Loading

அத்தியாயம் 27

 

வெற்றி முறைப்பதைப் பார்த்த மதி “டேய் இப்படி முறைச்சா சொல்ல மாட்டேன்” என்கவும் “நீ மொத சொல்லி முடி” என்றான்.

தமிழைப் பாரக்கச் சென்ற நாளுக்குச் சென்றாள் மதி. குழலியை அழைத்து ” தமிழ் யார்?. நான் அவனைப் பார்க்கனும்” என்றாள்.

“என்ன அவனையா!” என்று ஆச்சர்யத்தில் திகைத்து விட்டு ‘நானே அந்த சிடுமூஞ்சி சதிகாரனை நினைச்சு ரவும் பகலும் தூக்கம் வராம அல்லாடுறேன். இதுல அவனை நேர்ல போய் பார்க்கனுமா?’ என்று மனதில் நினைத்து விட்டு “நீங்க எதுக்கு க்கா அவனை பார்க்கனும்?. மாமாவுக்கு தெரிஞ்சா திட்டப் போகுது” என்றாள்.

“உன் மாமனை நான் சமாளிச்சுக்கிறேன். நீ வா” என்று அவளை இழுத்துக் கொண்டு தமிழைக் காண புறப்பட்டாள். அவன் அந்த நேரம் தோட்டத்தில் இல்லாமல் வீட்டில் தான் இருந்தான்.

வீட்டை நெருங்கியதும் ‘தனியாக இருக்குற ஒரு பையன் வீட்டுக்குள்ள போனா ஊர்ல என்ன நினைப்பாங்க?’ என்று குழலி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே அவன் வீட்டில் நுழைந்தார்கள். “ஹலோ உள்ளே யாராவது இருக்கேங்களா?” என்று கதவைத் தட்டினாள் மதி.

கதவு தட்டப்படும் சத்தத்தில் வெளியே வந்தவன் கண்களில் குழலி படவும் ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியோடு அவளைப் பார்த்துக் கொண்டே வந்தவன் மதியைப் பார்த்து ‘இது யாரு?’ என்று முதலில் யோசித்து விட்டு பின் ‘இது வெற்றி வொயிப் இல்ல?. இவங்க இங்க எதுக்கு வந்துருக்காங்க?’ என்று நினைத்துக் கொண்டே வந்து “என்ன வேனும்?” என்றான் நேரடியாக.

மதி அவனை மேலும் கீழும் அளந்து விட்டு ‘காட்டானுக்கு தம்பி முறைங்குறது சரியா தான் இருக்கும் போல. அவனை மாதிரியே விறச்சுக்கிட்டு அலையுறான்’ என்று நினைச்சுக்கிட்டு “உன் மனசுல என்ன பெரிய இவன்னு நினைப்பா?. ஆளு பனைமரத்துல பாதி வளர்ந்துருக்கேல நல்லது கெட்டது எதுவும் யோசிக்கத் தெரியாதா?. உன் பொழுதுபோக்குக்கு விளையாட என் புருஷன் உழைப்பும் நிலமும் தான் கிடைச்சதா?” என்று சரமாரியாக கேள்விக்கனைகளைத் தொடுத்தாள்.

மதியின் பின்னால் இருப்பவளை எட்டி ஒரு பார்வை பார்த்தான். 

‘அய்யோ போச்சு சிடுமூஞ்சி ஏதாவது பட்டுனு பேசிவிடப் போறான்’ என்று குழலி குனிந்த தலை நிமிரவில்லை.

‘மாமனுக்கு எப்பவும் இவ மட்டும் கொடி புடிச்சிட்டு வருவா. இன்னைக்கு துணைக்கு ஆள் கூப்டு வந்துட்டு ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி குனிந்த தலை நிமிராம நிக்குறதைப் பாரு’ என்று நினைத்து விட்டு மதியின் கேள்விக்கு “ஆமா அதுக்கென்ன. உங்க புருஷன் தான் பெரிய வீரன் சூரனாச்சே. அவனை எல்லாத்தையும் சமாளிச்சு ஜெயிக்க சொல்லுங்க. நீங்க யாரு இதெல்லாம் கேட்க?. உங்க புருஷன் அனுப்பிச்சு விட்டானு இந்தக் குள்ளக் கத்திரிக்காவை கூப்டு வந்ததேங்களாக்கும். ஒழுங்கா கிளம்புங்க இல்லை வேற மாதிரி ஆயிடும்” என்றான் தெனாவட்டாக.

‘என்னாது குள்ளக் கத்திரிக்காவா!’ என்று குழலி அதிர்ந்து கொண்டிருக்கையில் “என்ன… வேற மாதிரி ஆயிடுமா?. என்னடா பண்ணுவ?” என்று‌ எகிறினாள் மதி.

“நானும் வந்ததுல இருந்து பார்க்குறேன் கை நீட்டி நீட்டி பேசிட்டு இருக்கேங்க. என்ன பண்ணுவேங்க” என்று சொல்லி முடிப்பதற்குள் ‘சப்’ என்ற சத்தத்தில் குழலி நிமிர்ந்து பார்க்கையில் தமிழ் கன்னத்தில் கை வைத்தபடி அதிர்ந்து நின்று கொண்டிருந்தான்.

‘அப்போ அடிச்சது அக்காவா!!. இன்னைக்கு பெரிய சம்பவம் இருக்கு’, குழலி.

“ஏன்டா உன்கிட்ட பொறுமையா சொல்லிட்டு இருந்தா அண்ணினு கூட மதிக்காமல் தெனாவட்டா பதில் சொல்ற. உன்னை லாம் முதல்லே நாலு போடு போட்டு திருத்திருக்கனும். நீ என்ன சின்னப் பையனா ஊர் உலகத்தைப் புரிஞ்சுக்காம அலைய. அவன் கூட சேர்ந்துட்டு நீ பார்க்குற விவசாய நிலத்தையும் தான் அழிக்கப் போற. அதை அழிச்சுட்டு பொழப்புக்கு என்னடா செய்வ? ” என்று அட்வைஸ் மழை பொழிய ஆரம்பித்து விட்டாள்.

யார் எது என்ன சொன்னாலும் நான் இப்படித் தான் என்று திமிராக பதில் சொல்பவன் இன்று தாயின் ஸ்தானத்தில் இருந்து அண்ணி ஒரு அறையில் சொல்லவும் அமைதியாகக் கேட்டுக்கொண்டு இருக்கிறான். கண்கள் லேசாக கலங்கி இருந்தது. அவன் எதுவும் பேசவில்லை ஏனென்றால் அவனே அடி‌வாங்கிய அதிர்ச்சியில் தான் இருந்தான்.

குழலியோ அதிர்ச்சியில் வாயைப் பிளந்து கொண்டு ‘ போச்சு அன்னைக்கே என் கையை உடைச்சான். இதுக்கு என்ன பண்ண போறானோ?. ஆனாலும் உனக்கு இந்த அறை தேவை தான்டா’ என்று அதிர்ச்சியிலும் பயத்திலும் கொஞ்சம் கவலையிலும் இருந்தாள்.

“இனிமே ஏதாவது ஏடாகூடம் பண்ண?… அவ்வளவு தான்” என்று மிரட்டி விட்டு “வா குழலி போலாம்” என்று அவளையும் அழைத்துக் கொண்டு கிளம்பினாள்.

‘சரியான அல்லிராணி அண்ணியா இருப்பாங்க போல. வெற்றி எப்படி இவங்களை வச்சு சமாளிக்கிறான். நான் தொல்லை தரனும்னு அவசியமே இல்லை இவங்க ஒருத்தங்களை சமாளிக்கவே அவனுக்கு நேரம் போதாதே. என்ன அடி’ என்று கன்னத்தைத் தடவிக் கொண்டு முதல் முறையாக ‘அவங்க சொல்றதும் சரி தானே. அவன் படிச்சவன் அவனுக்குத் தெரியாததா?. நம்மளை வச்சே நம்மக் கண்ணைக் குத்தப் பார்க்கிறான் இந்த திருமுருகன். நாம அவனை அடிக்கடி ஒரு நோட்டம் விட்டுக்கனும்’ என்று அவள் அடித்ததைக் கூட மறந்து யோசித்துக் கொண்டிருந்தான். அவள் அடித்தற்கு ஏனோ அவனுக்கு கோவம் வரவில்லை. ஒருவேளை மனதெல்லாம் குழலியிடம் இருந்தாலோ என்னவோ அடி வாங்கிய பின் பேச்சே இல்லை அவனிடம்.

மதியுடன் சென்ற குழலி அடிக்கடி தமிழைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றாள். அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் பார்வை தன்னிடம் இல்லாததை அறிந்து “என்ன குழலி லுக் வேறெங்கயோ போது?” என்றாள் சந்தேகமாக.

“அது ஒன்னுமில்லக்கா சும்மா..” என்று சமாளித்து வைத்தாள்.

‘இல்லையே நம்புற மாதிரி இல்லையே. அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் ங்குற ரேஞ்சுக்கு இருக்கே. பார்த்துக்குறேன்’ என்று மனதிற்குள் நினைத்தாள்.

நடந்ததை சொல்லி முடித்து விட்டு வெற்றியைப் பார்த்தாள். அவன் அவளைத் தான் ‘அடிப்பாவி அல்லிராணி’ என்று பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன வெற்றி நான் செஞ்சது சரிதானே. இனிமே பாரு இந்த முறைக்குறது வம்பு பண்றதுன்னு எதுக்கும் உன் பக்கம் வரமாட்டான்” என்றாள்.

“ஏன்டி ஒரு ஆம்பளைப் பையனு கூட பார்க்காம அடிச்சிட்டு வந்துட்டு பெருமை வேறயா பேசுற?. அவன் திரும்பி அறை விட்டுருந்தா என்ன பண்ணிருப்ப?”.

“என்ன நானும் ரெண்டு குடுத்துட்டு வாங்கிட்டு வந்துருப்பேன். அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்பா” என்று விட்டு “ஆமா அதென்ன ஆம்பளைப் புள்ளை… எந்தப் புள்ளைனாலும் தப்பு செஞ்சா அறை உண்டு. உங்க ஊர்ல தான் அண்ணினா அம்மா மாதிரினு சொல்றேங்களே அப்புறம் என்ன?” என்றாள்.

“நீ பேசுடி பேசு. இதெல்லாம் அப்பத்தா கேட்டுருந்தா உன்னை குமட்டுலே இடிக்கும்”.

“அட போடா” என்று “இன்னொரு முக்கியமான விஷயம் எனக்கு தமிழ் மேல சந்தேகம் இருந்துச்சா இல்லையாங்குறதை விட தமிழுக்கும் குழலிக்கும் நடுவுல சம்திங் சம்திங்னு நினைக்கிறேன்”.

“ஏய் லூசு. அவளுக்கு அவனைப் பிடிக்காதுடி. அப்படிலாம் எதுவும் இருக்காது” என்று மறுத்தான்.

“இங்க பாரு மோதல் எப்பவும் காதல்ல முடியும்னு கேள்விப்பட்டதில்லையா?. அது மாதிரி தான். அதுனால தான் அது மாதிரி இருந்து அவன் மேல் தப்பு இல்லானாலும் ஜெயிலுக்கு போயிட்டு வந்துட்டா சும்மாவே அவனுக்கு நல்ல பேரு இதுவும் சேர்ந்துச்சுனா குழலி வீட்ல யோசிப்பாங்களேனு அப்படி சொன்னேன்”.

“பரவாயில்லையே இவ்வளவு யோசிச்சு இருக்கியே டி. அப்புறம் அவன் ஜெயிலுக்கு போறது போகாதது ரெண்டாவது விஷயம். அவன் விவசாயம் பாக்குறதுக்கே அவங்க வீட்ல பொண்ணு தர மாட்டாங்க. நான் படிச்சிட்டு விவசாயம் பண்றதுக்கே எங்க அத்தை எங்க எனக்கு நம்ம பொண்ணை கேட்டுருவாங்களோ?. படிச்சு வேலை பாக்குறவனுக்கு தான் குடுக்கனும்னு சொல்லிட்டு இருந்துச்சு. பார்க்கலாம்” என்றான்.

“சரி சரி அது நடக்கும் போது பார்க்கலாம். இப்போ நீ ரெஸ்ட் எடு” என்றாள்.

வெற்றியைக் கொலை செய்ய முயற்சி செய்ததற்காக திருமுருகனை போலீஸ் கைது செய்து விட்டனர். ரத்தினசாமிக்கு கோவத்தின் மேல் கோவம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

நாட்கள் அதன் போக்கில் சென்றது. வெற்றிக்கு காயங்கள் ஆறி பழையபடி வேலை செய்ய ஆரம்பித்து விட்டான். வெற்றி லைசென்ஸ் எல்லாம் வாங்கி விட்டு அவன் ஏற்றுமதி தொழிலை ஆரம்பித்தான். முதல் முதலாக ஆரம்பிப்பதால் முதலில் ஒரு மூன்று  நான்கு பேர் மட்டும் வேலைக்கு வைத்து விட்டு பின் தொழில் நன்றாக இருந்தால் அக்கம் பக்கத்து கிராமங்களில் இருந்து படித்து விட்டு வேலை கிடைக்காமல் இருப்பவர்களை வேலைக்குச் சேர்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்திருந்தான். குமாரும் அவன் தோட்டத்து வேலை போக மற்ற நேரங்களில் வெற்றிக்கு உதவியாக இருந்தான்.

மதியை அழைத்து முதலாளி சீட்டில் அமர வைத்து “இனி இது உன் இடம் மதி. நீ தான கிராமத்துல பொழுது போகாது படிச்சது வேஸ்ட்டுனு சொன்ன. உன்னைக் கல்யாணம் பண்ணப்பவே முடிவு பண்ணிட்டேன் உனக்கு ஏதாவது நல்ல வேலை வாங்கிக் கொடுக்கனும் இல்லை உனக்கு பிடிச்ச பிஸ்னஸ் ஆரம்பிக்கனும்னு. அது இப்போ தான் நிறைவேறியிருக்கு” என்று நெற்றியில் முட்டி சொல்லி சிரித்து விட்டு கிளம்பினான்.

அதுவரை ‘அவன் இவ்வளவு யோசித்திருக்கிறானா?’ என்று கனவுலகில் இருந்தவள் அவன் செல்லவும் ஓடிச்சென்று முதுகோடு அனைத்துக் கொண்டாள்.

அவளின் மென்தேகம் அவன் தேக்குமர முதுகில் ஒட்டியிருக்க அவனுக்குத் தான் உடம்பில் வெப்பமேறியது. இருக்கும் இடம் கருதி “ஏய் மதி என்னதிது?” என்று அவளை முன்புறம் இழுத்தான்.

“நீ இவ்வளவு யோசிப்பனு நினைச்சுக்கூட பார்க்கல வெற்றி. ரொம்ப தேங்க்ஸ். அப்புறம் இது உன் உழைப்புக்குக் கிடைச்சது. அங்க நான் இருந்தா நல்லா இருக்காது. நீ வா” என்று அழைத்தாள்.

“இது மண்வெட்டி புடிச்சு வேலை செஞ்சே பழக்கப்பட்ட உடம்பு டி. இப்படிலாம் ஒரே இடத்துல உட்கார முடியாது. இதுல உன் பங்கு தான் நிறைய. நான் இருந்தா என்ன நீ இருந்தா என்ன. என்னை விட நீ இருந்தா தான் அந்த சீட்டுக்கே அழகு. அப்புறம் இப்டிலாம் வந்து பக்கத்துல நிக்காத” என்று கண்ணடித்து சிரித்து விட்டு அவளை இன்னும் அன்பில் ஆழ்த்தினான்.

அடியே திமிரழகி
அடங்காத சதிரழகி..🎶

என் வம்பழகி
என்னைக் கொல்லும்
சிரிப்பழகி..🎶

வயசத்தான் மின்னல் வெட்ட
மனசுல அடைமழை பேயுதே
திசை எல்லாம் கண்ணுல பட்டா
கம்மங்கருதா காயுதே.‌.🎶

முரட்டுக் காளையவனின் அன்பில் உருகுகிறாள் அல்லிராணி. கூடவே அவள் திமிரும் உருகுகிறது அவன் புரிதலில். காட்டான் என்று நினைத்துக் கொண்டிருந்தவளின் மனதில் நம்பிக்கையையும் காதலையும் விதைத்து அவனைப் புரிந்து கொள்ள வைத்து விட்டான்.

ஏதோ உறவுக்காரர் ஒருவர் குழலியைக் கல்லூரி செல்கையில் பார்த்து விட்டு குழலியைப் பெண் கேட்டனர். மாப்பிள்ளை படித்து நல்ல வேலையில் இருப்பதால் குழலியும் மூன்றாம் ஆண்டு முடிக்கப் போவதால் குழலியின் அம்மா லட்சுமி பெண் பார்க்க வரச் சொல்லி விட்டார். அதுவரை ‘இதெல்லாம் ஒரு ஈர்ப்பு. எப்படியும் தமிழின் நினைவை ஒதுக்கி விடலாம்’ என்று நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு மறுநாள் பெண் பார்க்க வருகிறார்கள் என்று கேள்விப்பட்டதில் இருந்து அவனின் நினைவுகள் மனதில் வந்து ரப்பர் பந்து போல் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது. இரவு முழுவதும் அவனை நினைக்கிறாள் அழுகிறாள் எதை எதையோ யோசிக்கிறாள். என்னென்னமோ செய்து நித்திரா தேவியை எப்படியோ துணைக்கு அழைத்து தூக்கத்தைத் தழுவினாள்.

கதிரவன் தோன்றுவதற்கு முன்னும், பின்னும் உள்ள காலை நேரம், உலகம் மெல்ல மெல்ல இருளிலிருந்து வெளியே வரும் நேரம்…

குழலியின் அம்மா லட்சுமி சீக்கிரமே குழலியை எழுப்பி புடவை கட்டி, கழுத்து நிறைய நகை போட்டு தலை நிறைய மல்லிகைச் சரத்தைத் தொங்க விட்டு தன் மகளை ஒரு குறை சொல்லக்கூடாது என்று ஏதோ‌ இன்றைக்கே திருமணம் போல் தயார் செய்தார். அவளின் அப்பா மாணிக்கவேல் தன் அக்காவின் குடும்பமான வெற்றியின் குடும்பத்தினரை அழைக்கச் சென்றிருந்தார்.

லட்சுமி அடுக்களைக்குள் மாப்பிள்ளை வீட்டாருக்கு பலகாரங்கள் செய்து கொண்டிருக்க பொறுத்துப் பொறுத்துப் பார்த்த குழலி வெளியேக் கிளம்பி விட்டாள்.

