இசை – 1
அடங்காத அலையாக ஆர்ப்பரித்து கொண்டிருந்த நீர் வீழ்ச்சியில் நகரத்தை விட்டு இயற்கை சூழலுக்குள் தன்னை பொருத்தி கொண்ட மக்கள் அனைவரும் தன் கவலைகளை மறந்து மகிழ்ச்சியில் நீருக்குள் ஆட்டம் போட்டு மகிழ்ந்து கொண்டிருந்தனர்.
சுற்றியும் நீர் வீழ்ச்சியை தழுவி இருந்த இயற்கைகள் வந்திருந்தவர்களின் மேனியை குளுமையுடன் தழுவிட, ஓரிருவர்கள் மட்டும் நெடுநெடுவென வளர்ந்திருந்த கானகத்திற்குள் பாதி தூரம் சென்று அதற்கு மேல் செல்ல தைரியமின்றி திரும்பி வந்தவாறும் இருந்தனர்.
ஆனால் ஒருத்தி மட்டும் எந்த இடத்திலும் தன்னிலை மாற்றி கொள்ள மாட்டேன் என்ற வீம்போ என்னவோ எப்போதும் அவளின் முகத்தை ஆக்கிரமித்திருக்கும் கடுமையான பாவனைகளுடன் நண்பர்களை வெறித்திருந்தாள்.
இவளின் மனநிலையை மாற்றத்தான் நண்பர்கள் அவளை இங்கு அழைத்து வந்தது.. இருந்தும் தன் மனதை மாற்ற மாட்டேன் என்று அடம்பிடித்து திரிபவளை அவர்களால் எங்ஙனம் சரி செய்ய முடியும்.. தாங்களாவது மகிழலாம் என்று முடிவு செய்து அவளை தனியே விட்டு விட்டு நதியில் விளையாட அகன்று விட்டனர்.
நீருக்குள் குதூகலித்து அடங்காத குரங்காய் அங்குமிங்கும் தாவியபடி சேட்டையின் உச்சத்தில் இருந்த தன்னுடன் ஒட்டி பிறந்த வேதாவை முறைத்திருந்தாள் அவள் வெண்பிறை.
அவனின் சேட்டைகளை ரசிக்க மனமின்றி “வேதா” என்று வெண்பிறை உச்சஸ்தானியில் சினக்க, அவன் தான் யாருக்கும் அடங்காத சேட்டைக்காரன் ஆயிற்றே.. தமக்கையின் கூற்றை கேட்டும் கேளாதது போலும் அங்கிருந்த இளம்பெண்களை அப்பாட்டமாக சைட்டடித்து முடித்தவன் சாவகாசமாக நீரிலிருந்து மேலேறி வெண்பிறையிடம் வந்தான்.
தலையை உலுக்கி நீரை உதறியவனின் முடியை கொத்தாக பற்றிய வெண்பிறை “நீ திருந்தவே மாட்டியா? எப்ப பார்த்தாலும் பொண்ணுக பின்னாடி பல்லை இளிச்சுட்டு போறது?” என்று நெருப்பாய் தகித்தவளிடம் இருந்து தப்பிக்கும் வழியின்றி “மச்சான்” என்று தலையை திருப்பி கத்தினான்.
வேதாவின் குரலை கேட்டதும் நீருக்குள் நீச்சல் பழகி கொண்டிருந்த அவனின் நண்பன் வருண் “இதோ வந்துட்டேன்” என்று பதிலளித்தவாறு கை இரண்டையும் வீசி கொண்டு புயல் வேகத்தில் ஓடி வருவது போல் வந்தவன் மூச்சு வாங்க வேதாவின் முன்னே நின்றான்.
“மச்சான்.. மச்சு இவளை என்னனு கேளுடா” என்று வெண்பிறையை கைகாட்டி குற்றப்பத்திரிகையை வேதா வாசிக்க, “ஓஹோ இவன் என்னைய என்னனு கேட்பானா?” என்று சினமிகுந்து வருணின் முடியையும் பிறை கொத்தாக பிடித்த நேரம் “என்ஜாய் மச்சான்” என்று தப்பித்து தள்ளி நின்றான் வேதா.
