Loading

              திடீரென ஒரு பெண் கத்தியுடன் உள்ளே நுழைய, சித்துவும், கவினும் அதிர்ச்சியாகி, யாரென்று தெரிந்ததில் உடனே இயல்பாகவும் ஆகினர். ஆனால் அவளோ அதே வேகத்தோடு கவினை நெருங்கியவள் அவனை குத்தவர, “ஹேய் லூசு. என்ன பண்ற?” என பதறி விலகினான் அவன்.

அதைக்கண்டு சித்துவுக்கும் கோபம் வர, “சிந்து. இது என்ன விளையாட்டு அதை கீழ போடு” என வேகமாக கூறவும் அவனது குரலுக்கு கட்டுப்பட்டவள் மூன்று முறை மேஜையில் குத்திவிட்டு கீழே போட்டாள். “இப்ப சொல்லு. என்ன பிரச்சனை உங்க ரெண்டு பேருக்கும்?” என சித்து கேட்க, “எல்லாமே இவனாலதாண்ணா. என்ன பண்ணிருக்கான் தெரியுமா?” என்றாள் அவள்.

மற்ற இருவரும் அவளே நோக்க, அவளோ பதிலேதும் கூறாமல் அமைதியாக அமர்ந்தாள். சித்து கவினிடம் வந்து, “எப்படியும் நான் இருந்தா எதுவும் சொல்ல மாட்டா. நீயே கேளு” என்றவன் அறைக்கு வெளியே செல்ல, “என்ன பண்ணேனு இப்ப நீ இவ்ளோ கோபமா இருக்க.. சொன்னாதானே தெரியும்.” என்றான் கவின்.

“நீ என்ன லவ் பண்றதானே. அப்பறம் ஏன் இப்படி பண்ண. நிஜமாலும் என்ன உனக்கு பிடிக்கலயா?” என்றாள் அழுகையோடு. கவின் அதற்கு, “உன்ன பிடிக்கலன்னு நான் எப்ப சொன்னேன். அதே மாதிரி உன்ன லவ் பண்றேனும் நான் இன்னும் சொல்லவே இல்லையே.” என்றவன், “முதல்ல எதுக்கு இந்த கோபம்?” என்றான்.

அவனை முறைத்தவள் “இதுக்கு என்ன அர்த்தம்” என தனது அலைபேசியை காட்ட அதில் கவின் ஸ்ரேயாவிற்கு தாலி கட்ட செல்வது படம் பிடிக்கப்பட்டு இருந்தது. அதைக் கண்டதும் கவினுக்கு சிரிப்பு வர, சிரித்தாலும் திட்டுவாள் என நினைத்தவன், “அட இன்னும் கொஞ்சம் பக்கத்துல வந்து எடுத்துருக்கலாம். பாரு என் ஃபேஸ் கிளியரா தெரியல.” என்றான்.

சிந்து, “ஹேய். நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன்.” எனவும், “அப்ப ஆம்புலன்ஸ்க்கு ஃபோன் பண்ணவா?” என கவின் கேட்டுவிட்டு அவளது பார்வையை கண்டவன், “ரைட் ஜோக் இன் ராங் டைமிங்” என முணுமுணுத்தான். “இப்ப உனக்கு என்ன பிரச்சனை?” என கவின் கேட்க, “இது உண்மையா?” எனக் கேட்டாள் சிந்து.

“இதுல என்ன உனக்கு டவுட். கண்டிப்பா உண்மைதான்.” எனும்போதே சித்து மீண்டும் வந்துவிட, “அண்ணா இவன் என்ன ஏமாத்திட்டான்.” என அவனிடம் சென்று புகார் கூற, “என்னம்மா.” என கனிவாகவே கேட்டான் சித்து. “இங்க பாருங்க.” என அந்த புகைப்படத்தை காட்ட, சித்துவே அதைக் கண்டு அதிர்ந்து விட்டான்.

