Loading

“ரக்ஷி,வா போய் அந்தப் பையன பாத்துட்டு வருவோம்”

“ம்ம் வா”

இருவரும் அந்தச் சிறுவனைப் பார்க்க உள்ளே சென்றனர். 

அறையினுள்ளே அவன், காயங்களுக்கு மருந்திட்டு சோர்வாக கட்டிலில் அமர்ந்திருந்தான். இருவரும் அவனருகே சென்று”இப்ப எப்பிடி இருக்கு உனக்கு?” என தீரா வினவ. அவனோ கண்கள் கலங்க தீராவைப் பார்த்தான். அவனது கண்களில் எல்லையில்லா சந்தோஷம் தெரிந்தது. ஆனால் அதற்கான காரணம் தெரியாது தீரா குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள். அவனது கண்கள் மட்டுமே பேசியது தவிர உதடுகள் இறுக மூடியிருந்தன. 

“உங்க அம்மா அப்பா எல்லாம் எங்க இருக்காங்கனு சொல்றியா? உன்ன நா அவங்க கிட்ட கூட்டிட்டு போறேன்” எனநீடித்த மௌனத்தை கலைக்க முயன்றாள்.

“என..க்கு யாரு..ம் இல்லக்..கா.” என குரல் கரகரக்க கூறினான்.

“நீ இந்த அதீரா அக்கா கூட இருக்கியா?”என தன்னை நோக்கி காட்டி பின் 

தொடர்ந்தாள்”ஏன்னா எனக்கும் யாரும் இல்ல” எனக் கூறி அவனைப் பார்க்க அவனும் பெரும் தவிப்புடன் அவளைப் பார்த்தான்.

சிறு அமைதிக்குப் பின்னர்…

“நா உங்க கூட வாரேன்”என்றான்.

மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள் தீரா.

“அப்ப….நம்ம ஃபேமிலிக்கு ஒரு புது மெம்பர் வந்தாச்சு. எனிவேய்ஸ், நைஸ் டு மீட் யூ(anyways nice to meet you)”என அவனை நோக்கி ரக்ஷி கையை நீட்ட 

அவளையும் அவள் கூறியதையும் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

இதனை கவனித்த தீரா, “இது என் ஃபெரெண்ட்(friend) ரக்ஷிதா. எனக்கு ஒரு அம்மாவா, அப்பாவா பாத்துக்கிறது இவதான் “எனக் கூற அவனும் ரக்ஷியைப் பார்த்து புன்னகைத்தான்.

அவள் நீட்டிய கை மட்டும் அப்படியே நின்றது. 

அவனும் அவளைப் புன்னகையுடன் பார்த்தவாறே இருந்தான்.இதனை அவள் கவனித்து விட்டு அவனது கையைப் பற்றி குலுக்கி  “இப்பிடி கைய நீட்டுனா கையை பிடிச்சு குலுக்கனும்னு அர்த்தம் சரியா?”என 

சரி என தலையாட்டினான்.

“வாங்க வீட்டுக்கு போவோம். இன்னைக்கு நாம ரெண்டு பேரும் லீவு போட்டாச்சு. நாளைக்காவது வேலைக்கு போகனும்” என தீரா மற்றைய இருவரையும் கிளப்பினாள்.

“உனக்கு தான் எந்தப் பிரச்சினையும் இல்லயே. நான் தான் அந்த கொரில்லா (ரக்ஷியின் முகாமையாளர்) கிட்ட ஏச்சு வாங்கனும்”

ரக்ஷியின் கூற்றிற்கு தீரா சிரிப்பதைப் பார்த்து தானும் சிரித்தான்.

ரக்ஷி தன் தோளைக் குலுக்கி விட்டு”என் பொழப்ப பாத்து ஊரே சிரிக்குது இதுல நீங்க மட்டும் என்ன விதிவிலக்கா?”

—————————————-

மூவரும் ஒருவாறு வீட்டை அடைய இரவாகியது.

தீரா, அவன் தங்க ஒரு அறையை ஒரே நொடியில் சுத்தம் செய்து விட்டு. அவனை அழைத்துச் சென்று அறையைக் காட்டி”இங்க தான் நீ தங்க போற சரியா? இப்ப போய் குளிச்சிட்டு வா”என கூறிவிட்டு ரக்ஷியிடம் வந்தாள்.

ரக்ஷி தங்கள் மூவருக்கும் உணவை தயாரித்துக்கொண்டிருந்தாள்.

“நீ என்ன கூப்பிட்டு இருக்கலாம்ல, நான் வந்து சமைச்சு இருப்பேனே?

ரக்ஷி தீராவைப் பார்த்து ஒரு புருவத்தை உயர்த்தி முறைத்தாள்.

