காலை ஆறு மணி…
கொடைக்கானல் குளிரில் தூங்குவது போல் தலை வரை இழுத்து போர்த்திக் கொண்டு நிம்மதியாக உறங்குபவளை பார்த்த பூஜாவிற்கு பொறாமையாக இருந்தது.
“ஏய்… ஆரு… எந்திரிடி… மணி ஏழு ஆயிடுச்சு”
பூஜா அவளை உலுக்க அவள் அசைந்தால் தானே? எந்த பாதிப்பும் இல்லாமல் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தாள்.
“நீ என்ன எழுப்புனாலும் அவ எழ மாட்டா. அவளா சரியா ஆறரைக்கு எழுவா வெயிட் பண்ணு” என்று கீர்த்தனா கூறினாள்.
“அது எப்டி டி இவ மட்டும் இப்படி தூங்குறா?”
“கடந்த ரெண்டு வருசமா இதே கேள்விய தான் கேட்குற. பதில் கிடைச்சதா என்ன?”
“இல்லையே.. இந்த மாதிரி ஒரு தூக்கம் எனக்கு கிடைக்க மாட்டிங்குதே”
பூஜாவின் குரலில் பொறாமை வழிந்து ஓடியது.
“அதுக்கு புண்ணியம் பண்ணி இருக்கனும் . நீயும் நானும் பாவத்த தான் பண்ணி வச்சு இருக்கோம்”
பூஜா உதட்டை சுழித்துக் கொண்டு தன் வேலையை கவனித்தாள்.
சரியாக ஆறு முப்பதை கடிகார முள் தொட்டதும் தூங்கிக் கொண்டிருந்தவளிடம் அசைவு தெரிந்தது. அடுத்த நிமிடம் போர்வையை விலக்கி எழுந்து அமர்ந்தாள்.
“குட் மார்னிங்” என்று அவள் கூற “குட் மார்னிங் ஆரு” என்று பதில் சொன்னார்கள் மற்ற இருவரும்.
பூஜா அவளை திரும்பி பார்த்தாள். பொறாமை இன்னும் அதிகமாக பொங்கி வழிந்தது.
அவர்கள் ஆரு என்று அழைக்கும் ஆராதானா கலைந்த முடியை சரி செய்யாமல் அப்படியே எழுந்து குளிக்கச் சென்றாள்.
அவளது முகத்தை பார்த்த பூஜா கண்ணாடியில் தெரிந்த தன் முகத்தை பார்த்து பெருமூச்சு விட்டாள்.
ஆராதனா…
கணினி அறிவியல் பிரிவில் இளங்கலை இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருக்கும் மாணவி. அவளுடன் பெயர்ப்பட்டியலின் காரணமாக ஒரே அறையில் இணைந்தவர்கள் தான் கீர்த்தனாவும் பூஜாவும்.
வருசை பதிவேட்டில் இருந்த பெயர்களின் படி இவர்கள் மூவருக்கும் ஒரே அறை கிடைத்து விட நல்ல தோழியர்களாகினர்.
எல்லோரும் பிரபலமான பணக்கார பிள்ளைகள் மட்டுமே படிக்கும் கல்லூரியின் மாணவிகள்.
ஆராதனா கீர்த்தனாவை ஒப்பிடும் போது பூஜாவின் தோல் நிறம் சற்று குறைவு. அதில் அவளுக்கு மனவருத்தம் உண்டு.
தூங்கி எழுந்து கலைந்து போன முகத்துடன் இருந்தாலும் ஆராதனாவிடம் ஒரு வசீகரம் இருந்தது. அது சில பல மேக்ப்பிற்கு பிறகே அவளுக்கு கிடைத்தது. அது தான் அவளது பொறாமையின் காரணம்.
அடுத்த காரணம் சரியான நேரத்திற்கு தூங்கி எழுவது. பலர் தவமிருக்கும் வரம். அது எந்த முயற்சியும் இல்லாமல் ஆராதானாவிற்கு கிடைத்து இருந்தது.
வேகமாக குளித்து வந்தவள் தலை வாரி கல்லூரிக்கு கிளம்பி விட்டாள்.
