Loading

தன் முன்னே நின்று கொண்டிருந்தவளை கேள்வியாய் நோக்கியவன்‌ பின் நினைவு வந்தவனாக “நீங்க தான் அபினவ் சொன்னவங்களா… வாங்க கிளம்பலாம்.. உங்க லக்கேஜ குடுங்க.. நான் எடுத்து வெக்கிறேன்..” என்றதும் தான்‌ தன்னிலையை அடைந்தாள் சிதாரா. 

“மாஸ்க் போட்டு இருக்கிறதனால அவனுக்கு நம்மள அடையாளம் தெரியல போல… அதுவும் நல்லதா போச்சி… வனி…. இன்னெக்கி உனக்கு இருக்கு…” என நினைத்துக்கொண்டு காரில் ஏறினாள். 

காரில் ஏறியதுமே செய்த முதல் காரியம் லாவண்யாவுக்கு மெசேஜ் அனுப்பியது தான். 

“யாரடி பிக்கப் பண்ண அனுப்பி வெச்சி இருக்காய்… கொஞ்சம் கூட அறிவே இல்லயா… யார என்னோட வாழ்க்கைல திரும்ப சந்திக்க கூடாதுன்னு நெனச்சேனோ அவனயே அனுப்பி வெச்சி இருக்காய்..” என அனுப்பினாள். 

அங்கு வீட்டில் அக்ஷராவுடன் சேர்ந்து அடுத்த நாள் டூர் செல்ல தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொண்டிருந்த லாவண்யா சிதாராவின் மெசேஜ்ஜைப் பார்த்ததும் எதுவும் புரியாமல் விழித்தாள். 

அக்ஷரா, “என்னாச்சு வனி.. என்ன யோசிக்கிறாய்..” என்க அவளிடம் மெசேஜை காட்டினாள் லாவண்யா. 

சில நொடிகளில் இருவரும் ஒரே சமயத்தில் “பிரணவ் அண்ணா” என்றனர். 

உடனே இருவரும் ஆதர்ஷையும் அபினவ்வையும் தேடிச்சென்று விசாரித்ததில் அபிணவ் சொன்ன தகவலைக் கேட்டு தலையில் அடித்துக் கொண்டனர். 

ஆதர்ஷ் அவசரமாக, “சத்தியமா எனக்கு தெரியல நியாமா.. இவன் நான் பார்த்துக்குறேன்னு சொன்னதும் நானும் பிசியாகி பேசாம விட்டுட்டேன்.. இவன் இப்படி செய்வான்னு நெனக்கல..” என்றதும் தோழிகளின் பார்வை அபினவ்வை நோக்கியது. 

மூவரையும் பார்த்து இளித்து வைத்தவன், “நான் அத பத்தி யோசிக்கவே இல்ல மச்சான்.. அவசரம்னு நீங்க சொன்னதும் அவன தான் எனக்கு ஞாபகம் வந்துச்சி.. ஏதும் ப்ராப்ளம் இல்லன்னு நெனக்கிறேன்.. நான் பிரணவ்வுக்கு கால் பண்ணி பார்க்குறேன்..” என அங்கிருந்து நழுவினான். இல்லாவிட்டால் யார் மூவரிடமும் அடி வாங்குவது…

இங்கு காரில் ஏறி சிறிது நேரத்திலே சிதாராவின் மொபைல் ஓசை எழுப்பியது. 

திரையில் தெரிந்த பெயரை பார்த்ததும் இவ்வளவு நேரம் காணாமல் போன உற்சாகம் மீண்டும் அவளைத் தொற்றிக் கொண்டது. 

இவள் அழைப்பை ஏற்றதும் அந்தப் பக்கம், “ஹேய் மினியன்… உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என் கிட்ட ஒரு வார்த்த கூட சொல்லாம நீ பாட்டுக்கு கிளம்பி இந்தியா வந்திருக்காய்… நான் வரும் போது கூட நீ சொல்லவே இல்ல..” என்க, “உனக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு தான் வளர்ந்து கெட்டவனே.. சரி நீ என்ன பண்ணுறாய்.. நா இல்லாம ரொம்ப ஹேப்பியா இருக்காய் போல..” என சிதாரா பேச ட்ரைவர் சீட்டில் அமர்ந்து காரை ஓட்டிக்கொண்டிருந்தவனின் நெற்றியில் யோசனை முடிச்சுகள். 

பிரணவ் மனதில், “இந்த வாய்ஸ் நம்ம ரொம்ப கேட்டு பழக்கப்பட்ட வாய்ஸா இருக்கே…யாரா‌ இருக்கும் என யோசித்த வண்ணம் ஃப்ரொன்ட் மிரர் வழியாக சிதாராவை பார்த்தான். மாஸ்க் போட்டு இருந்ததால் அவனால் அடையாளம் காண இயலவில்லை. 

“ப்ச், யாரா இருந்தா நமக்கென்ன” என மீண்டும் பாதையில் கவனம் செலுத்தினான். சிதாராவோ அழைப்பில் மூழ்கி இருந்தாள். 

அந் நேரம் தான் அபினவ் பிரணவ்வை தொடர்பு கொண்டான். எடுத்ததும், “மச்சான் ஆல் ஓக்கே தானே.. எதுவும் பிரச்சினை இல்லல்ல… எங்க இருக்கீங்க..” என அபினவ் பதற்றமாக கேக்க, பிரணவ் “எதுக்கு மச்சான் இவ்ளோ டென்ஷனா இருக்காய்.. பக்கத்துல வந்துட்டோம்… ஆல் ஓக்கே.. என்ன பிரச்சினை வர போகுது… நீ கூட்டிட்டு வர சொன்னவங்கட முகத்த கூட நான் பாக்கல இன்னும்..” என்க அந்தப்பக்கம் அபிணவ் பெருமூச்சு விடுவது நன்றாகவே கேட்டது. 

பின் அபினவ், “சரி மச்சான். நீ சீக்கிரமா வந்து சேரு.. நாம அப்புறமா பேசலாம்..” என பிரணவ் மேலும் கேள்விகளை அடுக்கு முன் அவசரமாக அழைப்பை துண்டித்தான். 

பிரணவோ, “என்னாச்சு இவனுக்கு..‌எதயுமே முழுசா சொல்லுறான்‌ இல்ல..” என சலிப்பாக கூறிக் கொண்டான். 

சிறிது நேரத்தில் கார் கிராமத்தை‌ அடைந்தது. கார் நிறுத்தப்பட்டதும் யன்னல் வழியாக வீட்டைக் கண்டவள் மிகவும் சந்தோஷம் அடைந்தாள். 

பயணம் முழுவதும் அவளுடன் பேசிக்கொண்டு இருந்தவனைக் கூட மறந்து விட்டாள். 

மறுமுனையில் மினி.. மினி.. எனக் கத்தவும் “பாய்டா.. நான் உன் கூட அப்புறம் பேசுறேன்..” என்று விட்டு அழைப்பை துண்டித்து விட்டாள் சிதாரா. 

வண்டியிலிருந்து இறங்கியவள் லக்கேஜ்ஜை கூட எடுக்காமல் அவனிடம் எதுவும் சொல்லாமல் நேராக வீட்டை நோக்கி நடந்தாள். 

அவள் செல்வதைக் கண்ட‌ பிரணவ், “அவ்வளவு தூரம் ஓசில இந்தப் பொண்ணுக்கு ட்ரைவர் வேலை பாத்திருக்கேன்.. ஒரு தேங்ஸ் கூட சொல்லாம போறத்த பாரு.. இதுக்கெல்லாம் அந்த அபினவ்வ சொல்லனும்…” என எப்போதும் போல் தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்.

பூஞ்சோலை கிராமம்

லாவண்யா பிறந்து வளர்ந்த இடமே பூஞ்சோலை கிராமம். சென்னையிலிருந்து சற்று தொலைவிலே இவ்வூர் அமைந்துள்ளது (கற்பனை). இயற்கை வளங்களுக்கு குறைவில்லாத கிராமம். லாவண்யாவின் குடும்பம் உயர் நடுத்தர வர்க்கமாகும். அவர்களின் வீடு தான் அவ்வூரிலே ஓரளவு பெரியது. பழைமை மாறாது கட்டப்பட்ட அவ் வீட்டை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். 

அங்கு தான் இன்று நண்பர்கள்‌ அனைவரும் கூடி உள்ளனர். அனைவரும் வீட்டினுள் அமர்ந்து வெகு நாட்களுக்கு பின் சந்தித்ததால் இடைப்பட்ட காலத்தில் நடந்த சம்பவங்கள் பற்றி‌ பேசிக்கொண்டு இருந்தனர். எனவே யாரும் சிதாரா வந்து இறங்கியதை அறியவில்லை. 

வீட்டு வாசற்படியில் அமர்ந்து வெற்றிலை மென்று‌ கொண்டிருந்த லாவண்யாவின் பாட்டி தன்னை நோக்கி வந்த பெண்ணை கண்ணாடியை அணிந்து யாரென பார்த்தார். 

பின், “யாரும்மா நீ.. ஏதாச்சும் உதவி கேட்டு வந்திருக்கியா.. ” எனக் கேட்டு விட்டு வீட்டினுள் எட்டிப் பார்த்து “எலேய் முத்து… உங்க ஐயாவ கூப்புடுல… ” எனக் குரல் கொடுத்தார். 

சிதாரா முகத்திலிருந்த மாஸ்க் மற்றும் சன்கிளாஸை கழற்றியவள் அவரை பார்த்து “நல்லா பாரு லட்சுமி..‌என்ன தெரியலயா” என்க தன்னையே பெயர் சொல்லி அழைத்ததும் “யாரும்மா நீ.. உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்னயே‌ பேரச் சொல்லி பேசுவாய்..” என வயதானவர்களுக்கே உரித்தான கோவத்தில் கேட்க சிதாரா சிரிக்கவும் இன்னும் கடுப்பானார். 

வாசலில் தன் பாட்டி கோவமாக யாருடனோ பேசுவதைக் கேட்டதும் அக்ஷராவுடன் வெளியே வந்து பார்த்த லாவண்யா சிதாராவைக் கண்டதும் மகிழ்ச்சியில் அவளை அணைத்துக் கொள்ள அக்ஷராவும் அவர்களுடன்‌ இணைந்தாள். 

அக்ஷரா, “எப்போ வந்தாய் சித்து ” என்கவும் “இப்போ‌ தான்டி” என்றவள் இன்னும் சிரிப்பதை நிறுத்தவில்லை. தன்னை பெயர் சொல்லி அழைத்த பெண்ணை தன் பேத்தி அணைத்திருப்பதைக் கண்டவர் லாவண்யாவிடம், “யாரு கண்ணு இது என்னயே பேரச் சொல்லி கூப்பிட்றா.. உன்னோட சினேகிதியா ” எனக் கேட்க அவருக்கு பதில் கூறச் சென்றவளை தடுத்த சிதாரா தோழிகளை விடுத்து பாட்டியின் தோளில் கை போட்டவள் “இந்த வீட்டு மகாலட்சுமிய பேர சொல்லி கூப்பிட்ற தைரியம் என்ன தவிர யாருக்கு இருக்கும் லட்சு” என்க சிதாராவை அடையாளம் கண்டு கொண்டவர் “சீதா கண்ணு.. எப்படிடா இருக்காய்.. உனக்கு இப்ப தான் இந்த பாட்டிய பாக்கனும்னு தோணுச்சா..” எனக் கவலையாக கேட்க, அதற்குள் லாவண்யா “அச்சோ பாட்டி.. அவ பேரு சிதாரா.. சீதா இல்ல..” என்கவும் சிதாரா “நீங்க ரெண்டு பேரும் எதுவும் சொல்ல வேணாம்.. என்னோட லட்சுக்கு மட்டும் நான் எப்பவும் சீதா தான்..” என அவர் கன்னத்தில் முத்தமிட்டாள். 

பாட்டி, “சீதா தான் அழகா இருக்கு.. அந்த பேரு என்னமோ என் வாய்லயே வரமாட்டேங்குது…அவ கெடக்குறா… நீ சொல்லு கண்ணு.. என்ன இவ்ளோ எலச்சி போயிருக்காய்.. அந்த வெளிநாட்டுல நல்ல சாப்பாடு கெடயாதா.. கண்டதயும் திண்ணுட்டு எப்படி இருக்காய் பாரு.. போதாக்கொறெக்கி என்ன ட்ரெஸ் இது.. பையனாட்டம் பேண்ட்டு சட்டன்னு.. கூந்தல வேற விரிச்சு விட்டுட்டு வந்திருக்காய்…” என அவளை மேலிருந்து கீழ் வரை அளவிட்டபடி கூறியவரைக் கண்டு தலையில் அடித்துக் கொண்ட அக்ஷரா, “அது தான்‌ ஃபேஷன் பாட்டி.. அதுவுமில்லாம யூ.எஸ்ல இங்க போல ட்ரெஸ் பண்ணினா சுத்தி இருக்கிறவங்க சிரிப்பாங்க..” என்கவும் “என்ன கன்றாவி பேஷனோ.. நான் ஒருத்தி கூறு கெட்டவ.. தங்கத்த வாசல்லயே வெச்சி பேசிட்டு இருக்கேன்.. நீ வா கண்ணு உள்ள.. இன்னிக்கு உனக்கு என் கையாலயே சமச்சி பரிமாறுறேன்..” என பாட்டி அவளை உள்ளே அழைக்க, “வனி.. அச்சு.. என்னோட லக்கேஜ்ஜ கார்லயே விட்டுட்டு வந்துட்டேன்.. அத கொஞ்சம் உள்ள எடுத்துட்டு வாங்க” என்று விட்டு பாட்டியுடன் உள்ளே சென்றாள் சிதாரா. 

போகும் வழியில் பாட்டி “எலேய் முத்து.. நம்ம தோட்டத்துல இருந்து நல்ல இளனியா வெட்டி எடுத்துட்டு வா” என வேலைக்காரரிடம் கட்டளையிட்டு விட்டே சென்றார். 

அவர்கள் செல்லும் வரை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் ஒருவரையொருவர் பார்க்க பின் அக்ஷரா, “ஏன் வனி.. எனக்கு ஒரு டவுட்டு.. இவ நம்ம ஃப்ரென்டா இல்ல அவங்க ஃப்ரென்டா.. நம்மள கொஞ்சம் கூட மதிக்கவே இல்ல ” என்க “எனக்கும் அதான் டவுட்டு அச்சு.. சரி வா அவ லக்கேஜ்ஜ எடுத்துட்டு வருவோம்..” என்று விட்டு இருவரும் காரை நோக்கி சென்றனர்.

❤️❤️❤️❤️❤️

ரெண்டாவது அத்தியாயம் பதிவிட்டுட்டேன் மக்களே… படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க.. vote & comments பண்ணுங்க.. உங்க பொன்னான ஆதரவ எனக்கு வழங்குங்க.. நன்றி

– Nuha Maryam –

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
8
+1
1
+1
1

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  11 Comments

  1. Varuna Athrika

   சூப்பர் எபி நுஹா சிஸ்… ப்ரணவ், சித்து இடைல என்னவா இருக்கும்???

  2. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான குடும்பக் கதை. நகைச்சுவையும், அழுத்தமும் கொண்ட சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.

  3. நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல். பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க முடிந்தது.