Loading

அத்தியாயம் – 6: வேர் வெறுத்த பூ இவனோ?

தன் மார்மீது வந்து பூந்தென்றலாய் பதிந்தவளை அதே இனங்காண முடியாத பார்வையுடன் சூர்யா.. அதாவது ருத்ரப்ரதாபன் பார்த்திருக்க, அவனிடமிருந்து பதறி விலகினாள் அக்னி.

ஆனால் அவள் கரத்தைத் தன் பிடியிலிருந்து விடாத ருத்ரனோ.. “என்ன? எனக்கே ஹனி டிராப்பா? இந்தியன் கவர்மென்டுக்கு என்ன பிடிக்கறதுக்கு வேற வழியே தெரியலையா?” என்று ஒரு மாதிரியாகக் கேட்டு அவன் சத்தமாகச் சிரிக்க, அவனது கேள்வியின் அர்த்தம் புரிந்தவள் கன்னங்கள் சூடாகின.

‘என்ன பத்தி என்ன நினைச்சுட்டான் இவன்?’ என்ற கோபத்தில்.. “ஹோ? ஒரு பொண்ணு செட்யூஸ் செஞ்சா ஈஸியா மயங்கிடுவியா நீ? அவ்வளவு வீக்கானவனா நீ?” என்று அவள் இளக்காரமாகப் பேசி அனல் வீசிட, “ஏய்.. ” என்று கத்தியபடி அவள் கழுத்தை இறுகப் பற்றினான் அவன்.

அவனது விரல்களின் அழுத்தத்தில் அக்னிக்கு விழிகள் பிதுங்கிக் குரல்வளை வலியெடுக்கத் துவங்க, அவள் மூச்சுக்குப் போராட ஆரம்பித்தாள்.

அவள் அப்படி போராடுவதை விழிகளில் எந்தச் சலனமுமின்றி பார்த்திருந்தவன், சில வினாடிகளில் அவளை விடுவிக்க, அப்படியே தோய்ந்து போய்த் தரையில் மடங்கி விழுந்தவள்.. பலம்கொண்டு இருமினாள்.

அவளையே பார்த்திருந்தவன், அங்கே வந்தவனிடம், அக்னியைக் காட்டி.. “இவளை நம்ம செல்லுக்குக் கூட்டிட்டுப் போ.. இனி இங்க இருந்து இவளுக்கு விடுதலையே கிடையாது.

இவளோட வாழ்வும், சாவும் இங்க தான் இருக்கணும்!

இவ எப்படி வாழணும்னும் நான் தான முடிவு செய்யணும்.. இவ எப்போ, எப்படி சாகணும்னும் நான் தான் முடிவு செய்யணும்..” என்று சிம்மத்தின் கர்ஜனையுடன் கூற, எழுந்து நிற்க்க கூடத் திராணியற்று இருந்தவளைத் தரையில் கால்கள் தேய இழுத்துக் கொண்டு சென்றான் அவன்.

அதே சமயத்தில் அவனது மாமா அமரேந்தர் இந்த விஷயம் கேள்விப்பட்டு இங்கே வர, அப்பொழுது தான் ருத்ரனின் அந்த அடியாள், அக்னியைத் தரையோடு இழுத்துக் கொண்டு போவதைப் பார்த்து..

“ப்ரதாப்.. இந்தப் பொண்ணு?” என்று அவர் அதிர்வுடன் கேட்க, அவரைப் பார்த்துக் கோபச் சிரிப்பொன்றை உதிர்த்தவன், “இவ தான் மாமா.. இந்த ருத்ரனையே அழிக்க, தன்னந்தனியா வந்த நாகப்பாம்பு!” என்று கூற.. அவனையே இன்னமும் திகைப்புடன் பார்த்திருந்த அமரேந்தரோ..

“ப்ரதாப்.. இது வரைக்கும் இந்த மாதிரி வந்தவங்க எல்லாரும் ஆண்கள். அதனால நாம அவங்கள செல்லுக்கு அனுப்பி கொடுமை செய்ததெல்லாம் சரி தான். ஆனா இது ஒரு பொண்ணு.. இவளையும் அதே செல்லுக்கு அனுப்பறது.. எனக்குச் சரியாப்படல..” என்று கூற, அவரையே ஊன்றிப் பார்த்த ப்ரதாப்போ..