“அடேய்.. நாசமா போறவனே! நான் பாட்டுக்கு சிவனேனு குளிச்சுட்டு தானடா இருந்தேன்.. என்னைய எதுக்குடா இவகிட்ட மாட்டி விடற?” என்று வருண் கதறுவதையும் காதில் வாங்காமல் “மை டியர் சிஸ்டர்.. அந்த ரெட் சுடி பொண்ணு உனக்கு அண்ணியா வந்தா உனக்கு ஓக்கே தானே?” என்று மெல்லிய குரலில் வினவியவனை கொலைவெறியில் முறைத்தாள் பிறை.
“ப்ச் போமா.. உனக்கு ரசனையே இல்லை..” என்று பொய்யான வருத்தத்துடன் உரைத்தவன் “பேசாம உனக்கும் சேர்த்து நானே பார்க்கறேன்” என்றுரைத்ததும் “எதே? பொண்ணையா? அடேய் பொண்ணும் பொண்ணும் கல்யாணம் பண்ணுனா என்னைய மாதிரி சிங்கிள்ஸ் நிலைமை என்னவாகும்?” என்று தீவிரமான பதற்றத்துடன் வருண் மொழிந்திட கடுப்பான இருவரும் அவனை மொத்த தொடங்கினர்.
“எங்க போனாலும் நீங்க அடங்கவே மாட்டிங்களா?” என்று உடையை நனைத்திருந்த நீரை புழிந்து விட்டு க்ளிப்புக்குள் அடங்கி இருந்த முடியை விடுதலையாக்கியபடி வந்தாள் இவர்களின் இன்னொரு நண்பி ஹாசினி.
“ஹலோ ஹாசு நாங்க அடங்கிதான் இருக்கோம்… இந்த மேடம் தான் எங்க போனாலும் அடங்க மாட்டேனு கங்கணம் கட்டிட்டு திரியறாங்க” என்று தமக்கையை வேதா கிண்டலடித்தான்.
இன்னும் வெண்பிறையின் பிடிக்குள் திமிறி கொண்டிருந்த வருண் அவள் அசந்த நேரம் சட்டென்று விலகி “போங்கடா நீங்களும் உங்க பிரெண்ட்சீப்பும்… நான் சாமியாரா போறேன்.. என்னைய யாரும் தேடாதீங்க” என்று முகத்தை திருப்பி கொண்டு கானகத்திற்குள் செல்லும் வழியில் ஓடினான்.
“அடேய் வருணு நானும் வர்றேன்டா… என்னையும் கூட்டிட்டு போடா” என்று அவன் பின்னே வேதாவும் ஓடிட, “ஷிட் இதுக எங்க போனாலும் அடங்கறது இல்ல” என்று காற்றில் கையை உதறிய பிறையை அர்த்தம் பொதிந்த பார்வையில் சினந்திட்ட ஹாசினி “உன்னைய மாதிரியே எல்லாரும் இருக்க முடியாது பிறை” என்றாள் சுள்ளென்று.
ஆடவர்களின் மேலிருந்த சினம் மறைந்து பெண்ணவளை பொசுக்கி விடும் பாவனையில் கண்ட பிறை “வேதாக்கு எப்பவும் உன் மேல காதல் வரபோறது இல்லனு பலதடவை உன்கிட்ட சொல்லிட்டேன்.. அவனுக்கு உன்னைய பிடிச்சுருந்தா கண்டிப்பா நானே உங்க கல்யாணத்தை முன்னாடி நின்னு நடத்தி இருப்பேன்.. கடைசில கஷ்டப்பட போறது நீ மட்டும் தான்டி” என்றவள் அலுத்து கொண்டாள்.
இனியும் பேசாத என்பதை போல் கையை நீட்டி பிறையின் பேச்சை தடுத்த ஹாசினி “வேதா மேல நான் வெச்ச காதல் உண்மை.. ஒரு நாள் அது வேதாவுக்கும் புரியும்.. அவனுக்காக இன்னும் எத்தனை வருசமானாலும் காத்திருப்பேன்.. நீ வேதாவை திட்டறதை பார்த்துட்டு என்னால சும்மா இருக்க முடியாது” என்றவளுக்கு விழிநீர் கரித்து கொண்டு வந்தது.