“சரி சரி கோச்சுக்காத உனக்கு நான் உதவி பண்றேன்.”என ரக்ஷிக்கு தேவையான உதவியை நின்ற இடத்திலேயே கையை அசைத்து முடித்துக் கொடுத்தாள். ஒரு வாறாக உணவை தயாரித்து மேசையில் வைக்கவும் அவனும் வரவும் சரியாக இருந்தது.

மூவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தனர்.

“அக்கா, நீங்க நல்லா சமைக்கிறீங்க” என அவன் சொல்லியதும் சாப்பிட்டுக் கொண்டிருந்த ரக்ஷியிற்கு புரையேறியது. தன் தலையைத் தட்டிக்கொண்டே அருகிலிருந்த தண்ணீர் கோப்பையை கேட்டு கையை நீட்ட அவனோ அவளது கைகளைப் பிடித்துக் குலுக்கினான். 

பாவம்…ரக்ஷியின் நிலை தான் கவலைக்கிடமானது.

அவள் கையை அவன் கையிலிருந்து வேகமாக பிரித்து தன் வாயில் வைத்து இருமிக்கொண்டே தண்ணீர் கோப்பையை காட்ட , 

அவனோ “கறி வேணுமா?” என 

தன் தலையை எங்கே வைத்து முட்டிக்கொள்வதென நினைத்து அயரந்து போனாள்.

பின்  தானே எட்டி தண்ணீரை எடுத்துக் குடித்து தன்னை சமன்படுத்திக் கொண்டாள்.

அவன் புறம் திரும்பி “சமைச்சது நானு பாராட்டு அவளுக்கா?”என

அவன் புரியாது விழித்தான்.

“நீ அத விடு”என தீரா அவனை திசை திருப்பி 

“இப்ப சொல்லு உன் பேர் என்ன?”

“இரு, நானே சொல்றேன். இனிமே உன் பேர் ‘அகரன்’ ” என அவனைப் பார்த்து கூறினாள்.

“அழகான பேரு தீரா. இன்று முதல் நீ அகரன் என அன்போடு அழைக்கப்படுவாய்” என தன் இரு கைகளை உயர்த்தி அவனை ஆசிர்வதித்தாள்.

அகரனோ இதை எல்லாம் ஒரு புன்னகையோடு  பார்த்துக் கொண்டிருந்தான்.

சாப்பிட்டு முடித்ததும் “தீரா, நா இன்னைக்கு போய் செல்லம்ஸ பாத்துட்டு நாளைக்கு வாரேன்.” என

தீராவும் சரி என தலையசைத்தாள்.

“போய்ட்டு வாரேன் தீரா! போய்ட்டு வாரேன் அகரன்!” என இருவரிடமும் விடைப்பெற்றுக் கொண்டு சென்றாள்.

சிறிது நேரம் அகரனுடன் பேசிவிட்டு அவனை அவனது அறையில் உறங்க வைத்தாள்.

மெலிந்த தேகம், சுருண்ட கேசம், சிறிய நீண்ட கண்கள், புன்னகையை தொலைத்த உதடுகள் கொண்டு அமைதியின் உருவாய் உறங்குபவனை சிறிது நேரம் கண்ணிமைக்காமல் பார்த்து விட்டு தன் அறையில் சென்று படுத்துக் கொண்டாள்.

—————————————-

மறுநாளும் அழகாக விடிந்தது…..

கல்லூரிக்குச் செல்ல பரபரப்பாக தயாராகிக்கொண்டுருந்தாள்…

தூக்கத்தில் இருந்து விழித்து எழுந்து வந்த அகரனைப் பார்த்து “காலை வணக்கம் அகரன்!”அவனும் சிரித்து விட்டு “காலை வணக்கம் அக்கா!” என கூறினான்.

“நா உன்கிட்ட நேத்து சொன்னேன்ல. அக்கா ஒரு கல்லூரில படிப்பிக்கிறேன்னு. அதுனால இன்னைக்கு நா போகனும். நீ சமத்தா குளிச்சிட்டு வந்து இந்த புது துணிய மாத்திக்கோ” என ஒரு உறையை நீட்டினாள். 

அவனும் அதை வாங்கிக்கொண்டப்பின்”ரக்ஷி அக்கா, உனக்கு இந்ததுணியையும்,சாப்பாட்டையும் குடுத்துட்டு போனாங்க. சாப்பிட்டு கவனமா வீட்ல இரு. அக்கா சீக்கிரமா வேலைமுடிச்சிட்டு வந்துடுவேன். மத்தியானம் நாம ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம் சரியா?”

“சரி அக்கா”

“கவனமா இரு” என அவனிடம் விடைப்பெற்று கல்லூரிக்குச் சென்றாள்.

கல்லூரியில்……

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஓவியத்தைப் பார்த்துத் தீட்டிக்கொண்டிருந்த மாணவன் ஒருவன் “அதீரா மேம் ஒரு டவுட்”

“என்ன டவுட்?”

“ஒரு ஓவியத்துக்குள்ள எப்பிடி இவ்ளோ அழகா ஒரு கதைய சொல்லியிருக்கீங்க?”

(மேகங்களுடனூன கறுப்பு நிற வானம் ஓவியத்தின் இடப்பக்கமும், தங்க நிற வானம் வலப்பக்கமும் இருக்க, இரண்டிற்கும் இடையில் சரி பாதியாக இளஞ்சிவப்பு நிற ஒரு பூ இருந்தது. வலப்பக்கம் பூவின் பாதி இதழ்களும், மகரந்த கூட்டுடன் ஒரு இழையும் இருந்தன. மற்றைய பக்கம் பூவின் மீதி இதழ்களும் வேரும் இருந்தன. 

இடப்பக்கம்,பூவின் பாதி இதழ்கள் கறுத்த வானத்தின் பக்கம் நோக்கி வாடியிருக்க மகரந்த கூடும் இழையும் மற்றைய பக்கம் தொடங்கும் இடத்தை நோக்கி சாய்ந்தவாறு இருந்தது. 

வலப்பக்கம் இருந்த பூவின் இதழ்கள் தங்கநிற வானம் பக்கம் நோக்கி மலர்ந்து இருந்தன.வேரானது, ஓவியத்தின் வலப்பக்கம் இருந்த மண்ணை நோக்கி நீண்டு இருந்தது.

இழையும் மகரந்த கூடும் ஒரு ஆணைக் குறித்தது. வேரின் வடிவமைப்பை உற்றுப் பார்த்தால் ஒரு பெண்ணின் பக்கவாட்டுத்தோற்றம் வலப்பக்கம் இருந்த மண்ணில் அமர்ந்திருப்பதைப் போன்று இருந்தது.”இருள் சூழ்ந்திருந்த ஒரு ஆணின் வாழ்வில் ஒரு பெண் ஒளி வீசுகிறாள்’ என்பதை விளக்கியிருந்தது அந்த ஓவியம்……” )

அவளும் அமைதியாக சிரித்து விட்டு”உணர்வுகளை வெளிக்காட்டுறது தான் கலை. அதுல ஓவியங்கள் கதையே பேசும்னு சொல்வாங்க.

என்னோட வாழ்கையில இப்பிடியொரு நிகழ்வு நடக்கனும்னு ஆசைப்படுறத இப்பிடி வரைஞ்சிருக்கேன். இந்த ஓவியத்துக்கு என்னோட இன்ஸ்பிரேஷன்(inspiration) மைக்கல் ஏஞ்சலோ தான்”எனக்கூறஅவளை கேள்வியாக நோக்கினர் மாணவர்கள்…

தீரா,ப்ரெஜெக்டரை (projector) இயக்கி ஒரு ஓவியத்தைக் காட்டினாள்.

     (The creation of Adam by Michelangelo)

“சிஸ்டன் பாவுகைல மைக்கல் ஏஞ்சலோவால வரையப்பட்ட இந்த ஓவியம்,

கடவுள் ஆதாமுக்கு உயிரை ஊட்டுவதாக தான் பாக்குற எல்லாருக்கும் தெரியும். ஆனா இதுல கடவுளுக்கும் தேவ தூதர்களுக்கும் பின்னால இருக்க சிவப்பு நிற ஆடை ஒரு மனித மூளைய பிரதிபலிக்குது.

மொத்தத்துல இந்த ஓவியம்,ஆதாமுக்கு தெய்வீக அறிவை வழங்குறதா சொல்லப்படுது”

“ஆரம்ப காலத்துல தேவாலயங்கள் விஞ்ஞானக்கோட்பாட்ட நிராகரிச்சதுக்கு ஒரு இரகசிய எதிர்ப்ப தெரிவிக்க இப்பிடி அவர் வரைஞ்சதா சொல்றாங்க”தீரா கூறி முடிக்கும் வரை கண்ணிமைக்காமல் அவள் சொல்வதை மாணவர்கள் கேட்டுக்கொண்டிருந்தனர்.

கேட்டு முடித்தவுடன் ஒரு மாணவி “எங்களுக்கும் அவரோட இந்த ஓவியம் ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன் மேம்”அவள் கூறியதை ஆமோதிப்பதைப்போல தலையசைத்தாள்.

வகுப்பு முடியும் தருவாயில்”மேம், நீங்க ஒளிவீசனும்னு நினைக்கிற அந்த ஆண் யாருனு தெரிஞ்சுகலாமா?”என இன்னொரு மாணவி கேள்வி எழுப்ப

ஒரு புன்சிரிப்புடன் “என்னோட உடன்பிறவா தம்பி அகரன்” என பதிலளித்துவிட்டு, இறுதியாக அவர்களிடம் விடைப்பெற்று வீட்டை நோக்கிச் சென்றாள்….

தனக்காக காத்திருக்கும் மர்ம முடிச்சுகளைப் பற்றி அறியாது…                                                                                                                                             தொடர்வாள்….

-பிரஷாதி கிருஷ்ணமூர்த்தி-

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment