Loading

                 இசையின் வீட்டில், மதிய உணவிற்கு பிறகு, அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, அப்போது கதவு தட்டப்படவும் சென்று திறந்த சித்து வெளியே நின்றிருந்த ஐயம்மாளை கண்டு அதிர்ச்சியடைந்தான். அவனது முகத்தில் அதிர்வை கண்டாலும் எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல், “உள்ளே வரலாமா?” எனக் கேட்டார் அவர்.

சத்தம் கேட்டு உள்ளிருந்து எட்டிப் பார்த்த மீனாட்சி, “அடடே நீங்களா!! வாங்க வாங்க” என்றபடி ஆவலுடன் வரவேற்க, சித்து வழி விட்டு நிற்க உள்ளே வந்த ஐயம்மாளை கண்டு அனைவரும் திகைத்தனர். அதைவிட அவரை மீனாட்சி உபசரிப்பதை கண்ட அனைவரது கண்களும் அதிர்ச்சியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டன.

அங்கு வந்த குணசேகரனிடம், மீனாட்சி, “என்னங்க, நான் கோவில்ல பார்த்தேனு சொன்னேன்ல” என அறிமுகப்படுத்தியவர், கண்களால் அவருக்கு வேறு செய்தியும் கடத்தினாரோ என்ற எண்ணம் அவரையே பார்த்துக் கொண்டிருந்த இசைக்கு வந்தது. “ம்ம். சொன்னாங்கம்மா, இப்ப உடம்புக்கு பரவால்லயா?” எனக் கேட்டார் அவர்.

உடனே சிந்துவும், சந்துருவும், “என்னாச்சும்மா உங்க உடம்புக்கு” எனக் கேட்கவும் தான் மற்ற அனைவருக்கும் அவர்தான் ஐயம்மாள் என்றே தெரிந்தது. “அக்கா இவங்கதான் உன் மாமியார். ஆனா அம்மா இவ்ளோ குளோஸா பேசறாங்க. ஒருவேளை ஏற்கனவே அம்மாவோட ஃப்ரண்டா இருப்பாங்களோ” என்றாள் இசை தனது தமக்கையிடம்.

மற்றொருபுறம் இருந்த அகல் காதிலும் அது விழுக, “என்னடி அவங்க ரொம்ப டெரர்னு சொன்னீங்க. வந்ததுல இருந்து ஒரு வார்த்தை கூட பேசாம அமைதியா இருக்காங்க” எனக் கேட்க, “கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் வாயை மூடுங்க. என்ன நடக்குதுனு பார்க்கலாம்” என்றாள் மகிழ்.

சந்துருவும், சிந்துவும் பதறி கேட்டபோதும் அவர் எதுவும் பேசாமல் அமைதியாகத் தான் இருந்தார். சித்து எதுவும் பேசாமல் ஒரு ஓரமாக சென்று நின்றவன், “ஓகே ஆன்ட்டி ஒரு முக்கியமான வேலை இருக்கு. நான் கிளம்பறேன்” எனவும் எழுந்த ஐயம்மாள், “சித்து நில்லுப்பா” என அழைக்க, அவரை பார்த்தான்.

“எப்படி இருக்கன்னு உன்கிட்ட கேட்கனும்னு தோணுது, ஆனா கேட்கற நிலைமைல உன்னை நான் வைச்சிக்கல. அதான்” என ஐயம்மாள் ஏதோ பேச வர, “நிறுத்துங்க” என்றான் சித்து.

அவர் அதிர்ச்சியாக அவனை பார்க்க, “என்ன அடுத்த டிராமாவை ஆரம்பிச்சுட்டீங்களா, எப்படியும் நான் நிரஞ்சனியை கல்யாணம் பண்ணிக்க போறதில்லனு இன்னேரம் உங்களுக்கு நியூஸ் வந்திருக்கும். அதனால மறுபடி பாசமா இருக்கிற மாதிரி காட்டினா நான் சொத்து வேண்டாம்னு சொல்லிடுவேன். அதானே உங்க பிளான். எதுவும் பேச வேண்டாம். வழியை விடுங்க” என்றபடி கிளம்பினான்.

உடனே குணசேகரன், “தம்பி இருங்க. அதான் அவங்க ஏதோ சொல்ல வராங்கள்ள. கேட்காம இப்படி கிளம்பறீங்க” எனக் கேட்க, மகிழ், “அப்பா அதுவந்து” என ஏதோ கூற வந்தாள். அவளை இடைமறித்த குணசேகரன், “நீ என்ன சொல்லபோறன்னு தெரியும்மா. எல்லாம் தெரிஞ்சுதான் சொல்றேன்” என்றதில் அவள் அமைதியாகி விட்டாள்.

