Loading

நாள் 1

தவிப்பு

தியாகமாவதும்

அன்பு

தொல்லையாவதும்

காலத்தின் கெடுபிடியால்

மட்டுமே…

குக்கர் விசில் சத்தத்தோடு சமையலறையில் அவ்வீட்டின் மூத்த பெண்மணியான அமராவதி அல்லோலகல்லோலப்பட்டுக்கொண்டிருக்க மறுபுறம் அவ்வீட்டின் அனைத்து அறைகளையும் தட்டி கடவுள் உட்பட அனைவரையும் துயிலெழுப்பிக்கொண்டிருந்தார் மாலதி.

காலை நேர பரபரப்பில் அவ்வீடே என்றும் போல் பரபரப்பாக இயங்க‌ அவ்வீட்டின் ஒரு அறைக்கதவு மட்டுமே அவ்வீட்டின் பரப்பரப்பிற்கு மாறாக அமைதியாக இறுக மூடப்பட்டிருந்தது.

ஆனால் அது எதனையும் யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. 

“வினு இன்னும் எவ்வளவு நேரம் தூங்குவ? காலேஜிற்கு சீக்கிரம் போகனும்னு சொன்னல்ல?”என்று அவர் லேசாக மூடியிருந்த கதவை திறந்தபடி சத்தம்போட வினு என்று அழைக்கப்படும் வினயாஸ்ரீ போர்த்தியிருந்த போர்வையை மேலும் தூக்கி போர்த்திக்கொண்டு மறுபுறம் திரும்பி படுத்துக்கொண்டாள்.

“உனக்கு தெனமும் இதே வேலையாப்போச்சே. இப்போ எழுந்திருக்கலனா நான் திரும்ப வந்து எழுப்பமாட்டேன்”என்று மாலதி மிரட்ட

“பரவாயில்ல போ. நான் இன்னைக்கு காலேஜிற்கு லீவு “என்று வினயாஸ்ரீ தன் தூக்கத்தை தொடர்வதிலேயே மும்முரமாக இருக்க

“ஆங் போடுவ போடுவ. இன்னும் கொஞ்ச நேரத்துல என்ன நடக்கும்னு நானும் பார்க்கத்தானே போறேன். இன்னைக்கு அவ சீக்கிரம் ஆபிஸ் போறதா சொன்னா. நீ தூங்கு ராஜாத்தி.” என்று நக்கலாய் சிரித்தபடியே மாலதி அறையை விட்டு வெளியேற முயல படக்கென்று எழுந்து அமர்ந்தாள் வினயாஸ்ரீ.

“ஏது ஆபிஸிற்கு சீக்கிரம் போறாங்களா? இத முன்னாடியே சொல்ல மாட்டியா தாய்குலமே. திறந்து சீசே திறந்திடுச்சோ தெரியலயே.” என்று புலம்பியபடியே துள்ளிக்குதித்து எழுந்து அவ்வறையினுள்ளேயிருந்த பாத்ரூமிற்குள் புகுந்து கொண்டாள் வினயாஸ்ரீ.

உள்ளே போனதும் தான் ஒட்டிப்பிறக்காத தன் மற்றைய பிறப்பை பற்றி நினைவு வர படாரென்று கதவை திறந்தவள்

“அம்மா மஹதிகிட்டயும் இதையே சொல்லி எழுப்பி விட்டுருங்க.” என்றவள் மீண்டும் பாத்ரூம் கதவை மூடிக்கொண்டாள்.

அந்த அறையிலிருந்து வெளியே வந்த மாலதி இன்னொரு அறையின் வாசலில் நின்றபடியே

“அக்கா ஜாகிங் கிளம்பியாச்சு” என்று மட்டும் கூற அந்த அறையில் ஏதோ உருளும் சத்தம் கேட்ட மாலதியோ வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு மற்ற வேலைகளை கவனிக்கச்சென்றார்.

வெளி வேலைகளை முடித்துவிட்டு மாலதி உள்ளே வருவதற்கும் வீட்டின் சிறுசுகள் அனைத்தும் தயாராகி காலை உணவிற்கு ஒன்று கூடுவதற்கும் சரியாக இருந்தது.

