Loading

அத்தியாயம் 30

“விவசாயியின் பசுமை பண்ணை” என்று பொறிக்கப்பட்ட தன் ஏற்றுமதி நிறுவனத்தில் மதி ஏற்பாடு செய்திருந்த மீடியாவிலிருந்து வந்திருந்தனர். வந்தவர்களுக்கு அவன் அந்த நிலத்தைப் பற்றியும், அதில் எப்படி விவசாயம் ஆரம்பித்தான் என்பதைப் பற்றியும் விளக்கிக் கொண்டிருந்தான்‌. அவர்களும் பசுமை போர்த்திக் கொண்டிருந்த அந்த நிலத்தில் சில பல போட்டோக்களை எடுத்து விட்டு அவனிடம் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தனர்.

“நீங்க எம்எஸ்சி படிச்சிட்டு எப்படி விவசாயம் பண்ணலாம்னு ஐடியா வந்தது” என்று ஆரம்பித்தான் மீடியாவிலிருந்து வந்த ஒருவன்.

“இதுல தோனுறதுக்கு என்ன இருக்கு. பரம்பரை பரம்பரையாக வந்தது. நானும் பண்றேன். என்ன நான் படிச்சிட்டு பண்றேன். அவ்வளவு தான்” என்று சுருக்கமாக முடித்தான்.

“படிச்சிட்டு நல்ல வேலைக்குப் போகனும்னு ஆசையில்லயா இல்லை வேலை கிடைக்கலயா?. ஊர்ல எல்லாரும் வித்தியாசமா பார்க்கல?” என்று நக்கலாக ஒருவன் கேட்டான்.

“படிச்சிட்டு விவசாயம் பண்ணக் கூடாதுனு ஏதாவது சட்டம் இருக்கா என்ன?. இதுல வித்தியாசமா பார்க்குறதுக்கு என்ன இருக்கு?. எங்கப்பா பண்ணதை நான் படிச்சிட்டு கொஞ்சம் வித்தியாசமா பண்றேன். படிக்காதவனு யாரும் ஏமாத்திறக் கூடாதுல. அதுக்கு நாலு எழுத்து தெரிஞ்சு வச்சுக்கிட்டா தப்பில்லையே” என்றான் சிறு புன்னகையோடு கேட்டவனுக்கு  பதிலடி கொடுக்க.

“ம் ஓகே. உங்கப்பா காலத்துல இருந்து நீங்க எல்லாரும் வியாபாரிங்க கிட்ட தான நீங்க விளைஞ்சதைப் போட்டுட்டு இருந்தேங்க. இப்போ எப்படி இந்த மாதிரி ஏற்றுமதி தொழில் பண்ணலாம்னு தோனுச்சு?”.

“இதற்கு முதல் காரணம் என் மனைவி. இந்த மாதிரி ஒரு அமைப்பு இருக்குனு சொல்லி அதைப் பத்தி தெரியப்படுத்துனது அவ தான். அதுக்கு அவளுக்கு தான் நன்றி சொல்லனும். நாங்க விளைவிச்சதுக்கு மத்தவங்க ஏன் விலையை நிர்ணயம் பண்ணனும், அப்புறம் விலையில்லைனு புலம்பனும்னு தோனுச்சு. அந்த எண்ணம் தான் இந்த நிறுவனம் தொடங்கக் காரணம்” என்றான் பெருமையாக வெற்றி.

“விவசாயிங்களுக்கெல்லாம் இப்போல்லாம் ரொம்ப ஆசை வந்துருச்சு. எதுக்கெடுத்தாலும் போராட்டம். நஷ்ட ஈடுனு ஆரம்பிச்சுருறாங்க. அதைப்பற்றி நீங்க என்ன நினைக்கிறேங்க?” என்றான் ஒருவன் சற்று இளக்காரமாகவும் எரிச்சலாகவும்.

அவ்வளவு தான் அதுவரை பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தவன் கொதித்தெழுந்து விட்டான்.

“என்ன கேட்டேங்க?. விவசாயிங்கலாம் பொழுது போகாம போராட்டம் பண்ணிக்கிட்டு இருக்காங்கன்னு நினைக்கிறேங்களா?” என்று சீறினான்.

“மக்காச்சோளத்துல பட்டைப்புழுக்கள் தாக்கி எல்லாம் சேதமாயிடுச்சுனு விவசாயிகள் நஷ்ட ஈடு கேட்டா உங்களுக்கு எல்லாம் யாசகமும் இரவலும் கேட்குற மாதிரி இருக்கா?. அதை விட சோஷியல் மீடியாவில் இப்போலாம் விவசாயிகள்லாம் விளைச்சல் அதிகமாக வரும்னு பேராசைப்பட்டு கண்ட விதையை வாங்கி பயிரிட்டா இப்படி தான் போகும்னு அசால்டா கமென்ட் பண்றாங்க. ஏன் நீங்கலாம் இன்னொரு கம்பெனில சம்பளம் அதிகம் தர்றேனு சொன்னா அங்க போறதில்லையா?. இல்லை நீங்களே உங்களை அதிக சம்பளம் குடுத்து வேற மீடியாக்கு கூப்டா போக மாட்டேங்களா?” என்று கேட்டதற்கு கேள்வி கேட்டவனிடம் பதில் இல்லை.

“போவேங்கள?. அது மாதிரி தான் விவசாயியும் நல்ல விதை, விளைச்சல் அதிகம் வரும்னு பிரைவேட் கம்பெணிக்காரன் சொன்னா நம்பி வாங்கி பயிரிட தான் செய்வான். அவங்களுக்கு இந்த மாதிரி புழுக்கள் தாக்கி பயிர்கள் சேதமாகும்னு தெரியுமா?. இந்த மாதிரி விதைகள்லாம் நம்ம நாட்டுக்கு வர்றதுக்கு யார் காரணம்?. அதை டெஸ்ட் பண்ணாம நம்ம நாட்டுக்கு வர அனுமதி கொடுத்தது யாரு?” என்று ஆக்ரோஷமாக வெற்றி கேட்ட கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.

“இதுக்கு கவர்மென்டே விதைகளை நல்ல முறைல பாடம் பண்ணி விற்கலாமே?. இலவசமாக விதையை தரனும்னு கேட்கல. நாங்க விதைகள்லாம் வெளியே அதிக விலை குடுத்து வாங்குறோம். எத்தனையோ படிச்ச பட்டதாரிகள் வேலையில்லாம இருக்குறாங்க. அரசே விதைகள் நல்ல முறையில் பாடம் பண்ணி குடுக்கலாம். அதுக்கான ஆராய்ச்சி கூடம் ஆரம்பித்தால் நிறைய இளைஞர்கள் அக்ரிகல்சர் படிச்சு அதுல வேலைக்கு சேருவாங்க விவசாயத்தைப் பத்தியும் தெரிஞ்சுப்பாங்க. நாங்க காசு கொடுத்து விதைகள் வாங்க தயாராக இருப்பதால் அரசுக்கும் இதில் எந்த நஷ்டமும் இல்லை. சிலபேரு நினைக்குற மாதிரி யூனியன்ல விதைகள் இருக்கும்னு சொல்லிடாதிங்க. நீங்க நினைக்குற மாதிரி அங்க எல்லா விதைகளுமே இருக்குறது இல்லை. அங்க அவுரி, ஐம்பது கிராம், நூறுறு கிராம் அளவுல காய்கறி விதைகள் அந்த மாதிரி தான் தருவாங்க. அந்த விதைகளை மட்டுமே வைத்து ஏக்கர் கணக்குல நிலம் வச்சுருக்குற விவசாயி நிலம் புல்லா அதையே பயிரிட முடியாது. பயிர்க்கு போடுற மருந்துல இருந்து விதைகள்ல போடுற மருந்து வரைக்கும் கலப்படம் பண்றது நாங்க இல்லை. அதை நாங்க யார்கிட்ட வாங்குறோமோ அவங்க தான் பண்றாங்க. சொல்லப்போனா என்ன பிராண்ட் விதை வாங்குனேங்கனு கேட்டாக் கூட படிக்காத விவசாயிகளுக்கு சொல்லத் தெரியாது. இந்தக் கடையில் வாங்குனோம்னு தான் சொல்வான். எங்களுக்கும் இயற்கை உரம் போட்டு பண்ணனும்னு ஆசை தான். ஆனால் விதைகள் சரியில்லையே. அப்படியே இயற்கை உரம் போட்டு விவசாயம் பண்ணி அதை நாங்க விற்கப் போனா அதுக்கான விலை எங்களுக்கு வியாபாரிங்க கிட்ட இருந்து கிடைக்குதா?. விலையில்லாம தான் நிறைய பேர் விவசாயத்தை விட்டுட்டு கூலி வேலைக்கே போயிடலாம்னு போயிடுறாங்க.