சித்து, “டேய். என்னடா இது. இதுதான் நீ அவளை சமாதானப்படுத்துன லட்சணமா?” என எகிறியவன், “இந்த ஸ்ரேயாவும் என்கிட்ட சொல்லுல பாரு.” என்று அவளுக்கு அழைக்க அதை தடுத்தவன், “டேய். அது ஸ்ரேயாவுக்கு புரிய வைக்க பண்ண ப்ராங்க்டா. இவதான் தெரியாம டென்ஷன் ஆகறான்னா. நீயுமா?

நீங்கள்ளாம் இல்லாம நான் கல்யாணம் பண்ணிடுவனா? அதுவும் தெரியாம பண்ணுனாலும் எவனாவது ராத்திரில பண்ணுவானா?” என் கேட்டவன், “சரி அதை விடு. ஆமா நான் யாரை கல்யாணம் பண்ணா என்ன? அதுக்கு ஏன் உன் தங்கச்சி இவ்ளோ ரியாக்ட் பண்றா?” என சரியாக அவளை கோர்த்து விட்டான் கவின்.

அதைக் கேட்டு சிந்து மகிழ்ந்தாலும் சித்துவை நினைத்து அவள் பயந்து நகர, சித்துவோ அவள் கரங்களை பற்றியதோடு,  “ஏன்னா. என் தங்கச்சி உன்னைதானே லவ் பண்றா. நீயும் இப்ப ஓகே சொல்லிடுவ. நாளைக்கு ஓகே சொல்லிடுவன்னு வெயிட் பண்ணா நீ கூலா யாரை கல்யாணம் பண்ணா என்னனு கேட்கற, ம்ம்” என்று கூறியதில் இருவரும் அதிர்ச்சியில் அவனை பார்த்தனர்.

சித்துவின் தங்கைதான் சிந்து. அண்ணனின் நண்பன் என்ற முறையில் தான் கவின் அவளுக்கு பழக்கமானான். ஆனால் நாளடைவில் அது இருவருக்கும் இடையில் ஒரு தோழமையை உருவாக்க இறுதியில் சிந்துவின் மனதில் காதலையும் விதைத்தது.

கவினிடம் இதை பற்றி கூற அவனோ அது போன்ற எண்ணம் தனக்கு இல்லை என்று கூறி விட்டான். அதில் மனமுடைந்தாலும் கவினிடம் பழகுவதை நிறுத்தவில்லை அவள். சில மாதங்களிலே கவினுக்கும் அவள் மீது காதல் உள்ளதையும் ஏதோ ஒரு காரணத்தால் அவன் மறைக்கிறான் என்பதையும் புரிந்து கொண்டாள் சிந்து.

அது என்னவென்று கண்டுபிடிப்பதற்குள் கவின் இங்கு வந்துவிட அதன்பிறகு அவனை பார்க்கவே முடியாமல் போனது. சித்துவுக்கும் அவளுக்கும் இருந்த வயது வித்தியாசத்தில் ஒரு தந்தையை போலவே பார்த்துக் கொள்வான் அவளை. ஆனால் சந்துருவுக்கும் அவளுக்கும் ஒரு வருடமே வித்தியாசம் என்பதால் ஒரு தோழமை இருக்க அவனிடம் தனது காதலை பற்றியும் கூறி இருந்தாள் சிந்து.

கவினுக்கு சிந்துவின் மீது காதல் இருக்கிறதா இல்லையா என்பதை விட தனது நண்பன் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் அவனது நட்புமே எப்போதும் முக்கியம் என மனதில் நிறுத்தியதால் சிந்து மீது எந்த கனவையும் வைத்துக் கொள்ளவில்லை அவன். இங்கு வந்த பிறகு அவளது அருகாமை இல்லாதது நல்லதாகவும் போனது.

ஆனால் இது எதுவும் தனது நண்பனுக்கு தெரியாது என்றே நம்பிக் கொண்டிருந்தான் கவின். எப்படியும் சிந்துவும் கூறி இருக்க மாட்டாள் என்றுதான் அப்படி கூறியது. ஆனால் இப்போதோ சித்து கூறுவதை பார்த்தால் எல்லாமே தெரியுமா? என்ற அதிர்ச்சியில் அவனை பார்த்தான் கவின்.

