சொல்லுங்க. இப்பக்கூட என் பொண்ணு அவரோட வாழனும்னு இதெல்லாம் சொல்லல. நீங்க ஆரம்பத்துல இருந்தே அவரை ஒரு பாரமாவோ, இல்ல இடைஞ்சலாவோ ஒரு தப்பான கோணத்துலயே பார்த்துட்டீங்க.

மத்தவங்க மாதிரி நீங்க அவரை கொடுமைப்படுத்தல. அதே மாதிரி தள்ளி நின்னப்ப ஏன்னும் கேட்கல. அவர் மறுபடி உங்க எல்லாரோட ஒன்னா இருக்கலாம்னு நினைச்சப்ப நீங்களே தள்ளி வைச்சுட்டீங்க. ஒன்னு மட்டும் சொல்றேன்.

ஒருவேளை நீங்க உங்க மூத்தாரா இருந்து சந்துருகிட்ட இன்னொருத்தங்க இப்படி நடந்துகிட்டா எப்படி இருக்கும்னு யோசிச்சு பாருங்க. இப்படி நீங்க சொத்து பத்திலாம் யோசிக்கற அளவு சின்ன புள்ளைங்க சந்துருவும், சிந்துவும் கூட யோசிக்கல.

அவங்களே இதை விட பாசம்தான் முக்கியம்னு நினைக்கறப்ப பெரியவங்க நம்ப எவ்ளோ சரியா இருக்கனும். அதோட நாம வாழ்ந்து முடிச்சவங்க. வாழப்போற அவங்களுக்கு நல்லது கெட்டது சொல்லிக்குடுத்து அவங்களோட பாசமா இருக்காம, இப்படி யாருமே கூட இல்லாம என்ன சாதிக்க முடியும்.

வெறும் சொத்து மட்டும் வைச்சுகிட்டு என்ன பண்ண முடியும். நீங்களே நல்லா யோசிங்க. நீங்க பண்ணது தப்புனு தோணினா வர்ற ஞாயிற்றுக்கிழமை எங்க வீட்டுக்கு வாங்க” என்றவர் வீட்டு முகவரியை கொடுத்துவிட்டு வந்து விட்டார்.

மீனாட்சி கூறி முடித்ததும், மகிழ் அவரை கட்டிக் கொள்ள, சித்து, “உங்க நல்ல மனசெல்லாம் அவங்களுக்கு புரியாது ஆன்ட்டி. இப்பவும் சொல்றேன். நான் நிரஞ்சனியை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். மகிழை தான் பண்ணிக்க போறேனு தெரிஞ்சுதான் உங்ககிட்ட நல்லவங்க மாதிரி நடிக்கறாங்க. மத்தபடி என் மேல அவங்களுக்கு பாசம்லாம் வராது.

எங்கப்பாவே கடைசிலதான் அவங்க எண்ணத்தை கண்டுபிடிச்சிருக்காரு. ஆனா ஒரு விசயத்துல உங்களுக்கு நன்றி சொல்லனும் அத்தை. என்னையும், மகிழையும் புரிஞ்சுக்கிட்டதுக்கு. கண்டிப்பா அவளை நல்லா பார்த்துப்பேன். எங்களை பிளஸ் பண்ணுங்க” என இருவருமாக மகிழின் பெற்றோர் கால்களில் விழுந்தனர்.

அவன் கூறியது சந்துருவிற்கு வருத்தமாக இருந்தாலும் அதைக்காட்டிக் கொள்ளாமல், “ஆமா ஆன்ட்டி அம்மா எப்ப எப்படி மாறுவாங்கன்னு யாருக்கும் தெரியாது. நீங்களும் அவங்களை முழுசா நம்பீடாதீங்க” என்றான்.

“சரி விடுங்க. எவ்வளவு நாள் எத்தனை பேர்கிட்ட ஒரே மாதிரி இருக்க முடியும். மாறிட்டா நல்லதுதானே. இல்லனா என்ன பண்ணலாம்னு அப்பறம் யோசிக்கலாம்” என்றாள் மகிழ்.

இசை, “அதுவும் சரிதான். சரி அதை விடுங்கப்பா. ரொம்ப நேரம் பேசிட்டு இருந்ததுல லேசா பசிக்குது. ஈவ்னிங் ஸ்னாக்ஸ் என்னமா?” எனக் கேட்கவும், “ஏன் சார். கண்டிப்பா இந்த காதல் உங்களுக்கு தேவைதானா. உங்கப்பாவே உங்களுக்கு ஒரு வீடுதான் கொடுத்துருக்காரு. அதையும் விற்கிற நிலைமை வந்திரும் இவளை கட்டினா” என சந்துருவிற்கு ஆருடம் சொன்னான் ஆகாஷ்.

