Loading

அத்தியாயம் 2

வெய்யோன் தன் கதிர்களைப் பரப்பித் தன் ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டிருந்த நண்பகல் நேரம் உச்சி வெயில் கண்ணைக் கூசச் செய்து கொண்டிருந்தது.

வேட்டியை மடித்துக் கட்டி தலையில் தலைப்பாகைக் கட்டிக் கொண்டு மேல்சட்டை இல்லா உடம்பில் உருண்டு திரண்ட புஜங்களில் வியர்வை வழிந்தோட மண்வெட்டிக் கையில் வைத்து சிறுகுழி தோண்டி அதில் சிறு சிறு கிழங்காக விதைப்பதற்கு வெட்டி வைத்த சேனைக் கிழங்கை எடுத்து அந்தக் குழியில் வைத்து மூடினான் வெற்றி.

அவனுடன் வேலை ஆட்களும் வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர். வேலைக்கு ஆட்கள் வந்தாலும் தானும் ஒரு வேலையைப் பார்க்காமல் இருக்க மாட்டான். அவ்வப்போது வெங்காயத்திற்கு களையெடுத்துக் கொண்டிருந்த ஆட்களையும் தக்காளி வெண்டைக் காய்களை பறித்துக் கொண்டிருந்த ஆட்களையும் நோட்டம் விட்டுக் கொண்டே வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

“இந்தாயா வெற்றி அம்மா டீ போட்டுக் குடுத்து விட்டா. ஆளுகளுக்கு குடுத்துட்டு நீயும் குடிச்சிட்டு வேலையைப் பாரு” என்றபடி வந்தார் அவனின் அப்பா சிவகுரு.

“ம் சரிப்பா” என்று வேலை செய்யும் ஆட்களுக்கு டீ ஊற்றிக் கொடுத்து விட்டு அவனும் மரத்தடியில் அமர்ந்து டீ அருந்திக் கொண்டிருந்தான்.

எப்போதடா ஆட்கள் டீ குடித்து விட்டு செல்வார்கள் என்று காத்துக் கொண்டிருந்த சிவகுரு அவர்கள் டீ குடித்து விட்டு வேலை செய்ய கிளம்பி விடவும் “ஏய்யா வெற்றி உனக்கே அவ்வளவு வேலை இருக்கும் போது எதுக்கு இந்தக் கபடி போட்டிலலாம் சேர்ந்துக்கிட்டு இருக்க?”.

“அது சும்மாப்பா. பசங்கலாம் கம்பல் பண்ணிக் கூப்டாங்கனு போனேன்”.

“அது இல்லப்பா… ஏற்கனவே இந்த தமிழரசு அவங்க அப்பாவ ஊரை விட்டு ஒதுக்கி வைச்சதுல சொந்த பந்தம் கூட சேராம மொறச்சுக்கிட்டு திரியிறான். உனக்கும் அவனுக்கும் வேற அப்பப்ப சின்ன சின்ன மோதல் வந்துருது. பாவம் தாய் தகப்பன் இல்லாத பையன். நாம தான கொஞ்சம் பார்த்து அவனுக்கு செய்யணும். நீ போட்டியில் வேற ஜெயிச்சுட்ட அதனால் இன்னும் கொஞ்சம் நம்மள பகைச்சுக்கிட்டு தான் அழைவான்”.

“அப்பா எங்க பாத்தாலும் அவன் தான் என்னைய மொறச்சுக்கிட்டு அலையுறான். நான் நீங்க சொன்னதுக்காக தான் பொறுமையா போயிட்டு இருக்கேன். ஒரு அண்ணனு கூட மரியாதை குடுக்குறது இல்லை. அவனை நம்ம என்ன பண்ணோமா?. ஊர்ல ஒதுக்கி வச்சதுக்கு நாம என்ன செய்ய முடியும். இப்ப ஊருக்குள்ள தான இருக்குறான் இப்பவாது எல்லார் கூடவும் சகஜமாவா பேசுறான். யாரும் நல்லது சொன்னா கூட கேட்காம தான் புடிச்ச முயலுக்கு மூனு காலுனு தான் இஷ்டத்துக்கு அலையுறான்” என்றான் வெற்றி.

“சரிப்பா நீ கொஞ்சம் பொறுமையாக இருக்குறதுல தப்பில்லை. அந்த வீட்ல ஒத்தாளா இருக்கான். நானும் அவன் கிட்ட எவ்வளவோ தடவை பேச முயற்சி பண்ணிட்டேன். ஆனா பிடிகொடுத்து பேச மாட்டேங்குறான். பார்ப்போம் எங்க போக போறான்” என்றார் சிவகுரு.

“சரிங்கப்பா. தக்காளி வெண்டைக்காய்லாம் பறிச்சுருப்பாங்க. நான் போய் சந்தைல போட்டுட்டு வர்றேன். நீங்க வேலை ஆட்களை பாத்துக்கோங்க. ஆளு இல்லனா மரத்தடியில் உட்கார்ந்து கதை பேச ஆரம்பிச்சுருவாங்க” என்று கிளம்பினான்.

“சரியா நீ போயிட்டு வா நான் பாத்துக்குறேன்” என்றார் சிவகுரு.

வேலை ஆட்கள் பறித்த பச்சைப் பசேல் என இருந்த வெண்டைக் காய்களையும் செக்கச்சிவந்த தக்காளியையும் மினி வேனில் ஏற்றிக் கொண்டு சந்தையை நோக்கிப் புறப்பட்டான்.

அந்த சந்தை எங்கு பார்த்தாலும் காய்கறிகள் வாங்க வந்த மக்கள் கூட்டங்கள் ஒருபுறமும் காய்கறிகளை சந்தையில் போட வந்த விவசாயிகள் கூட்டம் ஒருபுறமும் என ஜேஜேவென இருந்தது. அங்கு பல கமிஷன் கடைகள்(மொத்தக் கடைகள்) இருந்தாலும் அந்தச் சந்தையே மொத்தமாக ரத்தினசாமி என்பவர் ஏலம் எடுத்திருக்கிறார். அங்கு அவர் வைப்பதே சட்டம். வெளிப்பார்வைக்கு பார்க்க தான் ஒவ்வொரு கடைகளிலும் வேறு வேறு ஆட்கள் இருப்பது போல் தெரியும். ஆனால் எல்லாமே அவர் வைத்த ஆட்கள். காய்கறியின் விலை ஒருக் கடையிலிருந்து மற்றோரு கடைக்கு அதிகபட்சம் ஐம்பது பைசாவிலிருந்து ஒரு ரூபாய் வரைக்கும் தான் வித்தியாசம் இருக்கும். ஆனால் பாவப்பட்ட விவசாயிகள் ஏதாவது ஒரு கடையிலாவது ரேட் அதிகம் தர மாட்டார்களா என்று அலைவார்கள். என்ன செய்வது அவர்களின் நிலையும் அவ்வளவு தான்.

வெற்றி தான் கொண்டு வந்த காய்கறிகளை எப்போதும் போடும் ஒரு மொத்தக் கடையில் தக்காளி கிலோ எட்டு ரூபாய்க்கும் வெண்டைக்காய் பத்து ரூபாய்க்கும் போட்டான். அவர்களிடம் போட்ட அதே காயை ஒரு சில்லறை வியாபாரியிடம் தக்காளி மற்றும் வெண்டை இரண்டையும் கிலோ முப்பது ரூபாய்க்கு விற்றான் அந்த மொத்த வியாபாரி. அவன் முப்பது ரூபாய்க்கு வாங்கினால் மக்களிடம் எவ்வளவு ரூபாய்க்கு விற்பான்?. அவனுக்கு லாபமும் வர வேண்டும் அவன் அலைந்து திரிந்து விற்பதற்கு சம்பளமும் வேண்டும். அதனால் அவன் ஐம்பது ரூபாய்க்கு விற்கத் தான் செய்வான். இதில் லாபம் பார்க்காமல் விலையை நிர்ணயிக்க முடியாமல் தான் விளைவித்த பொருளுக்கு மற்றவன் விலையை நிர்ணயம் செய்யும் நிலைமை விவசாயிகளுக்கு தான்.

வெற்றிக்குத் தன்னிடம் வாங்கி அப்போதே அதை அதிக விலைக்கு விற்பதை பார்க்கும் போது விவசாயிகளின் நிலையை எண்ணி நொந்து தான் போனான். ‘இவர்களிடம் சொன்ன விலைக்கு வாங்கும் மக்கள் தங்களிடம் குறைந்த விலைக்கு வாங்கலாமே. அதை யாருமே வாங்க மாட்டார்கள். ம் விவசாயிகளின் நிலைமை இப்டித்தான் போயிட்டு இருக்கு’ என்று பெருமூச்சு விட்டு போட்ட காய்கறிகளுக்கு பணத்தை வாங்கிக் கொண்டு ‘இது காய் பறித்தவர்களுக்கு கொடுக்கும் கூலிக்குக் கூட இருக்காது. நாம உழைச்சதுலாம் வீண் தான்’ என்று தோன்றியது.

