Loading

சில நாட்களாக மனது ஒரு நிலையில் இல்லாமல் இருக்க, மனதை மாற்ற சமூக வலைதளங்களில் செயல்பட்டான் சித்து. அப்போது திருச்சியில் ஒரு சுற்றுலா நிறுவனம் நடத்திய போட்டியில் வெற்றி பெறவே, ஐந்து நாட்கள் இலவச சுற்றுலாவிற்கு அழைத்திருந்தது அந்த நிறுவனம்.

அதற்காக யாரிடமும் சொல்லாமல் திருச்சி சென்று விட்டான். அவனை காணாமல் முதலில் நிரஞ்சனி திகைத்தாலும், எங்கே சென்றாலும் இங்குதானே வரவேண்டும் என்ற எண்ணத்தில் எதுவும் செய்யாமல் இருந்து விட்டாள்.

சித்து சென்ற அதே சுற்றுலாவிற்கு மகிழ், முகிலன், ஆகாஷ் மற்றும் ஒரு பெண்ணும் தேர்வாகி இருந்தனர். அந்த நிறுவனத்தின் நிறுவனர்கள் இருவருமாக சேர்ந்து ஏழு பேர் அந்த பயணத்தை தொடங்கினர்.

சில நாட்களாக இருந்தாலும் அவர்களுக்கிடையே ஒரு நல்ல நட்பு உண்டானது. ஒருவரையொருவர் ஓரளவு தெரிந்து கொள்ள மற்றதை மறந்து ஆனந்தமாக அந்த நாட்களை அனுபவித்தனர். அப்போதுதான் மகிழை பற்றி தெரிந்து கொண்டவனுக்கு அவனையும் அறியாமல் ஒரு ஈர்ப்பு உருவானது.

கடைசி நாளன்று மதுரையில் உள்ள தனது தாத்தாவின் வீட்டுக்கு அழைத்து சென்றான் அனைவரையும். மகிழுக்கு யாருமில்லாததையும், இருந்தும் அவள் வாழ்வில் மகிழ்வாக இருப்பதை கண்டபோது சித்துவுக்கும் கூட, ‘இவ்வளவு உறவுகள் இருந்தும் நம்மை பற்றி மட்டும் யோசிக்கிறோமோ.’ எனத் தோன்றியது.

ஊருக்கு சென்றதும் முடிந்தவரை எல்லாருடனும் இணக்கமாக செல்ல வேண்டும், நிரஞ்சனியும் எடுத்து சொன்னால் புரிந்து கொள்வாள் என நினைத்து மகிழ்வாகவே ஊருக்கு திரும்பி வந்தான். சென்னை வந்ததும் தேடி வந்த நிரஞ்சனியிடம் கோபம் கொள்ளாமல் இயல்பாகவே பேசினான்.

நிரஞ்சனி, “எங்க போயிருந்த சித்து, நான் பயந்தே போயிட்டேன்” என்க. “கொஞ்சம் திடீர்னு வேலை வந்துருச்சு. அதான் கிளம்பிட்டேன்” என்றான் சித்து. “வேலைன்னா அந்த கவினை அனுப்ப வேண்டியதுதானே. எல்லாத்துக்கும் நீயே போகனுமா” எனக் கேட்டவளிடம்,

“கவின் ஆல்ரெடி வேலை விசயமா ஃபாரீன் போய் இருக்கான் தெரியும்ல. அதோட என்னோட எல்லா வேலைக்கும் இன்னொருத்தரை எதார்பார்த்துட்டு இருக்க முடியாது” என்றான் சித்து.

நிரஞ்சனி, “ஓகே. ஓகே. கூல். திடீர்னு உன்ன காணம்னு கொஞ்சம் டென்ஷன் ஆகிடுச்சு. அதான்” எனவும், சித்து, “பரவால்ல. இன்னைக்கு ஈவ்னிங் நீ ஃப்ரீயா” எனக் கேட்டான். “கண்டிப்பா எங்க போகலாம்” என கொஞ்சலாக அவள் கேட்க, “கொஞ்சம் பர்சனலா பேசனும். வீட்டுக்கே வந்திரு” என்றான் சித்து. சரியென்று கிளம்பினாள் நிரஞ்சனி.

அன்று மாலை வீட்டுக்கு வந்தவளிடம் தெளிவாக, “நான் உன்னை என் ஃப்ரண்டா தான் நினைக்கறேன் நிரு. அதைத்தாண்டி என்னால யோசிக்க முடியல. ப்ளீஸ் புரிஞ்சுக்கோ” என்றான்.

“பிரச்சனையே அதுதான் சித்து. நீ ஏன் என்ன உன் ஃப்ரண்டுனே நினைக்கற. இப்பதான் என்ன புதுசா பார்க்கிறன்னு நினைச்சுக்கோ. கண்டிப்பா என் மேல லவ் வரும். அதுவரை நான் வெயிட் பண்றேன். ஆனா நான் உன்னை லவ் பண்றதுல தெளிவாத்தான் இருக்கேன்” என்றாள் அவள்.

அதற்கு மேல் பேசி பலனில்லை என உணர்ந்தவன், “சரி அப்படி நடந்தா பார்த்துக்கலாம்” என்றவனுக்கு இன்று வரை அப்படி ஒரு எண்ணம்தான் வரவே இல்லை. நிரஞ்சனியை வேண்டாம் என்றதில் வேறு யாரையாவது மனதில் நினைத்திருக்கிறானோ என நினைத்து அவனது சித்தி கேட்க, இல்லையென்று உதடுகள் விடையளித்தாலும் உள்ளமதில் மகிழின் நினைவு வந்தது.

அவன் பதிலில் நிம்மதியடைந்த ஐயம்மாளின் மனம் வேறு கணக்கு போட்டதை பாவம் அப்போது அவன் அறியவில்லை. இதற்கிடையில் இராஜசேகரால் அலுவலகம் செல்ல முடியாமல் போக, அந்த பொறுப்பும் சித்துவின் மீது விழுந்தது.

அவனது நல்ல நேரமாக கவின் வெற்றிகரமாக பிஸினஸ் டீலை முடித்துவிட்டு வர அவனது பொறுப்பில் அலுவலகத்தை விட்டுவிட்டு தந்தையின் அலுவலகத்திற்கு சென்றான் சித்து. இந்த நேரத்தில் சந்துரு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான்.

அவனும் அண்ணனை பின்பற்றி கம்யூட்டர் துறையையே தேர்ந்தெடுக்க, ஓய்வு நேரங்களில் அண்ணனின் கம்பெனிக்கு வருவது மிகச்சிறந்த பொழுதுபோக்கு அவனுக்கு. சித்துவும் நேரம் கிடைக்கும் போது அதைப்பற்றியெல்லாம் அவனுக்கு சொல்லிக் கொடுப்பான்.

கவினும் அப்படியே சந்துருவுக்கு பழக்கமாக இருவரையும் அண்ணாவென்றே அழைப்பான். ஒருபுறம் வேலை இருந்தாலும், மற்றபடி பெரிய பிரச்சனைகள் இல்லாமல் வாழ்க்கை சுமூகமாகவே சென்று கொண்டிருந்தது.

ஆனால் பிரச்சனை ஐயம்மாள் மூலமாக வரும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. ஒருநாள் திடீரென தனது கணவரிடம், “ஏங்க நம்ம சொத்து விவரம் எல்லாம் எங்க இருக்கு.” எனக் கேட்டார்.

“திடீர்னு ஏன் அதைப் பத்தியெல்லாம் கேட்கற. ஏதாவது பணத்தேவை இருக்கா உனக்கு” என இயல்பாக கேட்க, “உங்க பையனுக்கு மட்டும் தொழில் வைச்சு குடுத்துட்டீங்க. பத்தாததுக்கு உங்க தொழிலையும் அவன்தான் பார்த்துக்கறான். நீங்க இருக்கும்போதே என் பிள்ளைங்களுக்கும் ஏதாவது பண்ணிக்கனும்ல” என்றதில் துணுக்குற்றார் அவர்.

இராஜசேகர், “என்ன ஐயம், புதுசா என் பையன், உன் பையன்னு பிரிச்சு பேசற. எல்லாமே நம்ப பிள்ளைங்க தானே” என்க. “அப்படி நீங்க நினைக்கலயே. என்ன இருந்தாலும் நான் ரெண்டாவது வந்தவ தானே. உங்க மூத்த புள்ள மேல தான் உங்களுக்கு பாசம் அதிகம். அதனால தானே அவனை கான்வென்ட், பாரீனு அனுப்பி படிக்க வைச்சிங்க” என்றார் ஐயம்மாள்.