“அதனால என்ன, அதான் எங்க அண்ணன் எனக்காக என்ன வேணா செய்வாரு. இல்லண்ணா” என சத்தமாகவே கூறிவிட, ஆகாஷ் கூறியதை கேட்டுவிட்ட சித்து “யார்டா நீ, உனக்கு எதுக்கு நான் காசு தரனும்” எனவும், ஆகாஷ் அவனுக்கு கைக் கொடுக்க, சந்துரு நெஞ்சை பிடித்துக் கொள்வது போல பாவனை செய்ய அங்கு சூழல் மீண்டும் கலகலப்பாகியது.

அதே நேரம் நிரஞ்சனியின் வீட்டில் நிரஞ்சனியின் அறைக்கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருக்க, அவளது அன்னை வெளியில் இருந்து ஐந்தாவது நாளாக அவளை அழைத்துக் கொண்டிருந்தார். அன்று சித்து வந்து எச்சரித்துவிட்டு சென்றதும் தனது மகளை அழைத்து உடனே கிளம்பி வீட்டிற்கு வருமாறு பணித்தார் அவளது தந்தை.

அவளோ மேலும் இருநாட்கள் இருந்து விட்டு சாவகாசமாக கிளம்பி வந்தாள். வந்தவளை முதல்முறையாக, “இத்தனை நாளா எங்க போயிருந்த” என தந்தை கேட்க, அவளோ அதிர்ச்சியோடு பார்த்தாலும், உடனே, “பெங்களூர்ல இருந்தேன் டாடி. ஏன் ஏதாவது சைன் தேவைப்பட்டதா?” எனக் கேட்க, “அங்க என்ன வேலை உனக்கு” எனக் கேட்டார் அவர்.

“என்ன டாடி, புதுசா கேள்வியெல்லாம் கேட்கறீங்க. சரி சொல்றேன். சித்து இப்ப பெங்களூர்ல தான் இருக்கான். அதான் அவனை பாரக்க போனேன்.” என்றாள் நிரஞ்சனி. “ஓ. அவன் வர சொல்லி போனீயா. இல்ல நீயா போனீயா?” என மீண்டும் கேட்க, அவள் எரிச்சலாகி, “நானாதான் போனேன். இப்ப என்ன வேணும் உங்களுக்கு. நானே அவன் கல்யாணம் வேண்டாம்னு சொல்றானு டென்ஷன்ல இருக்கேன். நீங்க வேற. தள்ளுங்க” என்றவள் வேகமாக அறைக்கு சென்று விட்டாள்.

மீண்டும் இரவு உணவுக்கு அவள் வந்த போது உணவருந்தி முடித்ததும் வேகமாக அறைக்கு செல்ல, “நிரு நில்லு. உன்கிட்ட கொஞ்சம் பேசனும்” எனவும், மதியம் நடந்ததை மறந்து, “சொல்லுங்க டாடி” என ஆவலாகவே கேட்டாள்.

“சித்துவை பார்க்க போயிருந்தியே. என்ன சொன்னான் அவன்” எனக் கேட்க, ‘திருமணத்திற்காக கேட்கிறார் போல’ என்றே நினைத்தாள். “அவன் இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்றான் டாடி. பிஸினஸ் கொஞ்சம் டெவலப் ஆகட்டும் வெயிட் பண்ணுனு சொல்றான்” என்றாள் நிரஞ்சனி.

“இப்போதைக்கு வேணாம்னு சொன்னானா? இல்ல எப்பவுமே கல்யாணம் பண்ண நீ வேண்டாம்னு சொன்னானா?” என அவர் அழுத்தமாக கேட்க, நிரஞ்சனி அதிர்ச்சியாக அவரை பார்த்தாள்.

“டாடி” என அவள் மென்று முழுங்க, “இவ்வளவு நாள், நீ கேட்காமலே உனக்கு எல்லா சுதந்திரமும் கொடுத்தேன். அதே மாதிரி உன்னை நினைச்சு நிறைய விசயத்துல பெருமையும் பட்டிருக்கேன். நீ வேலையை விட்டப்ப கூட, டயர்டா இருக்கும் போல கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்கும்னு அதை பத்திக் கூட நான் கேட்டதில்ல. ஆனா அதே மாதிரி சித்து விசயத்துல கூட உன்னை விட்டது பெரிய தப்புனு இப்ப தோணுது” என்றார் சோர்வாக.

அப்போதும் அவள் புரிந்து கொள்ளாமல், “எனக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகலனு கவலைப்படறீங்களா டாடி, நான் சித்துகிட்ட மறுபடி பேசறேன்” என ஆதரவாக அவரது கரம் பற்ற, அதை தட்டி விட்டவர், “என்னனு பேசுவம்மா, நீ என்ன கல்யாணம் பண்ணீக்க இல்லனா உன்னை கடத்தி தாலி கட்ட வைப்பேன் இல்லனா நான் தற்கொலை பண்ணீப்பேனா?” எனக் கேட்டார் அவர்.

அவள் அமைதியாக இருக்க, அவளது அன்னை, “ரெண்டு நாளைக்கு முன்னாடி சித்து இங்க வந்திருந்தான் நிரு. நீ நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்க. இப்பதான் ஏதோ மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்னு தானே எங்ககிட்ட சொன்ன, ஆனா அவனோ உங்க பொண்ணை நான் லவ்வே பண்ணல. ஒழுங்கா பார்த்துக்கோங்கன்னு சொல்லிட்டு போறான். அப்ப நீ பொய் சொன்னீயா எங்ககிட்ட” எனக் கேட்டார்.

அவளது அமைதியே அவளைக் காட்டிக் கொடுக்க, “உன்கிட்ட இருந்து இதை எதிர்பார்க்கலம்மா” என தாய் கூற, தந்தை, “இதுக்கு மேல அவனை டிஸ்டர்ப் பண்ற வேலை வைச்சுக்காம உன் லைஃபை பாரு. மறுபடி வேலைக்கு போய் கான்சென்ட்ரேஷனை திருப்பு புரியதா” என்றார்.

ஆனால் நிரஞ்சனியோ, “என்னப்பா சொல்றீங்க. என்னால சித்து இல்லாம இருக்க முடியாது. என்னால அவனை கன்வின்ஸ் பண்ண முடியும்” என மறுபடி அதையே கூற, கோபத்தில் ஒரு அறை விட்டார் அவளை.

கீழே விழப்போனவளை அன்னை வந்து பிடிக்க, “நோ டாடி, நீங்க ஏன் இப்படி என்ன புரிஞ்சுக்க மாட்றீங்க. நீங்களும் லவ் பண்ணிதானே மேரேஜ் பண்ணிக்கிட்டீங்க. என் பீலிங்ஸ் புரியலயா” என கத்தினாள். “நான் மட்டும் லவ் பண்ணியிருந்தா அமைதியா விலகியிருப்பேன். இது மாதிரி பிளாக்மெயில்லாம் பண்ணிருக்க மாட்டேன். நாங்க ரெண்டு பேரும் லவ் பண்ணதாலதான் கல்யாணம் நடந்தது” என்றார் வேகமாக.

“எனக்கு அதெல்லாம் தெரியாது டாடி. சித்து எனக்கு வேணும். அதுக்காக நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன்” என ஆவேசமாக கத்த, மீண்டும் அடிக்க சென்றவர், தன்னைத்தானே தடுத்தவர்,

“இப்பக்கூட நீ மறுபடி வேலைக்கு போன்னு சொன்னனே தவிர, வேற மாப்பிள்ளை பார்க்கிறேனு சொல்லல. உன்னோட ஆசையை நிறைவேத்தி வைக்கனும்னு தான் எப்பவும் அப்பா நினைப்பேன்டா. ஆனா இது ஆசை இல்ல வெறி, நீயா உன்னை மாத்திக்கறது தான் நல்லது” என்றார் அவர்.

ஆனால் அவரை வெறிக்க பார்த்தவள், வேகமாக அறைப்பக்கம் சென்றாள். பின்னாடியே வந்த அன்னையையும் கண்டுகொள்ளாமல் கதவை சாற்றினாள். அவளது அன்னை பதறி போய், “என்னங்க, அவ மறுபடி ஏதாவது தப்பான முடிவு எடுத்திட போறாங்க. வந்து பேசுங்க” என அழைக்க,

“முதல்முறையே நம்ப பொண்ணு நாடகம்தான் ஆடியிருக்கா. மறுபடி அதே நாடகத்தை போட மாட்டா. அவளுக்கு சித்து மேல இருக்கிற ஆசைக்கு அப்படி எல்லாம் அவனை விட்டுட்டு சாக மாட்டா. கோபம் குறைஞ்சதும் அவளே கதவை திறப்பா. போய் வேலையை பாரு” என அவர் சென்று விட, இதோ ஐந்து நாட்கள் ஆகியும் கூட இன்னும் கதவை திறக்கவில்லை.

அவளது அன்னை, “என்னங்க, ஏன் இப்படி பண்றா. இத்தனை நாள் சாப்பிடாம இருந்தா என்ன ஆகறது. நீங்க கூப்பிட்டு பாருங்க” என்றார் ஆற்றாமையில். அவரும் மனது கேட்காமல் கதவை தட்டி பார்க்க உள்ளே ஆள் அரவமே இல்லை.

பிறகு தோட்டக்காரரை அழைத்து பால்கனி வழியாக சென்று பார்க்க சொல்ல, பால்கனி கதவு திறந்து கிடந்தது. அவரே வந்து முன்பக்க கதவை திறந்து விட உள்ளே சென்று பார்த்தபோது நிரஞ்சனி அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்