Loading

 

 

படப்பிடிப்பு நடந்த இடத்திலிருந்து அடி பட்டவர்கள் கிளம்பியதும் மற்றவர்களை ஒன்று கூட்டிய பாலன் விசயம் வெளியே கசியக்கூடாது என்று கறாராக கூறி விட்டான். மீறிக் கசிந்தால் படப்பிடிப்பு மொத்தமாக நின்று விடும். யாருக்கும் பணம் கிடைக்காது என்று கூறி விட்டான்.

எல்லோரும் வாயை மூடிக் கொண்டு கிளம்பினர். அதே போல் விழுந்தவன் யாரென்று யாருக்குமே தெரியாது. எவனோ ஒருவன் கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து விட்டான் என்று தான்‌ நினைத்தனர்.

திவ்யாவை அவன் காப்பாற்றிய விசயம் மேலே இருந்த சிலருக்கு மட்டும் தான் தெரியும். அவர்களுக்கும் அர்ஜுன் யாரென்று தெரியாது. அவனை தெரிந்த இருவர் திவ்யாவும் மஞ்சுளாவும் மட்டுமே.

அவ்விருவரும் சென்று விட்டதால் மற்றவர்கள் கலைந்து சென்று விட்டனர்.

அர்ஜுனை மருத்துவமனையில் அனுமதித்து பதினைந்து நிமிடங்களுக்கு பிறகே யஷ்வந்த் வந்து சேர்ந்தான். அவசர ஊர்தி எங்கும் நிற்காமல் வந்து விட்டது. அவன் நின்று வருவதற்கு தாமதமானது.

ஆனாலும் முதலிலேயே தந்தையின் மூலம் அவருக்குத் தெரிந்த உயர்தரமான மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்து விட்டான்.

கூடவே செந்தில்குமாருக்கும் விசயத்தை தெரியப்படுத்தி விட்டான். மருத்துமனை வந்ததிலிருந்து மஞ்சுளா விடாமல் அழுது கொண்டே இருந்தாள்.

இருவரில் யாருக்கு எதுவானாலும் மற்றொருவர் உயிரைக்கூட விட தயங்க மாட்டார்கள். இருவருமே திரும்ப வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டே அமர்ந்து இருந்தாள்.

அவளது பெற்றோர்களுக்கு சொல்ல வேண்டும் என்பது கூட மறந்து போனது. அவளை தொந்தரவு செய்யாமல் யஷ்வந்த் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டான்.

நேரம் ஒரு மணி நேரத்தை கடந்த பின்பும் திவ்யா கண்விழிக்கவில்லை. மருத்துவர் அவளை சோதித்து விட்டு பிரச்சனை எதுவும் இல்லை என்று கூறி விட்டார். பிறகு ஏன் கண் விழிக்கவில்லை என்று‌ புரியவில்லை.

அர்ஜுனை பற்றியோ ஒரு தகவலும் இல்லை. முழுதாக இரண்டு மணி நேரம் கடந்து விட யஷ்வந்த் மஞ்சுளாவிடம் வந்தான்.

“நீங்க அசிஸ்டன்ட் மட்டும் தானா?” என்று தன் சந்தேகத்தை கேட்க மறுப்பாக தலையசைத்தாள். அவனது சந்தேகம் ஊர்ஜூதமானது.

“உங்களுக்கு திவ்யான்ஷி ஃப்ரண்டா?”

“அர்ஜுனும் என் ஃப்ர்ண்ட் தான்”

“ஓ…” என்றவன் சில நொடிகள் எதோ யோசித்தான்.

“திவ்யான்ஷி பேமிலிக்கு இன்ஃபார்ம் பண்ணுங்களேன். நான் செந்தில் குமார் சார்க்கு சொல்லிட்டேன். அவர் வந்துட்டு இருக்காரு.”

அப்போது தான் மஞ்சுளாவிற்கு மூளை வேலை செய்ய ஆரம்பித்தது. அவள் செய்ய வேண்டியதை யஷ்வந்த் செய்து இருக்கிறான்.

“தாங்க்ஸ்.. திவ்யா ஃபேமிலி இப்போ வர முடியாது. நான் எங்க வீட்டுக்கு கால் பண்ணுறேன்” என்றவள் போனை எடுத்துக் கொண்டு சென்றாள்.

