Loading

ஆட்சியர் கனவு 52

ஒரு வாரமாக ஆதி இல்லாமல் வீடே எதையோ இழந்ததைப் போல் தான் இருந்தது. ஆதியின் வரவை எண்ணி அதிகம் கலங்கியது என்னவோ ஆறெழில் தான். அனுதினமும் ஆதி பேபி ஆதி பேபி என்றே கேட்டுக் கொண்டிருந்தாள். ஆதியின் யதுவும் அவன் வரவை எண்ணி ஏங்கித்தவித்துத்தான் போனாள், வெளியில் காட்டிக்கொள்ளாமல்.

என்று போல் இன்றும் மொழியன் தூங்கிக் கொண்டு இருக்க, இம்முறை அவனை எழுப்பும் பொறுப்பும் ஆராவிற்கே வந்தது. கவினுடன் இவனையும் எழுப்பி விடுவது ஆராவின் வேலையாயிற்று. அன்று மொழியன் கூறிய கூற்றிலிருந்து ஆரா மொழியனை அண்ணா என்றே அழைக்க ஆரம்பித்து விட்டாள். அவனும் அவர்களுடன் ஒன்றி விட்டான்.

ஆரா “இன்னைக்காவது ஆதி பேபி வருவாங்களா அண்ணா?” என்று தன் மழலை ஏக்கத்தில் கேட்க,

மொழியன் “தெரியல பாப்பா. என்கிட்ட சித்தப்பா 2 நாள்ல வந்துடுவேன்னு தான் சொன்னாரு” என்று இவன் உதட்டைப் பிதுக்க, ஆரா “சரி வா பாட்டி கூப்டாங்க” என்றபடி அவனை அழைத்துக் கொண்டு கூடத்திற்கு சென்றாள். அங்கு கவினோ அவளையும் மொழியனையும் முறைத்துக் கொண்டு இருந்தான்.

கவின் “எழில், நீ எப்பவும் என் கூட தான விளையாடுவ. இப்போ என்ன அடிக்கடி நீ மொழியன் கூட விளையாடுற”

ஆரா “அண்ணாவும் வரட்டும் கவின். நாம ஒண்ணா சேர்ந்து விளையாடலாம்”

கவின் “நோ வே எழில். அவன் வந்தா நான் வர மாட்டேன்”

மொழியன் “பரவாயில்ல நீ வராத. நான் என் பாப்பா கூட விளையாடுறேன்” என்றபடி அவளின் கையைப் பிடித்துக் கொண்டு அவன் செல்ல, கவின் அவனை கீழே தள்ளிவிட்டான்.

மொழியனும் பதிலுக்கு அவனை அடிக்க, நான்கு வயது சிறுவர்களுக்கிடையே சச்சரவு உண்டானதில் என்ன செய்வதென்று புரியாமல் ஆரா அழத் தொடங்கிவிட்டாள்.

அப்பொழுது எனப் பார்த்து சரியாக ஆதி வீட்டிற்குள் நுழைந்தான். அவனைக் கண்டதும் ஆரா எல்லையில்லா ஆனந்தம் அடைய, மொழியனும் அந்த மகிழ்வில் ஒன்றிப் போனான்.

மொழியன் “சித்தி, அப்பா, அம்மா. பாட்டி,தாத்தா, இசை மாமா, அத்தை எல்லாரும் வாங்க. சித்தப்பா வந்துட்டாரு” என்றவன் கத்தி கூச்சலிட, அனைவரும் விரைந்து வந்தனர். அனைவருக்கும் முன்னும் திவி ஓடோடிவந்தாள்.

அவள் கண்களில் இத்தனை நாள் காணாத ஏக்கம், சோர்வு, பிரிவு, வலி, காதல் என அனைத்தும் போட்டி போட்டு வந்திட அனைத்தையும் தன் மனப் பெட்டகத்தில் பொக்கிஷமாக பொறித்துக் கொண்டான் ஆதி.

தெய்வானை “எங்க டா போன? ஒரு வார்த்தை சொல்லிட்டு போக கூடாதா? எங்க கிட்ட விடு. திவிக்கிட்டயாவது சொல்லிட்டு போய் இருக்கலாம்ல. ஆரா எப்படி உனக்காக ஏங்குனா தெரியுமா.? மொழியன் கிட்ட சொல்லிட்டு போய் இருக்க. அப்போ எங்களலாம் பார்த்தா மனுசங்க மாதிரி தெரியலயா?” என்று சரமாரியாக அவனுக்கு அர்ச்சனை வழங்க, அனைத்தையும் சிறு முறுவலுடன் கேட்டுக் கொண்டிருந்தான்.

ஆதி “இத்தன நாளா முடிக்காத பெண்டிங் வேலை ரொம்ப முக்கியமான வேலை ஒன்னு இருந்தது. அதை முடிச்சிட்டு வந்தேன் மா. இனிமே எங்க போனாலும் சொல்லிட்டு போறேன்.” என்றவன் “ஆரா பேபி அப்பாவ ரொம்ப மிஸ் பண்ணிங்களா செல்லம்?” என்று அவளை கொஞ்சியவாறே தன் அறைக்குள் சென்றான் மின்னல் வேகத்தில். இதில் கவினுக்கும் மொழியனுக்கும் இடையே நடந்த களேபரத்தை யாரும் கவனிக்கவில்லை. அதுவே பின்னர் பெரும் பிரச்சனைக்கு அடித்தளமாக இருக்கிறது என்பதை அறியாமலல்.

அவன் பின்னோடே வந்த திவி, அவனை பின்னிருந்து அணைத்துக் கொண்டாள். நீண்ட நாளிற்கு பிறகு அவளின் அணைப்பு அவனின் அறையில். எத்தனை நாள் ஏக்கம், ‘தன்னோடு வந்து விட மாட்டாளா?’ என்று அவனும், ‘தன்னை கண்டுவிட மாட்டானா?’ என்று அவளும். அந்த அணைப்பிலேயே திளைத்திருந்தனர் இத்தனை நாள் ஏக்கங்கள் கரைவதை ரசித்துக் கொண்டே. பின் ஆறெழில் தன் இருப்பை உணர்த்திய பின்னர் இருவரும் சிறிது வெட்கத்துடன் விலக, குழந்தை முன் இவ்வாறு இருந்து விட்டோமே என்று தன்னையே கடிந்துக் கொண்டனர் இருவரும். ஆராவை தூக்கி தட்டாமலை சுற்றியவன், “பேபி, அப்பா பிரஸ் ஆகிட்டு வரேன். அப்ரோம் நாம விளையாடலாம்” என்றிட, அதற்கு சரியென தலையாட்டியவள், தன் தந்தையானவனுக்கு கன்னத்தில் முத்தமிட்டாள். தன்னவனை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அவனின் மனையாள். குளியலறைக்குச் சென்றவன், திரும்பி அவளை ஒரு முறை பார்த்துவிட்டு சென்றான். ஆரா கவின் மற்றும் மொழியனுடன் விளையாட கீழே சென்று விட, ஆதியின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தாள் திவி.

குளித்து தயாராகி வந்தவன் தன்னையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் தன் மனையாளின் அருகே அமர்ந்தான்.

ஆதி “என்னடி என் பொண்டாட்டி, மாமன சைட் அடிக்குறியா?”

திவி “அப்ரோம் என்ன பண்ண சொல்ற? திரும்ப எப்போ வீட்டுக்கு வருவியோ? சி.பி.ஐ வேலைல வேற என் புருஷன் இருக்கானே.? அப்போ கிட்ட இருக்குறப்போவே நல்லா பாத்துக்க வேண்டியதுதான்” என்றாள் ஒற்றைக் கண்சிமிட்டி. ஒரு நிமிடம் ஆதி ஆடித்தான் போனான்.

இந்த விடயம் யாருமே அறியாத ஒன்று. மறைமுகமாகத்தான் இவ்வேலையை ஆதி செய்து கொண்டு வருகிறான். சக்தி உள்பட யாருமே அறிந்திடாத ஒன்று. எப்படி தன் மனையாள் அறிந்தால் என்பதே அவனை ஆச்சர்யத்திற்குள்ளாக்கியது.