“என்ன பேசற நீ. அவனோட கஷ்டத்தை புரிஞ்சுக்காம நானே அவனை ஹாஸ்டல்ல விட்டுட்டோமேன்னு எவ்வளவு நாள் கஷ்டப்பட்டுருக்கேன். சொல்ல போனா சந்துருவும், சிந்துவும் நம்ப கூட சந்தோஷமா இருந்தாங்க. அவன்தான் ரொம்ப கஷ்டப்பட்டான் தெரியாதா உனக்கு” என கோபப்பட்டார் இராஜசேகர்.

அதற்கு ஐயம்மாள், “இப்ப எதுக்கு கோபப்படுறீங்க. நான் என்ன கேட்டேன். அவனை மாதிரி என் பையனுக்கும் பிஸினஸ் வைச்சு குடுங்கன்னு தானே கேட்டேன்.” என்க, “அவன் இப்பதான் படிப்பை முடிச்சிருக்கான். மேற்படிப்பு படிக்கறதும், வேலைக்கு போறதும், இல்ல நிர்வாகம் பண்றதும் அவன் இஷ்டத்துக்கு செய்ய வேண்டியது. அதுல நீ தலையிடாத” என்றார் இராஜசேகர்.

இப்படியே பேச்சு முற்றியதில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மூச்சு பேச்சின்றி மயங்கி போனார் அவர். மீண்டும் மருத்துவமனை அழைத்து சென்ற போதிலும் முன்னளவு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை. மனம் ஒத்துழைத்தால் தானே உடலும் நாம் சொன்னபடி கேட்கும். முதல்முறையாக தவறு செய்து விட்டோமோ என யோசித்தார்.

அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் படுக்கையிலே இருக்க, அவர் தூங்குவதாக நினைத்துக் கொண்டு நிரஞ்சனியிடம், ஐயம்மாள் பேசிக் கொண்டிருக்க அதை கேட்டு விட்டார் அவர். “இதோ பாரு நிரஞ்சனி. உனக்கு சித்து முக்கியம். எனக்கு என் பையனோட வாழ்க்கை முக்கியம்.

அதனால இந்த சொத்தையெல்லாம் நீ வேணாம்னு நினைச்சா நானே அவனுக்கு உன்னை கல்யாணம் பண்ணி வைக்கிறேன். இல்ல அவன் வசதியானவனா இருக்கறதுனால தான் அவனை விரும்பறன்னா அவனை மறந்துட்டு வேற நல்ல வசதியானவனா நீ தேடிக்க” என்றார் கறாராக.

அவளுக்கும் அவருடைய முழு எண்ணம் தெரியாததால், சித்துவை உண்மையாக காதலிக்கிறோமா என செக் செய்வதாக நினைத்தவள், “என்ன ஆன்ட்டி. நானே இலட்சத்துல சம்பாதிக்கிறேன். இதெல்லாம் எனக்கு ஒரு விசயமே இல்லை” என்றாள் அவள்.

“அப்படீன்னா சரி, இன்னும் ஒரே வாரத்துல உனக்கும், அவனுக்கும் நிச்சயம். அதுவும் உன் பர்த்டே அன்னிக்கு. யார்க்கிட்டயும் சொல்லாத. சரியா” என ஐயம்மாள் திட்டம் வகுக்க, நிரஞ்சனியும் சித்து மீது உள்ள ஆசையில் அதை ஆமோதித்தாள்.

ஆனால் இதையெல்லாம் கேட்ட இராஜசேகருக்கு வெறுத்துவிட, வேறொரு எண்ணம் தோன்றியது. ஆனால் எந்நேரமும் ஐயம்மாள் கூடவே இருக்க, அதை செய்ய முடியாமல் யோசித்துக் கொண்டிருந்தார். அவர்கள் திட்டம் போட்டபடி ஹோட்டலுக்கு கிளம்பி செல்ல, இவர் தனது திட்டத்தை நிறைவேற்றினார் விசுவாசமான வேலைக்காரர் ஒருவர் மூலம்.

இவர்கள் போடும் திட்டத்தில் எல்லாம் மாட்டிக் கொள்ளும் அளவு சித்து சிறுவன் இல்லை. என்றே யோசித்து விட்டு அவனிடம் ஏதும் கூறாமல் விட்டுவிட்டார். ஆனால் அதுதான் நடந்தது. பர்த்டே பார்ட்டியில் கிட்டத்தட்ட எல்லோருமே இருக்க, பணியின் பொருட்டு சற்றே தாமதமாக வந்தனர் சித்துவும், கவினும்.

அவர்கள் வந்த பிறகே கேக்கை வெட்டியவள், எல்லோரும் உணவுகளை எடுத்துக் கொண்டிருக்க, சித்துவை அழைத்து, “இது என்னோட ஃப்ரண்ட் குடுத்த பிரசன்ட். என்னால போட முடியல. கொஞ்சம் ஹெல்ப் பண்ணு” என ஒரு மோதிரத்தை கொடுத்தாள்.

அவனும் யோசியாமல் எதார்த்தமாக அவளுக்கு போட்டுவிட்டு, “ஈசியாதானே இருக்கு” என்க, “கங்க்ராஜூலேஷன்ஸ் நிரஞ்சனி. இதான் நீ சொன்ன சர்ப்ரைஸா. இவ சொல்லும் போது கூட நான் நம்பள. இப்ப என்கேஜ்மென்டே நடந்துருச்சு” என்றாள் அவர்களது தோழி ஒருத்தி.

ஆளாளுக்கு வந்து வாழ்த்து கூற, சித்துவுக்கு எதுவும் புரியவில்லை. அவனது சித்தியும், “பரவால்லயே வேணாம். வேணாம்னு சொல்லிட்டு மோதிரம் போட்டு உன் காதலை சொல்லிட்ட” என்க, “இங்க என்ன நடக்குது நிரஞ்சனி.” என்றான் சித்து அடிக்குரலில்.

“நான் தான் சொன்னேனே சித்து. உனக்கும் எனக்கும்தான் செட்டாகும்னு. இன்னிக்கு நீ எனக்கு ரிங் போட்டு லவ் சொல்லனும்னு நினைச்சேன். லவ் சொல்லாட்டாலும் இதை என்கேஜ்மென்டா ஆக்கிக்கறேன்.

சீக்கிரமா ஒத்துக்கோ. இல்லனா கல்யாணமும் இப்படி நடக்கும். ஏன்னா ஐ லவ் யூ” என்று காதலை மட்டும் சத்தமாக கூற, வெறுப்பில் அங்கிருந்து வெளியே வந்தான் சித்து.

“அவ கேட்டா உடனே போடுவியாடா. எங்க போச்சு உனக்கு புத்தி. நான் ஆரம்பத்துல இருந்து சொல்றேன். அவ சரியில்லனு. ஆனா நீதான் கேட்கல. புரியாம பண்றா. தெரியாம பண்றான்னு சொன்ன. அவ எல்லாமே தெரிஞ்சுதான் பண்றா” என பொரிந்தான் கவின்.

சந்துருவுக்கும், சிந்துவுக்குமே இது அதிர்ச்சிதான். அவர்கள் பின்னாலே சந்துரு செல்ல, சிந்து தனது அன்னையை தேடிச் சென்றவள் நிரஞ்சனியிடம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தாள். “நான் கூட பயந்தேன் ஆன்ட்டி. ஆனா நீங்க சொன்னபடிதான் நடந்தது. என்றாள் நிரஞ்சனி.

“நான்தான் சொன்னேன்ல. சித்துவுக்கு எவ்ளோ கோபமோ, வருத்தமோ இருந்தாலும் வெளில காட்ட மாட்டான். அவ்ளோ அழுத்தக்காரன். எப்படியும் நாம பண்றது அதிர்ச்சியா இருந்திருக்கும். உடனே கோபப்பட்டு ரியாக்ட் பண்ணியிருந்தா நாம மாட்டியிருப்போம். ஆனா இவ்ளோ பேர் முன்னாடி கத்தக் கூடாதுனு பொறுமையா கேட்டதால நாம தப்பிச்சோம்” என ஐயம்மாள் கூறியதை கேட்ட சிந்து அதிர்ச்சியானாள்.

அதை அப்படியே வந்து சந்துருவிடம் கூற, சந்துருவும் எதற்காக அண்ணனுக்கு பிடிக்காததை அன்னை செய்ய வேண்டும் என குழம்பி போனான். ஆனால் அதை நேரடியாக கேட்க முடியாத படி அவனது தந்தையின் உடல்நிலை மோசமடைய, அனைவரும் அவரை மருத்துவமனையில் வைத்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

சரியாக ஒரே வாரத்தில் அவர் நிம்மதியாக சித்துவை பார்த்துக் கொண்டே மனதில் தனது ஆசை மனைவி சந்திராவை நினைத்துக் கொண்டே இறைவனடி சேர, அது பெரிய அதிர்ச்சியாக அனைவருக்குமே இருந்தாலும் காரியங்கள் முடிந்து சில நாட்களுக்கு பிறகு வக்கீல் அவரது உயிலை படிக்க, அது சிலருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
1
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்