Loading

அத்தியாயம் -4

கோவிலின் முன்பு நின்றிருந்தாள் அஷ்வினி.

இன்று அவள் தந்தையின் பிறந்தநாள்.
அதனால் காலையிலேயே சீக்கிரம் எழுந்து அருகில் இருக்கும் முருகர் கோவிலிற்கு வந்துவிட்டாள்.

அப்பா பெயரில் அர்ச்சனை செய்து விட்டு.  கோவிலை ஒரு சுற்று சுற்றி வந்து  தூணில் சாய்ந்து அமர்ந்தவளிற்கு எண்ண ஓட்டமோ அவள் வீட்டை சுற்றியே ஓடி கொண்டிருந்தது..!

” பாப்பா.. பாப்பாஆஆ.. இங்க வந்து,
கூடமாட வேல செய்யலாம்ல, சும்மாவே படுத்து இருக்க?”

“வரேன் ம்மா”  என  ராகம் பாடியவாரே சமையல் அறைக்குள் புகுந்து,  அடுப்பு திட்டின் மேலேறி அமர்ந்து சமைத்து கொண்டிருந்த தாயின் மூக்கை இழுத்து செல்லம் கொஞ்சி கொண்டிருந்தாள் அஷ்வினி.

தாய் அவளை முறைக்க,

“அச்சோ அப்படி பாக்காதம்மா எனக்கு பயந்து பயந்து வருது ” என தன் இரண்டு கைகளாலும் முகத்தை மூடி கொண்டு அவரை பொய் கேலி செய்து தோசை கரண்டியால் ஒரு பூசையும் வாங்கி கொண்டாள் அஷ்வினி.

“அப்பாஆஆ.. ” என கத்தி கொண்டே தூங்கி கொண்டிருந்த தந்தையை எழுப்பி அவள் புகார் செய்ய,விசாரணைக்கு வந்து விட்டார் அவள் தந்தை..!

” ஏண்டி பாப்பாவ அடிச்ச? ” என்றவர் நிஜமாகவே கோவமாக தான் கேட்டார்.

திருமணமாகி 10 வருடங்கள் கழித்து பிறந்த மகள் மீது அத்தனை பிரியம். ஓவர் செல்லம் கொடுத்து அவளை கெடுத்து வைத்திருப்பதும் அவர் தான்..!

தந்தையின் இந்த சுதந்திரத்தாலேயே தாயின் பேச்சிற்கு மதிப்பில்லாமல் போனது அந்த வீட்டில்.

” ஆமா புள்ளய சொன்னா உடனே பொத்துக்கிட்டு வந்துருமே கோவம்? இதுக்கு ஒன்னு கொறச்சல் இல்லை..! ஏழு கழுத வயசாயிருச்சு வந்து சமையல் கத்துக்கடினு சொன்னா, அந்த வேல மட்டும் சொல்லாதம்மா ஐ ஹேட் சமையலுங்கறா! அப்றம் போற வீட்டுல என் மானம் தானே போகும்? ஆயாகாரி வளத்தி வெச்சிருக்க லட்சனத்த பாருனு..!

பொட்டப்புள்ள சமைக்க மாட்டேனு சொன்னா நல்லாவா இருக்கு? சரி நீ சமைக்கலைனா எப்புடி டி சாப்பிடுவனு கேட்டா.. நல்லா சமைக்க தெரிஞ்ச மாப்பிள தான் அவளுக்கு புருஷனா வருவானாம்..!! ஆமா வாராங்க இவளுக்கு மட்டும் சீமையில்ல இல்லாத புருஷன்.. என்னைக்கு இருந்தாலும் இந்த அடுப்படில நீ குப்ப கொட்டி தான் டி ஆகனும்..! “

” ஆ.. ஆசை தோச அப்பள வட..!
முடியாது முடியாது.. என்னால சமைக்க மட்டும் முடியாது,  ப்பா நீங்க  சொல்லுங்க ப்பா நா என்ன அப்படி கேட்டுட்டேனு இந்த அம்மா இப்புடி குதிக்கறாங்க? வீடு கேட்டேனா காரு கேட்டேனா இல்ல கோடி கோடியா பணம் தான் கேட்டேனா? சமைக்க தெரிஞ்ச மாப்ள,  அது கிடைக்காதா எனக்கு? ” என முகத்தை பாவமாக வைத்து கொண்டு கேட்க.

” கண்டிப்பா கிடைக்கும் டா பாப்பா, ஏய் நீ வேணா பாத்துட்டே இரு.. என் புள்ள மகாராணி மாறி ஜாம் ஜாமுனு பொழைப்பா..! “

” இந்த வாயிக்கு ஒன்னு கொறச்சல் இல்லை.. நவுருங்க அந்த பக்கம் எனக்கு வேல கிடக்கு நெறயா..! ” என்றவர் கொணட்டி கொண்டே அந்த பக்கம் போக, அவரை பார்த்து கேலி செய்து சிரித்தனர் அப்பாவும் மகளும்.

அதை நினைத்து பார்த்தவளிற்கு விழி ஓரம் நீர் துளிர்க்க,  அவளின் போன் அலறியது. அவளின் அன்னை தான் அழைத்திருந்தார்.

“சொல்லு பாப்பா காலையில கூப்பிட்டு இருந்த? கடையில்ல இருந்தேன் அதான் எடுக்க முடில..”

“அப்பா எப்படி இருக்காரு? இன்னிக்கு அவர் பிறந்தநாள் நியாபகம் இருக்குல?”

” ஓ” என்றவரின் பதிலிலேயே தெரிந்தது அவர் மறந்து விட்டார் என்று.
அவரும் என்ன தான் செய்வார்.
வீடு,  மளிகை கடை, படுத்த படுக்கையாய் இருக்கும் கணவனையும் பார்த்து கொண்டு இதை எல்லாம் நியாபகம் வைத்திருக்க முடியுமா? அப்படியே நியாபகம் வைத்திருந்தாலும் அதை கொண்டாடுவதற்கு நல்ல மனநிலையும் சந்தோசமும் வேண்டுமே..
! சந்தோசமா அப்படி என்றால் என்ன? என்ற நிலையில் தான் கடந்த ஒரு வருட காலமாக இருக்கிறது அவர்களின் குடும்பம்..!

தந்தை பற்றி பேசி தாயை இன்னும் கஷ்டப்படுத்த வேண்டாம் என யோசித்தவள், ” சாப்டாச்சா ” என பேச்சை மாற்ற..

“பாப்பா இன்னிக்கி காலையில் கூட ப்ரோக்கர் ஒரு ஜாதகம் கொடுத்துட்டு போனாரு ” அவர் எதை பற்றி பேச வருகிறார் என புரிந்து கொண்டவள்,

“ம்மா!!” என அதட்ட, அந்த அழைப்பிலேயே அவளின் நடுங்கும் குரலை தாயவள் கண்டு கொண்டாள்.

சூடான கண்ணீர் துளிகள் அவள் கன்னத்தில் வழிந்தோடியது.

“சரி நா பேசல ” என்று வெடுக்கென போனை வைத்துவிட்டார் அவர்.

அங்கு அவருக்குமே அதே நிலை தான்.
மகளை நினைத்து அவர் கண்ணீர் சிந்தி கொண்டிருந்தார்.

இது எல்லாம் அஷ்வினிக்கு ஒன்றும் புரியாமல் இல்லை. அவளை நினைத்து தான் அவள் குடும்பம் வருந்துகிறது என நன்றாகவே புரிந்தது. அவளிற்கு மட்டும் என்ன ஆசையா?  அவர்களை கஷ்டப்படுத்தி பார்க்க வேண்டும் என்று..!

எவ்வளவு முயன்றும் அவளால் அவள் கடந்த காலத்தில் இருந்து வெளிவர முடியவில்லையே..!!
போதும் ஒரு முறை திருமண பேச்சை ஆரம்பித்து அவள் பட்டதே போதும் என அவள் மனம் வெறுத்து இருக்க.

அவள் தாயும் தந்தையும் ஒரு முறையாவது அவளை மண பெண் கோலத்தில் பார்த்து விட மாட்டோமா என ஏங்கி கிடக்கிறார்கள்.

என்ன தான் நாம் உருண்டு பிரண்டு அழுதாலும் சில விஷயங்கள் நடக்கும் பொழுது தான் நடக்கும். அது வரைக்கும் காத்திருப்பதை தவிற காலத்தின் வழி வேறு ஒன்றும் இல்லை.

எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தாளோ தெரியவில்லை, முகத்தில் சுளீரென வெயில் படவே மணியை பார்த்தவள்
ஆஃபிஸிற்கு கிளம்பினாள்.

வழக்கத்தை விடவும் இன்று சற்று நேரமாகவே வந்து விட்டாள்.

நேற்று இரவு ஹாஸ்ட்டலில் போட்ட உப்புமா பிடிக்காமல் சாப்பிடாமலேயே கை கழுவியவள், இன்று காலையிலும் கோவிலுக்கு போகும் அவசரத்தில் சாப்பிடாமலேயே வந்து விட்டாள்.