அவர்களது அதிர்ச்சியை ரசித்துக் கொண்டே தனது இருக்கையில் அமர்ந்த சித்து, “என்ன அப்படி பார்க்கறீங்க. நீ என் தங்கச்சி. அவன் என் பெஸ்ட் ஃப்ரண்டு. அப்படி இருக்கப்ப உங்க ரெண்டு பேரை பத்தி நான் தெரிஞ்சு வைச்சிருக்க மாட்டேனா. உட்காருங்க.” என்றான் சித்து.

“அண்ணா. அதுவந்து.” என சிந்து இழுக்க, “அட என்ன சிந்து. அண்ணாக்கு உன் மேல கோபம்லாம் இல்ல. கவினை பத்தி எனக்கு நல்லா தெரியும். நீ அவனை லவ் பண்றதுல எனக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்ல. சோ நீ என்கிட்ட பயப்பட வேண்டிய அவசியம்லாம் இல்ல. ஆனா அதே மாதிரி கவின் உனக்கு ஓகே சொல்றதும் வேணாம்ங்கறதும் அவனோட விருப்பம்.

அதுமட்டுமில்லாம இதை பத்தி முடிவு பண்ண வேண்டியது உங்க வீட்டாளுங்க தான். அங்க பேசி சரி பண்ணுவியோ இல்ல கவினை சரிகட்டுவியோ அது உன் இஷ்டம் சரியா. உனக்கும் அதேதாண்டா. நான் ஏதாவது நினைப்பேனு நினைச்சு எந்த முடிவும் எடுக்காத சரியா?” என்றவன் தனது வேலை முடிந்தது போல ஒரு பைஃலை எடுக்க சிந்து எழுந்தாள்.

“ரொம்ப தேங்க்ஸ்னா என்ன புரிஞ்சுகிட்டதுக்கு. ஆனா நீ யாரு. நீயும் நம்ம வீடுதானே. நீ முடிவு பண்ணா யாரு வேணாம்னு சொல்ல முடியும். இப்ப சொல்றேன் கேட்டுக்கோ. இதோ இவனே எனக்கு ஓகே சொன்னாலும் நீ முன்னாடி நின்னு நடத்தி வைச்சாதான் என் கல்யாணம் நடக்கும். சும்மா மூணாவது ஆளு மாதிரி வந்து நின்னாலும் பண்ணிக்க மாட்டேன்.” என்றவள் வேகமாக வெளியே செல்ல சித்துவின் இதழ்களில் புன்முறுவல் பூத்தது.

கவினோ என்ன சொல்வதென்றே தெரியாமல் அங்கிருந்து வெளியேற சித்துவும் அவனை தடுக்கவில்லை. ஆனால் பத்தே நிமிடத்தில் சந்துரு பதறிக் கொண்டு அங்கு வந்தான். அவன் சித்து அறைக்கு செல்வதை கண்ட கவினும் உள்ளே செல்ல, கவினை பார்த்து, “சாரிண்ணா. உங்களுக்கு எதுவும் இல்லல்ல?” எனக் கேட்டான்.

இருவரும் புரியாமல் அவனை பார்க்க, “சிந்து இங்க வந்தாளா?” என சந்துரு கேட்க, “ஆமா. அதுக்கு என்ன. இப்ப நீ எதுக்கு இங்க வந்த?” என்றான் சித்து எரிச்சலுடன். “தப்பு என் மேலதான்ணா. நான்தான் கவின் அண்ணாவை கோவில்ல பார்த்து ஃபோட்டோ எடுத்தேன். அதை சிந்துவுக்கும் அனுப்பினேன்.

நான் அப்பதான் சிந்து கவின் அண்ணாகிட்ட சண்டை போடுவா. அப்பவாவது அண்ணா ஒத்துப்பாருன்னு நினைச்சு இப்படி பண்ணிட்டேன். ஆனா அவ கத்தியோட வருவான்னு எதிர்பார்க்கல.” என்றான் மூச்சுவாங்க.

“ஆமாடா. அவ வந்துட்டு போய் எவ்ளோ நேரமாகுது.  சாவகாசமா வர்றதை பாரு. ஏன் நேரா ஹாஸ்பிட்டல்ல வந்து பார்க்க வேண்டியது தானே. அவளை கோபப்படுத்தி தூண்டிவிட்டு இவன் அனுப்பறான். அவ என்னடான்னா என்னென்னு கூட விசாரிக்காம குத்த வரா.