விவரம் தெரிவித்ததும் உடனே வருவதாக கூறினர். அதை கேட்டு விட்டு அவள் வர “நீங்க திவ்யான்ஷிய பார்த்துக்கோங்க. நான் எதுவும்னா இன்ஃபார்ம் பண்ணுறேன்” என்று கூறி விட்டு அர்ஜுன் இருக்கும் இடத்திற்கு சென்று விட்டான்.

மஞ்சுளா அழுது ஓய்ந்து இருந்தாள். இனி அழுக ஒன்றும் இல்லை. அந்த கடவுளுக்கு கண் இருந்தால் காக்கட்டும் என்று விட்டு விட்டாள். திவ்யாவின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.

திவ்யாவிற்கு மயக்கம் தெளிய மேலும் பத்து நிமிடம் எடுத்தது. கண்ணை திறந்து பார்த்தவள் அவசரமாக எழுந்து அமர மஞ்சுளா வேகமாக அருகில் வந்தாள்.

“மஞ்சு.. எங்க அவன்.. என்ன ஆச்சு?” என்று கேட்டுக் கொண்டே கட்டிலை விட்டு இறங்கப்போக மஞ்சுளா தடுத்தாள்.

“பொறு பொறு ஒன்னும் இல்ல. நீ மயங்கி கிடந்த. இப்போ எழுந்தா விழுந்துடுவ” என்று தடுத்தாலும் கேட்காமல் எழுந்து நிற்க முயற்சித்தாள்.

“ம்ஹும்.. எனக்கு அவன பார்க்கனும்.. இப்போவே பார்க்கனும்”

“அம்ரு.. சொன்னா கேட்க மாட்டியா?”

“மாட்டேன்.. அவனும் என் அப்பா மாதிரி என்ன விட்டுட்டு போக பார்க்குறான். மாட்டேன். முடியாது.. அப்படி அவன விட முடியாது” என்று மூச்சிரைக்க பேசிக் கொண்டே போனவளுக்கு இருமல் வந்தது.

“உட்காரு முதல்ல.. தண்ணிய குடி.. அதெல்லாம் அவனுக்கு ஒன்னுமே ஆகாது. நான் சொல்லுறேன்ல” என்று பிடித்து இழுத்து அமர வைத்தாள்.

திவ்யான்ஷிக்கு மனம் திக் திக்கென்று அடித்துக் கொண்டே இருந்தது. எதோ தவறாக நடந்து கொண்டிருப்பதாக மனம் சொல்லிக் கொண்டே இருந்தது.

“அவன் என்ன விட்டு போயிட மாட்டான்ல” என்று கேட்கும் போதே கண்ணீர் விட ஆரம்பித்து விட்டாள்.

எட்டரை வருடத்திற்கு பின் மீண்டும் ஒரு முறை அவனுக்காக கண்ணீர் வடிக்கிறாள். மஞ்சுளாவிற்கு நின்றிருந்த கண்ணீர் வரப்பார்க்க தடுத்து நிறுத்தினாள்.

“அதெல்லாம் ஒன்னும் ஆகாது. டாக்டர கூட்டிட்டு வரேன் இரு” என்று சென்றாள். மருத்துவர் வந்து பார்த்து விட்டு “ரொம்ப அழுகாதீங்க திரும்ப மயங்கிடுவீங்க” என்று அறிவுரை கூறி விட்டுச் சென்றார்.

திவ்யா அவர் சொன்னதை மதிக்கவே இல்லை. கண்ணீர் விட்டபடி அமர்ந்து இருக்க கதவு தட்டப்பட்டது. யஷ்வந்த் ஒரு நர்ஸோடு வந்திருந்தான்.

“அர்ஜுன்க்கு ஆப்ரேஷன் பண்ண சைன் கேட்குறாங்க”

“நான் பண்ணலாமா?”

“ஃபேமிலி தான் பண்ணனுமாம்”

மஞ்சுளா யோசனையோடு திவ்யாவை திரும்பி பார்த்தாள். பிறகு அவளிடம் சென்று விசயத்தை கூற “ஏன்? எதுக்கு?” என்று பதறினாள்.

“ப்ச்ச்.. கால்ல அடி பட்டுருக்கு அதுக்கு தான் ஆப்ரேஷன். சைன் பண்ணு சீக்கிரம்” என்றாள்.

திவ்யா மனைவியாக கையெழுத்திட அந்த நர்ஸ் சென்று விட்டாள். மஞ்சுளாவின் பெற்றோர் வந்து சேர்ந்தனர். திவ்யா இருக்கும் நிலையை பார்க்க பாவமாக இருந்தது. அவ்வளவு உயரத்திலிருந்து விழுந்தவன் பிழைக்க வேண்டுமே என்று வேண்டிக் கொண்டனர்.

நான்கு பேரும் நட்பாக இருப்பதை பார்த்தவர்கள். அவர்களின் நட்பின் ஆழம் பெற்றோருக்கு நன்றாக தெரியும். அதுவும் அர்ஜுனின் நிலை பற்றி மிக நன்றாக தெரியும். அவனது உயிரை காப்பாற்ற அத்தனை தெய்வங்களையும் துணைக்கு அழைத்தனர்.

நேரம் கடந்து கொண்டே இருந்தது. மருத்துவரிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வர வில்லை. அல்லது பதிலை யஷ்வந்த் வந்து அவர்களிடம் சொல்லாமல் இருக்க வேண்டும்.

மருத்துவமனையில் அனுமதித்து நான்கு மணி நேரம் கடந்து விட திவ்யா இருந்த அறைக்கு மருத்துவரோடு யஷ்வந்த் வந்து நின்றான்.

“டாக்டர்…” என்று திவ்யா வேகமாக அருகில் சென்றாள். அந்த மருத்துவருக்கு திவ்யாவை நன்றாக அடையாளம் தெரிந்தது. ஆனாலும் அதை மனதில் கொள்ளாமல் கடமையை செய்ய ஆரம்பித்தார்.

“நீங்க தான் பேஷன்ட் அர்ஜுனோட ஃபேமிலியா?”

“ஆமா.. என்ன ஆச்சு? ஒன்னும் ஆகலல?”

“ஆக்ட்சுவலி எங்க சைட்ல இருந்து நாங்க முயற்சி பண்ணிட்டு தான் இருக்கோம். அவர் பிழைக்கிறது ரொம்ப கஷ்டம்”

“நோ.. அப்படிலாம் சொல்லாதீங்க”

“உங்க கிட்ட உண்மைய சொல்லுறது என் கடமை. அவர் உயரத்தில இருந்து விழுந்துருக்கார். கையும் காலும் டோட்டல் டேமேஜ். ரெண்டயும் சீக்கிரம் வந்ததால தான் காப்பாத்த முடிஞ்சது. இல்லனா அது மொத்தமா எடுக்குற மாதிரி ஆகிருக்கும்”

மஞ்சுளாவிற்கு இதயமே நின்று விட்டது போல் இருந்தது.

“அவர் மேல பாரம் எல்லாம் விழுந்ததால நெஞ்சு பலமா அடி வாங்கிடுச்சு. ப்ரீத் பண்ண முடியாத நிலைமையில இருக்காங்க. அத சரி பண்ணிட்டு இருக்கோம். இதுல ஒரே ஒரு நல்லதுனா தலையில வெளிக்காயம் எதுவும் இல்ல. உள் காயம் இருக்கானு டாக்டர்ஸ் பார்த்துட்டு இருக்காங்க”

“டாக்டர் வேணாம். இப்படிலாம் பயமுறுத்தாதீங்க” என்று திவ்யா கதை மூடிக் கொண்டாள்.

“சாரி மேம். நான் பொய்யா நம்பிக்கை கொடுக்க விரும்பல. அண்ட் மத்த கண்டீசன் எல்லாம் அவர் கண் முழிச்சா தான் தெரியும். இப்போதைக்கு அவர கடவுள் தான் காப்பாத்தனும்”

மருத்துவர் சொன்னதை கேட்டவளுக்கு உலகமே இருண்டு விட்டது போல் தோன்றியது.

“நோ டாக்டர்.. இத நான்..‌நான் நம்ப மாட்டேன்”

திவ்யாவின் பதட்டத்தை பார்த்த மருத்துவருக்கு பாவமாக இருந்தது.

“மேம்.. நான் சொல்லுறத கேளுங்க. இப்போதைக்கு இருக்க நிலமை இதான்”

“நோ.. நோ.. நோ… இத என்னால ஏத்துக்க முடியாது.. நான் நம்ப மாட்டேன். நோ வே”

மருத்துவமனை என்பதை மறந்து அவள் கத்தி விட அருகில் இருந்த மஞ்சுளா அவளை வேகமாக பிடித்துக் கொண்டாள்.

“ப்ளீஸ்.. ப்ளீஸ்.. அமைதியா இரு” என்று மஞ்சுளா கெஞ்ச ” பாரு மஞ்சு என்ன சொல்லுறாங்கனு… இப்படி… இப்படி ஒரு முடிவு எதுக்கு எனக்கு வரனும்? நான்.. நாங்க வாழவே ஆரம்பிக்கல மஞ்சு.. அதுக்குள்ள.. அதுக்குள்ள…” என்றவளுக்கு வார்த்தை தடுமாறியது.

நிற்க முடியாமல் துவண்டு போய் மெத்தையில் அவள் அமர்ந்து விட மருத்துவருக்கு வருத்தமாக தான் இருந்தது. மஞ்சுளாவின் கண்ணிலோ கண்ணீர் தேங்கி விட்டது.

அழுது கொண்டிருக்கும் தோழியை சமாளிப்பது எப்படி என்று அவளுக்கும் புரியவில்லை. மருத்துவர் இருவரையும் பார்த்து விட்டு “மேடம்.. நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. இப்போ நான் போயிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்” என்று கூறி விட்டு மஞ்சுளாவிடம் கண்ணை காட்டி விட்டு சென்றார்.

மருத்துவர் வெளியே சென்றதும் மஞ்சுளா தோழியை ஒரு முறை பார்த்து விட்டு பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு வெளியே சென்றாள். அவளோடு யஷ்வந்த்தும் வந்து விட்டான்.

“டாக்டர்.. இதுக்கு வேற எந்த தீர்வும் இல்லையா?”

“நான் பொய் சொல்ல ஆசை படல. ஆனா நூற்றுல ஒரு வாய்ப்பா சரியாகலாம். அதெல்லாம் பேஷண்ட்டோட மன தைரியத்தை பொறுத்து தான். டாக்டரா எங்களால முடிஞ்சத நாங்க செஞ்சுட்டோம். இனி கடவுள் தான் பார்க்கனும். எதுக்கும் அவங்கள பார்த்துக்கோங்க”

மருத்துவர் கூறி முடிக்கும் முன் அறைக்குள் இருந்து திவ்யா கதறும் சத்தம் மஞ்சுளாவின் காதில் விழுந்தது. தேங்கி இருந்த கண்ணீர் கன்னங்களில் வழிந்து ஓட ஆரம்பித்தது. அதை துடைக்கவும் மனமில்லாமல் உள்ளே ஓடினாள்.

அதிகமாக அழுது கொண்டே இருப்பதும் நல்லதல்லவென்று தோன்ற மருத்துவரை அழைத்து திவ்யாவை தூங்க வைக்குமாறு கேட்டுக் கொண்டான் யஷ்வந்த். அவனது யோசனையால் திவ்யா அடுத்த ஒரு மணி நேரத்திற்கு நித்திரையில் ஆழ்ந்தாள். தோழியின் அருகில் அழுது வீங்கிய முகத்துடன் அமர்ந்து இருந்த மஞ்சுளாவிற்கு அவர்களது சிறு வயது ஞாபகம் வந்தது.

*.*.*.*.*.*.

“டாக்டர்.. என் பையனுக்கு என்ன பிரச்சனை?” என்று செந்தில் குமார் கேட்க அந்த மருத்துவர் நிமிர்ந்து பார்த்தார்.

கண்ணில் பயத்தோடும் பரிதவிப்போடும் அமர்ந்து இருப்பவர்களை பார்த்தவர் “பயப்படாதீங்க. நீங்க நினைக்கிற மாதிரி உங்க பையன் பைத்தியம் எல்லாம் ஆகல” என்றார்.

செந்தில் குமார் தன் மனைவியை பார்க்க கல்யாணி கண்ணில் தேங்கிய நீரோடு அமர்ந்து இருந்தார்.

“அப்புறம் ஏன் இப்படி இருக்கான்?”

“உங்களால தான்”

“எங்களாலயா? புரியல”

“உங்களோட வாழ்க்கை முறை தான் இதுக்கு காரணம். முக்கியமா சொல்லனும்னா உங்க மகன் கூட நீங்க இருக்க நேரம் ரொம்ப ரொம்ப குறைவு இல்லையா? அது தான் இப்படி ஆக காரணம்.

இத சொல்ல எனக்கு உரிமை இல்ல. ஆனாலும் சொல்லுறேன். உங்க பையனுக்காக நீங்க உங்க சினிமா வாழ்க்கைய விடுறது நல்லது”

“டாக்டர்.. அவனுக்கும் சினிமாக்கும் சம்பந்தமில்லையே..”

“அப்படினு நீங்க நினைக்கிறீங்க. உங்க பையன் உங்க சினிமா வாழ்வால ரொம்ப பாதிக்க பட்டுருக்கான். அவனுக்கு ஒரு ஃப்ரண்ட் கூட இல்ல. அது உங்களுக்கு தெரியுமா?”

இருவரும் ஒருவரை பார்த்துக் கொண்டனர்.

“உங்கள நான் குறை சொல்லல. காலம் மாறிட்டு இருக்கு. பெற்றோர்கள் ரெண்டு பேரும் வேலைக்கு போக வேண்டிய நிலைமை வந்துடுச்சு. அது பிள்ளைங்கள எவ்வளவு பாதிக்கும்னு யாருக்கும் புரியுறது இல்ல.

உங்க பையன் நிலைமைய எடுத்துக்கோங்க. அவன் கூட பழக வர்ரவங்க எல்லாம் அவன் சினிமா ஸ்டாரோட பையன் ஒரு டைரக்டரோட பையன்னு தான் பழக வர்ராங்க. அது அவனுக்கு பிடிக்கல. அவனுக்காக யாருமே அவன் கூட பழக தயாரா இல்லனதும் ரொம்ப கஷ்டப்பட்டு ஒதுங்கிட்டான்.

ஸ்கூல்ல எல்லா பசங்களும் ஒரே மாதிரி இருப்பாங்கனு சொல்ல முடியாது. சிலர் உங்க பையன் ஒரு ஸ்டாரோட பையன்ங்குறதுக்காகவே வெறுத்து ஒதுக்கி இருக்காங்க. இன்னும் நிறைய சண்டைகள் நடந்துருக்கு.

சின்ன பசங்க சண்டை தானனு சாதாரணமா விடுறது தான் தப்பா முடியுது. இப்போ உங்க பையனுக்கு முடிஞ்ச மாதிரி.

இவன் நடிகையோட பையன்டா அதுனால திமிரா தான் இருப்பான்னு சொல்ல சிலர். நீ என்ன அவ்வளவு பெரிய ஆளானு கேட்டு அவன கொடும படுத்த அடிக்க சிலர். காசு கொடுக்குறோம் இந்த நடிகை போட்டோ ஆட்டோகிராஃப் வாங்கிக் கொடுனு கேட்க சிலர்.

இப்படி சொல்லிட்டே போகலாம். யாருமே அவனுக்காக அவன எதுவும் பண்ணல. உங்களால நடந்தது தான் எல்லாம். கோபம் அதிகமா வரவும் உங்க கிட்டயே சண்டை போட்டுட்டான். ஸ்கூல்ல பைத்தியகாரன் மாதிரி கத்திட்டான். அவனோட உணர்வுகள கேட்க வேண்டிய நீங்க பக்கத்துல இல்ல.

அவனோட கஷ்டங்கள காது கொடுத்து கேட்க நண்பர்களும் இல்ல பெத்தவங்களும் இல்ல. அதான் அவனோட பிரச்சனை. இனி அவன என்ன பண்ணலாம்னு நீங்க தான் முடிவு பண்ணனும்”

மருத்துவர் கூறி விட்டு அமைதியாக கல்யாணிக்கு கண்ணீர் வந்து விட்டது. கண்ணைத்துடைத்துக் கொண்டு அவர் குனிந்து கொள்ள செந்தில்குமாருக்கும் மனம் பாராமாக இருந்தது.

மகன் இவ்வளவு அனுபவிப்பது தெரியாமல் தாங்களது வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். இருவரும் காலையில் ஆளுக்கொரு வேலையில் சென்று விடுவர். அர்ஜுன் வேலை செய்பவர்களால் பள்ளிக்கு அனுப்பப்படுவான்.

கல்யாணி இரவு வீட்டிற்கு வந்து விடுவார். செந்தில்குமாருக்கோ வெளியிடங்களில் படப்பிடிப்பு என்று பல நாள் வீட்டுக்கே வர மாட்டார். கல்யாணி வந்து அர்ஜுன் சொல்வதை பாதி கேட்டும் கேட்காமலும் தூங்கி விடுவார்.

சில நாட்களில் அர்ஜுன் தானாக பேசுவதை நிறுத்தி விட்டதை கூட அவர்கள் உணரவில்லை. அவனது படிப்பு ஒழுங்காக இருந்ததால் இருவரும் மற்ற எதையுமே கவனிக்கவில்லை.

இரவு தன்னோடு தூங்க பிரியப்படும் மகன் திடீரென அன்னை வருவதற்கு முன்பே தூங்கிப்போன போதும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. அவனது எந்த கஷ்டமுமே இருவருக்கும் தெரியவில்லை.

வருடாவருடம் அவனது பிறந்தநாளுக்கு இருவரும் எங்கிருந்தாலும் வந்துவிடுவார்கள். அப்படி இம்முறையும் வந்து அவனுக்கு பிடித்த ஒன்றை பரிசுப்பொருளாக கொடுக்க வாங்கி பிரித்து பார்த்தவன் அந்த இடத்திலேயே தூக்கி எறிந்து விட்டு சென்று விட்டான்.

இருவரும் எவ்வளவு பேசியும் அர்ஜுன் வாயை திறக்கவில்லை. ஏன் மிரட்டி பார்த்தும் கூட அவன் வாயை திறக்கவில்லை. பிறந்தநாளன்றோ அறையை பூட்டிக் கொண்டு இரவு வரை வெளியே வர மறுத்து விட்டான்.

பெற்றோருக்கு அப்போது தான் அபாயமணி அடித்தது. அவனுக்கு நண்பர்கள் இருந்தால் கேட்டு பார்க்கலாம் என்க அப்படி யாரையுமே இருவருக்கும் தெரியவில்லை.

கல்யாணி மட்டும் தன்னிடம் அடிக்கடி சொல்லிய சில நண்பர்களை ஞாபகப்படுத்தி அவர்களிடம் பேசினார்.

எல்லோரும் சொன்ன பதில் அர்ஜுன் என்னிடம் பேசி பல மாதங்களாகிறது. அதற்கு மேல் எதுவும் தெரியாது என்பதே.

பள்ளியில் எதுவும் பிரச்சனையா என்று விசாரிக்கச் சென்றனர். அவர்களோ மேலும் பயமுறுத்தினர். யாரிடமும் பேசுவது இல்லை. யாரையும் கவனிப்பதும் இல்லை. திடீரென கத்தி விடுகிறான். அவனை சுற்றி கூட்டம் இருப்பது அவனுக்கு பிடிக்கவில்லை. தனியாக அமர்ந்து கொள்கிறான். எதாவது மருத்துவரை பாருங்கள் என்று கூறினர்.

மொத்தமாக பயந்து போய் தான் குழந்தை மனநல மருத்துவரிடம் வந்து சேர்ந்தனர். பரிசோதித்து விட்டு அவர் சொன்ன பதில் இருவரையும் குற்ற உணர்ச்சியில் தள்ளி விட்டது.

அர்ஜுன் வந்ததும் அந்த பேச்சை அப்படியே விட்டு விட்டு வீட்டுக்கு வந்து விட்டனர். வீட்டுக்கு வந்ததும் அர்ஜுனிடம் பேச முயற்சிக்க இருவரையும் நிமிர்ந்து பார்த்தவன் கண்ணில் யார் நீ? என்ற கேள்வி தான் இருந்தது.

இருவரையும் யாரோ போல் பார்த்து விட்டு சென்று விட்டான். அவர்களால் அவன் அனுபவித்த, அனுபவித்துக் கொண்டிருக்கிற வலி அத்தனை பெரியது.

இருவரால் அவனது குழந்தை பருவமே பறி போனது. பதிமூன்று வயதிலிருந்தே என்னன்னவோ கேள்விப்பட ஆரம்பித்தான். எதெதோ நடக்க ஆரம்பித்தது அவன் வாழ்வில். ஆனால் அத்தனையும் அவனது பெற்றோரை சுற்றி நடப்பதே.

இருவரையும் வெறுக்கும் நிலைக்கு வந்து விட்டான். இன்னும் கொஞ்ச நாள் கவனிக்கவில்லை என்றால் எங்காவது ஓடியிருப்பான். அவ்வளவு வெறுப்பு வந்து விட்டது.

கல்யாணி உடனே மகனின் பள்ளியை மாற்றிவிட முடிவு செய்தார். ஒன்பதாம் வகுப்பை வேறு பள்ளியில் படிக்க வைத்தால் சற்று மனம் மாறலாம் என்று முடிவு செய்தனர்.

மருத்துவரும் அதற்கு சம்மதம் சொல்ல அர்ஜுனிடம் கூறினர்.

“அங்க போயிட்டா? அங்க மட்டும் எல்லாமே சரியா நடக்குமா? அங்க இருக்கவங்களும் உங்கம்மா இந்த ஹீரோ கூட நடிக்கிறாங்களே ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறாங்களாமேனு கேட்பாங்க. நீ அம்மா இல்லாம அனாதை ஆகிடுவியா இல்ல நீயும் உன் அம்மா கூடவே போயிடுவியானு கேட்கும் போது என்ன சொல்லனும்?”

இப்படி ஒன்றை இருவருமே எதிர் பார்க்காததினால் பதில் சொல்ல முடியாமல் ஸ்தம்பித்து விட்டனர்.

“இந்த ஹீரோவ பார்த்து இருக்கியா? எனக்கு ஆட்டோகிராப் வாங்கிக் கொடு நான் உனக்கு ஹோம் வொர்க் பண்ணி தரேன்னு சொல்லுவாங்க. அப்ப என்ன பண்ணுறது? எதுவும் மாறாது. இங்க நடக்குறது தான் அங்கயும் நடக்கும். உங்களுக்கு நான் பிள்ளையே இல்லனு சொல்லிடுங்க. அப்புறம் எல்லாம் சரியாகிடும்” என்று கூறி விட்டு சென்றான்.

கல்யாணி அதே இடத்தில் அமர்ந்து அழுக ஆரம்பித்து விட செந்தில்குமார் இயலாமையுடன் நின்று விட்டார்.

தொடரும்.

(அர்ஜுன் அங்க பொழப்பானா மாட்டானானு திவ்யா அழட்டும். நாம போய் முன்னாடி நடந்தத பார்த்துட்டு வந்துடலாம். )

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
2
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  3 Comments

  1. 💞அங்க அவன் சாக பிழைக்க கிடக்குறான் உனக்கு இப்போ தான் ஃபிளாஷ் பேக் வேணுமா 👊👊👊👊👊👊😜😜

   💞 ஓ இதுங்க காதலர்கள் இல்லையா கணவன் மனைவி யா அதான் பயபுள்ளை திவ்யா பக்கத்தில் வரும் போது எல்லாம் அலறி அடித்து கொண்டு ஓடுறானா 😜😜😜😜

   💞 திவ்யா உனக்கு உன் அப்பா மாதிரி அவனை இழக்க கூடாதுன்னு நினைப்பு

   💞 அவனுக்கு அவன் உலகமா நினைக்கும் உனக்கு ஏதும் ஆகிடக்கூடாதுன்னு நினைப்பு அவனுக்கு

   💞அவன் இல்லாமல் நீ இல்லைன்னு அவனுக்கு தெரியாதா என்ன

   💞உன் கூட சண்டை போட்டு வாழ்வே அவன் உயிர் பிழைத்து வருவான்

   💞👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌💐💐💐💐 சூப்பர் டா ஹனி

  2. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.