நாள் 3
சில நேரங்களில்
அமையாதென்று
எண்ணி அனுபவங்களும்
கிடைக்காதென்று நினைத்த
சொந்தங்களும்
சந்தர்ப்ப சதியால்
கைசேருகிறது.
பதினொரு மணியளவில் இதயாவோடு வங்கி மேலாளரை சந்திக்க சென்றாள் சமுத்ரா.
ஏற்கனவே எல்லா விஷயங்களையும் போனில் பேசியிருந்த போதிலும் நேரடியாக பேசி அனைத்தையும் உறுதி செய்திடவே வந்திருந்தாள் சமுத்ரா.
அனைத்தும் சுமூகமாக முடியா நாளை உதய்யோடு வருவதாக கூறிவிட்டு இதயாவோடு பேங்க் வாசல் வரை வந்தவள் தன் பின்னே வந்த இதயாவை காணாது திரும்பித்தேட அவளோ ஒரு ஆடவனோட பேசிக்கொண்டிருக்க சமுத்ராவும் அவளுக்காக காத்திருந்தாள்.
தூரத்தில் சாதாரணமாக தெரிந்த பேச்சு அருகில் வந்தபோது சற்று காரசாரமானதாக தெரிய சமுத்ராவிற்கோ ஏதோ சரியில்லையென்று பட இதயா அருகே நகர அவளின் காதில் இந்த வார்த்தைகள் விழுந்தது.
“இவ்வளவு அசிங்கப்பட்டும் உன் திமிரு அடங்கலல்ல? இது மட்டும் இல்ல. இன்னும் அனுபவிப்ப. பிழைக்க வக்கில்லனாலும் இந்த வாய்பேச்சுல உன் குடும்பத்தையும் உன்னையும் யாராலும் அடிச்சிக்கவே முடியாது. இந்த திமிருக்கு தான் வர்றவன் தெறிச்சி ஓடுறான்.”என்ற அந்த ஆடவன் பேசிக்கொண்டே போக இடைபுகுந்தாள் சமுத்ரா.
“எக்ஸ்கியூஸ்மீ யாரு நீங்க? பப்ளிக் ப்ளேசுல ஒரு பொண்ணு கிட்ட இப்படி பேசுறது நியூசன்சுனு உங்களுக்கு தெரியாதா?”என்று சமுத்ரா அதட்டலான குரலில் கேட்க அந்த ஆடவனின் பார்வையோ இப்போது சமுத்ரா பக்கம் திரும்பியது.
விழிகளில் எச்சரிக்கையுடனும் உதடுகளில் கடுமையுடனும் எதிரிலிருப்பவரை சற்று அச்சமூட்டும் ஆளுமையுடன் நின்றிருந்தவளின் தோரணை அவனுள் ஒரு எச்சரிக்கை மணியை அடித்தது.
ஆனாலும் தன் எண்ணங்களை முகத்தில் வெளிப்படாது மறைத்துக்கொண்டவன் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு
“யாரு மேடம் நீங்க? அவ என் கசின். நாங்க ஃபேமிலி விஷயம் பேசிட்டு இருக்கோம்”என்று கூற சமுத்ராவோ
“ஃபேமிலி விஷயம்னா வீட்டுல போய் பேசுங்க சார். இப்படி பொது இடத்துல இவ்வளவு சத்தமாவா பேசுவீங்க? மேனேஜ்மெண்ட்கிட்ட தகராறு பண்ணுறீங்கனு கம்ப்ளைன் பண்ணா நேரா சைரன் வண்டி வந்து அலேக்கா தூக்கிட்டு போயிடும்”என்று சமுத்ரா தன் குரலை உயர்த்த இப்போது அங்கிருந்த அனைவரின் கவனமும் அவர்கள் புறம் திரும்பியது.
அந்த ஆடவனும் சூழ்நிலை தனக்கு பாதகமாக மாறுவதை உணர்ந்த இதயாவை முறைத்து விட்டு அங்கிருந்து நகர முயல சமுத்ராவோ அவனை விடுவதாயில்லை.