“மாமா.. நமக்கு ஆண், பெண்ணுன்ற வித்தியாசம் எல்லாம் இல்ல.. நம்ம கண் முன்னாடி நிக்கறதெல்லாம் எதிரிங்க.. எதிரிங்க மட்டும் தான்.

இந்தக் காளிஷேத்ரா, மூணு பக்கம் நிலத்தாலையும், ஒரு பக்கம் நீராலையும் சூழப்பட்ட தேசம். இங்க நம்மள தரை மார்க்கமா மட்டும் தான் அட்டாக் செய்வாங்கன்னு இல்ல.. நீர் வழியாவும் நம்மளை அட்டாக் செய்ய வருவாங்க.

அதே மாதிரி தான் மாமா.. இந்தப் பொண்ணு வெறும் தண்ணி இல்ல மாமா.. இவ சமுத்திரம்! அக்னி சமுத்திரம்!!

இவளை நாம சாதாரணமா எடை போட்டுடக் கூடாது..” என்று கூற அவனை என்ன சொல்லி மாற்றுவது என்று புரியாது திகைத்தார் அமரேந்தர்.

இந்தக் காளிக்க்ஷேத்ரா, பெண்களின் மீது கை வைத்துத் தான் இப்படியொரு நிலையில் இருக்கிறது. காலம் காலமாய் பெண்களுக்கு இழைத்த அநீதியின் காரணமாகத் தான்.. அந்தக் காளி ரூபம் கொண்ட பெண்களின் மனதில் கொழுந்துவிட்டு எறிந்த தீயின் காரணமாகத் தான், இந்த மாகாணத்தின் ஒரு புறம் கடலாடினாலும், அந்த நெருப்பு.. அதன் வெம்மை இன்னமும் தனியாமல், ஊரோடு ஒட்டாமல்.. மற்ற மக்களைப் போல.. மற்ற தேசங்களைப் போலச் சாதாரண ஒரு வாழ்க்கை வாழாது.. க்ஷண நேரமும் தீயில் தகித்துக் கொண்டிருப்பதை போன்ற ஒரு அனலை கக்கிக் கொண்டிருக்கிறது.

இப்பொழுது இவனும் அதே தவறை செய்துவிடுவானோ என்று அஞ்சினார் அவர்.

ஆனாலும் இந்தக் காளிக்ஷேத்ராவை, அந்தக் கயவர்களிடம் இருந்து மீட்ட இவனே.. அந்தப் பாவத்தை எப்படிச் செய்வான் என்றும் தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டார் அமரேந்தர்.

அதே வேளையில் அதே காளிக்ஷேத்ராவின், ருத்ரனின் அரண்மனைக்கு அருகே ஒரு சாதாரணமான குடிசையில், வானையே வெறித்து நோக்கிக் கொண்டிருந்த அந்த வயதான பெண்மணிக்கு இந்த விஷயம் காதில் விழ, கோபத்தில் முகமெல்லாம் ரத்த நிறம் கொள்ள, புயலைப் போல எழுந்தவரின் வேகத்தில் அவரைச் சுற்றி இருந்த மக்கள் அனைவரும் திகைத்துத் தான் போயினர்.

விறுவிறுவென எழுந்தவர், நேரே ருத்ரனின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்தச் சிறைச்சாலைக்குச் சென்றார்.

அவருடன் சேர்ந்து அப்பகுதி மக்கள் முழுவதுமே அவரைப் பின் தொடர்ந்தனர்.

அவர் வருவதை பார்த்ததும் சிறைச்சாலையைச் சுற்றி ருந்த காவலாளிகள் நேரே முன்னே வந்து கீழே மண்டியிட்டு அமர்ந்து அவருக்கு வணக்கத்தைத் தெரிவிக்க, அதைக் கண்டுகொள்ளாது அவர் முன்னேறினார்.

அவர் செல்லும் வழியெங்கும் அவர் கேட்காமலேயே வாசல்கள் திறக்கப்பட.. அவரது கால்கள் மூன்று அடுக்கு கொண்ட அந்தச் சிறைச்சாலையின் பாதாள அடுக்குக்குச் சென்றன!

தன் போக்கில் சென்றுகொண்டிருந்த அந்தக் கால்கள், ஒரு சிறையின் முன்பு அசையாது நிற்க, அங்கு இருந்த ஒரு காவலாளியோ அவர் முன்பு வந்து நின்று..

“இந்தப் பொண்ணு தான் அம்மா நம்மள உளவு பார்க்கறதுக்காக இந்த அரசாங்கத்தால் அனுப்பி வைக்கப்பட்ட பொண்ணு..” என்று கூற, உள்ளே சோர்ந்து போய் அமர்ந்திருந்தவளைக் கண்களில் ஒரு தீவிரத்துடன் பார்த்தார் அவர்.

அந்தக் காளிக்ஷேத்ராவில், ருத்ரனின் அதிகாரத்திற்கு அடுத்து, ஏன்.. அந்த ருத்ரனையே அதிகாரம் செய்யும் அளவுக்கு ஒருவர் இருக்கிறார் என்றால் அது, இவர் தான்!

அவர் தான் ஜுவாலாமுகி! ருத்ரனின் தாய்!!

இத்தனை ஆண்டுகளாகத் தன் வாழ்வில் ஏற்பட்ட பேரிழப்புகளால் தனது அந்த ஒற்றைக் குடிசையை விட்டு வெளியே வராதவர், இன்று இந்தப் பெண்ணுக்காகச் சிறைச்சாலைவரை வந்த செய்தி, காட்டுத் தீயைப் போல அந்தத் தேசமெங்கும் பரவியது.

முதலில் அந்த விஷயத்தை அறிந்த அமரேந்தர், அடித்துப் பிடித்து அங்கு ஓடிவர, இன்னமும் அக்னியின் சிறை வாசலில் நின்று அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார் அவர்.

இதை அக்னி உணர்ந்தே இருந்தாலும், இங்கு வந்து இப்படி வசமாக மாட்டிக் கொண்டதில் தன் நிலைமை என்ன என்பதை முழுதாக அறிந்து வைத்திருந்தவள், எதன் மீதும் அக்கறை செலுத்தாமல், இப்படித் தான் ஏற்று வந்த காரியத்தை முடிக்காமலேயே இப்படி மாட்டிக்கொண்டோமே?

இனி அடுத்தென்ன? மரணம் தானே? என்ற நிலைக்கு வந்திருந்தாள்.

அதே வேளையில் அங்கு அடித்துப் பிடித்து வந்த அமரேந்தர், “அக்கா..” என்று நாத் தழுதழுக்க.. உடைந்த குரலில், நிமிர்ந்து நிர்க்கவும் திராணியற்று ஜுவாலாமுகியை பரிதாபத்துடன் அழைத்தார்.

ஆம்.. ருத்ரனுக்கு, அமரேந்தர் தாய் மாமா தான்! அவனது எல்லா செயல்களிலும் தோளோடு தோள் நிற்பவர். சிறு வயதில் இருந்தே ருத்ரனின் மனதில் வீரத்தையும், தீரத்தையும் ஊற்றி வளர்த்தவர்.

அப்பேர்பட்டவர், இப்பொழுது தன் அக்காவின் முன்பு தவறு செய்து மாட்டிக் கொண்ட சிறுவனைப் போன்ற முகபாவத்துடன் சங்கடத்துடன் வந்து நிற்க, அவரைப் பார்த்துக் கண்கள், உதடுகள் எல்லாம் ஒரு கணம் அழுகையில் துடிக்க நின்றிருந்தார் ஜுவாலாமுகி.

எத்தனை ஆண்டுகள் கழித்துப் பார்க்கிறார் உடன் பிறந்தவனை!

மகனோடு சேர்த்து, அவரையும் இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளாக ஒதுக்கியல்லவா வைத்துவிட்டார்.?