“ரெக்கார்ட் எல்லாம் எடுத்துட்டீங்கள்ள?” என்று மற்றவர்களிடம் ஆராதனா வினவ “எடுத்துட்டோமே” என்றனர்.
“இன்னைக்கோட ப்ராக்ட்டிக்கல்ஸ் முடியுது. இனி ஒரு வாரம் நிம்மதியா இருக்கலாம்”
பூஜா கூற “அடுத்து ஸ்டடி ஹாலிடேய்ஸ் இருக்கு. ஊருக்கு கிளம்பனுமே” என்று கீர்த்தனா கூறினாள்.
“ஆமா . அதுக்கு பேக்கிங் வேலைய வேற பார்க்கனும்”
மூவரும் பேசிக் கொண்டே தேர்வு நடத்தும் இடத்திற்கு வந்து விட்டனர். அதன் பின் தேர்வில் நேரம் பறந்து செல்ல வெற்றிகரமாக முடித்து விட்டு கிளம்பினர்.
மீண்டும் விடுதிக்கு வரும் முன் கல்லூரி கேண்டினில் சென்று அமர்ந்தனர். தேவையானவைகளை வாங்கி கொறித்துக் கொண்டே பேசிக் கொண்டிருக்க ஒருவன் வந்து அவர்களின் அருகில் நின்றான்.
ஆராதனா மெல்ல நிமிர்ந்து பார்த்தாள். அவனை பார்த்ததும் அடையாளம் தெரிந்து போனது. சிலகாலமாக அவள் போகும் இடமெல்லாம் அவனை பார்க்கிறாள்.
“என்ன வேணும்?”
“உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்”
“சொல்லுங்க”
“தனியா….”
“பரவாயில்ல இங்கயே சொல்லுங்க. இவங்கள மைண்ட் பண்ணிக்க வேணாம்”
“அடிங்க…” என்று பூஜா எதையோ தூக்கி எறிய ஆராதனா சிரித்தாள்.
“நீங்க சொல்லுங்க”
“ஆக்ட்சுவலி… அது… ” அவன் ரொம்பவுமே தயங்க பூஜாவுக்கும் கீர்த்தனாவுக்கும் சிரிப்பு வந்தது. அவர்கள் சிரிப்பை அடக்க ஆராதனா அவர்களை முறைத்தாள்.
“இங்க பாருங்க தைரியமா சொல்லிடுங்க. ஆராதனா எதுவும் சொல்ல மாட்டா” என்று பூஜா கூற அவனும் ஒரு முடிவுக்கு வந்தான்.
“ஐ லவ் யூ ங்க” என்று பட்டென அவன் கூற கீர்த்தனாவும் பூஜாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
ஆராதனா சில நொடிகள் மௌனமாக இருந்து விட்டு “உட்காருங்க” என்று ஒரு இருக்கையை நோக்கி கை காட்டினாள்.
அவனும் அமர்ந்து விட சுற்றியும் எதோ சலசலப்பு தென்பட்டது. ஆராதனா திரும்பி பார்த்தாள். கிட்டத்தட்ட எல்லோருமே இவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“நீங்க இத சொல்ல வரது எல்லாருக்குமே தெரியுமா?”
“என் ஃப்ரண்ட்ஸ்க்கு தெரியும். சாரி.”
“இல்ல பரவாயில்ல.”
“நீங்க பதில் சொல்லலையே?”
“சாரிங்க. என்னால இந்த காதல ஏத்துக்க முடியாது.”
“ஏங்க?”
“சில பர்ஸ்னல் காரணம் னு வச்சுக்கோங்களேன்”
“இல்லங்க. காரணம் தெளிவா சொன்னா நானும் எதாவது பண்ண முடியுமா னு பார்ப்பேன் இல்ல?”
“எங்க வீட்டுல இத ஒத்துக்க மாட்டாங்க. புரிஞ்சுக்கோங்க”
“ஏங்க வீட்டுல கேட்டுட்டாங்க எல்லாரும் லவ் பண்ணுறாங்க?”