“ஹலோ சார் என்ன இத்தனை நியூசன்ஸ் க்ரியேட் பண்ணிட்டு ஒரு சாரி கூட கேட்காமல் போறீங்க?”என்று மீண்டும் குரலை உயர்த்தி கேட்க அந்த ஆடவனும் பல்லை கடித்தபடி “சாரி” என்றுவிட்டு அங்கிருந்து வேகமாக நடந்தான்.
அவன் சென்றதும் இதயா சமுத்ராவை நன்றியுடன் பார்க்க அவளின் கண்களோ கோபத்தில் மிளிர்ந்தது.
அதற்கான காரணம் இதயாவிற்கு புரிந்தது.
சமுத்ரா தன்னைப்போலவே தன்னை சுற்றி இருப்பவர்களும் தைரியமாக இருக்கவேண்டுமென்று விரும்புவள். குறிப்பாக இதயாவின் நேர்மையும் தைரியமும் பிடித்து போனதாலேயே அவளை இந்த மூன்று ஆண்டுகளாக தன்னுடன் வைத்திருக்கிறாள். அப்படிபட்டவள் இன்று இப்படி தனிகுனிந்து பயந்து ஒடுங்கி நின்றது சமுத்ராவிற்கு பிடிக்கவில்லை. அதன் வெளிப்பாடே அவளின் விழிகளில் தெரிந்த கோபம்.
“சாரி மேடம்”என்ற இதயாவின் மன்னிப்பை சட்டை செய்யாதவள்
“போகலாம்.”என்றுவிட்டு முன்னே நடக்க அவளை பின்தொடர்ந்தாள் இதயா.
இருவரும் ஒரு ஐஸ்கிரீம் பாலருக்கு வர இருவருக்கும் ஐஸ்க்ரீம் ஆர்டர் செய்துவிட்டு இதயாவிடம் பேசத்தொடங்கினாள் சமுத்ரா.
“என்ன பிரச்சினை?”என்று கேட்க சமுத்ராவிற்கு அழுவது பிடிக்காது என்று அறிந்து பீறிட்டு வந்த அழுகையை அடக்கிய படியே அனைத்தையும் கூறினாள் இதயா.
இதயாவின் பெற்றோருக்கு நான்கு பிள்ளைகள். முத்தவள் நிவேதா, இரண்டாவது இதயா அவளுக்கு பின் நவீன்,மதன் என்ற இரட்டையர்கள். இதயாவின் அக்கா திருமணம் முடிந்த ஒரு வருடத்திலேயே கையில் குழந்தையுடன் விதவையாகிட தன் புகுந்தவீட்டாரின் பலதரப்பட்ட துன்புறுத்தல்களை தாங்கமுடியாது பிறந்தவீட்டாரிடம் தஞ்சம் புகுந்துவிட்டார். இதயாவின் தந்தை மற்றும் இதயாவின் உழைப்பே இப்போது அந்த குடும்பத்துக்கான வாழ்வாதாரம். அதுவும் சமீபமாக இதயாவின் தந்தைக்கு நடந்த விபத்தில் அவரின் கால் முடமாகிட இப்போது இதயாவின் வருமானத்தை அந்த மொத்த குடும்பமும் நம்பியிருக்கவேண்டிய சூழ்நிலையில் இருந்தது.
