காலையில் எழுந்ததிலிருந்தது ஆராதனா தன் உடமைகளை எடுத்து வைக்க ஆரம்பித்து விட்டாள். கல்லூரியில் முடிக்க வேண்டிய வேலைகளும் இருந்தன.
அதை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்ததால் யாருக்கும் எதுவும் பேச நேரம் கிடைக்கவில்லை. எல்லோருக்கும் வேலை இருந்தது. ஆராதனா வேண்டுமென்றே வேலைகளை இழுத்து போட்டு செய்தாள்.
எங்கே பூஜாவும் கீர்த்தனாவும் கேள்வி கேட்டு வைப்பார்களோ என்ற பயம் அவளுக்கு. அதனால் தப்பித்து வேலைகளில் மூழ்கினாள்.
அடுத்த இரண்டு நாட்களும் பறந்து போக வேலைகள் எல்லாம் மொத்தமாக முடிந்தது. கல்லூரியில் சில தாமதங்களால் ஹால் டிக்கெட் பரிட்ச்சை எழுதும் அன்று வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டனர்.
எல்லோரும் நிம்மதியாக ஊருக்கு கிளம்ப இரயில் நிலையம் வந்து சேர்ந்தனர். பூஜாவையும் கீர்த்தனாவையும் வழியனுப்ப வந்திருந்தாள் ஆராதனா.
“நானும் கடைசி நாலு செம் ல பார்த்துட்டேன். எங்கள முதல்ல அனுப்பிட்டு கூப்பிட ஆளு வருவாங்க னு தனியா போற நீ. யாரு தான் வருவாங்க உன்ன கூப்பிட னு கண்டே பிடிக்க முடியல. எதுல போற அதையாச்சும் சொல்லு”
“கார்ல போவேன் பூஜா. இதெல்லாம் மேட்டரா? நீ முதல்ல ஏறு” என்று ஏற்றி விட்டாள்.
“ஒன்னு கேட்டா கோவிச்சுக்க மாட்டியே?” என்று கீர்த்தனா கேட்க “கேளு ” என்றாள்.
“உன் பேமிலி பத்தி தெரிய கூடாது னு ஏன் நினைக்கிற? இது வரை நீ எந்த ஊரு உன் அப்பா அம்மா பேரு தவிர எதுவுமே எங்களுக்கு தெரியாது. இந்த காலேஜ் ல படிக்குற னா கண்டிப்பா நீயும் பெரிய ஃபேமிலி தான். அது வரை தான் தெரியும். ஏன் சொல்ல மாட்டீங்குற?”
“என் ஊரு கோயம்புத்தூர் னு எப்பவோ சொல்லிட்டேன். அங்க இருந்து நான் சென்னை வந்து படிக்குறேன். அங்க காலேஜ் இல்லாம இல்ல. அங்க இருந்தா என் பேமிலி பேக்ரவுண்ட் என்ன சுத்தி இருக்கும். அது பாதி நல்லது பாதி கெட்டது. அதுக்காக தான் அத பத்தி எதுவுமே தெரியாத இடத்துல வந்து படிக்கிறேன். இங்கயும் எப்படி நான் சொல்லுவேன்?”
“ஆபத்து வருமா உனக்கு? ஏன்?”
“அது அப்படி தான்… எங்க பேமிலிக்கு பல எதிரிங்க இருக்காங்க. அதுல யார் கண்ணுலையும் சிக்கிட கூடாது னு தான் இங்க படிக்குறேன்” என்றவள் ‘என் குடும்பத்த விட்டு பிரிச்சு அனுப்பி தொலச்சுட்டான். அந்த பாவி’ என்று மனதில் வருத்தெடுத்தாள்.
“சரி ட்ரைன் கிளம்ப போகுது. பத்திரமா போயிட்டு வாங்க. தூங்கிடாம கரெக்ட்டா இறங்கிடுங்க” என்று கூறி கையாட்டியவள் இரயில் கிளம்பியதும் வெளியே வந்தாள்.
அங்கு அவளுக்காக ஒரு கார் காத்துக் கொண்டு நிற்க எதுவும் பேசாமல் ஏறி அமர்ந்தாள். அந்த கார் நேராக சென்று முதலில் விடுதியில் நின்றது. அதன் பின் விமானநிலையத்தில் சென்று நின்றது.
