Loading

 

நான் அடிச்சா தாங்க மாட்ட  நாளு மாசம் தூங்க மாட்ட மோதி பாரு வீடுபோயி சேரமாட்ட..’

போன் அது பாட்டிற்கு ரீங்காரமிட்டு கொண்டே இருக்க.. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து எழும்ப முயற்சித்து கொண்டு இருந்தாள் கண்மணி..!

அந்த முயற்சியில் மீண்டும் தோல்வியையே தழுவியவள் உறக்கம் கலையாமல் அப்படியே போனை துலாவி அலாரமை ஆப் செய்து விட்டு மீண்டும் கனவுலகத்தில் அவள் கனவு நாயகனுடன் உலா போக ஆரம்பித்தாள்..

‘வரான் வரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே

வாரணாசி கேட்டை தாண்டி மெயிலு வண்டியிலே ‘

மறுபடியும் ரீங்காரமிட்டு அழைத்தது அவள் அழகிய அலைபேசி.. ஆனால் இந்த முறை விடாமல் அடித்து கொண்டே இருந்தது..

திரையில் ‘ பக்கி மாடு ‘ என பதிவு செய்யப்பட்ட நம்பரில் இருந்து தான் இத்தனை அழைப்பும் வந்து கொண்டிருந்தது..!

‘ம்ம்ச்’ என சலித்து கொண்டே அரை தூக்கத்தில் எடுத்து காதில் வைத்தது தான் தாமதம்..

அந்த பக்கம் என்ன கிழி விழுந்ததோ,

மந்திரித்து விட்ட கோழி போல் சட்டென எழுந்து கொண்டவள்,

“இதோ இதோ அவ்ளோ தான் எல்லாமே ரெடி நான் தல சீவுனா மட்டும் போதும் நீ வா நான் வெளிய வரேன்..”

என அழைப்பை துண்டித்து விட்டு குளியல் அறைக்குள் புகுந்து விட்டாள்..

****

கப்போர்டில் இருந்து துணியை எடுத்து கொண்டிருந்த சாத்விகாவை முறைத்து கொண்டிருந்தான் அவள் கணவன் துருவ்.. 

‘நான் அவளதான் பாக்கறேன்னு தெரிஞ்சும் கொஞ்சமாவுது கண்டுக்கறாளா பாரேன்.. சரியான திமுரு புடிச்சவ’, என அவளை மனதிற்குள்ளேயே கறுவி கொண்டிருந்தவன்.. அவள் எடுத்து வைத்த துணியை தூக்கி கீழே போட்டான்.

அவனை ஒரு பார்வை மட்டும் பார்த்தவள் கீழே விழுந்ததை எடுக்க போக சட்டென அதை எடுத்து அவள் கைக்கு எட்டா வண்ணம் இன்னும் தூர எறிந்தான்.

அவன் செயலில் எரிச்சல் அடைந்தவள், “இப்போ உங்களுக்கு என்ன தான் பிரச்சனை?”

“அத நான் தான் கேக்கனும் உனக்கு என்ன டி பிரச்சனை? நீ பாட்டு வர போற இங்க என்ன தான் நடக்குது ஹான்..? வீட்டுல நான் ஒருத்தன் புருஷனு இருக்கறதே மறந்துருச்சோ!?”

” ஓ.. நான் எங்க போனாலும் உங்க கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டு தான் போகனுமோ? நான் ஒன்னும் உங்க அடிமையில்ல.. போதும் பா சாமி இவ்ளோ நாளா நான் முட்டாளா இருந்ததே போதும்.. இனிமேலும் நீங்க சொல்லுறதுக்கு எல்லாம் நான் தலையாட்டிட்டு இருப்பேன்னு நெனைக்காதீங்க.. நான் இன்டெர்வியூக்கு தான் கெளம்பிட்டு இருக்கேன்.. “

” எது இன்டெர்வியூவா? என்ன விளையாடுறியா.. ஆமா டி அன்னைக்கு நான் பேசுனது தப்பு தான்..!

 சரி கோவமா இருக்கியே கொஞ்ச நாள் விட்டு புடிக்கலாம்னு நெனச்சா ரொம்ப தான் துள்ளுற..? “

“நீங்க யாரு என்ன விட்டு புடிக்கறதுக்கு? என் வாழ்கையோட முடிவ நான் தான் எடுப்பேன்.. எவ்ளோ ஈகோ? பொண்ணு வேலைக்கு போறனு சொன்னவுடனே கோவம் பொத்துக்கிட்டு வருது..?சரியான ஆண் ஆதிக்கவாதி..!”, என அவள் கத்த, அவன் பேச வருவதற்குள் தொட்டிலில் தூங்கி கொண்டு இருந்த வாண்டு இவர்கள் பேச்சு சத்தம் கேட்டு முழித்து கொண்டு அழுக ஆரம்பித்து இருந்தது.

“என்னமோ பண்ணி தொல போ ” என எரிச்சலுடன் சொன்னவன் குழந்தையை தூக்கி கொண்டு வெளிய வந்து பால்கனி வழியே ரோட்டில் இருந்த வாகன நெரிசலை காட்டி.. சமாதானம் செய்ய முயற்சித்து கொண்டிருந்தான் மூன்று வயதை நிரம்பிய அவர்களின் மகள் மகிஷாவை..!

****

ஆட்டோ ஸ்டாண்டில் நின்று கொண்டு திரும்ப திரும்ப வாட்சை பாத்து கொண்டிருந்தாள் அஷ்வினி.

அவளின் இஷ்ட தெய்வமான செல்லாண்டி அம்மனுக்கு இத்தோடு நூறாவது முறையாக கோரிக்கை வைத்து விட்டாள், ஆட்டோ வர வேண்டும் என்று.

இன்று அவள் வாழ்வின் முக்கியமான நாள். எத்தனையோ இடத்தில் வேலைக்கு விண்ணப்பித்தும் பல இடத்தில் எக்ஸ்பிரியன்ஸ் இல்லை என்கிற காரணத்தினாலேயே தட்டி போக,

இந்த முறை தான் முதல் ரவுண்டில் செலக்ட் ஆகி இறுதி சுற்றுக்கு அழைத்திருக்கிறார்கள். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் வேலை கையை விட்டு நழுவுவது போல் ஓர் பிரம்மை உண்டாக, படபடக்கும் இமைகளால் ஆட்டோவை எதிர்நோக்கி அங்கும் இங்கும் நோட்டம் இட்டு கொண்டே இருந்தாள்.

அப்பொழுது தான் புழுதி பறக்க அவள் முன் வந்து நின்றது அந்த பல்சர்.

அதில் அமர்ந்திருந்த நெடியவன் அவளை பார்த்து புன்னகைக்க,

யார் இவன் என ஒரு நொடி அவனை உற்று பார்த்தவள், யார் என்று தெரியாததால் தலையை கவிழ்த்து கொண்டாள்.

“ஓய்!எங்க போற நான் வேணா ட்ராப் பண்ணட்டா?” என அவன் சிரித்து கொண்டே கேட்க.

அந்த கேள்வியில் அதிர்ந்தவளின் வயிற்றில் பய பந்து உருண்டோடியது. ஷாலை இறுக பற்றி கொண்டே வேக எட்டுகள் எடுத்து நடக்க தொடங்கினாள். அவன் அப்பொழுதும் விடாமல்,

“ஹேய்.. உன்னதான். எங்க போற? ஓய் பஞ்சுமிட்டாய்! நில்லு ” என கத்தினான்.

நெஞ்சம் படபடக்க பயத்தில் கண்கள் கரித்து கொண்டு வந்தது. ஓடாத குறையாக நடந்தவளின் எதிரில் ஆட்டோ வர கையை காமித்து அதில் ஏறி அமர்ந்த பிறகு தான் அவளிற்கு மூச்சே வந்தது.

***

“ஏன்டா பக்கி மாடே என்ன அந்த திட்டு திட்டிட்டு நீயே இவளோ லேட்டா வர? என அவள் அண்ணன் மாதவனிடம் பொறிந்து கொண்டிருந்தாள் கண்மணி.

“இல்ல டி வர வழியில ஒரு பஞ்சுமிட்டாய்ய பாத்தனா ..”

“என்ன அத வாங்கி தின்னுட்டு இருந்தியா?”

“எங்க அதான் அதுக்குள்ள பறந்து போயிருச்சே!”

“ஏதே!! லூசு, சீக்கரம் வண்டிய எடு. லேட்டாவுது ல இந்த தடவ கண்டிப்பா வேல கிடைச்சிரும் ல..? உன்ன நம்பி தான் டா வரேன் இந்த தடவ மட்டும் ஸ்வாகா ஆச்சி அப்றம் என்ன பெத்த மகராசி என்ன ஊருக்கு பேக் பண்ணி விட்டுருவாங்க “

“அதுலா மிஸ்ஸே ஆகாது. ஐயாவோட ரெக்கம்மன்டேஷன் அப்புடி..! ஏற்கனவே எல்லாம் நான் சொல்லி வெச்சிட்டேன் உன் செர்டிபிகேட்ஸ் மட்டும் கொடுத்தா போதும், மீதி எல்லாம் அவங்களே பாத்துப்பாங்க “

ஐந்து மாடி கொண்ட அந்த அடுக்கு மாடி கட்டிடத்தில் பிரம்மாண்டமாக இருந்தது அந்த நேம் போர்டு ‘பார்வதி குக்கிங்ஸ்’

மூன்று தலை முறையாக இருக்கும் பார்வதி கேட்டரிங்கை இன்னும் விரிவு படுதும் விதமாக பார்வதி குக்கிங்ஸ் என்ற பெயரில் ஊறுகாய், ஜாம், சிப்ஸ் வகைகள் தயாரித்து விற்பனை செய்கினர்.

மார்க்கெட்டில் நல்ல வரவேற்பும் பெற்றிருக்கும் நிலையில் இப்பொழுது புதிதாக வேறு ஏதோ ப்ராஜெக்ட்டை ஆரம்பித்திருக்கிறார்கள்..!

அதற்கான ஆள் எடுப்பு பணி தான் வெகு மும்மரமாக போய் கொண்டிருக்கிறது. மிக குறுகிய காலத்தில் இதை செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

கூகிள் மேப்பின் உதவியால் அங்கு வந்து சேர்ந்தாள் சாத்விகா. ஸ்கூட்டியை பார்க் செய்து விட்டு உள்ளே ரிசப்ஷனில் இருக்கும் பெண்ணிடம் இன்டெர்வியூ நடக்கும் தளத்தை கேட்டு கொண்டு அங்கு போய் காத்திருந்தாள்.

மனம் ஏனோ ஓர் நிலையில் இல்லை.. ஏதேதோ எண்ணங்கள் அவள் மனதை ஆட்கொள்ள இதை கண்டிப்பாக செய்தே ஆக வேண்டுமா? என கேள்வி கேட்க..

‘கண்டிப்பா, இல்லனா உனக்கு பைத்தியம் புடிச்சிரும் ‘ என அவள் மூளை சொல்ல மனதிற்கும் மூளைக்கு நடந்த வாக்குவாததில் நொந்து போனது என்னவோ அவள் தான்.

நேரம் பார்க்க போனை எடுக்க அதில் முகப்பு படமாய் துருவ் அவளை தோளோடு அணைத்து கொண்டிருக்க கருப்பு அனார்கலியில் அழகாய் அவன் நெஞ்சில் சாய்ந்து சிரித்து கொண்டிருந்தாள்.

பெற்றோரால் நிச்சயக்கப்பட்ட கல்யாணம் தான் என்றாலும் அலைபேசியிலேயே காதல் பூ வளர்த்தி வித விதமாக பூக்க விட்டனர்..

இந்த போட்டோ ஷூட் எடுக்கும் போது கூட எத்தனை ரகளைகள், எத்தனை செல்ல சீண்டல்கள்..! நினைத்து பார்க்கையில் இப்பொழுதும் சிரிப்பு வந்தது அவளிற்கு.

“சாத்வி குட்டி இந்தா இன்னிக்கு போட்டோ ஷூட்டுக்கு இந்த பிளாக் அனார்கலி போட்டுக்கோ “

” ஹேய் வாவ் அழகா இருக்கு..! ஆனா கருப்பு கலர் போடறேனு மட்டும் சொன்னேன் அவளோ தான் எங்க அம்மா பொங்கிருவாங்க “

” அதுலா ஒன்னும் பிரச்னை இல்ல. உன் கலருக்கு பிளாக் போட்டா இன்னும் தூக்கலா தெரியும் நீ இதயே போடு. அத்த கிட்ட நா பேசிக்கறேன் “

சொன்னது போலவே மாமியாரையும் சமாளித்து விட்டான் மாப்பிள்ளை சொல்லி விட்டால் இனி மறுப்பேச்சு ஏது? 

அவளிற்காக ஒவ்வொன்றயும் அப்படி பார்த்து பார்த்து செய்வான், ரசிப்பான்.

ஆனால் இப்பொழுது..? அவன் கடைசியாக சொன்ன “என்னமோ பண்ணி தொல போ “என்ற சொல் அவள் மண்டையில் வட்டமிட்டு கொண்டிருக்க விழியோரம் துளிர்த்த கண்ணீரை துடைத்து கொண்டாள், அவள் பெயர் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்ட பிறகு..!

” காங்கிராட்ஸ் சாத்விகா யூ ஆர் செலக்டட்..! உங்களுக்கான ஆஃபர் லெட்டர் உங்களுக்கு மெயில் பண்ணிருவோம், பட் ரொம்ப ஷார்ட் பீரியட் ல நாங்க ரேக்ரூட் பண்ணிருக்கறதே எங்களுக்கு சீக்கரம் ப்ராஜெக்ட் ஸ்டார்ட் பண்ணனும்ங்கறகாக தான்..! சோ நீங்க நாளையில்ல இருந்தே ஜோயின் பண்ணிட்டா எங்களுக்கு ரொம்ப கன்வீனியன்டா இருக்கும்.

அண்ட் உங்களுக்கு அசிஸ்ட் பண்ண நியூ ட்ரைனியும் அப்பொய்ன்மெண்ட் பண்ணி இருக்கோம், அவங்களும் டிசைனிங் கோர்ஸ் முடிச்சி இருக்காங்க பட் அவங்களுக்கு எக்ஸ்பீரியன்ஸ் இல்லாதனால உங்களுக்கு கீழ போட்டு இருக்கோம். அப்றம் உங்க டீம் ஹெட் மிஸ்டர் மாதவன் உங்கள அசிஸ்ட் பண்ணுவாரு. கான்பிரன்ஸ் ஹால் ல வைட் பண்ணுங்க, எங்க எம்.டி உங்க கிட்ட மீதி டீடெயில்ஸ் எல்லாம் சொல்லுவாரு.

 தன்னை அறிமுக படுத்தி கொண்டு சாத்விகாவை கான்பிரன்ஸ் ஹாலிற்கு அழைத்து சென்றான் மாதவன்.

ஏற்கனவே அங்கே கண்மணியும் அஷ்வினியும் அமர்ந்திருந்தார்கள்.

“இவங்க கண்மணி நம்மளோட புது அப்(app) டெவெலப்பர், அப்றம் இவங்க அஷ்வினி உங்க அசிஸ்டன்ட் ” முகத்தில் எந்த மாற்றமும் காட்டாது, வேலையே கண்ணாயிரமாக அவன் பேசிய விதம் அஷ்வினிக்கு மிகவும் குழப்பத்தை உண்டு பண்ணியது. இவனா கொஞ்ச நேரம் முன்பு ரோட்டில் வம்பு செய்தான்?

அப்பொழுது இருந்த பதட்டத்தில் அவன் முகம் கூட தெளிவாக அவள் மனதில் பதியவில்லை..

‘ச்சே.. சே.. கண்டிப்பா இவரா இருக்காது’

அவள் யோசனையில் மூழ்கி இருக்க, அவள் முன்பு சொடக்கிட்டவன் ‘என்ன’ என்பது போல் புருவத்தை உயர்த்தி கேட்டான்.

வேகமாக இட வலமாக தலையசைத்தவள், ” ஹாய் மேம் ” என சாத்விகாவிடம் அறிமுகம் ஆனாள்.

“ஓகே எல்லாரும் உக்காந்து இருங்க எம்.டி இப்போ வந்திருவாரு” என சொன்னவன், அவன் இறுக்கையில் வந்து அமர்ந்தான் 

‘யாரா இருக்கும் வந்ததுல இருந்து எல்லாரும் ரொம்ப தான் பில்டப் கொடுக்கறாங்க என அறை கதவை பார்த்து கொண்டிருந்தாள் கண்மணி

” ஹலோ எவிரிபடி! இந்த ப்ராஜெக்ட் பத்தின அக்ரீமெண்ட் கொஞ்ச நேரத்துல்ல உங்க கைக்கு வந்திருக்கும் த்ரீ மந்த்ஸ் தான் உங்களுகான டைம் டார்கட். கண்டிப்பா இத முடிச்சே ஆகணும், பீ சீரியஸ்.. “

கதவு பக்கமாக திரும்பி எம்.டி யின் வரவை எதிர்ப்பார்த்திருந்தவளிற்கு தூக்கி வாரி போட்டது.

‘என்ன டா இது சவுண்டு மட்டும் வருது ஆள காணோ..’ என திரும்பி பார்க்க

ஹோம் தியேட்டர் அளவிலான அந்த பெரிய ஸ்கிரீன் ப்ரோஜெக்டரில் வீடியோ காலில் பேசி கொண்டிருந்தான் வருண் ஆதித்யன்.

அனைவருக்கும் வெவ்வேறு லட்சியம், வெவ்வேறு பயணம், வெவ்வேறு கனவு. ஆனால் இந்த மூன்று மாத காலத்தில் அவர்கள் வந்தடைய போகும் இலக்கோ ஒன்று தான், காதல்..

இந்த காதல் அவர்கள் வாழ்வில் காயம் செய்யுமா? மாயம் செய்யுமா?

காத்திருந்து பார்போம்..!

அலுவலக கேன்டீனில் அமர்ந்து டீயும் சமோசாவும் சாப்பிட்டு கொண்டிருந்தாள் கண்மணி.

“என்ன டா மாதவா, சாப்பாடு செய்யறது தான் உங்க கம்பெனி வேலையே, அப்படி இருக்கும் போது கேன்டீன் ல என்ன இவளோ கேவலமா இருக்கு? சமோசா வா இது? சாருகான் மூஞ்சிய சாணி ல முக்குன மாறி இருக்கு?”

” சமோசாக்கு சாருகானுக்கும் என்னடி சம்மந்தம்? மெண்டல் மண்ட! வந்தோமா தின்னமா போனமா னு இருக்குனும். அத விட்டுட்டு கேள்வி கேக்கறத பாரு.. “

” சரி வுடு.. இன்னும் ரெண்டு சமோசா சொல்லிடு..”

‘ பைத்தியம் ‘ என தலையில் அடித்து கொண்டவன்…

” அதிருக்கட்டும் சித்தி கிட்ட வேலை ஓகே ஆன விஷயத்த சொன்னியா? “

“ஹான்.. ஹான்.. சொல்லிக்கலாம் சொல்லிக்கலாம்.. என்ன அவசரம் “

கண்மணியின் பெரியம்மா பையன் தான் மாதவன். என்ஜினீயரிங் படித்திருக்கும் அக்மார்க் 90’ஸ் கிட்..!

சின்ன வயதில் இருந்தே சமையல் மீது அலாதி பிரியம்.அந்த ஆசையே கனவாக மாறி சொந்தமாக ஒரு கேட்டரிங் பிஸ்சனஸ் ஆரம்பிக்க வேண்டும் என்ற லட்சிய விதையையும் அவனுள் தூவி விட்டு சென்றது.

மிடில் கிளாசில் பிறந்து விட்டு சொந்தமாக பிஸ்னஸ் ஆரம்பிக்க வேண்டும் என்றால் சும்மாவா? லட்ச கணக்கில் முதலீடு போட வேண்டுமே. அவ்வளவு பணத்திற்கு எங்கே போவது?

கனவுகளை எல்லாம் மூட்டை கட்டி விட்டு கிடைத்த வேலைக்கு செல் என பெற்றவர்கள் அறிவுறுத்த பிடித்ததை தான் செய்வேன் என அவன் அடம் பிடிக்க.

அப்றம் என்ன? நான் சாதிச்சிட்டு தான் வருவேன் அப்படினு சொல்லி துரை வீட்ட வீட்டு கெளம்பி வந்தாச்சு..!

ஆனா சும்மா சொல்ல கூடாதுங்கங்க பொறுப்பான பையன் தான்..

மொத்தல்ல தொழில கத்துக்குவோம் னு அது சம்மந்தமான கம்பெனி ல வேலைக்கு சேந்து, சொந்தமா செகண்ட் ஹாண்ட் ல பைக் வாங்குற அளவுக்கு முன்னேறிட்டானா பாருங்க!

இது இப்படி இருக்க. நம்ம கண்மணி கதைய என்னனும் ஒரு எட்டு பாத்துட்டு வந்துருவோம் வாங்க!

மேடம் இந்த ஊருல காலேஜ் படிச்சிட்டு இருக்கும் போதே காலேஜ் ஹாஸ்டல், வெளி ஹாஸ்டல்னு எதுவும் செட் ஆகாம தனியா வீடு எடுத்து வந்துட்டா.. சரினு அவங்க அம்மாவும் 4 வருஷ லீசுக்கு ஒரு வீட்ட புடிச்சி கொடுத்துட்டாங்க. ஆனா பாருங்க அவ படிச்ச லட்சனதுக்கு ஒரு கேம்பஸ் இன்டெர்வியூ ல கூட செலக்ட் ஆகல. தப்பு தப்பு அப்படி சொல்ல கூடாது அம்மணியோட அறிவுக்கு அந்த கம்பெனி எல்லாம் கம்மி, அதுனால செலக்ட் ஆகலயாம். அப்படினு நா சொல்லலைங்க அவளே சொல்லிகறா.

ரைட்டா..! இது இப்புடி இருக்க இன்னும் ரெண்டு மாசத்தோட அந்த வீட்டுக்கான லீசும் முடிய போகுது. அதுக்குள்ள வேல கிடச்சா தானே அதுக்கு மாசம் மாசம் வாடகை கொடுக்க முடியும்..? அவங்க அம்மாவும் ஊருக்கு வா வாங்கறாங்க. ஆனா இவளுக்கு ஏனோ அங்க போகவே விருப்பமில்ல. ஏன்னு அவளே அப்றம் சொல்லுவா தெரிஞ்சிக்கோங்க..!

இப்போதைக்கு இந்த எஸ்.டி.டி போதும்னு நெனைக்கறேன்.. வாங்க மறுபடியும் சமோசா ச்ச.. கதைக்குள்ள போவோம்..!

அண்ணன் காசுல நல்லா முக்கு முக்கு னு முக்கிட்டு அவ கெளம்பிட்டா வீட்டுக்கு.

இங்க, அஷ்வினி ஆஃபீஸ்க்கு வர டைமயும் மத்த ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் எல்லாத்தயும் கேட்டு தெரிஞ்சிட்டு, ஒரு வாட்டி ஆஃபிஸ நல்லா சுத்தி பாத்துட்டு வெளிய வரா.

அங்க ஆஃபிஸ்க்கு பக்கத்துல்லயே சின்னதா ஒரு மரதடி பிள்ளையார் இருக்காரா, அவர் கிட்ட போய் அவ வேண்டுதல் வெச்சிட்டு இருக்கா.

“ஓய் பஞ்சுமிட்டாய்! ” அப்படினு ஒரு சத்தம்.

கண் மூடி இருந்தவள், திடுக்கிட்டு ஓசை வந்த பக்கம் திரும்பி பார்க்க அங்கு தெத்து பல் தெரிய அழகாய் சிரித்து கொண்டே அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான் மாதவன். 

“ஹேய்.. பஞ்சுமிட்டாய் நில்லுங்க! ” அவள் அருகில் வந்து கத்த, இவ்வளவு நேரம் விழி விரித்து அவனையே பார்த்து கொண்டிருந்தவள் அப்பொழுது தான் சுற்றம் உணர்ந்த சுத்தி பார்த்தாள்.

ஒரு பஞ்சுமிட்டாய் வியாபாரி அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

” என்ன பாக்குற? உனக்கும் வேணுமா? “

“ஹா? ஆமா ம்ம்ஹ்ம் இல்ல.. இல்ல..”

என படபடத்தவள் அங்கிருந்து நகர்ந்தாள்.

அஷ்வினியின் கலவர முகத்தை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தவன், அவள் கண்ணை விட்டு மறையும் வரை அவளை பார்த்து கொண்டே அந்த பஞ்சுமிட்டாயை ஒவ்வொன்றாக பீய்த்து சாப்பிட்டு கொண்டிருந்தான்.

செல்வி கேர்ள்ஸ் ஹாஸ்டலில் தான் தங்கி இருக்கிறாள் அஷ்வினி.

ரூமிற்குள் வந்து குளித்து விட்டு உடை மாற்றிய பின்பே அவளிற்கு சற்று அசுவாசமாக இருந்தது.

அவளின் டைரியை எடுத்தவள் எழுதி இருந்த வேலை கிடைக்க வேண்டும் என்ற வாசகத்தின் பக்கதில் ஒரு டிக் மார்க் போட்டாள், சின்ன புன்னகை அவள் இதழில் பரவியது. ஆனால் அடுத்த நிமிடமே அது காணாமலும் போனது..!

அடுத்து என்ன?? இனி என் வாழ்வில் அடுத்து என்ன? நினைத்து பார்க்க கூட முடியவில்லை, இல்லை முயற்சிக்க வில்லையா. அந்த அறையை போலவே அவள் மனமும் வாழ்கையும் வெரிச்சொடி போய் இருந்தது.

நீ தனியாக இல்லை நான் இருக்கிறேன் என சொல்லும் விதமாக மெல்ல தென்றல் காற்று வந்து அவளை தழுவி கொள்ள, ஜன்னலை இன்னும் நன்றாக திறந்து வைத்து அவளின் விருந்தினரை உள்ளே அழைத்தாள்.

அனைவருக்கும் அழகின் சின்னமாக தெரியும் நிலா.. அவளிற்கு மட்டும் தனிமையின் சின்னமாக தெரிந்தது.

சுத்தி கொத்து கொத்தாக எத்தனை நட்சத்திரங்கள் பூத்து இருந்தாலும் ஏனோ தனியாக தானே காய்கிறது..

அவளை போலவே..! 

இந்த நிலவுக்கு இத்தனை நட்சத்திரம் துணையாக இருக்கும் போது. அவளின் நட்சத்திரம் அவள் கை சேருமா..?

இத்தோடு நான்காவது முறையாக அவளின் அன்னைக்கு அழைத்து விட்டாள் கண்மணி. அழைப்பை அவர் எடுத்தப்பாடு இல்லை.

கொஞ்சம் ஏமாற்றத்துடன் சலிப்பாக போனை தூக்கி மெத்தையில் எறிந்தவள், இரவு உணவு தயாரிக்க சமையல் அறைக்கு சென்றாள். இட்லியை ஊத்தி விட்டு தக்காளியை வதக்கி கொண்டிருக்கும் வேளையில் அவள் போன் அழைத்தது.

ஆர்வமாக போய் பார்க்க அவள் அன்னை தான் அழைத்திருத்தார்.

‘ நான் நாலு தடவ போன் பண்ணியும் எடுக்கலல..! நானு நாலு தடவ எடுக்க மாட்டேன்.’ என மனதில் சபதமிட்டு கொண்டாள்.

மூன்று முறை அழைத்து ஓய்ந்தது அவள் அலைபேசி.

“சரி அம்மா பாவம் பொழச்சி போட்டும் இந்த தடவ கால் அட்டன் பண்ணிருவோம் ” என அவர் அழைப்புகாக காத்திருக்க அந்தோ பரிதாபம் அவள் அன்னை மறுபடி அழைக்கவே இல்லை..!

“மூடிட்டு மொத தடவயே கால் எடுத்து பேசி இருக்கலாம்.. கொஞ்சம் கூட மூளையே இல்ல டி மணி ஒனக்கு..!” என தன்னை தானே திட்டி கொண்டவள் மறுபடி அன்னைக்கு அழைத்தாள்.

“ஹலோ எங்கடி போன எடுக்காம எத்தனை தடவ கூப்பிடறது. “

” ம்ம் நா கூப்பிடத விட கம்மி தா “

” சரி சாப்டியா? “

“இனிமே தா ம்மா. ஒரு குட் நியூஸ் எனக்கு வேல கிடச்சிருச்சி “

“ஓ.. எந்த கம்பெனி “

” அதான் ம்மா நம்ம மாதவ் இருக்கான் ல..”

“கண்ணு கண்ணு ஆஃபிஸ் கால் ஒன்னு வருது உனக்கு அப்றம் கூப்பிடறன். பணம் வேணும்னா சொல்லு போட்டு விடறேன் பத்ரமா இருக்கணும் சரியா “

“ம்மா “

அவ்வளவு தான் வழக்கம் போல் அழைப்பு துண்டிக்க பட்டது. பெருமூச்சு விட்டவள் மாதவனிற்கு அழைத்தாள்.

” எங்க இருக்க? சாப்ட வரியா? தக்காளி தான் வதக்கிட்டு இருக்கேன்.”

” இல்ல நீ பாரு கண்மணி. இங்க பார்ட் டைம் ஜாப் பத்தி விசாரிக்க ஒரு இடத்துக்கு வந்துருக்கேன் லேட் ஆகும் “

” சரி பை.. நாளைக்கு ஆஃபிஸ் போகும் போது நீயே என்ன பிக் அப் பண்ணிக்கோ. ஸ்கூட்டி சர்வீஸ் விட்டு இருக்கேன். “

ஆயிற்று இத்தோடு ஒரு வாரம் அவள் அலுவலகம் சேர்ந்து.

” ஹாய் வினி!! இன்னிக்கு என்ன ரொம்ப சீக்கிரமா வந்துட்டீங்க போல”

அவளின் வினி என்ற அழைப்பில் விழித்தாள் அஷ்வினி.

” என்ன முழிக்கறீங்க, நானும் பாத்துடே இருக்கேன் நீங்களா வந்து பேசுவீங்கனு பாத்தா ஒரே சைலன்ட் சைலஜா இருந்தீங்களா, அதான் நானே வந்து பேசிட்டேன், நம்ம பேர் கூட ஒரே மேட்சிங் மேட்சிங்கா இருக்குல! நீங்க வினி நா மணி ஐ மீன் கண்மணி! ஐ திங்க் நமக்குள்ள ஒரு பூர்வ ஜென்ம பந்தம் இருக்கும்னு நினைக்கிறேன். ஒருவேளை நீங்கதான் என்னோடு போன ஜென்மத்து கொடுமைக்கார மாமியாரோ?? ” என அவள் பாட்டிற்கு பேசி கொண்டிருக்க, 

அதில் விlழித்தவள் பிறகு அர்த்தம் புரிந்து சிரித்தாள். 

“அய்யோ அப்படிலா இல்லைங்க.. நான் எப்பவும் இந்த டைமுக்கு தான் வருவேன் நீங்க தான் சீக்கரம் வந்துட்டீங்க “

” என்ன இது வாங்க போங்க னு பேசறீங்க. என்ன பாத்தா அவ்வ்வ்ளோ வயசான மாறியா இருக்கு? நா டூகே கிட் தாங்க ஐ ஆம் ஜஸ்ட் டுவென்டி டூ..வாட் அபௌட் யூ!”

” ஹாஹா நா 90ஸ்கிட் தா ப்பா”

“ஓகே வினி பை! ” என்றவள் அவள் கேபினில் போய் அமர்ந்து வேலையை ஆரம்பித்தாள்.

சிறிது நேரத்தில் டீம் மீட்டிங்கிற்கான நோட்டிபிகேஷன் வர கான்ஃபரன்ஸ் ஹாலிற்கு சென்றாள்.

அனைவரும் ஒன்று கூடிய பின்பு, ப்ரோஜெக்டரின் வழியே வீடியோ காலில் வந்தான் வருண்.

” வாட் இஸ் திஸ் காய்ஸ் ஒன் வீக்குகான ப்ரோக்ரேஸ் இவளோ கம்மியா இருக்கு. உங்களுக்கு எல்லாம் எதுக்கு சம்பளம் கொடுத்து வெச்சிருக்கோம்!

நான்சென்ஸ், என்ன நெனச்சிட்டு இருக்கீங்க எல்லாரும்? வந்து ரிலாக்ஸ் பண்ணிட்டு போக இது ஒன்னும் பார்க் கிடையாது ஒர்க்.!

த்ரீ மந்த்ஸ் தான் நம்மளோட டைம் லைன். ஒவ்வொரு நிமிஷமும் நமக்கு ஒவ்வொரு சான்ஸ். டோட்டலி டிஸ்ஸப்பாய்ன்டிங்! புரிஞ்சிதா? புரிஞ்சி நடந்துக்கோங்க! கெட் லாஸ்ட்”

“டேய் மாதவா என்ன டா நெனச்சிட்டு இருக்காரு இவரு! நான்சென்ஸா. இவருக்கு மொதல்ல எல்லா சென்சும் ஒர்க் ஆகுதா? சும்மா சும்மா நம்ம ப்ராஜெக்ட் ப்ராஜெக்ட்டுனு சொல்லுறாரே தவிர.

இவரு வந்து வேல செய்ய மாட்டேங்கறாரு! ஒரு ஆல் தி பெஸ்ட் சொல்லல, தேங்கா ஒடச்சி ப்ராஜெக்ட் ஆரம்பிக்கல, இப்புடி இப்புடி பண்ணுங்கனு ஒரு கைடன்ஸ் இல்லை, அட இந்த கேன்டீன் ல ஒழுங்கா சோறே இல்ல.சும்மா பண்ணு பண்ணுனா எப்படி பண்ணுறதாம்?. பக்கத்தில் இருந்து பஜ்ஜி போண்டா வாங்கி கொடுத்து என்கரேஜ் பண்ணா தானே நம்மளும் புஜிடிக்கா வேல செய்ய முடியும். வாரத்துக்கு ஒரு தடவ அலாவூதின் பூதம் மாறி அந்த ஸ்கீரின் ல வந்து கத்திட்டு போனா நாங்க பயந்துருவோமா? “

“எது பூதமா “

“கரெக்ட் பூதமில்ல பூமர்..! சரியான பூமர் அங்கிள்!!”

“நான் இன்னும் கால் கட் பண்ணல மிஸ் கண்மணி!” என்றவன் விழி சுறுக்கி அவளை பார்த்து கொண்டிருக்க..

பாவையவளோ விழி விரித்து விதிர்விதிர்த்துப் போனாள்.! 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
19
+1
2
+1
5

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. Indhu Mathy

      ஹா ஹா ஹா…. 🤣🤣🤣 கண்மணி செம க்யூட்… 🤩 மாட்டினியா… 🤭🤭

      சாருக் மேல ரைட்டர்க்கு என்ன கோபமோ தெரியல…. 😝

      சூப்பர் ஸ்டார்ட்… 💕 வாழ்த்துக்கள் sis… 💐