“விதியோட சதியால் குடும்பத்தோட பொருளாதார நிலை தலைகீழாக மாறிடுச்சு மேடம். ஆனா எங்களோட இந்த இயலாமை சிலருக்கு கேலிப்பொருளாக மாறிடுச்சு. பேங்க்கில் பார்த்தது அப்பா வழி தூரத்து அத்தை மகன். அவனோட கேரேக்டர் ரொம்ப மோசம். அக்கா கிட்ட அவன் பலமுறை தப்பா நடந்துக்க பார்த்திருக்கான். அவனோட அம்மா என்னை அவனுக்கு கேட்டாங்க. அவனோட குணம் பத்தி தெரிஞ்சதால அப்பா முடியாதுனு உறுதியாக சொல்லிட்டாரு. அத்த அப்பா முடியாதுனு சொன்ன கோபத்துல என்னை பற்றி ரொம்ப தரக்குறைவாக வெளியில சொல்லிட்டாங்க. கூடவே அக்காவை பத்தியும் ரொம்ப தப்பா பேசியிருக்காங்க. இதனால வந்த வரனெல்லாம் தட்டிப் போயிடுச்சு. அடுத்த வாரம் வர இருந்தவங்களுக்கும் இது தெரிஞ்சிருக்கும் போல.”என்று இதயா நிறுத்த சமுத்ராவிற்கு அவளின் நிலை கவலையை கொடுத்தது.
அவளுக்கு தைரியம் கொடுக்கும் விதமாக
“அவங்களுக்கு நீ பயப்படுறியா இதயா?”என்று அவளின் எண்ணத்தை அறியும் விதமாக சமுத்ரா கேட்க
“இவங்களுக்கெல்லாம் பயந்தா நாம உயிர் வாழமுடியுமா மேடம்? என்னோட கவலையே இதனால அப்பாவும் அம்மாவும் கவலைப்படுவது தான். அவங்க முதுமை அவங்களோட உறுதியை ஆட்டிப்படைக்கிது. அதை எப்படி சரி செய்றதுங்கிறது தான் என்னோட பெரிய கவலை”என்று இதயா தன் மனதில் உள்ளதை கூற சமுத்ராவிற்கு நிறைவாக இருந்தது.
அவள் இதயாவிடமிருந்து எதிர்பார்த்தது இந்த துணிச்சலை தான். துவண்டு விழாமல் தன்னை தானே உறுதியேற்றி நிற்பது இப்போதைக்கு அவளின் நிலையை சரிப்படுத்தக்கூடிய ஒரே பலம். இதே போல் சந்தர்ப்பங்களை கடந்து வந்திருந்த படியால் சமுத்ராவிற்கு இதயாவின் நிலைமை புரிந்தது.
“இங்க பாரு இதயா. உன்னோட பிரச்சினைகளை எப்படி சரிப்படுத்தனுங்கிறது உனக்கு நல்லாவே தெரியும். ஆனால் இப்படி மனசு அழுத்தும் போது அதை உள்ளுக்குள்ளேயே அடக்கிக்கிட்டு உன்னோட மனவலிமையை நீயே மட்டுப்படுத்திக்காத. உனக்கு என்ன பிரச்சினைனாலும் ஒரு ப்ரெண்டா நீ என்கிட்ட தாராளமாக சொல்லலாம். சொலூஷன் தர முடியலனா கூட உன் பிரச்சினையை காதுகொடுத்து கேட்கக்கூடிய ஒரு ஆளாக நான் இருப்பேன்.” என்று சமுத்ரா கூற இதயாவிற்கோ கண்கள் கலங்கிவிட்டது.
தனியாய் தத்தளிக்கும் பலரும் இந்த ஆறுதல் வார்த்தைகளை தான் மற்றவர்களிடமிருந்து எதிர்பார்க்கின்றனர். தொடர்வலையாய் தேங்கி நிற்கும் பிரச்சினைகள் அவர்களுக்கு என்றுமே பெரிதாக தெரிவதில்லை. ஆனால் அதனை சமாளிக்கும் போது சோர்வடையும் மனமோ சில ஆதரவான வார்த்தைகளுக்கு ஏங்கி தவிக்கின்றது. சோர்வடைந்த மனம் மீண்டும் பலம் பெற ஆதரவான சொற்ப வார்த்தைகள் போதும். அந்த வார்த்தைகளையே இப்போது பேசிக்கொண்டிருந்தாள் சமுத்ரா.
அதன் பலம் சோர்ந்திருந்த மனம் மீண்டும் சிலிர்த்தெழுந்து நின்றது.