பிறைக்கு தான் அய்யோவென்றானது.. இவளின் கண்மூடிதனமான காதலில் என்னென்ன நிகழுமோ? என்ற அச்சம் பிறையை சூழ்ந்து கொண்டாலும் ஹாசினியை மேலும் வருத்த மனமின்றி “நான் எதுவும் சொல்லல போதுமா? ஆனா ஒன்னு… என் தம்பியை திட்ட கூட எனக்கு உரிமையில்லாம போய்ருச்சு பாரு… அதுதான் லேசா வலிக்குது” என்று இதயத்தை தொட்டி காட்டியபடி உரைத்தாள்.
இதில் பக்கென்று ஹாசினி புன்னகைத்து வெண்பற்களை காட்டிட, “குட் இப்படிதான் எப்பவும் இருக்கணும்” என்று தோளை தட்டிய பிறை “உன் சந்தோசம் முக்கியமா? இல்ல வேதாவோட சந்தோசம் முக்கியமானு ஒரு சூழ்நிலை வந்தா கண்டிப்பா நான் வேதா பக்கம் தான் நிற்பேன்” என்று ‘நான் எப்போதும் என் தம்பியின் பக்கம் தான்’ என்பதை வெளிப்படையாகவே கூறி விட்டாள்.
இதில் மலர்ந்திருந்த ஹாசினியின் முகம் சட்டென்று வருத்தத்தில் சுருங்கினாலும் எப்படியும் வேதாவிடம் தன் காதலை நிரூபித்து தன்னை ஏற்று கொள்ள வைத்து விடுவேன் என்ற நம்பிக்கையை தனக்குள் விதைத்து கொண்டாள்.
இவர்கள் இப்படி இருக்க, வருணை தேடி கொண்டு நேர்வழியில் ஓடிய வேதாவிற்கு மூச்சு வாங்க, இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்து எந்நேரமும் குறும்பில் மிதந்திருக்கும் விழிகளை நாலாப்புறமும் சுழல விட்டு “வருணே இப்ப நீ என் முன்னாடி வரல… வந்தாகணும்டா” என்று வார்த்தையை இழுத்த்த்து நிறுத்தினான்.
அப்போதும் எந்த எதிர்வினையும் வராததை கண்டு “ச்சை இவன் எங்க போய் தொலைஞ்சான்.. இவனால என்னோட மிரட்டலுக்கே மரியாதை இல்லாம போகுது” என்று நண்பனை வார்த்தைகளால் வசைபாடியபடி நடந்தவனின் கண்களில் சிக்கினாள் இளம்பாவை ஒருத்தி!
மரத்தினடியில் எதையோ பறிகுடுத்த நிலைமையில் தன்னை மறந்து காலை குறுக்கி அதில் முகத்தை ஒருபுறமாக சாய்த்து இருந்திருந்தவளின் மைவிழிகளிரண்டில் இருந்து கணக்கின்றி வழிந்த விழிநீர் கன்னத்தை நனைத்து அப்படியே கழுத்தை கடந்து கீழிறங்கி கொண்டிருந்தது.
அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்திட்ட வேதாவின் இமைகள் வேறுபுறம் பார்வையை திருப்ப மனமில்லாமல் சண்டிதனம் செய்ய, “யாரு இந்த பிகரு… நடுகாட்டுல உக்காந்து அழுதுட்டு இருக்கு” என்ற யோசனையில் முகத்தை சுருக்கினான்.
ஒரே இடத்தில் விழிகளை நிலைக்குத்தி தன் மன்னவன் எப்போது தன்னிடம் வருவான் என்ற ஏக்கத்தில் காத்திருந்த இளம்பாவை உணர்ந்தாளோ என்னவோ தன் மன்னவன் வந்து விட்டனென்று! பட்டென்று வதனமுகத்தை நிமிர்த்தி அலைபாயும் விழிகளில் அத்தனை எதிர்ப்பார்ப்புகளுடன் சொல்லிலடங்கா காதலையும் தேக்கி வைத்து திசையெங்கிலும் இமைகளை படர விட்டாள்.
இதோ.. கண்டு விட்டாள்! கண்டு விட்டாள் அவளின் துணைவனை! முன்னொரு காலத்தில் தன்னை விடாமல் துரத்தி நேசத்தை பொழிந்தவன்.. வஞ்சத்தில் தேவி வீழ்ந்து தன்னுயிரை மாய்த்து கொண்டதும் தன்னவளே இல்லாதபோது தான் மட்டும் எதற்கு? என்று தேவரும் நொடிப்பொழுதில் தன் உயிர்ப்பறவையை விடுதலையாக்கி கொண்டதை கண்டதும்…
சுற்றத்தை மறந்து, அவரையே தன் உயிர் மூச்சாக சுவாசித்து வாழ்ந்த என் நேசத்தையும் உதாசீனம் செய்து.. தேவரின் நட்புக்காகவும் தேவியின் மீது வைத்த அப்பழுக்கற்ற பாசத்திற்காகவும் அந்நொடியே ஜீவனை மாய்த்து நதியில் வீழ்ந்த நொடியை இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எங்ஙனம் என்னால் மறக்க இயலும்..
ஏதேதோ நினைத்து திக்பிரம்மையில் உறைந்து விழிநீரை உகுத்த அவள், வேகமாக வேதாவிடம் ஓடி வந்து ஆடவனின் கன்னத்தை தன் தளிர்கரங்களால் தாங்கி மைவிழிகளை அவனின் விழிகளுடன் கலக்க விட்டு “என்னவரே!!” என்று கரகரத்த குரலில் அழைத்தவள் வெடித்து சிதறினாள்.
பெண்மகளின் அழுகையில் அதிர்ந்த வேதா திகைத்து விழிகளை உருட்ட, மனதில் தேக்கி வைத்திருந்த பாரம் முழுமையும் இறங்கியதும் வலது கரத்தால் உவர்நீரை துடைத்து விட்டு “ஏன் மன்னவரே! எம்மை தவிக்க விட்டு சென்றீர்? நீங்கள் இல்லாமல் நான் மட்டும் இவ்வுலகில் வாழ்வேன் என்று நினைத்தீர்களா?” என்ற வினாவை தொடுத்தாள்.
இது கனவா? நிஜமா? என்று விளங்காமல் இமைகளை தேய்த்து வேதா காண திகைப்புற்றான்.. தன்னருகில் யாருமின்றி இருப்பதை கண்டு இவன் பே வென்று முழிக்க, அவனின் பின்னால் நின்றிருந்த வருணும் வேதாவை விட விழிகள் தெறித்து விடுமளவிற்கு முழித்தபடி நின்றான்.
“மச்ச்ச்சு” என்று அச்சத்தில் வார்த்தையே வராமல் வருண் அழைத்ததும், “அய்யோ அம்மே பேய்” என்று அவ்விடமே அதிரும்படி கத்தினான்.. “அடேய்.. டேய்.. பேய் போனதுக்கு அப்பறம் ஏன்டா இப்படி கத்தி தொலையற? மறுபடியும் அந்த பேய் அம்மா வந்து தொலைஞ்சற போகுது” என்று திகிலுடன் சுற்றியும் பார்த்தான் வருண்.