இந்த கேள்வியில் ஆராதனா முகத்தில் சிரிப்பு வந்தது. அதில் அவனுக்கு ஏகபோக சந்தோசம்.
“வீட்டுல கேட்டுட்டு லவ் பண்ண மாட்டாங்க தான். ஆனா வீட்டுல கேட்டுட்டு தான கல்யாணம் பண்ணனும்? இல்ல பர்மிஸன் இல்லாம ஓடிப்போற ஐடியால இருக்கிங்களா?”
“என்னங்க இப்படி சொல்லுறீங்க?”
“ஆமாங்க… லவ் பண்ணும் போது… வீட்டுல கேட்டுட்டா எல்லாரும் லவ் பண்ணுறாங்க னு கேட்குறீங்க…. கல்யாணம் வரும் போது… வீட்டுல கேட்டா லவ் பண்ண? இப்ப கல்யாணத்துக்கு மட்டும் ஏன் வீட்டுல கேட்கனும் வா ஓடிப்போகலாம் னு சொன்னாலும் சொல்லுவீங்க”
பூஜா வாயை பிளந்து அமர்ந்து விட்டாள். கீர்த்தனா அதிர்ச்சியில் இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள். இவர்கள் அருகில் அமர்ந்து இருந்த மாணவர்கள் இவர்கள் பேச்சை எல்லோருக்கும் கடத்திக் கொண்டு இருந்தனர். ஆராதனா கேள்வியில் எல்லோரும் வாயடைத்துப்போய் விட்டனர்.
“நான் வேணும் னு சொல்லலங்க. லவ் பண்ணுறோம் சேர்த்து வைங்க னு பெத்தவங்க கிட்ட கேட்டா அவங்க கண்டிப்பா சேர்த்து வைப்பாங்க. காதலுக்காக போராடுவேன். இப்படி ஓடிப் போகலாம் னு எல்லாம் சொல்ல மாட்டேன். எனக்கும் ஃபேமிலி இருக்குங்க”
அவன் சற்று காட்டமாக கூற ஆராதனா முகத்தில் மெச்சுதல் தெரிந்தது.
“நான் அப்படி பட்டவ இல்லங்க. பொறுங்க நான் முடிச்சுக்கிறேன். என் அம்மா அப்பா எனக்கு பார்த்த பையன கட்டிக்கிட்டு வாழத்தாங்க எனக்கு ஆசை. எனக்கான வாழ்க்கை துணைய தேடுற பொறுப்பு அவங்களோடது. என்னோட வேலை படிக்கிறது தான். அத மட்டும் பார்க்கலாமே?”
“லவ் பண்ணுறது தப்பு இல்லையே?”
“நான் தப்புனு சொல்லவே இல்லையே?”
“அப்போ உங்க அம்மா அப்பா சரி னு சொல்லிட்டா உங்களுக்கு சம்மதம்?”
“கண்டிப்பா… ஏன்னா….. “
ஆராதனா ஆரம்பித்து விட்டு நிறுத்த எல்லோருக்கும் சுவாரஸ்யம் கூடியது.
“ஏன்னா???”
அவனை பார்த்து புன்னகைத்தவள் “ஏன்னா… எனக்கு ஆல்ரெடி ஒருத்தர பார்த்து வச்சுட்டாங்க.” என்றாள்.
எதெதோ எதிர் பார்த்து இருந்த யாரும் சத்தியமாக இதை எதிர் பார்க்கவில்லை. அவள் மறுப்பாளா ஏற்றுக் கொள்வாளா என்று சந்தேகமாக தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் மறுக்க இப்படி ஒரு காரணம் சொல்லுவாள் என்று எதிர்பார்க்கவில்லை.
“பொய் சொல்லுறீங்க தானே?”
“இல்லங்க. என்ன விசயமோ அத தான் சொல்லுறேன். சாரி. உங்க மனச காய படுத்தி இருக்கேன். இத முடிஞ்ச அளவு மறந்துட பாருங்க” என்று கூறியவள் வேகமாக எழுந்து சென்று விட்டாள்.
பூஜாவும் கீர்த்தனாவும் அவள் பின்னால் ஓடினர். அதே நேரம் அந்த மாணவனை எல்லோரும் சூழ்ந்து கொண்டனர். கல்லூரியின் கனவுக் கன்னியிடம் தைரியமாக காதல் சொன்னவன் ஆயிற்றே. அவனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள விரைந்தனர். ஆனால் அவனோ நொந்து போன மனதுடன் தூரமாக சென்று கொண்டிருந்த ஆராதனாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.
விசயம் சில நிமிடங்களில் காட்டுத்தீயாக கல்லூரி மாணவர்கள் மத்தியில் பரவியது. அதே நேரம் இதை கேள்விப்பட்ட மாணவிகளுக்கோ அடி மனதில் நிம்மதி எழுந்தது.
கூடவே கொஞ்சம் பொறாமையும். கல்லூரியே அவள் பின்னால் சுற்றினால் அவர்களுக்கு கோபம் வராதா?
விடுதி அறைக்குள் நுழைந்து கதவை அடைத்ததும் பூஜாவும் கீர்த்தனாவும் ஆராதனாவை முறைத்தனர்.
அவளோ முகம் கழுவி விட்டு வர கிளம்பினாள். அவளை அசைய விடாமல் பிடித்துக் கொள்ள “என்ன என்னாச்சு?” என்று கேட்க “அடடே… மேடம்க்கு ஒன்னுமே தெரியாது பாரு?” என்றாள் பூஜா.
“மரியாதையா ஃபுல் டிடைல் எனக்கு வேணும். சொல்லிட்டு போ” என்றாள் கீர்த்தனா.
“அடியே… அவசரம் புரியாம கேள்வி கேட்டுகிட்டு… வந்து சொல்லுறேன் தள்ளுங்க” என்றவள் வேகமாக ஓடினாள்.
திரும்பி அவள் வந்து பார்க்க இருவரும் அவளை முறைத்துக் கொண்டு நின்றிருந்தனர்.
“டீ குடிக்க போகல? வாங்க போகலாம்”
ஆராதனா அழைக்க “ஆரு… என் கிட்ட நல்லா வாங்க போற” என்றாள் கீர்த்தனா.
“இங்க பாருங்க . ஆல்ரெடி கேண்டின்ல டீ குடிக்க விடாம பண்ணிட்டாங்க னு கடுப்புல இருக்கேன். இப்ப மெஸ் டீ தான் குடிக்கனும். அதுவும் தீர்ந்துடுச்சுனா எனக்கு தலை வலியே வந்துடும். வரதுனா வாங்க. இல்லனா மெஸ் கார்ட குடுங்க. நான் போய் உங்க ரெண்டு பேரோடதயும் சேர்த்து குடிக்கிறேன்”
ஆராதனா வேகமாக கதவை திறந்து கொண்டு சென்று விட மற்றவர்களும் வேறு வழியில்லாமல் பின் தொடர்ந்தனர்.
இன்னும் விசயம் விடுதி வரை பரவாததால் நிம்மதியாக தேனீரை அருந்தி விட்டு தொலைகாட்சியின் முன்பு அமர்ந்து விட்டனர். இரண்டு மணி நேரமும் கடந்த பின் எழுந்து அறைக்கு திரும்பினர்.
உள்ளே வந்ததும் “இப்பவாவது சொல்லுவியா மாட்டியா?” என்று கேட்டாள் பூஜா.
“எத பத்தி?”
“கேண்டின்ல அந்த பையன் கிட்ட சொன்னியே அத பத்தி”
“ஆமா… அதுக்கென்ன?”
“இத எங்க கிட்ட சொல்லவே இல்ல”
“நீங்க கேட்கவே இல்ல”
“இது மட்டும் இல்ல. இந்த ரெண்டு வருசத்துல உன் குடும்பத்த பத்தி கூட நீ நிறைய சொன்னது இல்ல. நீ எங்கள ஃப்ரண்ட்டா தான் நினைக்கிறியா என்ன?”