சித்துவுக்கு பிடிக்காவிட்டாலும் அவரது வார்த்தைக்காக நிற்க, “நான் எந்த விளக்கமும் சொல்ல போறதில்ல சித்து. ஆனா எனக்கு இப்ப உன் மேல எந்த வெறுப்பும் இல்ல. நீ நினைச்சுட்டு இருக்கிற மாதிரி நான் இப்ப இல்ல. இருந்தாலும் என்னை மன்னிச்சு ஏத்துக்கோன்னு நான் சொல்லப் போறது இல்ல.

எல்லா நேரமும் மன்னிப்பு கேட்கறது மட்டும் தீர்வாகிடாது. நீயா மனசு மாறி அந்த வீட்டுக்கு வர வரைக்கும் நான் உனக்காக வெயிட் பண்ணுவேன். இதைத்தான் சொல்ல வந்தேன். நீ கேட்க தயாரா இருக்கும்போது நான் பேசறேன். வரேன்” என்றவர் விடைபெற்று வேறு யாரிடமும் பேசாமல் வெளியே சென்று விட்டார்.

என்ன நடந்ததென்றே தெரியாமல் அனைவரும் முழிக்க, சித்துவிற்கு அப்போதும் அவர் மீது முழுமையான நம்பிக்கை வரவில்லை. அனைவரும் மௌனமாக இருக்க, இசைதான், “என்னம்மா நடக்குது இங்க. அவங்களை உனக்கு எப்படி தெரியும். இதுவரை நம்ப வீட்டுக்கு வந்ததே இல்லையே?” எனக் கேட்டாள்.

“ஆமா ஆன்ட்டி, அம்மாவுக்கு உடம்புக்கு என்ன? நீங்க அங்கிளுக்கு இண்டர்டியூஸ் பண்ணப்பவே நீங்க ரீசன்டாதான் அவங்களை பார்த்துருக்கீங்கனு தெரியுது. எங்க அம்மான்னு தெரிஞ்சு போய் பார்த்தீங்களா?” என சந்துருவும் கேட்டான். எல்லாரையும் அமைதியாக இருக்க சொல்லி மீனாட்சி நடந்ததை விவரித்தார்.

சென்ற வாரத்தில் ஒருநாள் மீனாட்சி கோவிலுக்கு சென்றிருக்க, யாரோ ஒரு பெண்மணி மயங்கி விழுவதை பார்த்தவர் வேகமாக அருகில் சென்று தண்ணீர் கொடுத்து மயக்கத்தை தெளிவித்தார். பார்ப்பதற்கு சற்றே பணக்கார தோரணை கொண்டிருந்ததால் உடன் யாரும் வந்திருக்கிறார்களோ என தேடினார்.

யாருமில்லாமல் போகவே, “நீங்க மட்டும் தனியாதான் வந்தீங்களாம்மா” என பேச்சுக் கொடுத்தார். “ஆமாங்க, நான் தனியாத்தான் இருக்கேன். அதான்” என ஐயம்மாள் பதில் கொடுக்க, “ஓ சரிங்க, என்னாச்சு காலைல விரதமா, அதான் வெயில்ல மயக்கம் வந்திருச்சு போல” எனக் கேட்டார் மீனாட்சி.

“விரதம்லாம் இல்லங்க, எனக்கு லோ பிபி இருக்கு. வெயில் அதிகமா இருந்ததால மயக்கம் வந்திருச்சு. ரொம்ப தேங்க்ஸ். நான் கிளம்பறேன்.” என எழுந்த ஐயம்மாளால் இரண்டு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை.

“அட இருங்க, நானும் கூட வரேன்.” என அவரை கைத்தாங்கலாக பற்றி வெளியில் அழைத்துவர, கார் டிரைவரை காணவில்லை. அவனுக்கு அலைபேசியில் அழைப்பு விடுத்து கேட்க, காரில் சிறிய பிரச்சனை, மெக்கானிக்கை அழைக்க சென்றிருப்பதாக கூற, அவனை சரிசெய்து எடுத்து வர கூறிவிட்டு ஆட்டோவில் ஏறினார் ஐயம்மாள்.

ஏதோ தோன்ற, “கொஞ்சம் வீடு வரைக்கும் வர முடியுமாங்க” என ஐயம்மாள் கேட்க, மீனாட்சியும் சரி என்று அவருடன் கிளம்பினார். வீடு மிகவும் வளமையாக இருக்க, வீட்டில் விட்டதும் உடனே கிளம்பிய மீனாட்சியை தடுத்த ஐயம்மாள்,

“இவ்ளோ ஹெல்ப் பண்ணீருக்கீங்க. ஒரு காபியாவது குடிச்சிட்டு போங்க” என்றவர் வேலையாளை எடுத்து வர சொல்லி பணிக்க, “தப்பா எடுத்துக்காதீங்க, வீட்ல வேற யாரும் இல்லையா?” எனக் கேட்டார் மீனாட்சி.

