Loading

 

 

அர்ஜுன் வீட்டிற்கு வந்து இரண்டு மாதங்கள் ஓடி விட்டது. அவன் உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் போதே லெனின் அவன் வேலை செய்யும் நிறுவனத்திற்கு விசயத்தை தெரிவித்து விட்டான்.

அவர்களும் அவன் சரியான பின்பு வந்தால் போதும் என்று கூறி விட்டு அவனுக்கு பதில் வேலையை பார்க்க வேறு ஒருவரை அனுப்பி வைத்தனர்.

இரண்டு மாதமும் திவ்யா, அன்பரசி, சந்திரா, செந்தில்குமார் என்று நால்வருமே அவனை நன்றாக கவனித்தனர்.

கையில் முன்னேற்றம் இல்லை என்றாலும் காலில் நிறையவே முன்னேற்றம் வந்தது. மருத்துவரின் உதவியுடன் நடக்க பழகினான்.

கொஞ்சம் தடுமாறிய போதும் நடக்கும் முயற்சியை அவன் விடவே இல்லை. குச்சியை பிடித்துக் கொண்டு நடக்கும் அளவு தேறி விட்டான்.

அன்று திவ்யா அர்ஜுனிடம் வந்தாள்.

“என்னடா பண்ணிட்டு இருக்க?”

“சும்மா.. நடந்து பார்த்துட்டு இருக்கேன்”

“நாம எங்கயாவது வெளிய போகலாமா?”

“ம்ம்.. போகலாம்.. எனக்கும் வீட்டுலயே இருக்க போரடிக்குது”

திவ்யா எல்லோரிடமும் சொல்லி விட்டு அர்ஜுனை காரில் ஏற்றி கிளம்பினாள். பொது சாலைக்குள் நுழையும் வரை அமைதியாக இருந்தவள் “அன்னைக்கு அங்க எப்படி வந்த?” என்று கேட்டாள்.

அர்ஜுனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த மூன்று மாதத்தில் யாருமே இந்த கேள்வியை கேட்கவில்லை. இப்போது எதற்காக கேட்கிறாள் என்று ஆச்சரிய பட்டான்.

“ஏன் கேட்குற?”

“தெரிஞ்சுக்க தான். சொல்லு”

“அன்னைக்கு.. நான் ஏர்போர்ட்ல இறங்குனதுமே மஞ்சுக்கு கால் பண்ணேன். லைன் கிடைக்கல. நீ எங்க இருக்கனு தெரிஞ்சுக்கலாம்னு கேட்க நினைச்சேன்”

“எதுக்கு?”

“சும்மா”

“ஓஓஓ.. அப்புறம்?”

“ரொம்ப நேரம் வரைக்கும் லைனே கிடைக்கல. சரி வீட்டுக்கே போயிடலாம்னு டாக்சில கிளம்பிட்டேன். பாதி வழியில போகும் போது மஞ்சுக்கு கால் கணெக்ட் ஆச்சு. ஆனா பேசுறது சரியா கேட்கல. கட் ஆகிடுச்சு. நான் வீட்டுக்குள்ள போனதுக்கு அப்புறம் தான் மஞ்சு திரும்ப பேசுனா.. எங்க இருக்கனு கேட்டேன். அவ சொன்னது எனக்கும் கேட்கல நான் சொன்னது அவளுக்கும் புரியல. மறுபடியும் கட் ஆகவும் சரி நீங்க வீட்டுக்கு வந்தப்புறம் பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன்.

பட் கொஞ்ச நேரத்துலயே லொகேஷன் அனுப்பினா. அத பார்த்துட்டு கார எடுத்துட்டு கிளம்பிட்டேன். நீ உடச்சியே அதே கார் தான். நான் அட்ரஸ் கண்டு பிடிச்சு வந்து பார்த்தேன்.

யாரையும் காணோம். எல்லாருமே மேல இருந்தீங்க. கீழ வர்ர வரை வெயிட் பண்ணலாம்னு கார்ல உட்கார்ந்து இருக்கும் போது தான் யஷ்வந்த் கால் பண்ணான். அர்ஜுன் திவ்யான்ஷிக்கு ஆபத்து.. உடனே போய் எங்க இருந்தாலும் காப்பாத்துங்கனு சொன்னான்.”

அன்று…

அர்ஜுன் யஷ்வந்த் சொன்னது புரியாமல் திருப்பி கேட்டான்.

“என்ன சொல்லுறீங்க?”

