Loading

“ஹலோ… என்னோடத எனக்கு எடுத்துட்டு போக தெரியும்” என்று ஆராதனா கூற உடமைகளை அப்படியே விட்டு விட்டு நடந்தான் யுவன்.

கீழே விழப்போனதை அவசரமாக பிடித்தவள் “திமிரு பிடிச்சவன்” என்று திட்டி விட்டே நடந்தாள்.

விமானம் ஏறி ஆராதனா கிளம்பியதும் மற்ற மூவரும் வீட்டிற்கு திரும்பினர். வரும் வழியெல்லாம் யுவன் வேலையை பற்றி பேசிக் கொண்டே தான் வந்தான்.

பரிட்ச்சைக்கு சென்றவளோ எல்லாவற்றையும் மறந்து பரிட்சையில் மூழ்கி விட்டாள். நிறைவாக தேர்வை முடித்து விட்டு அறையை மொத்தமாக காலி செய்தனர். முதல் வருடம் மற்றும் இரண்டாம் வருடம் மாணவர்களுக்கு ஒரே அறையாக தான் இருக்கும். மூன்றாம் வருடத்திற்கு வேறு அறைகள் கொடுக்கப்படும். அதனால் தங்கி இருக்கும் அறையை மொத்தமாக காலி செய்ய கூறியிருந்தனர்.

முதலில் தன் ஊருக்கு செல்லும் போதே பாதிக்கும் மேல் கொண்டு சென்று விட்டதால் இப்போது மிட்சம் இருந்ததை பெட்டியில் அடுக்கினாள் ஆராதனா.

தேர்வு முடிந்து மூன்று நாட்கள் வரை அறையை காலி செய்ய நேரம் கொடுத்திருந்தனர். எல்லோருடைய உடமைகளையும் பேக் செய்து விட்டு ஓய்ந்து போய் அமர்ந்து இருந்தனர்.

அதே நேரம் அவளது சீனியர்கள் வந்து சேர்ந்தனர். அவர்களை பார்த்து எரிச்சல் வந்த போதும் “என்ன சீனியர்ஸ்… காத்து வாங்க வந்தீங்களா?” என்று கேட்டாள் கீர்த்தனா.

“காத்த அஞ்சுக்கும் பத்துக்கும் விக்குற மாதிரி கேட்குறா பாரேன். நீங்க கண்டுக்காதீங்க சீனியர். உட்காருங்க” என்று ஆராதனா முன்னால் இருந்த மேடையை காட்டினாள்.

மரத்தை சுற்றி போட்டிருந்த மேடையில் சீனியர் மூவரும் அமர்ந்து கொண்டனர். வருணி தான் முதலில் பேசினாள்.

“பேக்கிங் எல்லாம் முடிஞ்சதா? “

“ம்ம்… நீங்க பண்ணியாச்சா? இதான் உங்க லாஸ்ட் டேய்ஸ் இல்ல?” – பூஜா.

“ஆமா.. கொஞ்சம் வருத்தமா தான் இருக்கு. ஆனா வேற வழி இல்ல. வேலைக்கு போகனுமே” என்று வேறு ஒரு மாணவி கூறினாள்.

“சரி.. போறதுக்கு முன்னாடி எனக்கு ஒரு டவுட் க்ளியர் பண்ணு ஆராதனா” – வருணி

“என்ன டவுட்?”

“உனக்கு பார்த்த மாப்பிள்ளை யாரு னு நீ சொல்லவே இல்லையே? நாங்களே கிளம்ப போறோம். நீ எங்க கிட்ட சொன்னா விசயம் வெளிய போகாது. பயப்படாம சொல்லு.. யாரது?”

“அது…” என்று இழுத்தவள் ‘கிராதகி… இப்ப வந்து கேட்டு ஞாபக படுத்தி விட்டாளே’ என்று மனதில் தாளித்தாள்.

“சொல்லு சும்மா.. யாரு? என்ன வேலை பார்க்குறாங்க? எந்த ஊரு? எல்லாம் தெரிஞ்சுக்கனும் னு ஆசை இருக்காதா என்ன?”

‘மாட்டுனேன்…’ என்று ஆராதனா மனதில் புலம்ப “என்ன யோசிக்கிற? பேசாம அவங்களுக்கு கால் பண்ணேன்” என்று கூறி விட்டாள்.

ஆராதனாவிற்கு பகீர் என்றது.

“கால் பண்ணுறதா? நோ அவங்க பிசியா இருப்பாங்க”

“கட்டிக்க போற பொண்ணு கால் பண்ணா பிசி னு சொல்லுவாங்களா?”

“அவருக்கு வேலை இருந்தா பிசி னு தான சொல்லுவாரு?”

“நீ கால் பண்ணு.. அதெல்லாம் சொல்ல மாட்டாரு”

வருணியின் தோழிகளும் கூற பூஜாவும் கீர்த்தனாவும் அவளை ஒரு மாதிரி பார்த்து வைத்தனர். அதனால் வேறு வழியில்லாமல் போனை கையில் எடுத்தாள்.

வருணியும் அவளது தோழிகளும் அருகே வந்து நிற்க யுவனின் எண்ணை அழுத்தினாள். பெயரில்லாமல் வெறும் புள்ளி மட்டும் தான் இருந்தது.

“என்ன பேர காணோம்?” என்று வருணி கேட்க “அது அப்படி தான்” என்று கூறி அமைதியாகி விட்டாள்.

“ஹேய் ஸ்பீக்கர்ல போடு கேட்போம்” என்று கூறி வருணி அவளது போனை பிடுங்கி ஸ்பீக்கரில்‌ வைத்தாள். ஆராதனாவிற்கோ கடுப்பு தான் வந்தது. அவளுக்கெங்கே தெரியும் தனது பொய்யை வருணி எப்போதோ கண்டு பிடித்து விட்டாள் என்று.

தேர்வுக்கு முன்பு விடுமுறைக்காக கிளம்பும் போது ஆராதனா அன்று காதல் சொன்ன மாணவனை சந்தித்தாள். தற்செயலாக அவனை பார்க்க அவனை நிறுத்தி பேசினாள்‌.

“உங்க கிட்ட பேசனும் சீனியர்”

“ம்ம்..”

“ஆக்சுவலி சாரி… அன்னைக்கு நான் சொன்னது உண்மை இல்ல. அத்தனை பேர் முன்னாடி நான் வேற என்ன‌ ரீசன் சொல்லுறது னு தெரியாம அப்படி சொல்லிட்டேன். உங்கள பிடிக்கல னோ காதலே பிடிக்காது‌னோ சொன்னா அது சங்கடமாகி இருக்கும். அதான் அந்த நேரத்துல அப்படி சொல்லிட்டேன்”

“எதிர் பார்த்தேன் தான்”

“ஓகே.. முடிஞ்சா பொய் சொன்னதுக்கு மன்னிச்சுடுங்க”

“இப்போ ஏன் இந்த உண்மைய சொல்லுறீங்க னு தெரிஞ்சுக்கலாமா?”

“பர்ஸ்ட்.. எனக்கு பொய்ய‌ ரொம்ப நாள் காப்பாத்த தெரியாது. செக்கண்ட்… நானே உண்மைய சொல்லுறது தான் எல்லாத்துக்கும் நலம். லாஸ்ட்டா.. உங்களுக்கு உண்மைய தெரிஞ்சுக்க உரிமை இருக்கு. அன்னைக்கு தனியா பேசி இருந்தா உண்மைய தான் சொல்லி இருப்பேன். அது நடக்கல.”

“எனிவே.. என்ன மதிச்சு சொன்னதுக்கு தாங்க்ஸ்”

“ஆல் தி பெஸ்ட் ஃபார் யுவர் எக்ஸாம். பை”

ஆராதனா விடை பெற்று அங்கிருந்து சென்று விட்டாள். அவனும் இப்படி ஒரு பெண் நமக்கு இல்லையே என்ற ஏக்கத்துடன் நகர்ந்தான். ஆனால் அவர்கள் நின்று பேசிக் கொண்டிருந்த இடத்தில் வருணி நின்றிருந்தது அவர்களுக்கு தெரியவில்லை. அருகில் இருந்த சன்னல் வழியாக வருணி அனைத்தையும் கேட்டுக் கொண்டாள்.