காலைக் கதிரவன் உச்சிக்கு வருவதற்குள் தண்ணீர் பாய்ச்சி விட்டு வந்திடலாம் என்று நினைத்த தமிழ் கிளம்பி வெளியே வரும் நேரம் அவன் மனதை கொள்ளை கொண்டவள் அலங்கரித்து தேவதையாக முன்வந்து நிற்கவும் ஒரு நிமிடம் கனவோ என்று நினைத்து விட்டான்.

கனவென்று நினைத்து அவளையே உறுத்து விழித்துக் கொண்டிருந்தவனை அவளின் குரல் நிஜத்திற்குக் கொண்டு வந்தது.

“இங்க பாருங்க ஏதேதோ பேசி என் மனசை உங்க பக்கம் சாய வச்சுட்டேங்க. என்னைய இன்னைக்கு பொண்ணு பார்க்க வர்றாங்க.‌ உங்களைத் தவிர என்னால யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது.”. தான் எதற்கு அவனுக்கு சம்மதம் சொல்லவில்லை என்பதை அவனிடம் சொல்லி விட்டு “எங்க வீட்ல வந்து பேசுங்க. என்னால யாரு முன்னாடியும் அலங்காரம் பண்ணிட்டு நிக்க முடியாது” என்று கண்களில் வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே சொன்னாள்.

அவளை தலை முதல் கால் வரை அளந்தவன் “இப்போ மட்டும் எப்படி என் மேல நம்பிக்கை வந்துச்சாம்?. ம்ம்” என்று கோவத்தைத் தலையை அழுந்தக் கோதி கட்டுக்குள் கொண்டு வந்து “அதான் இப்பவேக் கல்யாணத்துக்கு தாயார்ங்குற மாதிரி தான அலங்காரம் பண்ணிருக்குற. போ போய் இப்படியே போய் கல்யாணம் பண்ணிக்கோ” என்றான் அவள் காயப்படுவாள் என்று தெரிந்தும்.

அவள் அவன் பேச்சைக் கேட்டு அழுது கொண்டே இருக்கவும் ” இங்க ஏன்டி நிக்குற?. போ இங்கிருந்து. நீ தான என் பின்னால வராத காதலும் இல்ல ஒன்னுமில்லனு சொன்ன. இப்போ அதே நான் சொல்றேன். உன்னை மறந்துட்டேன். போயிடு” என்று கத்தவும் அதற்கு மேல் அங்கு நிற்காமல் வீட்டிற்கு ஓடி விட்டாள்.

அதற்குள் வீட்டில் அவளைக் காணாமல் அவள் அம்மா, அப்பா ஒருபுறமும் கனிமொழி,மதி ஒருபுறமும் தேடிக் கொண்டிருக்க புதிதாய் பூத்த மலர் போல் இருந்தவள் வாடியக் கொடியாய் அழுது வீங்கிய கண்களோடு வந்து சேர்ந்தாள்.

“அடியே உன்னை எங்கலாம் தேடுறது. எங்கடி போய்த் தொலைஞ்ச?” என்று அவள் அம்மா அர்ஜிக்க ஆரம்பித்து விட்டார்.

“சித்தி இருங்க. ஏன் கத்துறேங்க?” என்ற மதி குழலியிடம் திரும்பி “எங்க போன குழலி?. உன்னைக் காணும்னு சித்தி பயத்துட்டாங்க. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க. நீ இப்போ இல்லனா என்னவாயிருக்கும்?” என்றாள் மதி.

“எனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பமில்லை. நான்… நான் தமிழ் மாமாவை விரும்புறேன். அவங்களைத் தான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்” என்று சொல்லி முடிப்பதற்குள் சுந்தரபாண்டியன் படத்தில் வருவது போல் ஓங்கி ஒரு மிதி அவள் தந்தையிடமிருந்து.

“அய்யோ என்ன மாணிக்கம் பொம்பளைப் புள்ளையப் போய்… படாத இடத்துல பட்டுச்சுனா என்ன பண்றது” என்று கனிமொழி மதி லட்சுமி என்று மூவரும் ஓடிப் போவதற்குள் அப்போது தான் காட்டில் வேலை முடித்து விட்டு விஷயம் கேள்விப்பட்டு வந்த வெற்றி தாங்கிப் பிடித்தான் குழலியை.

அவனைக் கண்டவுடன் தாயிடம் அடைக்கலமான குஞ்சைப் போல் நெஞ்சில் சாய்ந்து கொண்டு “மாமா நான் தமிழை விரும்புறேன். முடிஞ்சா அவருக்கு கட்டி வைங்க. இல்லனா நான் இப்படியே இருந்துறேன்” என்றாள் அழுது கொண்டே.

“அவனுக்கு கட்டிக் குடுக்குறதும் ஒன்னு தான் உன்னை பாலங்கிணத்துல தள்ளுறதும் ஒன்னு தான். இப்படியே எங்களோட வீட்லயே இருந்துரு காலம் பூரா” என்றார் லட்சுமி.

“மாமா மெதுவா அவளுக்கு புரியுற மாதிரி சொல்லுங்க. உட்கார்ந்து பேசுங்க. அவனும் நல்ல பையன் தான். ஒத்தப் பொண்ணை வச்சுக்கிட்டு உள்ளூர்லயே பொண்ணைக் குடுத்தாப்புலயும் இருக்கும்” என்றான் வெற்றி.

“நீ என்ன புரியாம பேசுற வெற்றி?. அவன் எப்போ எப்படி மாறுவானே தெரியாது. இவ காலம்பூரா இப்படியே இருக்கட்டும்” என்று துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு வெளியே சென்று விட்டார்.

எப்போதும் துருதுருவென சிரித்துக் கொண்டு வலம் வருபவள் இன்று அழுது வீங்கிய கண்களுடன் இருப்பவளைக் காண்கையில் வெற்றிக்கும் மனது பிசைந்தது. அவன் அத்தையிடமும் மாமாவிடமும் மனதை சலவை செய்யும் வகையில் ஏதேதோ பேசிப் பார்த்தான். ஆனால் அவர்களோ மசிவதாக தெரியவில்லை. அதன் பின் இது ஆறப் போட்டு பேசுற விஷயம் என்று வெற்றியின் குடும்பத்தார் கிளம்பி விட்டனர்.

லட்சுமி குழலியின் அருகிலே இருந்து ஏதேதோ பேசி அவள் மனதை மாற்ற முயற்சி செய்து கொண்டிருந்தார். அவளோ வெறித்தது வெறித்தபடி பார்வை எங்கோ இருந்தது. காலையில் இருந்து இரவு வரை அமர்ந்த இடத்திலே அமர்ந்து மனதைத் தமிழிடமும் பார்வையை சுவரை வெறித்தும் இருந்தது. ‘என்ன வார்த்தை சொல்லி விட்டான்?. என்னை மறந்து விட்டானா?. இது தான் அவன் காதலிக்குற லட்சனமா?’ என்று மனதுக்குள் அவனை நினைத்து குமுறி விட்டு ஒரு முடிவெடுத்தவளாக அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.

வெளியே யாரிடமோ பேசிக் கொண்டிருந்து விட்டு உள்ளே வந்த லட்சுமி குழலி இல்லாததைப் பார்த்து விட்டு அறையின் கதவை தட்டினார். இரண்டு மூன்று தடவை தட்டியும் பதில் இல்லாமல் போகவும் “அடியே குழலி என்ன செய்ற. கதவைத் திறடி” என்று கத்தி அக்கம் பக்கத்தினரை அழைத்து கதவை உடைத்து உள்ளே நுழைகையில் உள்ளே குழலி வாயில் நுரை தள்ள கட்டிலில் கிடந்தாள்.

 

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
11
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. Interesting ud sis nice tamizh ku enna adi parava ilaye oru adila nalladhu mattum yosikka arambichitan super semmma ud sis