இதெல்லாம் அந்தம்மாக்கு தெரிஞ்சதுனா சத்தம் இல்லாம என் ஜோலியை முடிச்சிடும். இப்ப கூட இந்த கொலைகார குடும்பத்துல நான் வாக்கப்படனும்னு நீ நினைக்கற சித்து.” என்றான் கவின் கவலையாக. அவன் பேசியதில் சித்து கூட சிரித்து விட்டான்.

அந்த நேரம் பார்த்து, “கவின் ஏதாவது பிரச்சனையா?” எனக் கேட்டபடி வந்து நின்றாள் ஸ்ரேயா. ‘அச்சோ போச்சுடா. இவளை வேற சமாளிக்கனுமா’ என நினைத்த கவின் மயங்க போக, “ஒன்னுமில்ல ஸ்ரேயா.  நீ போய் வேலையை பாரு. இதென்னா ஆபிஸா இல்ல வேற எதுவுமா?” என சித்து கேட்டதில் அவள் வெளியேறினாள்.

சித்து, “உனக்கு வேற தனியா சொல்லனுமா? ஆபிஸை விட்டுட்டு இங்க வந்து என்ன பண்ற?” என சந்துருவிடம் கேட்க, அவனோ, “உங்களை பார்க்கதான்னா வந்தேன்.” என்க, “பார்த்துட்டல்ல கிளம்பு. இன்னைக்கு ஈவ்னிங்குள்ள நீ சென்னை ரீச் ஆகனும்.

நீ மட்டுமில்ல. சிந்துவும்தான். அப்பறம் இங்க என்ன பார்த்ததை யார்க்கிட்டயும் சொல்லாத புரியுதா?” என கோபமாக சித்து கூற. சந்துரு தலையை தொங்க போட்டுக் கொண்டு வெளியே சென்றான். “ஏண்டா. அவன்கிட்ட இப்படி பேசற?” என சித்துவிடம் நொந்துக் கொண்டு வெளியே வந்தான் கவின்.

“டேய் சந்துரு நில்லு. அவனை பத்திதான உனக்கு தெரியும்ல. அப்பறம் ஏன் நீயும் இப்படி பண்ற. அவனை பார்க்கனும்னா என்கிட்ட சொல்ல வேண்டியதுதானே. நான் பேசி பார்த்துருப்பேன்ல.” என்றான் கவின். “நேத்தே உங்களை பார்க்கதான் ஆபிஸ் வந்தேன். ஆனா நீங்க அந்த பொண்ணோட போனீங்க.

சரி உங்களை ஃபாலோ பண்ணி வந்தப்பதான் கோவில்ல அந்த பொண்ணுகிட்ட பேசறதை கேட்டேன். அதை விளையாட்டுக்கு சிந்துவுக்கு அனுப்ப போக அவ காலைலயே இங்க வந்துட்டா. அதான் நானும் உடனே வர வேண்டியதா போச்சு.” என்றான் சந்துரு.

“சரி பார்த்துக்கலாம் நீ கிளம்பு சரியா. எல்லாம் சரி ஆகிடும்.” என அவனை அனுப்பி வைத்தவன் உள்ளே வர, சித்து அறையில் இல்லை. பிறகு கவின் அவனது வேலைகளை பார்க்க சித்துவோ மெடிக்கல் ரூமில் இருந்தான்.

அவன் சென்ற நேரம் நல்லவேளையாக அங்கு யாருமில்லாமல் இருக்க, “மகிழ் ஒரு தலைவலி மாத்திரை இருந்தா குடு.” என சித்து கேட்க, “என்னாச்சு அபி” எனக் கேட்டு மாத்திரையும் கொடுத்தாள். “காலைல இருந்து ஒரே பிரச்சனை” என மகிழிடம் கூறிய சித்துவுக்கு தெரியவில்லை இதைவிட பெரிய பிரச்சனை வரப்போகிறது என.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்