“மச்சான் அப்ப உன் கண்ணுக்கும் தெரிஞ்சுச்சாடா? நான் கண்ணை தேய்ச்சு பார்த்தா காணாம போய்ருச்சு” – வேதா
“ஏன் இருந்தா கட்டிப்பிடிச்சு முத்தம் குடுக்கலாம்னு பிளான்ல இருந்தீயா? கருமம்டா டேய்.. அந்த பேய் அம்மா உன்னை கொஞ்சிட்டு நிற்குது.. வெக்கமே இல்லாம நீயும் அப்படியே நிற்கற? த்து” – வருண்
“மச்சான் டேய்.. நானே பயத்துல உறைஞ்சுட்டேன்டா.. அந்த மரத்துக்கிட்ட தான்டா அழுதுட்டு இருந்துச்சு.. அது யாருனு பார்த்தது என் தப்பா? என்னைய பார்த்ததும் ஓடி வந்து அது பாட்டுக்கு என்ன என்னமோ பேசுச்சு அப்பறம் காணாம போய்ருச்சு பாருடா” – வேதா
“பேச மட்டும் தான் செஞ்சுதா ராசா.. கட்டிப்பிடிச்சு முத்தமும் குடுத்துருக்குமே.. நீ மறைச்சாலும் மறைப்ப” என்று நேரங்காலம் புரியாமல் வருண் நக்கலடிக்க, கடுப்பான வேதா “வாயை மூடுடா பன்னி! எனக்கே பயத்துல கை கால் எல்லாம் நடுங்குதுடா” என்றவனின் குரலில் அப்பாட்டமாக பயம் மேலோங்கி இருந்தது.
அப்போதும் வருண் அடங்காமல் “உனக்கு எங்கையோ மச்சம் இருக்குடா.. அதான் பொண்ணுல இருந்து பேய் வரைக்கும் உன்னைய சுத்தி சுத்தி வருது.. அங்க உன்னைய நினைச்சு ஒருத்தி உருகிட்டு இருந்தா… நீ இங்க பேய் அம்மா கூட டூயட் பாடிட்டு இருக்க?” என்று வேதாவின் கடுப்பை அதிகப்படுத்தி விட்டான்.
“ஆமா மச்சம் இருக்கு அப்படி வா காட்டறேன்.. கடுப்பேத்தமா ஓடிரு.. இல்ல தலைல கல்லை தூக்கி போட்டுருவேன்..எனக்குனு எங்க இருந்துடா வர்றீங்க?” என்று சினமாக ஆரம்பித்தவன் இறுதியில் பாவமாக புலம்பினான்.
பின்பு அவனே “சீக்கிரம் வாடாடேய்.. மறுபடியும் அந்த பேய் வந்தற போகுது” என்று வேகமாக அங்கிருந்து ஓட போக, அவனை பிடித்த வருண் “வந்தா ஒரு ஹாய் சொல்லிட்டு போவோம் மச்சி.. ப்யூச்சர்ல எனக்கு தங்கச்சியாவும் மாற வாய்ப்பு இருக்குல” என்றவனை பாவம் பார்க்காமல் மொத்தினான் வேதா.
நீர்வீழ்ச்சியின் மறுகரையில் அதே இளம்பாவை! வாடிய வதனம் சோகத்தில் இன்னும் வதங்கி மரத்துடன் ஒன்றி இருக்க, மூடிய இமைப்பாவைகள் அங்குமிங்கும் உருண்டு தேங்கிய விழிநீரை வெளி விடாமல் தடுக்க போராடி கொண்டிருந்தது.
நிகழ்காலத்தை மறந்து அவளின் மனதுடனான போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த சமயம் மரத்தில் இருந்து சரசரவென இறங்கியது மலைப்பாம்பு ஒன்று! அதன் சத்தத்தையும் உணராமல் “மன்னவரே!” என்று முணுமுணுத்தவளின் விழிநீர் பெண்மகளின் பேச்சை கேளாமல் கன்னத்தில் இறங்கியது.
அதேசமயம் மலைப்பாம்பும் அவளை நெருங்கி இருக்க, சட்டென்று இருவருக்கும் இடையில் வந்த மரக்கட்டை ஒன்று மலைப்பாம்பை தூக்கி வீசியது.. தூரபோய் விழுந்த மலைப்பாம்பு ஆட்கள் வந்து விட்ட அரவத்தை உணர்ந்து அங்கிருந்த புதருக்குள் ஊர்ந்து சென்று மறைந்தது.
