மாலையில் திவ்யா பழச்சாறை உறிஞ்சிக் கொண்டிருக்க அர்ஜுன் செந்தில்குமாரின் முன்னால் நின்று இருந்தான்.
அவர் வந்ததிலிருந்து அர்ஜுனை வருத்தெடுத்து விட்டார். முதல் திட்டு அவன் நிச்சயத்தை பற்றி வெளியே சொன்னதற்கு விழுந்தது. அடுத்தது அவனே வேண்டாம் என்று முடித்து விட்டுச் சென்ற விசயத்தை திரும்ப பேசுவதற்கு.
முதலும் கடைசியுமாக அவர்களது நிச்சயம் நடந்ததற்கான அறிகுறியே இல்லாத போது புதிதாக ஒரு பிரச்சனையை கிளப்பி இருப்பதற்கு. திவ்யாவை பாலனோடு சேர்த்து பேசுவது போதாது என்று அவர்களது காதலையும் கொச்சைப்படுத்த தயங்க மாட்டார்கள் மக்கள்.
இந்நேரத்தில் வெளியே விட்டு அவளது சினிமா வாழ்வை மூடி வைத்தால் கூட பரவாயில்லை. உங்களது நல்ல உறவையும் அசிங்க படுத்த வேண்டுமா என்று கேட்டு திட்டிக் கொண்டே இருந்தார்.
இதற்கு தான் அவர் ஊரில் இல்லாத நேரமாக பார்த்து அவன் விசயத்தை கசிய விட்டான். ஆனால் இப்படி வந்து நிற்பார் என்று எதிர் பார்க்கவில்லை.
மஞ்சுளா விசயத்தை கேள்விபட்டதுமே செந்தில்குமாரை தான் தொடர்பு கொள்வாள் என்று அவன் கணிக்கவில்லை.
மொத்தமாக திட்டி ஓய்ந்தவர் “இனி ஒரு தடவ இப்படி நடந்துச்சுனா நான் உன் வேலையில தலையிட வேண்டி வரும்” என்று மிரட்டி விட்டுச் சென்றார்.
“ஹா…” என்று பழச்சாறை முழுவதுமாக குடித்து விட்டு டம்ளரை வைத்தாள் திவ்யான்ஷி.
“சூப்பர் ஸ்வீட்.. ரொம்ப நாளுக்கு அப்புறம் ஜுஸ்ல சர்க்கரை போட்டு குடிக்கிறேன்” என்று சப்புக் கொட்டினாள்.
அர்ஜுன் அவளை முறைத்துக் கொண்டு நின்று இருக்க எழுந்து அவனருகில் வந்தாள்.
“என்னப்பா… உங்கப்பா எதோ சொல்லிட்டு இருந்தார் போல.. என்ன மேட்டரு?” என்று நக்கலாக கேட்க “கொழுப்புடி… அப்பா எப்படி இப்போ வந்தாரு?” என்று கேட்டான்.
“அவர் ஒரு வாரத்துக்கு ஊர விட்டு போயிருக்கார்னு தெரிஞ்சு தான இந்த வேலை பார்த்த? ஹாஹா.. ஒரே நாள்ல வந்து நின்னாரு பார்த்தியா” என்று சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.
“எப்படி வந்தாருனு கேட்டேன்”
“மஞ்சு நம்ம மேனேஜர்க்கு இன்ஃபார்ம் பண்ணிருக்கா.. நாம சண்டை போடும் போது மாமா கிளம்பி வர்ரதா மெஸஜ் வந்துடுச்சு. அத அவ சொல்லவும் தான் நிம்மதியா வேலைய பார்க்க போனேன்”
“மஞ்சு…”
“அவள திட்டி நோ யூஸ். மாமா போட்ட ரூல்ஸ்ல இதுவும் ஒன்னு. எந்த பிரச்சனையா இருந்தாலும் அவர் காதுக்கு உடனே வரனும். அவர் எங்க இருந்தாலும் முதல்ல அந்த பிரச்சனை எங்க மூலமா தான் அவருக்கு தெரியனும்னு சொல்லிட்டார். சோ நாங்களும் இத்தனை வருசமா எது நடந்தாலும் அவர் கிட்ட சொல்லிடுவோம். அவர ரீச் பண்ண முடியலனா மேனேஜர் கிட்ட சொல்லிடுவோம்.”
அர்ஜுன் முறைத்து விட்டுச் செல்ல “வெயிட்.. ” என்று நிறுத்தினாள்.
“என்ன?”
“தாங்க்ஸ்”
அர்ஜுன் புரியாமல் பார்க்க மேலும் அருகில் வந்தாள்.
“தள்ளி நில்லு”
“முடியாது”
“இம்சை.. என்னனு சொல்லித்தொலை”
“நீ ரிங் தூக்கிப்போட்டப்புறம் நீ எனக்கு தான் சொந்தம்னு சொல்லிக்க என் கிட்ட எந்த ஆதாரமும் இல்ல. பட் இப்போ கிடச்சுருச்சு. அதுக்கு தாங்க்ஸ்” என்று சொல்லி விட்டு விலகிச் சென்றாள்.
முதலில் புரியாமல் யோசித்தவன் புரிந்ததும் வேகமாக திரும்பி பார்த்தான். திவ்யா மாடிக்கு சென்று விட இரண்டு இரண்டு படிகளாக தாவி ஓடினான்.
அறைக்குள் அவளோடு நுழைந்தவனை புரியாமல் பார்த்தாள்.
“என்ன?”
“நீ என்ன சொன்ன? ஆதாரமா? அந்த ஆதாரம் இல்லனா? இல்லனா என்ன?”
அவன் கேள்வி கேட்டதும் திவ்யா வேகமாக திரும்பிக் கொண்டாள்.
“இல்லனா ஒன்னும் இல்ல” என்று சமாளிக்கப்பார்க்க தன் பக்கம் பிடித்து திருப்பினான்.
“இங்க பார்த்து பேசு… நான் ரிங் வேணாம்னு தூக்கி போட்டுட்டு போயிட்டேன். ஏன் போட்டேன்னு உனக்கு எப்பவோ ரீசன் சொல்லிட்டேன். பட் நீ மறுபடியும் அத பத்தி பேசுற.. தாங்க்ஸ் சொல்லுற.. தெளிவா பேசு இப்போ”
“முடியாது…”
“அம்மு அடி வாங்குவ.. சொல்ல வந்தத முழுசா சொல்லு”
“முடிஞ்சா அடிச்சு பாரேன்”
“நான் ஏன்டி உன்ன அடிக்க போறேன். உன் கிட்ட நான் வாங்கினது போதாதா?”
“ஞாபகம் வச்சுருக்க போல”
“மறப்பனா.. அவ்வளவு ஸ்ட்ராங் அடி அது.”
“அப்படியே இருக்கட்டும்”
“பேச்ச மாத்தாத.. ஏன் தாங்க்ஸ்னு சொல்லு”
“சரி ரொம்ப கெஞ்சுற.. சொல்லுறேன். எனக்கு அந்த ரிங் தொலைஞ்சதும் உன்னயே மொத்தமா தொலைச்சுட்ட மாதிரி ஆகிடுச்சு. உடனே தேடி பிடிச்சு எடுத்து பத்தரமா வச்சுட்டேன். ஆனாலும் நமக்கு இடையில இருந்த உறவு முறிஞ்சு போச்சேனு இருந்துச்சு. அதுக்கு ஒரு அடையாளம் கூட இல்லையேனு சோகம். இப்போ ஊரறிய நீ என் ஃபியான்ஷி ஆகிட்ட.. அதுக்கு தான் நன்றி.. பட் நீ பண்ணது தப்பு தான். அதுக்கு மாமா திட்டிட்டாரு. எனக்கு பிடிச்சதுக்கு தாங்க்ஸ் சொல்லிட்டேன்”
“அந்த ரிங்ஸ் வச்சுருக்கியா?”
“இருக்கே..”
“எங்க?”
“ஏன்? திரும்ப காணாம போற அளவுக்கு தூக்கிப்போடவா”
“அதுக்கு தான் நான் ரீசன் சொல்லிட்டேன்ல?”
“பட் நான் அத தர மாட்டேன்”
“ஏன்?”
“ஏன்னா… எனக்கு தோனல.. தோனும் போது தரேன். இப்போ போ.. போய் உன் அப்பா திட்டுனத நினைச்சு அழு” என்று வெளியே தள்ளி கதவை அடைத்து விட்டாள்.
“ஏய்…” என்று அர்ஜுன் கதவை தட்ட “போடானு சொன்னேன்” என்று உள்ளே இருந்து கத்தினாள்.
அர்ஜுன் ஒரு புன்னகையுடன் சென்று விட்டான்.
*.*.*.*.*.*.
அபிமன்யுவிற்கு கடுப்பாக இருந்தது. தன்னுடைய வேலை ஒரு பக்கம் சொதப்பி வைக்கிறது என்றால் திவ்யாவை பார்க்கவே முடியவில்லை.
கஷ்டப்பட்டு தந்தையிடம் அனுமதி பெற்று திவ்யான்ஷி நடிக்கும் அடுத்த படத்திற்கு தயாரிப்பாளரானான். அதாவது தயாரிப்பு நிறுவனத்தில் பங்குதாரர் ஆனான்.
அந்த நிறுவனத்தில் அவன் இணைந்ததற்கான முதல் காரணம் திவ்யாவை தினமும் சந்திக்கலாம் என்பதே. ஆனால் அதை இன்ப அதிர்ச்சியாக அவளுக்கு தெரிய படுத்த நினைத்தவன் படப்பிடிப்பு ஆரம்பித்ததும் அவள் முன்னால் சென்று நிற்கவில்லை.
அதற்கு பதிலாக இன்று ஒரு பார்ட்டியை ஏற்பாடு செய்திருந்தான். ஆனால் திவ்யான்ஷி வரவில்லை. கடுப்போடு அவன் அமர்ந்து இருக்க அவனது நண்பன் வந்தான்.
“டென்சன் ஆகாதடா.. வேற எதாவது வேலை இருந்திருக்கும்”
“போறியா? கடுப்பேத்திட்டு”
“இப்ப ஏன் என் மேல எரிஞ்சு விழுற?”
“காலையில இருந்து ஒரு டாபிக் ஓடிட்டு இருக்கு. தெரியுமா தெரியாதா?”
“தெரியும் தெரியும். செந்தில் சார் பையனுக்கும் திவ்யாக்கும் என்கேஜ்மெண்ட் ஆகிடுச்சுனு சொல்லிட்டு இருக்காங்க”
“இத கேட்டுட்டு சும்மா இருக்க சொல்லுறியா?”
“ப்ச்ச்.. இதுக்கு முன்னாடி திவ்யாவுக்கு பல லவ்வர் இருக்கதா ரூமர் வந்துச்சு. அது போல இதுவும் ஒன்னா இருக்கும். இதெல்லாம் போய் மைண்ட்ல ஏத்திக்காத.. நீ உன் லவ்ல ஸ்ட்ராங்கா இரு. நாளையில இருந்து சூட்டிங் வா. அங்க வச்சு மீட் பண்ணு சரியா?”
“ம்ம்.. திவ்யாக்கு என்ன பிடிக்கலனா?”
“அதெப்புடி பிடிக்காம போகும்? உனக்கு அழகு இல்லையா? திறமை இல்லையா? அதெல்லாம் பிடிக்கும். நீ பேச ட்ரை பண்ணு”
“ம்ம்.. “
“சரி வா தனியா உட்காராத.. எல்லாரும் எதாவது பேச ஆரம்பிச்சுடுவாங்க”
தன் நண்பன் இழுத்த இழுப்புக்கு சென்று விட்டான் அபிமன்யு.
ஆனாலும் அவனால் அந்த விழாவில் முழுமனதோடு பங்கெடுக்க முடியவில்லை.
திவ்யாவை பற்றி பலவாறு பேசுபவர்களை பார்க்கும் போது கோபம் வரும். அதே கோபம் இன்றும் வந்தது. இன்று வந்த செய்தியை உண்மை என்று நம்ப அவன் தயாராக இல்லை. இதுவும் ஒரு வதந்தி என்றே நினைத்தான்.
ஆனாலும் கோபம் அதிகமாக வந்தது. சீக்கிரமே திவ்யாவை மணம் முடித்து இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு முதலில் அவன் அவளது மனதில் நுழைய வேண்டும்.
நாளையிலிருந்து அவளை பார்க்க படப்பிடிப்பு தளத்திற்கு செல்ல முடிவு செய்தான்.
*.*.*.*.*.*.
அடுத்த நாள் திவ்யா வேலைக்கு கிளம்பி வர அதே நேரம் அர்ஜுனும் வந்து சேர்ந்தான்.
அதிசயமாக இருவரும் சண்டை போட்டுக் கொள்ளவில்லை. அமைதியாக அமர்ந்து சாப்பிட மஞ்சுளா இருவரையும் மாறி மாறி பார்த்தாள்.
“என்ன லுக்கு?” – திவ்யா.
“இல்ல.. கனவு எதுவும் காணுறனா? அமைதியா இருக்கீங்க ரெண்டு பேரும்?”
“நாங்க அடிச்சுக்குறத பார்க்க உனக்கு அவ்வளவு ஆர்வம்?”
“எனக்கா?”
“ஆமா உனக்கு தான்” – அர்ஜுன்
“அடப்பாவிங்களா.. கடைசில என் மேல பழிய போடுறீங்க”
“பேசாம சாப்பிடு.. இன்னைக்கு நிறைய வேலை இருக்கு”
“ஆமா.. பேசாம சாப்பிடு” – அர்ஜுன்
“நேரம்டா.. பண்ணுங்க பண்ணுங்க.. இப்படியே மெயிண்ட்டைன் பண்ணுங்க”
மஞ்சுளா முறைத்துவிட்டு சாப்பிட்டு முடித்தாள். திவ்யாவும் வர இருவரும் கிளம்பிச் சென்று விட்டனர்.
நேராக தந்தையிடம் சென்ற அர்ஜுன் “நீங்க எப்போ ஃப்ரியா இருப்பீங்க?” என்று கேட்டான்.
“ஏன் பா?”
“சொல்லுங்க”
“நாளைக்கு ஒரு வேலையும் இல்ல”
“அப்போ நாளைக்கு உங்க கிட்ட பேசனும். இப்போ கிளம்புறேன்” என்று கூறி விட்டு சென்று விட்டான்.
அவன் போன பாதையை பார்த்தவர் கடைசியாக அர்ஜுன் எப்போது தன்னிடம் சரியாக பேசினான் என்று யோசித்து பார்த்தார். ஞாபகமே இல்லை.
தன் மனைவியின் படத்தை பார்த்தவர் “நம்ம பிள்ள என்ன மன்னிக்கவே மாட்டானா?” என்று கேட்டார்.
அதில் இருந்த அர்ஜுனின் அன்னையோ எதுவும் பேசாமல் புன்னகை முகமாக பார்த்து வைத்தார். வழக்கம் போல் அந்த புன்னகையை மட்டுமே தனக்கு பதிலாக எடுத்துக் கொண்டு அமைதியாகி விட்டார்.
*.*.*.*.
படப்பிடிப்புக்காக ஒரு கல்லூரி செல்ல வேண்டியிருந்தது. திவ்யா ஒரு கல்லூரி மாணவியாக அந்த படத்தில் நடித்து இருந்தாள். ஆனால் அந்த கதையில் திவ்யான்ஷி வில்லி.
பள்ளியிலிருந்து பழகி வரும் நாயகனின் மீது திடீரென காதல் வந்து விடுகிறது. அவனிடம் காதலைச் சொல்ல தயங்கிக் கொண்டிருக்கும் போது இருவருக்கும் புதிதாக ஒரு நட்பு கிடைக்கிறது.
திவ்யா நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் மேகா. அந்த மேகா ஒரு பெண்ணை ஆபத்திலிருந்து காப்பாற்ற அவளே நாயகனுக்கும் தோழியாகிறாள்.
புது தோழியிடம் மேகா தன் காதலை சொல்லிவிட அதை அவளும் மனமார வாழ்த்துகிறாள்.
இது வரை மட்டுமே கதையின் படப்பிடிப்பு சென்று இருந்தது. அடுத்த காட்சியாக மேகாவுக்கு தெரியாமல் அந்த பெண்ணும் நாயகனை காதலிக்க ஆரம்பிப்பது.
அந்த காட்சிகளை நடிக்கும் போது அதிகமாக திவ்யான்ஷி தேவை படவில்லை. சில காட்சிகளை மட்டும் நடித்து முடித்து விட்டு மற்றவர்கள் நடிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது தயாரிப்பாளன் என்று அபிமன்யு வந்து நின்றான். அவனை பாலன் அறிமுகப்படுத்தும் போது திவ்யாவினால் ஆச்சரியபடாமல் இருக்க முடியவில்லை. அவனிடம் சகஜமாக பேச வேண்டிய நிலை.
மனதை மறைத்துக் கொண்டு அவன் பேச்சிற்கு பதில் சொல்ல ஆரம்பித்தாள். அவனுக்கோ உள்ளம் வானத்தில் பறப்பது போன்று இருந்தது.
அன்று திவ்யான்ஷிக்கு நிறைய வேலை இல்லாதது வேறு அவனுக்கு வசதியாகிவிட்டது. மேலும் மேலும் பேச்சு கொடுத்துக் கொண்டே இருந்தான்.
சொந்த விசயங்களை அவன் பேசி இருந்தால் திவ்யா தவிர்த்து இருப்பாள். அவன் பேசியது எல்லாமே இந்த படத்தை பற்றி. அதனால் தவிர்க்க முடியாமல் பட்டும் படாமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.
மஞ்சுளா அத்தனையும் கவனித்துக் கொண்டு மௌனமாகவே இருந்தாள். ஒரு வழியாக திவ்யா நடிக்க வேண்டிய கடைசி காட்சி முடிய கிளம்பி விட்டாள்.
காரில் ஏறியதும் மஞ்சுளா யோசனையுடன் அமர்ந்து விட திவ்யா என்னவென்று விசாரித்தாள்.
“சில நாளா இந்த அபிமன்யு நாம போற இடத்துக்கு எல்லாம் வர்ரானே”
“அவன் ப்ரடியூஸர் ஆளுனு தெரிஞ்சப்புறம் வேற என்ன செய்ய சொல்லுற?”
“அந்த கேமரா விசயமே க்ளியர் ஆகல. அதோட இதெல்லாம்… சம்திங் ராங்”
“மாமா கிட்ட தான் சொல்லனும்”
“சொல்லிட்டேன்.”
“எப்போ?”
“அவன் உன் கிட்ட உட்கார்ந்து பேச ஆரம்பிக்கும் போதே”
“தீயா வேலை செய்யுறடி”
“எனக்கு இது தப்பா தான் படுது. சொல்லிட்டேன். பார்க்கலாம். அவர் சைட்ல இருந்து வர்ர செய்தி எப்படினு”
மஞ்சுளாவிற்கு மனம் எதோ உறுத்தினாலும் கடைசியில் அபிமன்யு ஒரு ரசிகன் என்ற முடிவே கிடைத்தது.
வெறும் ரசிகன் இப்படி எல்லாம் செய்வானா என்ற யோசனை அவளுக்கு வராமல் இல்லை. ஆனால் அர்ஜுனும் ரசிகன் என்று தானே கூறினான்.
அபிமன்யுவிடமிருந்து திவ்யாவை பிரித்து வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். ஆனால் அதற்கு அபிமன்யு ஒத்துழைக்க வேண்டுமே?
தினமும் சரியாக திவ்யாவின் காட்சி முடிந்து ஓய்வெடுக்கும் நேரம் தோன்றி விடுவான். எப்படி தான் அவனுக்கு விசயம் போகிறது அவனும் சரியாக எப்படி வருகிறான் என்றே மஞ்சுளாவிற்கு புரியவில்லை. திவ்யாவிற்கு இதையெல்லாம் யோசிக்க நேரமே இல்லை.
தன்னுடைய வேலையை பற்றி மட்டுமே அவள் சிந்தித்துக் கொண்டிருந்தாள். அதே நேரம் அர்ஜுனும் அவளோடு அதிகம் பேசவில்லை. அவனது வேலைகள் தலைக்கு மேல் இருந்தது.
எப்போது போகிறான் வருகிறான் என்றே யாருக்கும் தெரியவில்லை. அதிசயத்திலும் அதிசயமாக அர்ஜுன் செந்தில்குமாரிடம் சாதாரணமாக பேசுவது போல் திவ்யா இரண்டு முறை பார்த்து விட்டாள். அதை உண்மை என்றே அவளால் நம்ப முடியவில்லை.
திடீரென எதற்கு இந்த மாற்றம் என்று அவள் யோசிக்க அடுத்த இன்ப அதிர்ச்சியாக வேறு ஒன்றை ஆரம்பித்து வைத்தான்.
தொடரும்.