அவளுக்கு ஆராதனாவின் வாழ்வை பற்றி கவலை இல்லை தான். ஆனால் எல்லோரிடமும் நல்ல பெயர் எடுத்து வைத்திருப்பவள் குறைந்த பட்சம் தன் முன்னால் அவமான பட்டு நிற்க வேண்டும் என்ற எண்ணம். அதற்காகவே இன்று மீண்டும் வந்து நின்றாள்.

அழைப்பு மூன்றாவது ரீங் போகும் போது எடுக்கப்பட்டது. ஆராதனா மூச்சை பிடித்துக் கொண்டாள்.

“ஆரா எதுவும் எமர்ஜென்சி யா?” என்று யுவன் அவசரமாக மெதுவான குரலில் கேட்க “இல்ல இல்ல” என்றாள்.

“இங்க மீட்டிங் போயிட்டு இருக்கு. பத்து நிமிஷம் கழிச்சு கூப்பிடவா?”

“ஓகே.. நோ ப்ராப்ளம்”

“ஓகே பை”

யுவன் அழைப்பை துண்டித்து விட அப்போது தான் ஆராதனாவிற்கு உயிர் வந்தது.

‘நல்ல வேளை மீட்டிங்ல இருந்தான். இல்லனா வழக்கம் போல சண்டை போட்டு மொத்தமும் போயிருக்கும்’ என்று மனதில் நினைத்துக் கொண்டு மற்றவர்களை பார்த்தாள்.

“நான் சொன்னேன்ல வேலையா இருப்பாங்க னு. நீங்க தான் கேட்கல” என்று கூறியவள் வருணியை பார்த்தாள்.

எல்லோருமே ஆச்சரியமாக பார்த்த போதும் வருணியின் முகத்தில் அளவுக்கு அதிகமான அதிர்ச்சி இருந்தது. அதை ஆராதனா புருவம் சுருக்கி பார்த்தாள்.

“என்ன சீனியர் சாக் ஆகி நிக்கிறீங்க?”

“இது…. யுவன் தானே?”

“யுவன் ஆ? யாரு யுவன் சங்கர் ராஜா வா?” என்று பூஜா கேட்க ஆராதனா அவளை கொலை வெறியோடு பார்த்து வைத்தாள்.

“இல்ல.. இது ஏ யூ கம்பெனி விபி கரெக்டா?” என்று கேட்ட வருணியின் குரலில் பொறாமை பொங்கி வழிந்தது.

“ஆமா.. உங்களுக்கு எப்படி தெரியும்?”

“எங்க கம்பெனிக்கு போனப்போ பார்த்து இருக்கேன்”

‘பார்ரா.. நீ என்ன அவ்வளவு பேமஸ்ஸாடா.. இவளுக்கு எல்லாம் உன்ன தெரியுது’ என்று நினைத்த ஆராதனா “ஓ.. உங்க கம்பெனி பேரென்ன?” என்று கேட்டாள்.

வருணி விவரம் கூற ஆராதனா சாதாரணமாக கேட்டுக் கொண்டாள். முன்னே பின்னே கேட்டறியாத பெயராக இருக்க அவள் அதை காட்டிக் கொள்ளவில்லை.

வருணிக்கோ வயிறு எரிந்தது பொறாமையில். இந்த கல்லூரியில் படிக்க வேண்டும் என்றால் பணம் நிறைய தேவைப்படும் தான். அதனால் ஆராதனாவும் தன்னை போல் அல்லது தன் தோழிகளை போல் ஒருத்தி என்று தான் நினைத்து இருந்தாள்.

அவளது தோழிகளின் தந்தைகள் எல்லாம் பெரிய நிறுவனத்தில் பெரிய பதவியில் இருப்பவர்கள். அதனால் தான் சாதாரணமாக இருக்கும் ஆராதனாவும் அப்படி தான் என்று நினைத்துக் கொண்டாள்.

ஆனால் ஆராதனா இருக்கும் உயரம் அவளை சற்று மிரட்டி பார்த்தது. அந்த ஏயூ நிறுவனம் வருணியின் குடும்பத் தொழிலில் பெரிய வாடிக்கையாளர்.

முதல் முறையாக அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் கிடைத்த போது வருணியின் அண்ணன் குதித்து ஆடி பாடியது எல்லாம் நியாபகம் வந்தது. பெரிய திருவிழா போல் கொண்டாடி விட்டான். ஆனால் அந்த மொத்த நிறுவனத்தின் முதலாளி சாதாரணமாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறாள்.

“யுவன் உனக்கு அத்த பையன் னா…. அப்போ உன் அப்பா….?” என்று வருணி யோசிக்க ஆராதனா அமைதியாக வேடிக்கை பார்த்தாள்.

“ரகுநாதன் கரெக்ட்டா?” என்று கேட்க ஆராதனாவிடம் வெறும் தலையசைப்பு மட்டுமே.

“ஹே.. நீ ஏயூ கம்பெனி….” என்று பூஜா சத்தமாக கேட்க “ஸ்ஸ்… வாய மூடு.. யாருக்கும் சொல்லாம வச்சுருந்தா நீ மைக் போட்டு சொல்லிடுவ போல” என்று ஆராதனா திட்டினாள்.

“ஆமா சீனியர் அவன் வாய்ஸ கரெக்டா கண்டு பிடிக்குற அளவு எப்படி தெரியும்?” என்று ஒரு ஆராய்ச்சியுடன் கேட்டாள்.

“என் அண்ணன் கூட ஆபிஸ் போகும் போது இவர ரெண்டு டைம் பார்த்தேன். அப்போ பேசி இருக்கேன்”

“உங்க அண்ணன் பேரு?”

“வாசன்”

“ஓகே ஓகே. இப்போ உங்க டவுட் க்ளியர் ஆகிடுச்சா ?” என்று கேட்க “ம்ம்…” என்றாள்.

“நீ இவ்வளவு பெரிய ஆளு னு நினைக்கவே இல்லடி ஆரு” என்று கீர்த்தனா கூற “ச்சே.. லூசுங்களா.. நான் பெரிய ஆளு இல்ல. என் குடும்பம் பெரியவங்க. நான் இப்போ வெறும் ஸ்டூடண்ட் தான். அத மட்டும் பாருங்க” என்று திட்டவட்டமாக கூறி விட்டாள்.

பேசிக் கொண்டிருக்கும் போதே யுவனிடமிருந்து அழைப்பு வர அதை எடுத்துக் கொண்டு வேகமாக அங்கிருந்து தூரம் சென்றாள்.

அவள் செல்வதை வருணி பொறாமையோடு பார்த்தாள். அவள் சைட்டடிக்கும் இடத்தில் முதல் இடத்தை பெற்றவன் யுவன் தான். கல்லூரியில் தான் அழகான பண்பான ஆண்கள் எல்லோரும் ஆராதனாவின் பின் சுற்றுகிறார்கள் என்றால் வெளியிலுமா? அதுவும் யுவன் ஆராதனாவிற்கு அத்தை மகன். அவனை வைத்து பார்க்கும் போது கல்லூரியில் காதலை சொல்லியவனை ஆரா வேண்டாம் என்றதில் எந்த தவறும் இல்லை தான்.

“ஹலோ”

“எதுக்குடி கூப்பிட்ட?”

“எனக்கு ஆசை பாரு… அத்த கோவிலுக்கு போயிட்டு வந்து போன் பண்ணுறேன் னு சொன்னாங்க. அம்மாவும் போன் எடுக்கல அத்தையும் எடுக்கல. அதான் உன் கிட்ட கேட்ப்போம் னு போன் பண்ணேன்”

“இன்னும் பத்து நிமிஷத்துல வீட்டுக்கு வந்துடுவாங்க அப்புறம் கூப்பிட்டு பேசு”

“சரி பை”

“ஏய் நில்லுடி.. இதுக்கு மட்டும் தான் போன் பண்ணியா?”

“வேற எதுக்கு பண்ணுவாங்க?”

“பொய் சொல்லாத… அவ்வளவு சீக்கிரம் உன்ன நம்பிட முடியாது. முதல்ல கால் பண்ணப்போ ஸ்பீக்கர்ல தான போன் இருந்துச்சு? ஏன்”

‘இவன் இவ்வளவு புத்திசாலியா இருக்கது தான் என் பிரச்சனையே’ என்று நினைத்து தலையில் அடித்துக் கொண்டாள்.

“சொல்லுறியா இல்லையா?” என்று கேட்க “எனக்கு ஒரு எதிரி இருக்கான் னு சொன்னேன். யாரும் நம்பல. அதான் போன் பண்ணேன். போதுமா?” என்று வெடுக்கென கூறினாள்‌.