அப்படியே முட்டி மோதி வெள்ளாமையை நல்லபடியாக் கொண்டு வந்து அதை அறுவடை பண்ற நேரம் விலை இருக்குறதில்லை. நீங்கலாம் வெங்காயம் இவ்வளோ ரேட், தக்காளி இவ்ளோ ரேட் விக்குதுனு புலம்புறேங்க. ஆனால் எங்க கிட்ட எவ்வளவு ரேட்டுக்கு வாங்குறாங்கனு தெரியுமா?. கொரனாவுல நீங்க நூற்றி அம்பது ரூபாய்க்கு வாங்குன வெண்டைக்காய் எங்கக் கிட்ட ஐந்து ரூபாய்க்கு வாங்குனாங்க. கூலி குடுக்கக் கூட விலை இல்லைனு நாங்க அதை மாடு மேய விட்டோம். அது உங்களுக்கு தெரியுமா?. பத்து ரூபா பிளாஸ்டிக் பொருள் விக்குறவன் கூட அவன் பொருளுக்கு விலையை நிர்ணயம் பண்றான். ஆனால் நாங்க விளைவிச்ச காய்கறிகளுக்கு விலையை நிர்ணயம் பண்ண முடியலை எங்களால” என்று ஒட்டு மொத்த விவசாயிகளின் ஆதங்கத்தை தனக்கு முன் அமர்ந்திருந்த மீடியாவில் இருந்து வந்த ஒருவனிடம் கொட்டிக் கொண்டிருந்தான்.

“நான் இந்த எக்ஸ்போர்ட் கம்பெனி ஆரம்பிக்கிறது விவசாயிகளுக்காக மட்டும். விவசாயம் அழிந்து வருவதற்கு முக்கிய காரணம் அவர்களுக்கான ஊதியம் கூட விவசாயத்தில் கிடைக்கிறது இல்லை. லாபம் இல்லாவிடினும் ஊதியமாவது கிடைத்தால் தானே விவசாயம் பண்றவனுக்கும் அவன் குடும்பத்தை பாத்துக்க முடியும். ஊதியம் கூட இல்லாவிடில் அவன் குடும்பத்தை எப்படி பாத்துக்க முடியும்?. அவன் புள்ளைங்களை படிக்க வைக்க முடியுமா?. நல்ல சாப்பாடாவது போட முடியுமா?. பின்ன எப்படி அடுத்த தலைமுறை விவசாயி உருவாகுவான்?. வளர்ந்து வரும் நாகரீகத்தில் ஊதியம் இல்லாமல் குடும்பத்தை நகர்த்த முடியுமா?. விவசாயியோட அதிகபட்ச ஆசையே தன் குடும்பமும் சமூகத்தில் நல்ல நிலைமையில் இருக்கனும் சமுதாயத்தில் மதிக்கப்படனும் என்பது தான். அதுவே கிடைக்கலனா?” என்று கண்களில் வலியைத் தேக்கி நிறுத்தி  “நாங்க விளைவித்ததற்கு இடையில் உள்ள வியாபாரிகள் விலையை நிர்ணயம் பண்றான். உழைக்காமலே லாபம் பார்க்குறான். உழைச்ச எங்களுக்குக் கூலி கூட மிஞ்சுறதில்லை. அதுனால விவசாயிங்களுக்கு அவங்க விளைவித்தக் காய்களுக்கு ஊதியத்தோடு லாபமும் கிடைக்குற மாதிரி இந்த தொழிலால பண்ண முடியுது. அதற்கு FIEO ஏற்றுமதி தொழில் அமைப்பு எங்களுக்கு கைக்கொடுக்குது. நாங்க நம்ம நாட்டுத் தேவைக்கு போக தான் எக்ஸ்போர்ட் பண்றோம். அதுனால லாபத்துக்காக நம்ம நாட்டு மண் வளத்தை யூஸ் பண்ணி விவசாயம்  பண்ணிட்டு அடுத்த நாட்டுக்கு காய்கறிகளை அனுப்புறாங்கனு மீடியாவுல தப்பா எங்களைக் காண்பிக்காதிங்க” என்றான் ஒரு பாமரன் முன்னுக்கு வந்தால் உறவுகளிலிருந்து கார்பரேட் கம்பெணிக்காரன் வரை அவன் வளர்ச்சியைத் தடுக்க என்னென்ன செய்வார்கள் என்பது தெரிந்து வைத்திருந்ததால்.

“இதுனால எங்களுக்கு நல்ல லாபம் கிடைப்பதால் இதை பார்த்து அடுத்த தலைமுறை விவசாயியும் உருவாகுவான்‌. நீங்க விவசாயிங்க தற்கொலை பண்ணிக்கிறதையும் நஷ்ட ஈடு கேட்டு ராப்பகலா கஷ்டப்பட்டு போராட்டம் பண்றவங்களை பிச்சைக்காரங்க மாதிரி காண்பிக்கிறதையும் விட்டுட்டு விவசாயிகளை என்கரேஜ் பண்ற மாதிரி செய்திகளை மீடியாவில் காண்பிங்க. அப்போ தான் விவசாயத்தையும் விவசாயிகளையும் தாழ்வா நினைக்குறவங்களுக்கு சாட்டை அடியா இருக்கும். மதிக்கவும் செய்வாங்க” என்றான் வெற்றிமாறன்.

கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு “உங்ககிட்ட யாசகமும் இரவலும் கேட்கவில்லை இளக்காரமும் உதாசினமும் படுத்தாமல் விவசாயியின் உழைப்பிற்கு மரியாதை கொடுத்து அவனையும் சமூகத்தில் வாழ வழிவிடுங்கள்.

பத்தோடு பதினொன்றாக இருக்கனும் என்று  நினைப்பதை விடுத்து பத்தில் முதல் ஆளாக இருந்து எல்லாருக்கும் வழிகாட்டியாக இருக்கனும் நினைச்சாலே போதும். என்னால அடுத்த தலைமுறையில் ஒருவனாவது விவசாயம் பண்ண ஆரம்பிச்சா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன். இளைஞர்களுக்கும் மக்களுக்கும் செய்திகளை கொண்டு போற நீங்க நல்ல விஷயங்களை அவர்களின் மனதில் பதிய வைத்தால் நன்றாக இருக்கும்” என்று அவர்களுக்கு நன்றி சொல்லி அனுப்பி வைத்து விட்டு தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சச் சென்றான். 

இலைகளையும் கிளைகளையும் எங்கெங்கோ நாம் பரப்பினாலும் நமது வேர்கள் நம் சொந்த மண்ணை விட்டு விடக் கூடாது என்ற ஏக்கத்தை பூர்த்தி செய்தவனாக புது அவதாரம் எடுத்திருந்தான் அடுத்த தலைமுறை விவசாயி!..

சுபம்..!

இது ஒரு உண்மை சம்பத்தைத் தழுவி எழுதுனது. சமூகத்தில் விவசாயம் மற்றும் விவசாயிகளை பற்றி சிலர் மனதில் இருக்கும் இளக்காரமான எண்ணத்தை பிரதிபலிக்கும் கதை. படித்து விட்டு விவசாயம் செய்பவனை இழிவாகப் பார்ப்பவர்க்கும் உதாசினப் படுத்துபவர்க்கும் கிராமத்தில் விவசாயம் செய்பவனை திருமணம் செய்தால் தன் சந்தோஷம் பறிபோகும் என்று நினைக்கும் சிலருக்கும் இந்தக் கதை அவர்களின் மனதில் மாற்றத்தை உருவாக்கும் என்று நம்புகிறேன்.

ஒரு விவசாயி தான் பட்ட
கஷ்டங்களையும்
அவமானங்களையும் நினைத்து
தன் பிள்ளைத் தன்னைப் போல்
கஷ்டப்படக்கூடாது என்று
நினைக்க ஆரம்பித்து விட்டால்
அவனின் அடுத்து வரும்
தலைமுறையில் ஒரு
விவசாயி கூட உருவாக மாட்டான்
ஏன் விவசாய நிலம் கூட மிஞ்சாது
இதுதான் இன்றைய சமுதாயத்தில்
இருக்கும் நிலைமை..!

இது உனக்கும் எனக்கும்
நம்மைச் சுற்றி
இருப்பவர்களுக்கும் தெரியும்
ஆனால் அதற்கான மாற்றத்தை
நம்மிலிருந்து கொண்டு வர
யாரும் தயாராக இல்லை..

சேற்றில் இறங்கி தன் ரத்தத்தை
வியர்வையாக நிலத்தில் சிந்தி
அரிசியையும் காய்கறிகளையும்
நம் கைக்கு கொண்டு வருவதற்குள்
அவன் படும்பாடு என்னென்ன?..!

பத்து ரூபாய் பிளாஸ்டிக் பொருளை
உருவாக்குபவனுக்கு இருக்கும்
விலை நிர்ணயிக்கும் உரிமை கூட
தான் வியர்வை சிந்தி விளைவித்த
காய்கறிகளுக்கு விலையை
நிர்ணயிக்க முடியவில்லை..!

விவசாயி அவன் விவசாயத்தையும்
விளைவித்ததையும் உணவுப்
பொருட்களாக பார்க்கும் வரைக்கும்
மட்டுமே நம் நிம்மதியாக சாப்பிட முடியும்
அவன் விவசாயத்தை ஒரு தொழிலாக
பார்க்க ஆரம்பித்தால் அவனும்
தொழிலதிபதியாக மாறிடுவான்
அதன் பிறகு நாம் சாப்பாட்டைக் கூட
அளந்து தான் சாப்பிட வேண்டும்..!

மிடுக்காக பேண்ட்டும் அயர்ன்
செய்த சட்டையும் அணியும் ஆட்களுக்கு
கொடுக்கும் மதிப்பை
காலில் செருப்பில்லாமல் சேறு
உடையில் ஒட்ட வேலை செய்பவனுக்கு
ஏன் கொடுக்க மறுக்கிறோம்?..

காலில் முள்குத்தாமல் இருப்பதற்கும்
கதிரவனின் கடுங்கோவத்தால் கால்
சுட்டெரிக்காமல் இருப்பதற்கும்
காலணி அணிந்தது இன்று
அழுக்குப்படாமல் இருப்பதற்காக
அழகுக்காக விதவிதமாக அணிந்து
நடக்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது
ஆடை என்பது அவரவர் தொழிலுக்கேற்ப
வேலைக்கேற்ப அணிவது
அதை வைத்து ஒருவனை எடை போட்டு
மரியாதை தருவது நியாயமா?..

எல்லாவற்றிற்கும் மேலாக ஆண்கள்
வரதட்சணை கேட்கிறார்கள் என்பது
கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விட்டது
இப்போதெல்லாம் நாங்கள் போடும்
நகைக்கும் கொடுக்கும் சீதனத்திற்கும்
உங்கள் சொத்துக்கள் ஆடம்பரங்கள்
இருக்கிறதா என்று ஆராய்ந்து தான்
பெண் கொடுக்கிறார்கள்
ஆஸ்தியும் ஆடம்பரமும் சந்தோஷம்
கொடுக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கும்
பெற்றவர்களுக்கும் சில பெண்களுக்கும்
தெரியவில்லை ஒரு உண்மையான
எங்கேயும் தன்னவளை விட்டுக் கொடுக்காத எல்லா நேரத்திலும் துணையாக
அவள் சிரிப்பில் சந்தோஷத்தை உணரும்
ஆண்மகனால் மட்டுமே ஒரு பெண்ணின்
உண்மையான சந்தோஷம் இருக்கிறது
என்பது..

ஆஸ்தியையும் ஆடம்பரத்தையும் நம்பி
வாழ்க்கையை ஒப்படைத்த பெண்ணிடம்
கேட்டுப் பாருங்கள் தெரியும்
அவள் சமூகத்திற்காக கௌரவத்திற்காக
புறம் மட்டும் சிரிக்கிறாளா இல்லை
அகத்தில் இருந்து உண்மையாக
சிரிக்கிறாளா என்று..

இது கோவமோ வருத்தமோ இல்லை
ஒரு விவசாயியின் ஆதங்கம்
தன் பிள்ளைத் தன்னைப் போல்
கஷ்டப்படக் கூடாது என்று நினைத்து
படிக்க வைத்து நல்ல வேலையில்
அமர்த்திவிடுகிறான் ஆனால்
அவனால் தனக்குப் பின் தன்
விவசாய நிலம் என்னாகும் என்று
நினைத்து உள்ளுக்குள் புழுங்கும்
ஒவ்வொரு நாளும் தூக்கத்தைத்
தொலைக்கிறான்
மண்ணுக்குள் புதையும் நேரமும்
தன்னோடு விவசாயமும் புதைந்து
போகிறதே என்று அவன் ஆன்மாவும்
கதறும் இது வெளியில் சொல்லப் படாத
சொல்ல முடியாத உண்மை..!

விவசாயத்தையும் விவசாயம்
செய்பவனையும் மதிப்போம்
படித்து விட்டு விவசாயம் செய்பவனை
இளக்காரமாகப் பார்க்காமல் தன்னால்
செய்ய முடியாததை அவன்
செய்கிறானே என்று ஊக்குவிப்போம்..!

இதுவரை கதையைப் படித்து ஊக்குவித்த அனைத்து தோழமைகளுக்கும் நன்றி. படித்து விட்டு நிறை குறைகளை பகிருங்கள். எனக்குத் தெரிந்த விஷயங்களை எழுதினேன். தவறாக இருந்தால் தவறாமல் சுட்டிக் காட்டவும்..

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
20
+1
3
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  5 Comments

   1. Pandiselvi
    Author

    ரொம்ப நன்றிங்க. ஆரம்பத்திலிருந்து கடைசி வரை கதையை வாசித்து கருத்துக்கள் பகிர்ந்து ஊக்குவித்ததற்கு.

  1. அவல் பொங்கல்

   #அவல்_பொங்கலின்_அலசல்

   அடியே திமிரழகி! அடங்காத சதிரழி!! பாண்டிசெல்வி.

   இதுவும் கிரமத்து காதல் கதை தான்.

   எல்லாரும் கிரமத்துல இருந்து பொழப்பு தேடி சிட்டிக்கு போய்ட்டு இருந்த டிரெண்ட்ட மாத்தி, சிட்டில இருந்து இருந்து எல்லாரும் கிரமத்துல வந்து செட்டில் ஆகுற மாதிரி கதைய செட் பண்ணதுக்கே அவங்களுக்கு என்னோட ஃபர்ஸ்ட் வாழ்த்துக்கள்!

   ஹீரோ ஒரு பக்கா விவசாயி.. ஹீரோயின் அதுக்கு நேர் ஆப்போசிட்டா மீடியா பெர்சன். ஹீரோயின் அப்பா ஒரு போலீஸ் கமிஷ்னர்ன்னு எல்லா பக்கமும் சமூக சிந்தனையோடு கதைய கொண்டு போய்ருக்காங்க

   இந்த கதைல அவங்க வச்ச சமுதாய பிரச்சணை விவசாயிகள் பிரச்சனை..

   ஒரு நிலத்த தரமான விளை நிலமா மாத்தி, அதுல விதைவித்து, அது வளர்ந்து, விளைந்து, அதை அறுவடை செய்து, அதை சரியான விலைக்கு மார்கெட்ல விக்கிற குள்ள.. ஷப்பாபா… எழுதும் போதே நமக்கு நாக்கு தள்ளுதே!

   நிஜமா களத்துல இறங்கி வெயில் பார்க்காமல் வேலை பார்த்து 3-6 மாசம் வரை மொத்த உழைப்பையும் கொட்டி அதுக்கு சரியான வெகுமதி (விலை) கிடைக்கலன்னா எவ்ளோ கஷ்டமா இருக்கும்.. நமக்கே நெஞ்சு பதைபதைக்குது.

   இதுக்கு தீர்வும் கதைல சொல்லிருக்காங்க. இதுல இன்னொரு கொடுமையான விஷயம் என்னன்னா எப்படி விவசாயிகளுக்கு சரியான விலை இல்லையோ அதே மாதிரி தான் மக்களுக்கும் அதிக விலைக்கு வாங்குறாங்க..

   இது ஒரு பக்கம் இருக்கட்டும். இங்கட்டு திமிரழகி மதி.. இவள மூனாவது எப்பிசோட்ல படிக்கும் போது அடி ஆர்வகோளாரே!ன்னு தான் தோனுச்சி.. ஆனா கதை போக போக ஓ! உனக்கும் அறிவு இருக்கான்னு கேக்க தோனுச்சு.. சோ கியூட்..

   இன்னொரு பக்கம் சதிரழகி பூங்குழலி.. கிரமத்து பைங்கிளி. அதுக்கு ஏத்தமாதிரி வெகுளி, துறுதுறு சேட்டைகாரி, எல்லாரையும் ஈஸியா அட்ராக்ட் பன்னிடுறா..

   வெற்றிய மதிக்கு கல்யாணம் பண்ணி வைக்கும் போது கொஞ்சம் கூட காதல் அது இதுன்னு பினாத்தாம ஒரு சகோதரியா இயல்பா மதி கூட சேர்ந்தது சூப்பர்.

   அதே நேரம் இவங்க ரெண்டு பேரும் பிளன் போட்டு தமிழ்ழ கல்யாணத்துல தள்ளிவிட்ட கலாட்டாவும் இதழில் சிரிப்புடனே கடக்க வைத்தது.

   கதைல பாதி விஷயங்கள் தான் நான் சொல்லிருக்கேன் இன்னும் சிறப்பான சம்பவங்கள் எல்லாம் நீங்களே படிச்சு என்ஜாய் பண்ணுங்க

   வெற்றி தமிழ் எல்லாம் யாருன்னு கதைல படிச்சிக்கோங்க..😉

   ஒரு பக்கா கிரமத்து லவ் ஸ்டோரி விரும்புறவங்க மிஸ் பண்ணிடாதீங்க

   வாழ்த்துக்கள் பாண்டிசெல்வி!

   அன்புடன் அவல் பொங்கல்..💐

  2. kanmani raj

   அன்புள்ள சகிக்கு, முதலில் விவசாயத்தை மையமாக வைத்து அவர்களின் வாழ்க்கை முறையை தெளிவாக காட்டி இந்த கதையை எழுதியமைக்கு எனது பாராட்டுக்கள்..

   கதையின் நாயகன் வாயிலாக விவசாயத்தையும், நாயகி வாயிலாக பெண்களை பற்றியும் மேன்மையாக எடுத்து கூறியிருக்கிறீர்கள். இருவருக்கும் இடையேயான காதலை ஆழமாக காட்டியிருந்தது மிகவும் சிறப்பு.

   அடுத்ததாக கிராமங்களின் அழகே சொந்த பந்தங்களின் பாசப் பிணைப்பும், வெகுளித்தனமான அன்பும்தான். வெற்றியின் குடும்பம் வழியாக அதை காட்டி, சின்ன சின்ன ஈகோ பிரச்சனைகள் எவ்வளவு பெரிய வம்புகளை இழுத்துவிடும் என்பதை தமிழ் வழியாகவும் கூறியிருந்தது அழகு.

   பொதுவாக இது போன்ற பிரச்சனைகளை விளக்குவது எளிது. ஆனால் அதற்கு ஒரு தீர்வை தருவது கடினம்..இந்த கதையின் வாயிலாக பலரும் அறியாத ஒரு புதிய தகவலை கூறி பிரச்சனைக்கான சிறப்பான தீர்வை அளித்தது மிகவும் பிடித்திருந்தது.

   இடையிடையே காவல்துறை ஊடகத்துறை பற்றியும் கருத்துக்களை சொல்லியிருந்தீர்கள். எல்லாத்துறையிலும் நல்லவர், கெட்டவர் இருவரும் இருப்பது இயல்பாகி விட்டது.

   மொத்தத்தில் விவசாயம் எனும் விதையை கதையில் ஆழமாக ஊன்றி நட்பு, பாசம், காதல் என பலவித உரங்களை தூவி, ஈகோ, வெறுப்பு போன்ற களைகளை எடுத்து, அழகாக விளைந்திருக்கும் தானியமே இந்த அடியே திமிரழகி அடங்காத சதிரழகி… சிறப்பான கதையை கொடுத்ததற்கு நன்றி சகி..

  3. 9தானிய பொங்கல்

   படித்தவன் விவசாயம் செய்ய கூடாதா…..
   ஏன் கூடாது தாராளம பண்ணலாமே… எப்படின்னு கதையில சில விடயங்கள சொல்லி தந்து இருக்காங்க ஆசிரியர்…. FIMO பற்றி விளக்கங்களுடன்….

   வெற்றி…. பட்டதாரியா இருந்தாலும் சாதாரண விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளில் ஒன்றான விலை நிர்ணயம் அவனும் எதிர் நோக்குறான்… இதை எப்படி கடந்தான்னு தான் கதையே( அத சொன்ன ஆசிரியர் கிட்ட நான் அடி வாங்கனும் 😁😁)

   மதிவதனி…. பெயருக்க ஏற்றாப்போலயே மதி நிறைந்தவள்…. விருப்பமில்லாம காட்டான கட்டிக்கிட்டாலும் அவன் சோர்ந்து போற இடத்துல எல்லாம் அவனுக்கு தைரியம் கொடுத்து சில ஐடியாக்களும் கொடுப்பவள்…..

   தமிழ்….. நானே ராஜா நானே மந்திரினு வாழ்பவன்….. ஊர் அவங்கள தள்ளி வச்சதால ஊரை விட்டே தள்ளி இருப்பவன்… காதல் எப்படி பட்டவனையும் மாற்றும் அது இவனுக்கு பொருந்தும்…

   பூவு….. சின்ன பொண்ணுன்னு பார்த்தா என்னமா பேசுற…. காதல் வந்தாலும் எல்லா விடயத்தையும் யோசித்து தள்ளி நிக்கிற…..

   வைஷாலி…. ஏன்மா ஒரு பெயர் கேட்டது குத்தமா😱

   குமார்… கஷ்டபடாமயே உனக்காகு இப்படி ஒரு லவ்வா……..

   விவசாயம் பற்றியும் விவசாயிகள் பற்றியும் அதோட தொடர்புபட்ட ஒரு சில விடயங்கள காதல் மோதல் விரோதம் னு எல்லாம் கலந்து சுவராசியம் குறையாம தந்த ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்…..

   இதுல யாரு திமிரழகி… யாரு சதிரழகி… திமிர அடக்குனாங்களா இதெல்லாம் கதை படித்தால் தெரிந்து கொள்ளலாம் செல்லாஸ்☺️☺️☺️☺️

   இடை இடையில் வரும் கவிதைகள்👌