ஒரு கையால் மரக்குச்சியை அழுத்தி பிடித்திருக்க, மறுகையை இடுப்பில் வைத்து பாம்பு சென்று விட்டதை உறுதிப்படுத்திய பின்பே திரும்பினான் அவன் ஆத்ரேய யாழ்வன்.. இமைகள் கோபக்கனல் தாங்கி இருந்தாலும் தாடையை நீவியபடி இவளை என்ன செய்தால் தகுமென்று யோசித்தான்.
நடந்த எதையும் உணராமல் இன்னும் அப்படியே அமர்ந்திருந்தவளை கண்டு கட்டுப்படுத்திய கோவம் சிரத்தை ஆக்கிரமிக்க “தளிர்” என்று சினந்து கத்தினான்.. சகோதரனின் குரலில் சட்டென்று விழித்த இளந்தளிர் திருவிழாவில் காணாமல் போன குழந்தையை போல் முழித்து நின்றாள்.
உடனே தன் பாவனைகளை மாற்றிய ஆத்ரேயன் “எனக்கு சத்தியமா உன் மனசுல என்ன ஓடுதுனு புரிஞ்சுக்க முடிலமா.. என்னவர் என்னவர்னு ஒரு நேரம் புலம்பற.. இல்லனா மன்னவர் மன்னவர்னு புலம்பி மயங்கி விழுகற.. உனக்கு இடமாற்றம் தேவைனு இங்க கூட்டிட்டு வந்தா வந்ததுல இருந்து நீ நீயாவே இல்ல” என்றவனையும் குழப்பம் சூழ்ந்திருந்தது.
தலையை குனிந்து மௌனமாக நின்றிருந்தவளின் கண்ணீர்துளிகள் மண்ணை நனைக்க, தங்கையின் அழுகையை காண சகிக்காமல் “ப்ச் தளிர்.. எத்தனை தடவை சொல்லிருக்கேன் சும்மா சும்மா அழுக கூடாதுனு” என்று சற்று குரலை உயர்த்தினான் ஆத்ரேயன்.
“என்னவர் என்னவர்… இங்க எங்கையோ தான் இருக்காங்க.. நான் அவரை பார்த்துட்டேன்” என்று கதறியவளை ‘பைத்தியமா இவ!’ என்ற ரீதியில் ஆத்ரேயன் முறைத்து வைக்க, மன அழுத்தம் அதிகமாகியதில் தளிர் மயங்கி சரிந்தாள்.
ஒருபுறம் தன் காதலனுக்காக அனைவரையும் எதிர்க்கும் ஹாசினி.. மறுபுறம் வேதாவின் நினைவிலே தன் நாட்களை கழித்து கொண்டிருக்கும் இளந்தளிர்.. பிறையின் வரவையும் ஆத்ரேயன் வரவையும் ஆவலாக எதிர்ப்பார்த்து காத்திருக்கும் நீர்வீழ்ச்சி தர போகும் அதிர்வுகள்.. இந்நிகழ்வுகள் இவர்களின் வாழ்வை எங்ஙனம் புரட்டி போட போடுகிறது என்பதை இனிவரும் பதிவுகளில் காண்போம்.
Wow…. Semma interesting ah iruku pa…. Waiting to read further…. Seekarame next ud podunga pa… Athreyan pirai jodi, thalir, veda jodi ya semma… Heavy yana flag back um iruku polaye .. super writer ji…
Next ud post paniten sis.. romba nandri sis
ஏன்பா வேதா உன் கூடவே சுத்துற வருணுக்கு தெரியுது அந்த புள்ள ஹாசினி உன்ன டாவடிக்குதுனு உனக்கு தெரியலயா…
இந்த பிறை ஏன் இவ்வளவு கடுப்பா இருக்கா….
இந்த பக்கம் தளிர் வேற என்னவரே என்னவரேனு வேதாவ நினைச்சு உருகுறா…
ஆத்ரேயனுக்கும் என்ன பண்றதுனு தெரியல…இவங்களுக்கு எல்லாம் முன்ஜென்மமா இருக்குமோ….
Vedhakum therium sis hasini avana love panrathu.. oru veala erukumooo🙄😂
Nice starts sis