Loading

யுவன் சிரிப்பதை பார்த்து ஆராதனாவிற்கு வெட்கமாகிப் போனது. அவன் திட்டி இருந்தால் கூட பதிலுக்கு பேசி இருக்கலாம். ஆனால் சிரித்த தொலைக்கிறானே…

முகத்தை மூடிக் கொண்டவள் தன்னை தானே திட்டிக் கொண்டாள். பிறகு நிமிர்ந்து “போதும் டா சிரிச்சது” என்று அதட்டினாள்.

“எனக்கு சிரிப்பு வருது ஆரா.. ஆமா அதென்ன என்ன போய் இப்படி சொல்லி வச்சுருக்க?” என்று சிரிப்பின் நடுவே கேட்டான்.

“ப்ச்ச்.. அது ஒரு பெரிய கதை. அதெல்லாம் உனக்கு தேவை இல்ல. கார எடு”

“எனக்கு தெரிஞ்சாகனும். இப்போ நீ சொல்லல‌னு வை… யூடர்ன் போட்டு காலேஜ் க்கு போவேன்”

“போய்?”

“என்ன நடந்தது னு விசாரிப்பேன். “

“அய்ய.. அப்புறம்?”

“கடைசில நீ சொன்ன பொய்ய உடச்சுட்டு வந்துடுவேன்”

ஆராதனா முறைக்க “எடுக்கட்டுமா” என்றவன் காரை இயக்கி திருப்ப போனான்.

“ஏய் ஏய்… என்ன பண்ணுற?”

“நீ சொல்லு இல்லனா நான் போய் கேட்டுக்குறேன்”

“இப்போ கார எடுக்குறியா? இல்ல இறங்கி பஸ்ல போகவா?”

“போ… நான் கேட்டுட்டு உன்ன பத்தி வத்தி வச்சுட்டு பொறுமையா வரேன்” என்றவன் அவள் பக்கம் இருந்த கதவை திறந்து விட்டான்.

“இறங்கு” என்று யுவன் கூற ஆராதனாவிற்கு கடுப்பாகிப் போனது. கோபத்தோடு கதவை அறைந்து சாத்தியவள் “போ போய் தொலை.. நானே சொல்லி தொலைக்குறேன்” என்றாள்.

யுவன் காரை எடுத்து விட “காலேஜ்ல ஒருத்தன் ப்ரப்போஸ் பண்ணான்..” என்று கடுப்பாக கூற “யாரு?” என்று கேட்டான்.

“பேரெல்லாம் தெரியாது. குறுக்க கேள்வி கேட்காம சொல்லுறத மட்டும் கேட்குறியா?”

ஆராதனா எரிந்து விழ “சரி சொல்லு ” என்றான்.

“ப்ரப்போஸ் பண்ணான். எனக்கு லவ் எல்லாம் செட் ஆகாது னு எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன். கேட்கல. வேற வழி இல்லாம எனக்கு வீட்டுல மாப்பிள்ளை பார்த்துட்டாங்க னு சொல்லிட்டேன். சிலர் அத நம்பல. அதான் உன் பேர சொல்லி சமாளிச்சேன். போதுமா?”

“ஓ.. அப்போ நேத்து போன்ல சொன்னது இது தானா?”

“பச்ச்.. இத இதோட விடு. எனக்கு பசிக்குது. எதாச்சும் ஹோட்டல்ல நிறுத்து”

“காலையில இருந்து சாப்டலையா?”

“அம்மா கூட வெளிய சாப்டுக்கலாம் னு விட்டேன்”

யுவன் வேறு எதுவும் பேசாமல் ஒரு உணவகத்தில் காரை நிறுத்தினான். ஆராதனா தனக்கு பிடித்த உணவுகளை வரவவைத்து சாப்பிட யுவன் எதுவும் சாப்பிடவில்லை. வெறும் காபி மட்டும் குடித்து விட்டு கிளம்பினான்.

ஆராதனா அவன் சாப்பிடாததை கண்டு கொள்ளவில்லை. உணவு உண்டதும் பின்னால் அமர்ந்து கொண்டாள். ஏசியில் நன்றாக தூக்கம் வர பின்னால் படுத்து தூங்கி விட்டாள்.

மதிய உணவிற்காக யுவன் எழுப்பும் போது தான் எழுந்தாள். மதிய உணவை அவள் ஆர்டர் கொடுக்க யுவன் அப்போதும் காபி மட்டும் தான் ஆர்டர் செய்தான். அது ஆராதனாவிற்கு சற்று வித்தியாசமாக பட “நீ சாப்டல?” என்று கேட்டு விட்டாள்.

“சாப்ட்டா கார் ஓட்ட முடியாது. தூக்கம் வரும்” என்று கூறியவனை ஆராதனா ஒரு மாதிரி பார்த்தாள். அவளது பார்வையை கவனிக்காமல் யுவன் போனில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தான்.

“போன்ல என்ன பார்க்குற?”

“ஹா… ஒரு மெயில்”

யுவன் பதில் சொல்லி விட்டு போனை பார்க்க ஆரம்பிக்க ஆராதனா ஆர்டர் செய்த உணவுகள் வந்து விட்டது. அதில் ஒன்றை யுவனின் பக்கம் தள்ளியவள் “இத திண்ணா தூக்கம் எல்லாம் வராது. நீ பாட்டு பசியில மயங்கி வச்சுடாத. கார ஓட்டவும் தெம்பு வேணும்” என்றாள்.

அவன் அவளை இமை சுருக்கி பார்க்க அதை கண்டு கொள்ளாமல் சாப்பிட ஆரம்பித்தாள். யுவனும் அவள் சொன்னதை மட்டும் சாப்பிட்டு விட்டு காபியை குடித்தான்.

“சரி உன் கிட்ட ஒன்னு கேட்கட்டுமா?” என்று காபி குடித்துக் கொண்டே யுவன் கேட்க “என்ன கேட்க போற?” என்று திருப்பி கேட்டாள்.

“நீ ஏன் காலேஜ்ல பொய் சொன்ன?”

“ஒரு சபையில ஒருத்தர அசிங்க படுத்தாம காப்பாத்த பொய் சொல்லலாம். அவங்களுக்கு தனியா என்ன வேணா தண்டனை கொடுக்கலாம். ஆனா சபையில ஒருத்தர அசிங்க படுத்துறது ஒரு பவர் ஃபுல் எதிரிய சம்பாதிக்கிறது சமம். மனசுல அந்த வடு ஆழமா பதிஞ்சு போயிடும். அது எல்லாம் வேணாம் னு முடிவு பண்ணி தான் அங்க அந்த பையன் கிட்ட பொய் சொன்னேன். தனியா அவன் கிட்ட உண்மைய சொல்லிட்டேன். அவனும் கேட்டுட்டு போயிட்டான்”

ஆராதனாவின் விளக்கம் யுவனை ஆச்சரியப்பட வைத்தது. இது வரை அவளை சின்ன பெண் என்று நினைத்திருந்தான். அவளும் வளர்ந்து விட்டாள் என்று காட்டியது அவன் முகத்தில் புன்னகையை வரவைத்தது.

மீண்டும் பயணம் தொடங்க மாலை கோயம்புத்தூர் சென்று சேர்ந்தனர். வீட்டிற்குள் நுழைந்ததும் நேராக பத்மினியை தேடிச் சென்றாள். பத்மினியும் ரகுநாதனும் அமர்ந்து எதையோ பேசிக் கொண்டிருந்தனர்.

“ம்மா.. காய்ச்சல் இப்போ எப்படி இருக்கு?” என்று கேட்டு நெற்றியை தொட்டு பார்த்தாள்.

“இப்போ பரவாயில்ல ஆரா.. நீ போய் முகம் கழுவு”

“பரவாயில்லையா? இன்னும் சுடுதே”

“டேப்ளட் போட்டு தூங்கனும். இப்ப தான் அர்ச்சனா கஞ்சி வைக்க போச்சு”

“நான் போய் அத்தைக்கு ஹெல்ப் பண்ணுறேன்” என்று சமையலறை பக்கம் சென்றாள். உள்ளே யுவன் நின்று இருந்தான். அர்ச்சனா அவனுக்கு வேலை சொல்ல அவனும் பொறுப்பாக செய்து கொண்டிருந்தான்.

‘இந்த பொறுப்பு தான் பிரச்சனையே’ என்று நினைத்தவள் “அத்த.. ” என்று அழைத்துக் கொண்டே உள்ளே சென்றாள்.

“என்ன ஆரா ட்ராவல் நல்லா இருந்ததா? இவன் சாப்ட எதுவும் வாங்கி கொடுத்தானா?” என்று அர்ச்சனா கேட்க “அதெல்லாம் இப்போ முக்கியம் இல்ல. அம்மாக்கு கஞ்சி போடுறீங்களாமே” என்று பேச்சை மாற்றினாள்.

பின்னே.. அவள் வாயால் யுவனை புகழ்ந்தால் வாய் அவளை அடித்து விடாது?

“போட்டேன். இத குடிக்க வச்சு மாத்திரைய போட்டு தூங்க சொல்லனும். மதியம் சாப்ட எழுப்பினா எந்திரிக்கவே இல்ல. இல்லனா மதியமே குடுத்துருப்பேன்” என்று கஞ்சியை எடுத்துக் கொண்டு அர்ச்சனா செல்ல இருவரும் அவர் பின்னால் சென்றனர்.

பத்மினி மாத்திரையை போட்டு படுத்து உறங்கி விட எல்லோரும் வெளியே வந்தனர்.

“எனக்கு பசிக்குது மா” என்று யுவன் கூற “சமைச்சுருக்கேன். வாங்க சாப்டுவோம். அண்ணன் நீங்களும் வாங்க” – அர்ச்சனா.

“இல்லமா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.” – ரகுநாதன்.

“அப்போ நாங்க சாப்டுட்டு ஆரா கிட்ட கொடுத்து விடுறேன்” என்று கூறி விட்டு மூவரும் சென்று விட்டனர்.

மூவரும் சாப்பிட அமர சத்தியனும் வந்து விட்டார். நால்வரும் பேசிக் கொண்டே அமர்ந்து சாப்பிட திடீரென ஆராதனா கல்லூரியில் கூறிய விசயம் யுவனுக்கு நியாபகம் வந்தது.

அந்த நினைவில் வந்த சிரிப்பை அவன் கட்டுப்படுத்த “என்ன தனியா சிரிக்கிற?” என்று கேட்டார் சத்தியன்.

யுவன் பதில் சொல்லாமல் ஆராவை திரும்பி பார்த்தான். ‘சொல்லட்டுமா?’ என்பது போல் அவன் புருவம் உயர்த்த முதலில் ஆராதனாவிற்கு புரியவில்லை. ஒரு நொடி யோசனையில் புரிந்து விட அப்பளத்தை நொறுக்கி விட்டாள்.

‘சொன்ன இப்படி உன்ன நொறுக்கிடுவேன்’ என்று அவள் பார்வை கூற “ஒன்னும் இல்லபா” என்றான்.

“ரெண்டும் கூட்டு களவாணிங்க. எதையோ மறைக்குதுங்க” என்று சத்தியன் கூற “மாமா.. எனக்கு கூட்டு சேர்க்க உங்களுக்கு வேற ஆளே கிடைக்கலையா? இவன் கூட திருட போனா நீதி நேர்மை நியாயம் னு போலிஸ் கிட்ட மாட்டி விட்ருவான். நீங்க வேற” என்று சலிப்பாக கூறினாள்.

ஆராதனாவின் பேச்சில் முதல் முறையாக கோபம் வராமல் யுவன் சிரிக்க ஆரம்பித்து விட்டான். உடன் சேர்ந்து மற்றவர்களும் சிரிக்க ஆராதனா ஒரு புன்னகையோடு சாப்பிட்டு முடித்து விட்டாள்.

இரவு உணவை தந்தை சாப்பிட்டதும் எல்லாவற்றையும் கழுவி வைத்து விட்டு ஆராதனா படுக்கைக்கு சென்றாள். விடுதியிலிருந்து கிளம்பியதிலிருந்து தன் போனை தொடவே இல்லை. அதை கையில் எடுத்தாள்.

உள்ளே சென்று பார்க்க பல குறுஞ்செய்திகள் இருந்தது. அத்தனையும் யுவனையும் ஆராவையும் பற்றிய செய்திகள். சில மணி நேரங்களிலேயே யுவன் யாரென்று ஆராய்ந்து விட்டனர். அவனை வைத்து ஆராதனாவின் பின்புலமும் எல்லோருக்கும் தெரிந்து விட்டது.

“சுத்தம்.. தெரியாம செஞ்ச ஒரு தப்பு இப்படியா முடியனும்? அவன் தனியா பேசனும் னு சொன்னப்போவே தனியா பேசி தொலைச்சுருக்கலாம். தனியா பேச பிடிக்கல னு இப்படியாக்கி வச்சுருக்க மாட்டேன்… சரி.. சமாளிப்போம்.. “

தனக்கு தானே பேசிக் கொண்டு எல்லாருடைய குறுஞ்செய்திக்கும் பதில் அனுப்ப ஆரம்பித்தாள். அதை பார்த்துக் கொண்டிருக்கும் போதே தூக்கம் வர அப்படியே போட்டு விட்டு உறங்கி விட்டாள்.

காலையில் பத்மினியின் காய்ச்சல் குறைந்து இருந்தது. அவருக்கு உதவியாக வீட்டில் வேலைகளை செய்து பொழுதை கழித்தாள். அடுத்த நாள் அவளுடைய நண்பர்கள் அழைக்க வெளியே சென்று விட்டாள்.

விடுமுறையில் ஒரு வாரமும் ஊர் சுத்துவதில் கடந்து விட அன்று எல்லோரும் ஒன்றாக யுவனின் வீட்டு தோட்டத்தில் அமர்ந்து இருந்தனர். ஆளுக்கொரு விசயத்தை பேசி சிரித்துக் கொண்டிருக்க யுவன் அலுவலகத்திலிருந்து வந்தான்.

“என்னடா அதிசயமா இன்னேரத்துல வந்துட்ட?” – அர்ச்சனா.

“நான் வந்தது இங்க இருக்க ஒரு ஃபைல எடுத்துட்டு போக” என்று கூறி விட்டு அவன் வீட்டுக்குள் செல்ல “காபி போட்டு தரேன். குடிச்சுட்டு போ” என்று கூறி அர்ச்சனாவும் பின்னால் சென்று விட்டார்.

“பாரு யுவா எப்படி வேலை பார்க்குறான் னு. ஒழுங்கா படிச்சுட்டு நீயும் ஆபிஸ் போற வழிய பாரு” என்றார் பத்மினி.

‘இவன் கூட வேலையா? சும்மா பார்க்குற பத்து நிமிஷமே அத்தனை சண்டை வருது. இதுல நாள் முழுக்க பார்த்தா அவ்வளவு தான்’ என்று நினைத்தவள் “வேலைக்கா? அதெல்லாம் என்னால முடியாது” என்றாள்.

“ஏன் படிச்சுட்டு என்ன செய்யுறதா இருக்க?”

“சும்மா சாப்ட்டு தூங்குவேன்”

“அத நீ போய் உன் புருசன் வீட்டுல பண்ணு. இங்க வேலை பாரு”

“ஆமாமா ஆபிஸ் வரலாம்ல?” – சத்தியன்.

“எனக்கு வேலை பார்க்கவே பிடிக்காது மாமா”

“ஏன்?” – ரகுநாதன்.

“அதான் நீங்க பார்க்குறீங்களே நான் வேற எதுக்கு?”

“அப்போ மேல படிக்கலாம்ல. எதுக்கு சும்மா இருந்துகிட்டு?”

“அதுவும் யோசிக்கனும்”

“யோசிக்க வேணாம். அதே காலேஜ்ல இல்லனா இங்க எதாவது காலேஜ்ல கூட படி”

“எதுவும் வேணாம் னா கல்யாணத்துக்கு வேலைய பார்க்குறேன்” என்று பத்மினி கூற “இதுக்கு நான் வேலையே பார்ப்பனே” என்று அலறினாள் ஆராதனா.

“யார் என்ன வேலை பார்க்க போறது?” என்று கேட்டுக் கொண்டே யுவன் வந்து அமர்ந்தான்.

“ஆராவ தான் நம்ம கம்பெனில வேலை பாரு னு சொல்லுறேன்” என்று பத்மினி கூற “ஏன் அத்த? கம்பெனி நல்லா இருக்கது உங்களுக்கு பிடிக்கலையா? இல்ல எங்க மேல எதாவது கோபமா?” என்று கேட்டு வைத்தான்.

இது வரை சாந்தமாக இருந்த ஆராதனா அவனை முறைக்க ஆரம்பித்து விட்டாள்.

“அதுவும் சரி தான். அவளே வரலையாம். சாப்ட்டு தூங்க போறாளாம்”

“அது தான் கரெக்ட். அது தான் அவளுக்கு வரும். அத மட்டும் நல்லா பண்ண சொல்லுங்க”

“டேய்.. என்ன விட்டா ஓவரா பேசிட்டே போற?” என்று ஆராதனா கடுங்கோபத்தில் கேட்க “ஓவராவா? உண்மைய சொன்னேன். நீயே அத தான பண்ண போற?” ‌என்று கேட்டு விட்டு அர்ச்சனா கொடுத்த காபியை வாங்கிக் கொண்டான்.

“நான் என்னமோ செய்வேன். அத பத்தி நீ ஏன் கமெண்ட் பண்ணுற?”

“நீ வேலைக்கு வர வேணாம் னு தான் சொன்னேன். மத்தபடி நீ என்ன பண்ணா எனக்கு என்ன?”

“ஏன் டா. ஆரா ஏன் வேலைக்கு வேணாங்குற? அவளுக்கு என்ன குறை? நல்லா படிக்குற பொண்ணு தான்” என்று அர்ச்சனா பரிந்து கொண்டு வர மற்றவர்கள் எனக்கென்ன என்று சண்டையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.

“குறையா? அதெல்லாம் ஒன்னுமே கிடையாது. எல்லாமே ஓவரா தான் இருக்கு. அதுலையும் வாய் டூ மச்… இவ வாய்க்கு எல்லாம் அங்க வேலை கிடையாது”

“வாய் பத்தி நீ பேசாத.. என்ன விட நாலு மடங்கு நீ பேசுவ”

“நான் வேலை நடக்க பேசுறேன். உன்ன மாதிரி கெடுத்து விட பேச மாட்டேன்”

“நான் வந்தா வேலை கெட்டு போயிடும்?”

“இதுல என்ன சந்தேகம்?”

“நான் வரேன். எப்படி கெடுது னு நானும் பார்க்குறேன்”

“உனக்கு வேலை தரேன்னு யாரு சொன்னது?”

“நீ என்ன தர்ரது..? அது எங்கப்பா மாமா கம்பெனி”

“ம்ம்.. அப்படி வேணா நீ வரலாம்‌. இவங்க ரெக்கமண்ட் பண்ணி வரலாம் தான்”

“ரொம்ப சீண்டுற டா. என் கிட்ட அடி வாங்க போற”

“ஹே.. முதல்ல வேலைனா என்ன னு தெரியுமா? அதுக்கு நடக்குற இன்டர்வியூ ஆச்சும் தெரியுமா? இதுக்கு முன்னாடி கேள்வியாச்சும் பட்டுருக்கியா?”

“இது கூட தெரியாத மக்கு னு நினைச்சியா நீ?”

“அட தெரியுமா உனக்கு? அப்போ உன் காலேஜ்ல கேம்பஸ் இன்டர்வியூ வைப்பாங்க. அதுல செலக்ட் ஆகி எதாவது சின்ன கம்பெனிக்கு வேலைக்கு போ”

“நான் வேற எங்கயும் வேலை செய்ய மாட்டேன். நீ வேலை பார்க்குற அதே இடத்துல தான் வேலை செய்வேன். என்ன பண்ணிடுவ?”

“அதுக்கு அறிவு வேணும் ஆரா” என்றவன் காபியை குடித்து முடித்து கப்பை கீழே வைத்தான். ஆராதனா கோபத்தில் தன் முன்னால் இருந்த கப்பை தூக்கி போடப் போக ரகுநாதன் கையை பிடித்து விட்டார்.

“நீ இன்னைக்கு மண்டை உடையாம போக மாட்ட” என்று ஆராதனா சீற “முதல்ல ஒரு க்ளர்க்கு வேலைக்காச்சும் நீ வொர்த்தா னு பாரு. அப்புறம் வந்து என் இடத்துல வேலை பார்க்குறத பத்தி யோசி” என்று கூறி விட்டு எழுந்து விட்டான்.

“நைட் தான் மா வருவேன். எல்லாருக்கும் பை” என்று கூறி விட்டு அவன் நடக்க “டேய் நில்லு.. நான் அங்க வேலைக்கு வந்து காட்டுறேன் பார்க்குறியா? ஓபன் சேலன்ஜ்” என்றாள் ஆராதனா.

உடனே நின்றவன் திரும்பி பார்த்தான். “சேலன்ஜ்ஜா?” என்று கேட்டு விட்டு மீண்டும் வந்தான்.

“ஓகே.. நான் ஒரு சேலன்ஜ் வைக்குறேன். நீ படிக்குற சப்ஜெக்ட்ல எதாவது ரெண்டு மேஜர்ல யுனிவர்ஸிட்டி ரேங்க் வாங்கு. அதாவது நூறு சதவீதம் முழுசா வாங்கு. அப்படி வாங்கிட்டா நானே உனக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் தரேன். அப்படி இல்ல னா நீ நான் இருக்க பக்கம் தலை வச்சு கூட படுக்க கூடாது. டீலா?”

“டீல். பட் நான் எடுத்துட்டேன்னா நீ வேலை செய்யுற ஆபிஸ்க்கு தான் வருவேன். அங்க பார்த்துக்குறேன் உன்ன”

“நடந்தா பேசுவோம்” என்று கூறி விட்டு யுவன் நிற்காமல் சென்று விட்டான்.

ஆராதனாவின் மனம் கொந்தளித்தது. அவளுக்கு வேலை செய்ய பிடிக்கவில்லை தான். ஆனால் வேலைக்கு தகுதியே இல்லை என்று யுவன் கூறுவதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அவள் அவ்வளவு மக்காகவா தெரிகிறாள்? அவளுக்கிருக்கும் கோபத்திற்கு விட்டால் யுவனை கொன்றே விடுவாள். அப்படி ஒரு கோபம் வந்தது.

அதோடு அங்கு அமர்ந்து இருக்க பிடிக்காமல் வேகமாக வீட்டுக்கு சென்று விட்டாள்.

“இதுங்க எப்போ தான் சண்டைய விட்டு நல்லா பேசுங்களோ தெரியல” என்று அர்ச்சனா கூற “அது இந்த ஜென்மத்துல நடக்காது. இதுங்க சேர்ந்தா வானம் இடிஞ்சு விழுந்துடும்” என்றார் பத்மினி.

*.*.*.*.*.

அடுத்த மூன்று நாட்கள் ஆராதனா யுவனின் கண்ணில் படவே இல்லை. அவனிருக்கும் திசைக்கே கும்பிடு போட்டு விட்டு சுற்றினாள். அடுத்த நாள் மாலை பத்மினி எதோ கொடுத்து விட அதை எடுத்துக் கொண்டு அர்ச்சனாவின்‌ வீட்டிற்கு வந்தாள்.

உள்ளே போகும் போதே வாசலில் நின்று போன் பேசிக் கொண்டிருந்த யுவனை பார்த்து விட்டாள். ஆனால் அவனை கண்டு கொள்ளாமல் உள்ளே சொன்றாள். திரும்பி வரும் போது யுவன் அவளை நிறுத்தினான்.

“ஏய் நில்லு” என்று நிறுத்த முறைத்து பார்த்தாள்.

“அன்னைக்கு நான் சும்மா தான் சொன்னேன்.” என்று அவன் கூறவும் ஆரா அவனை மேலும் கீழும் பார்த்தாள்.

‘இவன் இவ்வளவு நல்லவன் கிடையாதே’ என்று அவளது மூளை கூறியது.

“அந்த சேலன்ஜ்ஜ சீரியஸா எடுத்துக்க வேணாம். நீ படிச்சுட்டு வீட்டுலயே இரு புரியுதா?” என்று கேட்க ‘அதான பார்த்தேன்’ என்று நினைத்தாள்.

“ஏன்?”

“உன்னால முடியாது”

“எது? படிக்கிறதா?”

“இல்ல.. வேலை பார்க்குறது..”

“ஓஹோ..”

“புரிஞ்சுக்க ஆரா.. அங்க எல்லாம் பல விதமான அரசியல் நடக்கும். அதெல்லாம் நீ மேனேஜ் பண்ண மாட்ட. வேணும்னா மேல படி. இல்ல வீட்டுல இரு. வேலைக்கு எல்லாம் வேணாம். அவ்வளவு தான் சொல்லுவேன்”

“நான் மார்க் எடுத்துட்டா நீ வேலை தரேன் னு தான சொல்லி இருக்க. அத மட்டும் மனசுல வை போதும்” என்று கூறி விட்டு விறுவிறுவென சென்று விட்டாள்.

யுவன் எவ்வளவு கூப்பிட்டும் அவள் நிற்க வில்லை.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
16
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்