Loading

 

பள்ளி முடியும் நேரம்…

பரபரப்போடு முதலிலேயே புத்தகப்பையை நிரப்பி விட்டு அமர்ந்து இருந்தனர் அந்த ஐந்தாம் வகுப்பு மாணவ மாணவிகள்.

அவர்களது பொறுமையை நன்றாக சோதித்து விட்டு மணியின் சத்தம் காதில் ஒலிக்க வேகமாக எழுந்து வெளியே ஓடி வந்தனர்.

அந்த கூட்டத்தில் அம்ரிதாவும் வெளியே ஓடி வந்தாள். கையிலிருந்த ஐம்பது பைசாவை எடுத்துக் கொண்டு வேகமாக பள்ளியிலிருந்து ஓடி வந்து பள்ளிக்கு வெளியே விற்கும் பழங்களில் ஒன்றை வாங்கினாள்.

அதை பக்கத்து குழாய் தண்ணீரில் கழுவி விட்டு சாப்பிட்டுக் கொண்டே நடக்க ஆரம்பித்தாள். வீடு நடக்கும் தொலைவு தான். அதனால் மெதுவாகவே நடந்து கொண்டிருந்தாள்.

வீட்டிற்குள் எப்போதும் போல் துள்ளலுடன் நுழைய அவனது அன்னை அன்பரசி வேகமாக எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தார்.

“ம்மா… இன்னைக்கு டீச்சர் என்ன சொன்னாங்க தெரியுமா?”

“அத அப்புறம் கேட்குறேன். பைய வச்சுட்டு வேகமாக டிரஸ்ஸ மாத்து”

“ஏன் மா?”

“சொன்னா கேளு.. போ”

அன்பரசி அதட்டல் போட முகத்தை தூக்கிக் கொண்டே சொன்னதை செய்தாள்.அவளை அழைத்துக் கொண்டு வேகமாக ஆட்டோவில் ஏறினார் அன்பரசி.

என்றோ ஒரு நாள் தான் ஆட்டோவில் செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் அம்ரிதா எங்கு போகிறோம் என்றே கேட்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள்.

வாகனம் நேராக சென்று ஒரு மருத்துவமனையின் முன்பு நின்றது. பணத்தை கொடுத்து விட்டு அம்ரிதாவை கையில் பிடித்துக் கொண்ட அன்பரசி, வேகமாக அந்த மருத்துவமனையில் நுழைந்தார்.

“யாரமா பார்க்க போறோம்? யாருக்குமா உடம்பு சரி இல்ல? எதுக்கு இங்க வந்துருக்கோம்னாச்சும் சொல்லுங்கமா” என்று அம்ரிதா நச்சரிக்க அதை கொஞ்சமும் அன்பரசி காதில் வாங்கவில்லை.

உள்ளே சென்று பார்க்க ஒரு அறையில் அவளது தந்தை படுத்து கிடந்தார். உடலெல்லாம் போடப்பட்டிருந்த கட்டை பார்த்து விட்டு அதிர்ந்து நின்று விட்டாள்.

அன்பரசிக்கு இவ்வளவு நேரம் தேங்கி இருந்த கண்ணீர் மளமளவென கொட்ட ஆரம்பித்தது. ஓடிச்சென்று கணவரை நன்றாக பார்த்தார்.

“ஏங்க.. எந்திரிங்க.. ” என்று கூற அந்நேரம் அறைக்குள் வேறு ஒருவர் நுழைந்தார்.

அம்ரிதாவின் தந்தை சரவணனின் நணபர் வந்து நின்றார். அதிர்ந்து போய் நிற்கும் அம்ரிதாவை பார்த்தவர் “ஒன்னும் இல்லமா.. உள்ள வா” என்று அழைத்து சென்றார்.

“என்னணா ஆச்சு?” என்று அன்பரசி அழுக “வேலை பார்த்துட்டு இருக்கும் சாளரம் அறுந்து விழுந்துருச்சு. டாக்டர் நீ வந்ததும் உடனே கூட்டிட்டு வரச்சொன்னாரு” என்றார்.

அம்ரிதாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அவளது தந்தை கட்டிடக்கலையில் வல்லுநர். அவரை போலவே ஆக வேண்டும் என்பது தான் அம்ரிதாவின் ஆசையும் கூட. அவர் வேலை செய்த நிறுவனத்தில் பல கட்டிடங்களை கட்டி இருக்கிறார்.

ஆனால் இம்முறை விதி சதி செய்து விட விபத்து ஏற்பட்டது. மருத்துவ செலவை அவர் வேலை செய்த நிறுவனம் ஏற்றுக் கொள்ள தயாராக இருந்தது. ஆனால் மருத்துவர் அறுவை சிகிச்சை செய்வது கூட பயனற்றது என்று கூறி விட்டார்.

ஏற்கனவே கால் ஒன்று எடுக்கப்பட்டு விட்டது. மொத்தமாக இனி படுத்த படுக்கையாக தான் இருப்பார் என்று கூறினார். அவர் வேலை செய்த நிறுவனத்தின் தலைமையிடம் கூட வேறு எதாவது செய்ய முடியுமா என்று பார்த்தனர்.

ஆனால் எல்லா மருத்துவரும் கை விரித்து விட்டனர். அவர் உயிரோடு இருப்பதே அதிசயம். அதற்கு மேல் எதாவது செய்து அவரது உயிரை பணயம் வைக்க வேண்டாம் என்று கூறி விட அன்பரசிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

இரண்டு நாட்களுக்கு பிறகு தான் சரவணனுக்கு மயக்கம் தெளிந்தது.‌ மருத்துவமனையிலேயே ஒரு மாதம் இருந்து விட்டு வீட்டிற்கு வந்தனர்.

கையிருப்பு குறைந்து போக அடுத்து என்ன செய்வதென்று அன்பரசி யோசிக்க ஆரம்பித்தார். தந்தையும் தாயும் படும் கஷ்டங்களை பார்த்து விட்டு அம்ரிதாவின் மொத்த விளையாட்டுத் தனமும் மறைந்து போனது.

படிக்கும் வேலைகள் முடிந்து விட்டால் ஓடி வந்து அன்னைக்கு உதவ ஆரம்பித்து விடுவாள். அவளது விளையாட்டுத்தனம் சிரிப்பு கலகலப்பு எல்லாம் மறைந்ததை நினைத்து அன்பரசிக்கு வருத்தமாக இருந்தது.

பணம் குறைய ஆரம்பித்து மொத்தமாக காலியாகும் நிலை வந்துவிட்டது. இனி வீட்டின் வாடகை கொடுக்கவும் பணமில்லை என்ற நிலைமைக்கு வர அன்பரசி சரவணனிடம் சொந்த ஊருக்கு சென்று விடலாம் என்று கூறினார்.

அவர்கள் இப்போது இருப்பது ஒரு பெரு நகரத்தில். இங்கு செலவுகள் அதிகம். அவர்களது சொந்த ஊர் ஒரு கிராமம். அங்கு வீடும் சொந்தமாக இருந்தது. அம்ரிதா பிறந்த இரண்டு வருடத்தில் சரவணனின் பெற்றோர்கள் அடுத்தடுத்து இறந்து விட்டனர்.

அதன் பிறகு அந்த வீடு அப்படியே தான் இருந்தது. இவர்களுக்கு செல்ல நேரம் அமையவில்லை. அங்கு சென்று விடலாம் என்று கூற சரவணனனும் ஒப்புக் கொண்டார்.

படுத்த படுக்கையாக இருக்கும் அவரை அழைத்து செல்வது எப்படி என்று யோசிக்க அவர் வேலை செய்த நிறுவனத்திலிருந்து உதவி கிடைத்தது. அவர்கள் ஒரு டாக்சி ஏற்பாடு செய்ய அதில் வந்து சேர்ந்தனர். அதோடு அந்த நிறுவனம் சிறிது பணமும் கொடுத்து விட்டு சென்றது.

அன்பரசி அந்த வீட்டை சுத்தப்படுத்தி அருகில் இருக்கும் அரசாங்க பள்ளியில் அம்ரிதாவை சேர்த்து விட்டார்.

அம்ரிதாவும் பெற்றவர்களின் கவலையை அதிகரிக்காமல் பொறுப்புடன் நடந்து கொண்டாள்.

அன்று பள்ளி முடித்து வரும் போது சாலையோரம் இருந்த புளிய மரத்தில் சில புளியம் பழங்களை பறித்து சாப்பிட்டுக் கொண்டே வந்து கொண்டிருந்தாள் அம்ரிதா.

அப்போது யாரோ கையில் பெட்டியுடன் நடந்து வர உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

“என்ன பாப்பா.. அப்படி பார்க்குற? நான் பிள்ளை பிடிக்குறவன் இல்லமா”

“பிள்ளை பிடிக்குறவன் இப்படி வர மாட்டான். பெரிய கண்ணு.. கோணிப்பை எல்லாம் கொண்டு வருவான். உங்க கிட்ட பெட்டில இருக்கு”

“பரவாயில்ல புத்திசாலி தான்”

“ஆனா உங்கள நான் டீவில பார்த்து இருக்கேன். நீங்க இயக்குனர் செந்தில் குமார் மாதிரியே இருக்கீங்க”

“அப்படியா இருக்கேன்”

“ம்ம்…” என்று பெரிய இழுவையாக இழுத்து விட்டு “ஆனா அவருக்கு பெரிய மீசை இருந்துச்சு. நீங்க குட்டியா வச்சுருக்கீங்க..” என்றாள்.

செந்தில்குமாருக்கு சிரிப்பு வந்து விட்டது. சிரிப்பை அடக்கிக் கொண்டு “அந்த இயக்குனர் எப்படி மீசை வச்சுருந்தார்?” என்று கேட்டார்.

உடனே அவள் மூக்குக்கு கீழாக மீசை வரைந்து காட்டினாள். அவளது செயலை பார்த்தவருக்கு புன்னகை வந்தது.

“அவ்வளவு பெருசா?”

“ம்ம்.. ம்ம்”

“சரி உனக்கு அவர பிடிக்குமா?”

“ஓ.. பிடிக்குமே… அப்பா அவர பத்தி நிறைய சொல்லி இருக்காரு.”

“ஓ.. அப்பா சொன்னாரா?”

“ஆமா… சரி உங்க பேர் என்ன?”

“உனக்கு மட்டும் சொல்லுறேன். யாருக்கும் சொல்ல கூடாது. என் பேரும் செந்தில் குமார் தான்”

அம்ரிதா வாயை பிளந்தாள்.

“ஐ… அப்போ நீங்க தான் அந்த இயக்குனரா.. உங்கள என் அப்பாக்கு பிடிக்கும். வாங்க எங்க அப்பாவ பார்க்கலாம்”

“வந்துட்டா போச்சு.. அதுக்கு முன்ன உன் பேர சொல்லு”

“என் பேரு அம்ரிதா.. அம்முரு”

“ஓ.. நல்ல பேரு.. உன் அம்மா அப்பா பேரென்ன?”

அவள் ஒவ்வொரு விவரமாக சொல்லிக் கொண்டே வர அவரும் கேள்வி கேட்டுக் கொண்டே வந்தார். இருவரும் பேசிக் கொண்டே வீட்டின் அருகே வந்து விட்டனர்.

“இது தான் எங்க வீடு”

“அப்படியா? அது எங்க வீடு” என்று இரண்டு வீடு தள்ளி இருந்த வீட்டை செந்தில் காட்டினார்.

“ஐ.. நீங்க இங்க தான் இருக்கீங்களா?”

“ஆமா.. நான் போய் எங்க வீட்டுல இருக்க எல்லாரையும் பார்த்துட்டு உங்க வீட்டுக்கு வரட்டா?”

“ஓ.. நான் அப்பா கிட்ட சொல்லுறேன். நீங்க போயிட்டு வாங்க” என்று கூறி விட்டு வேகமாக வீட்டுக்குள் ஓடினாள்.

செந்தில்குமார் சிரித்துக் கொண்டே தன் வீட்டை நோக்கி சென்றார. கதவை தட்ட கல்யாணி வந்து திறந்தார்.

“பரவாயில்லையே.. ஒரே வாரத்துல அட்ரஸ் கண்டு பிடிச்சுட்டீங்க?” என்று கல்யாணி கூற செந்தில் குமார் சிரிப்போடு உள்ளே வந்தார்.

“அர்ஜுன் எங்க?”

“ரூம்ல இருக்கான்”

“எதுவும் பிரச்சனையில்லையே?”

“ம்ஹும். ஸ்கூல்ல சேர்க்கலாம்னா தான் மாட்டேன்னு அடம்பிடிக்கிறான்”

“நான் பேசி பார்க்குறேன்”

“முதல்ல முகம் கை கால கழுவிட்டு வாங்க. நான் காபி போட்டு தரேன். அப்புறம் பேசுங்க”

சொன்னபடியே காபி வந்து விட குடித்து பார்த்தார்.

“பரவாயில்லையே.. சமைக்க கத்துக்கிட்ட போல?”

“பக்கத்துல ஒருத்தவங்க வந்திருக்காங்க. அவங்க கிட்ட தான் நிறைய கேட்டு கத்துக்கிட்டேன்”

“நானும் பார்த்தேன். போன முறை வந்தப்போ இல்லையேனு. அந்த குட்டி பொண்ண பார்த்தேன். ரொம்ப துறுதுறுனு இருக்கா. நாமலும் ஒரு பொண்ண பெத்துருக்கலாம். ஒரு பிள்ளை போதும்னு நினைச்சது தப்போனு இருக்கு. அர்ஜுனுக்காச்சும் கூட ஒரு ஆளு இருந்திருக்கும்”

“இனி பேசி ஒரு பிரயோஜனமும் இல்ல. ஒரு மாசமா சொல்லிட்டேன் ஸ்கூல்ல சேர சொல்லி. அடுத்த மாசத்தோட அட்மிஷன் எல்லாம் க்ளோஸ் ஆகிடும். பேசுங்க போங்க”

செந்தில் குமாரும் அதை நினைத்துக் கொண்டே காபியை குடித்து முடித்தார்.

அர்ஜுனை அதே ஊரில் வேறு பள்ளி மாற்ற நினைத்தனர். அவன் மறுத்து விட மருத்துவரிடம் பேசினர். அவரோ சில நாட்கள் பொறுமை காக்கும் படி கூறினார்.

அதே நேரம் அர்ஜுனின் பரிட்சையும் முடிந்து விட்டது. மருத்துவர் அர்ஜுனிடம் பேசி விட்டு அவனை யாரென்றே தெரியாத ஒரு ஊருக்கு அனுப்பி வைப்பது நல்லது என்று கூறினார்.

கல்யாணி தனது நடிப்பை விட்டு விட்டார். கடைசியாக நடித்த படத்தை தவிர புதுப்படங்கள் அனைத்தையும் வேண்டாம் என்று கூறி விட்டார்.

அர்ஜுனை எங்கு அழைத்துச் செல்வது என்று யோசித்தனர். கல்யாணியின் அண்ணி பிறந்த ஊரில் ஒரு வீடு இருப்பது தெரியவந்தது. அந்த வீட்டை கேட்டதும் அவரது அண்ணன் உடனே கொடுத்து விட்டார். வீட்டை விலைக்கே வாங்கிக் கொண்டு அந்த வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

கடந்த இரண்டு மாதமாக இங்கு தான் இருக்கின்றனர். இங்கு பெரிதாக யாருக்கும் கல்யாணியை பற்றி தெரியவில்லை. அதனால் அவர்களது வாழ்வு சுலபமாக சென்றது.

ஆனால் அர்ஜுன் மட்டும் இப்போதும் பள்ளி செல்ல மாட்டேன் என்று அடம் பிடித்தான். செந்தில் குமார் படிப்பின் முக்கியத்துவத்தை எடுத்து கூற அமைதியாக கேட்டுக் கொண்டானே தவிர பதில் எதுவும் சொல்லவில்லை.

இரவு சாப்பிட்டு விட்டு அர்ஜுன் வாசலில் வந்து அமர்ந்து கொண்டான். வாசலில் சிறுவர் சிறுமியர் விளையாடிக் கொண்டிருந்தனர். யாருமே அவனை கண்டு கொள்ளவில்லை. காரணம் பார்ப்பதற்கு பெரியவனாக இருக்கும் இவன் தங்களோடு விளையாட மாட்டான் என்ற எண்ணம்.

அவர்களோடு விளையாடிய அம்ரிதா அர்ஜுனை ஒரு நிமிடம் கூட கவனிக்கவில்லை. இங்கு அவள் வந்து இரண்டு வாரங்கள் ஆகிறது. சில நட்புகள் மட்டுமே கிடைத்து இருந்தது.

அவர்களோடு விளையாடி விட்டு வீட்டுக்குள் சென்று விட்டாள். அர்ஜுன் அவர்கள் விளையாடும் போது வேடிக்கை பார்த்து விட்டு அவர்கள் முடித்ததும் உள்ளே சென்று விடுவான்.

அவர்கள் போடும் சண்டை விளையாட்டு எல்லாம் பார்ப்பதற்கு அவனுக்கு பிடித்திருந்தது. ஆனால் உடன் சேர்ந்து விளையாட தான் தயங்கினான்.

அடுத்த நாள் மீண்டும் செந்தில் குமார் பள்ளியை பற்றிப்பேச ஒப்புக் கொண்டான். அன்றே அவனுக்கு பள்ளியில் அனுமதி கிடைத்தது. ஆனால் வீட்டுக்கு வந்ததும் வேறு ஒரு குண்டை தூக்கிப் போட்டான்.

“அம்மா நல்லவங்க. எனக்காக சினிமாவ விட்டுட்டாங்க. நீங்க விட்டா நான் உங்க கிட்ட பேசுறேன். இல்லனா பேச மாட்டேன்” என்று கூறி விட்டான்.

பெற்றவர்கள் பயந்து மருத்துவரிடமே வந்து நின்றனர்.

“இந்த வயசு அப்படி தான். தான் பண்ணுறது தான் சரி. தனக்கு எல்லாம் தெரியும்னு காட்ட நினைக்கும். நாமலும் அதெல்லாம் கடந்து தானே வந்தோம். முடிஞ்ச வரை நிலைமைய உங்க மகனுக்கு புரியவைக்க பாருங்க”

மருத்துவரின் அறிவுரை கேட்டப்பின்னும் செந்தில் குமார் தவிக்க கல்யாணி தான் சமாதானம் செய்தார்.

“ஒரு நாள் அவன் உங்க கனவு இந்த சினிமா தான்னு புரிஞ்சுப்பான். அது வரை அவன நான் பார்த்துக்கிறேன். நீங்க வேலைய பாருங்க. வருத்தப்படாதீங்க ” என்று கூறி விட்டார்.

அர்ஜுனுக்கு அன்னையை அதிகமாக பிடிக்க ஆரம்பித்தது. அதே நேரம் தந்தையை பிடிக்காமல் போனது. தனக்காக சினிமாவை அன்னை விட்டு விட்டார் என்ற எண்ணம். மொத்தமாக அன்னையின் பக்கம் சாய்ந்து விட்டான்.

அடுத்த ஒரு மாதம் கடந்து இருக்க அடுத்த பிரச்சனை ஆர்ம்பித்து விட்டது.

செந்தில்குமாரின் பெயர் ஒரு நடிகையுடன் அடிபட ஆரம்பித்தது. அதை கேட்டு விட்டு அர்ஜுன் கொதித்துப்போனான். அவர்களை பார்க்க வந்த செந்தில் குமாரை வீட்டில் நடுவில் வைத்து திட்ட ஆரம்பித்து‌ விட்டான்.

செந்தில்குமாரும் ஒரு தந்தையாக இந்த விசயத்தில் எவ்வளவு விளக்கம் சொல்ல முடியுமோ சொல்லி விட்டார். அர்ஜுன காது கொடுத்து கேட்பதாக இல்லை. கத்தும் வரை கத்தி விட்டு சென்று விட்டான்.

அவனது உண்மை மனநிலை தெரிந்ததால் பெற்றோர் இருவரும் வருந்தவே செய்தனர்.

ஆனால் அந்நேரம் கையில் மீன் குழம்புடன் வந்து அர்ஜுன் சண்டை போடுவதை எல்லாம் பார்த்து விட்டுச் சென்ற அம்ரிதாவை யாரும் கவனிக்கவில்லை.

வீட்டுக்கு திரும்பிச் சென்றவள் “ம்மா.. அந்த அத்த வீட்டுல வேற யாரோ வந்துருக்காங்க. அதான் திரும்ப வந்துட்டேன்” என்று கூறினாள்.

அவளுக்கு அர்ஜுன் யாரென்றே தெரியாது. அவனை அவள் பார்த்ததே இல்லை. அவனும் தான் வீட்டை விட்டு வருவதே இல்லையே. பள்ளியிலும் கூட அவனை அம்ரிதா பார்த்தது இல்லை.

யாரோ ஒருவன் அவனது தந்தைக்கு மிகவும் பிடித்த இயக்குனரை திட்டிக் கொண்டிருக்கிறான். அதுவும் அவரை விட வயதில் சிறியவன். அவன் எப்படி அவ்வளவு பெரியவரை திட்டலாம் என்று கோபம் வந்தது.

அர்ஜுன் எப்போதும் போல் அறைக்குள் அடைந்து விடாமல் கோபத்தோடு வெளியே வந்து விட்டான்.

தெரு முடிவில் இருக்கும் மூடிய தண்ணீர் தொட்டியில் வந்து அமர்ந்து விட்டான். அவனை பார்த்து விட்டு அம்ரிதா வேகமாக வந்தாள்.

“ஓய்…”

“…”

“ஓய்.. மஞ்ச சட்ட.. உன்ன தான்” என்றதும் குனிந்து சட்டையை பார்த்தான். அது வெள்ளை நிறத்தில் இருக்க நிமிர்ந்து முறைத்தான்.

“என்ன முறைக்கிற மஞ்ச சட்ட?”

“கண்ணு தெரியலையா? இல்ல மஞ்ச காமாலையா? இது வெள்ள சட்ட”

“அப்ப உன்ன தான் கூப்பிடுறேன்னு தெரியுதுல.. உடனே பேசுனா பல்லு கொட்டிடுமா?”

‘யாருடா இவ.. இருக்க பிரச்சனையில இவ வேற’ என்று திரும்பிக் கொண்டான். வேகமாக அவன் பார்வைக்குள் வந்து நின்றாள்.

“எதுக்கு செந்தில் சார் கிட்ட சண்ட போடுற? அறிவில்லயா உனக்கு?”

“இல்ல..”

“அப்போ மூளைக்கு பதிலா களிமண்ணு வச்சுருக்கியா?”

“ப்ச்ச்.. இப்ப என்ன உனக்கு? நான் யார் கிட்ட சண்டை போட்டா உனக்கு என்ன?”

“என்னவா? அவர் எவ்வளவு பெரிய ஆளு. அவர் ஒரு இயக்குனர். படம் எல்லாம் பார்த்து இருக்கியா? அதெல்லாம் பண்ணுறதே இவர் தானாம். இவர் சொன்னா தான் ஆடுவாங்களாம் பாடுவாங்களாம். அவ்வளவு பெரிய மனுசன நீ உன் இஷ்டத்துக்கு திட்டுற?”

“அப்படி தான் திட்டுவேன். என் இஷ்டம். என்ன பண்ணுவ?”

“உன் பல்ல உடைச்சுடுவேன்”

“நான் பல்ல காட்டிட்டு உட்கார்ந்துட்டு இருப்பேனா? இவ்வளவு வக்காலத்து வாங்குறியே.. அவர் யாரு தெரியுமா? என் அப்பா.. அவர் கூட சண்டை போடுவேன் திட்டுவேன் என்ன வேணா பண்ணுவேன் . அத கேட்க நீயாரு? நல்லா முருங்கைக்காய்க்கு கை கால் முளைச்ச மாதிரி இருந்துட்டு பல்ல உடைக்கிறாளாம். ச்சீ போ”

முதலில் அப்பா என்றதும் ஆச்சரிய பட்டவள் கடைசி வாக்கியத்தில் பொங்கி விட்டாள்.

“நீ தான்டா பனை மரத்துக்கு கை கால் முளைச்ச மாதிரி இருக்க”

“எது டா வா” என்றவன் அவள் சடையை பிடித்து இழுத்தான்.

“ஆஆஆ… ” என்று அலற “அப்படியே ஓடிப்போயிடு.. கண்ணுல பட்ட கொன்னுடுவேன்” என்றான்.

வேகமாக அம்ரிதா ஓடி விட்டாள். ஆனால் போனவள் இரண்டே நிமிடத்தில் திரும்பி வந்தாள்.

“டேய்..” என்று கத்த திரும்பி பார்த்தான். அடுத்த நொடி அம்ரிதாவின் கையிலிருந்த கல் அவன் பல்லை பதம் பார்த்தது.

“ஆ.. அம்மா” என்று அவன் வாயை மூடிக் கொண்டான். உடனே அம்ரிதா ஓடி விடுவாள் என்று அவன் நினைக்க அவனருகில் பயமில்லாமல் வந்தாள்.

“இன்னொரு தடவ என் முடிய பிடிச்சு இழுத்த இல்ல செந்தில் சார திட்டுன தலையில கல்ல போட்டு உடைச்சுருவேன்” என்று கூறி விட்டு ஓடி விட்டாள்.

தொடரும்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
3
+1
1
+1
1

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  3 Comments

  1. Meenakshi Subburaman

   💞 அப்படி இருந்த அம்ருதா இப்படி ஆகிட்ட

   💞 ஆனால் எந்த வயதிலும் அவனை கொலை மிரட்டல் விடிவை மட்டும் விடவே இல்லை 😜😜😜😜

   💞👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌👌👌💐💐💐 சூப்பர் டா ஹனி

  2. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான குடும்பக் கதை. நகைச்சுவையும், அழுத்தமும் கொண்ட சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.