“திவ்யான்ஷி எங்க இருக்காங்கனு தெரியுமா? தெரிஞ்சா உடனே அவங்கள காப்பாத்துங்க”

“நான் திவ்யா இருக்க இடத்துல தான் இருக்கேன். என்ன விசயம்னு தெளிவா சொல்லு”

“அந்த அபிமன்யு இருக்கானே.. அவரோட அப்பா கூட ஒரு மீட்டிங். என் மேனேஜர் வரலனு நானே அட்டன் பண்ண போனேன். அவர் யார் கிட்டயோ இன்னைக்கோட அந்த நடிகை ஒழிஞ்சு போயிடனும்னு சொல்லிட்டு இருந்தார். எனக்கு அது திவ்யானு தான் தோனுது”

“நான் இங்க தான் இருக்கேன். நான் பார்த்துக்கிறேன். நான் இருக்க லொகேஷன் அனுப்புறேன். அவங்க சூட்டிங் பக்கத்துல தான் போயிட்டு இருக்கு. நான் போய் பார்க்குறேன்” என்று கூறி விட்டு யஷ்வந்த்திற்கு இருக்கும் இடத்தின் விவரத்தை அனுப்பினான்.

மஞ்சுளாவை அழைத்தால் அழைப்பு செல்லவில்லை. அவர்கள் படப்பிடிப்பு எடுத்துக் கொண்டிருக்கும் கட்டிடம் தூரமாக இருந்தது. கார் உள்ளே செல்ல முடியாத பாதையாக இருந்தது. அதனால் அர்ஜுன் அங்கேயே நின்று இருந்தான்.

இப்போது யஷ்வந்த் கூறியதும் வேகமாக இறங்கியவன் காரை பூட்டி விட்டு அந்த இடத்தை நோக்கி ஓடினான்.

அங்கு வேலை செய்வது போல் நடித்துக் கொண்டிருந்தவர்களை தவிர யாரும் இல்லை. படப்பிடிப்பில் உதவி செய்பவர்கள் எல்லோருமே தூரமாக நின்று இருந்தனர்.

ஒருவன் மட்டும் மேலே இருந்து இறங்கி வந்தான். வந்தவன் யாருக்கும் தெரியாமல் பதுங்கிச் சென்று சாளரத்தின் கயிறை எல்லாம் வெட்டி விட ஆரம்பித்தான்.

அர்ஜுன் அதை பார்த்து விட்டு வேகமாக அருகே ஓடினான். மற்றவர்கள் படப்பிடிப்பு என்பதால் அவனை தடுக்க பார்த்தனர். ஆனால் அவனது தோற்றம் அவர்களை நிதானிக்க வைத்தது.

படித்தவனாக இருக்கிறான் எதற்காக இப்படி இடையில் ஓடுகிறான் என்று யேசித்தனர்.

கயிறை எல்லாம் வெட்டி விட்டு ஓடப்பார்த்தவனை அர்ஜுன் பிடித்து விட்டான்.

அவனை அடிக்கப்போக எல்லோரும் அவனை தடுத்தனர்.

“சார்.. என்ன ஆச்சு? ஏன் அவன அடிக்கிறீங்க? இங்க சூட்டிங் நடக்குது”

“மண்ணாங்கட்டி சூட்டிங்.. இவன் அந்த கட்டைய கட்டி இருக்க கயிற எல்லாம் வெட்டி விடுறான். இது மேல இப்போ யாரு ஏறி நின்னாலும் இடிஞ்சு விழுந்துடும்”

எல்லோரும் அதிர்ந்து போய் பார்க்க கயிறை வெட்டியவன் அவர்களிடமிருந்து தப்பித்து ஓடினான். சிலர் அவனை பிடிக்க துரத்த அர்ஜுன் வேகமாக படிகள் இருக்கும் இடத்தை கண்டு பிடித்து ஏற ஆரம்பித்து விட்டான்.

“யாராவது இது மேல ஏறுறதுக்குள்ள சொல்லனும். விடுங்க..” என்று அவனை தடுக்க பார்த்தவர்களிடம் கத்தி விட்டு வேகமாக ஏறினான்.

அவர்களும் அவன் பின்னாலே வர ஆரம்பித்தனர். கீழே நடந்த கலவரத்தை அறியாமல் திவ்யா மேலே ஏறி நின்று விட்டாள். தூரமாக பறந்த கேமராவிற்கு சரியாக இருக்க வேண்டுமென்று எல்லோரும் தள்ளிச் சென்று விட திவ்யாவும் அவனோடு நடிக்கும் இருவர் மட்டுமே நின்றிருந்தனர்.