ஒரு நொடி புருவம் சுருக்கியவனின் முகம் உடனே சிரிப்பை தத்தெடுத்தது.

“சரி போ.. இந்த ஜென்ம எதிரிய நேர்ல பார்க்க உன் ஃப்ரண்ட்ஸ இன்வைட் பண்ணு பை”

அழைப்பை துண்டித்தவனுக்கு சிரிப்பு வந்தது. ஆராதனாவிற்கு ஒரு காதலன் இருப்பதாக அவள் கல்லூரியில் சொன்ன விசயம் யுவனுக்கு தெரியும். அது அந்த இடத்திலிருந்த தப்பிக்க அவள் சொன்ன பொய் என்றும் தெரியும். இன்று மீண்டும் மாட்டி இருப்பாள் போலும். பொய்யை காப்பாற்ற தனக்கு அழைத்து இருக்கிறாள். யுவன் மிகத்தெளிவாக விசயத்தை உணர்ந்து சிரித்து விட்டு அடுத்த வேலையை பார்க்க சென்று விட்டான்.

“தப்பிச்சேன்டா சாமி… ஒரு பொய் சொல்லுறது எவ்வளவு கஷ்டமா இருக்கு. இனிமே எந்த பொய்யும் சொல்ல கூடாது” என்று தனக்கு தானே கூறிக் கொண்டு திரும்பி வந்தாள்.

வருணியும் அவளது தோழிகளும் சென்று இருக்க கீர்த்தனாவும் பூஜாவும் அமர்ந்து இருந்தனர். அவர்களிடம் வந்தவள் “எல்லாரும் போயாச்சா? ரூம்க்கு பேகலாம்” என்று கூறி நடந்தாள்.

பூஜாவும் கீர்த்தனாவும் அவளை ஒரு மாதிரியாக பார்த்ததை அவள் கவனிக்கவில்லை. யுவன் கடைசியாக சொன்ன வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தாள்.

‘எதோ சொன்னான் இருந்த பதட்டத்துல கவனிக்கலையே..’ என்று யோசித்துக் கொண்டே வந்தவள் அறைக்குள் வந்து படுத்துக் கொண்டாள். மற்ற இருவரும் படுக்காமல் அவளையே பார்க்க “என்ன தூங்கலையா?” என்று கேட்டாள்.

“இல்ல ஆரா.. எனக்கு இன்னும் நம்ப முடியல. இவ்வளவு பெரிய இடத்துல இருந்து வரவங்களுக்கு கொஞ்சமாச்சும் திமிர் இருக்கும். உன் கிட்ட அந்த வருணிகிட்ட இருக்க திமிர்ல கொஞ்சம் கூட இல்லையே”

“நான் சொல்லிட்டேன்ல. எனக்கு எப்படி இருக்க தோனுதோ அப்படி இருக்கேன். நான் சம்பாதிச்சு என் பணம் னு வந்துட்டா வேணா அந்த பணத்துக்கு ஏத்த தைரியம் எனக்கு வரலாம். இப்போ நான் படிக்குற பொண்ணு. அதுக்கு ஏத்த மாதிரி வாழுறேன். வாழ்க்கையில எந்த நிலையில இருக்கோமோ அந்த நிலைக்கு ஏத்த மாதிரி தான் வாழனும். என் அம்மாவும் அத்தையும் சொல்லி கொடுத்தது.”

“க்ரேட்.. உன் பேமிலிய பார்க்கனும் ஆரா.. இப்படி வளர்த்து வச்சுருக்காங்களே ஒரு பொண்ண.. அவங்கள பார்த்து கும்பிடனும்”

பூஜா ஆச்சரியமாக கூற ஆராதனா சிரித்து விட்டு திரும்பி படுத்து தூங்கி விட்டாள். பூஜாவிற்கு ஆராதனாவின் அழகின் மீது தான் பொறாமை. அவளது பணபலம் கேட்டு பொறாமை வரவில்லை. ஆச்சரியம் தான் வந்தது.

அன்றைய இரவு பல ஆச்சரியங்களை கடந்து நிம்மதியாக தூங்கி எழுந்தனர். காலையில் முதலில் எல்லோரையும் கிளப்பி இரயிலில் ஏற்றி விட கிளம்பினாள் ஆராதனா.

பொருட்கள் நிறைய இருந்ததால் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஆட்கள் வந்து இருந்தனர். அவர்கள் கீழே காத்திருக்க ஆராதனா பத்மினி வரும் நேரம் எதிர்பார்த்து காத்திருந்தாள்.

ஒரு சிலர் ஆராதானாவின் அன்னையை முதலிலேயே பார்த்து இருந்தனர். இன்றும் பார்க்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

ஆராதனா போனுக்காக காத்திருக்க குறுஞ்செய்தி ஒன்று வந்து விழுந்தது. அதை பார்த்தவள் முகம் அதிர்ந்து போனது.

“கீழ வந்துட்டேன்” என்று மொட்டையாக யுவன் அனுப்பி இருந்தான். பதறியடித்து வேகமாக வெளியே ஓடினாள். எதிரில் வந்தவர்கள் அவசரமாக விலகுவதை கூட கவனிக்காமல் அவ்வளவு வேகமாக ஓடினாள்.

படிகளை கடந்து வாசலுக்கு ஓடியவள் சுற்றியும் பார்த்தாள். காரை நிறுத்தி விட்டு அதன் அருகில் சாய்ந்து நின்று இருந்தான் யுவன்.

‘அடப்பாவி.. இவன் எதுக்கு வந்து தொலைச்சான்?’ என்று தலையிலடித்துக் கொண்டு அவனிடம் ஓடினாள்.

வேகமாக வந்தவள் திட்ட வாயை திறந்து விட்டு பிறகு நிதானித்து சுற்றியும் பார்த்தாள். சிலரின் பெற்றோர்கள் நின்று இருக்க குரலை குறைத்தாள்.

“உன்ன யாரு டா இங்க வர சொன்னது?” என்று அடிக்குரலில் சீற “நான் தான் நேத்தே சொன்னனே.. வரேன் னு” என்று பொறுமையாக கூறினான்.

“ப்ச்ச்.. முதல்ல கிளம்பு.. நானே வந்துக்கிறேன்”

“முடியாது. ஓவரா சீன் போடாம போய் லக்கேஜ்ஜ எடுத்துட்டு வா”

“நான் சொல்லுறது உனக்கு புரியலையா? கிளம்பு னு சொன்னேன்” என்று ஆராதனா கூறும் போதே யுவன் அர்ச்சனாவை அழைத்தான்.

“பேசு” என்று கையில் திணித்து விட “ஆரா மா.. பத்மினிக்கு காய்ச்சலா இருக்குடா.. அதான் யுவா சென்னையில இருக்கானே னு அவனையே கூட்டிட்டு வர சொன்னேன். நீ கிளம்பி வந்துடு சரியா?” என்று அர்ச்சனா கூறினார்.

“அம்மாவுக்கு என்ன அத்த?”

“ஒன்னும் இல்ல. சாதாரண காய்ச்சல் தான். ஹாஸ்பிடல் போய் ஊசி போட்டாச்சு. தூங்கிட்டு இருக்கா. தீ கிளம்பி வா”

“சரிங்க அத்த”

ஆராதனா அழைப்பை துண்டித்து விட்டு போனை கொடுக்க “போதுமா? இப்போ எடுத்துட்டு வரியா?” என்று கேட்டான்.

“நீ காருக்குள்ளயே இரு. யாரு எது கேட்டாலும் பதில் சொல்லிடாத புரியுதா?” என்று கூறி விட்டு திரும்பும் போதே ஆராதனாவின் தோழிகள் நின்று இருந்தனர்.

“ஆரா.. இவர் தானா அவரு?” என்று பூஜா கேட்க ‘கடவுளே.. இப்படியா சோதிப்பீங்க’ என்று நொந்து கொண்டாள்.

“யாரு இவங்க?” என்று யுவன் கேட்டதுமே தள்ளி நின்றிருந்தவர்கள் அருகில் வந்து விட்டனர்.

“அத நாங்க சொல்லுறோம். நாங்க எல்லோருமே ஆருக்கு ஃப்ரண்ட்ஸ்” என்று தங்களை தாங்களே அறிமுக படுத்திக் கொண்டனர்.

“எங்க ஆருவ பத்திரமா கண்கலங்காம பார்த்துக்கனும். இல்லனா நாங்க எல்லாம் உங்கள சும்மா விட மாட்டோம்”

“கண்கலங்காமலா?” – யுவன்

‘போச்சு.. மானம் போக போகுது’ என்று ஆராதனா பதறினாள்.

“ஆமா.. கல்யாணம் பண்ணிட்டா நாங்க எல்லாம் விலகிட மாட்டோம். எங்க ஃப்ரண்ட்டுக்கு ஒன்னு னா உடனே வருவோம் ஞாபகம் வச்சுக்கோங்க”

யுவன் திரும்பி ஆராதனாவை ஒரு மாதிரி பார்த்து வைக்க ‘செத்தேன். அப்படி எதுவும் இல்ல னு போட்டு உடைக்க போறான்’ என்று ஆராதனாவிற்கு பதட்டமாக இருந்தது.

எதாவது சைகை செய்யலாம் என்றால் எல்லோரும் சுற்றி நின்றிருந்தனர். வேறு வழி இல்லாமல் ஆராதனா தலை குனிந்து கொண்டாள்.

“என்ன ஆராவ அப்படி பார்க்குறீங்க?”

“யாருக்கும் சொல்லல னு சொன்னா .‌ உங்களுக்கு எப்போ சொன்னா னு பார்த்தேன்”

யுவன் சமாளித்து விட ஆராதனாவிற்கு பழைய தைரியம் வந்து விட்டது. நிமிர்ந்து நின்றாள்.

“நாங்க தான் ஃபோர்ஸ் பண்ணோம். அவள திட்டிராதீங்க”

“நான் ஆராவ திட்டுவேன் கொஞ்சுவேன். அதுல எல்லாம் உங்க பேச்ச கேட்க முடியாது சகோதரிஸ்” என்று யுவன் கூறி விட எல்லோரும் “ஹோ…” என்று கத்தினர்.

“ஓகே.. கொஞ்சம் வேலை இருக்கு. இப்போவே கிளம்புனா தான் சரியா இருக்கும். ஆரா திங்கஸ் எல்லாம் எடுத்துட்டு வரியா..? நான் உள்ள வர முடியாது போல” என்று‌ யுவன் கூற “நாங்களும் ஹெல்ப் பண்ணுறோம்” என்று எல்லோரும் ஆராதனாவை இழுத்துக் கொண்டு உள்ளே சொன்றனர்.

உடமைகளை எடுத்து விட்டு இறங்கும் முன் விசயம் அத்தனை பேருக்கும் பரவி இருந்தது. அவளது உடமைகளை ஆளுக்கொன்றாக எடுத்து வந்தனர்.

போனில் பேசிக் கொண்டிருந்தவன் ஆராதனா வரவும் முன்னால் கதவை திறந்து விட்டான். அவள் ஏறி அமர்ந்ததும் அவளது உடமைகளை வாங்கி காரின் பின்னால் வைத்தான். எல்லோரும் கையாட்ட ஆராதனாவும் கையாட்டினாள்.

காரை எடுத்தவன் “வரோம் சகோதரிஸ்” என்று கூறி விட்டு கிளம்பி விட்டான்.

“செம்ம பையன்ல.. ஹய்யோ என்ன அழகா இருக்கான்.. பேரென்ன?” என்று கேட்டு அவனது வரலாற்றை ஆராய்ந்து கொண்டே சென்றனர் எல்லோரும்.

காரில் கல்லூரியை விட்டு தூரமாக வந்தவன் திடீரென சிரிக்க ஆரம்பித்து விட்டான். சிரிப்பு அதிகமாக காரை நிறுத்தி விட்டு விழுந்து விழுந்து சிரித்தான். ஆராதனாவிற்கோ அவமானமாக இருந்தது.

“சத்தியமா என்னால சிரிக்காம இருக்க முடியல ஆரா…. ” என்றவன் மேலும் சிரிக்க ஆராதனாவிற்கு வெட்கமா இருந்தது. அவனை பார்த்தாலே பட்டாசாய் வெடிப்பவள் அவனை வருங்கால கணவன் என்று அறிமுகப்படுத்தினால்? சிரிக்காமல் வேறு என்ன செய்வான்?

வெட்கம் தாங்காமல் முகத்தை மூடிக் கொண்டாள்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
18
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்