“தேங்க்ஸ் மேடம்” என்று இதயா மனதால் சமுத்ராவிற்கு நன்றி கூற அதனை புன்னகையோடு ஏற்றுக்கொண்டவள் ஐஸ்கிரீமை காலி செய்துவிட்டு இதயாவோடு மீண்டும் அலுவலகம் நோக்கி சென்றாள்.
மறுபுறம் காலேஜில் மஹதியும் வினயாஸ்ரீயும் பவன் பற்றி தம் நட்புக்களிடம் விசாரித்து முழு விபரத்தையும் அறிந்துகொண்டனர்.
“அப்போ மாம்ஸ் பெரிய தலை தான் போல. அத்த பீலா விட்ட அளவுக்கு வர்த்து தான் அவரு” என்று மஹதி சொல்ல
“ஆனாலும் பிஎச்டி ட்ரிப்பில் ஸ்கொயாரை நீ அப்படி பயமுறுத்தியிருக்க கூடாது.” என்று வினயாஸ்ரீ கூற
“நான் என்னடி செய்தேன்?”என்று மஹதி கேட்க
“உன்னை கண்டதும் அவர் கண்ணுல தெரிஞ்ச அந்த மரண பீதியை நான் தான் கண்கூடாக பார்த்தேனே…” என்று வினயாஸ்ரீ கூற
“அப்படியா இருந்துச்சு? நான் கவனிக்கலயே” என்று மஹதி யோசிக்க மறுநிமிடமே
“நாம ஏன் நம்ம மிஸ்.எம்டனையும் இவரையும் சேர்த்துவைக்ககூடாது?” என்று கேட்க வினயாஸ்ரீ மஹதி பேசுவது புரியாது முழித்தாள்.
“என்னடி சம்பந்தமே இல்லாமல் ஏதேதோ பேசுற நீ?” என்று வினயாஸ்ரீ கேட்க
“சம்பந்தத்தோட தான் பேசுறேன்டி. நல்லா போசிச்சுபாரு. நம் வீட்டு தல ஆன்டர்ப்ரினர். இந்த தல பிஎச்டி ட்ரிப்பள் ஸ்கொயார். ஸ்டேட்டஸ் படி இரண்டு பேருக்கும் செட் ஆகுது. பெயாரிங்கும் சினிமா ஸ்டார்ஸ் மாதிரி பக்காவா பொருந்தியிருக்கு. இரண்டு பேருமே சிங்கிள். இதை விட முக்கியமா மாமா தலைக்கு நம்மளை பார்த்தா அல்லுவிடுது. இப்படி பத்து பொருத்தமும் பக்காவா பொருந்தியிருக்கும் போது இவங்க இரண்டு பேரும் செட்டாகுறதுல என்ன பிரச்சினை?” என்று மஹதி வண்டு முருகனை போல் லா பாயிண்டாக பேச
“உங்க அத்தை. அதாவது எங்க பெரியம்மானு ஒரு ப்ரளயம் இருக்கே அதை மறந்துட்டியா?” என்று வினயாஸ்ரீ கேட்க
“இந்த பூமர் ஜெனரேஷனை பார்த்து பயந்தா நம்மள மாதிரி 2k கிட்ஸ் உயிர் வாழமுடியுமா? முதல்ல இவங்க இரண்டு பேருக்கும் கனெக்ஷன் கொடுப்போம். அப்புறம் அந்த பூமர் ஆண்டிக்கு அரளி விதை கொடுப்போம்.”என்றவளை பேயறைந்ததை போல் பார்த்தாள் வினயாஸ்ரீ.
“அடி அவங்க உனக்கு அத்தைடி.” என்று வினயாஸ்ரீ அலற
“அதனால தான் அரளி விதையோடு விட்டேன்”என்ற மஹதியின் பதிலில் தலையில் அடித்துக் கொண்டாள் வினயாஸ்ரீ.
“ஊர்த் திருவிழாவுக்கு பர்ச்சேஸ் போகனும்னு அம்மா சொன்னாங்க”என்று வினயாஸ்ரீ கேட்க
“ஆமால்ல. அத மறந்தே போயிட்டேன்.” என்ற மஹதி மறுநொடியே
“நம்ம பிஎச்டியும் குடும்பத்தோட வருவாருல்ல”என்றவளின் முகம் இப்போது பளிச்சிட
“அப்போ நீ இவ்வளவு நேரம் சொன்னதெல்லாம் உண்மையா?”என்று வினயாஸ்ரீ சற்று பீதியுடன் கேட்க
“ஆமா எனக்கு வேற வேலையில்ல பாரு சும்மா கதை சொல்லிட்டு இருக்கிறதுக்கு. நான் இவங்க இரண்டு பேருக்கும் கனெக்ஷன் கொடுக்கத்தான் போறேன்.”என்று மஹதி கூற
“கனெக்ஷன் கொடுக்குறேன்னு ஷாக் அடிச்சு தூர விழாமல் இருந்தா சரி தான்.”என்று வினயாஸ்ரீ எச்சரிக்க மஹதியோ அதனை கண்டுகொண்டதாக தெரியவில்லை.
மாலை காலேஜ் முடிந்து மஹதியும் வினயாஸ்ரீயும் வீட்டுக்கு வரும் போது அங்கு அவர்கள் எதிர்பார்க்காத ஒரு நபர் அமர்ந்திருந்தார்.
அந்த நபரை கண்டதும் மஹதி அதிர்ச்சியுடன் வினயாஸ்ரீயிடம்
“ஹேய் இவரு எப்படிடி இங்க?””என்று கேட்க
“எனக்கு எப்படி தெரியும்? நானும் உன்கூட தானே வந்தேன்.” என்றவளை மஹதி முறைக்க
“ஒரு வேளை நம்மளை பத்தி போட்டுக் கொடுக்க வந்திருப்பாரோ?” என்று மஹதியின் கேள்விகள் தொடர்ந்துகொண்டே இருக்க வினயாஸ்ரீ கொதித்தெழுந்தவள்
“அம்மா…”என்று கத்திட அங்கிருந்த அனைவருமே ஒருநிமிடம் பதறினர்.
குறிப்பாக மஹதியோ எங்கு சென்று ஒளிந்து கொள்வதென்று இடம் தேட அங்கொரு பரபரப்பான சூழல் உருவானது.
“ஏன்டி கத்துற?” என்றபடி என்னவோ ஏதோவென்று பதறியபடி மாலதி வினயாஸ்ரீ அருகே வர அப்போது தான் வினயாஸ்ரீக்கு தனது விபரீத விளையாட்டு பற்றி புரிய சட்டென்று அவளின் மூளை அடுத்த ப்ளான் போட காலை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.
மாலதியோ பதறியபடி என்ன ஏதென்று விசாரிக்க மஹதியும் தன் பார்வையை வினயாஸ்ரீபுறம் திருப்ப அவளின் நாடகம் புரிந்தது.
மஹதியும் அவளின் நாடகத்தில் பங்கெடுக்க பார்த்திருந்த மற்றவர்கள் தான் இவர்களுக்காக பதறினர்.
மஹதியோ அறைக்குள் ஓடிச்சென்று ஏதோ ஆயின்மெண்ட் எடுத்து வந்து அடிப்படாத காயத்துக்கு ஆதுரமாக தடவ அவர்களை தூர நின்று கவனித்துக் கொண்டிருந்த பவனுக்கு இருவரின் கள்ளத்தனமும் தெள்ளத்தெளிவாக தெரிந்தது.
அவர்கள் வீட்டிற்கு வந்தவுடனேயே அவர்களை கவனித்து விட்டான் பவன். அவர்கள் என்ன பேசினார்கள் என்று தெரியாத போதிலும் இருவரின் குரங்கு சேட்டை பற்றி நன்கு அறிந்திருந்ததால் அவர்களின் கள்ளத்தனத்தை சரியாக கண்டுகொண்டான்.
ஆனால் இதில் தலையிட்டு தன் சொந்த செலவில் தனக்கு தானே சூனியம் வைத்துக்கொள்ள அவன் விரும்பவில்லை. அதனால் அமைதியாக தள்ளி நின்று வேடிக்கைமட்டும் பார்த்துக்கொண்டிருந்தான்.
ஒருவழியாக இருவரும் தம் நாடகத்தை முடிக்க அப்போது தான் இருவரும் பவன் வந்ததை கவனித்தது போல்
“சாரி மாமா. நீங்க வந்ததை கவனிக்கல”என்று மஹதி கூற
“ஆமா அண்ணா நாங்க கவனிக்கல”என்று வினயாஸ்ரீயும் ஒத்து ஊத பவனின் மைண்ட் வாய்ஸோ
“எப்புர்றா?”என்று கவுண்டர் கொடுக்க நாவோ
“பரவாயில்லை. நீ போய் ரெஸ்ட் எடு. மஹதி நீ வினுவை உள்ள கூட்டிட்டு போ.” என்று அந்த நாடகத்தில் பங்கேற்று அதனை முடித்துவைத்தான்.
மஹதியும் வினயாஸ்ரீயும் உள்ளே செல்ல பவன் சொல்லிக்கொண்டு அங்கிருந்து கிளம்ப முற்பட்ட போது சமுத்ராவின் வீடு திரும்பியிருந்தாள்.
“ஹேய் பவன் சாரி கொஞ்சம் லேட்டாகிடுச்சு.” என்று கூறியபடியே அவனெதிரே வந்தமர
“உனக்கு பவன் வர்றது தெரியுமாமா?”என்று மாலதி சமுத்ராவிடம் கேட்க
“நான் அவளுக்கு கால் பண்ணிட்டு தான் வந்தேன் சித்தி” என்று மாலதியின் கேள்விக்கு பதில் சொல்ல
“நீங்க பேசிட்டு இருங்க. இதோ வரேன்” என்றவர் உள்ளே செல்ல அறைக்கு சென்ற மஹதியும் வினயாஸ்ரீயும் கதவிடுக்கில் காதை வைத்து வெளியே என்ன நடக்கின்றதென்று ஒட்டுகேட்டுக்கொண்டிருந்தனர்.
சற்று நேரம் பேசிவிட்டு பவன் கிளம்பிட அப்போது தான் தன் அன்னையை தேடினாள் சமுத்ரா.
“அம்மா எங்க அத்தை?”என்று கேட்க
“பக்கத்துல கோவில்ல ஊஞ்சல் பூஜையாம். அதுக்கு போயிருக்காங்க. இப்போ வர்ற நேரம்தான்”என்று கூற சமுத்ராவோ தன் அறைக்கு சென்றாள்.
அறையிலிருந்த மஹதி வினயாஸ்ரீயிடம்
“எனக்கென்னமோ இவங்க இரண்டு பேருக்கும் நாம கனெக்சன் கொடுக்க வேண்டிய அவசியமில்லை போல”என்று கூற
“நீ பல்ப்பு வாங்குவனு தெரியும். ஆனா இவ்வளவு சீக்கிரத்துல வாங்குவனு எதிர்பார்க்கல.” என்று வினாயாஸ்ரீ கேலியாய் சிரிக்க
“சொந்த அக்காவுக்கு மேட்ச் மேங்கிங் செய்தது ஒரு குத்தமா?”என்று மஹதி அப்பாவிபோல் கேட்க
“இதை செய்யச்சொல்லி யாரும் உன்கிட்ட கேட்கலயே”என்று வினாயாஸ்ரீ பதில் கொடுக்கவென்று ஒருவருக்கு மற்றவர் வாயாடிக்கொண்டிருந்தனர்.
Nice update 🤩
பவன் தான் ஹீரோவா… 🤔