திவ்யாவை உயரத்தில் பார்த்து விட்டு அர்ஜுனுக்கு அதிர்ச்சி தான். ஆனாலும் அவளை காப்பாற்ற வேண்டும் என்று மட்டுமே மனதில் தோன்றியது. சுற்றி இருந்த எதையும் கவனிக்காமல் ஓடிச் சென்று அவளை தூக்கி விட்டான்.

அவன் குதித்த இடமும் இடிந்து விழும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அதனால் திவ்யாவை முதலில் தூக்கி போட்டு விட்டு அவன் இறங்க பார்க்க நேரம் கடந்து இருந்தது.

இதை எல்லாம் சொல்லி விட்டு அர்ஜுன் அம்ரிதாவை பார்க்க அவள் நிதானமாக காரை ஓட்டிக் கொண்டே இருந்தாள்.

“இதெல்லாம் உனக்கு தெரியுமா?”

“பாதி வரை தெரியும். யஷ்வந்த் பாதி சொன்னாரு. மீதி அங்க ரோலிங்ல இருந்த கேமரால ரெக்கார்ட் ஆகி இருந்துச்சு. பாலன் அத பத்திரமா வச்சுருந்து மாமா கிட்ட வந்து கொடுத்துட்டாரு. அத வச்சு தான் என்ன நடந்ததுனு கெஸ் பண்ணோம். ஆனா நீ ஏன் அங்க வந்தனு தெரியல”

“ம்ம்…”

“அந்த ஜலந்தர் அபிமன்யுவோட அப்பாக்கு என்ன பிடிக்கல. அவன் நான் வேணாம்னு சொன்ன சோகத்துல குடிச்சுட்டு சுத்திட்டு இருந்திருக்கான்.”

அர்ஜுன் அமைதியாக இருக்க அம்ரிதா திரும்பி பார்த்து விட்டு சாலையை கவனித்தாள்.

“மஞ்சு சொன்னா.. நீ அபி ஆபிஸ்ல ப்ரான்க் பண்ணது. அவனுக்கு லாஸ் வர வச்சது.. அவ தான் உன்ன அபிமன்யு கிட்ட பேச வச்சதுனு எல்லாமே சொன்னா”

“ம்ம்”

“அவன் தைரியமா என் கிட்ட வந்து பேசனும்னு கிளப்பி விட்டுட்டு போயிட்ட. அவனும் கேட்டான். நான் நோ சொல்லிட்டேன். உடனே அவன் குடிச்சுட்டு கிடந்துருக்கான். ஜலந்தர் அவனுக்காக பேசினாரு. நான் முடியவே முடியாதுனு சொல்லிட்டேன். நான் சினிமால பெரிய நடிகையா இருக்க திமிருல பேசுறேன்னு நினைச்சுட்டாரு. உடனே என்னயும் அவரோட மகன் மாதிரியே ஆக்கனும்னு அவர் தான் நான் ட்ரக் அடிக்ட்னு கிளப்பி விட்டது. மாமா சீக்கிரமே அத கண்டு பிடிச்சுட்டாரு.

அவர நல்லா திட்டி விட்டுட்டாரு. இனிமே எதாச்சும் பண்ணா உன் மகன ஜெயிலுக்கு அனுப்பிடுவோம்னு சொல்லி இருக்காரு. அதுக்கு தான் கோபம் வந்து என்ன கொலை பண்ணிட நினைச்சுருக்கார். அபிமன்யுவும் நான் நடிச்ச படத்துல ஒரு ப்ரடியூஸர். உனக்கும் தெரியும்ல. அந்த பவர யூஸ் பண்ணி சூட்டிங் எங்க நடக்குதுனு தெரிஞ்சுக்கிட்டாரு.

ஆக்ட்சுவலி நீ வர்ரதுக்கு முன்னாடியே மேல நிக்குற சீன் எல்லாம் எடுத்து முடிச்சுட்டோம். அதுக்கு அடுத்து வர்ர சீன் கூட முடிச்சுட்டோம். மேல நிக்கிற சீன் திரும்ப எடுக்கலாம் சரியா வரலனு பார்த்துட்டு இருந்தோம். அத பார்த்துட்டு தான் அங்க இருந்த ஒருத்தன் நான் மேல ஏறி நிற்கும் போது கட்டை கலண்டு விழட்டும்னு கயிற எல்லாம் வெட்டி விட்டுருக்கான்.

