Loading

கலாபனே.. என் காதலனே!

பெண்ணவள் கூறிய வார்த்தைகளைக் கேட்டு ஒரு கணம் திகைத்துத் தான் போனான் ருத்ரன்!

ஆனந்த திகைப்பு அது!

ஆனாலும் அக்னியைப் பற்றி முழுதாய் அறிந்திருந்தவன், அவளது இயல்புக்கும், அவள் இப்படி கூறுவதற்கும் சம்மந்தமே இல்லையே என்று யோசித்து, அதையே அவளிடமே அதை நேரடியாகக் கேட்டான்.

“என்ன மேடம்? திடீருன்னு இப்படி எல்லாம் பேசறீங்க? விளையாடறதுக்கு உங்களுக்கு வேற எதுவுமே கிடைக்கலையா?” என்று அவன் கேலியாய் கேட்க, அவன் புறமாகத் திரும்பி அவனை நேராக நிமிர்ந்து பார்த்தாள் அக்னி.

“நான் விளையாடல ருத்ரன். அந்த ஸ்னைப்பரோட குண்டு என்னைத் துளைச்சப்போ, என் கண்கள் உங்களைத் தான் பார்த்துச்சு. அப்போ எனக்காக நீங்க பதறினது அந்த ஒரே நொடில எனக்குத் தெரிஞ்சுது.

என்னைக் கொன்னு போட்டுட்டா, உங்களுக்குப் பிரச்சனையேயே இல்ல. உங்களால என்னை நேரடியா கொல்ல முடியாட்டியும், நான் குண்டடி பட்டப்போ அப்படியே விட்டுட்டு வந்திருக்கலாம்.

ஆனா.. குண்டடி பட்டதுல, என்னை விட உங்களுக்குத் தான் அதிகம் வலிச்சுது.

எனக்காக.. எனக்காக உங்க கண்கள் கண்ணீரை சிந்துச்சு.” என்றவளின் கண்கள் அடக்கமாட்டாது கண்ணீரைச் சொரிய, அதை மெல்ல ருத்ரனின் கரங்கள் மேலெழுந்து துடைத்துவிட்டன.

கண்ணீரைத் துடைத்த அவனது கரங்களை அப்படியே பற்றித் தன் கன்னத்தோடு அழுத்திக் கொண்ட அக்னி, “எனக்கு.. எனக்கு.. இப்போ வேற எதுவும் தோணலை ருத்ரன்.

இது.. இது காதலானு இன்னமும் என்னால முழுசா புரிஞ்சுக்க முடியல. ஆனா உங்க பக்கத்துல இருந்தா நான் பாதுகாப்பா இருப்பேன்னு நம்பறேன்.” என்று அவள் கூற, ருத்ரனோ வாய்விட்டு நகைத்தான்.

அவன் சிரிப்பதை சிறு குழப்பத்துடன் பார்த்த அக்னி, அதற்கான காரணத்தை அவனிடம் கேட்க, ருத்ரனோ..

“இல்ல, நீ என்னைக் கொல்ல வந்திருக்க! இங்க உனக்கிருக்கற ஒரே ஆபத்து நான் தான்.. நான் மட்டும் தான்!

ஆனா.. நீ என்னடான்னா, என் பக்கத்துல இருந்தா தான் பாதுகாப்பா இருப்பேன்னு சொல்லற?

எவ்வளவு பெரிய முரண் இது?” என்று நகைக்க, அவளோ தன் நடுங்கும் கரங்களால், ருத்ரனின் கரத்தைப் பிடித்துக் கொண்டாள்.

“எனக்கு இதுக்கு பதில் தெரியல.

ஆனா.. சாவை நேரடியா பார்த்தவங்களோட மனநிலை எப்படி இருக்கும் தெரியுமா ருத்ரன்?

எனக்கு.. எனக்கு ஒவ்வொரு நிமிஷமும் பயமா இருக்கு. இன்னமும் அந்த புல்லட் என்னை நோக்கிப் பாய்ஞ்சு வந்தது என் கண் முன்னாடியே வந்து வந்து போகுது..” என்று உதடு துடிக்கக் கூறியவளை, இறுக்கி அணைத்துக் கொள்ள வேண்டும் போலத் தோன்றியது ருத்ரனுக்கு.

ஆனாலும் அவனை அசையாது பார்த்தவனோ, பேண்ட் பாக்கெட்டில் இரு கைகளையும் வைத்துக் கொண்டு அப்படியே நின்றிருந்தான்.

நடுங்கிய உதடுகளை மெல்ல கட்டுப்படுத்தியபடி மேலே நிமிர்ந்த அக்னி, அவனை விழிகளோடு விழிகளைப் பார்த்தபடி..

“யோசிச்சு சொல்லுங்க ருத்ரன்..” என்று கூறி மீண்டும் திரும்பி நின்றுகொண்டாள்.

அவள் முதுகையே சில நொடிகள் வெறித்திருந்த ருத்ரனோ, பதிலேதும் பேசாமல் அங்கிருந்து கிளம்பினான்.

அவன் ஷூவின் சத்தம் தேய்ந்து மறைந்ததும் ஆழ்ந்த மூச்சை எடுத்துவிட்டவளின் கண்கள் நொடியில் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டது.

சிறிது நேரம் அப்படியே நின்றிருந்தவளுக்கு, ருத்ரன் கீழே இறங்கி செல்வது ஜன்னல் வழியாகத் தென்பட அதைப் பார்த்தவளுக்கோ இப்பொழுது அடக்கவே முடியாத பெரும் கேவல் ஒன்று வெளிப்பட்டது.

வாயை மூடி அழுத்தவளோ, அப்படியே கீழே அமர்ந்துவிட்டாள்.

ஆற்றுவார், தேற்றுவார் இன்றி அப்படியே அழுது கொண்டிருந்தவளை, அங்கு ரவுண்ட்ஸ் வந்த மருத்துவமனையின் டீன் ஆண்டனி தான் அவளை எழுப்பி ஆறுதல்படுத்தினார்.

அன்று அவளிடம் விடைபெற்றுச் சென்ற ருத்ரனோ அதன் பிறகு இரு வாரங்களாகவே அக்னியின் கண்களில் படவே இல்லை.

எப்பொழுதாவது அர்ஜுன் தான் வந்து அவளைப் பார்த்துவிட்டுச் செல்வான்.

அவனிடம் ருத்ரனைப் பற்றிக் கேட்டதற்கு எவ்வித மறுமொழியும் கிடைக்கவில்லை அவளுக்கு.

ஏகாந்தமாய் கிடைக்கும் தனிமை, அவளுக்கு மட்டும் எரிதணலாய் தகித்துத் தான் போனது!

இரண்டு வாரங்கள் கடந்து அவள் அன்று வீட்டுக்கு டிஸ்சார்ஜ் செய்து கிளம்ப வேண்டும்.

மீண்டும் எங்கே செல்வது?

ஜுவாலாமுகியிடமேவா?

இத்தனை நாட்களாய் தன்னை வந்து பார்க்கக் கூட விரும்பாதவரிடம் எப்படி செல்வது என்றெல்லாம் அவளது எண்ண அலைகள் விண்ணை முட்டித் தான் சென்றன!

ஆனால்.. விடை தான் கிட்டவில்லை அவளுக்கு!!

ஆண்டனி வந்து, “நீ கிளம்பலாம்மா.. பார்மாலிட்டீஸ் எல்லாம் முடிஞ்சுடுச்சு. இன்னும் மூணு மாசத்துக்கு ஷோல்டர்ல வலி இருக்கும். கைத்தூக்க முடியாது. வெயிட்டா எதுவும் தூக்கக் கூடாது. கையை அசைச்சு வேலை எதுவும் செய்யக் கூடாது. சொல்லிக் கொடுத்த பிசியோதெரபி எல்லாம் செய்யணும்.

காயம் ஆறறதுக்கும், வலி குறையறதுக்கும் மருந்து இதோ இருக்கு.. நேரத்துக்குச் சாப்பிடு.” என்று கூற, அவரிடமும் தான் எங்கே செல்வது என்று கேட்க மனம் வரவில்லை அக்னிக்கு.

குனிந்திருந்த தலையை மெல்ல அசைத்துச் சரி என்றவள், அந்த மாத்திரைப் பையை மட்டும் வாங்கி கொண்டு மருத்துவமனை வராண்டாவில் தனியாளாக நடந்தாள்.

குனிந்த தலையுடன், உடல் சோர்வுடன் நடந்து அவள் மருத்துவமனையின் வாசல் படிக்கட்டுகளில் இறங்கிய அந்த நொடி, அவள் முன்பாகச் சட்டென்று வந்து நின்றது அந்த கார்.

திகைத்துப் போய் அவள் நிமிர்ந்து பார்த்தால், காருக்குள் இருந்ததோ.. ருத்ரன்!

தனித்து விடப்பட்ட பாலைவனத்தில், நீருக்குத் தவிக்கும் பயணி ஒருவனின் கண் முன்பு தென்பட்ட ஒற்றைத் தேன்துளியாய் அவனிருந்தான் அவளுக்கு!

உள்ளம் குலைந்து, உருகிக் கரைந்து, அது கண் வழியே கசிந்து விடாதபடிக்கு அவள் தான் பெரும்பாடு பட வேண்டியதாகிப் போனது.

நெஞ்சத்தின் நெகிழ்வை வெளியே காட்டிக் கொள்ளாது இறுகிப் போய் அப்படியே நின்றிருந்தாள் அவள்.

அவளைப் பார்க்காது நேரே வெறித்த பார்வையுடன் அமர்ந்த அவனோ.. “வா.. வந்து கார்ல ஏறு..” என்று கூறி சரிந்து அவள் புறமாய் கார் கதவைத் திறந்துவிட, அக்னியோ எதுவும் பேசாமல் மெல்ல காருக்குள் ஏறி அமர்ந்தாள்.

அவனிடம் கேட்கவும், சொல்லவும், ஆயிரம் வார்த்தைகள் கரை தாண்டும் ஆற்று வெள்ளமாய் பரிதவித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் எதையும் சொல்ல முடியாது அணை கட்டித் தடுத்துக் கொண்டிருக்கிறாள் பேதையவள்.

ஆனால் ருத்ரனுக்கோ அது போலவெல்லாம் தடை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஓரக்கண்ணால் அவளைப் பார்த்தவன், “சாரி..” என்றான் வெறுமனே!

அவனது “சாரி”யில் பெண்ணவளின் கண்கள் அகல விரிந்தன.

“எதுக்கு இவ்வளவு ஆச்சர்யம்? ஓஹ்! ருத்ரன் வாயில இருந்து சாரி வந்திருக்குன்னா?

ஹ்ம்ம்.. உன்ன இத்தனை நாள் தனியா விடவேண்டியதா போய்டுச்சு.

உடம்பு சரியில்லாம இருந்தப்போ நான் பக்கத்துல இருந்துருக்கணும். ஆனா.. எனக்கு அந்த உரிமை இருக்கான்னு தெரியல.

என்ன தான் நீ என் கூடத் தங்கிக்கறேன்னு சொன்னாலும், அதை என் மனசுக்கு பிடிச்ச பொருள்ல நான் எடுத்துக்கக் கூடாது.” என்றவன் குரல் கனிந்தது.

‘என் மனசுக்கு பிடிச்ச பொருள்னா? உன் மனசுக்கு என்ன தோணுது ருத்ரன்?’ என்று சாதாரணமாய் இருந்திருந்தால் சட்டெனக் கேட்டிருப்பாள் அக்னி.

ஆனால் இப்பொழுது எதுவும் பேசாது அவனை அமைதியாய் பார்க்க, அவனோ மேலும் தொடர்ந்தான்.

“நீ நிஜமா என்கூட தங்க நினைக்கறியா?” என்று மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ள கேட்க, அவளோ சலிப்பானதொரு பெருமூச்சை வெளியேற்றினாள்.

“உங்களுக்கு இஷ்டம் இல்லைனா நான் மறுபடியும் ஜெயிலுக்கே போய்டறேன்..” என்று அவள் கூறிய அடுத்த நொடி அவனது கால் காரின் பிரேக்கை அழுத்திய வேகத்தில் திகைத்துப் போனாள் பெண்.

அவனை அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்க்க, “இப்போ நீ என்ன ரொம்ப சுதந்திரமா இருக்கறதா நினைப்பா?

அந்த ஜெயிலை விட, என் வீட்டுல என் கூட இருக்கறது இன்னும் ரொம்ப பயங்கரமா இறுக்கப் போகுது.” என்று கூறி மெல்ல அவளது முகத்தில் வந்து விழுந்திருந்த கூந்தலை ஒதுக்கி விட்டவன், அவள் முகத்தை நோக்கிச் சரிய, அக்னியின் வெப்பமோ தாறுமாறாக அதிகரித்தது!

அவள் கண் மூடி அப்படியே அமர்ந்திருக்க, அவள் நெற்றியில் மென்மையாக இதழ் குவித்து ஊதினான் ருத்ரன்.

அதில் மெல்லக் கண் விழித்தவளோ, அவனைத் தவிப்புடன் ஏறிட்டாள்.

அவளது விழிகளையே சில கணங்கள் பார்த்தவன், “ஏதாவது சொல்லணுமா?” என்றான் புருவம் சுருங்க.

ஒரு நொடி அவனையே அவள் பார்த்திருக்க, மறுநொடியே காரின் ஜன்னல் வழியாக முகத்தைத் திருப்பிக் கொண்டு.. “எனக்குச் சொல்ல ஒன்னும் இல்ல ருத்ரன். கொஞ்சம் டயர்டா இருக்கு.. சீக்கிரம் வீட்டுக்குப் போகலாம்..” என்று கூற, அவளை ஆழ்ந்து பார்த்துவிட்டு காரைக் கிளப்பினான் ருத்ரன்.

அந்த வீட்டுக்குள் அவனுடைய சொந்தமாக அங்கேயே தங்க நினைக்கிறாள் அவனவள் என்ற எண்ணமே அவனுக்கு மனதுக்குள் மிகவும் குதூகலமாய் இருந்தது. ஆத்ம நிறைவாகவும்!

அந்த நிறைவைக் கெடுக்க விரும்பாததாலேயே அவளிடம் தூண்டித் துருவிக் கேள்வி கேட்க விரும்பவில்லை அவன்.

ஆனால் அவன் இன்னும் கொஞ்சம் அழுத்திக் கேட்டிருந்தால், அவர்களது எதிர்காலம் மாறியிருக்குமோ என்னவோ?

வீட்டுக்கு வந்ததும் முதலில் காரை விட்டு இறங்கியவன், மறுபுறம் வந்து அக்னிக்காக கார் கதவைத் திறந்துவிட்டான்.

முன்பு இதே வீட்டுக்கு இருவருமே வந்திருக்கிறார்கள். இதே போலவே.. ஒன்றாகவே!

அன்றைய நினைவு ருத்ரனுக்கு இப்பொழுது மீண்டும் நினைவு வர, அவனது இதழோரத்தில் ஒரு ரகசியப் புன்னகை!

“வலது காலை எடுத்து வச்சு உள்ள வாங்க அக்கா..” என்று அவன் கூற, அதுவரை இறுகியிருந்த அக்னியின் முகம் சட்டென மலர்ந்து நொடியில் புன்னகையைத் தழுவியது.

“ச்ச்சீ.. போங்க ருத்ரன்..” என்று தன்னையும் அறியாது அவள் நாணமுற.. அதை ரசித்துப் பார்த்தான் ருத்ரன்!

என்னவோ பிறந்ததிலிருந்து உடனிருந்த சொத்தாய் இருந்த அந்த மன இறுக்கம் இருவருக்குமே அந்த ஒற்றை நொடியில் மறைந்து, இருவரும் ஒரு சாதாரண காதலர்களாய்.. அந்தக் காதலுக்காகவே வாழ்பவர்களாய் திகழ்ந்தார்கள்.

அதே நிறைவுடன் வீட்டினுள்ளே செல்லச் செல்ல அக்னிக்கு எப்படியோ.. ருத்ரனுக்கு மனம் நெகிழ்ந்து தான் இருந்தது.

ஐந்தாவது மாடி வரையில் எதுவுமே பேசாது, தன்னுடன்.. தன் வீட்டில் தன்னவள் இருக்கிறாள் என்ற சந்தோசம் மட்டுமே அவனுக்கு இருந்தது.

நேராக மாடியறைக்கு அவளை அழைத்துச் சென்றவன், அவளை அந்த அறையின் முன்பாக நிற்க வைத்து, மூடியிருந்த அறைக்கதவைத் திறந்துவிட, அறையிலிருந்த ஏ.சி காற்றின் நடுவே, தாழம்பூவுவின் நறுமணம் பாய்ந்து வந்து அவள் முகத்தில் மோதியது.

தன்னையும் அறியாமல் கண் மூடி அதை ரசித்தவள் கண்களைத் திறந்த பொழுது அவளுக்கு எதிரே ஒரு பெரிய படுக்கை, அந்தப் படுக்கைக்குப் பின் புறம் அவளைப் பரதநாட்டிய உடையில், அற்புதமான அபிநயத்துடன் ஓவியமாக வரையப்பட்டிருந்தது.

அதைக் கண்டவள் விழிகள் விரிந்து போய் அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்க, அவனது விழிகளோ அவளிடம் எதையோ எதிர்பார்த்திருந்தன.

ஆனால் அவனது எதிர்பார்ப்புக்குச் சற்றும் சம்மந்தமே இல்லாமல்..

“ருத்ரன்.. நிஜமாவே நான் பரதநாட்டிய டான்சர் தெரியுமா? உங்களுக்கு எப்படி இந்தக் கற்பனை வந்துச்சு? யார் இதை பெயிண்ட் செய்தாங்க?” என்று ஆர்வமாய் கேட்க, ருத்ரனின் விழிகளின் பளபளப்பு சட்டென அணைந்துவிட்டது.

அவளைப் பார்க்காது நேரே அறைக்குள் சென்றவன்..

“அதை விடு.. உனக்கு ரூம் பிடிச்சுருக்கா? உனக்காகவே ரீமாடல் செய்தது.” என்று கேட்டதும் தான் மனதுக்குள் பக்கென்றது அவளுக்கு!

‘நான் அவன் வீட்டுல வந்து தங்கிக்கறேன்னு சொன்னதை, அவன் கூட வந்து தங்கிக்கறேன்னு நினச்சுட்டானா?” என்று எண்ணியவள் படபடப்புடன்..

“இல்ல இல்ல ருத்ரன்.. நா.. நான்.. உங்க கூட வந்து தங்கிக்கறேன்னு சொன்னது, உங்க வீட்டுல தங்கிக்கறேன்ற அர்த்தத்துல தான். உங்க கூடான்னா.. உங்க ரூம்லயே இல்ல..” என்றாள் இமை தாழ்த்தி, ஈரெட்டு பின்னே நகர்ந்து.

அவளது செய்கையைப் பார்த்து உள் கன்னத்தில் நாக்கை முட்டி மெல்ல சிரித்தவன்,

“அப்படியா சொன்ன? நீ என்கூட தான் தங்கக் கேட்டேன்னு இல்ல நான் நினைச்சு எல்லாத்தையும் தயார் செய்தேன்?

இப்போ இப்படி பின்வாங்கினா என்ன அர்த்தம்?” என்று அவன் கேட்க, பெண்ணவளோ திருதிருவென விழித்தாள்.

“இ.. இல்ல.. அது.. அது வந்து..” என்று அவள் திணறிக் கொண்டிருக்கையில் அவள் முகத்தைப் பார்த்துச் சத்தமாகச் சிரித்த ருத்ரனோ..

“பயப்படாத.. பயப்படாத!

இது உனக்கான ரூம். என்னோடது பக்கத்துல தான் இருக்கு. நானும் கொஞ்சம் நல்லவன் தான்.. நம்மபலாம் என்ன?..” என்று கூற, அக்னியின் முகமோ மருதாணி பூசாமலேயே சிவந்தே போனது!

இங்கு இவர்களது காதல் சாம்ராஜ்ஜியம் அழகான அத்தியாயமாய் ஆரம்பித்திருக்க, ருத்ரனின் இந்தச் செயல் காளிக்ஷேத்திராவில் யாருக்குமே பிடிக்காது சிறு அதிருப்தியைத் தோற்றுவித்திருந்தது.

அதில் முக்கியமானவர், அமரேந்தார்!

அதே இரவு வேளையில் ருத்ரனைப் பற்றிய சிந்தனையிலிருந்த அமரேந்தரோ, யோசனையுடன் ருத்ரன் கொடுத்த ஒரு முக்கியமான வேலையைச் செய்து கொண்டிருந்தார். அவருடன் அர்ஜுனும் இருந்தான்!

அமரேந்தரும், அர்ஜுனும், ருத்ரன் கொடுத்த கோப்புகளை எல்லாம் அவன் கூறியவர்களுக்கு மின்னஞ்சல் செய்து கொண்டு இருந்தனர்.

என்ன தான் மருமகன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தாலும், மனதுக்குள் சிறு பயம் இருக்கத் தான் செய்தது அமரேந்தருக்கு!

“அர்ஜுன்.. ப்ரதாப் சொல்லறபடி எல்லாம் எல்லா நடக்குமாடா?” என்று அவர் கேட்க, அவரை நிமிர்ந்து பார்த்த அர்ஜுனோ, அவரைப் பார்த்து ஆறுதலாகப் புன்னகைத்தபடி..

“ஜி என்ன செஞ்சாலும் அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும் மாமா.. இது கண்டிப்பா ஜி நினைச்சபடி தான் நடக்கும்! நம்பிக்கையோட இருப்போம்!” என்று உறுதியாகக் கூறினான்.

அது அமரேந்தருக்கு ஆறுதலாக இருந்தாலும், மனதின் ஏதோவொர் ஓரத்தில் “தடக்.. தடக்..” என்னும் ரயில் கால்த்தடம் கேட்கத் தான் செய்தது!

கூடவே, “இந்த ஈமெயில் விஷயம் ஒரு பக்கம் இருந்தாலும், இப்பொய் ருத்ரன், அந்த அக்னியை அவன் வீட்டுலயே தங்க வச்சிருக்கானே.. அது சரியா வருமா?” என்று கேட்டவரின் குரலில் கவலை படர்ந்திருந்தது.

அதில் அவரை நிமிர்ந்து பார்த்த ஆர்ஜுனோ.. “மாமா.. உங்க கவலை எனக்குப் புரியுது. ஆனா.. எனக்கு எல்லா விஷயத்துலயும் ஜி மேல நூறு சதவீதம் நம்பிக்கை இருக்கு.

அவருக்கு எல்லாமே தெரியும் மாமா.. அப்படி எல்லாம் தெரிஞ்சவர், அக்னியை வீட்டுக்கே கூட்டிட்டு வந்திருக்காருன்னா.. அவருக்கு அந்தப் பொண்ணு மேல எவ்வளவு காதல் இருக்கணும்?” என்று கேட்க, அமரேந்தரோ ஆமோதிப்பாய் தலையசைத்தார்.

அந்த நேரத்தில் தனது வீட்டில் இரவு விளக்கைக் கூடப் போடாது இருட்டில் அமர்ந்திருந்தார் ஜுவாலாமுகி!

தன் குழந்தைக்கு ஏதோவொரு ஆபத்து வருகிறதென்றால், அது அந்தத் தாய்க்கு முன்னரே உள்ளுணர்வாகத் தெரியுமாம்!

முதன் முதலில் அக்னியை அந்தச் சிறைச்சாலையில் பார்த்த பொழுது ஜுவாலாமுகிக்கும் அப்படித் தான் உள்ளுக்குள் பக்கென்றது!

அவளால் தன் மகனுக்கு ஆபத்து.. அதனால் அவளைத் தன் மகனிடமிருந்து தள்ளி வைக்க வேண்டும் என்று தான் அவளைச் சிறையிலிருந்து அழைத்து வந்து தன் வீட்டில் தங்க வைத்தார் அவர்.

ஆனால் உடனே இப்படி ஒரு சம்பவம் நடந்து அக்னி, ருத்ரனின் வீட்டிலேயே தங்குவாள் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை.

என்னவோ.. அவள் தான்.. அவள் மட்டுமே தான் தன் மகனின் சகாப்தத்திற்கு முடிவுரை வரையப் போகிறாள் என்று பரிதவித்துத் துடித்தது அந்தத் தாயின் மனம்!

தாயின் தவிப்பு புரியாமல், தன்னவளுடன் சந்தோஷித்திருந்தான் தனயன்!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்