பசி வயிற்றை கிள்ள கேன்டீனிற்கு வந்தாள். அங்கும் ஏமாற்றமே..!  பிஸ்கேட் பாக்கெட்டை தவிற வேறு ஒன்றும் இல்லை. இப்போழுது தான் தயார் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு மணி நேரம் ஆகி விடும் என சொல்ல யோசனையாய் நின்று கொண்டிருந்தாள் அஷ்வினி.

வெறும் வயிற்றில் பிஸ்கெட் சாப்பிட்டால் அவளிற்கு ஒத்து கொள்ளாது.  உமட்டி கொண்டே வரும்.
என்ன செய்யலாம் என அவள் சிந்தனையில் சுழன்று கொண்டிருக்க,

“ஓய் பஞ்சுமிட்டாய்..! என்ன காலங்காத்தால இங்க வந்து நிக்கற? அந்த கண்மணி கூட சேராதனு சொன்னா கேக்கறீயா? பாரு உன்னயும் சோத்து பண்டாரமா மாத்தி விட்டுட்டா “

“அப்படி இல்லை, எதாச்சி சாப்பிடலாம்னு வந்தேன் ஆனா ஒன்னும் இல்லனு சொல்லிட்டாங்க ” என்றவள் நகர முயற்சிக்க,

” ஏன் காலையில சாப்பிடலயா? “

அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவள் முழித்து கொண்டு நிற்கும் பாவனையை வைத்தே, அவள் சாப்பிட்டு இருக்க மாட்டாள் என்ற தீர்மானத்திற்கு வந்திருந்தான்.

“இங்க உக்காரு ” என ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அவன் மறு பக்கம் அமர்ந்து கொண்டான்.

அவன் பேக்கில் இருந்து டிபன் பாக்ஸை எடுத்து அவள் முன்பு நகர்த்தி வைத்து,
” நீ சாப்பிடு..!”  என கூற,

” அய்யோ எனக்கு இத கொடுத்துட்டா நீங்க என்ன சாப்பிடுவீங்க? எனக்கு ஒன்னும் அவ்ளோ பசி எல்லாம் இல்ல ” என்றவள் எழ முயற்சிக்க,

அவள் கை பிடித்து அமர்த்தியவன்,
“சாப்பிடுனு சொன்னேன்..!” என்றான் உரிமை கலந்த அதட்டலில்.

அதில் சற்று மிரண்டவள், அமைதியாக எடுத்து உண்ண தொடங்கினாள்.

இவ்வளவு நாள் ஹாஸ்ட்டல் சாப்பாட்டை சாப்பிட்டு வெறுத்து போயிருந்தவளிற்கு உண்மையில் வீட்டு சாப்பாடு தேவாமிர்தம் போல் சுகித்தது..!

ரசித்து ருசித்து சாப்பிட்டாள்..!

” ரொம்ப சூப்பரா இருக்கு.. உங்க அம்மா கிட்ட சொல்லிருங்க, அவங்க சமையலுக்கு நான் ஃபேன் ஆகிட்டேனு..!”

“ஏதே அம்மாவா? இது ஐயாவோட கை பக்குவம்மா..!”

” நிஜமாவா?  நீங்களா சமச்சீங்க..?”

” அட ஆமாங்கறேன்..! என்னோட தொழிலே அது தானுங்கபோது அத கத்துக்காம இருப்பேனா? “

” புரில.. “

” கிட்டவா புரியற மாறி சொல்லுறேன்.. ” என்றவன் அவள் அருகே வந்து ரகசிய குரலில், ” எனக்கு கேட்டரிங் பிசினஸ் பண்ணனும்னு தான் ஆசை..! அதுக்காக தான் இங்க வேலைக்கும் சேந்து இருக்கேன்..! என்னோட பிளான் இது தான்னு தெரிஞ்சு எங்க நா இவங்களுக்கு போட்டியா வந்துருவேனோனு பயந்து என்ன எதாவுது பண்ணிட்டா..? அதனால இத டாப் சீக்ரெட்டா வச்சுக்கோ சரியா. யார்கிட்டயும் சொல்லிடாத.. “

” ஹா.. ஓகே ஓகே ஆல் தி பெஸ்ட் ” என்றாள்,அதே ரகசிய குரலில்.

இருவரும் சிரித்து கொண்டனர்..!

“பாஸ்..! பாஸ் பாஸ் பாஸ்..” என வருணையே சுற்றி கொண்டு வந்தாள் கண்மணி.

”  மிஸ்.கண்மணி போய் வேல
லைய பாருங்க.. “

” வேலைய தான் பாஸ் பாக்கறேன் “

” ம்ம்ச்.. இப்போ என்ன வேணும் உனக்கு? “

” என்ன பாஸ் ஒண்ணுமே தெரியாத மாறியே கேக்கறீங்க.. நீங்க எல்லாம் போற அந்த ட்ரிப்புக்கு என்னையும் கூட்டிட்டு போங்க..!”

” ஹேய்.. லூசு மாறி ஒளராத. நாங்க போறது ஒன்னும் ட்ரிப் இல்ல.. நம்ம ப்ராஜெக்ட் பத்தி ப்ரோமோட் பண்ணுறதுக்காக ஒன் வீக் மெடிக்கல் கேம்ப் நடத்தறோம் “

“அதான் அதான் அதே தான்..!நானு வரேன்.”

” அப்போ உன் வேலைய யாரு செய்வா?”

” அங்க வந்துட்டு,  அங்க இருந்து செய்யறேன்..! எப்படியும் பொட்டிய தட்டுற வேலை தானே? எங்க இருந்து செஞ்சா என்ன? “

“என்ன?”

” அதான் பாஸு .. லேப்டாப்ப சொன்னேன்..! பாத்திங்களா மொறக்கறீங்க..? பாரதியார் என்ன சொல்லி இருக்காரு? ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்வெடுக்கலாகாது பாப்பா..!னு சொன்னாரா இல்லயா? இப்படி ஓடியாடுற வயசுல என்ன வேலை செய்ய விடமாட்டேங்கறீங்களே! இதுலா உங்களுக்கே நல்லா இருக்கா? நான் உழைக்கனும் பாஸ் உழைக்கனும் ..! என்னோட ஒவ்வொரு செல்லும்.. ஏன் என் ரத்தம்,நாடி, நெரம்பு எல்லாம் நம்ம ப்ராஜெக்ட்டுக்காக துடிக்குது. இப்படி ஒரு போராளி மனசுல.. ஒரு லாரி மண்ண அள்ளி போட்டறாதீங்க பாஸு .. பாஸு ..! அந்த வெங்காய வெட்டி தலையன் மாதவ்வ எல்லாம் கூட்டிட்டு போறீங்க..? இந்த ஆபீஸே கதியா கெடக்கற ஒரு அப்பாவிய கழட்டி விட்டுட்டு போறீங்களே! உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லயா? சொல்லுங்க பாஸ் சொல்லுங்க..!”

அவளின் இந்த நீள உரையில் உறைந்து நின்றவன்.

” யாருக்குமே மரியாத கொடுக்கற பழக்கமே இல்ல..ம்ம்ம்?”

“அச்சோ… பாஸ்  மரியாதைங்கறது மனசுல இருந்தா போதும். இப்போ நா உங்கள என் மனசுக்குள்ள, சரியான கொரில்லா  இவ்வளவு கெஞ்சுறேனே கொஞ்சமாச்சி மனசு இறங்குதா பாரு மலை கொரங்கு அப்படினு திட்டிட்டு, வெளிய பாஸு
பாஸுனு கூப்பிட்டா உண்மையா மரியாதை கொடுக்கற மாறி இருக்குமா?
அய்யயோ இதுலாம் என்னோட மைண்ட் வாய்ஸ்னு நீங்க தப்பா நெனச்சிக்காதீங்க.. நா நிஜமாலுமே உங்க மேல மரியாத வெச்சி இருக்கேன் பாஸு..! ப்ளீஸ் ப்ளீஸ் நானு வரேனே..!  ரோஸ் மில்க் ப்ராமிஸ். என்னோட வேலை எல்லாம் கரெக்ட்டா பண்ணிருவேன். உங்களுக்கு எந்த தொந்தரவும் தர மாட்டேன். அது மட்டும் இல்லாம நம்ம டீலிங் மறந்துட்டிங்களா பாஸ்? நாம தான் இப்போ ப்ரண்ட்ஸ் ஆகிட்டோமே? உயிர் கொடுப்பான் தோழன்னு சொல்லுவாங்க. நீங்க என்னடானா,  எல்லாரும் போற வண்டியில்ல ஒரு சின்ன இடம் கூட கொடுக்க மாட்டேங்கறீங்க.. வெக்கம், வேதனை, அவமானம், துக்கம்..! உனக்கு கொடுத்து வெச்சது அவ்ளோ தான் மணி..! ப்ரண்டும் இல்ல ஷிப்பும் இல்ல.. ஒரேடியா போய் மூழ்க வேண்டியது தான்..! நான் போறேன் பாஸ் போறேன்.. நீங்க எல்லாம் சந்தோசமா போய்ட்டு வாங்க.. நா சாபம் கொடுக்கறேனு மட்டும் நெனச்சறாதீங்க, மனசார தான் வாழ்த்துறேனாக்கும்.. பை..!” என்றவள் அவனை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே நகர,

நெற்றியை நீவி யோசித்தவன்,

“ஒரு நிமிஷம்” அவன் சொன்னது தான் தாமதம். அவன் அருகே குடுகுடுவென ஓடி வந்தவள்,

“சொல்லுங்க பாஸ்.. ம்ம்னு ஒரு வார்த்த சொல்லுங்க டக்கு டக்குனு டிரஸ் எல்லாம் பேக் பண்ணி சட்டுனு ரெடி ஆகிருவா இந்த மணி..! ” கண்களில் ஆசை மின்ன அவள் கேட்டாள். ஏனோ அவள் கண்களில் தெரிந்த ஆர்வத்தை ஏமாற்ற மனமில்லை அவனிற்கு..!

“அது இல்ல.. யாருமே லேடீஸ் கூட இல்லாம உன்ன மட்டும் தனியா எப்படி..”

” அதுலா ஒன்னு பிரச்னை இல்ல பாஸ்..!நம்ம அஷ்வினியையும் கூட கூட்டிட்டு போய்யிரலாம்..  நா சொன்னா அவ ஒத்துப்பா..! தேங்க் யூ சோ.. மச் நா போய் அவ கிட்ட இத சொல்லறேன். “
எங்கே அவன் மனம் மாறி விடுமோ என்ற பயத்தில் அவ்விடம் தங்காது ஓடிவிட்டாள் கண்மணி..!

படபடக்கும் பட்டாசு போல், எப்பொழுதும் பொறிந்து தள்ளி அவன் கவனத்தை ஈர்த்து கொள்கிறாள் அவள்.

“சரியான ஊசி வெடி..” என்று முனுமுனுத்த அவன் இதழில் சின்ன புன்னகை தவழ்ந்தது..!

“டேய்… மாதவா ஒரு குட் நியூஸ் டா”

” என்ன? உன்ன வேலைய விட்டு தூக்கிட்டாங்களா? “

“வாய கழுவு நாயே..! என்னய ஓவரா வெறுப்பேத்துனில..? ட்ரிப் போறேன், ட்ரிப்பு போறேன்னு.  இப்போ நானு உங்க கூட வரேனே.!”

” ஓஹோ.. இதுலா ஒரு பெரிய விஷயமா. போம்மா அங்குட்டு எவ்வளோ வேலை கிடக்கு எனக்கு “

” போடா ஹாஃப் பாயில் ” என்றவள் அஷ்வினியின் கேபினை நோக்கி செல்ல,

“ஓய்.. அங்க எங்க போற?  உன் இடம் இந்த பக்கம்ல இருக்கு! “

“அஷ்வினிக்கும் சொல்லனும்ல? அவளும் தான் வரா “

“என்னது என் கூட அஷ்வினி வராளா?” என ஆச்சிரியமாய் வினவினான்.

“உன் கூட ஒன்னும் இல்ல என்கூட” பட்டென பதில் அளித்தாள் கண்மணி.

” சரி வா அவ, கிட்ட போய் சப்ரைசா சொல்லலாம் “

” ஒன்னும் தேவை இல்ல நானே சொல்லிக்கறேன்..!  “

“இல்ல கண்மணி, இந்த ட்ரிப் பத்தி உனக்கு என்ன தெரியும்? எல்லாத்தயும் தெளிவா எக்ஸ்பிளைன் பண்ணனும்ல”

“ஏன்டா பன்னி மூஞ்சி வாயா? நா வரேன் சொல்லும் போது ஒரு ரியாக்ஷனும் கொடுக்காம, இப்போ என்னடானா இது பண்ணனும் அது பண்ணனும்னு ரூல்ஸ் பேசிட்டு இருக்க? என்ன நடக்குது இங்க.  நீ போற ரூட்டே ஒன்னும் சரி இல்லயே டா மாதவா ?” என்றவள் அவன் காதை பிடித்து திருக,

“இஸ் ஆஆ வலிக்குது விட்றி கருவாச்சி! நா கரெக்ட்டான ரூட்ல தான் போய்ட்டு இருக்கேன்..! நீ நடுவுல கிராஸ் ஆகாம இருந்தா சரி தான். “

” நா கருவாச்சியா? நீ மட்டும் அப்படியே எம்ஜிஆர் கலரு! போடா அந்த பக்கம் எதாவுது அசிங்கமா திட்டிற போறேன்..!”

” என்ன சண்டை போடுட்டு இருக்கீங்க அண்ணனும் தங்கச்சியும்?” கேட்டு கொண்டே அங்கு வந்து நின்றாள் அஷ்வினி.

“அதுவா வினி, அவன் ரூட்டு விடறானாமா என்ன கிராஸ் பண்ண வேணாம்னு சொல்றான்”

” என்ன சொல்லுற கண்மணி எனக்கு புரில “

“அதான் உனக்கு..” அவள் பேசி முடிப்பதற்குள் அவள் வாயை பொத்தியவன்,

” அது நம்ம  அஃபிஷியல் ட்ரிப்பா ஒன் வீக் வெளியூர் போனும் அஷ்வினி. அங்க போறதுக்கான ரூட் சொல்லிட்டு இருந்தேன்.  அத தான் இவ இப்படி சொல்லுறா வேற ஒன்னும் இல்ல “

” நாமனா நானுமா? “

“கண்டிப்பா “

“அய்யயோ நா வரல நீங்க போய்ட்டு வாங்களேன் “

” அதுலாம் இல்ல நீயும் கண்டிப்பா வந்தே ஆகனும்.  ஹேய் ஒரு வாரம் தானே வினி ப்ளீஸ் வாயேன் எனக்காக?”

“அது..”

” இப்படி கெஞ்சிட்டு இருந்தாலாம் வேலைக்கு ஆகாது நீ வர, இன்னிக்கு நானு உன்கூட உன் ஹாஸ்டல் ரூமுக்கு வரேன். திங்க்ஸ் பேக் பண்ணுறோம்  நாளைக்கு கிளம்பறோம்,அவளோ தான் டாட் “

கடலை வெறித்து பாத்து கொண்டிருந்தான் வருண். அவன் பாதத்தை தொட்டு தொட்டு செல்லும் அலை போல், சில நினைவுகள் அவன் மனதில் வந்து வந்து போய் கொண்டிருந்தது.

” உன்னால ஒன்னும் பண்ண முடியாது வருண்! நீ தோத்துட்டே இருக்கனும் அத நான் பாத்துட்டே இருக்கனும் ” அன்று மாலில் வைத்து அவன் ஆருயிர் நண்பன் கார்த்தி சொன்ன வார்த்தைகள் அவன் காதில் ரீங்காரமிட்டு கொண்டே இருந்தது.

அப்படியே மணலில் அமர்ந்தவனிற்கு ஏனோ வாழ்க்கையே கசந்து போனது போல் ஓர் உணர்வு. அலை கடல் தீண்டி தீண்டி அங்கு யாரோ கட்டிவிட்டு சென்ற மணல் கோட்டை ,  மெல்ல கரைய அவனின் வாழ்வும் அப்படி கரைவது போல் ஒரு பிம்பம் தோன்றியது.

‘நிச்சயம் நம்மால் இதை நல்ல விதமாக முடித்து விட முடியுமா? ‘ தினம் தினம் அவனுள் எழும் கேள்வி இதுவே.

“விட்றா மாப்ள நா இருக்கேன் எதுனாலும் பாத்துக்கலாம் ” என சிறு வயதில் இருந்தே தனக்கு பக்க பலமாக இருந்து,  அவனின் ஒவ்வொரு வெற்றிக்கும் காரணமாக இருந்த அவன் உயிர் நண்பன், இன்று எதிரியாய் நிற்கும் காலத்தின் கோலத்தை நினைத்து வெற்று புன்னகை சிந்தினான்.

நண்பன் மட்டுமா மாறினான்? அவன் வாழ்க்கையே அல்லவா முழுதாக மாறி விட்டது..! தேய் பிறை போல் தேய்ந்து கொண்டே போகும் அவன் வாழ்வில்
நிறைந்த பௌர்ணமியாய் சீக்கிரம் ஒளி வீசுவாள் நம் கண்மணி..!

சாய்ந்திரம் மகிஷாவை ஸ்கூலில் இருந்து கூட்டி கொண்டு வீடு வந்து சேர்ந்தாள் சாத்விகா.

வீட்டை திறக்கும் முன்பே வீடு திறந்திருந்தது. துருவ் தான் வந்திருப்பான் என யூகித்தவள் பெரிதாக எதுவும் அலட்டி கொள்ளாமல்
மகளை கவனிக்கும் வேலையில் இறங்கினாள்.

அவளை குளிக்க வைத்து, ஆடை மாற்றி, மகளிற்கு ஜூஸும், தனக்கு டீயும் போட்டு கொண்டவள் சிறிது நேர ஓய்வுக்கு பின் இரவு உணவை தயாரிப்பதில் கவனத்தை செலுத்தினாள்.

காய்கறிகளை எடுத்து கழுவி அவள் நறுக்கி கொண்டிருக்க, உள்ளே நுழைந்தான் துருவ்.

அவளை ஓர பார்வை பாத்தவன்,

” சாத்வி ” என அழைத்தான். அவள் பதில் கூறாமல் இருக்க, ” சாத்விகா ” என்றான் அழைப்பில் கொஞ்சம் கடினத்தை கூட்டி.

“என்ன “

” என்ன பண்ணுற “

” பாத்தா தெரில?  சமையல் தான் பண்ணுறேன். “

” ம்ம்ச் சமைலுக்கு தான் என்ன பண்ணுறேன்னு  கேட்டேன். “

” என்னமோ பண்ணுறேன். கரெக்ட் டைம்முக்கு வந்துரும் நீங்க வழக்கம் போல வந்து சாப்பிடலாம் “

” ஏன் இப்போ கோவபடுற?”

“நா எப்பும் போல தான் பேசறேன் உங்களுக்கு தான் வேற மாறி இருக்கு!”

” சரி விடு, சமைக்க வேணா வெளிய போய் சாப்பிட்டுக்கலாம் இன்னிக்கி இருந்த மீட்டிங் கேன்சல் ஆகிருச்சு!”

” உங்க இஸ்டத்துக்கு எல்லாம் பண்ண முடியாது. ஏற்கனவே பாதிக்கு மேல சமையல் வேல முடிஞ்சிது. இஷ்டம் இருந்தா சாப்பிடுங்க இல்ல நீங்க மட்டும் வெளிய போய் சாப்பிட்டுகோங்க. நானு மகியும் எங்கயும் வரதா இல்ல!”

” ஹேய்.. என்னடி? இப்படி கத்திரிச்சி பேசுற? நீயும் மகியும் இல்லாம நா மட்டும் எப்படி டி போவேன்? “

” போனதே இல்ல பாருங்க எங்களைய விட்டுட்டு? எங்கள பத்தின நெனப்பு எல்லாம் உங்களுக்கு இருக்கா என்ன? “

அவளின் குத்தல் பேச்சில் மனம் கலங்கியவன்,

” சாத்வி! ஏன் இப்படி பேசுற? உங்களுக்காக தான டி நா நேரம் காலம் பார்க்காம உழைக்கறேன்!”

” சும்மா சப்ப கட்டு கட்டாதீங்க!  உங்களுக்கு என் மேல கொஞ்சம் கூட அக்கறையே இல்ல..! இந்த ஒரு வாரத்துல என் கிட்ட ஒரு வார்த்த பேசி இருப்பீங்களா? இல்ல நா வேலைக்கு போறேனே அத பத்தி எதாவுது விசாரிச்சீங்களா? அது எப்படி பண்ணுவீங்க..? என்ன பத்தின நெனப்பு உங்களுக்கு இருந்தா தானே? எக்கேடோ கெட்டு போனு என்ன தண்ணி தெளிச்சு விட்டுடீங்க தானே? ” ரயில் பெட்டி போல் அவளின் குற்றச்சாட்டு நீண்டு கொண்டே போக அதில் திகைத்தான்.

” ஹேய் என்னடி மாத்தி மாத்தி பேசுற? அன்னைக்கு நா பேச வந்தேன் ஆனா நீ தான் மூஞ்ச மூஞ்ச காட்டுன. சரி நீ கோவமா இருக்கியேனு நானு விட்டுட்டேன்.. அப்றம் என்ன சொன்ன? வேலை ..! நா சொன்னேனாடி உன்ன வேலைக்கு போக சொல்லி? இல்ல நீ தான்  என் கிட்ட ஒரு வார்த்த கேட்டியா? பெரிய புரட்சி பெண் மாறி என் வாழ்கை என் கையில் நான் தான் முடிவு பண்ணுவேன், உங்ககிட்ட கேக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லனு நீ தானடி வானதுக்கு பூமிக்கும் குதிச்சிட்டு போன..? இப்போ என்னடானா இப்படி பேசுற? ச்ச..உன் கிட்ட வந்து பேசிட்டு இருக்கேன் பாரு.. என்ன சொல்லனும் ” என்றவன் கத்திவிட்டு வெளிய போக
அவனின் இந்த சீற்றத்தில் மலைத்து போய் நின்றுருந்தவள் அப்படியே அமர்ந்து முட்டியை கட்டி கொண்டு தேம்பினாள்.

” அப்போ நா கோவமா இருந்தா என்ன அப்படியே விட்டுருவீங்களா? “

அவளின் இந்த இத்தனை ஆர்ப்பாட்டமும் அவனின் கவனத்தையும் கொஞ்சலையும் ஈர்ப்பதற்காகவே!!

” சாத்வி  என்ன பண்ணுற!”

” ம்ம்ச் என்கூட பேசாதீங்க போங்க “

” அப்படி எல்லாம் போக முடியாது மேடம்!” என்றவன் அவளின் கையை பிடித்து இழுக்க,

” போங்க என்னய திட்டுனீங்கள, இப்போ மட்டும் ஏன் பேசறீங்க? “

” அப்படி தான் டி பேசுவேன் ஏ பொண்டாட்டி..! “

” என்னால எல்லாம் அப்படி பேச முடியாது போங்க “

” ஸாரி டா ஏதோ டென்ஷன் ல சொல்லிட்டேன். ” என்றவன் அருகில் இருந்த சப்பாத்தி மாவை எடுத்து அவள் முகத்தில் பூச, அதில் விழித்தவள்,

” ம்ம்ஹ்ம்ம்.. எனக்கு இப்படி பண்ணா புடிக்காதுனு உங்களுக்கு தெரியும்ல.. ” என தன் பங்கிற்கு மாவை எடுத்து அவன் மேல பூச போக அதற்குள் அவன் ஓடி விட்டான். அவனை துரத்திக்கொண்டே அவளும் ஓட சட்டென அவளை பின்னால் இருந்து வளைத்து பிடித்தவன் அவளை அப்படி அவனோடு இறுக்கி கொள்ள, காதோரம் கிசுகிசுப்பாய்,

” சாத்வி குட்டி கோவம் போயிருச்சா? “

“இல்ல” அவனின் அணைப்பு இன்னும் இறுக,

“இப்போ “

“இன்னும் கொஞ்சம் இருக்கு ” என்றாள் வெட்க புன்னகையோடு..!

“இப்போ?” என்றவன் அவளை அவன் பக்கம் திருப்பி நெற்றி முட்டி நாசி உரசி கேட்க,

” ம்ம்ம் ” என்றவள் அவனை இறுக அணைத்து கொண்டாள்.

இதை நினைத்து பார்த்தவளிற்கு கண்களில் கண்ணீர் பெருகியது . “நீங்க ரொம்ப மாறிட்டீங்க துருவ் ” என்றாள் விசும்பலுடன்.

அவளிடம் கத்தி விட்டு அறைக்கு வந்த துருவ்விற்கு நிலைகொள்ளவில்லை..!
என்ன பேசினாலும் இப்படி விதண்டாவாதம் செய்யும் அவளை எப்படி சமாளிப்பது என ஒன்றும் விளங்கவில்லை..!

இவள் தானா? குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் கூட முடியாமல்,  எனக்கு வெளி சாப்பாடு ஒத்து கொள்ளாது என்ற ஒரே காரணத்திற்காக அவள் தாயிடம் சண்டையிட்டு கொண்டு எனக்காக இங்கு வந்தாள்? இவளா என் சாத்வி? நான் உணரும் முன்பே என் தேவையை உணர்ந்து எனக்காக எல்லாம் பார்த்து செய்தவள் இவள் தானா? இன்று வாய் விட்டு பேசியும் என்னை உணராமல் போகிறாளே..!

“நீ ரொம்ப மாறிட்ட சாத்வி..!” என்றான் ரூமில் மாட்டி இருக்கும் அவளின்  படத்தைப் பார்த்து.

அவளும் மாறவில்லை அவனும் மாறவில்லை. அவர்களுக்குள் இருக்கும் காதலும் மாறவில்லை.
பிறகு என்ன தான் மாறியது இவர்களுக்குள்…?

காலமும் சூழ்நிலையும் தான்..!
சூழ்நிலைக்கேற்ப  துணையின் மனதை புரிந்து கொண்டு நடந்தால் காதல் என்னும் சிறகு கொண்டு வாழ்க்கை பயணத்தை  சிறப்பாக கொண்டு போகலாம்..!

ஆனால் காலத்திற்கேற்ற புரிதலும் மனபக்குவமும் இல்லை எனில் அந்த காதலே நமக்கு சுமையாகி நம் வாழ்க்கை பயணத்தை முடக்கி விடும்..!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
22
+1
5
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்