Loading

 

 

 

 

 

குகையிலிருந்து வெளியே வந்தவுடன் ரக்ஷிதாவை தேடி அவள் அருகே சென்றாள். 

அவளின் அருகே கைகளில் விலங்கிடப்பட்டு சோர்ந்த உடலுடன் அகரன் நின்றிருந்தான்.அவனைக் கண்ட தீராவின் முகத்தில் சந்தோஷம், அதிர்ச்சி என பல உணர்வுகள் பிரதிபலித்தன.அவன் நின்றிருந்த கோலம் அவளின் மனதை வாட்டியது. அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

 

தன்னை அணைத்த தீராவை ஆறுதல்படுத்த முடியாமல் கைகள் விலங்கிடப்பட்டிருப்பதை எண்ணி வருந்தினான்.

 

அணைப்பை தளர்த்தி அவன் கைகளில் இருந்த விலங்கினை உடைக்க முற்பட அது முடியாமல் போனது.

 

“இது அவன் போட்ட விலங்கு அக்கா. அவனால மட்டும் தான் உடைக்க முடியும்.உங்களை எனக்கு ரொம்ப புடிக்கும். யாருன்னே தெரியாத என்னை உங்க தம்பியா ஏத்துகிட்டீங்க. என் அப்பா உங்க குடும்பத்தை பத்தி நிறைய சொல்லி இருக்காரு. அப்ப இருந்தே உங்களை பார்க்க ஆசையா இருக்கும். நான் என்னோட திறமைய வளர்த்து மருதன் அப்பா கிட்ட என்னோட திறமைய வெளிக்காட்டனும், உங்க கிட்ட நிறைய கத்துக்கனும் இப்பிடி நிறைய ஆசைகள் இருந்துச்சு. இப்போ எல்லாமே மாறிடுச்சு.” என கூறி பின் உணர்வுகள் துடைத்த முகத்துடன் மீண்டும் தொடர்ந்தான்.

 

“அவன் ஆட்சிக்கு வந்ததுக்கு பிறகு நல்லா தான் தன் கடமைய செஞ்சிட்டு இருந்தான். ஆனா காலம் போகப் போக அவனோட நடவடிக்கை எல்லாம் மாறிட்டு வந்துச்சு. அப்போ தான் மருதன் அப்பா இறந்த செய்தி எங்களுக்கு தெரிஞ்சது. இதுக்கு காரணம் அவன் தான்னு தெரிஞ்ச மக்கள் அவனுக்கு எதிர்ப்பு தெரிவிச்சாங்க. ஆனா அவனோட பலத்துக்கு யாராலயும் ஈடு கொடுக்க முடியல. அதனால மக்கள் அமைதியாகிட்டாங்க. சில வருடத்துக்கு அப்பறம் அவனோட நடவடிக்கை எல்லாம் ரொம்பவே மாறிப்போச்சு. நல்ல சக்தி இருக்க மந்திரவாதிகளை கொன்னு அவங்களோட சக்தியை எடுத்து அவனோட சக்தியை அதிகரிச்சான். அவன் சொல்றதை யாராவது மறுத்தா உடனே கொன்னுடுவான். மருதன் அப்பாக்கும், அவர் இறந்ததுக்கு பிறகு நீங்க இருக்க இடத்தை அவன்கிட்ட மறைச்சு வச்சிருந்து உதவி செஞ்ச என்  அம்மாவையும் அப்பாவையும் கொஞ்ச நாள் முன்னாடி என் கண்ணுமுன்னாடியே வச்சு கொன்னான். அப்பறம் அவன் என்னை அவனோட அடிமைகள்ள ஒருத்தனா மாற்றினான். கொஞ்ச நாள்ல நான் அவன்கிட்ட இருந்து தப்பிச்சேன். 

 

ஆனா இதெல்லாம் அவன் என்னை தப்பிக்கவச்சு பண்ண சூழ்ச்சி னு எனக்கு தெரியாது.

என் அப்பா சாகும் போது உங்களால மட்டும் தான் அவனை எதிர்க்க முடியும்னும் உங்கள நான் பாதுகாக்கனும்னு சொன்னாங்க. 

 

அதுனால தான் உங்களை தேடி வந்தேன். ஆனா எனக்கே தெரியாம அந்த வரதன் ,உங்களை கண்டுபிடிக்கிறதுக்காக என்னை கண்காணிச்சான். இதை நான் தெரிஞ்சிக்கிட்ட பிறகு தான் உங்களை சந்திக்க வாய்ப்பு கிடைச்சும் தவற விட்டேன். 

 

கடைசியா உங்கள பாத்தே ஆகனும்னு வந்தப்போ அவனோட ஆட்களால தாக்கப்பட்டேன். நான் இறந்துட்டுதா நினைச்சு அவங்க போய்ட்டாங்க னு தான் நினைச்சேன். ஆனா இதுவும் அவன் சூழச்சினு தெரியாம போச்சு. உங்களோட சக்தியோட அளவை தெரிஞ்சுக்க தான் என்னை அனுப்பியிருந்துருக்கான். இது நான் உங்க வீட்டுக்கு வந்ததுக்கு பிறகு தான் எனக்கு தோனுச்சு. நான் உங்க கூட இருக்கது அவனுக்கு சாதகமா போகும்னு தான் வீட்டை விட்டு வந்தேன்.

 

நான் உங்க வீட்டில தங்கி இருந்தப்போ மருதன் அப்பாவோட ஓவியங்களை பார்த்தேன். 

 

அந்த தைரியத்தில் தான் கடிதத்தை எழுதி வைச்சிட்டு கிளம்பினேன். ஆனா இது எல்லாமே அவனுக்கு தெரியும். அப்பிடி இருந்தும் அவன் பொறுமையா இருந்ததுக்கு காரணம், உங்க சக்தி முழுமை பெறுவதுக்கு தான்.

 

உங்க சக்தியை அடைய தான் அவன் இப்போ காத்துகிட்டு இருக்கான். நாளைக்கு உங்க பிறந்தநாளோட உங்க சக்தி முழுமை பெறும்.நான் உங்களை விட்டு வந்ததுக்கு பிறகு என்னை மறுபடியும் அவனோட அடிமையா மாத்திட்டான். உங்களுக்கு துணையா இருப்பேன்னு நான் குடுத்த வாக்கை என்னால இப்போ காப்பாத்த முடியாம இருக்கேன். 

 

இப்போ நான் உங்களை அவன்கிட்ட கூட்டிட்டு போகனும். என்னை மன்னிச்சிருங்க” என கண்ணீருடன் கூறி முடித்தான்.

 

அகரன் கூறிய அனைத்தையும் பெண்கள் இருவரும் கேட்டு முடித்த பின்

 

ரக்ஷிதா இனி என்ன செய்ய வேண்டும் என்ற பாவனையில் தீராவைப் பார்க்க

அவளோ ஒரு பெருமூச்சு விட்டு”நீ என்கிட்ட மன்னிப்பு கேட்காத. ஏன்னா உன் மேல எந்தத் தப்பும் இல்லை. உன்னையும் ஊர் மக்களையும் காப்பாத்த நான் அவன்கிட்ட தான் போகனும்னா நான் தயாரா தான் இருக்கேன். எந்த சூழ்நிலையிலும் நான் பின்வாங்க மாட்டேன். என்னோட அப்பா நான் இதை செய்யனும்னு தான் அந்த கடைசி ஓவியத்தை விட்டுட்டு போயிருக்காரு. நான் இதை முடிச்சு அந்த ஓவியத்தை முழுமை ஆக்குவேன்.அகரன்! என்ன அவன்கிட்ட கூட்டிட்டு போ”

 

ரக்ஷி,”தீரா!” என பயத்துடன் அழைக்க

 

“நீ பயப்படாத. எனக்கு ஒன்னும் ஆகாது. இப்போ நீ என் கூட வர வேண்டாம். எனக்குனு இருக்க இந்த ரெண்டு சொந்தத்தையாவது நான் பாதுகாக்கனும்” என அவள் கூறி முடிக்கும் முன்பே அவளை அறைந்திருந்தாள்.

 

தீரா அதிர்ந்து அவளைப் பார்க்க”எனக்கு மறுபடியும் மறுபடியும் ஒரே டயலாக்க சொல்லிட்டு இருக்க முடியாது” என அகரனின் கையையும் தீராவின் கையையும் கோர்த்துக் கொண்டாள்.            

 

 

 

 

 

அகரன் இரு பெண்களையும் பார்த்து ஒரு பெருமூச்சு விட்டு தன் கண்களை மூடிய மறுநொடி மூவரும் மருதனின் ஊரிற்கு வந்திருந்தனர்.

 

 

அந்த ஊரின் நிலைமைப் பார்த்த பெண்கள் இருவரும் அதிர்ந்தனர். முதல் முறை தந்தையின் ஓவியத்தின் மூலம் பார்த்த இடம் முழுதாக மாறி இருந்தது.

 

 

கம்பீரமாய் நிமிர்ந்து நின்ற மரங்கள் வாடி ஒரு உயிர்ப்பின்றி இருந்தன. பசுமை நிறைந்த மலைகள், தன் இயல்பைத் தொலைத்திருந்தன. பாய்ந்து ஓடிய நதிகள் வற்றிப்போய் இருந்தன. இதை எல்லாம் பார்த்த வெண் மேகங்கள் தன் இயலாமையை நினைத்து கரும் போர்வையை போர்த்தி இருந்தன. 

 

 

அகரன்,”இது தான் இப்ப நம்ம ஊரோட நிலைமை”

 

 

மூவரும் மௌனத்தை தன் மொழியாக்கி மலை உச்சியில் இருந்த கோட்டையை நோக்கி நடந்தனர். போகும் வழியில் பார்த்த மக்கள் தம் சிரிப்பைத் தொலைத்து நல்லதொரு விடியல் வந்துவிடாதா என ஏக்கத்துடன் இவர்களை பார்த்து இருந்தனர். 

 

 

கோட்டையை அடைந்ததும் கோட்டையின் பிரம்மாண்ட நுழைவாயில் திறந்தது. அகரன் இவர்களை பார்த்து திரும்பி தன் விலங்கிடப்பட்ட கையைக் கொண்டு அறையின் திறந்த கதவை காட்டினான்.

 

 

அதைப் பார்த்த பெண்களுக்கு மருதனை இதே அறையில் பார்த்த நினைவுகள் துளிர் விட்டன. பின் இதே அறையில் அந்த கயவனைப் பார்க்கப் போவதை எண்ணி கோபம் கொண்டனர். அதே உணர்வோடு அறையினுள் நுழைந்தனர்.

 

 

பலமா தோள்களைக் கொண்டு ஆறடி உயரத்தில் கண்களில் வன்மம் கொண்ட வரதன் இவர்களின் வரவைக் கண்டு ஏளனமாக புன்னகைத்தான்.

 

 

தீராவிற்கு தன் பெற்றோரைக் கொண்ட அந்தக் கயவனை நேரில் பார்த்தவுடனே கொல்ல வேண்டும் என்ற வெறி எழுந்தது. அவள் மனதை படித்த வரதன் இவர்களை கோபமாகப் பார்த்து தன் வலக்கையை முன் நீட்டி விரல்களை இறுக்கி பிடித்து கையை மடக்க 

 

அகரனின் விலங்கு உடைக்கப்பட்டு மூவரின் கைகளும் பின்னால் இழுத்து கட்டப்பட்டன. மூவருக்கும் நின்ற இடத்தை விட்டு நகரவும் முடியவில்லை.

 

 

அவன் தீராவின் அருகில் வந்து “நீயும் உன் அப்பா மாதிரி திமிரோட தான் இருக்க. ஆனா உன் அப்பாவ மறுபடியும் உன் மூலமா பாக்க எனக்கு வெறுப்பா இருக்கு.” என அவள் நாடியை அழுத்தி பிடித்துத் தள்ளினான்.

 

 

“என் முகத்தில அப்பாவ பாக்க முடியலனு சொல்லி நீங்க அப்பா சாயல்லயே இருக்கீங்களே. ஆனா, அப்பா சாயல்ல இருந்து இப்பிடி கெட்ட புத்தியோட இருக்கத பாக்க எனக்கு கோவமா வருது.”என பல்லைக் கடித்துக் கொண்டு கூறினாள். 

 

 

“உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இப்பிடி பேசுவ? நாளையோட நீ உருத்தெரியாம போய்டுவ. உன் சக்தியும் என்கிட்ட வந்துடும்” 

 

 

“நீங்க நினைக்கிறது ஒருநாளும் நடக்காது” 

 

 

“அது எப்பிடி நடக்குதுனு மட்டும் வேடிக்கை பாரு” என தன் இருகைகளையும் தூக்கி தட்ட

 

மூவரும் தூக்கி வீசப்பட்டு ஒரு இருட்டு அறையில் அடைந்தனர்.

 

 

மூவரும் அறையில் நெருங்கி அமர்ந்திருந்தனர். 

 

“அக்கா எனக்கு ரொம்ப பயமா இருக்கு. அவன் ஏதேதோ சொல்றான். அவன நாம ஜெய்க்க முடியாதா”

 

 

தீரா,” கண்டிப்பா அவன ஜெய்க்க முடியும் அகரன். நம்பிக்கையோட இரு. நான் அப்பாவோட ஆசைய நிறைவேத்தாம உயிரை விட மாட்டேன். எனக்கு நீங்க எல்லாம் கூட இருக்கது தான் என்னோட பலமே. என் கூட இருப்பீங்க தானே?”

 

 

“நான் உங்க கூட எப்பவுமே இருப்பேன். அவன் உங்கள தாக்க முன்னாடி என்ன தாண்டித்தான் எதுவும் பண்ண முடியும்”

 

 

“அக்கா நான் உங்க மடில படுத்துக்கட்டுமா?”

 

 

“இதை நீ என்கிட்ட கேக்கவே தேவையில்ல. வா” என 

 

உடனே சாய்ந்து மடியில் படுத்துக் கொண்டான்.

 

ஆனால் அவனின் தலைக்கோத முடியாமல் இருக்கும் தன் நிலையை எண்ணி வருந்தினாள்.

 

 

அகரன் அவள் மடியில் படுத்தவாறு உறங்கிவிட்டான். அவளும் கண் அயர்ந்தாள்.

 

 

“தீரா! தீரா! “என மெதுவான குரலில் அழைத்தாள்.

 

 

“என்னாச்சு ரக்ஷி?” என பதற்றத்துடன் கேட்டாள்.

 

 

“இல்ல… தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க னு சொல்றது இதுதானா?”

 

 

முதலில் புரியாது விழித்தவள் பின் புரிந்தவுடன் அவளை அடிக்கக் கூட முடியாத கோபத்தில் நன்றாக திட்டிவிட்டுத் தான் அமைதியானாள்.

 

 

மூவரும் இருந்த நிலையிலேயே உறங்கினர்.

 

ஆனால் சிறிது நேரத்தின் பின் தீராவிற்கு அந்தக்குகையில் இருந்த தொட்டியில் பார்த்த நினைவுகள் எழ, பயத்தில் அவளது உறக்கம் காணாமல் போனது. 

 

 

 

 

தீரா குனிந்து அந்தத் தொட்டியைப் பார்த்தாள். தொட்டியில் இருந்த நீரினுள் சில நிழல் உருவங்கள் தோன்றித்தோன்றி மறைந்தன. தன் வலக்கையை எடுத்து நீரினுள்வைத்தாள்.

 

 

தீயின் ஆக்கிரமிப்பு . இருக்க அதனுள் அகரனும் ரக்ஷிதாவும் உணர்வும் உயிருமற்று மண்ணில் வீழ்ந்து கிடந்தனர். வரதன் வெற்றிக் களிப்பில் சிரித்துக் கொண்டிருக்க தீரா தன் இரு உறவுகளையும் அணைத்தவாறு கதறி அழுது கொண்டிருந்தாள்.

 

 

 

 

அந்த நினைவில் இருந்து வெளியே வந்தவள் தன் பயத்தைப் போக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். பின் தன் பெற்றோரினதும் அந்த மக்களினதும் நினைவு உயிர் பெற

 

அவனைப் பழிவாங்கும் எண்ணத்தோடு விடியலை நோக்கி காத்துக் கொண்டிருந்தாள்.

 

 

தொடர்வாள்….

 

-கி.பிரஷாதி-

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்