“ப்ச்… பூஜா.. ஏன் இப்படி பேசுற? இது ஒன்னும் பெரிய விசயம் இல்ல. அதான் சொல்லல”
“இது இல்லாம வேற எது?” – கீர்த்தனா
“எதுவுமே பெரிய விசயம் இல்ல.”
இருவருமே அவளை முறைக்க யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது. திறந்து பார்க்க ஆராதனாவை ஒரு பேராசிரியர் அழைப்பதாக கூறினார்.
அவளும் உடனே சென்று விட்டாள். திரும்பி வரவில்லை. இரவு உணவிற்கு நேராக உணவுப்பகுதிக்கு வந்து விட்டாள்.
சாப்பிட்டு முடித்து மீண்டும் அறைக்குள் வர அவர்களோடு சில சீனியர் மாணவிகளும் வந்தனர். அவர்களை பார்த்து பூஜாவும் கீர்த்தனாவும் பின் வாங்க ஆராதனா யோசனையாக பார்த்தாள்.
“உட்காருங்க உட்காருங்க.. உங்க கிட்ட பேசிட்டு போகலாம் னு தான் வந்தோம்” என்று ஒரு மாணவி கூற ஆராதனா எனக்கென்ன என்று அமர்ந்து விட்டாள்.
மற்றவர்களும் அமர்ந்து விட சீனியர் மாணவிகள் மூவரும் ஆளுக்கொரு பக்கம் நின்றனர். அதில் முக்கியமானவள் பேச ஆரம்பித்தாள்.
“இப்போ காலேஜ் ஹாட் டாபிக் என்ன தெரியுமா?” என்று வருணி கேட்க “நீங்களே சொல்லுங்க சீனியர் ” என்றாள் ஆராதனா.
“நீ தான். உன்ன பத்தி தான் பேசிட்டு இருக்காங்க”
“என்ன பத்தி பேச என்ன இருக்கு?”
“நம்ம காலேஜ் ட்ரீம் கேர்ள்க்கு ஆல்ரெடி ஆள் இருக்கு னு பேசிக்கிறாங்க”
“ட்ரீம் கேர்ளா அது நீங்க னு இல்ல நான் நினைச்சேன்?”
ஆராதனாவின் பேச்சில் பூஜாவுக்கும் கீர்த்தனாவுக்கும் சிரிப்பு வந்தது. அவசரமாக அதை முழுங்கிக் கொண்டனர். சிரித்து வைத்தால் சீனியர்கள் பந்தாடி விடுவார்களே.
ஆனால் ஆராதனா இந்த கல்லூரியில் சேரும் முன்பு வருணி தான் ஆண்களின் கனவுக்கன்னியாக இருந்தாள். உடன் படிப்பவர்களில் இருந்து சீனியர் மாணவர்கள் வரை அவள் பின்னால் சுற்றியிருக்கின்றனர்.
ஆராதனா கல்லூரியில் சேரும் வரை ராணியாக இருந்தவள் அவள் வந்ததும் பூஜ்யமாகிப் போனாள். அதை தான் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அத்தனை மாணவர்களும் ஆராதனாவின் அழகிலும் புத்திசாலி தனத்திலும் விழுந்து விட வருணிக்கு கோபம் தான் வந்தது.
அவளும் புத்திசாலி தான். ஆனால் கர்வமும் உண்டு. அதன் விளைவாக சுலபமாக பல காதலை தூக்கிப் போட்டு மிதித்து இருக்கிறாள். ஆனால் அவளும் ஒருவன் மீது கண்ணை வைத்திருந்தாள்.
கல்லூரியே அவள் பின்னால் சுற்றும் போது அவன் மட்டும் அவளை கண்டு கொள்ளவில்லை. அதனால் அவனை மடக்கியே தீர வேண்டும் என்ற முடிவுடன் இருந்தாள்.
அவன் தான் இன்று ஆராதனாவிடம் காதலைச் சொன்னவன். ஆராதனா அவனை வேண்டாம் என்று சொன்னது வருணிக்கும் நிம்மதி தான். ஆனால் அதை இன்னும் ஊதி பெரிதாக்க வேண்டும் என்ற முடிவுடன் வந்து இருந்தாள்.
“அதெல்லாம் இப்போ எதுக்கு பேசி கிட்டு… நேரா விசயத்துக்கு வருவோம். உனக்கு முன்னாடியே லவ்வர் இருக்கா?”
ஆராதனா பதில் சொல்லும் முன் “இத ஏன் கேட்குறீங்க சீனியர்?” என்று பூஜா கேட்டாள்.
“காரணம் இருக்கே. ரிஜக்ட் பிடிக்கல னு சொல்லி பண்ணி இருந்தா இவ்வளவு பெரிசாகி இருக்காதே. பட் ஆளு இருக்கு னு தெரிஞ்சதும் எல்லாரும் யாரு னு தெரியாம குழம்புறாங்க. அத கேட்க தான் நேராவே வந்தேன்” என்றாள் வருணி.
“சீனியர் நான் அங்கயே எல்லாம் சொல்லிட்டேன். இதுக்கு மேல என்ன சொல்ல?”
“அது யாரு னு சொல்லலையே?”
“அத சொல்லுற நிலமையில இல்ல சீனியர். புரிஞ்சுக்கோங்க. இவங்களுக்கே நான் சொல்லல. அது ரொம்ப பர்ஸ்னல் சாரி” என்று முடித்து விட்டாள்.
சீனியர் மாணவிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பிறகு என்ன தோன்றியதோ “குட் நைட்” என்று கிளம்பி விட்டனர். பூஜாவும் கீர்த்தனாவும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு அமைதியாக படுத்துக் கொண்டனர்.
*.*.*.*.*.*.
காலை நேர பரபரப்புடன் வேகமாக இறங்கி வந்தான் யுவன். “ம்மா… ப்ரேக் பாஸ்ட்ல மீட்டிங் இருக்குமா. அதுக்கு போகனும். ஆனா அப்பாவுக்கு பத்து மணி வரை எந்த வேலையும் இல்ல. சாப்ட வச்சே அனுப்புங்க” என்று கூறிக் கொண்டே சாவியை தூக்கி போட்டு பிடித்தான்.
“டேய் நான் என்னைக்காவது உன் வேலையில தலையிட்டு இருக்கனா? நீ ஏன் டா என் வேலையில தலையிடுற” என்று யுவனின் தந்தை சத்தியன் கூற “அம்மா… மாமாவுக்கும் வேலை இல்ல. அத்தை கிட்டயும் சொல்லிடுங்க” என்று கூறினான் யுவன்.
சத்தியன் முறைக்க கண்ணடித்து சிரித்து விட்டு “சாப்டுட்டு வாங்க. அங்க வந்து ஆர்டர் பண்ணிங்க னு தெரிஞ்சது அவ்வளவு தான் சொல்லிட்டேன்” என்று கூறி விட்டு வேகமாக வெளியே ஓடினான்.
“தப்பிச்சுட்டான். இவன் தப்பிச்சது கூட பரவாயில்லை. எங்கள எல்லாம் மாட்டி விட்டுட்டு போறானே” என்று சத்தியன் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டார்.
சத்தியனின் மனைவி அர்ச்சனா இடுப்பில் கை வைத்து அவரை முறைக்க “என்னமா? ஏன் இவ்வளவு பாசமா பார்க்குற?” என்று கேட்டு வைத்தார்.
“போய் சாப்ட உட்காருங்க” என்று கூறி விட்டு போனை கையில் எடுத்தார்.
“ஹப்பா.. அவனும் மாட்டுனான். இப்போ நிம்மதியா சாப்டலாம்” என்று தனக்குத் தானே கூறிக் கொண்டு சாப்பிட அமர்ந்தார்.
போனில் விசயத்தை கூறி விட்டு வைத்தார் அர்ச்சனா.
அதே நேரம்…
அந்த வீட்டிற்கு அருகில் வெறும் நான்கு அடி தூரத்தில் இருந்த வீட்டில் பத்மினி தன் கணவனை மேலும் கீழும் பார்த்தார்.