அவன அடிச்சு உதச்சு எல்லா உண்மையும் வாங்கியாச்சு. அவன் சரண்டர் ஆனதும் ஜலந்தரும் மாட்டிக்கிட்டாரு. கேஸ் ஃபைல் பண்ணிட்டோம்”

“அப்போ அந்த அபிமன்யு?”

“அவன் என் கிட்ட வந்தான். அவனோட அப்பா மேல இருக்க கேஸ வாபஸ் வாங்க சொல்லி”

“என்ன‌ சொன்ன?”

“ஒரு வருசமா கோமால இருக்கவன எழுப்பி உட்கார வச்சு மன்னிப்பு கேட்க முடியுமா? இல்ல அவன் இழந்த ஒரு வருசத்த திருப்பி கொடுக்க முடியுமா? அப்படி ரெண்டயும் பண்ணு நான் கேஸ வாபஸ் வாங்குறேன்னு சொல்லிட்டேன்”

“ம்ம்… அவன் என்ன சொன்னான்?”

“தினமும் வந்து கேட்டுட்டே இருந்தான். எரிச்சலா இருந்துச்சு. ஆனாலும் நான் பேசவே இல்ல. நீ கேமரா வச்சப்போவே உன்ன தூக்கி உள்ள போட்டு இருந்தா இன்னைக்கு அர்ஜுன் இப்படி படுத்துருக்க மாட்டான்னு சொல்லிட்டேன். அதுக்கப்புறம் அவன் வரவே இல்ல”

“கேஸ் இன்னும் போய்ட்டு இருக்கா?”

“இல்ல.. எவ்வளவு இழுக்க முடியுமோ இழுத்துட்டாங்க. கடைசில உன் பையன் கேமரா வச்ச விசயம் தெரிய கூடாதுனா நீ பண்ண தப்ப ஒத்துக்க.. இல்லனா எல்லா விசயத்தையும் இழுத்து நாரடிச்சுடுவேன்னு மாமா சொல்லிட்டாரு. அதுக்கு அப்புறம் தான் ஒத்துக்கிட்டாரு. அட்டம்ப்ட் மர்டர் கேஸ்ல ஜெயில்ல இருக்காரு”

“ம்ம்”

கார் ஒரு இடத்தில் வந்து நிற்க அர்ஜுன் வெளியே பார்த்தான். சினிமா ஸ்டுடியோவில் ஒரு பிரபலமான ஸ்டூடியோவிற்கு வந்து இருந்தனர்.

“இங்க எதுக்கு வந்தோம்?” என்று அர்ஜுன் முகத்தை சுருக்கினான்.

“சுத்தி பார்க்கலாம் வா” என்று கூறி கீழே இறங்கச் சொன்னாள். பிறகு ஒன்றும் பேசாமல் உள்ளே அழைத்துச் சென்றாள். அங்கிருந்த சிலர் திவ்யாவை அடையாளம் கண்டு கொண்டனர். அவளருகில் குச்சியோடு நடந்து வருபவன் யாரென்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

ஒரு கதவை திறந்து அர்ஜுனை அழைத்துச் சென்றாள். உள்ளே எதோ ஒரு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.

“பார்.. இதான் சூட்டிங் செட்” என்று காட்டினாள்.

அங்கு இயக்குனர் நாற்காலியில் பாலன் அமர்ந்து இருந்தான். திவ்யா வந்து நிற்கும் விசயம் அவனிடம் சேர திரும்பி பார்த்து கையாட்டினான்.

திவ்யாவும் கையாட்டி விட்டு வேலையை பாருங்கள் என்று சைகை செய்தாள்.

“அவர தெரியும்ல அர்ஜுன்.. டைரக்டர் பாலன்”

அர்ஜுன் தலையாட்டி வைத்தான்.

“அவரோட வேலைய பத்தி என்ன நினைக்கிற? “

அர்ஜுன் பதில் சொல்லாமல் தோளை குலுக்கினான்.

“நிறைய பேருக்கு டைரக்டர்னா சேர்ல உட்கார்ந்துட்டு ஆக்ஷன் கட் னு மட்டும் சொல்லிட்டு இருப்பாங்க. மத்தவங்க தான் ஓடி ஓடி வேலை பார்ப்பாங்கனு எண்ணம். உண்மையா ஒரு டைரக்டரா இருக்கது எவ்வளவு கஷ்டம்னு யாருக்குமே தெரியாது. ஒரு சீன் ஒழுங்கா வர்ரதுக்கு அவங்க போடுற உழைப்பு அதிகம்.