ஆதி “அடியேய்… நீ ஐ.ஏ.எஸ் பாஸ் பண்ணவன்னு மறந்தே போய்ட்டேன்டி. எப்டி டி?”

திவி “ஹலோ மாம்ஸ், ஐ.ஏ.எஸ் ஆகுறதுக்கு முன்னாடியே நான் உன்னைப் பத்தின டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணவடா. இதுக்கு அப்ரோம் உன்னை கண்டுபுடிக்கிறது எனக்கு கஷ்டமா?”

ஆதி “எல்லாம் தெரிஞ்ச கலெக்டர் மேடத்துக்கு நான் என்ன விசயத்துக்கு போனேன்னு தெரியாதா?”

திவி “ரெண்டு நாள்க்கு அப்ரோம் உன்னை ட்ரேஸ் பண்ண முடியல. சோ நீயே சொல்லிடு என்ன விசயம்?”

வெகு நாட்கள் கழித்து யது தன்னிடம் இவ்வாறு உரையாடுவதை எண்ணி உள்ளுக்குள் வெகுவாக மகிழ்ந்துதான் போனான் ஆணவன். ‘இவளிடம் கூறவேண்டியது நிறைய உள்ளது. கூறினால் அவள் மனது தாங்குமா? இதே போல் மீண்டும் என்னிடம் உரையாடுவாளா?’ என்ற கேள்வியே அவனை வெகுவாக தாக்கிட, “பேபி வாங்க, பாட்டி கூப்டுறாங்க” என்ற அழைப்பில் தன்னிலை பெற்றான். “யதும்மா நீங்களும் வாங்க” என்று ஆரா அழைத்திட, இருவரும் கூடத்திற்கு விரைந்தனர்.

அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ண, அங்கு நிலவிய பெருத்த அமைதியை சக்திதான் களைத்தான் “அடேய், எங்க டா போன? சொல்லிட்டு போய்த் தொலைக்க வேண்டியதுதான? இங்க உன் புள்ளைல இருந்து உன் தாத்தா வரைக்கும் என்னையும் என் புள்ளையையும் பாடாப்படுத்தி எடுத்துட்டாங்க. இப்பயாவது சொல்லு எங்க போன?”

ஆதி “சாப்டு டா சொல்றேன்.” என்று தன் உணவில் கவனமானான்.

அனைவரும் உண்டு முடித்து இவனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆதி “மொழியா, இங்க வா”

மொழியன் “என்ன சித்தப்பா?”

ஆதி “நான் சொன்ன மாதிரி எல்லாத்தையும் நல்லா பாத்துக்கிட்டல்ல. இந்தா உனக்காக சாக்லேட். அன்ட் சமத்தா இருந்த ஆராக்கும் கவினுக்கும் சாக்லேட். மூணு பேரும் அங்க போய் விளையாடுங்க. நாங்க பேசிட்டு வரோம்.” என்று மூவரையும் அனுப்பி வைத்தான்.

சக்தி “என்ன டா ரொம்ப பன்ற? எங்க டா போன?”

அவன் கேட்ட கேள்விகளுக்கு பதிலேதும் கூறாமல் தொலைக்காட்சியை உயிர்ப்பித்தான். அதில் ஒளிபரப்பாகிய செய்தியைக் கண்டு திவி உள்பட அனைவரும் அதிர்ந்துதான் போயினர். மீனா தான் பெரும் அதிர்ச்சியில் இருந்தாள். அப்படி என்ன அந்த தொலைக்காட்சியில் தெரிகிறது நாமும் சற்று பார்க்கலாமே…

“முக்கிய செய்தி – பிரபல தொழிலதிபர் மகளும் ஏ.டி கன்ஸ்ட்ரக்ஸன் பங்குதாரருமான சந்தனா கோகுல் இன்று கைது செய்யப்பட்டார். இவருக்கு உடந்தையாக இருந்த நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த அன்வரும் கைது செய்யப்பட்டார். மூன்று வருடங்களுக்கு முன்பே சந்தனாவின் தந்தை ராஜரத்தினத்தை பிராத்தல் வழக்கில் போலீசார் கைது செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இனி விரிவான செய்திகள். – சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தனா கோகுல். இவர் பிரபல தொழிலதிபரும் அரசியல் செல்வாக்கும் கொண்டவரான ராஜரத்தினத்தின் மூத்த மகள். இவரின் இரண்டாவது மகள் சுப்ரியா வழக்குறைஞராக பணிபுரிந்து வருகிறார். இவரும் இவரின் மூத்த மகள் சந்தனாவும் பல மறைமுக அரசுக்கு எதிரான செயல்களில் கடந்த ஆறு வருடங்களாக செயல்பட்டு வந்தது இன்று சிபிஐ மூலம் வெளிவந்துள்ளது. ராஜரத்தினத்தின் உற்ற தோழனான சரவணப்பெருமாளும் உடன் இணைந்தே பல வேலைகளில் ஈடுபட்டுள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது. சரவணப்பெருமாள் தொழிலதிபர் ஆதித்யாவின் தந்தையும் நாசிக் மாவட்டத்தின் முன்னாள் மாவட்ட ஆட்சியரும் போதை தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியுமான திவ்யதர்ஷினி ஆதித்யாவின் மாமனாரும் ஆவார். இந்த வழக்கை சரியாக வழிநடத்தி ஆதாரங்களை திரட்டியது சரவணப்பெருமாளின் தம்பி மகனும் சேலம் மாவட்டத்தின் ஏசிபியுமான சக்தி சரவணக்குமார் ஆவார். இவருக்கு பல்வேறு வகையில் உதவியாக இருந்தது ஆதித்யாவும், திவ்யதர்ஷினி ஆதித்யாவும் தான். ராஜரத்தினம் முன்பே கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது சரவணப்பெருமாளும் சந்தனாவும் கைது செய்யப்பட்டு உள்ளனர். சரவணப்பெருமாள் காலாவதியான மருந்துகளின் அட்டைகளை மாற்றி மீண்டும் பயன்படுத்துவதற்கு தகுந்த நிலையில் ஏமாற்றி வந்தார். சந்தனா மேல்தான் அதிகப்படியான வழக்குகள் பதிவாகியுள்ளது. அறிவியலில் புதிய மாற்றத்தினை கொண்டு வர வேண்டும் என்ற ரீதியில், கல்லூரி மாணவிகளை ஏமாற்றி, அவர்களே அறியாமல் அவர்களின் அண்ட செல்லினை எடுத்து அதனுடன் விந்தணுவை செலுத்தி கருவிலேயே குழந்தை எவ்வாறு உருவாக வேண்டும் என்ற ஆராய்ச்சியை மேற்கொண்டு வந்துள்ளார். இதற்காக அவர் பல மாணவிகளின் வாழ்வையே சீரழித்துள்ளார். அவரின் முயற்சியில் தோல்வியடைந்த பெண்களை தன் தந்தையின் உதவியால் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளார். சேலம், கேரளா, நாசிக் போன்ற இடங்களில் அரசுக்கு தெரியாமல் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு வந்துள்ளார். வேதியியலில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு உயிரைக் கொல்லும் பல்வேறு மருந்துகளை கண்டுபிடித்து அதை பல்வேறு மனிதர்களுக்கு செலுத்தியும் வந்துள்ளார்.

தடைசெய்யப்பட்ட போதை மருந்துகளை விற்றும், அதை பயன்படுத்தி கல்லூரி மாணவ, மாணவிகளை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு வந்துள்ளார். மேலும் ஏசிபி சக்தியின் தம்பியான கோகுலைத் தான் இவர் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரிடம் இருந்த சொத்துக்களையும் அபகரித்துள்ளார். இன்னும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.”

இவற்றையெல்லாம் கண்ட அனைவரும் அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தனர். மயங்கிய மீனாவை எழுப்பிய பிறகு, அங்கு ஒரு வித இறுக்கமான சூழ்நிலையே நிலவியது.

 

கனவு தொடரும்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
6
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்