அத்தியாயம் – 12
ராகவின் விழிகளின் வலி, தேவகியின் மனதிற்குள் தைத்தது!
‘சொந்தம்… சொந்தம் என்று எண்ணி, மகனது வாழ்வையும்… கூடவே தாயற்ற இந்தச் சிறுபெண்ணின் வாழ்வையும் சேர்த்தே அழித்துவிட்டோமோ?’ என்று இப்பொழுது வெகுவாகக் கலங்கினார் அவர்.
சற்று யோசித்துவிட்டு, மடியில் கிடந்த மணியை, படிக்கையில் படுக்கவைத்துவிட்டு, கணவர் பாலாஜியிடம் அவளைப் பார்த்துக் கொள்ளும்படிக் கண்ணைக் காட்டிவிட்டு, தனது மொபைலை எடுத்துக் கொண்டு மாடிக்கு விரைந்தார்.
போனை எடுத்துச் சென்றவர், அழைத்தது என்னவோ, அவரது மாமியாருக்குத் தான்.
அந்த நள்ளிரவு வேளையிலும் அழகுமணி பாட்டி தூங்கியிருக்கவில்லை.
ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவரது மொபைல் மணியோசை எழுப்பவும், யார் இந்த நேரத்தில் என்று யோசித்தபடி எடுத்துப் பார்த்தவர், அழைய்ப்பது தேவகி என்கவும் சற்று பதறியபடியே தான் அந்த அழைப்பை ஏற்றார்.
“ஹெலோ… தேவகி… என்னம்மா? என்ன ஆச்சு? ஏன் இந்த நேரத்துல போன் செய்திருக்க?” என்று அவர் சற்று படபடப்புடன் கேட்க, மறுமுனையில் இருந்த தேவகியோ…
“அத்தை… அத்தை.. ஒன்னுமில்ல.. இங்க யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்ல.. நீங்கக் கொஞ்சம் பதட்டப்படாம இருங்க..” என்று முதலில் அவரை அமைதிப்படுத்தியவர், பிறகே விசயத்திற்கு வந்தார்.
“அத்தை.. இப்போ உடனடியா பயப்படும்படி இங்க யாருக்கும் எதுவும் நடக்கல.. ஆனா.. விஷயம் கொஞ்சம் சீரியஸானது தான்..” என்றுவிட்டு, மணியின் நடவடிக்கைகளைத் தனது மாமியாரிடம் விவரித்தார் தேவகி.
“நாம தப்பு செய்துட்டோமா அத்தை?” என்று தனது மாமியாரின் முடிவை, தன்னுடைய முடிவாகவும் சேர்த்து அவர் கேட்க, பாட்டியால் அதைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
“தே.. தேவகி.. நான் தப்பு செய்துட்டதா உனக்கும் தோனுதா?” என்று தழுதழுத்த குரலில் அவர் கேட்க, தேவகியோ பதறிவிட்டார்.
“அத்தை.. நாம நல்லதைத் தான யோசிச்சோம்.. இது.. இப்படி ஆகும்னு நாம் நினைக்கவே இல்லையே..” என்றார் அவரும் அடுத்து என்ன செய்வது, மணியை எப்படி மாற்றுவது என்று அறியாமல்.
ஆனால் பாட்டி அதற்கும் ஒரு தீர்வு வைத்திருந்தார்!
“தேவகி.. அவங்களுக்குக் கல்யாணமாகி ரெண்டே நாள் தான் ஆகுது. நாம உடனே எந்த ஒரு முடிவும் எடுக்க வேண்டாம்.
இப்போ மணிக்கு, அவ கல்யாணமான பொண்ணுன்ற நினைப்பே வரல. ஏன்னா, அவளுக்கு ரொம்பப் பழக்கமான இடத்துல, சின்னதுல இருந்து கூடவே வளர்ந்த பையன கல்யாணம் செய்திருக்கா.
அதையும் விட, அவளுக்கு ஏதாவது ஒரு பிரச்சனைன்னா.. அவளுக்கு உன் தோளோ இல்ல, என் தோளோ இருக்கு. இப்போ நாம ரெண்டு பேரும் அவ பக்கத்துல இல்லைன்னா தான் மணி, ராகவ் பக்கம் சாய்வா..” என்று கூற தேவகிக்கு அவர் கூறுவது புரிந்தாலும், இது எப்படி சாத்தியம் என்ற எண்ணம் பிறந்தது.
அவரது சந்தேகத்தைத் தன் மாமியாரிடம் அவர் கேட்க, அவர் கோரிய விஷயத்தைக் கேட்டு தேவகியின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன.
“சரி அத்தை.. நான் அவர்கிட்ட பேசி எல்லா ஏற்பாடையும் செய்துட்டு காலைல உங்களுக்குக் கூப்பிடறேன்.. இப்ப நீங்கக் கவலைய விட்டுட்டு தூங்குங்க..” என்று கூறி போனை வைத்தவர், உடனே கீழிறங்கிச் சென்று தனது கணவரிடம் விஷயத்தைக் கூற, அவரும் வெகுவேகமாக அவர்கள் திட்டத்தைச் செயல்படுத்த ஆரம்பித்தார்.
அதன்படி மறுநாள் காலையில் ராகவை அழைத்த பாலாஜி.. “ராகவ், உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்..” என்று கூற, ராகவோ, “என்னப்பா?” என்று கேட்டபடி அவரருகே சென்று அமர்ந்தான்.
“நான், உன் அம்மா, பாட்டி நாங்க மூனு பேரும் ஒரு வோர்ல்டு டூர் போலாம்னு இருக்கோம்..” என்று கூற அவன் கண்கள் ஆச்சர்யமடைந்தன.
“என்னப்பா திடீருன்னு?” என்று அவன் சந்தேகத்துடன் கேட்க, அவரோ, “திடீருன்னு என்னப்பா திடீருன்னு..?
உனக்குத் தான் கல்யாணம் ஆகிடுச்சு.. எங்க பொறுப்பும் முடிஞ்சுடுச்சு.. அது தான்.. சும்மா கொஞ்ச நாள் எங்கயாவது ரெஸ்ட்டா போய் இருக்கலாம்னு யோசிச்சோம்.
பாட்டியும், தாத்தாக்கு அப்பறம் எங்கயும் வெளில போனதே இல்ல.. அதனால தான் அவங்களையும் கூட்டிட்டு போகலாம்னு பிளான்.” எனச் சாதாரணமாகவே கூறினார் அவர்.
ஆனாலும் விடாக்கண்டனாக.. “அதென்னப்பா பொறுப்பு முடிஞ்சுது? இன்னும் மனோக்கு கல்யாணம் ஆகலயே.. அவனை ஒரு மாசம் தனியா விட்டுட்டுப் போக முடிவு செஞ்சுட்டீங்களா?
அதுவும் இல்லாம, எங்களுக்கும் இப்போ தான் கல்யாணமாகியிருக்கு. மணிக்கு என்ன தெரியும்? அவளை எப்படித் தனியா விட்டுட்டு போக நினைக்கலாம் நீங்க? இப்போ தான் அவ பாட்டியையும், அம்மாவையும், ஏன் உங்களையும் ரொம்பத் தேடுவா..” என்று அவன் கூற, மகனைப் பார்த்தது பெருமிதமாகச் சிரித்தார் பாலாஜி.
தன் மகன் சிறுபிள்ளை இல்லை.. மனதளவிலும் அவன் முதிர்ந்துவிட்டது, இப்படி மானபரனுக்காக அவன் பேசியதிலிருந்து நன்றாகவே புரிந்தது.
அதையும்விட, மணியைத் தனது மனைவியாய் ஏற்றதால் தானே அவன் மணிக்காகவும் பரிந்தது!
அதைப் புரிந்துகொண்டதால் தான் அவர் அப்படி சிரித்ததும்.
கூடவே, “டேய்.. ஒரு பொறுப்பு முடிஞ்சுடுச்சு.. அதை நாங்க பெரியவங்க எல்லாரும் சந்தோசமா கொண்டாடக் கூடாதா? அடுத்த பொறுப்புக்குக் கொஞ்சம் ப்ரெஷ்ஷா ரெடியாவோம் இல்ல?” என்று கேட்க, ராகவோ இப்பொழுது சந்தேகமாகப் பார்த்தாலும், அதற்கு மேல் துருவுவது சரியென்று தோன்றாததால், தோளைக் குலுக்கிவிட்டு தலையசைத்தான்.
அங்குப் பாட்டியும் இந்தச் சுற்றுப்பயண விபரத்தை மனோவிடம் கூற அவனோ பாட்டியைக் கடுகடுவென முறைத்தான்.
“இவ்வளவு நாள் மணி வீட்டுல இருந்தா, அதனால அவளை அடைகாக்க வீட்டுலயே இருந்துட்டு, இப்போ அவ கல்யாணமாகி போய்ட்டான்னதும், ஊர் சுத்தக் கிளம்பறீங்களாக்கும்?” என்று அவன் கேட்க, அவனைப் பார்த்துக் கேலியாகச் சிரித்த பாட்டியோ..
“ஊர் சுத்த இல்ல தம்பி.. உலகம் சுத்தக் கிளம்பறேன்..” என்று கூற, உள்ளுக்குள் எரிந்தது மனோவுக்கு.
“பாட்டி.. இந்த நக்கலெல்லாம் வேணாம். நீங்க இப்படி ஒரு மாசம் டூருக்கு கிளம்பிட்டா, அப்பறம் நான் தனியா என்ன செய்யறதாம்?” என்று கூற பாட்டியோ அவனை இடுப்பில் கைவைத்து முறைத்தார்.
“ஆமாமா.. அப்படியே நீ என் கூட நாள் முழுக்க நேரம் கழிக்கற மாதிரி தான். நீயே காலைல கடைக்குப் போனா, கடை சாத்தற வரைக்கும் உன் கடைங்களையே தான் நீயும் அடைகாத்துட்டு இருக்க.
கடை சாத்தினதுக்கு அப்பறமும் உன் ப்ரெண்ட்ஸ் எல்லாரையும் பார்த்துட்டு நடுராத்திரிக்குத் தான் வீட்டுக்கு வர. இதுல நான் டூர் போய்ட்டா இவன் என்ன செய்வானாம்?
ஏண்டா.. நீ என்ன பச்சைக்குழந்தையா? தனியா விட்டுட்டுப் போனா தொலைஞ்சு போறதுக்கு?
அப்படியும் உனக்கு லோன்லியா இருந்துச்சுன்னா, உன் தங்கச்சி வீட்டுக்குப் போய்ப் பார்த்துட்டு வா.. அவ வீட்டுல ரெண்டு நாள் டைம் ஸ்பென்ட் பண்ணு.. மச்சாங்காரன் கூட ஊர் சுத்து.. அப்பறம் உனக்குத் தனியா இருக்கற பீலிங்கே இருக்காது..” என்று அவர் நீளமாகப் பேசி முடிக்க, மனோவின் முகத்தில் இப்பொழுதும் மிஞ்சி இருந்தது எரிச்சல் மட்டுமே!
அவனது முகத்தைப் பார்த்த பாட்டியோ, சற்றுப் பரிவாக அவனது தலையை வருடிக் கொடுத்து, “பாரு மனோ.. எனக்கோ வயசாகிடுச்சு.. ஏதோ கொஞ்சம் நல்லா நடமாடிட்டு இருக்கறப்போவே ஆசைப்பட்ட இடத்தையெல்லாம் பார்த்துடலாம்னு நினைக்கறேன்..” என்று கூற, சட்டெனக் கண்கள் கண்லங்கிவிட்டது மனோவுக்கு.
“இப்படியெல்லாம் கண்டபடி பேசினா.. எனக்குக் கெட்டக்கோபம் வந்துடும்.. எங்கயோ போங்க..” என்று எரிந்து விழுந்துவிட்டு கிளம்பினான் அவன்.
அடுத்த ஒரு வாரத்தில் ராகவ் நகைக்கடைக்குச் செல்லத் துவங்க, அதற்கடுத்த இரண்டு தினங்களில் பாலாஜி, தேவகியுடன், அழகுமணி பாட்டியும் உலகம் சுற்றக் கிளம்பினார்.
அவர்கள் கிளம்புவதற்கு, மணியும், மனோவும் விதித்த ஆயிரத்தெட்டு நிபந்தைகளும் செல்லாக்காசாகிப் போய்விட, இப்பொழுது பிடிவாதமாகக் கிளம்பும் பெரியவர்களையே ஆற்றாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர் இருவரும்.
அதிலும் மணி.. “இந்த ரெண்டு தடிமாடுங்களுக்கு நடுவுல என்ன விட்டுட்டுப் போறீங்கல்ல? இந்த ஒரு மாசத்துல நான் அவ்வளவு தான்.. நீங்கத் திரும்பி வந்து பார்க்கும்போது, இதுக்காக நீங்க ஃபீல் பண்ணப்போறீங்க பாருங்க..” என்று கூற, பாட்டியோ..
“கிளம்பற நேரத்துல என்னதிது அபசகுனமா பேசிக்கிட்டு?” என்று அதட்ட, தேவகியோ, மணியைத் தாங்கிப் பேசினாள்.
“விடுங்க அத்தை.. இத்தனை வருஷமா நாம இவங்கள விட்டுட்டு எங்கயும் தனியா போனதே இல்ல.. இது தான முதல் முறை? அதனால தான் மணி கொஞ்சம் சோகமா இருக்கா..
எல்லாம் ஒரே வாரத்துல பழகிடும்.. என்னடா மணி?” என்று தனது மாமியாரிடம் ஆரம்பித்து, மணியிடம் முடித்தவர், அவளது கன்னத்தை வாஞ்சையாகத் தடவ, அவளுக்குக் கண்களில் கண்ணீர் வந்தது.
அந்தக் கண்ணீரைத் துடைத்துவிட்டவர், அவளுக்குத் தைரியம் கூறிவிட்டு விமானத்தில் ஏறினார்.
என்ன தான் அந்தப்பக்கம் மணிக்குத் தைரியம் கூறிவிட்டு வந்தாலும், விமானத்தில் ஏறியதும், தேவகியின் இதயம் தடதடக்கத் தான் செய்தது.
கண்களில், கரைக்கடக்கக் காத்திருக்கும் கண்ணீரை சிரமத்துடன் அவர் உள்ளடக்கிக் கொள்ள, பாலாஜி அவரைத் தட்டிக் கொடுத்துத் தன் தோளில் சாய்த்துக் கொண்டார்.
அங்கே சென்னையிலோ, ராகவ், மானபரனை அன்று இரவு தங்களது வீட்டிற்கு வந்து உணவு உண்டுவிட்டுப் போகும்படி அழைக்க, அவனோ முகதத்தைத் திருப்பிக் கொண்டு..
“ஹ்ம்ம்.. ஒன்னும் தேவையில்லை.. எனக்கு என் ப்ரெண்ட்ஸ் இருக்காங்க.. அவங்க கூட எனக்கு கமிட்மெண்ட்ஸ் இருக்கு..” என்று கூறிவிட்டுக் கிளம்பினான்.
ஆனால் கிளம்பியவனோ, எந்த நண்பர்களையும் பார்க்காது, போனையும் அணைத்து வைத்துவிட்டு, தன்னந்தனியாக மொட்டு மொட்டென்று வீட்டில் இருந்தான்.
அதைக் கண்டு இவன் சலிப்புடன் தலையசைத்துத் திரும்பினால், மணியோ.. கண்களைக் கசக்கிக் கொண்டு நின்றிருந்தாள்.
அவளைச் சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வருவதற்குள் ராகவுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.
ஒரு வழியாக வீட்டுக்கு அழைத்து வந்து சாப்பிட வா என்று அழைத்தால்.. அப்படியே அவள் அண்ணனைப் போல முகத்தை, “ஹ்ம்ம்..” என்று திருப்பிக் கொண்டு போய்விட்டாள்.
குழந்தைபோலச் செல்லுபவளையே இதழில் புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்த ராகவ், சமையலறைக்குச் சென்று மீதமிருந்த உணவுகளை எல்லாம் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்துவிட்டு அவனும் உறங்கப் போனான்.
அறைக்குள் சென்று பார்த்தால், வழக்கம்போல அவனுக்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டிருந்தாள்.
லேசான அழுகையில் அவளது உடல் குலுங்குவது அவனுக்குத் தெரிந்தது.
அவளை மென்மையாக அணைத்து ஆறுதல் கூற வேண்டும் என்ற ஆவல் வெகுவாக எழுந்தது அவனுக்கு.
மெல்ல அவளருகாகச் சென்று அமர்ந்தவன், அவளது தோளைத் தொட, அவளோ சீறி எழுந்தாள்.
“ஸ்டாப் இட்.. ப்ளீஸ் டோன்ட் டச் மீ..” என்று அந்த அறையல்ல.. அந்த வீடே அதிரும்படி கத்தினாள் அவள்!
அந்த அலறலில் இவன் திகைத்துப் போய் அமர்ந்திருக்க, அவனது அந்தத் திகைத்தப் பார்வையைக் கண்டுகொள்ளாது சுனாமியாய் சீறினாள்.
“ச்சீ.. நீ இவ்வளவு கேவலமானவனா இருப்பேன்னு நான் நினச்சு கூடப் பார்க்கல. பொறந்ததுல இருந்து கூடவே இருந்து உன்ன பார்க்கறேன்.. ஆனா உன்னோட இந்தக் கேவலமான புத்தி என் மூளைக்கு உறைக்கவே இல்ல.
உன்ன மாதிரி ஒருத்தன எப்படித் தான் நான் கல்யாணம் செய்யச் சம்மதிச்சேன்னு லட்சத்து எட்டாவது முறையா நினச்சு பீல் பண்றேன்.. ச்சை..” என்று அருவறுத்துக் கூற, சத்தியமாய் ராகவுக்குத் தான் செய்த பிழை எது என்று புரியவே இல்லை.
கூடவே அவளது இந்தப் பழியில், நியாமானவனுக்கு வரும் கோபாம் அவனது பொறுமையையும் மீறி வெளிப்பட முரண்டு பிடித்துக் கொண்டிருந்தது.
ஆனால் அவனது ஆழ்மனமோ.. ‘சிறு பெண்.. திருமணம், அது சார்பான குழப்பத்தில் இருப்பவள்.. அவள் பேசுவதைப் பொருட்படுத்தக் கூடாது..’ என்று எடுத்துக் கூற.. பொறுமையாகவே அவளது பிரச்சனையைக் கேட்க முனைந்தான் ராகவ்.
“மணி.. போதும்! வார்த்தையைச் சிதறவிடாத. உனக்கு என்ன பிரச்சனைன்னு என்கிட்டே தெளிவா சொல்லு.
நீயா எதையாவது யோசிச்சுட்டு இருக்காத. அது நம்ம வாழ்க்கைக்கு நல்லது இல்ல..” என்று அவன் காற்றில் பறக்கத் துடிக்கும் பொறுமையைக் கட்டி இழுத்துக் கொண்டு பேச, மணியோ அடங்குவதாய் இல்லை.
“ச்சை வாய மூடு! சாத்தான் வேதம் ஓதற மாதிரி..” என்று அவள் பேசிக்கொண்டே போக, அதற்கு மேல் தன்னைக் கட்டுப்படுத்த முடியாது.. “ஏய்.. நிறுத்துடி..” என்று அவன் எழுந்து நின்று அதட்ட, மணிக்கு நெஞ்சுக்குள் நடுக்கம் பிறந்தது!