இப்பொழுது இத்தனை ஆண்டுகள் கழித்து தன் முன் நிற்கும், தான் தூக்கி வளர்த்த தம்பியைக் கண்டு ஒரு கணம் பாசம் பொங்கினாலும்.. முன்பு தான் தடுக்கத் தடுக்க அவர் செய்த காரியங்கள் எல்லாம் கண் முன்னால் வந்து போக, ஒரு கணம் கண்களை இறுக்க மூடித் திறந்தவர், அவரது கன்னத்தில் பளாரென்று அறைந்துவிட்டு, அக்னி இருந்த சிறையை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து அதே புயல் நடையுடன் சென்றுவிட்டார்.

அவர் அங்கிருந்து சென்றுவிட்ட போதும், தன் தமக்கையிடம் அடி வாங்கியவர், அதே குனிந்த தலையுடன் நிலம் பார்த்தது ஆடாது, அசையாது நின்றிருக்க.. அங்கே அப்பொழுது தன் வேக நடையுடன் உள்ளே வந்தான் ருத்ரன்.

வந்தவன், அக்னியின் சிறைக்கு முன்பு, குனிந்த தலையுடன் உறைந்து போய் நின்றிருந்த தன் மாமாவைப் பார்த்தது, தன் நடையை ஓட்டமாக மாற்றியவன், இரண்டே எட்டில் அவரை அடைந்து.. அவர் முகத்தைப் பிடித்து நிமிர்த்தி..

“என்ன ஆச்சு மாமா?” என்று இறுகிய குரலில் அந்தச் சிறையே அதிரும் வண்ணம் கேட்க, மெல்ல நிமிர்ந்து அவனது கண்களில் தனது பார்வையைக் கூறாகப் பதித்த அமரேந்தரோ.. “அக்கா வந்திருந்தாங்க ப்ரதாபா..” என்று கூற அப்படியே மடங்கி அமர்ந்துவிட்டான் அவன்!

கீழே அமர்ந்தவன், தலையைத் தூக்கி அமரேந்தரைப் பார்த்து.. “எதுக்கு வந்தாங்க? இத்தனை வருஷமா அவங்க பெத்த பையனைப் பார்க்க வராதவங்க.. அவன் கட்டி வச்ச அத்தனை வசதியான அரண்மனைல தங்க விருப்பப்படாதவங்க.. இன்னைக்கு எதுக்கு வந்தாங்களாம்?

அதுவும் இங்க எதுக்கு வந்தாங்களாம்?

பிச்சைக்காரி மாதிரி ஒரு வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்காங்க மாமா என்னோட அம்மா!

இந்த ருத்ரனோட அம்மா.. பழைய புடவை கட்டி.. ஒரு சாதாரண குடிசை வீட்டுல.. நான் கொடுக்கர் சாப்பாட்டைக் கூடச் சாப்பிட மாட்டேன்னு.. பக்கத்து வீட்டுல இருக்கறவங்க கொடுக்கற சாப்பாட்டை சாப்பிட்டுட்டு இருக்காங்க மாமா..

எதுக்கு வந்தாங்களாம்? இங்க எதுக்கு வந்தாங்களாம் இப்போ?” என்று தன் அன்னையின் மீதிருக்கும் கோபம், ஆற்றாமை, தவிப்பு, பாசம் என அனைத்தும் பெருகி யாருமற்ற பரிதவிப்பும் சேர்ந்து கொள்ள.. கர்ஜித்தான் அவன்!!

அவன் கர்ஜனையில் தானே மிரண்டு ஒரு கணம் கண்களை மூடித் திறந்த அமரேந்தரோ.. “எனக்குத் தெரியல ப்ரதாப்..

ஆனா அக்காக்கு கோபம்.. நம்ம மேல ஏற்கனவே இருந்த கோபத்தை விடவும் இன்னும் அதிகமா ஏதோ பாதிச்சிருக்கு..

ஏன்னா அவங்க இங்க சும்மா வந்துட்டுப் போகல.. அவங்க என்ன கோபமா அறைஞ்சாங்க..” என்று கூற ருத்ரன் அதிர்ந்தான்.

ஆம்.. அவனிடம் அவன் தாய் இங்கு வந்ததையோ, வந்து அமரேந்தரை அடித்ததையோ சொல்ல அச்சப்பட்ட அவனது ஆட்கள், வெறுமனே சிறைச்சாலையில் பிரச்சனை, அமரேந்தர் அங்கே இருக்கிறார் என்று மட்டும் கூறியிருக்க, ருத்ரனுக்கோ இப்பொழுது அவனது அம்மா இங்கே வந்ததும், அத்தோடு அவர் அமரேந்தரை கோபத்துடன் அறைந்துவிட்டுச் சென்றதை அறிந்ததும் பேரதிர்ச்சியை இருந்தது.

ஆனால் இம்முறை தனது கோபத்தை உள்ளுக்குள் அடக்கியவன், “ஏன்?” என்றான் ஒற்றை வார்த்தையாக!

அதற்கு அமரேந்தரோ.. “ஏன்னா.. ஏன்னா..” என்று சற்றுத் திணற, அப்பொழுது தான் அமரேந்தர் நின்றிருக்கும் அந்தச் சிறையைப் பார்த்த ருத்ரன், கண்களில் ஓர் இகழ்ச்சி பரவ..

“ஹோ?! எல்லாம் இவளுக்காகத் தானா?” என்றுவிட்டு அந்தச் சிறைக் கம்பிகளை இறுகப் பிடித்து நின்றான்.

அவன் குரலே உணர்த்தியது ருத்ரனின் மனதில் இருக்கும் வெஞ்சினத்தை!

இத்தனை நாட்கள் தன்னைக் காணாது.. தன் உழைப்பில் ஒரு பிடி சோறு கூட உண்ணாத தன் தாய், இன்று இவளுக்காக இங்கே வந்திருக்கிறார்.. என்பதில் அவன் உள்ளம் உதிர்த்த ரத்தத்தை உணர்ந்தார் அமரேந்தர்.

அதனாலேயே அவர் அஞ்சவும் செய்தார்!

அவன் உடைந்த இதயம், அவனை என்னவெல்லாம் செய்ய வைக்கும் என்பதை அவர் மிக நன்றாகவே அறிவார் அல்லவா?”

அவர் ருத்ரனைச் சமாதானப்படுத்தும் பொருட்டு ஏதோ கூறப்போக, அதே சமயத்தில் அந்தச் சிறையின் தலைமைக் காவலாளிகளில் ஒருவன் அவசரமாய் ஓடிவந்து ருத்ரனை நெருங்கினான்.

அதில் ருத்ரனின் கண்களில் ஆவேசமாய் விரிய.. “ஆஆஆஆ..” என்று வான் நோக்கிக் கத்தியவன்.. அதே ஆத்திரத்துடன் “இந்த செல்லோட சாவியைக் கொடுங்க..” என்று கேட்க, அதில் இன்னுமாய் பயந்து போன அமரேந்தரோ, “ருத்ரா.. எதுவா இருந்தாலும் கொஞ்சம் பொறுமையா பேசிக்கலாம்.. அவசரப்படாதே..” என்று அவனை நிதானத்துக்கு கொண்டு வர முயன்றார்.

ஆனால் அதைக் கேட்டும் ரௌத்திரமாய் சிரித்த ருத்ரனோ..

“மாமா.. என்னோட துரோகிகளுக்குச் சரியான பாடம் கற்பிக்க ஒரு நல்ல வாய்ப்பு கிடைச்சுருக்கு. தடுக்காதீங்க..” என்று கூறி, அந்தச் சிறையின் சாவியை வாங்கி அதைத் திறந்தவன், உள்ளே சென்று தன் போக்கில் சுவரில் சாய்ந்து, கால்களை மடக்கி அதிலேயே முகம் புதைத்து அமர்ந்திருந்த அக்னியைக் கையைப் பிடித்து முரட்டுத் தனமாய் இழுத்துக் கொண்டு வெளியேறினான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்