“எல்லாரும் இருக்காங்க. ஆனா யாரும் என்கூட இல்லை. எல்லாருக்கும் என் மேல கோபம்” என்றார் ஐயம்மாள். “ஓ” என்றவர் அதற்கு மேல் எதுவும் கேட்கக் கூடாது என நினைத்து மௌனமாக இருக்க, யாரிடமாவது பேச வேண்டும் என தோன்றியதோ என்னவோ மனதில் இருப்பதை பகிர ஆரம்பித்தார்.

“ஆமாம்மா, இவ்வளவு சொத்து இருக்கு. ஆனா இது எல்லாத்தையும் என் மூத்தார் மகன் பேர்ல எழுதி வைச்சுட்டு என் வீட்டுக்காரர் போய் சேர்ந்துட்டாரு. என் பசங்களுக்குனு எதுவும் இல்லனா எனக்கு எப்படி இருக்கும். அதனால அவனோட நான் சண்டை போட்டேன். அதற்கு கோவிச்சுக்கிட்டு என்னோட ரெண்டு பசங்களும் வீட்ட விட்டு போயிட்டாங்க” என்றார் ஐயம்மாள்.

“ஓ. எதுக்காக அப்படி பண்ணாங்க. ஒருவேளை அவர் மிரட்டி எதுவும் எழுதி வாங்கிட்டாரா? நீங்க கேஸ் போட்டு இருக்கலாமே?” என யோசனையாக மீனாட்சி கேட்க, “அதெல்லாம் இல்லங்க. அவராவே தான் அப்படி பண்ணீட்டாங்க. என் மேல ஏதோ கோபமா இருக்கலாம்” என்றார் ஐயம்மாள்.

அவர் சித்துவை பற்றி கூறுகிறார் என அதுவரை தெரியாமலே மீனாட்சியும் பேசிக் கொண்டிருந்தார். “இந்த வீடு மட்டும் உங்க பேர்ல எழுதிட்டாங்களா?” என மீனாட்சி கேட்க, “இல்லங்க. என் பேர்ல வேற வீடு இருக்கு. இது எல்லாமே அவன் பேர்ல தான் இருக்கு” என ஐயம்மாள் கூறவும், “இப்ப மூனு பசங்களும் ஒன்னா இருக்காங்களா?” என்றார் மீனாட்சி.

“இல்லங்க. முதல்ல அவன் யார்க்கிட்டயும் சொல்லாம எங்கையோ போயிட்டான். இப்பதான் பெங்களூர்ல இருக்கிறது தெரிஞ்சிருக்கு. மத்த இரண்டு பேரும் இங்கதான் வேற வீட்ல இருக்காங்க. ஆனா என்கிட்ட பேசறதில்ல” என ஐயம்மாள் கூற, “நீங்க சொல்றதெல்லாம் வைச்சு பார்த்தா உங்க பெரிய பையன் சொத்துக்கு ஆசைப்படற மாதிரி தெரியலயே” என்றார் மீனாட்சி.

“அப்படி இல்லனா எல்லாத்தையும் எழுதி கொடுக்க வேண்டியதுதானே” என கூறும்போதே, ‘ஐந்து வருடங்களுக்கு யாருக்கும் எழுதி கொடுக்கக் கூடாது’ என்ற உயில் வாசகம் அவருக்கு ஏனோ நினைவுக்கு வந்தது. அப்போது காபி வரவும், அதைக் குடித்துக் கொண்டே பேச ஆரம்பித்தார்.

“அவங்கப்பா பாசமா கொடுத்ததை உடனே எழுதி கொடுக்கவும்  கஷ்டமா இருந்திருக்கலாம்லங்க. ஏன்னா இது எல்லாம் முக்கியம்னா உங்களை எல்லாம் வீட்டை விட்டு போகச் சொல்ல எவ்ளோ நேரம் ஆகும். ஆனா அந்த தம்பி தானே எங்கையோ வெளில போயிருக்கு. ஏதோ எனக்கு தோணுனதை சொன்னேன். தப்பா எடுத்துக்காதீங்க. அப்ப நான் கிளம்பறேன்.” என்றவர் கோப்பையை வைத்துவிட்டு விடைபெற்றார்.

எழுந்து வரும்போது எதிரில் இருந்த சுவற்றில் சந்துரு, சிந்துவோடு ஐயம்மாளும், இராஜசேகரும் எடுத்துக் கொண்ட குடும்ப புகைப்படத்தை பார்த்தவருக்கு அப்போதுதான் அவர் சித்துவின் சிற்றன்னை என்றே தெரிந்தது. அதைக் கண்டதும் திரும்பி வந்தவர், “நீங்கதான் சித்துவோட சித்தியா?” எனக் கேட்க, அவரும் ஆமாமென்றார்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்