Loading

அத்தியாயம் – 14

பிரம்மை பிடித்தவள் போல காரில் ஏறியவள், தன்னைச் சுற்றி நடக்கும் எதையும் கவனிக்கவில்லை.

அவர்கள், அந்தப் பெண்.. அது தான் அந்த வக்கீலின் வீட்டிலிருந்து கிளம்பும் போதே மதிய உணவு வேளை ஆகியிருக்க, அங்கு அருகிலேயே இருந்த ஒரு பெரிய உணவு விடுதியில் காரை நிறுத்தினான் ராகவ்.

தன்னை மறந்து, கார் இப்படி நின்று விட்டதைக் கூட அறியாது மணி அமர்ந்திருக்க, அவளைப் பார்த்து ஆழ்ந்த மூச்சை வெளியிட்டவனுக்கு மணியின் இந்த நிலையம் வேதனையாகத் தான் இருந்தது.

ஆனால் என்ன செய்வது? தன்னுடன் இருந்தால் மூச்சு முட்டிச் செத்துவிடுபவளைப் போல இருக்கும் இவளது நிலையை மாற்ற வேறு என்ன தான் செய்துவிட முடியும் அவனால்?

பாட்டியிடம் ராகவே தான் கூறினான், மணி பிறந்ததிலிருந்து.. அவனுக்குப் பிடிக்காவிட்டாலும் கூட அவன் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், அவன் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் அது மணியின் சம்மதத்தை.. விருப்பத்தைப் பொறுத்தே நடைபெறும்!

இதோ.. இப்பொழுது விவாகரத்துக்குப் பதிந்துவிட்டு வந்திருப்பதும் கூட, மணியின் விருப்பத்திற்காக.. அவளது நிம்மதிக்காகத் தான்! என்று மனதில் வலியுடன் எண்ணியவன் கண்களை ஒரு கணம் இறுக்க மூடித் திறந்து, “மணி..” என்று மீண்டும் அழுத்தமாக அழைத்தான்.

அவள் திடுக்கிட்டுப் பார்க்க்கவும், “வா மணி.. இங்கயே சாப்பிட்டுட்டு போகலாம்..” என்று அவன் அழைக்க, மறுப்பாய் தலையசைத்தவள்..

“இல்ல.. எனக்குப் பசிக்கல.. நீ சாப்பிட்டுட்டு வா. நான் கார்லயே இருக்கேன்.” என்று எதிரே வெறித்தப் பார்வையுடன் அவள் கூற, மீண்டும் ஒரு பெருமூச்சுடன் காரைக் கிளப்பினான் ராகவ்.

அதன் பிறகு வீடு செல்லும் வரையில் இருவரும் எதுவுமே பேசவில்லை. வீட்டுக்குச் சென்றதும் மணி அவர்களது அறையை நோக்கிச் செல்ல, அவளைப் பின் தொடர்ந்து சென்றான் ராகவ்.

அறைக்குள் சென்றவள், கண்ணாடியின் முன் அமர்ந்து தான் ஆசையாசையாகப் பார்த்துப் பார்த்து அணிந்து கொண்ட அணிகலன்களை ஒவ்வொன்றாய் அவிழ்க்க, அவளுக்குப் பின்னே வந்து நின்றான் ராகவ்.

கண்ணாடியில் தெரிந்த அவனது பிம்பத்தை ஒரு கணம் அளவிட்டவள், மீண்டும் தன் போக்கில் மூக்கில் இருந்த மூக்குத்தியைக் கழட்ட ஆரம்பிக்க.. ராகவ்,

“இது கொஞ்சம் ஹார்ட் டெசிஷன் தான் மணி.. ஆனா இது தவிர்க்க முடியாதது.

தினந்தினம் ஒருத்தர ஒருத்த பார்த்துச் சண்டை போட்டுக்கறதுக்கு, சந்தோசமா பிரிஞ்சுடலாம்.” என்று அவன் கூற, இப்பொழுது தலைகுனிந்து தன் வளையலைக் கழட்டிக் கொண்டிருந்தவள், விழிகளை மட்டும் உயர்த்தி கண்ணாடியில் தெரிந்த அவன் பிம்பத்தை ஒரு தீப்பார்வை பார்த்தாள்.

அதில் ஒரு கணம் தனது பேச்சை நிறுத்தியவன், மீண்டும் தொடர்ந்தான்.

“இதுல நாம என்னோட அப்பா, அம்மா, நம்ம பாட்டி.. இப்படி யாரையும் யோசிக்கத் தேவையில்லை. நான் சமாளிச்சுக்கறேன் எல்லாரையும்.” என்று அவன் கூறி முடிக்கக் கூட இல்லை, அவனை மீண்டும் முறைத்துவிட்டு வேறு உடை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்தாள்.

அவளது பார்வையின் பொருள் புரியாது ராகவ் விழித்துக் கொண்டு நின்றிருக்க, மறுபுறத்தில் இது எதுவுமே தெரியாத மானபரனோ தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

‘ஏன் வேணாம்னு சொல்லறா? எனக்கு என்னடி கொறச்சல்? நான் உனக்கு எந்த விதத்துல தகுதி இல்லைன்னு கேட்டாலும் சொல்ல மாட்டேங்கறா.

சும்மா.. எனக்கு உங்க காதல் மேல நம்பிக்கை இல்ல.. உங்களுக்கு வந்திருக்கறது வயசுக் கோளாறு. வீட்டுல சொல்லி யாராவது ஒரு பொண்ண கல்யாணம் செய்துக்கோங்க. எல்லாம் சரியாகிடும்னு மட்டும் சொல்லறா..

ஆனா.. எனக்குத் தெரியுதே.. அவளுக்கு என் மேல காதல் இருக்குன்னு தெரியுதே..

உஃப்ப்ப்ப்ப்ப்ப்.. இந்தப் பொண்ணுங்கள புரிஞ்சுக்கறது ரொம்பக் கஷ்டமா இருக்கே.. மண்டை காயுதுப்பா சாமி..’ என்று வாய்விட்டே புலம்பியவன், யாரிடமாவது இதைப் பகிர்ந்துகொள்ள நினைத்தான்.

ஆனால்.. அவனுக்கென்று சொல்லிக்கொள்ளும்படி நெருங்கிய நண்பர்கள் யாருமே இல்லை.

சிறு வயதிலேயே பெற்றோரை இழந்ததால், சுற்றி இருந்தவர்கள் அனுதாபப் பார்வையோ அல்லது கேலிப்பார்வையோ வீச, அதிலேயே உள்ளுக்குள் இறுகியவன், இப்பொழுது தான் ஒரு பெண்ணிடத்தில் இலகியிருக்கிறான்.

ஆனால் அந்தப் பெண் தான் இவனிடம் இலகுவதாய் இல்லை!

பாட்டிக்கு அழைக்கலாம் என்று யோசித்தால், இங்கு இந்த மாலை நேரம், அவர்களுக்கு நள்ளிரவு.

ஒரு மாதத்தில் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு வருவதாய் கூறியிருந்தவர்கள், இப்பொழுது இந்த நாட்டில் இன்னும் சில நாட்கள், அந்த நாட்டில் இன்னும் சிலநாட்கள் என்று சுற்றுப்பயணத்தை நீட்டித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

அவனுக்கு இப்பொழுது வேறு வழியும் இல்லை.. மணிக்காவது போன் செய்து பேசலாம் என்று எண்ணினான்.

இது உலகத்தின் எட்டாவது அதிசயம் தான்!.. சிறு வயதிலிருந்து எதிரியாய்க் கருதியவளை, மனம் நொந்த இந்த நிலையில் அவன் அழைப்பது முரண் தான்! ஆனால்.. என்ன தான் சண்டையிட்டாலும், ரத்த உறவைத் தான் அவன் மனம் இப்பொழுது தேடுகிறது.

தனிமையும், இப்பொழுது தனது காதலும் தனித்துவிடப்பட்டுவிட்டது என்ற நிலையும் அவனை மிகவும் மனதளவில் பலவீனமாக்கியிருந்தது.

எனவே தான் தன்னையும் அறியாது அவன் மணிக்கு அழைத்துப் பேச நினைக்க, ஹ்ம்ம்ஹும்.. மறுமுனையில் அவள், மனோவின் அழைப்பை ஏற்றால் தானே?!

அவளே தனது வாழ்க்கை இப்படியாகிவிட்டதே.. தன்னை ஒருவன், என்ன தான் சிறுவயதிலிருந்து சண்டை பிடித்தாலும், இப்பொழுது தன் கணவனாகிவிட்டவன், தன்னை வெறுத்து, தன்னிடமிருந்து விவாகரத்தைக் கேட்பது மணிக்குத் தாங்கவே முடியாததாக இருந்தது.

சிறு வயதில் இருந்தே சுற்றி இருக்கும் அத்தனைப் பேரையும் தனது அழகாலும், அறிவாலும் கவர்ந்தவளை, பார்க்கும் அத்தனை பேருக்கும் பிரியமாகிப் போனவளை தொட்டுத் தாலிகட்டிய கணவனே வெறுத்தால் அது அவளுக்கு மிகுந்த தாழ்வு மனப்பாண்மையைக் கொடுத்தது.

இவள் இதையெல்லாம் எண்ணி உள்ளுக்குள் உழன்றுக்கொண்டிருந்த நேரத்தில் தான் மனோ போனில் அழைத்தான்.

முதல் முறை அவனது அழைப்பை அலட்சியப்படுத்தியவள், அவன் மீண்டும் மீண்டும் அழைக்கவும், போனை முற்றிலுமாக அணைத்துவைத்துவிட்டாள். “இவன் வேற இந்த நேரத்துல..” என்ற எரிச்சலில்.

ஆனால் மனோவுக்கோ.. தன்னந்தனிக் காட்டில் தனித்துவிடப்பட்ட குழந்தையாய் மருண்டு விழித்து, இறுதியில் தனக்கு யாருமே இல்லை என்பதை உணர்ந்தவனது விழிகள் கண்ணீரைத் தத்தெடுத்துக் கொண்டது!

கூடவே இனி தன் வாழ்வில் தனக்கென யாருமே இல்லை.. இனி யாரையுமே, எந்தச் சூழலிலும் தேடக் கூடாது என்ற வைராக்கியத்தையும் கொடுத்தது.

இங்கு மணியோ உலகமே வெறுத்த நிலையில் அமர்ந்திருக்க, கீழிருந்து மேலே அறைக்கு வந்த ராகவ், “மணி.. வா சாப்பிடலாம்..” என்று அழைத்தான்.

இப்பொழுதும் அவனை முறைத்தவள், வெடுக்கெனத் திரும்பி அமர்ந்துகொள்ள.. சோர்வுடன் ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டவன், “மதியமும் சாப்பிடல.. இப்பவும் சாப்பிடாம இருந்தா உடம்பு கெட்டுடும்மா..

அது தான் உனக்கு வேணுங்கறத வாங்கறதுக்கான வேலைய பார்க்க ஆரம்பிச்சுட்டோமே.. இன்னும் என்ன தான் பிரச்சனை?” என்று அவன் கேட்க, அவனை இழுத்துவைத்து அறையலாம் என்ற ஆத்திரம் வந்தது மணிக்கு.

தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு மேலே எழுந்தவள், அவனைச் சுற்றிக் கொண்டு கீழிறங்கி சாப்பிடச் சென்றாள்.

இப்பொழுதும் கூட அவளை ராகவால் புரிந்துகொள்ளவே இயலவில்லை.

தலையைச் சொரிந்து அவனும் அவள் பின்னாடியே போக, அதற்குள் சாப்பிட ஆரம்பித்திருந்த மணியோ, இவன் வருவதைக் கண்டு தட்டை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்.

இரவு படுக்கப்போகும் போதும் அதே போலத் தான். அவள் முன்னே சென்று படுத்துக் கொள்ள, இன்றும் சோபாவில் சென்று படுக்கப் போனவனைக் கண்டு உள்ளம் எரிந்தது மணிக்கு.

வெடுக்கெனத் திரும்பி அவனை, அவள் முறைக்க, ராகவோ புரியாதக் குழப்பத்துடன்.. “இப்போ என்ன?” என்று கேட்டான்.

“ஏன் இங்க பெட்டுல படுக்கறதுக்கு என்ன?” என்று அவள் முறைப்புடன் கேட்க, ராகவோ தடுமாறினான்.

“இல்ல.. அது வந்து..” என்று அவன் இழுக்க, மணியோ..

“இல்ல இங்க படுத்தா நான் என்ன உன்மேல பாஞ்சுடுவேனா?” என்று அவள் கேட்க, புரையேறியது அவனுக்கு.

“ஏய்.. ஏய்.. எ.. என்ன பேசற?” என்று அவன் திணற.. மணியோ, “பின்ன? சின்னதுல எல்லாம் இப்படி ஒன்னா படுத்துத் தூங்கியிருக்கோம் தானே? இப்ப மட்டும் என்ன வந்துச்சாம்?

ஒழுங்கா எல்லாத்தையும் மூடிட்டு இங்கயே வந்து படு..” என்று அவள் எகிற, ராகவுக்கோ வாயடைத்துப் போனது.

எதுவும் பேசாமல் அவன் படுக்க, மணியோ நிம்மதியாக உறங்க ஆரம்பித்தாள்.

ராகவால் தான் உறங்க முடியவில்லை.. எப்படி முடியும்? அவனையே அறியாமல், அவனுக்குள் புகுந்துவிட்டவள்.. ஆனால் தானாகவே முன்வந்து அவளிடமிருந்து பிரியவேண்டிய நிலை!

அவளை அணுவணுவாகப் பார்த்து ரசிக்காத துடித்த கண்களுக்கு அணை போடுவது எப்படியாம்? ஆசையாசையாய் அணைக்கத் துடிக்கும் கைகளுக்கு அணை போடுவது எப்படியாம்.. இப்படி ஒட்டியும் ஒட்டாமலும் படுத்திருக்கும்பொழுது உள்ளுக்குள் பேயாட்டம் போடும் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதும் எப்படியாம்?

ஆனால் எப்படியோ அவள் இப்போதைக்குத் தன்னருகில் இருக்கிறாள் என்ற என்னமே சிறு நிம்மதியைக் கொடுத்தது!

அந்த அமைதியிலேயே உறங்கவும் செய்தான் அவன்!

ஆனால் காலையில் கண் விழித்தவனுக்குப் பேரதிர்ச்சி! ஏனென்றால் எதிரும் புதிருமாய் முட்டிக் கொண்டிருந்தவர்கள், இப்பொழுது கட்டிக்கொண்டு படுத்திருந்தார்கள்!

அவனது நெஞ்சத்தைத் தனது மஞ்சமாக்கிப் படுத்திருந்தவள், அவனது கழுத்தில் போடப்பட்டிருந்த சங்கிலியைப் பிடித்துக் கொண்டு உறங்கியிருந்தாள்.

இவன் மட்டும் என்னவாம்.. தனது வலக்கையை அவளைச் சுற்றிப் போட்டு இறுக்கியிருந்தான், அவளைத் தன்னோடு!

கண் விழிக்கையில் தனக்கு வெகு அருகாக அவளது முகத்தைக் காணவும் திகைத்துத் தான் போனான் ராகவ். அதைவிட அதிர்ச்சி, அவள் விழி திறந்து இவனைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தது!

அதைப் பார்த்துப் பதறி எழுந்தவன்.. “இ.. இல்ல.. நான் வேணும்னு ஒன்னும் செய்யல..” என்று மேலே எழ, அவளோ இன்னமும் முறைக்க மட்டுமே செய்தாள்.

“ச்சே.. இதுக்குத் தான்.. இப்படி ஏதாவது ஆகிடும்னு தான் நான் தனியா படுத்துக்கறதா சொன்னேன்..” என்று அவன் நெற்றியில் அறைந்து கொள்ள.. மணியோ அமைதியாக..

“அப்போ.. இப்படியெல்லாம் நடக்கும்னு நீ எதிர்பார்த்தியா?” என்றாள்!

அவள் கேட்டதில் மேலும் பற்றிக்கொண்ட பதட்டத்தில்.. “ஏய்.. இதெல்லாம் நான் ஒன்னும் பிளான் செய்யவே இல்லடி..” என்று அவன் அப்பாவியாய் கூறிக்கொண்டு இருக்கும் போதே அவள் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள் மணி.

“ஹையோ..” என்று மீண்டும் நெற்றியில் அறைந்தபடித் திரும்பியவன், எதேச்சையாகத் தனது உருவத்தைக் கண்ணாடியில் பார்க்க, அதுவரை தான் பதட்டமாக இருக்கிறோம் எண்ணியிருந்தவனது முகம் இப்பொழுது பார்த்தால் மந்தகாசமாய் விரிந்திருந்தது!

மெல்லப் பார்வையை கீழிறக்கியவன் கண்களில் தென்பட்டது அந்தச் சிறிய பொட்டு!

அவனவள் குடியிருக்கும் அந்த நெஞ்சத்தில் ஆழமாய் பதிர்ந்திருந்தது அந்தப் பொட்டு!

அதை மெல்ல வருடிக் கொண்டவனது விழிகள் மெல்லக் கசிந்தன!

கையில் இருக்கும் வரையில் அவளது அருமை அவனுக்கோ.. அல்லது அவனது அருமை அவளுக்கோ தெரியவில்லை. இப்பொழுது முழு மொத்தமாய் பிரியப்போகிறோம் என்றாகிவிட்ட இப்பொழுது.. இருவராலும் அதைத் தாங்கிக்கொள்ள இயலவே இல்லை.

அவளுடனான ஒவ்வொரு நொடியையும் ஆழமான மனப் பெட்டகத்துள் பொக்கிஷமாய் சேர்த்து வைக்க நித்தமும் துடித்தான் அவன்!

இப்பொழுதும் கூட அவளது அந்த ஒற்றைப் போட்டுப் பதிந்த அந்தச் சட்டையை, பூப்பறிப்பது போன்ற மென்மையுடன் மெல்லக் கழட்டியவன், அதற்கு ஆழமாய் ஒரு முத்தமிட்டு கண்களில் வைத்துக் கொள்ள.. இந்த முறை அவன் கண்களின் கசிவை, அந்தச் சட்டை உறிஞ்சிக் கொண்டது!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
15
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்