காரை ஓட்டி வந்த ஓட்டுநர் அவளது உடமைகளை எடுத்து வர தனது போனிற்கு வந்த பயணச்சீட்டை காட்டி விட்டு விமானத்தில் ஏறி அமர்ந்தாள். அந்த ஓட்டுனர் திரும்பி சென்று விட்டார்.
சென்னையிலிருந்து கோயம்புத்தூர் சென்று இறங்கியவளை வரவேற்க அவளது அன்னையும் அத்தையும் காத்திருந்தனர்.
“ம்மா… அத்த… ” என்று ஆராதனா தூரமாக இருந்தே கையாட்ட இருவரும் அவளை நோக்கி சென்றனர்.
“என்ன மெலிஞ்ச மாதிரி இருக்கீங்க அத்த?”
“டயட் மெயிண்டையின் பண்ணுறேன்”
“பார்ரா… எதுவும் உலக அழகி போட்டிக்கு போறீங்களா?”
“ஆமா.. உள்ளூர் அழகியே ஆக முடியல. உலக அழகியாம்… வா ஆரா நீ வேற”
மூவரும் பேசிக் கொண்டே வீட்டிற்கு வந்தனர். ஆராதனா எல்லோரை பற்றியும் விசாரித்தாள். யுவனை பற்றி மட்டும் மறந்தும் கூட கேட்கவில்லை.
வீட்டிற்கு வந்து சேர்ந்து ஒரு நாள் கடந்தும் யுவனை ஆராதனா சந்திக்கவில்லை. தன் பள்ளி நண்பர்களை பார்த்து விட்டு வீட்டுக்கு வந்தவள் வாசலில் நிற்பவனை பார்த்தாள்.
“என்னடா நாள் நல்லாவே போயிட்டு இருக்கு னு பார்த்தேன்” என்று முணுமுணுத்துக் கொண்டு நேராக பார்த்தபடி நடந்தாள்.
“ஏய் நில்லு” என்று சத்தம் கேட்க “ப்ச்ச்” என்று சலிப்போடு நின்றாள்.
“என்ன?” என்று எரிச்சலாக கேட்க “என்ன நினைப்புல சுத்திட்டு இருக்க நீ?” என்று கோபமாக கேட்டான் யுவன்.
“அத பத்தி நீ ஏன் கவலை படுற?”
“நக்கலா? மணி எட்டு… தனியா சுத்திட்டு வர்ரியே.. அறிவு இல்ல?”
“அறிவ பத்தி பேசுறதுக்கு தகுதி வேணும் தம்பி. அது இருக்கா னு பார்த்துட்டு கேளுங்க”
“பல்ல உடைக்க போறேன் பாரு… “
“ஓவரா பேசுறடா.. யாரு பல்ல யாரு உடைக்கிறா னு பார்க்கலாமா?”
“நான் ஓவரா பேசுறனா? ஊர சுத்திட்டு வந்துட்டு அதிகமா பேசுறது நீ”
“அப்படி தான்டா சுத்துவேன். என்ன டா பண்ணிடுவ?”
“வேணாம்டி.. கோவம் வந்தா திட்டிருவேன்”
“என்ன திட்ட உனக்கு யாருடா உரிமை கொடுத்தது?”
“உங்கப்பா தான் கொடுத்தார். போய் கேளேன்”
“அப்பாவ… அவரு கொடுத்தா திட்டுவியா? அப்படி எதாச்சும் பண்ண னு வை மூக்குலயே குத்துவேன். பார்க்குறியா?”
“குத்துடி… உன் கை உடையலனா பார்க்கலாம்”
ஆராதனா கையை முறுக்க பத்மினி வெளியே வந்தார்.
“ரெண்டு பேரும் ஏன் இப்படி சண்டை போடுறீங்க?”