“என்னமா? அவசரமா வேலை இருக்கு… நான் கிளம்புறேன் சரியா…” என்று கூறி விட்டு ரகுநாதன் நடக்க “இப்போ தான் அர்ச்சனா போன் பண்ணுச்சு… யுவா உங்களுக்கு ஒரு வேலையும் இல்லைனு சொன்னானாம்” என்றார்.
“மாட்டி விட்டுட்டான்” என்று முணுமுணுக்க “சாப்ட்டு கிளம்புங்க” என்றார் பத்மினி.
“இல்ல மா.. அவனுக்கு தெரியாத வேலை இருக்கு. அதான் அப்படி சொல்லிட்டான் போல”
“இப்ப சாப்ட உட்காரீங்களா இல்ல நான் ஆபிஸ் வரட்டா?”
இதற்கு மேல் பேசுவாரா? தன் நாளை நொந்து கொண்டு வந்து அமர்ந்தார்.
சத்தியனும் ரகுநாதனும் நண்பர்கள். கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். அதன் பிறகு ஆளுக்கொரு நிறுவனத்தில் வேலை பார்க்க கிளம்பி விட்டனர்.
இருவருக்கும் இடையில் இருந்த தொடர்பு முழுவதுமாக அறுந்து போனது. சத்தியனுடய அன்னையின் உடல் நிலை மோசமடைய மகனுக்கு சீக்கிரமே திருமணம் முடித்து வைத்து விட்டார்.
சத்தியன் அரச்சனாவிற்கு பிறந்த குழந்தை தான் யுவன். அர்ச்சனாவின் பிரசவத்தில் ஏற்பட்ட சிக்கலில் அடுத்து குழந்தை பெற்றுக் கொள்ள வில்லை.
யுவனுக்கு இரண்டு வயது இருக்கும் போது தான் மீண்டும் சத்தியன் ரகுநாதனை சந்தித்தார்.
இருவரும் தங்களது நிறுவனத்தின் சார்பாக ஒரு விழாவிற்கு வந்திருந்தனர். அங்கு மீண்டும் சந்தித்தவர்கள் அவர்களது நட்பை புதுப்பித்துக் கொண்டனர்.
அடுத்த வருடம் ரகுநாதனுக்கு திருமணம் நடந்தது. அதன் பின் இருவரின் நட்பும் நன்றாகவே இறுகியது. திருமணமான சில நாட்களிலேயே ரகுநாதனுக்கு சொந்தமாக ஒரு தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் வந்தது.
அதை பற்றி சத்தியனிடம் பேசினார். அவரும் யுவன் பிறந்ததிலிருந்தே இருக்கும் தொழில் யோசனையை கூறினார்.
இருவரும் தாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை விட்டு விட்டு தொழில் தொடங்குவதில் இறங்க அர்ச்சனாவும் பத்மினியும் உறுதுணையாக நின்றனர்.
அங்கும் இங்கும் அலைந்து வேலைகளை கற்றுக் கொண்டு வெற்றிகரமாக பெண்கள் பயன்படுத்தும் கைப்பை தயாரிக்கும் நிறுவனத்தை ஆரம்பித்து விட்டனர்.
அவர்கள் ஆரம்பிக்கும் நேரம் பத்மினிக்கு ஒரு பெண் குழந்தை பிறக்க அன்றிலிருந்து அவர்கள் முன்னேற்றத்தில் எந்த தொய்வும் இல்லை. சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் சீக்கிரமே இடம் பிடித்தனர்.
ஒருவருக்கு இருவராக பார்க்கும் போது வேலை தரமானதாக இருந்தது. இருவரும் எந்த தவறையும் உள்ளே விடவில்லை. யாரையும் நம்பவும் இல்லை. அர்ச்சனாவின் அண்ணன் ஒருவர் மட்டும் தான் அவர்கள் நிறுவனத்தில் சற்று மதிப்பை பெற்று இருக்கிறார்.
தொழில் உட்சத்தை தொடும் போது பல அடிகள் வரத்தான் செய்தது. நண்பர்கள் இருவரும் எதற்கும் அசைந்து கொடுக்காமல் நிமிர்ந்து நின்று விட்டனர்.
இருவரும் அருகருகே இருந்த இரண்டு வீடுகளை ஒன்றாக வாங்கி குடியேறி விட்டனர். பிள்ளைகள் உறவு சொல்லி அழைத்தாலும் பெரியவர்கள் பெயர் சொல்லித்தான் அழைப்பார்கள்.
உறவு முறிந்து போகும் வாய்ப்பு அதிகம். நட்பு அத்தனை சுலபமாக உடையாது. அதனாலே அர்ச்சனாவும் பத்மினியும் வயது வித்தியாசத்தை மறந்து பெயர் சொல்லி தான் அழைப்பார்கள்.
வேலை வேலை என்று ஓடிய சத்தியனும் ரகுநாதனும் ஓய்ந்து அமரும் போது உடலில் பல மாற்றங்கள் வந்து விட்டது. அதன் விளைவு சாப்பாடு பத்திய சாப்பாடாக மாறியிருந்தது. அவர்கள் வாய்க்கு ருசியாக சமைத்து கொடுக்கும் போது வேண்டாம் என்று ஓடியதற்கு தண்டனையாக இப்போது பத்திய உணவை வழுக்கட்டாயமாக முழுங்கிக் கொண்டிருந்தனர்.
அடிக்கடி தப்பித்து வெளியில் உணவை உண்டு கொண்டிருந்தவர்களுக்கு ஆப்பு வைத்தான் யுவன். அவன் நிறுவனத்திற்குள் நுழைந்ததும் இவர்களது திருட்டுதனத்தை தான் முதலில் பற்ற வைத்தான்.
அர்ச்சனாவும் பத்மினியும் இருவரையும் ஒரு பிடி பிடித்து விட்டனர். அன்றிலிருந்து இவர்கள் வேலை என்று ஓட விடாமல் யுவன் பார்த்துக் கொள்வான். மீறி தப்பித்தால் பத்மினி அலுவலகம் சென்று அமர்ந்து கொள்வார். சாப்பிட்டு முடிக்கும் வரை நகர மாட்டார். மற்றவர்கள் முன்னால் வாங்கி கட்ட வேண்டும் என்ற பயத்திலேயே அடங்கி வீட்டில் சாப்பிட்டனர்.
ரகுநாதன் சாப்பிட்டு முடித்து விட்டு கிளம்ப “அடுத்த வாரம் ஆரா வர்ரா.. டிக்கெட் போட சொன்னா.. போட்ருங்க மறக்காம” என்று பத்மினி கூற “போட்ரேன். ஸ்டடி ஹாலிடே வா?” என்று கேட்டுக் கொண்டே காரை திறந்தார்.
“ஆமா… எக்ஸாம எழுத மட்டும் திரும்ப போவா. அந்த தேதிய கேட்டு சொல்லுறேன். சேர்த்து டிக்கெட் புக் பண்ணுங்க”
காரில் அவர் ஏறி அமரும் நேரம் சத்தியனும் காரில் வீட்டை விட்டு வெளியே வந்தார். இருவரும் காலை வணக்கத்தை வெகு சோகமாக கூறி விட்டு ஆளுக்கொரு வேலையை கவனிக்க வேறுவேறு திசையில் சென்றனர்.
அவர்கள் கிளம்பியதும் வீட்டை பூட்டி விட்டு பத்மினி அர்ச்சனா விடம் சென்றார்.
“பார்த்தியா அர்ச்சனா… யுவா சொல்லலனா இன்னைக்கும் எதாச்சும் ஹோட்டல் போய் சாப்ட ப்ளான் போட்ருக்கத?”
“நாம கொடுக்கும் போது எல்லாம் வேணாம் னு சொல்லிட்டு இப்போ வெளிய போய் சாப்டுறாங்களாம். நைட் வரட்டும். இன்னைக்கு கஞ்சி தான்”
“நானும் அதான் நினைச்சேன்” என்று கூறி இருவரும் ஹைஃபை கொடுத்துக் கொண்டனர்.
தொடரும்.