பல நாள் தூக்கமே இல்லாம வேலை பார்க்க வேண்டி வரும். தன்னோட சொந்த காரணத்துக்காக அந்த ஒரு டைரக்டர் வேலை செய்யாம லீவ் போட்டுட்டா டோட்டலும் டேமேஜ் ஆகிடும். பகல், இரவு, தூக்கம் எதையுமே பார்க்காம அவங்க கஷ்டப்பட்டு தான் வேலை பார்க்குறாங்க.”

நிறுத்தி விட்டு அர்ஜுன் முகத்தை பார்த்தாள். அவன் அசையாமல் பாலனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“உன் அப்பாவும் இதே போல தான் சேர்ல உட்கார்ந்து இருப்பாரு. பல நாள் தூக்கத்த தொலைச்சுட்டு ஒரு படத்த உருவாக்குவாரு. உனக்கு பால்ல போட்டு கொடுத்தேனே தூக்க மாத்திர
ரை.. அது மாமாவோடது தான். அவருக்கு தூக்கமே வராது. ரெண்டு நாள் ஆனாலும் கூட வேலை வேலைனு தான் இருப்பாரு. வீட்டுக்கு வந்தப்புறமும் கூட தூக்கம் வராது. அதுக்காக தான் தூக்க மாத்திரை போடுவார். இவ்வளவு கஷ்டப்பட்டு இத ஏன் பண்ணனும்னு தோனுதுல?”

அர்ஜுன் மனதிலும் அதே கேள்வி வந்ததால் அவளை திரும்பி பார்த்தான்.

“ஏன்னா அது அவரோட கனவு. கேட்க சில்லியா இருக்கலாம். ஆனா அது தான் நிஜம். கோடிக்கணக்குல செலவு பண்ணி ராக்கெட்ட உருவாக்கி அது சேட் லைட்டை மேல அனுப்புனதும் எரிஞ்சுடுதுனு உருவாக்காமலே இருக்க முடியுமா? அது ஒருவகை கனவுனா இதுவும் ஒரு வகை கனவு. ரெண்டும் அது அது இடத்துல சரி தான்”

திவ்யா சொன்னதும் அர்ஜுன் பாலனை பார்த்தான். பாலன் அந்த நாயகனிடம் எதோ பேசிக் கொண்டிருந்தான். ஒரு நொடி கூட அவன் சும்மா இருக்கவில்லை. தொடர்ந்து ஒவ்வொருவராக அவனிடம் வந்து பேசிக் கொண்டே இருந்தனர். எல்லோருக்குமே முகம் சுளிக்காமல் கோபப்படாமல் பதில் சொல்லி வேலை வாங்கிக் கொண்டிருந்தான்.

ஒரு நொடி அந்த இடத்தில் செந்தில்குமாரை வைத்து பார்த்தவனுக்கு என்னவோ போல் இருந்தது.

அவனது முக மாற்றத்தை பார்த்த திவ்யா “சரி வா.. அங்க போகலாம்” என்று வேறு இடத்துக்கு அழைத்துச் சென்றாள்.

அது வேறு ஒரு செட். இப்போது தான் அதை தயாரித்துக் கொண்டிருந்தனர்.

“இங்க எத்தனை பேர் இருப்பாங்கனு நினைக்கிற?”

“ஒரு ஐம்பது?”

“இருக்கலாம்.. பட் இதே போல இங்க இருக்க அத்தனை செட்லயும் ஆளுங்க இருப்பாங்க. இதே போல எல்லா ஸ்டூடியோலயும் இருப்பாங்க. இவங்களுக்கெல்லாம் சாப்பாடு போடுறது இந்த சினிமா தான். நீ இத நான் சும்மா சொன்னா நம்ப மாட்டனு தான் நேராவே காட்ட கூட்டிட்டு வந்துட்டேன்.”

அர்ஜுன் ஒன்றுமே பேசவில்லை.

“ஹேய்.. திவ்யா..” என்று விவேகா ஓடி வந்தாள்.

“ஹாய்…” என்று திவ்யா சந்தோசமாக கையாட்டினாள்.

அருகில் ஓடி வந்த விவேகா அர்ஜுனை பார்த்து விட்டு எதோ சொல்ல வாயை திறந்தாள். அதற்குள் திவ்யா கண்ணை காட்ட “யாரு இவங்க?” என்று கேட்டு வைத்தாள்.

“அங்கிளோட பையன்”

“ஓ… நைஸ் டூ மீட் யூ”

அர்ஜுன் தலையசைத்து வைக்க “உன் கிட்ட பேசவே முடியல.. இருக்க இடம் தெரியாம காணாம போயிட்ட.” என்று திவ்யாவை கேட்டாள்.

“சொல்லி இருந்தேனே.. நீங்க எங்க இங்க?”

“ப்ரடியூஸர் கூட மீட்டிங். எல்லோரும் கிளம்பிட்டாங்க‌. நான் உன்ன பார்த்ததும் ஓடி வந்தேன்”

“ஓ…”

“சரி பிசியா இருக்க.. அப்புறமா பார்க்கலாம்” என்று இருவருக்கும் கையாட்டி விட்டு சென்று விட்டாள்.

“இந்த பொண்ணுக்கும் உனக்கும் தான காம்படீஷன்னு சொல்லிட்டு இருக்காங்க. இவ்வளவு நல்லா பேசிக்கிறீங்க?”

“அப்படி நாங்க எங்கயும் சொன்னது கிடையாதே.. நாங்க ஒரு நல்ல ஃப்ரண்ட்ஸ். விவேகாவ அக்கானு தான் கூப்பிடவே செய்வேன். இந்த மாதிரி ஊருக்குள்ள போட்டினு நினைச்சுட்டு இருக்க பல பெரிய நடிகை நடிகர்கள் உண்மையாவே நல்ல ஃப்ரண்ட்ஸ். சினிமாக்கு பல முகம் இருக்கு அர்ஜுன். அதுல இதுவும் ஒன்னு”

“இது வேறயா?”

“ம்ம்.. சோ எனக்கும் நிறைய ஃப்ரண்ட்ஸ் இருக்காங்க. ஜெயதேவ் அண்ட் விவேகா லவ்வர்ஸ்”

“வாட்?”

“எஸ்.. என் கூட ரூமர் வந்ததே.. அந்த ஜெயதேவ்வும் விவேகாவும் தான்”

“இதெல்லாம் நம்பவே முடியல. எப்படி இப்படி?”

“இவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணிட்டு இருக்காங்க. பட் சண்டையில பிரிஞ்சு இருக்காங்க.”

“சண்டையா?”

“ரூமர்க்கும் அதுக்கும் சம்பந்தம் இல்ல. அவங்க பர்ஸ்னல் மேட்டர். வெளிய வா சொல்லுறேன்” என்று கூறி வெளியே வந்து விட்டாள்.

“ஆக்ட்சுவலி அக்காவுக்கு அபார்ஷன் ஆகிடுச்சு. சாக் ஆகாத.. முழுசா கேளு. தேவ்வோட குழந்தை தான். தேவ் குழந்தை வேணும்னு நினைச்சான். அக்காவும் தான். ஆனா அக்காவோட கேர்லஸ்ல இப்படி ஆகிடுச்சு. தேவ் கோச்சுக்கிட்டான். இன்னுமும் கோபம் போகல”

“இவங்களுக்கு கல்யாணம் ஆகல தான? கல்யாணத்துக்கு முன்னாடியே ப்ரக்ணன்ட்… அபார்ஷன்?”

“சோ வாட்?”

“இதெல்லாம் சினிமால இருக்கவங்களுக்கு சகஜம் இல்ல?”

“லுக்.. இது போல உலகத்துல எவ்வளவோ நடக்குது. அதெல்லாம் அவங்க பர்ஸனல்னு நாம கண்டுக்காம வேலைய பார்க்குறோம். சினிமால இருக்கவங்க வாழ்க்கையில நடந்தா மட்டும் ஏன் அத பெருசு பண்ணி இருக்க எல்லாரையும் அசிங்க படுத்தி பார்க்கனும்? அவங்க லைஃப் அவங்க இஷ்டம்.

இப்போ லிவ்விங்னு வாழுற மக்கள பார்த்துட்டு கடந்து போறாங்க. செலிபிரட்டியையும் கடந்து போகலாமே? அத விட்டுட்டு மொத்தமே இப்படி தான்னு முடிவு பண்ண யாரு உரிமை கொடுத்தது?”

“சோ அவங்க பண்ணது சரினு சொல்ல வர்ர?”

“அது பத்தி கமெண்ட் பண்ண எனக்கு உரிமை இல்லனு சொல்லுறேன். அது சரியோ தப்போ அத சொல்ல நான் யாரு?”

