Loading

அத்தியாயம் 22

 

அதுவரை வெண்மதியின் மீது கொண்ட மோகத்தால் மேகமெனும் போர்வைக்குள் மறைந்து கிடந்த கதிரவன் மயக்கம் கலைந்து மேகத்தை விலக்கி விட்டு மெல்ல மெல்ல வெளி வந்து உலகை இருளிலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது.

பூங்குழலியின் மீது கொண்ட காதலால் சமீப காலமாக வெற்றியின் மீதிருந்த பகையையோ திருமுருகனுடன் கைகோர்த்துக் கொண்டதோ தமிழுக்கு ஞாபகத்தில் கூட இல்லை. ஏனென்றால் அவனுக்கு வெற்றியின் மீது இருந்தது வன்மமோ கோவமோ இல்லை. வெறும் ஈகோ. அது அவனுக்குப் புரியவில்லை. வீண் பிடிவாதத்தால் புரிந்து கொள்ளவும் முயற்சி செய்யவில்லை என்பதே உண்மை. இதனால் பின்னாளில் என்னென்ன பிரச்சனைகளுக்கு ஆளாகப் போகிறானோ?.

தினமும் ஒரு முறையாவது குழலியைக் காண்பவனுக்கு ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. அவள் அவனை ரசிப்பதும் பின் கலங்குவதுமாக இருப்பது. ‘பிடிக்கலைனாலும் பட்டுனு சொல்லிடுடி. இதோடு உன்னை நினைத்து தறிகெட்டு ஓடும் மனதுக்கு அணைபோட்டு விடுவேன். அது மரமாகி விருட்சமாகி வெட்டி விட்டால் என் மனது தாங்காதுடி’ என்று‌ மனதுக்குள் புலம்பித் தவித்துக் கொண்டிருந்தான். ‘அவகிட்டயே நேராக கேட்றலாமா?. அவளுக்கு அவகாசம் குடுத்துட்டு இப்போ போய் கேட்டா என்ன நினைப்பா?. இல்லை இன்னைக்கே கேட்கனும் இல்லை ஒரு வேலையும் ஓடாது’ என்று தீர்க்கமாய் முடிவெடுத்தவனாய் எப்போதும் அவள் கல்லுரி பேருந்து நிற்கும் இடத்திற்கு விரைந்தான்.

அன்று அவன் கெட்ட நேரமோ என்னமோ அவள் தந்தை உடன் வந்திருந்ததால் அவனால் எதுவும் பேச முடியவில்லை. அவளும் நேரமாகி வந்ததால் அவள் வந்தவுடன் கல்லூரிப் பேருந்தும் கிளம்பி விட்டது. பேருந்துக் கிளம்பவும் வண்டியை எடுத்துக் கொண்டு சோர்வாகக் கிளம்பி விட்டான்.

காட்டிற்குச் சென்றவனுக்கு ஒரு வேலையும் ஓடவில்லை. அரைத்த சோளங்கள் தரிசு நிலத்தில் தார்ப்பாயில் காய்ந்து கொண்டிருக்க அதை அளந்து மூட்டைக் கட்டி சந்தைக்கு அனுப்ப வேண்டும் என்பது கூட தோன்றாமல் என்னவோ போல் அமர்ந்திருந்தான். தன் தாய் தந்தைக்கு ஊர் மக்களால் ஏற்பட்ட ஒதுக்கத்தால் யாரிடமும் ஒட்டாமல், ‘நான் இப்படித் தான்’ என்று இருந்தவனுக்கு இப்போது ஒரு பெண்ணின் ஒதுக்கம் மனதைப் பாடாய்படுத்தியது. அது ஒதுக்கமா விருப்பமின்மையா இல்லை ரெண்டுங்கெட்டானா என்றும் தெரியவில்லை. அவள் வாய் வழியே சொன்னாலொழிய எந்த ஒரு முடிவுக்கும் வர முடியாது. அவள் சம்மதம் தெரிவித்தாலும் பின்னாளில் அவள் குடும்பத்தில் இருந்து வரும் எதிர்ப்பைப் பற்றியெல்லாம் அவன் இப்போதைக்கு யோசிக்கவில்லை. அவன் விவரம் தெரிந்ததிலிருந்து ஏதோ ஒரு பிரச்சனைக்கு எதையோ முடித்துப் போட்டு இப்படி அவசரத்தில் முடிவு எடுத்தே பழகிவிட்டு இப்போது வாழ்க்கை என்று வரும் போது எல்லாமே முட்டுக் கட்டையாக நிற்கும் என்பதை அவனுக்கு விதி கூடிய சீக்கிரத்தில் உணர்த்தக் காத்துக் கொண்டிருக்கிறது.