படித்து முடித்து விட்டு ஆசையோடு விவசாயம் பார்க்க வந்தவனுக்கு அது அவ்வளவு சுலபமில்லை என்பது போகப் போகத் தான் தெரிந்தது. விவசாயம் பார்ப்பதில் உள்ள நெளிவு சுழிவுகளைக் கற்றுக்கொள்வதை விட விளைவித்த காய்களை விற்பதற்குத் தான் கற்றுக் கொள்ள வேண்டும் போல என்று அவன் நினைக்காத நாளில்லை. என்ன தான் படித்திருந்தாலும் இத்தனை விவசாயிகள் போராட்டம் பண்ணியே இதற்கு தீர்வு இல்லாத போது நாம் என்ன செய்ய முடியும் என்று விட்டு விட்டான். ஆனால் அவன் படித்த படிப்பை வைத்து எப்படி செடிகளைப் பூச்சிகள் தாக்காமல் பார்த்துக் கொள்ளலாம் எப்படி பூச்சி மருந்துகளை உபயோகிக்காமல் இருக்கலாம் என்பதெல்லாம் அவனுக்கு அத்துப்படி. எப்போதும் அவனுக்கு விளைச்சல் அமோகமாகத் தான் இருக்கும். ஆனால் விளைந்ததற்கு விலை இருக்க வேண்டுமே.

விலை இருந்தால் விளைச்சல் இருப்பதில்லை. விளைச்சல் இருந்தால் விலை இருப்பதில்லை. இரண்டும் இருந்தால் கடவுளும் இயற்கையும் சோதனை செய்து மழை பொய்த்து விடுகிறது. இது தான் இன்றைய விவசாயிகளின் நிலைமை. ஆனால் நிலத்தைத் தரிசாகப் போட்டால் தன் பரம்பறையில் அடுத்த வாரிசு கூட தங்காது என்று நிலத்தைத் தரிசாகப் போடாமல் ஏதாவது ஒன்றை பயிரிட்டுக் கொண்டிருக்கின்றனர் முக்கால்வாசி விவசாயிகள்.

தமிழரசு தன் காட்டில் சீனிக்கிழங்கிற்கு (சர்க்கரை வள்ளிக்கிழங்கு) தண்ணீர் பாய்ச்சி விட்டு பம்ப் செட்டில் ஒரு குளியல் போட்டு விட்டு தன் புல்லட் வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டான். தன் காட்டைக் கடந்து பாதித்துரம் வந்ததும் ஒரு வளைவில் பூங்குழலி கையில் தன் தந்தைக்கு சாப்பிட்டுக் கூடையுடன் வெக்கு வெக்கென்று அவள் சின்ன இடை ஆட நடந்து அவள் காட்டிற்கு சென்று கொண்டிருந்தாள். தமிழரசு என்ன நினைத்தானோ வண்டியை கொஞ்சம் வேகமாக ஓட்டி வந்து அவளை உரசுமளவிற்கு வந்து நிறுத்தினான்.

பக்கத்தில் திடீரென கேட்ட வண்டிச் சத்தத்தில் திடுக்கிட்டு நெஞ்சில் கை வைத்துக்கொண்டு ‘எவன்டா அவன் இப்படி வர்றது!’ என்று திரும்பினாள் பூங்குழலி..

‘இவன் எதுக்கு இப்படி வந்து நிற்குறான்?’ என்று “எதுக்கு இப்படி வந்து நிறுத்துறேங்க?. கண்ணை பாதைல வச்சு வண்டிய ஓட்டிட்டு போங்க” என்று முழியை உருட்டிக் கொண்டே கொஞ்சம் குரலை உயர்த்திப் பேசினாள்.

சதிராடும் அவள் விழிகளில் ஒரு நிமிடம் விழுந்து எழுந்தவன் ‘சே…’ என்று தலையை உலுப்பி விட்டு “ஓய் என்னக் குரல் உசருது?”

“பின்ன இப்டி இடிக்குற மாதிரி வந்து நின்னா என்ன சொல்வாங்களாம்?” என்றாள்.

“ஆமா கபடிப் போட்டி நடந்த கிரவுண்ட்ல ஓவர் ஆட்டமா இருந்தது. விசிலடிச்சுலாம் கத்திட்டு இருந்த. படிக்குற புள்ளைக்கு இதெல்லாம் தேவையா?”.

“நான் எங்க மாமாக்கு சப்போர்ட் பண்ணி விசிலடிச்சுட்டு இருந்தேன்‌. உங்களுக்கென்ன?”.

“ஆமா பெரிய மாமன்” என்று விட்டு “உன் சத்தத்தைக் கேட்டு தான் ஏதோ பேய் பிசாசு வந்துருச்சோனு பயந்து உன்னைப் பாத்ததுல அவுட் ஆகிட்டேன்” என்றான் நக்கலாக.

‘இல்லனா மட்டும்’ என்று முனுமுனுத்து விட்டு “என்னைப் பார்த்தா பேய் பிசாசு மாதிரி இருக்கா?” என்று மூக்கு விடைக்க முறைத்து விட்டு “இங்க பாருங்க என் மாமன் கூட மோத முடியாம என்கிட்ட வந்து ஏன் வம்பு பண்ணிட்டு இருக்கேங்க. போய் உங்க தைரியத்தை என் மாமாகிட்ட காண்பிங்க. பெரிசா வந்துட்டாரு பேச. எங்க படிப்ப பார்க்க எங்களுக்கு தெரியும். நீங்க உங்க வேலையைப் பாருங்க”.

“அடிங்.. என்ன வாய் நீளுது. நானும் மாமா தான் உனக்கு. ஒழுங்கா பேசுடி”.

“ஹலோ நீங்களா வந்து பேசிட்டு என்ன மிரட்டிட்டு இருக்கேங்க. நீங்க தான் சொந்தபந்தம் கூட ஒட்டாம தான திரியுவேங்க. இப்ப என்ன முறை பத்திலாம் பேசுறீங்க. உங்களுக்கு பேசத் தெரியுங்குறதே இன்னிக்கு தான தெரியுது. மொத இஞ்சித் தின்ன குரங்கு மாதிரி இருக்குற உங்க முகறயைக் கொஞ்சம் மாத்துங்க மாமோய்ய்…” என்று இழுத்துச் சொன்னாள்.

“அடிங்.. யாருடிக் கொரங்கு” என்று அவன் வண்டியை விட்டு இறங்கவும் “போயா உம்மனா மூஞ்சி” என்று விட்டால் போதும் என்று ஓடியே விட்டாள்.

அவனும் ‘சரியான வாயாடியா இருப்பா போல. ஒலக்கு சைஸ்ல இருந்துட்டு கண்ணு முழியை உருட்டிக்கிட்டே என்ன பேச்சு பேசுறா!’ என்று கிளம்பி விட்டான்.

காய்கறிகளை போட்டு விட்டு வீட்டுக்குள் சோர்வுடன் நுழைந்தான் வெற்றி. உள்ளே முத்தம்மாள் பாட்டியும் சிவகுருவும் அமர்ந்து ஏதோ தீவிரமாக பேசிக் கொண்டிருந்தனர்.

அவன் சோர்வுடன் நுழைவதைப் பார்த்து “என்னாச்சு வெற்றி?. ரொம்ப சோர்வா தெரியுற” என்றார் அவனின் அப்பா சிவகுரு.

அவன் சந்தையில் நடந்ததை சொல்லி விட்டு “இதுக்கு என்ன தீர்வுனு தான் தெரியலப்பா. பாவம் வயசான விவசாயிங்க முதற்கொண்டு டெல்லில போய் இதுக்காக போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க. ஆனால் யாரும் கண்டுக்குற மாதிரி இல்லை” என்றான் வருத்தத்துடன்.

“அதெல்லாம் நம்ம கையில இல்லை வெற்றி.‌ விவசாயம் விவசாயம்னு அரசியல்வாதியில இருந்து சினிமாவுல நடிக்குறவன் வரைக்கும் பேசுறாங்களே ஒழிய நிஜத்துல யாரும் அதுக்கு சப்போர்ட் பண்ண மாட்டாங்க. நம்ம வேலையை நம்ம பாத்துட்டே இருக்க வேண்டியது தான். அப்புறம் கடவுள் விட்ட வழி என்று விட்டு நாம சென்னைக்குப் போய் மக்காச்சோளம் அரைக்குற மெஷின் பார்த்துட்டு வரலாம் வெற்றி. மக்காச்சோளம் விளைஞ்சு வர்றதுக்குள்ள மெஷின் வாங்கிட்டா நல்லது‌. அதுனால என்னைக்கு போலாம்னு பார்த்து டிக்கெட் போட்டிரு வெற்றி போயிட்டு வந்துரலாம்”.

“ம் சரிப்பா நான் பார்த்துட்டு சொல்றேன்” என்று அவன் அடுத்த வேலையை பார்க்க சென்று விட்டான்.

“என் ராசா படிச்ச படிப்புக்கு நல்லா ஆபிஸர் வேலையே பார்த்துருக்கலாம். இந்த விவசாயத்தைக் கட்டிக்கிட்டு வெயில்ல வேலை செஞ்சிட்டு அலையுறான் ம்” என்று புலம்பினார் முத்தம்மாள் பாட்டி.

“அதுனால இப்ப என்ன குறைஞ்சு போயிட்டான் உன் பேரன். அவனுக்கு புடிச்சு அந்த வேலையை சந்தோஷமாகப் பார்க்குறான். நீ புலம்பாம இரும்மா” என்று சிவகுரு உள்ளே சென்று விட்டார்.

படித்தால் தான் வேலை
சம்பளம் என்று சொல்லிக்
கொடுக்கும் இந்த சமூகம்
படித்து விட்டு விவசாயமும்
பார்க்கலாம் விதைத்தால்
தான் சோறு
என்று சொல்லிக்
கொடுக்க மறந்து விட்டது..

மறக்கவில்லை
சொல்லிக் கொடுக்க
முடியவில்லை என்பதே நிஜம்
ஏனென்றால் தன்னைப் போல்
தன் பிள்ளைகள் கஷ்டப்படக்
கூடாது என்பதே ஒரு விவசாயியின்
கனவாக இருக்கிறது இன்று..

உள்ளங்கையில் உணவைக்
கொண்டு வரும் விவசாயியை
உள்ளங்கையில் வைத்துத்
தாங்க வேண்டாம்
தாழ்வாக நினைக்காமல்
இருந்தாலே போதும்..

உள்ளுக்குள் அழுக்கு வைத்து
வெள்ளை வேஷ்டி சட்டையில்
வெள்ளையாக இருப்பவனை
மதிக்கும் இந்த சமூகம்
உலகிற்கு சோறு போட
சட்டையில்லாமல் மேனியில்
மண்பட வேலை செய்பவனை
மதிப்பதில்லை..

ஒரு தகப்பன் தன் பிள்ளை
தன்னைப் போல்
ஐடி கம்பெனியில் இருப்பவன்
இன்ஜினியராகவும்
அரசியல்வாதியின் பிள்ளை
அரசியல்வாதியாகவும்
தொழிலதிபராக இருப்பவன்
தொழிலதிபராகவும்
ஆகவேண்டும் என்று தான்
நினைக்கிறான்
ஆனால் விவசாயி மட்டும் தான்
தன் பிள்ளை தன்னைப் போல்
விவசாயியாக வரக்கூடாது
என்று நினைக்கிறான்..

இந்த நிலை மாறுமா..??

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
15
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    7 Comments

    1. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான குடும்பக் கதை. நகைச்சுவையும், அழுத்தமும் கொண்ட சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.

    2. எனக்கு இந்த எபி ரொம்ப பிடிச்சிருக்கு..விவசாயத்தைப் பத்தி சொன்னது 👏👏👏👏👏👏👏..யெஸ் விளைக்கறவன் விலையை நிர்ணயம் செய்ய முடியாதது அவ்ளோ கொடுமை..அந்த வலியை அப்படியே சொன்னது அருமை👌👌👌…தமிழ், பூங்குழலி சீன்ஸ் க்யூட்..

    3. Sangusakkara vedi

      Ninacha marum sis…. Vivayikaloda vedhana yarukum puriyurathu ila .. pala vivsayikal maatam varum nu terunje bivasayam panranga …. Avangaluku maatam mukkiyam ila avanaga nilam summa iruka kudathu…. Yenna antha nilaytha Amma va mathikiran… Ivangaluku nu oru vidivu kalam kandipa irukum … Iyargai vivasayatha vivasilale kai vitutanga….. 100 ku 1 vivasayi thn ipo iyargai bivasayam panran…. Ithe pochuna nilam kuda tharisa poirum… Itha mathura sakthi vivasayikaluku thn iruku …. Unamaiya sollanumna ipo Ulla vivasaiyokal kuda Munna mathiri ila .. avangalukkulaye ottruma ila…. Avanga kita otrumai vanthutale pathi problem mudunjurum…. Epi super sis….

    4. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான காதல் கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.

    5. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான காதல் கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.