“அம்மா இவன பார்க்கவே பிடிக்கல வெளிய போக சொல்லுங்க”
“உன்ன பார்க்கவும் இங்க யாருக்கும் ஆசை இல்ல. அத்த மரியாதையா இவள இழுத்துட்டு போங்க. இல்ல னா என் கிட்ட அடி வாங்கிருவா”
“டேய் அடிடா பார்க்கலாம். மேல கை வச்சுடுவியா? சாவடிச்சுருவேன்”
“அடேங்கப்பா… ஊதி விட்டா பறந்துடுவ. நீ என்ன சாவடிப்பியா? உனக்கே காமெடியா இல்ல?”
“இவன….” என்று அருகில் எதாவது கிடைக்குமா என்று தேட பத்மினி அவளை பிடித்துக் கொண்டார்.
“நிறுத்துங்கடா… சும்மா கத்திக்கிட்டு.. இவ்வளவு நேரம் எங்க போன? உன்ன காணோம் னு தேடிட்டு இருந்தேன்”
“ஃப்ரண்டு வீட்டுக்கு போறேன் னு சொல்லிட்டு தான போனேன்?”
“அதுக்கு ஏன் இவ்வளவு நேரம்? கையில என்ன?”
“சாப்பிங் போனோம் ம்மா”
“அத சொன்னியா? நீ பாட்டுக்கு போயிட்ட?” – யுவன்.
“உன் கிட்ட ஏன் டா சொல்லனும்? யார் நீ?”
“அவன திட்டாத… போன் பண்ணிட்டே இருக்கேன் நீ எடுக்கவே இல்ல. யுவன் தான் நீ எங்க போயிருக்க னு கண்டு பிடிச்சு சொன்னான்”
“ஏய் நீ எப்படி டா கண்டு பிடிச்ச? போன்ல எதுவும் கனெக்ட் பண்ணி வச்சுருக்கியா?”
“அய்ய… ரொம்ப படம் பார்த்து கெட்டு போயிட்ட. போ போய் உன் வேலை எதாவது இருந்தா பாரு. அத்த அதான் வந்துட்டாள்ள…? எங்கயாவது மூலையிலயில பிடிச்சு கட்டி போடுங்க” என்று கூறி விட்டு யுவன் திரும்பி நடந்தான்.
“டேய்… யார பார்த்து நாய்ங்குற.. நில்லுடா” என்று ஆராதனா கத்த “அப்படியே பத்து பொருத்தமும் பக்காவா இருக்கு” என்று திரும்பி பார்க்காமல் சொல்லிக் கொண்டே சென்று விட்டான்.
ஆராதனா தரையில் காலை உதைத்து விட்டு பத்மினியை முறைத்து பார்த்தாள்.
“உங்க முன்னாடி இப்படி திட்டிட்டு போறான். ஏன் னு கேட்குறீங்களா?”
“நீ தப்பு பண்ண. திட்டுறான்”
“ச்சே”
ஆராதனா கோபத்துடன் வீட்டிற்குள் சென்றாள். மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. யுவனை காணும் நேரம் எல்லாம் அவளது இரத்த அழுத்தம் உட்சத்தை தொட்டு மீளும். இன்றும் அதே நிலை தான்.
“நின்னுட்டே இருக்காம எல்லாத்தையும் எடுத்துட்டு போய் உள்ள வச்சுட்டு சாப்ட வா” என்று பத்மினி அழைக்க “ம்மா.. அவன் அப்படி திட்ரான் சாப்பாடு தான் முக்கியமா இப்போ?” என்று கேட்டாள்.
“ப்ச்ச்… ஆரா உன்ன காணோம் னு நான் தான் பதறி அவன தேட சொன்னேன். என் பதட்டத்துக்காக உன்ன திட்டுனான். இதுல என்ன குறைய கண்டு பிடிச்ச?”
“நீங்க சொல்ல அவன் தான் கிடச்சனா? அப்பா கிட்ட சொல்லுறது. மாமா கிட்ட சொல்லுறது. ?”
“முதல்ல நீ ஏன் போன எடுக்கல னு சொல்லு”
அவளது போனை தேடி பார்த்தாள். ஹெட்போன் மாட்டி பாட்டுக் கொண்டிருந்தவள் அதை கழட்டாமலே பர்ஸில் வைத்து விட்டாள். அதன் விளைவாக சத்தம் அவளுக்கு கேட்கவில்லை.
“பாரு… தப்பு உன் மேல தான். கிளம்பும் போது போன் பண்ணி இருக்கனும். இல்லனா லேட் ஆகும் போது சொல்லி இருக்கனும். இத விட்டுட்டு போய் முகத்த கழுவிட்டு வா. சாப்டலாம்”
அவளை போக சொல்லி விட்டு அவர் நகர்ந்து விட “ச்சே…” என்று அறைக்குள் சென்றாள்.
“எப்போ பாரு இவன் முன்னாடி மட்டும் நாம தான் தப்பா தெரியுறோம் ச்சை”
கையிலிருந்த பொருட்களை மெத்தையில் தூக்கி போட்டு விட்டு முகம் கழுவ சென்றாள்.
முகத்தை கழுவி துடைத்து கண்ணாடியில் பார்த்தவளுக்கு சிறு வயதிலிருந்து நடப்பது எல்லாம் கண் முன் தோன்றியது.
இந்த வீட்டிற்கு வரும் முன்பு வரை யுவனை அவளுக்கு தெரியாது. வந்த போதும் அவன் ஊட்டியில் பள்ளியில் தங்கி படித்ததால் அவனை அவள் அறியவில்லை.
ஆனால் முதல் முறையாக அவனை பார்க்கும் போதே மோதலில் தான் ஆரம்பித்தது. அன்று ஆரம்பித்த மோதல் இன்று வரை நிற்கவே இல்லை.
நான்கு வயது சிறுமியாக தெருவில் ஓடிய குட்டி நாயை துரத்திக் கொண்டு ஓடினாள் ஆராதனா. ஓடிக் கொண்டிருந்தவள் எதிரில் வந்தவனை கவனிக்கவில்லை.
அவன் மீது மோதப்போக அவசரமாக விலகி விட்டான். அவள் ஓட முடியாமல் கல் தட்டி கீழே விழுந்து வைத்தாள். எட்டு வயது சிறுவன் கீழே விழுந்தவளை தூக்க குனிய பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்து விட்டாள்.
“ஏய்… இப்போ ஏன் அழுற? நீயா தான விழுந்த… எழுந்திரி” என்று கையை பிடித்து தூக்க போக மேலும் அழுதாள்.
அவளது அழுகை சத்தம் கேட்டு வேகமாக பத்மினி ஓடி வந்தார். அருகில் யுவன் நிற்பதை பார்த்தவர் “என்னாச்சு யுவா? ஏன் அழுறா?” என்று கேட்டார்.
“ம்மா.. இவன் என்ன பிடிச்சு தள்ளி விட்டுட்டான்” என்று கூறி ஆராதனா மேலும் அழ ஆரம்பித்தாள்.
“நானா?? நான் அந்த கல்லும் இல்ல. நீ துரத்திட்டு வந்த நாயும் இல்ல. நான் எப்படி உன்ன தள்ளுவேன்?” என்று யுவன் தெளிவாக கேட்டான்.
அதில் ஆராதனாவின் அழுகை மேலும் கூடியது.
“ப்ச்ச்… நாய துரத்தாத னு எத்தனை தடவ சொல்லி இருக்கேன்? இப்படியா விழுந்து வைப்ப? வா அம்மா மருந்து போட்டு விடுறேன்”
“ம்மா.. இவன் தான் மா தள்ளி விட்டான்.”
“ஆரா… பெரிய பையன அவன் இவன் னு சொல்ல கூடாது. அதான் சொல்லுறான்ல.. கல்லு தட்டி தான் விழுந்துட்ட னு.. அடம் பிடிக்காம எந்திரி.. பாரு கையெல்லாம் ரத்தம்…”
“ம்மா.. எவனோ சொல்லுறத நம்புவீங்க. நான் சொன்னா நம்ப மாட்ரீங்க” என்று கூறி ஆராதனா மேலும் அழுக அவளை தூக்கிக் கொண்டவர் “இது யாரோ இல்ல. அர்ச்சனா அத்தையோட பையன். இனிமே மரியாதையா பேசு” என்று அதட்டியவர் “நீ போ பா. இவ இப்படி தான். நான் பார்த்துக்குறேன்” என்று கூறி அனுப்பினார்.
அன்னையின் இடுப்பில் இருந்த போதும் ஆராதனா சென்று கொண்டிருந்தவனை முறைத்து பார்த்தாள். அவளுக்கு அர்ச்சனா அத்தையை பிடிக்கும். சத்தியன் மாமாவை பிடிக்கும். ஆனால் அவர்களது பிள்ளையை பிடிக்கவில்லை.
யுவன் அவளை திரும்பி பார்க்க வெடுக்கென முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அன்றிலிருந்து இன்றுவரை அவனை சந்திக்கும் போதெல்லாம் அவள் மீது எதாவது தவறு இருந்து தொலைக்கிறது. அவளும் எதிர்த்து போராடி பார்க்கிறாள். ஆனால் கடைசி பேச்சு அவனுடையதாக தான் இருக்கிறது.
அர்ச்சனா ஆராதனாவிற்கு பரிந்து கொண்டு வருவார் தான். ஆனால் தவறு இவள் மீது இருக்கும் போது யார் என்ன செய்ய முடியும்?.
அந்த விழுந்த பிரச்சனை முடியும் முன்பே அடுத்ததாக அவனிடம் சைக்கிள் கற்றுக் கொள்ள சொல்லி விட்டனர். ஒவ்வொரு முறையும் யுவன் விடுமுறைக்கு வரும் போது எதாவது பிரச்சனை வரும். சைக்கிள் தானாக ஓட்டுகிறேன் என்று விழுந்து விட்டு யுவன் மேல் பழி போடுவாள்.
அப்போதும் “விழாம எதையும் கத்துக்க முடியாது.. அழுகாத.. அப்பா உனக்கு பிடிச்ச சாக்லேட் வாங்கிட்டு வரேன்” என்று கூறிவிடுவார் ரகுநாதன்.
எதை செய்தாலும் அவனை மட்டும் அவளால் அசைக்கவே முடியவில்லை. இதை விட கொடுமையாக அவன் படிக்கும் அதே பள்ளியில் சென்று சேர்ந்தாள். என்றோ ஒரு நாள் பார்க்கும் போதே முட்டிக் கொள்பவர்கள் தினமும் பார்த்தால்?
பள்ளியில் அனைவரும் அறிந்த எதிரிகள் யுவனும் ஆராதனாவும். ஆனால் கேங் என்று யாரையும் இருவரும் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். இருவருமே தனியாக தான் சண்டைக்கு நிற்பார்கள்.
அதனால் இருவரையும் தூண்டி விட யாரும் தேவை படவில்லை. எதாவது ஒரு விசயத்தில் ஆராதனா யுவனிடம் மாட்டி விட்டால் காய்ச்சி எடுத்து விடுவான். ஆனால் அவனை கோபக்காரன் என்று சொல்லி விட முடியாது.
அவனுடைய அத்தனை நண்பர்களிடமும் நன்றாக தான் பழகுவான். ஆராதனாவும் அப்படி தான். மற்றவர்களிடம் அவள் கடைபிடிக்கும் பொறுமை யுவனிடம் மட்டும் எட்டி கூட பார்க்காது.
பழைய சண்டைகளை எல்லாம் நினைத்துக் கொண்டே வெளியே வர ரகுநாதன் வந்து விட்டார்.
“ப்பா…”
“என்னமா? சாப்டியா?”
“இல்லபா…”
“இப்போ தான் வந்து சேர்ந்தா” என்று பத்மினி உணவு பாத்திரங்களை எடுத்து வைத்துக் கொண்டே கூற “ஏன் மா? சாப்பிங் போனா அம்மா கிட்ட சொல்லிட்டு போகலாம்ல. நீ போன் எடுக்கலனதும் அம்மா பதறி எனக்கு போட்டா. நான் யுவன பார்க்க சொன்னேன். என் வேலைய விட்டுட்டு வர முடியல. அவன் மீட்டிங்க அவசரமா முடிச்சுட்டு உன்ன தேடி இருக்கான்.” என்று கூறிக் கொண்டே உடை மாற்றி விட்டு வர சென்று விட்டார்.
“மீட்டிங்காம்.. பெரிய மீட்டிங்” என்று ஆராதனா உதட்டை சுழிக்க “யுவன் ஒன்னும் சும்மா இல்ல. ஆயிரம் வேலை இருக்கு அவனுக்கு. அதுக்கு நடுவுல நீ எங்க போன னு தேடிட்டு நீ திரும்ப வீட்டுக்கு வர வரைக்கும் வெயிட் பண்ணிட்டு பார்த்துட்டு போறான். அவன் பொறுப்புலாம் உனக்கு சுட்டு போட்டாலும் வராது” என்று பத்மினி கூறினார்.
“ம்மா.. அவன் புராணம் பாடுறத நிறுத்துங்க. அத்த கூட இவ்வளவு பேச மாட்டாங்க அவங்க பிள்ளைய பத்தி. நீங்க ரொம்ப ஓவரா போறீங்க. பிடிச்சுருக்குனா அவன இங்க கூட்டிட்டு வந்துடுங்க. நான் அத்த கிட்ட போய் நிம்மதியா இருக்கேன்”
“வெறும் புராணம் இல்லடி… உண்மைய சொல்லுறேன். நம்ம கம்பெனில எவ்வளவு பொறுப்பா வேலை செய்றான் தெரியுமா? அவன் வந்ததும் தான் உங்க அப்பாவும் மாமாவும் வீட்டுல கொஞ்ச நேரம் அதிகமா இருக்க முடியுது. அப்போ அவன பிடிக்க தான செய்யும்?”
“அய்யய்ய அப்படி என்னத்த பார்த்து கிழிச்சுட்டான்?”
“அது நீ ஆபிஸ் வந்தா தான் புரியும் ஆரா. அதெல்லாம் விடு. இப்போ சாப்டுவோம்.” என்று ரகுநாதன் கூற அப்போதைக்கு அதை விட்டு வைத்தாள்.
அடுத்த நாள் மீண்டும் ஊர் சுற்றி விட்டு படிக்க அமர்ந்து விட்டாள். நாட்கள் பறக்க விடுமுறையும் முடிந்து விட்டது. அன்று பார்த்த பிறகு யுவனை அவள் மீண்டும் சந்திக்கவில்லை.
பத்மினி கூட ஒரு வார்த்தை யுவனை பற்றி பேசாதது தான் ஆச்சரியம். ஆராவும் எந்த தொந்தரவும் இல்லாமல் படித்து முடித்து விட்டு மீண்டும் சென்னை கிளம்பினாள். அவள் விமானநிலையம் வந்து சேர அதே நேரம் யுவனும் வந்து இறங்கினான்.
பத்மினியும் அர்ச்சனாவும் தான் இப்போதும் ஆராதனாவை வழியனுப்ப வந்திருந்தனர். காரில் உடமைகளை எடுத்துக் கொண்டிருக்க யாரோ ஆராதனாவின் பின்னால் வந்து நிற்க வேகமாக திரும்பி பார்த்தாள்.
அவளை பிடித்து தள்ளி நிற்க வைத்து விட்டு அவளது உடமைகளை எடுத்து கீழே வைத்தான் யுவன்.
‘இவன் எங்க இங்க?’ என்று ஆராதனா யோசிக்க யுவன் தன்னுடைய உடமைகளை எடுத்து காரில் வைத்தான்.
‘அதான பார்த்தேன். இவனாவது எனக்கு ஹெல்ப் பண்ணுறதாவது?’ என்று நினைத்துக் கொண்டு நகர்ந்து நின்றாள்.
“யுவா ட்ரிப் எப்படி போச்சு?” – பத்மினி
“நல்லா போச்சு அத்த”
“வேலை நல்லபடியா முடிஞ்சதா?” – அர்ச்சனா.
“பர்ஃபெக்ட்டா முடிஞ்சது… வாங்க இவள ஏத்தி விட்டுட்டு வீட்டுக்கு போகும் போது எல்லாம் சொல்லுறேன்” என்று கூறி விட்டு ஆராதனாவின் உடமைகளோடு முன்னால் நடக்க ஆரம்பித்தான்.
தொடரும்.