வானம் மஞ்சள் வண்ணம் பூசிக் கொள்ளக் காத்திருக்கும் மாலை வேளை, குழலியின் கல்லூரிப் பேருந்து வரும் முன்னே அவளுக்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தான் தமிழ்.

அவனைக் கண்டதுமே அதுவரை சாதாரணமாக இருந்தவளின் மனது படபடத்தது. ஒரு கை தோளில் மாட்டிய பேக்கை இறுக்கிப் பிடிக்க மறு கையின் விரல்களை அழுத்தமாக மூடி பதட்டத்தைக் குறைக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். பக்கத்து ஊர்த் தோழிகள் அவரவர் பாதையில் சென்று விட நேராக வண்டியை அவள் முன்னே சென்று நிறுத்தினான்.

உள்ளுக்குள் ஏற்பட்ட பயத்தை மறைத்துக் கொண்டு “என்ன வேனும் உங்களுக்கு?” என்றாள்.

“ம் நீ தான் வேனும் கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்றான் மெட்ராஸ் பட ஸ்டைலில்.

அவளும் நான் உனக்கு சலைத்தவள் இல்லை என்பது போல் ” இதெல்லாம் நாங்க மெட்ராஸ் படத்துலே பார்த்துட்டோம். கொஞ்சம் தள்ளி நின்னேங்கனா நான் கிளம்புவேன்” என்று நக்கலடித்தாள்.

“என்ன நக்கலா?. எனக்கு என்ன வேனும்னு உனக்கேத் தெரியும். எனக்கு பதில் சொல்லிட்டு போ” என்றான் தீர்க்கமாக பதில் தெரியாமல் இடத்தை விட்டு நகர மாட்டேன் என்பது போல்.

“என்ன பதில் தெரியனும் உங்களுக்கு?. சும்மா இந்த மாதிரி காலைலயும் சாயந்தரமும் இப்படி வந்து நின்னு என்னைத் தொல்லைப் பண்ணாதிங்க” என்று வெட்டி விட்டார் போல் பட்டென்று சொல்லி விட்டாள். பாவம் எதை எதையோ எதிர்பார்த்து வந்த அவன் மனம் தான் உடைந்து விட்டது.

அவளை ஆழ்ந்து நோக்கி விட்டு “இதான் உன் முடிவா?. ஏன்‌ என்னைப் பிடிக்கலை காரணம்?”.

“ஆமா இதான் என்‌ முடிவு. பிடிக்கலைனா பிடிக்கலை. காரணம்லாம் சொல்லனும்னு அவசியம் இல்லை ” என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு.

“அப்புறம் ஏன்டி என்னைப் பார்க்குறதும் அப்புறம் திரும்பி கலங்குறதுமா இருந்த” என்று விட்டு ப்ச் என்று தலையை அழுந்தக் கோதி விட்டு “இனிமே என் தொந்தரவு இருக்காது. நீ போலாம்” என்று வழியை விட்டு நின்றான். அவளின் பதிலை எதிர்பார்த்து இருந்தவனின் முகமோ கலையிழந்து கருத்து விட்டது. முகமெல்லாம் இறுகி கண்கள் சிவப்பு நிறத்தைத் தத்தெடுத்துக் கொண்டது. கோவமோ இல்லை வருத்தமோ இல்லை உணர்வுகளையோ கைகளை இறுக மூடி கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தான். என்ன செய்தும் அவனால் கலங்கும் மனதையும் கண்களையும் அடக்கும் வழி தெரியவில்லை. ‘அந்த அளவிற்கா இவளின் நினைவு உணர்வோடு கலந்து விட்டது’ என்று நினைத்து விட்டு நிமிரவும் எதிரே அவனின் முக மாறுதல்களையே கலவரத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள் குழலி.

