Loading

 

 

 

 

 

 

வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்த ஆராதனாவை யாமினி நிறுத்தினாள்.

 

“என்ன?”

 

“உனக்கும் யுவனுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க பேசுறாங்களாமே?” என்று‌ யாமினி பட்டும்படாமல் கேட்பது போல் கேட்டாள்.

 

“அதுக்கு?”

 

“எனக்கு நம்பிக்கை இல்ல.”

 

“எதுல?”

 

“நீயும் யுவனும் சான்ஸே இல்ல”

 

“ஓஹோ…”

 

“நீ மேற்குனா அவன் கிழக்கு. ரெண்டு பேரும் எப்படி கல்யாணம் பண்ணிப்பீங்க?”

 

“யாமினி…”

 

“என்ன ?”

 

“ஒரு சின்ன விசயம் ரிமைண்ட் பண்ணுறேன். ஆபிஸ்ல பர்ஸனல் விசயம் பேச கூடாது. தெரியுமா தெரியாதா?”

 

ஆராதனா பொறுமையாக கேட்டு விட்டு வெளியே வந்து விட்டாள். யாமினிக்கு தான் மூக்குடைபட்டது.

 

‘ச்சே…’ என்று நினைத்துக் கொண்டு அவளும் வெளியே வந்தாள்.

 

ஆராதனா கீழே வந்து காரில் ஏறப்போக அவளுக்கு கீழ் பணி புரியும் பெண் எதோ பேச வந்தாள். அவளுடன் பேசிக் கொண்டு நிற்க வேறு ஒரு கார் வந்து நின்றது.

 

உள்ளிருந்து சங்கவி இறங்கினாள். அவளை பார்த்தும் ஆராதனா கண்டு கொள்ளாமல் திரும்பிக் கொண்டாள்.

 

ஆனால் சங்கவியை அங்கு சிலருக்கு தெரியும். அவர்கள் சங்கவியிடம் பேசினர். ஆராதனா திரும்பி பார்க்காமல் அங்கிருந்து கிளம்பி விட்டாள்.

 

சங்கவி நேராக யுவனை சந்திக்க செல்ல யுவன் யாமினியுடன் பேசிக் கொண்டே வெளியே வந்தான்.

 

“யுவா” என்று சங்கவி அருகில் செல்ல யாமினி அவளை பார்த்து முகத்தை சுழித்தாள். அதை கவனித்த சங்கவிக்கு எரிந்தது.

 

‘இவளும் அந்த ஆராவும் ஒன்னு. என் ப்ளான் மட்டும் சக்ஸஸ் ஆகட்டும். உங்கள பார்த்துக்கிறேன்’ என்று மனதில் கருவிக் கொண்டாள்.

 

“ஹாய் சங்கவி”

 

“ஃப்ரியா இருக்கியா?”

 

“ஏன்?”

 

“சும்மா தான். எங்கயாவது சேர்ந்து வெளிய போகலாம் னு”

 

‘ஏன் தனியா போனா பேய் புடிச்சுக்குமா?’ என்று வாய் வரை வந்த வார்த்தையை யாமினி விழுங்கிக் கொண்டாள்.

 

“இல்லயே… எனக்கு இப்போ வெளிய வேற வேலை இருக்கு. இன்னொரு நாள் பார்க்கலாம்” என்று யுவன் கத்தரித்து பேசினான்.

 

யாமினிக்கு அது நிம்மதியாக இருந்தது.

 

“என்ன யுவா.. உன் கூட போகனும் னு தான் இவ்வளவு தூரம் வந்தேன்”

 

“நீ கால் பண்ணி இருந்தா சொல்லி இருப்பேன்” என்று கூறும் போதே போன் இசைக்க “ஓகே.. நீ வீட்டுக்கு போ யாமினி. நான் மிச்சத்த அப்புறம் சொல்லுறேன். நீயும் கிளம்பு சங்கவி. பை பை” என்று கூறி விட்டு இருவருக்கும் முன்பு அவன் சென்று விட்டான்.

 

“என்ன? யாமினி… முகத்துல ஒரு எரிச்சல் தெரியுதே” என்று சங்கவி கிளற ‘உன்ன பார்த்து தான்’ என்று நினைத்தவள் “எனக்கு வேலை இருக்கு” என்று கூறி விட்டு சென்று விட்டாள்.

 

ஆராதனாவாக இருந்திருந்தால் பதில் வேற மாதிரி சொல்லி இருப்பாள் என்று யாமினிக்கு தோன்றாமல் இல்லை. யுவன் யாமினிக்கு கிடைக்காவிட்டாலும் சங்கவிக்கு கிடைத்து விடக்கூடாது என்று நினைப்பவள். அதனால் அவளிடம் பேச்சை வளர்க்கவில்லை‌.

 

சங்கவிக்கு உடலே பற்றி எரிந்தது. 

 

‘ஒருத்தி முகத்த திருப்பிட்டு போறா.. இன்னொருத்தி வேலை இருக்கு னு சொல்லிட்டு போறா… அப்ப நான் வேலை வெட்டி இல்லாம இருக்கனா? இருங்கடி… யுவன கல்யாணம் பண்ணிட்டு உங்க திமிர அடக்குறேன்’ என்று நினைத்தவள் காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.

 

*.*.*.*.*.

 

வீட்டில் திருமண பேச்சு நாளுக்கு நாள் அதிகமாக ஆராதனாவிற்கு வீட்டிற்கு வரவே பிடிக்கவில்லை. அவள் வேண்டாம் என்றாலும் யாரும் கேட்பது இல்லை. யுவனும் எவ்வளவோ பேசி விட்டு அமைதியாகி விட்டான்.

 

அவன் அவள் முன்னால் மட்டும் நடிப்பது அவளுக்கு எங்கே தெரியும்? ஆராதனா வழி புரியாமல் தடுமாறி விட்டாள்.

 

அர்ச்சனாவும் பத்மினியும் ஆராதனாவிற்கு நகைகளை வாங்க ஆரம்பித்து இருந்தனர். ஆராதனாவை பிடித்து வைத்துக் கொண்டு நகைகளை மாட்டி பார்க்க ஆராதனாவின் பொறுமை பறந்தது.

 

“நான் வேணாம் வேணாம் னு சொல்லிட்டே இருக்கேன். உங்களுக்கு புரியவே இல்லையா?” என்று கத்தி விட்டாள்.

 

“என்ன வேணாம்?” என்று பத்மினி முறைக்க “இந்த கல்யாணம் வேணாம்” என்றாள்.

 

“ஏன் வேணாம்?” – அர்ச்சனா.

 

“எனக்கு பிடிக்கல”

 

“எது பிடிக்கல?” – பத்மினி.

 

“கல்யாணமா? இல்ல இந்த கல்யாணமா?” – அர்ச்சனா.

 

“இந்த கல்யாணம் பிடிக்கல”

 

“அதான் ஏன்?” – பத்மினி.

 

“என்னால இவன கல்யாணம் பண்ணிக்க முடியாது மா”

 

“அதான்‌டி ஏன் னு கேட்குறேன்?”

 

“எனக்கு அவன பிடிக்கல”

 

“எவன?” என்று கடுமையாக கேட்டார் பத்மினி.

 

“ம்மா… எனக்கு யுவன பிடிக்கல மா.”

 

“ஏன் பிடிக்கல?”

 

“பிடிக்கல னா பிடிக்கல. காரணம் எல்லாம் கேட்காதீங்க”

 

“காரணம் சொல்லி தான் ஆகனும்”

 

“இருந்தா தான சொல்லுவா… ?” என்று யுவன் கேட்டுக் கொண்டே வந்து அமர “ஆமா டா. காரணமே இல்லாம உன்ன பிடிக்கல போதுமா?. இந்த கல்யாண பேச்ச இதோட விடுங்க” என்றாள் ஆரா.

 

“அப்படிலாம் விட முடியாது. ரெண்டு பேரும் தெளிவா காரணம் சொல்லுங்க. இல்ல கல்யாணத்துக்கு ஒத்துக்கோங்க” – அர்ச்சனா.

 

“கடவுளே… டேய் வேணாம் னு சொல்லுடா” என்று ஆரா யுவனை துணைக்கு அழைத்தாள்.

 

“நான் ஏன் சொல்லனும்? உனக்கு வேணாம் னா நீ சொல்லு”

 

“உனக்கும் தான வேணாம்?”

 

“எனக்கு வேணாம் னு யார் சொன்னா? அத்த.. ம்மா.. எனக்கு முழு சம்மதம். இவள கட்டிக்கிறேன். நீங்க வேலைய பாருங்க”

 

யுவன் ஆராதனாவை பார்த்துக் கொண்டே கூறி விட்டு விருட்டென எழுந்து சென்று விட்டான்.

 

ஆராதனா அதிர்ந்து போனாள். யுவன் இப்படி தலைகீழாக மாறுவான் என்று அவள் எதிர் பார்க்கவில்லை.

 

“டேய்.. நில்லு” என்று ஆராதனா அவன் பின்னால் ஓடிவிட்டாள்.

 

“ஒரு வழியா யுவா வாய திறந்து சொல்லிட்டான்” என்று அர்ச்சனா சந்தோசப்பட்டார்.

 

“ஆராவையும் சொல்ல வச்சுடுவான்” என்று பத்மினி நம்பிக்கையுடனே கூறினார்.

 

யுவனின் பின்னால் ஓடியவள் “டேய் நில்லு… இப்போ ஏன் சரி னு சொல்லிட்டு வந்த?” என்று அவன் கையை பிடித்து நிறுத்திக் கேட்டாள்.

 

“ஏன் பிடிக்கல னு நீ காரணம் சொன்னியா? நானும் சொல்ல முடியாது” என்று கூறி விட்டு அவள் கையை உதறினான். அவன் முன்னால் வந்து நின்றவள் “லூசா நீ? என்ன வெறுப்பேத்தனும் னு சரி னு சொல்லிட்டு வந்துருக்க. கொஞ்சமாவது யோசிச்சியா?” என்று கேட்டாள்.

 

யுவன் அவளை வேகமாக நெருங்க அன்னிச்சையாக பின்னால் சென்றாள். பின்னால் இருந்த கதவில் அவள் மோதி நிற்க “என்ன கட்டிக்கிறது அவ்வளவு கசக்குதா உனக்கு? காரணமே இல்லாம என்ன பிடிக்கல னு சொல்லுற. என்ன பிடிக்கல னு நீ சொன்னது எனக்கு அவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? உன்ன பிடிக்கல னு நான் முதல் நாள் கூட சொல்லல. நீ தான் என்ன கட்டிக்கிறதுக்கு கிணத்துல விழலாம் னு சொன்ன. அதுக்கு கோவம் வந்து தான் அன்னைக்கு அப்படி பேசுனேன். எனக்கு வேணாம் னா கல்யாணம் வேணாம் னு சொல்லுவேன். ஆராக்கு வேற மாப்பிள்ளை பாருங்க னு சொல்லுவேன். ஆனா உன்ன பிடிக்கல னு சொல்ல மாட்டேன். நீ எத்தனை தடவ சொல்லிட்ட. என்ன பிடிக்கல னு சொல்லிட்டல.   அப்போ எழுதி வச்சுக்க… இந்த ஜென்மத்துல உனக்கு நான் தான். எனக்கு நீ தான்” என்று கூறியவன் அவளை பிடித்து தள்ளி விட்டு அறைக்குள் சென்று விட்டான்.

 

அடைத்த கதவை பார்த்து அதிர்ந்து நின்றாள் ஆரா. இது நாள் வரை அவனும் வேண்டாம் என்றான். அதில் தைரியமாக இருந்தாள். ஆனால் இன்று அவன் சரியென்று கூறி விட்டான். இனி அவள் என்ன பேசினாலும் செல்லுபடியாகாது.

 

அவள் பிடிக்கவில்லை என்று கூறியது யுவனின் தன்மானத்தை சீண்டும் என்று அவள் எதிர் பார்க்கவில்லை. அதை காப்பாற்ற யுவன் திருமணத்துக்கு சம்மதம் சொல்லி வைத்து விட்டான். ஆராதனா அங்கிருந்து வேகமாக தன் வீட்டிற்கு ஓடி விட்டாள்.

 

அறைக்குள் அடைந்தவளுக்கு யுவன் பேசிய வார்த்தைகள் தான் நினைவில் இருந்தது. யுவன் அவளை வேண்டாம் என்று சொன்ன போது அவளுக்கும் கட்டுக்கடங்காமல் கோபம் வந்தது. அதே போல் தானே அவனும் உணர்ந்து இருப்பான்? ஆராதனாவிற்கு தன்னை தானே திட்டிக் கொள்ள வேண்டும் போல் இருந்தது.

 

“என்ன பண்ணி வச்சுருக்க ஆரா” என்று தலையிலடித்துக் கொண்டாள்.

 

“முதல்ல அவன் கிட்ட சாரி சொல்லனும்” என்று நினைத்தவள் “போன்ல வேணாம். காலையில நேருல சொல்லிக்கலாம்” என்று உறங்கி விட்டாள். ஆனால் அவள் மன்னிப்பு கேட்க யுவன் வாய்ப்பு கொடுக்கவில்லை. அவள் முன்பு அவன் வரவே இல்லை.

 

அவனிடம் பேசப்போகும் நேரம் ஒன்று இருக்க மாட்டான். அப்படியே இருந்தாலும் யாராவது உடன் இருப்பர். ஆராதனா வாயை திறக்கும் முன்பே அவள் வந்த வேலையை முடித்து விட்டு அனுப்பி விடுவான்.

 

மூன்று நாட்கள் கடந்து விட ஆராதனாவின் குற்ற உணர்வு அதிகரித்துக் கொண்டே போனது. ஞாயிற்றுக்கிழமை யுவன் வீட்டில் இருக்க ஆராதனா அவனை தேடி வந்தாள்.

 

“எங்க அத்த உங்க பையன்?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வர “அவன ஏன் தேடுற?” என்று அர்ச்சனா கேட்டார்.

 

“சொல்லுங்க”

 

“மாடியில … உன் மாமா கிட்ட பேசிட்டு இருக்கான்”

 

“நான் போய் பார்க்குறேன்” என்று கூறி விட்டு மேலே ஓடினாள். சத்தியனும் யுவனும் எதோ வேலையை பற்றி தீவிரமாக  பேசிக் கொண்டிருந்தனர். ஆராதனாவையும் பேச்சில் இணைத்துக் கொண்டனர். சில நிமிடங்களில் பேச்சு முடிந்து விட்டது.

 

சத்தியன் எழுந்து சென்று விட பின்னாலே யுவனும் எழுந்தான். ஆராதனா அவன் கையை பிடித்துக் கொண்டான்.

 

“உன் கிட்ட பேசனும்”

 

“என்ன?”

 

“சாரி”

 

யுவன் எதற்கு என்று கூட கேட்காமல் அமைதியாக நின்றான்.

 

“நான் வேணும் சொல்லல. எதாச்சும் சொல்லி கல்யாணத்த நிறுத்தனும் னு அப்படி சொல்லிட்டேன். அது உன்ன ரொம்ப ஹர்ட் பண்ணிடுச்சு. சாரி”

 

“ம்ம்.. வேற என்ன?”

 

“ஹேய் சாரி சொல்லியும் கோபம் போகலையா?*

 

“எதுக்கு இந்த சாரி? உன்ன மன்னிச்சதும் என் கூட சேர்ந்து கல்யாணத்த நிறுத்தவா?”

 

“அப்படி லாம் இல்லடா”

 

“இங்க பாரு ஆரா.. நான் கோபத்துல தான் சரி னு சொன்னேன். இப்போ கோபம் போனதுக்காக என் வார்த்தைய மாத்த முடியாது. உனக்கு வேணாம் னா எல்லாரு கிட்டயும் பேசு. என் சைட்ல இருந்து உனக்கு பிரச்சனை வராது”

 

யுவன் பேசி விட்டு ஒரு நொடி கூட நிற்காமல் சென்று விட “அய்யோ அது இல்ல…” என்று ஆரம்பித்த ஆராதனா காற்றோடு தான் பேசினாள்.

 

சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் ஆராதனா நொந்து போனாள். கீழே வந்தவள் அர்ச்சனாவை அழைத்து எதோ சொல்லி விட்டு சென்று விட்டாள்.

 

யுவனை தேடிச் சென்ற அர்ச்சனா “என்னடா சொன்ன ஆரா கிட்ட?” என்று கேட்டார்.

 

“ஏன் மா?”

 

“உங்க மகன் ஓவரா பண்ணுறான். என் கிட்ட அடி வாங்காம இருக்கனும் னா பொறுமையா பேச சொல்லுங்க. சொல்ல வந்தத கேட்காம அவன் இஷ்டத்துக்கு பேசிட்டு போறான் னு சொல்லிட்டு போயிட்டா”

 

“ஹா ஹா‌.. விடுங்க பார்த்துக்குறேன்”

 

“அவ சாரி கேட்க வந்தும் ஏன் டா பேசல?”

 

“இப்போ பேசிட்டா கல்யாணத்த நிறுத்த எதாச்சும் ட்ரை பண்ணுவா. அவள சரி னு சொல்ல வைக்கிறேன். அப்புறம் பேசிக்கிறேன்”

 

“என்னமோ செய்” என்று கூறி விட்டு சென்று விட்டார்.

 

*.*.*.*.*.

 

சங்கவிக்கு யுவனை நெருங்கும் மார்க்கம் தெரியவில்லை. அவனை எப்படியாவது அழைத்து தன் மனதில் இருக்கும் காதலை கூறி விட வேண்டும் என்று முடிவு செய்து இருந்தாள்.

 

ஞாயிறு என்பதால் அன்று யுவனை முக்கியமாக பேச வேண்டும் என்று அழைக்க அவனும் வந்து சேர்ந்தான்.

 

ஒரு உயர்தர காபி சாப்பிற்கு வந்து சேர்ந்தனர் இருவரும்.

 

“என்ன விசயம்?” என்று யுவன் கேட்க “கொஞ்சம் பேசனும் யுவா” என்றாள்.

 

“சொல்லு என்ன?”

 

“என்ன பத்தி என்ன நினைக்கிற?”

 

“புரியல?”

 

“உனக்கு நான் யாரு?”

 

“இது என்ன கேள்வி? என் காலேஜ் மெட். ஃப்ரண்ட்”

 

“ஆனா எனக்கு நீ அதுக்கும் மேல”

 

“அப்படினா?”

 

“உன்ன லவ் பண்ணுறேன் யுவா… எப்போ உன்ன காலேஜ்ல பார்த்தனோ அப்ப இருந்து…”

 

“சங்கவி…”

 

“நான் பேசிக்கிறேன்… உன் கிட்ட நானே தேடி வந்து பழகி ஃப்ரண்ட் ஆனேன். ரெண்டு பேரும் வேற வேற மேஜரா இருந்தாலும் உன்ன தேடி உங்க டிப்பார்ட்மெண்ட்டுக்கு வந்துட்டே இருப்பேன். எனக்கு உன் கிட்ட பேச பிடிக்கும். நீ பெருசா லவ்ல இன்ட்ரஸ்ட் காட்டல. லவ் சொல்லுற பொண்ணுங்களையும் ஃப்ரண்டாக்கிடுற. என்னையும் வேணாம் னு சொல்லிடுவியோ னு பயம். மத்தவங்க மாதிரி உடனே காதல விட்டுட்டு உன் கிட்ட வெறும் ஃப்ரண்டா மட்டும் என்னால இருக்க முடியாது. அதான் சொல்லாம இருந்தேன். என்னைக்காவது நீயா புரிஞ்சுப்ப னு எதிர் பார்த்தேன். ஆனா உனக்கு இப்போ வர புரியல. அதான் நானே என் மனச சொல்லிட்டேன். நீ என்ன சொல்லுற?”

 

யுவன் ஒரு பெருமூச்சு விட்டான். பிறகு “நீ இது வரை என்ன காதலா ஒரு பார்வை கூட பார்த்தது இல்ல. அப்படி பார்த்து இருந்தா அன்னைக்கே நான் உன்ன மாத்த ட்ரை பண்ணி இருப்பேன். இப்பவும் நீ சொல்லுற காதல் எனக்கு புரியல. நான் ஃபீல் பண்ணதும் இல்ல. அப்படி எதுவும் உன் மனசுல இப்போ இருந்தா சாரி. என்னோட காதல் உனக்கு இல்ல. அது வேற ஒருத்தருக்கு கொடுத்தாச்சு. நீ மெச்சூர்ட் ஆன பொண்ணு தான். சீக்கிரமே புரிஞ்சுப்ப னு நினைக்கிறேன். காபிக்கு நான் பில் கட்டிரேன். பை” என்று எழுந்து சென்று விட்டான்.

 

சங்கவி கூப்பிட அவன் நிற்கவில்லை. கையிலிருந்த காபி கோப்பையை தூக்கி எறிய வேண்டும் போல் இருந்தது அவளுக்கு. அவனை கரைக்க இல்லாத காதல் கதையை கஷ்ட்டப்பட்டு உருவாக்கி கூறினாள். ஒரே நிமிடத்தில் அதை உடைத்து விட்டு யுவன் எழுந்து சென்று விட்டான். சங்கவிக்கு கோபம் கட்டுக்கடங்காமல் வந்த போதும் தனக்கு தானே சமாதானம் கூறிக் கொண்டாள்.

 

‘இவன் இல்லனா என்ன? அந்த ஆராதனாவ வச்சு விளையாட்ட முடிக்கிறேன்’ என்று சபதம் எடுத்துக் கொண்டான்.

 

*.*.*.*.*.

 

யுவன் அடுத்த நாள் அலுவலகம் வருவான் என்று ஆராதனா எதிர்‌ பார்த்து காத்திருக்க அவன் வரவில்லை. இம்ரானை கேட்ட போது தான் தெரிந்தது‌ அவசரமாக எங்கோ கிளம்பி சென்று விட்டான் என்றும் ஊரில் இல்லை என்றும்.

 

ஆராதனா அவனிடம் பேச‌முடியாத கடுப்பில் இருக்க சங்கவி வந்து சேர்ந்தாள். அவள் பார்க்க வேண்டும்‌ என்று சொன்ன போது ஆராதனா மறுத்து விட்டாள். இருக்கும் எரிச்சலில் அவளை பார்த்தாள் விபரீதத்தில் தான் முடியும்.

 

யுவன் அலுவலகத்தில் இல்லை என்பதை நன்றாக தெரிந்து கொண்டு வந்த சங்கவி ஆராதனாவை பார்க்காமல் நகர மாட்டேன் என்று அடம்பிடித்தாள். பொறுத்து பார்த்து விட்டு ஆராதனா உள்ளே அனுப்ப கூறினாள்.

 

வந்ததும் “ஏய்.. என்ன உன்‌ பிரச்சனை? ஆபிஸ்ல வந்து வேலைய‌ டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்க? யுவன் இல்லனா கிளம்ப வேண்டியது தான?” என்று ஆராதனா திட்டினாள்.

 

அவளது பேச்சில் வந்த கோபத்தை அடக்கிக் கொண்ட சங்கவி ‘பொறு பொறு.. இப்போ காரியம் தான் முக்கியம்’ என்று தனக்குத் தானே கூறிக் கொண்டாள்.

 

“எனக்கு உன்ன தான் பார்க்கனும் ஆராதனா”

 

“என்னயா? எதுக்கு?”

 

“உன் கிட்ட ஹெல்ப் கேட்கனும்”

 

“உனக்கு நான் ஏன் ஹெல்ப் பண்ணனும்?”

 

“என்ன ஆராதனா இப்படி கேட்குற?”

 

“வேற எப்படி கேட்க? முதல்ல நீ எனக்கு யாரு? உனக்கு ஏன் ஹெல்ப் பண்ணனும்?”

 

“உன்ன நம்பி தான் வந்தேன். ப்ளீஸ் ஆராதனா”

 

“முதல்ல என்ன விசயம் னு சொல்லு. அப்புறம் யோசிக்குறேன்”

 

‘ரொம்ப ஆடாத டி. என் ப்ளான் முடியட்டும் உனக்கு இருக்கு’ என்று மனதில் நினைத்துக் கொண்டு வெளியே “என் வாழ்க்கையே உன் கிட்ட தான் இருக்கு ஆராதனா” என்றாள்.

 

“ப்ச்ச் விசயத்த சொல்லுறியா?”

 

“எங்க காதல நீ தான் சேர்த்து வைக்கனும்”

 

“காதலா? காதல கண்டாலே எனக்கு பிடிக்காது. நீ இழுக்காம சொல்லுறதுனா சொல்லு. இல்லனா கிளம்பு”

 

“நானும் யுவனும் லவ் பண்ணுறோம். உனக்கும் அவனுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க போறதா பேசிக்கிறாங்க. அதான் நீ எப்படியாவது நிறுத்தி…..”

 

“நீ முதல்ல நிறுத்து. நீ அவன காதலிக்குற னு வேணா சொல்லிட்டு போ. அவன் உன்ன லவ் பண்ணுறான் னு எல்லாம் சொல்லாத.”

 

“இல்ல அது..”

 

“உண்மைய பேசுறியா? இல்ல வெளிய போறியா?”

 

“ஓகே.. நான் தான் அவன லவ் பண்ணுறேன். அவன் என்ன லவ் பண்ணாம வேற யாரையோ லவ் பண்ணுறேன்னு சொல்லிட்டு போயிட்டான். எனக்கு அவன் சொல்லுறது உண்மை னு தோனல. என்ன அவாய்ட் பண்ண சொல்லுறானோ னு இருக்கு. நீ தான் என் காதல அவன அக்சப்ட் பண்ண வைக்கனும்”

 

“சாரி… இது யுவனோட பர்ஸனல். அதுல என்னால தலையிட முடியாது. நீ போகலாம்” என்று கூறி விட்டு ஆராதனா வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டாள். சங்கவி அங்கிருந்து கிளம்பினாள்.

 

தன் காதலை பற்றி யோசிக்கவில்லை என்றாலும் ஆராதனா நிச்சயமாக யுவனின் காதலை பற்றி யோசிப்பாள். காதலே பிடிக்காது என்பவள் இதை நிச்சயமாக தாங்க மாட்டாள். இதுவே யுவனுக்கும் ஆராதனாவிற்கும் பிரச்சனையை கொண்டு வந்தால் அதுவே போதும் என்ற நிம்மதியுடன் கிளம்பி விட்டாள்.

 

தொடரும்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
10
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்