Loading

அத்தியாயம் – 19: வான் வீழும் பேரிடி!

ருத்ரன் இப்படி அக்னியைத் தன் வீட்டிலேயே தங்க வைத்தது ஊர் மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்தச் சலசலப்புக்குக் காரணமானவர்களோ அதைப் பற்றியெல்லாம் கண்டுகொள்ளாது தங்களது உலகில் மற்றதை தொலைத்திருந்தார்கள்.

அவள் ருத்ரனின் வீடு வந்து அன்றோடு ஒரு வாரம் முடிந்திருந்தது. மெல்ல மெல்ல தன் வேலைகளைத் தானே செய்து கொண்டிருந்தாலும் அவளுக்கு உதவிக்கென ஒரு செவிலியை அமர்த்தியிருந்தான் ருத்ரன்.

அன்று மாலை செவிலியின் உதவியுடன் தனது பிசியோவை முடித்தவள், அவளை வீட்டுக்குச் செல்லப் பணித்துவிட்டு, ருத்ரனின் அறை நோக்கிச் சென்றாள்.

இந்த ஒரு வாரத்தில் அடுத்த அறையாகவே இருந்தாலும் ருத்ரனைத் தேடி அவனது அறைக்குச் சென்றதில்லை அக்னி. இது தான் முதல் முறை.

மேல் சட்டை போடாமல், கருநிற இரவு பேண்ட் மட்டும் அணிந்து, கையில் ஒரு ரிவால்வரை வைத்து அதில் எதையோ நோண்டிக் கொண்டிருந்தவனோ, அறை வாயிலில் வந்து கதவோரம் சாய்ந்து நின்றவளைப் பார்த்து இனிதாய் அதிர்ந்தான்.

“என்னங்க மேடம்.. தைரியமா என் ரூம் பக்கமெல்லாம் எட்டி பார்க்கறீங்க? பார்த்து நான் பாட்டுக்கு கண்ட்ரோல் இல்லாம பாய்ஞ்சிட போறேன்..” என்று அவன் கூற, அக்னியோ சத்தமாகச் சிரித்தாள்.

“ஆஹா.. அப்படியே பாயற ஆளைப் பாரு..” என்று அவள் மூக்கைச் சுருக்கி பழிப்பு காண்பிக்க, சிரித்தபடியே அவளை உள்ளே வருமாறு சைகை செய்தவன், கையிலிருந்த துப்பாக்கியை மேஜை டிராயரில் பத்திரப்படுத்திவிட்டு, வாட்ரோபைத் திறந்து மேல் சட்டை அணிந்தவன், தனது படுக்கையிலேயே அமர்ந்திருந்த அக்னியை நோக்கிச் சென்றான்.

அவளுக்கு எதிரே ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தவன்.. “அப்பறம் என்ன விஷயம்? நீ இப்படி எல்லாம் தனியா என் ரூமுக்கு வர மாட்டியே?” என்றான் விட்டதைத் தொடர்ந்து.

அவனது கேள்வியில் இப்பொழுது சலிப்பான ஒரு பெருமூச்சு தான் வந்தது அக்னியிடமிருந்து.

“நானே ஒரு மாசமா ஹாஸ்ப்பிட்டல், வீடுன்னு நாலு செவுத்துக்குள்ளயே இருக்கேன்.. இங்க வந்தும் கூட நீங்க காலைல சாப்பிட்டு நேரம், மதியம் சாப்பாட்டு நேரம், இந்த ரெண்டைத் தவிர என்கூட நேரம் செலவழிக்கறது இல்லை.

உங்களுக்கு வெளில ஆயிரம் பேர் இருக்காங்க பேச! ஆனா எனக்கு?” என்று கேட்டுப் புருவம் உயர்த்தியவளை ஆசையாகப் பார்து வைத்தன ருத்ரனின் கண்கள்.

அவன் பார்வையை கவனித்தவள்..

“ஹ்ம்ம்.. இப்படி பார்த்தா என்ன அர்த்தமாம்? ரொம்ப போர் அடிச்சுது. அதான் உங்ககிட்ட பேசலாம்னு வந்தேன்.” என்று கூற, அவனோ நாற்காலியை அவளை ஒட்டிப் போட்டுக் கொண்டு,

“ஹ்ம்ம்.. பேசலாமே.. என்ன பேசலாம்?” என்று வினவினான்.

அவனது கேள்விக்கு யோசிப்பது போலப் பாவனை செய்தவள், “அதாவது..” என்று கூறும் முன், ருத்ரனின் அலைபேசி ஒலியெழுப்பியது.

அதை அனாயசமாக எடுத்தவன், உதட்டில் ஒரு வெற்றிச் சிரிப்புடன் அந்த அழைப்பை அணைத்துவிட, அக்னி மீண்டும் தொடர்ந்தாள்.

அவள் மறுபடியும் வாயைத் திறப்பதற்குள் அவனுக்கு அடுத்த அழைப்பு வந்துவிட.. சட்டென மூண்ட எரிச்சலுடன், முகம் திருப்பிக் கொண்டவள்..

“நீங்க பேசி முடிச்சுட்டு வாங்க. நாம அப்பறம் பேசிக்கலாம்.” என்று கூற, அவளது அந்தக் கோபத்தையும் ரசிக்கவே செய்தான் அவன்.

“ஆமா.. நான் போன் கட் பண்ணிட்டே இருந்தா, அவங்க திரும்பத் திரும்பக் கூப்பிட்டுட்டே தான் இருப்பாங்க.. மேனர்லெஸ் பாய்ஸ்..” என்று அவர்களைத் திட்டியவன், ஓர் ஆத்ம திருப்தியுடனே அந்த அழைப்பை மீண்டும் ஊன்றிப் பார்த்துவிட்டு, நிதானமாக அதை ஏற்றான்.

அவனது அந்த நிதானத்துக்கும், தனக்கும் சம்மந்தமே இல்லை என்று மறுமுனை பொங்கியது.

படபடவெனப் பட்டாசாய் பறந்து வந்த மறுமுனையின் செய்தி கேட்டுக் கண்கள் விரிந்தன ருத்ரனுக்கு. மறுமுனையின் பேச்சைப் பொறுமையாகக் கேட்டவன், ஒரே வார்த்தையில், “டீல்!” என்றுவிட்டு அணைப்பைத் துண்டித்துவிட்டான்.

போன் பேசச் சென்றவன் இரு நிமிடங்களிலேயே திரும்பி வந்து விடவும் அவனை ஆச்சர்யமாகப் பார்த்தாள் அக்னி.

“அதுக்குள்ள போன் பேசிட்டீங்களா என்ன?” என்று அவள் கேட்க, அவளது தலையைச் செல்லமாகக் கலைத்துவிட்டவன்,

“ஹ்ம்ம்.. நினைச்ச காரியம் நடந்துடுச்சு.. அதான் சீக்கிரம் போனை வச்சுட்டேன்..” என்று அவன் கூற, அக்னியோ..

“அதென்ன காரியம்?” என்றாள் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு.

அதைக் கண்டு அவளைப் பார்த்து மென்மையாகச் சிரித்தவன், “நமக்கு ரெண்டாயிரம் கோடி வரப்போகுது!” என்று கூறிவிட்டு குளியலறை நோக்கிச் செல்ல, அக்னியின் வழிகளோ அதிர்ந்து விரிந்தது.

‘ரெண்டாயிரம் கோடி? ரெண்டாயிரம் கோடி யார் இவனுக்குக் கொடுக்கறாங்க?’ என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே உடல் கழுவிவிட்டு வெளியே வந்தான் ருத்ரன்.

அவள் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருப்பதைக் கண்டவன்..

“என்ன யோசனை?” என்று கேட்க, அதில் சற்றுத் தடுமாறியவள் சட்டென யோசித்து,

“இ.. இல்ல.. வந்து,. வந்து.. ஆங்.. உங்க.. உங்க வீட்டுக்கு ஏன் யாரும்.. யாருமே வர்ரதில்ல?

உங்க மாமா, அம்மா.. அப்படி யாருமே?

இவ்வளவு பெரிய வீட்டுல ஏன் நீங்க மட்டும் இருக்கீங்க?” என்று அவள் என்னவோ சாதாரணமாகத் தான் கேட்டாள்.

ஆனால் அவள் அந்தக் கேள்வியைக் கேட்டு முடித்த பின் நிமிர்ந்து பார்த்தால், ருத்ரனின் கண்களிரண்டும் செக்கச் செவேல் எனச் சிவந்து போய் ருத்ர மூர்த்தியாகவே சிவந்திருந்தான்.

“ருத்ரன்.. என்னாச்சு? ஏன் இப்படி இருக்கீங்க?” என்று இவள் பதறிப் போய்க் கேட்க, ருத்ரனோ கண்களை இறுக்க மூடித் திறந்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டான்.

அவளது கேள்விக்குப் பதிலேதும் கூறாமல், அவளது கரத்தைப் பிடித்துத் தரதரவென இழுத்துச் சென்றவன், அவளை வீட்டுப் பின்புறத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றான்.

அங்கே சிறிதாகக் கோவில் போல ஒரு கட்டிடம் இருக்க, அதைக் குழப்பமாகப் பார்த்தாள் அக்னி.

“இது என்னன்னு தெரியுமா அக்னி?” என்றான் இன்னமும் இயல்புக்குத் திரும்பாத இறுகிய குரலிலேயே.

அவனைப் பார்த்து இல்லையென்று அவள் தலையசைக்க..

“இது.. என் தங்கச்சியோட சமாதி!

மத்தவங்களுக்கு இது வெறும் சமாதி தான். ஆனா, என்னைப் பொறுத்த வரைக்கும். இது தான் எனக்கு அந்தக் காளி ம்மாவோட கோவில்.” என்று கூற, அக்னிக்கோ, நெஞ்சம் பதறியது!

“என்ன சொல்லறீங்க ருத்ரன்?” என்று கேட்ட அவளது குரலிலேயே அவளது அதிர்ச்சியைப் புரிந்து கொண்டவன்,

“ஆமா.. என் தங்கச்சி இதே வீட்டுல தான் செத்துப் போனா.. அதனால தான் அவளை இங்கயே புதைக்கணும்னு நான் சொன்னேன்.

அதுல யாருக்கும் விருப்பம் இல்ல.. என் அம்மா உட்பட.

ஆனா.. எனக்கு.. எனக்கு அவ என்னைக்கும் சாமி.. அவ என் கூடவே இருக்கணும்னு நினச்சேன்.” என்று கூறி அவன் அந்தக் கோவிலின் கதவைத் திறந்து உள்ளே செல்ல, அவனைப் பின் தொடர்ந்து சென்றாள் அக்னி.

உள்ளே சென்றால், அந்தக் கோவிலின் ஒரு பக்க சுவர் முழுவதுமாக, ஒரு பத்துப் பன்னிரண்டு வயதுப் பெண்ணின் உருவம் ஓவியமாக வரையப்பட்டிருந்தது.

அதையே இவள் ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டிருக்க, ருத்ரன்.. “இதை நான் தான் வரைஞ்சேன்.

இது அவ இறந்த அன்னைக்கு அவ போட்டிருந்த ட்ரெஸ்.. அன்னைக்கு அவளோட பிறந்தநாள் கூட.” என்று கூற, அதைக் கேட்ட அக்னிக்கோ கட்டுப்படுத்தவே முடியாது கண்ணீர் வடிந்தது.

“ரொ.. ரொம்ப சின்னப் பொண்ணா இருக்காங்களே.. என்ன வயசு அப்போ? எ.. எப்படி?” என்றாள் குரலில் கேவலுடன்.

“பதினோரு வயசு பிறந்தநாள். அவளை.. அவளை.. வெறி நாய்ங்க கூட்டமா சேர்ந்து கடிச்சுருச்சுங்க.

அ.. அதுல..” என்று சொல்ல வந்ததை முடிக்க முடியாது பாதியிலேயே நிறுத்தினான்.

“யாராலயும் காப்பாத்த முடியல. கடைசியா அந்த நாய்ங்களை எல்லாம் கொன்னு தான் இவ உடம்பையே அதுங்க கிட்ட இருந்து காப்பாத்த முடிஞ்சுது. ஆனா, அதுவும் உபயோகமில்லாம இவளோட உயிர் எப்பவோ போய்டுச்சு..” என்று அவன் கூறி முடிக்க, வாயில் கை வைத்து வெளியில் ஓடியே விட்டாள் அக்னி.

அவள் எத்தனையோ கொடுமைகளைக் கேள்விப்பட்டிருக்கிறாள் தான். அதைக் கண்டெல்லாம் மனதிற்குள் வருத்தம், சோகத்தை விட கோபம் தான் பொங்கியிருக்கிறதே தவிர, இப்படி உயிரை உருக்கும் வேதனையை உணர்ந்ததில்லை அவள்.

அதுவும் ஒரு சிறு பெண்ணை வெறிநாய்கள் சூழ்ந்து கொண்டு கடித்துக் குதறியதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

இவன் மனதிலிருக்கும் ரணம் புரிந்தது அவளுக்கு. ஆனால் அந்தக் குழந்தைக்கு முறையாக இறுதிக் காரியங்கள் செய்யாது, இப்படி வீட்டுக்குள்ளேயே சமாதி கட்டி, அதை கோவில் போலப் பாதுகாப்பது என்னவொரு மனநிலை என்று அவளுக்குப் புரியவில்லை.

ஏனென்றால், தினம் தினம் அந்தச் சமாதியைப் பார்க்கும் போதெல்லாம், அந்தக் குழந்தை அனுபவித்த வேதனை, அவன் கண் முன்னே வந்து போகுமில்லையா?

ஆனால் அதைத் தினமும் பார்த்துப் பார்த்துத் தான் அவனது மனம் இத்தனை இறுகியிருக்கிறதோ?

வலி மேல் வலியாய் தாங்கித் தாங்கித் தான் அவனது நெஞ்சுக்குள் இப்பொழுது ஈரம் என்பதே முற்றிலும் வற்றிப் போய் வெறும் பாலையாய் மரத்துக் கிடைக்கிறதோ? என்று அவனது சிந்தனையில் உழன்று கொண்டிருந்தவளின் அருகே வந்து அமர்ந்தான் ருத்ரன்.

அவள் கண்களில் இன்னமும் கண்ணீர் வடிந்து கொண்டு தான் இருந்தது. அதிலும், தன்னருகே அவன் வந்து அமர்ந்ததும், அந்தக் கண்ணீரின் வேகம் அதிகரிக்கவும் தான் செய்தது.

ஆனால் அவளது கண்ணீர் அவனைக் கரைக்கவில்லை. எங்கோ வெறித்த பார்வையுடன் அவன் அசையாது அமர்ந்திருக்க, அக்னி தான் பேச்சைத் துவங்கினாள்.

“உங்க வலி புரியுது ருத்ரன். ஆனா அதுக்காக இப்படி உங்க தங்கச்சி சமாதியை வீட்டுலயே வச்சுட்டு, அதையே பார்த்துப் பார்த்து ரணத்தை இன்னுமின்னும் அதிகரிச்சுக்கறதுல என்ன அர்த்தம் இருக்கு?” என்று அவள் கேட்க, அதே வெறித்த பார்வையுடன் பேசினான் ருத்ரன்.

“என்ன அர்த்தம் இருக்கா? அவளோட மரணம் தான் என்னை இன்னமும் இயக்கிட்டு இருக்கு!

எனக்குள்ள இருக்கற கோபம், வெறி எல்லாம் என் தங்கையோட மரணத்தை நினைக்க நினைக்கத் தான் இன்னும் அதிகமாகுது. சொல்லப்போனா.. அவ இல்லைங்கற வலி தான் என்னை மிருகமா ஆக்கிட்டு இருக்கு.

இந்த உலகத்துக்கு முழுசா மிருகமா மாறின ருத்ரன் தான் தேவை.

இந்த மிருகம் இல்லைனா, இந்தக் காளிக்ஷேத்திரா என்னைக்கோ சாம்பலாகியிருக்கும்.” என்று இலகாத இரும்பின் குரலாய் அவன் கூற, அக்னிக்கோ அவனது வார்த்தைகள் மனதுக்குள் பிசைந்தன.

அவனது கூற்று இவளுக்கு அர்த்தமற்றதாகத் தோன்ற..

“அப்போ அந்த மிருகத்தனத்தால தான் அந்த கபீர் கிட்ட இருந்து அவ்வளவு வெடி மருந்தைக் கொள்ளையடிச்சீங்களா?

உங்க கிட்ட அவ்வளவு சக்தி வாய்ந்த வெடி பொருள் இருக்குன்னு தெரிஞ்சா, கவர்மெண்ட் அதுக்கு பயந்து நீங்கச் சொல்லறதெல்லாம் கேட்டுடுவாங்கன்னு நினைச்சுட்டு இருக்கீங்களா?” என்றாள் சுருக்கென்று.

அவளது கோபம் ருத்ரனுக்கு வேடிக்கையாக இருந்ததோ என்னவோ! அவளைப் பார்த்து ஏளனமாய் நகைத்தவன்..

“ஹா.. ஹா.. இந்த வெடி மருந்து என் கைல இல்லாமலேயே.. இந்த கவர்மெண்ட் என் பேர் கூடத் தெரியாமலேயே என்னைக் கண்டு பயந்துட்டு இருந்தாங்க அக்னி!

நல்லா யோசிச்சு பாரு.. நீ எதுக்காக இங்க வந்த?” என்று அவன் கேட்க, அப்பொழுது தான் அக்னிக்கு புத்தியிலேயே உறைத்தது!

உள்ளுக்குள் உணர்ந்த செய்தியில் அவளது விழிகளிரண்டும் அதிர்ந்து விரிய.. தன்னையும் அறியாமல் அவளது இதழ்களோ..

“ப்ராஜக்ட் “டி”” என்று முணுமுணுத்தன.

அதற்கும் ருத்ரன் வாய்விட்டு ஏளனமாக நகைக்க, அவனது நகைப்பின் பின்னே இருந்த குரூரம் இப்பொழுது தான் முழுதாக நெஞ்சுக்குள் ஊடுருவி அவளது அடிவயிற்றில் குளிர் பரப்பியது.

“அது வெறும் ப்ராஜக்ட் “டி” மட்டும் இல்லம்மா.. அது ப்ராஜக்ட் “டி.சி.” என்று அவன் கூற, அக்னியின் அடிவயிற்றின் குளிர், இப்பொழுது அவளது முதுகுத்தண்டுக்கு இடம் மாறியது!

அதுவரை வான் மழையின் காதல் தூறலாய் பொழிந்து கொண்டிருந்த சிறு பொழுது, இப்பொழுது கார் மேகத்தினுள் தோன்றும் மின்னல் கீற்றாய் விரிந்து பேரிடியாக அவள் இதயத்துள் விழுந்தது!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்