அர்ஜுனுக்கு ஒரு மாதிரியாகி விட்டது. உண்மை தானே அவர்கள் வாழ்வு அவர்கள் முடிவு. அதை பற்றி பேச தங்களுக்கு எந்த உரிமையும் இல்லையை? பிரபலங்கள் என்றால் அடுத்தவர்களுக்கு உதாரணமாக வாழ வேண்டும் தியாகியாக வாழ வேண்டும் என்று ஏன் எதிர் பார்க்கிறோம்? அவர்களும் சாதாரண மனிதர்கள் தானே?

“என்ன யோசிக்கிற?”

“தப்பு தான். யாரோட பர்ஸ்னலயும் கேள்வி கேட்க உரிமை இல்ல”

“குட்.. அண்ட் விவேகாவுக்கும் தேவ்க்கும் கல்யாணம் ஆகிடுச்சு”

“ஹான்!”

“ம்ம்.. ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி இருக்காங்க. என் கிட்ட சொல்லல. மாமா மூலமா தெரிஞ்சது. தேவ் குழந்தைக்காக ஊரறிய கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணான். ‌பட் குழந்தை போனதும் ரெண்டு பேருமே ஹர்ட் ஆகிட்டாங்க. தேவ் அவங்கள பார்க்க கூட ஆசை படல.”

“நீ அவங்க ஃப்ரண்ட்.. அவங்களுக்கு கல்யாணம் ஆனத உன் கிட்ட கூட சொல்லலையா?”

“ஏன் சொல்லனும்? அவங்க சொல்லனும்னு எதிர் பார்க்குறது தான் தப்பு. நாம சின்ன பசங்க இல்ல. எல்லாருமே மெச்சூர்ட் ஆனவங்க. அவங்க அவங்க வாழ்க்கையில ரகசியம் இருக்கத்தான் செய்யும். என் வாழ்க்கையில கூட அர்ஜுன்னு ஒருத்தன் இருந்தான்னு யாருக்குமே தெரியாதே. டைரக்டர் செந்தில் குமாருக்கு ஒரு பையன் இருக்கான். அவன் வெளி நாட்டுல இருக்கான். அவ்வளவு தான். நீ எப்படி இருப்ப உனக்கும் எனக்கும் என்ன உறவு.. நான் ஏன் உன் அப்பாவ மாமானு கூப்பிடுறேன் எதுவுமே யாருக்குமே தெரியாது. இனி தெரிஞ்சாலும் ஏன் சொல்லலனு யாருமே கேட்க மாட்டாங்க”

அர்ஜுனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் அறிந்த சினிமா உலகம் வேறு. இவள் இப்போது காட்டும் பக்கம் வேறு. அவன் அறிந்ததெல்லாம் அடுத்தவர்களை பற்றி அவதூறு பரப்பும் சினிமாவை பற்றி மட்டும் தான். இப்படி அடுத்தவர்களுடைய அந்தரங்கத்திற்கு மதிப்பு கொடுப்பது போன்ற விசயங்களை இங்கு அவன் எதிர் பார்க்கவில்லை.

திவ்யா அவனை வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றாள். இயக்குனரின் வேலையை எப்படி விளக்கினாளோ அதே போல் ஒவ்வொருவரின் வேலையையும் விளக்கினாள்.

எல்லோருமே உயிரை கொடுத்து உழைக்கின்றனர். பலருக்கு அடிபட்ட கதையை விளக்கினாள். அவர்களின் உண்மையான நிலைமை விளக்கினாள். குழந்தை நட்சத்திரங்களை காட்டினாள்.

“இந்த சின்ன பசங்க நடிக்குறத பார்த்துட்டு சிலர் சொல்லுறதா மஞ்சு சொன்னா.. மத்த இடத்துல வேலை பார்த்தா அத குழந்தை தொழிலாளர்னு சொல்லுறோம். சினிமால மட்டும் குழந்தை நட்சததிரம்னு சொல்லுறோம். அவங்களும் குழந்தை தொழிலாளர் தான்னு சொல்லி இருக்காங்க. நீ என்ன நினைக்குற?”

“தெரியல”

“இவங்க எல்லாரும் குழந்தை தொழிலாளர் கிடையாதுங்குறது என்னோட கருத்து.”

“ஏன்?”

“ஆறு வயசுல ஒரு பொண்ணு டான்ஸ் கத்துக்கிட்டு அரங்கேற்றம் பண்ணா அத திறமைனு வாழ்த்துறது. அதே ஆறு வயசு பொண்ணு நல்லா பாடினா திறமையா தெரியுது. ஆனா ஆறு வயசு பொண்ணு நடிச்சா மட்டும் குழந்தை தொழிலாளரா ? இது எந்த வகை நியாயம்?

நடிப்பு வராத பிள்ளைய அடிச்சு நடிக்க வச்சா அது தப்பு. இயற்கையா அவங்களுக்குள்ள இருக்க திறமைய காட்டுறாங்க. அதுக்கு கருத்து சொல்லுறேன்னு எதையாவது பேச வேண்டியுது. பச்சை குழந்தைங்க தலையில குடும்ப பாரத்த தூக்கி வச்சு அவங்கள அழிக்குறவங்களுக்கு தான் அந்த தடுப்பு சட்டம். நடிக்கிற பிள்ளைங்க இஷ்டப்பட்டு நடிக்கிறாங்க. அவங்களுக்கு அது வரலனா விட்டுட்டு வேற எதையும் பார்க்க போறாங்க.

இன்னைக்கு இருக்க பல முன்னணி நடிகர்கள் ஸ்டார்ஸ் எல்லாரும் குழந்தையாவே நடிச்சவங்க. அவங்க குழந்தை தொழிலாளரா இருந்தா என்னைக்கோ ஓடி போயிருப்பாங்க. இவ்வளவு வளர்ந்துருக்க மாட்டாங்க”

“ம்ம்… இது என்னவோ நியாயம் தான்”

“சரி ரொம்ப நேரமா நடக்குற.. வா கார்க்கு போகலாம்” என்று அழைத்து வந்து அமரவைத்தாள்.

சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவள் “இப்போ சொல்லு.. நீ நினைச்சது மட்டும் தான் சினிமாவ?” என்று கேட்டாள்.

அர்ஜுன் குறுக்காக தலையசைத்தான்.

“இதுக்கு பல முகம் இருக்கு. இங்க பல பேரோட வாழ்வாதாரம் அடங்கி இருக்கு. நிறைய பேருக்கு சோறு போடுது. இத சொன்னா மத்தவங்க எல்லாம் சாப்பிடாம இருக்காங்களானு கேள்வி வரும். ஆனா இதால லட்சக்கணக்காண பேர் வாழுறாங்க. அத யாராலையும் மாத்த முடியாது. இங்க பல கலை இன்னும் வாழ்ந்துட்டு இருக்கு. இது இல்லனா சிலர் ஒன்னுமே இல்லாம போயிடுவாங்க”

திவ்யா பேசி விட்டு இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கண்ணை மூடிக் கொண்டாள். அர்ஜுன் அமைதியாக இருந்தான். இது வரை அவன் அறியாத பக்கங்கள் இவை எல்லாம். சினிமா என்றாலே ஒரு அழுக்கு.. அதில் போனால் எல்லோருடைய வாழ்க்கையும் வீணாகி தான் போகும். எல்லோரும் வாய்க்கு வந்ததை பேசுவார்கள். சினிமாக்காரர்களை தெரிந்தவர்கள் கூட நிம்மதியாக வாழ முடியாது. இப்படி தான் கேள்வி பட்டு இருக்கிறான். நினைத்துக் கொண்டிருக்கிறான்.

அதில் இப்படி லட்சம் பேர் உழைக்கிறார்கள். வாழ்கிறார்கள். பல கலைகளை அழிய விடாமல் காக்கிறார்கள் என்றெல்லாம் அவனுக்கு தெரியாது. பச்சை கண்ணாடியை மாட்டிக் கொண்டு உலகமே பச்சையாக தெரிகிறது என்று கூறுவது போல் அவனும் தவறான பக்கத்தை பார்த்து விட்டு அது மட்டுமே மொத்த உலகமும் என்று நினைத்துக் கொண்டான்.

இன்று எல்லாம் பார்க்கும் போது வித்தியாசமாக இருந்தது. அவன் இன்னும் நிறைய தெரிந்துகொள்ள வேண்டும் போல் தோன்றியது.

சில நிமிடங்கள் வரை அவன் யோசிப்பதற்கு நேரம் கொடுத்த திவ்யா அடுத்ததாக அவன் எதிர் பார்க்காத ஒரு கேள்வியை கேட்டாள்.

தொடரும்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. 💞கடைசியாக அப்படி என்ன கேட்டு இருப்பா 🤔🤔🤔🤔

      👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻💐💐💐💐🍫🍫🍫🍫🍫 சூப்பர் டா ஹனி

      நான் சினிமா படப்பிடிப்பை நேரில் பார்த்து இருப்பதால் இதில் இருக்கும் கஷ்டங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் இவர்களின் தொழிலில் உள்ள ஈடுபாடு தெரியவந்தது

    2. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.