‘இப்படி பார்க்க வேண்டியது. அப்புறம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லனு சொல்ல வேண்டியது’ என்று நினைத்தவன் “அதான் ஒன்னுமில்லனு சொல்லிட்டேல கிளம்பு இங்கிருந்து. இப்படி பார்த்து பார்த்தே மனுஷனைப் பைத்தியமாக்காத” என்று கோவத்தில் கத்தினான். அவன் கத்தலில் திடுக்கிட்டவள் திரும்பி கூட பார்க்காமல் அழுது கொண்டே ஓடி விட்டாள். அவள் என்ன நினைக்கிறாள் என்பது அவள் தான் வாய் திறந்து சொல்ல வேண்டும்.

‘சே இந்தக் காதல் கருமம்னு எதைப் பத்தியும் நினைக்காம நாம உண்டு வேலையுண்டுனு இருக்கனும்’ என்று தீர்க்கமாக முடிவெடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பினான். ஆனால் அது அவ்வளவு சுலபமில்லை என்பதை விதி உணர்த்தக் காத்திருப்பது தெரியவில்லை அவனுக்கு.

இங்கே ஒரு ஜோடி இப்படி இருக்க மறுஜோடி கொடைக்கானல் குளுமை உடலைத் தாக்க உடம்பில் ஏற்பட்ட சிலிர்ப்பிற்கு தன் மணாளனின் தோளில் சாய்ந்து கதகதப்பை ஏற்படுத்திக் கொண்டாள் மதி. காலைக் கதிரவன் சுள்ளென்று அடித்துக் கொண்டிருக்க ஆனால் அங்கோ கதிரவனின் கோவக் கதிர்களையே பனிமூட்டங்கள் அணைத்து குளுமையை ஏற்படுத்தியது. வெற்றியும் மதியும் வந்த பேருந்து கொடைக்கானல் வந்து நிறுத்தவும் “அடியே கொடைக்கானல் வந்துருச்சுடி இறங்குடி. நல்லா சொகுசா தோள்ல சாய்ந்து நைட் புல்லா உறங்கிட்டு புஜம் ஒருபக்கம் உடைஞ்சே போச்சு. பார்க்கத் தான் ஸ்லிம்மா இருக்க மாதிரி இருக்க. ஆனால் நல்லா தின்னு தின்னு குந்தானி மாதிரி இருக்கடி. இப்படியே தூங்கிட்டு இருந்த இதே பஸ்லே ரிட்டர்ன் ஊருக்குப் போக வேண்டியது தான்” என்று தன் புஜத்தைத் தலையனையாக்கி உறங்கிக் கொண்டிருந்தவளை எழுப்பினான்.

அவள் இரு விரல்களால் வாய்க்கு முன்னே சொடுக்கிட்டு கொட்டாவியை விரட்டிக் கொண்டே  “ஏன்டா காட்டான் இப்படி கத்துற காலங்காத்தால. பொண்டிட்டியை ஹனிமூன்க்கு கூப்டு வந்தது இப்படிக் கத்திட்டு இருக்குற. உனக்குலாம் ரொமான்ஸ் வருமா வராதா?” என்று கண்ணை கசக்கி தூக்கத்தை விரட்ட முயற்சி செய்தாள்.

“ஏன்டி சொல்ல மாட்ட உடைஞ்சது என் தோள். எம்மா என்னா வெயிட்” என்று புஜத்தைத் தூக்கி சுளுக்கு எடுத்துக் கொண்டு வந்திருந்த பேக்கை எடுத்துக் கொண்டு பேருந்தில் இருந்து இறங்கினார்கள்.

இருவரும் ஹோட்டலுக்குச் சென்று சாவியை வாங்கிக் கொண்டு அவர்கள் புக் செய்த அறைக்குச் சென்று பொத்தென்று விழுந்து பயணக் களைப்பில் தூங்க ஆரம்பித்து விட்டனர். ஏற்கனவே பேருந்தில் நன்றாக தூங்கிக் கொண்டு தான் வந்ததால் மதி சிறிது நேரத்திலே எழுந்து குளித்து முடித்து தலையை உளர்த்திக் கொண்டிருந்தாள். அவள் முடியில் இருந்து சிறுதுளி நீர் அவன் முகத்தில் பட்டு தூக்கம் கலைந்து எழுந்தவன் முன் மழையில் நனைந்த ரோஜா பூக்குவியல் ஒன்று புடவை கட்டி நின்றது போல் ரோஸ்வண்ண சில்க் காட்டன் புடவையில் தலையில் இருந்து தண்ணீர் வடிய நின்று தலையை உளர்த்திக் கொண்டிருந்தாள்.