அமராவதி மற்றும் அறங்கநாதனுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். மூத்தவள் சமுத்ரா. இளையவள் மஹதி. அறங்கநாதன் பெண்கள் இருவரும் சிறியதாக இருக்கும் போதே மாரடைப்பில் தவறிட அமராவதியே குடும்ப பொறுப்பை தனியே கவனிக்கும் நிலைக்கு ஆளானார். கணவனை இழந்து குழந்தையோடு தனித்து நின்ற அறங்கநாதனின் உடன்பிறப்பான மாலதியும் போக்கிடமின்றி தன் அண்ணன் வீட்டிலே தஞ்சம் புக மூலதாரத்திற்கான கேள்வி அதிகரித்தது.

இரு பெண்களும் தம்மால் முடிந்த தொழில் அனைத்தையும் செய்து தம் மூன்று குழந்தைகளின் வயிறும் வாடாமல் பார்த்துக்கொண்டனர். சில காலம் இப்படியே ஓட சமுத்ரா தலையெடுக்கத்தொடங்கிய பின் அவ்வீட்டின் நிலைமை மொத்தமாக மாறியிருந்தது.

இப்போது அவளின் ஒற்றையாளின் சம்பளம் இக்குடும்பத்தை நடாத்த தாராளமாக இருந்தது. தன் அன்னை மற்றும் அத்தையின் சுமையை குறைக்க குடும்ப பாரம் மொத்தத்தையும் ஏற்றவளிடம் கடுமையும் கூடியிருந்தது.

அந்த கடுமை பார்ப்பவர்களுக்கு கடுப்பை கிளப்பினாலும் அதில் அன்பும் அரவணைப்பும் மட்டுமே உள்ளதென்பதை அவளை நன்கு அறிந்தவர்கள் அறிவர்.

அமராவதி அனைவருக்கும் உணவு பரிமாற இட்லியை உள்ளே தள்ளியபடியே மஹதி

“எங்க நம்ம வீட்டின் மிஸ்.எம்டனை இன்னும் காணோம்?”கேட்க 

“காலையிலே தொடங்கிட்டியா?” என்று அமராவதி கடிந்து கொள்ள

“எங்க அத்த மதினிய காணோம்? இன்னேரம் கிளம்பி வந்திருப்பாங்களே.” என்று மூடியிருந்த சமுத்ராவின் அறைக்கதவை பார்த்தபடி வினயாஸ்ரீ கேட்க

“இப்போ நீ எதுக்கு அவளை தேடுற?” என்று கேட்டபடி மாலதியும் கையில கீரை கட்டோடு மேஜை அருகே வந்து

“அண்ணி அகத்தி கீரை கேட்டிருந்தீங்கனு கீரைக்காரம்மா கொண்டாந்து குடுத்துட்டு போனாங்க”என்று அமராவதியிடம் நீட்ட அதை வாங்கிய அமராவதி கீரை கட்டை ஆராய்ந்தபடியே

“இந்த தடவை கீரை கட்டு நல்லா இருக்கு. நைட்டுக்கு இடியாப்பமும் அகத்தி பால் சொதியும் செஞ்சிடலாம். பெரியவ விரும்பி சாப்பிடுவா.”என்றபடி அவர் கீரை கட்டோடு உள்ளே சென்றார்.

“ஏன் வினு நாமலும் எதைஎதையோ விரும்பி சாப்பிடுறோம். என்னைக்காவது நமக்காகனு ஒரு துரும்பை கிள்ளி போட்டுருக்காங்களா இவங்க இரண்டு பேரும். எப்போ பார்த்தாலும் அவ இதை விரும்பி சாப்பிடுவா. அதை விரும்பி சாப்பிடுவானு சொல்லி சமைக்கிறாங்க.”என்று மஹதி புலம்ப

“அடிப்பாவிகளா தினமும் அதை செஞ்சித்தா இதை செஞ்சித்தானு லிஸ்டு போட்டு வாங்கி சாப்பிட்டு இப்படி பேசுறீங்களாடி?” என்று மாலதி வாயில் கை வைத்தபடிகேட்க

“மை தாய்குலமே ஒரு சின்ன க்ளரிபிகேஷன். எங்களுக்கு லிஸ்ட்டு போட்டு லிமிடட் டா கிடைக்கிது‌. மதினிக்கு லிஸ்டு போடாமல் அன்லிமிடட்டா கெடைக்குது. இப்போ அது தான் பஞ்சாயத்து.” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே

“என்ன லிஸ்ட்டு?”என்று கேட்டபடியே சாப்பாட்டு மேஜைக்கு வந்தாள் சமுத்ரா.

அவளை கண்டதுமே இத்தனை நேரம் வம்பளந்த வாய்கள் அனைத்தும் இறுக மூடிக்கொண்டது.

அங்கு காலியாக இருந்த இருக்கையில் சமுத்ரா அமர மாலதி அவளுக்கு உணவு பரிமாற ஆரம்பித்தாள்.

“என்ன லிஸ்ட்டு மஹி?”என்று சமுத்ரா மீண்டும் கேட்க இரு சிறுசுகளும் திருதிருவென்று முழுத்தபடி மாலதியின் முகத்தை பார்க்க அவரோ சமுத்ராவின் தட்டை நிறைப்பதே தன் முக்கிய கடமையென்ற ரீதியில் அவர்கள் இருவரையும் திரும்பி கூட பார்க்கவில்லை.

தன் கேள்விக்கான பதிலை எதிர்பார்த்து சமுத்ரா அவர்கள் இருவரையும் பார்த்தபடியிருக்க வினயாஸ்ரீயே சூழ்நிலையை சமாளித்தாள்.

“அது மதினி காலேஜ் அனுவல் டேக்கு சில பொருள் வாங்கனும். அதுக்கு லிஸ்ட்டு போடனும்னு பேசிட்டு இருந்தோம். இல்ல மஹி?”என்றவள் கண்மறைவில் மஹதியின் காலை மிதிக்க

“ஆமாக்கா ஆமா. அது தான். அதே தான்.”என்று இருவரும் ஒருவாறு நிலைமையை சமாளிக்க மாலதியோ பீறிட்ட சிரிப்பை பெரும்பாடுபட்டு அடக்கிக்கொண்டார்.

சமுத்ரா உணவை முடித்துவிட்டு எழுந்ததும்

“உங்களை ட்ராப் பண்ணனுமா?”என்று சமுத்ரா கேட்க மஹதி முந்திக்கொண்டு

“இல்லக்கா. பவானியும் வர்றேன்னு சொன்னா‌. அவளோட போறோம்.”என்று கூற சரியென்றுவிட்டு தன் அறைக்கு சென்றாள் சமுத்ரா.

“யம்மோவ். இவள சமாளிக்கவே தனியா தெம்பேத்தனும் போலயே”என்று மஹதி பெரு மூச்சு விட

“ஏன்மா எங்களை கோர்த்து விட்டுட்டு அமைதியாக இருந்த?”என்று வினயாஸ்ரீ மாலதியை கேட்க

“ஆமா… ஏன் அத்த இரண்டு பேரும் பரிதாபமா உங்களை பார்க்கிறது தெரிஞ்சும் திரும்பிபார்க்கவேயில்லை?” என்று மஹதி கேட்க

“வேற எதுக்கு எங்க இரண்டு பேருகிட்டயும் அழிசாட்டியம் செய்ற நீங்க இரண்டு பேரும் அவ முன்னாடி பம்முறதை பார்க்கத்தான்”என்று அங்கு வந்த அமராவதி கூற

“அப்படி சொல்லுங்க அண்ணி”என்று மாலதியும் அவரின் பதிலை வழிமுழிய

“துரோகம் துரோகம் துரோகம் துரோகம்”என்றபடி இருவரும் இராகம் பாடியபடி எழ இரு அன்னையரின் முறைப்பும் அவர்களை அவ்விடம் விட்டு விரைவாய் அகலவைத்தது.

ஆபிஸிற்கு தேவையான உடைமைகளோடு வெளியே வந்த சமுத்ரா தன் அன்னையையும் மாலதியையும் அழைத்தாள்.

“அம்மா இந்தாங்க வீட்டு செலவுக்கு பணம். எல்லா பில்லும் கட்டிட்டேன். மஹி, வினயா காலேஜ் பீஸூம் கட்டியாச்சு. வேற ஏதாவது விடுபட்டிருந்தா சொல்லுங்க. பில் ரிசீட் எல்லாம் கபோர்டுல வச்சிருக்கேன். அப்புறம் வீட்டுக்கு பெயின்ட் அடிக்கனும் சொன்னீங்களே‌. அதுக்கும் பேசிட்டேன். அடுத்த வாரம் ஆட்கள் வந்து வேலையை ஆரம்பிச்சிடுவாங்க. அது தவிர” என்றவளை இடைமறித்த அமராவதி

“இப்போதைக்கு இது போதும். வேற ஏதும் விடுபட்டிருந்தா சாயந்திரம் பேசிக்கலாம். உனக்கு ஏதோ மீட்டிங் இருக்குன்னு சொன்னல்ல?” என்று அமராவதி கேட்க

“ஆமா. அப்புறம் அத்தை தையல் மெசினுக்கு சொல்லியிருக்கேன். இன்னைக்கு டெலிவரி பண்ணிடுவாங்க.” என்று சமுத்ரா சொல்ல

“இப்போ அதுக்கு என்னம்மா அவசரம்? உனக்கே ஏகப்பட்ட செலவு. இந்த நேரத்துல அது தேவையா?”என்று மாலதி கூற

“அதெல்லாம் எதுவும் இல்லை அத்தை. நீங்க மறுபடியும் தைக்க ஆரம்பிங்க.” என்றவள்

“சரி லேட்டாச்சு. நான் கிளம்புறேன்.”என்றவள் தன் கைப்பை மற்றும் லேப்டாப் பையோடு தன் காரில் கிளம்பினாள்.

அவள் சென்றதும்

“அண்ணி இவ இல்லைனா நம்ம இன்னைக்கு இந்த நிம்மதியோட இருந்திருக்க முடியுமா?”என்று மாலதி கேட்க

“உங்க அண்ணா இருந்திருந்தா கூட நம்மளை இவ்வளவு வசதியாக வச்சிருப்பாரானு தெரியல. ஆனா எதையும் அலட்டிக்காமல் தன்னோட கடமைனு செய்றவளுக்கு நாம என்ன செஞ்சோம்னு நினைக்கும் போது தான் மனசு பதறுது.”என்ற அமராவதியின் கண்கள் கலங்க

“என்ன அண்ணி நீங்க?”என்று மாலதி அவளை ஆறுதல்படுத்த முயல

“பெத்த மனசு கதறுது மாலதி‌. வாழவேண்டிய வயசுல பொறுப்பை மட்டும் சுமந்துட்டு இருக்கா இந்த பொண்ணு. ஆனா அது எதையுமே அவ இதுவரைக்கும் வாய்விட்டு சொன்னதில்ல. அவ வயசு பொண்ணுங்க எல்லாம் கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்பம் குட்டினு சந்தோஷமா இருக்குதுங்க. ஆனா இவளை பாரு. விதினு நம்மளுக்கு உழைச்சு கொட்டிட்டு இருக்கா. நாம சொகுசா இருக்க அவ விருப்பம் தேவைனு எல்லாத்தையும் தியாகம் செய்திட்டு இருக்கா.”என்று அவளை பத்து மாதம் சுமந்தவராய் அமராவதி தன் உள்ளக்குமறலை கொட்டிட மாலதிக்கும் அதே வருத்தம் தான்.

இது வரை அந்த குடும்பம் சந்திக்காத பிரச்சினையென்று ஒன்றில்லை. கடன் பிரச்சினையிலிருந்து காமுகர் பிரச்சினை வரை அனைத்தையும் சந்தித்துவிட்டனர். அனைத்திலும் சமுத்ராவே அவர்களுக்கு அரணாக நின்று சமாளித்தாள். அதனால் அவள் சந்தித்த விபரீதங்கள் பல. அவற்றில் சிலவையே வீட்டாருக்கு தெரியும். பலதை வீட்டார் அறிந்தால் கவலைப்படுவரென்று மறைத்துவிட்டாள்.

அந்த அனுபவங்களே அவளின் மனவலிமைக்கு ஆளுமையேற்றியது. அதுவே அவளின் ஆதிக்கமான ஆளுமைக்கு காரணம்.

மேலும் ஆண் துணையில்லாத வீட்டை மற்றவரின் பார்வை படாமல் பாதுகாக்கவும் இது அவளுக்கு பெரிதும் உதவியது.

“அண்ணி சீக்கிரம் எல்லாம் சரியா போயிடும். நம்ம சமுத்ராவும் குடும்பம் குட்டினு சந்தோஷமா இருப்பா. “என்று மாலதி கூற ஏதோ நினைவு வந்தவராக

“நான் அண்ணாகிட்ட பேசி பார்க்கட்டுமா?”என்று அமராவதி கேட்க

“எதை பத்தி அண்ணி?”என்று மாலதி புரியாமல் கேட்க

“சமுத்ரா கல்யாணத்தை பத்தி” என்று அமராவதி ஆவலாய் கேட்க

“ஆனா அண்ணி ஷாத்விக்கிற்கு இன்னும் சரியான தொழில் இல்லைனு சொன்னீங்களே”என்று குழப்பமாக கேட்க

“ஆனா அண்ணாவுக்கும் அண்ணிக்கும் நம்ம சமுத்ராவை அவங்க வீட்டு மருமகளாக்க விருப்பமே”என்று அமராவதி மீண்டும் அதையே சொல்ல மாலதிக்கோ அமராவதி ஏன் திடீரென்று இவ்வாறு பேசுகின்றாரென்று புரியவில்லை.

“அண்ணி நம்ம பொண்ணுக்கு ஷாத்விக்கை விட நல்ல வரன் அமையும் அண்ணி”என்று மாலதி தன் விருப்பமின்மையை மறைமுகமாக சொல்ல

“நீ என்ன நெனைக்கிறனு புரியிது மாலதி. நீ சொன்ன மாதிரியே அவ படிப்புக்கும் தகுதிக்கும் ஏத்தமாதிரி வேற வரன் அமையலாம். ஆனா அவளுக்கு எங்க தேடுனாலும் என் அண்ணன் குடும்பம் மாதிரி ஒரு குடும்பம் அமையாது. உனக்கே தெரியும். நம்ம கஷ்டப்படும் போது நமக்கு கைகொடுத்தது அவரு மட்டும் தான். சமுத்ரா அந்த வீட்டுக்கு மருமகளாக போனா அவ சந்தோஷமா இருப்பா. ஷாத்விக்கிற்கு சரியான தொழில் அமையலையே தவிர அவனும் தங்கமான பையன். இவ குணத்துக்கு அவன் தான் சரியாக வருவான்”என்று அமராவதி ஏதேதோ காரணம் சொல்ல மாலதிக்கு இதில் பெரிதாக விருப்பம் இல்லாத போதிலும் மறுப்பு சொல்ல தோன்றவில்லை.

“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல அண்ணி. உங்களுக்கு சரின்னு பட்டுச்சுனா இது பத்தி மாமா கிட்ட பேசுங்க”என்று மாலதி கூறிட

“இது பத்தி போன்ல பேசுறது சரிப்படாது. அடுத்த மாசம் ஊர்த்திருவிழாவுக்கு போகும் போது நேரடியாகவே அண்ணன் கிட்ட பேசிடுறேன்.” என்று அமராவதி கூற அதன்பின் இருவரும் தத்தமது வேலையை கவனிக்க சென்றனர்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
11
+1
3
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment