மருதனையும் மகிழ்நிலாவையும் மீண்டும் பார்க்க கிடைத்த சந்தோஷத்தோடு ஓவியத்தில் இருந்து வெளியே வந்தனர்.”
ரக்ஷி, தனக்கு ஆபத்து வரும் என்றத தெரிஞ்சு தான் இருந்திருக்காங்க. ஆனா எனக்கு தான் ஒன்னுமே தெரியாம போய்டுச்சு.” என்று மண்டியிட்டு அமர்ந்தவள் கண்கள் கலங்கியிருந்தன.
“தீரா, நீ அழுததெல்லாம் போதும். நம்ம அம்மா அப்பா எப்பிடி இறந்தாங்கன்னு கண்டுபிடிக்கனும். இந்த மூணு ஓவியத்தையும் அப்பா வரைஞ்சதுக்கு காரணம் இருக்கு. ஆனா நாலாவது ஓவியம் முடிக்காம இருந்திருக்காரு. இதுல என்ன தெரிஞ்சுக்க முடியும்?”
சிறு அமைதிக்குப் பின்னர்
“நான் இதை முடிக்க தான் அப்பா விட்டுட்டு போயிருக்காரு.”
“இதுல என்ன வரைய நினைச்சிருப்பாரு?”
“எனக்கு தெரியல ஆனா இதுக்கான பதில் கண்டிப்பா கிடைக்கும்”
“இப்போ நாம என்ன பண்ண போறோம்?”
“ம்ம்.. ஸுவீட் சாப்பிட போறோம்””மிமிக்ரி! ஆனா நல்லா இல்ல.நீ இப்பிடி இயல்பா பேசுறனா ஏதாவதொரு வழி கிடைச்சிருக்கனுமே”
“ஆமா, நானும் அப்பாவும் அன்னைக்கு போன இடத்துக்கு போகனும். என் கனவுல வந்த இடமும் அதுதான். அவங்க என்கிட்ட ஏதோ சொல்ல நினைச்சிருக்காங்க. அதை தெரிஞ்சுக்கனும் னா அங்க நான் போய் தான் ஆகனும்.”
“ஐ!!! அப்ப நானும் வாரேன்”
“நாம ஒன்னும் பிக்னிக் போகல.அதுவும்மில்லாம அங்க ஏதாவது ஆபத்து இருக்கலாம். அதனால நீ அங்க வாரது பாதுகாப்பு இல்ல.”
“நா உனக்கு எப்பவும் துணையா இருப்பேன்னு வாக்கு கொடுத்திருக்கேன். உனக்கு ஒரு கஷ்டம் வரும் போது என்னால தூர நின்னு பாத்துட்டு இருக்க முடியாது.”
தனக்கு இப்படி ஒரு நட்பு கிடைத்ததை எண்ணி பெருமை கொண்டாள் தீரா.
இருவரும் தம் தேடல் பயணத்தை ஆரம்பித்தனர்.
பனிக்காலம் என்பதால் போகும் பாதை முழுவதும் பனியால் மூடப்பட்டிருந்தது.
இருவரும் நன்கு தடிப்பமான ஆடை அணிந்திருந்ததனால் அவர்களது பயணத்தை தொடரக்கூடியதாய் இருந்தது.
அப்போது தான் நிலவு தன் ஆட்சியை தொடங்கியது. அந்த நிலவின் வழிகாட்டலில் பாதையில் தொடர்ந்து சென்றனர்.
பாதை முடியும் தருணத்தில் சூரியனின் ஆட்சி ஆரம்பமாகும் பாதை இவர்களை வரவேற்றது.
இவை அனைத்தையும் வாய் பிழந்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள் ரக்ஷிதா.
இதை கவனித்த தீரா,” கொஞ்சம் உன் வாட்டர் ஃபோல்ஸ மூடு”என்றவுடன் தன் வாயை இறுக மூடிக்கொண்டாள்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை எழில் கொஞ்சும் இயற்கை இவர்களை வரவேற்றது.
பாதையின் இரு புறமும் தலை நிமிர்வோடு நிற்கும் மரங்கள், காற்றில் ஏதோ பேசுவது போன்ற உணர்வு ஏற்பட்டது இருவருக்கும்.
சூரியன் காட்டும் பாதையில் பனி, தங்கத் துகள்களாக கொட்டுவதைப் பார்க்க அதிசயமாய் இருந்தாலும் அழகாக இருந்தது.
இவற்றை எல்லாம் இரசித்தவாறே முன்னேறிச் சென்றனர்.
ஒருவாறு அந்தக்குகையை அடைந்தனர். தீரா குகையினுள் செல்ல ரக்ஷிதாவினால் உள்ளே நுழைய முடியவில்லை.சக்தி இருப்பவருக்கு மாத்திரமே உள்ளே செல்ல முடியும் என்பது புரிந்திட ரக்ஷிதாவை குகையின் வெளியில் நிற்க வைத்து தீரா மட்டும் உள்ளே சென்றாள்.
குகை மிகவும் இருட்டாக இருக்க தன் இடக்கையில் தீப்பிழம்பொன்றை உருவாக்கி அதன் வெளிச்சத்தில் உள்ளே சென்றாள்.
உள்ளே சென்றவளுக்கு தன் தந்தை கூறிய தொட்டி தென்பட்டது.
அதன் அருகே சென்று தன் வலதுகையை அந்த தண்ணீரினுள் வைத்தாள்.அதன் பின் அதில் தென்பட்ட காட்சிகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்து
“இல்ல!!! என்று அலறி தன் கையை தொட்டியில் இருந்து வேகமாக எடுத்தாள். அவள் கையை எடுத்த வேகத்தில் நீர்த்துளிகள் குகையின் ஒரு பக்க சுவரில் தெரித்தது.அங்கு ஒரு அழகிய கண்ணாடி ஒன்று தோன்றியது. ஆனால் அதில் வித்தியாசமான காட்சிகள் தோன்றின.
ஒரு ஒளி தோன்றியதில் கண்களை மூடித்திறந்தவள் கண்டது ஒரு கண்ணாடியைத் தான்.
அதீரா!” என ஒரு பெண்ணின் குரல் அந்த கண்ணாடியில் இருந்து கேட்டது.
குரல் கேட்ட கண்ணாடியின் அருகே சென்றாள் தீரா.
பெரிய நீல நிற விழிகளும் கூரான நாசியும் சிவந்த உதடும் வட்ட முகமும் கொண்டு சிவப்பு நிற ஆடையும் அணிந்திருந்த ஒரு அழகிய பெண் தீராவை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
தீரா குழப்பத்துடன் அந்த கண்ணாடியில் தெரிந்த பெண்ணைப் பார்த்தாள்.
“குழப்பம் வேண்டாம் அதீரா. உன் கேள்விகள் அனைத்திற்கும் என்னிடம் பதில் உண்டு.
நான் அபிரதி. இந்த இடத்தை பாதுகாப்பது என் கடமை. இந்தத் தொட்டியில் இருக்கும் நீர் உன் எதிர்காலத்தைக் காட்டும்.
அந்த நிகழ்வு நடைபெறாமல் இருக்க வேண்டும் என்றால், இவ் உலகில் அழிக்க முடியாத மூன்று சக்திகளால் மட்டுமே அது சாத்தியம் ஆகும்.”
“நீங்க சொல்றது எதுவுமே எனக்கு புரியல. ஆனா எனக்கு ரக்ஷிதா, அகரன் அப்பறம் அந்த ஊரையும் மக்களையும் காப்பாத்தியே ஆகனும், என்னோட கேள்விகளுக்கும் பதில் தெரிஞ்சாகனும். என்னோட அம்மாவையும் அப்பாவையும் அந்த வரதன் எப்பிடி கொன்னான்? நீங்க சொன்ன மாதிரி அவனைத் தடுக்க அந்த மூன்று சக்தியாலும் தான் முடியும்னா அந்த மூன்றும் என்ன? சொல்லுங்க.” என்று ஒரு வேகத்துடன் கேட்டாள்.
அபிரதி ஒரு புன்முறுவலுடன் அந்தத் தொட்டியைக் காட்டினாள்.
தீரா அந்தத் தொட்டியை பார்க்க தொட்டியில் இருந்த நீரோ, தீரா தன் பெற்றோரை இறுதியாக சந்தித்த நாளைக் காட்டியது.
இறுதி தாக்குதல் தன் பெற்றோரை நோக்கி நடத்த முற்பட வரதன் அவ் இடத்தை நோக்கி வருவதைப் பார்த்த மருதன் தன் இடக்கையை அசைத்து தீராவைத் தாக்க அவள் வீசப்பட்டு விழுந்தவுடன் அவளைச் சுற்றி ஒரு கவசம் உருவாக்கப்பட்டது.
இதை எதையும் உணராத நிலையில் அவள் மயங்கிக் கிடந்தாள். இவை அனைத்தும் நொடிப் பொழுதில் நடந்து முடிந்தது.
இவர்கள் முன்பு தோன்றிய
வரதன்”அண்ணா!” என அழைத்தப்படி மருதனை அணைத்துக் கொண்டான்.
ஆனால் அனைத்தவனின் கண்கள் குரோதத்தை காட்டியது.
“நான் ரொம்ப தப்பு பண்ணிட்டேன் அண்ணா. நான் அந்த மக்களை ஆள்வதற்கு தகுதியே இல்லாதவன். இந்த ஆட்சி இனி உங்க வம்சத்துக்கு சேர வேண்டியது. அதை ஒப்படைக்க தான் நான் இங்க வந்தேன்” எனக் கூறியவாறு மருதனிடம் இருந்து விலகி அந்த இடத்தைச் சுற்றி பார்வையிட்டான்.
தீராவைச் சுற்றி இருந்த கவசத்தினால் அவனின் பார்வையில் தீரா தென்படவில்லை.
வரதன் சிறு ஏமாற்றத்துடன் “என் மகளைப் பார்க்க ஆசையா இருக்குது. அவ எங்க அண்ணா?”
மகிழ்நிலா ஒரு பயத்துடன் மருதனின் கையைப் பற்றிக் கொண்டாள்.மருதன்,
” நீ எதுக்காக இங்க வந்தியோ நான் இருக்கும் வரை அது நடக்காது.” என கோபமாக பதிலுரைத்தான்.
“ஓ…என்னோட நோக்கத்தை தெரிஞ்சுக்கிட்டு உன்னோட அழிவ நீயே தேடிக்கிட்டியே மருதா” என வன்மமாக சிரித்தபடி உரைத்தவனின் கண்கள் சிவப்பு நிறத்தில் மாறின.
அவனைச் சுற்றி சிவப்பு நிறத்தில் ஒளி தோன்றியது. அவனின் தோற்றம் பார்ப்பவருக்கு பயத்தை அளிக்கக்கூடியதாய் இருந்தது.
இதற்கு சிறிதும் பயப்படமாமல் நிலாவிற்கும் தைரியம் அளித்து அவனை நெஞ்சில் துணிவொடு எதிர்கொண்டான்.
வரதன் அவனின் துணிவைக் கண்டு சிறிது தடுமாறி பின் தன்னை சமன் செய்து “என்னோட பலம் இப்போ உன்னை விட அதிகமா இருக்குனு தெரிஞ்சும் என்கிட்ட மோத தயாரா இருக்கியே.”
“உன்னோட பலம் எப்பிடி இருந்தாலும் என்னோட சக்தியும் நம்பிக்கையும் இருக்கும் வரை உன்னால ஒன்னும் பண்ண முடியாது, என் குடும்பத்தையும் உன்னால அழிக்க முடியாது.”
“அப்படியா முதல்ல அந்த நம்பிக்கைய உடைச்சு காட்டுறேன்” எனக் கூறும் போது அவன் கைகளில் சிவப்பு நிற பிழம்புகளை உருவாக்கினான்.
மருதனும் தனக்கு வரும் தாக்குதலை எதிர்கொள்ள தயாராகஅவன் எதிர்பாராத நேரம் “மடிந்து விடு” என மருதனின் அருகிலிருந்த நிலாவைத் தாக்கினான். அந்த தாக்குதலில் பேச்சு மூச்சின்றி கீழே விழுந்தாள்.
“நிலா!!!” என அலறியவாறு அவளருகில் விரைந்து சென்று அவளை மடியில் தாங்கினான். அவளின் உயிர் உலகைவிட்டு பிரிந்திருந்தது.
“என்னப் பார் நிலா. கண்ணை திறந்து பாரு. நிலா!!! “என அவளை மார்போடு அணைத்தவாறு கதறி அழுதான்.
எதையும் யோசிக்க முடியோமல் அழுது கொண்டிருந்தான்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தன் பலம் கொண்டு மருதனை தாக்கினான்.
மருதனும் மடிந்து விழுந்தான்.
“இனி என் எதிரி அதீரா மட்டும் தான். அவளையும் நான் அழித்திடுவேன்.”எனக் கூறியவாறு இறந்த இருவரின் மீதும் தன் கைகளை வைத்து கண்களை மூட வானம் முழுதும் இருளாகியது.
இருவரின் மாயசக்தியும் அவனுள் அடைக்கலமானது.தான் பெரிதாக சாதித்த உணர்வுடன் “எனக்கு வேண்டியதில் ஒன்னு கிடைச்சிடுச்சு. இப்போ என்னோட பலம் பல மடங்காகிடுச்சு. என்னை எதிர்க்க இனி எவனும் யோசிப்பான். எனக்கு உன் மகளோட சக்தியும் முழுசா கிடைச்சிட்டா என்னை யாராலும் தோற்கடிக்க முடியாது. என்னை எதிர்க்கிற அளவு சக்தியும் யாருக்கும் இருக்காது. நீ உன் மகளை இப்போ எனக்கு தெரியாம எங்க வேணும்னாலும் மறைச்சு வைச்சு இருக்கலாம். ஆனா அவளை கண்டுபிடிச்சு இருபத்தஞ்சாவது வயசுல அவளோட சக்தி முழுமை ஆனதும் அந்த சக்தியை என் வசமாக்குவேன்.” என மூச்சற்று இருக்கும் மருதனிடம் கூறிவிட்டு அந்த இடத்தைவிட்டுச் சென்றான்.
அவன் சென்ற பின்னர் தீராவின் கவசம் உடைய மயக்கத்திலிருந்து எழுந்தவள் கண்டது பேச்சு மூச்சற்று இருக்கும் அவளின் பெற்றோரைத்தான்.
இந்த நிகழ்வுகள் அனைத்தும் அந்தத் தொட்டியில் இருந்த நீரில் தோன்றி மறைந்தது.
தீராவின் கண்கள் கோபத்தில் கொந்தளித்தது.அதே கோபத்துடன்”அவனை நான் பழிவாங்காம விடமாட்டேன். அந்த மூன்று சக்தியும் என்னன்னு சொல்லுங்க”
அபிரதி,” இதற்கான பதில் உன்னிடம் தான் உள்ளது அதீரா. அதைக் கண்டுபிடிக்க வேண்டியது உன் கடமை”என்றவுடள் அபிரதியும் மறைந்தாள், கண்ணாடியும் மறைந்தது.
செய்வதறியாது திகைத்து நின்றவள் மனதை திடப்படுத்திக்கொண்டு குகையை விட்டு வெளியே வந்திருந்தாள்.
தொடர்வாள்…
-கி.பிரஷாதி-