கண்ணாடி ஜன்னல் வழியே வெளியே ரசித்துக் கொண்டிருந்தவளை பின்னிருந்து அணைத்தான். அப்போது தான் குளித்து முடித்த குளிர்ந்த உடலில் அவன் கதகதப்பான கைகள் படரவும் முதலில் திடுக்கிட்டவள் பின் அவன் கைகளின் கதகதப்பை அனுபவிக்க ஆரம்பித்தாள் நெளிந்து கொண்டே. “வெற்றிஇஇ” என்றாள் மெதுவாக.

“ம்ம்” என்றான் கண்மூடி ரசித்துக் கொண்டு.

அவளுக்கு அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை. முதல் முதலாய் ஒரு ஆணின் ஸ்பரிசம் வித்தியாசமான உணர்வை உணர்கிறாள். வெட்கப் படுகிறாள். கூச்சத்தில் நெளிகிறாள். இதுவரை அவனிடம் உண்டாகும் திமிர் காணாமல் போயிருந்தது. கிராமத்தில் இருப்பவர்கள் எல்லாம் காட்டுமிராண்டிகள் போல் நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு இத்தனை நாள் அவனுடன் பழகியதும் அவன் நடந்து கொள்ளும் விதத்திலும், அவன் பண்பிலும் அதெல்லாம் காணாமல் போய் விட்டது. ‘அவன் தொடுகை உணர்வை உண்டாக்குகிறது. அதை மனதும் விரும்புகிறது. அப்போ இவனுடன் வாழ என் மனது தயாராகி விட்டதா?. நான் இவனை விரும்புகிறேன். ஆம் வெற்றியைக் காதலிக்கிறேன். அன்னைக்கு அவன் மேல் இருந்த ஈர்ப்பு இப்போ அவன் அன்பில் காதலாகிடுச்சு’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு அந்த ஏகாந்தத்தை ரசித்துக் கொண்டிருந்தாள்.

வெகுநேரம் அதை இடத்தில் நின்று கொண்டிருந்தவர்களை ரூம் காலிங் பெல் சத்தம் விலக்கியது. ஆர்டர் செய்த உணவு வந்திருந்தது. இருவரும் வாங்கி வைத்து வெற்றி குளித்து முடித்து வரவும் காலை உணவை உண்டு விட்டு வெளியே சுற்றி பார்க்கச் சென்றனர்.

காலையில் இருந்து வெளியே சுற்றி பார்த்து விட்டு வெளியே இரவுணவை முடித்து விட்டு அறைக்கு வந்தவர்களை பூக்களால் இதய வடிவில் அலங்கரிக்கப் பட்ட கட்டில் வரவேற்றது. இருவரும் திடுக்கிட்டனர். அதன் பிறகே ரூம் பாய் வந்து சொன்ன பிறகே நியூலி மேரீட் கஃபில்ஸ்னு ரூம் புக் பண்ணும் போது கொடுத்ததால இந்த ஏற்பாடு என்று தெரிய வந்தது. அன்று முதலிரவில் உணராத உணர்வு இப்போது இருவரின் உணர்வுகளையும் ஆட்டிப்படைத்தது. இருவரும் பிரஷ்ஷாகி விட்டு வந்து கட்டிலில் அமர்ந்தனர். சிறிது நேரம் எதுவும்  பேசவில்லை. வெற்றியே “மதி என் மேல உனக்கு இப்போதாவது நம்பிக்கை வந்துச்சா?. இல்லை இன்னும் சின்னப் பிள்ளைல நினைச்ச மாதிரி தான் நினைச்சிட்டு இருக்கியா” என்றான் அவள் மனது புரிந்தாலும் அவள் வாய்வழியே அறியும் நோக்கோடு.

“முதல்ல நீ அப்படி நடந்துக்கவும் என் மனசுல அது அப்டியே பதிஞ்சுருச்சு வெற்றி. ஆனால் இங்க வந்ததுக்கப்புறம் தான் புரிஞ்சது நெறைய பேர் அன்பைக் கூட அதட்டி தான் சொல்றாங்கனு. உன்னோட குணம் அன்பு எல்லாமே பிடிச்சது” என்று ஒரு நிமிடம் நிறுத்தி “உனக்கு என்னை பிடிச்சு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டியா இல்லை அப்பா சொன்னதுக்காகவா?..” என்று ஆரம்பித்தவள் அவன் முறைப்பதில் நிறுத்தினாள்.

“இன்னும் நீ அதையே நினைச்சுட்டு இருக்கியாடி. அன்னைக்கே அதுக்கான விளக்கம் குடுத்துட்டேன். அது ஒரு விஷயம்னு அதைப் புடுச்சு தொங்கிட்டு என் மேல நம்பிக்கை இல்லாம கேட்குற?” என்று கோவத்தில் அங்கிருந்து நகன்று கண்ணாடி ஜன்னல் வழியே வெளியே வெறிக்க ஆரம்பித்து விட்டான்.

‘அய்யோ தேவையில்லாம அவனை கோவப்படுத்திட்டோமே. கோவம் மட்டும் பொசுக்கு பொசுக்குனு வந்துடும் காட்டான்’ என்று மனதுக்குள் சத்தம் வராமல் அவளை அவளே திட்டிக் கொண்டு அவன் அருகில் சென்று அவனை அணைத்துக் கொண்டாள்.

அவன் எதுவும் பேசவில்லை. கையை விலக்கி விட முயற்சித்தான். அவள் விடாமல் இறுக்கிப் பிடித்து “வெற்றி உன் மனசுல இருந்ததை நீ கேட்ட மாதிரி நான் கேட்டேன். அவ்வளவு தான். அதுக்கு ஏன் நம்பிக்கை இல்லனு நினைக்குற. நானும் உன்னை…” என்கவும் அவள் புறம் திரும்பியவன் அவள் கன்னங்களைத் தாங்கி “இங்க பாரு மதி எல்லாருக்கும் நிறை குறை ரெண்டுமே இருக்கும். குறையில்லாத மனுஷங்க இல்லை. நீ என்னை எனக்காகவே ஏத்துக்கிட்ட மாதிரி உன்னை உனக்காகவே ஏத்துக்கிட்டேன். இத உன் மனசுல ஏத்திக்க” என்கவும் அவள் “ம்ம்” என்று தலையாட்டினாள் சிரித்துக் கொண்டே.

அவள் வெட்கச் சிவப்பினை தொட்டு கன்னங்கள் தாங்கிய கைகளின் வெட்பம் அவளின் நாணமதை இன்னும் கூட்ட, நெற்றியில் பதிந்த இதழ் தேனை ருசிக்க தன் துணை தேட முரட்டுக் கைகள் அவளின் கொடியிடையில் அழுத்தமாய் பதிய “வதனி” என்றவனின் அழைப்பில் அத்தனை காதல் மிகுந்திருந்தது.

அவன் அழைப்பில் வெட்கம் கொண்டு ஆச்சர்யத்தோடு நிமிர்ந்து பார்த்தவள் ‘என்ன புதுசா வதனி?’ என்ற கேள்வியைக் கண்களில் தாங்கி நோக்கினாள் அவனை. “எல்லாரும் கூப்டுற மாதிரியே நானும் கூப்ட முடியுமா?. அதான் நீயும் நானும் இருக்கும் தனிமையில் இப்படி தான் அழைப்பேன்” என்றான். இரவு நேர குளுமையோடு தனிமை, இருவர் மனதிலும் காதலைத் தவிர வேறொன்றுமில்லை.  இருவருக்குள்ளும் பனி கூட புக முடியாத நெருக்கம். இதயம் தொடும் பார்வை. இரு விழிகள் நேர் கோட்டில் சந்திக்க, அகம் சிவக்க நாணி நின்றிருந்தவளின் வதனத்தில் தொலைந்திருந்தவன் கைவிரல்கள் மௌனமாய் பயணிக்க வாழ்வின் இல்லறமெனும் அடுத்த அத்தியாயத்தை எழுதத் தொடங்கினர் இருவரும்.

தொடரும்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
9
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment